06

06

ஜனாதிபதியால் விடுக்கப்பட்ட அழைப்பை நிராகரித்த சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா!

கனடாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பினை சட்ட மா அதிபர் தப்புலா லிவேரா நிராகரித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினால் இந்தப் பதவிக்காக லிவேராவின் பெயர் முன்மொழியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“தாம் அந்தப் பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனவும் உள்நாட்டில் மக்களுக்கு சேவையாற்ற விரும்புகினே்.”  என லிவேரா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சட்ட மா அதிபர் லிவேராவின் பதவிக் காலம் இந்த மாத இறுதியில் பூர்த்தியாகின்றமை குறிப்பிடத்தக்கது. லிவேரா தனது பதவிக் காலத்தில் 22206 குற்றவியல் வழக்கு விசாரணைகளை பூர்த்தி செய்துள்ளதாக சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி சட்டத்தரணி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி இவ்வாறான ஓர் பதவியை வழங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகவும், எனினும் தாம் இலங்கையிலேயே இருந்து கொண்டு நாட்டு மக்களுக்கு சேவையாற்ற விரும்புவதாகவும் லிவேரா கூறியதாக சட்டத்தரணி ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

புதுவருடத்துக்கு பின்பு 2000தை அண்மிக்கும் வகையிலாக தொற்றாளர்கள் தினசரி அடயாளம் – இந்தியாவை விட ஆபத்தான நிலையில் இலங்கை !

“இந்தியாவில் கொரோனா பரவும் வீதத்தை விட இலங்கையில் கொரோனா பரவும் வேகம் அதிகம்.”  என பொது பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம் பாலசூரிய இந்தவிடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சனத்தொகை மற்றும் இலங்கையின் சனத்தொகைக்கமைய பதிவாகும் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது தெளிவாவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த தமிழ் சிங்கள புதுவருடத்தின் பின்னர் நாளாந்தம் ஆயிரத்து 900 த்தை அண்மித்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழில் உயிரிழந்த முதியவருக்கு கொரோனா – இறுதிச்சடங்கில் பதற்றம் !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட ஒருவர் உயிரிழந்து சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக பதில் பணிப்பாளர், மருத்துவர் ச.சிறிபவானந்தராஜா தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் மாநகரைச் சேர்ந்த 77 வயதுடைய முதியவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அவருக்கு உடனடியாக ஆன்டிஜன் பரிசோதனை  செய்த போது கோரோனா வைரஸ் தொற்று இல்லை என அறியப்பட்டுள்ளது. எனினும் பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருந்தன.

முதியவர் அன்றைய தினமே 7ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அவர் அங்கிருந்து 9ஆம் நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று புதன்கிழமை முற்பகல் உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில் சடலம் நேற்று நண்பகல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. எனினும் நேற்று மாலை வெளியாகிய பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதனால் முதியவரின் உடலை சுகாதார முறைப்படி தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப் பணிக்கப்பட்டுள்ளது.

இதனால் இறுதிச் சடங்கில் பதற்றமான நிலை காணப்படுகிறது.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவு !

ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் தலைவராக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவாகியுள்ளார்.

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 54ஆவது கூட்டம் நேற்று(5.05.2021) மெய்நிகர் வழியாக நடைபெற்றது.

இதன்போதே, 2021/2022ஆம் ஆண்டுக்கான ஆளுநர் சபையின் தலைவராக மஹிந்த ராஜபக்ஷ தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஜோர்ஜியாவின் திபிலிசியில் முதலில் நடத்தத் திட்டமிடப்பட்ட வருடாந்த கூட்டம் தற்போதைய கொரோனா தொற்றுநோயால் மெய்நிகர் வடிவத்தில் நடைபெற்றுள்ளது.

இதேவேளை, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆளுநர் சபையின் 55 ஆவது ஆண்டுக் கூட்டம் அடுத்த ஆண்டு கொழும்பில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது.” – அமைச்சர் நாமல் ராஜபக்ச

“கொரோனாவை எதிர்த்துப் போராடுவதற்கு ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்தத் திட்டங்களுக்கும் அரசு பயன்படுத்தாது.” என்று விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.

கொரோனாத் தடுப்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளார் எனவும் அவர் நாடாளுமன்றத்தில் நேற்று(05.05.2021) உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு  கூறினார்.

நாடளாவிய ரீதியில் அமைக்கப்படவுள்ள கொள்கலன் உடற்பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபா நிதியைக் கொரோனாத் தடுப்புக்குப் பயன்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே நாமல் ராஜபக்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும், வரவு – செலவுத் திட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியே இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கு – சந்தேக நபர்களான ஈ.பி.டி.பி. யை சேர்ந்த நெப்போலியன் உள்ளிட்ட 06 பேர் விடுவிப்பு !

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை வழக்கின் சந்தேக நபர்கள் 6 பேருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்துக்குப் பரிந்துரைத்துள்ளது.

அதனால் 6 சந்தேக நபர்களையும் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2000ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19ஆம் திகதி இரவு 10 மணியளவில் யாழ்ப்பாணம் நகரின் உயர் பாதுகாப்பு வலயப் பகுதியாக இருந்த கச்சேரியடிப் பகுதியிலுள்ள நிமலராஜனின் வீட்டுக்குள் நுழைந்த ஆயுததாரிகள் அவரைச் சுட்டுப் படுகொலை செய்தனர். அவர் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையின் மீது சரிந்து விழுந்தே உயிரிழந்தார்.

அவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட பின்னர்,  அவரது வீட்டுக்குள் கைக்குண்டை வீசி விட்டுச் சென்றதில், நிமலராஜனின் தந்தை, தாய், மருமகன் உள்ளிட்டோர் படுகாயமடைந்தனர்.

நிமலராஜன் படுகொலை தொடர்பாக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பி 423/2000 என்ற வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கிடப்பில் போடப்பட்டது. பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காகக் கடந்த பல ஆண்டுகளாக வழக்கு விசாரணை நிலுவையில் இருந்தது.

இந்நிலையில், நிமலராஜன் படுகொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 6 பேருக்கும் எதிரான குற்றவியல் நடவடிக்கையைத் தொடர்ந்து முன்னெடுக்க முடியாது எனச் சட்டமா அதிபர் பரிந்துரை வழங்கியுள்ளார்.  அத்துடன், வழக்கின் சந்தேகநபர்களை விடுவித்து 14 நாள்களுக்குள் அறிக்கையிடுமாறும் காவற்துறை திணைக்களத்தின் சட்டப் பிரிவு பணிப்பாளருக்கு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

ஈழமக்கள் ஜனநாயக கட்சியைச் (ஈ.பி.டி.பி.) சேர்ந்த நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்டவர்களே நிமலராஜன் படுகொலை வழக்கில் சந்தேகநபர்களாகக் கைதுசெய்யப்பட்டு வழக்குத் தொடரப்பட்டது.

அதேவேளை, கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்துறை – நாரந்தனைப் பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர்.

அது தொடர்பான வழக்கு விசாரணையில் நெப்போலியன் என அழைக்கப்படும் செபஸ்டியன் ரமேஷ் உள்ளிட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இரட்டைத் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

குற்றவாளிகளாக காணப்பட்ட நெப்போலியன் மற்றும் மதன் என அழைக்கப்படும் நடராஜா மதனராஜா ஆகிய இருவரும் வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில் இருவருக்கும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.