08

08

ஐநாவின் பொதுக்குழு தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் 143 வாக்குகளால் தெரிவு !

ஒவ்வொரு வருடமும் சுழற்சி அடிப்படையில் ஐநாவின் பொதுக்குழு தலைவர் தேர்வு செய்யப்படுவார். பிராந்திய அடிப்படையில் சுழற்சி முறையில் இந்த வாய்ப்பு வழங்கப்படும். இந்த நிலையில் 2021-22க்கான வாய்ப்பு ஆசிய -பசிபிக் குழுவிற்கு வழங்கப்பட்டது.

இதையடுத்து கடந்த வருடம் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் அறிவித்தார். இவரை எதிர்த்து அப்போது யாரும் போட்டியிட முன்வராத நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் இவருக்கு ஆதரவு வழங்கியது.

அதே சமயம் மாலத்தீவு இந்த பதவியை இதுவரை வகித்தது இல்லை. இதனால் பல்வேறு நாடுகள் நல்லெண்ண அடிப்படையில் மாலத்தீவின் வெளியுறவுத் துறை மந்திரி அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளித்தது. இந்தியாவும் கடந்த நவம்பரில் அப்துல்லா ஷாகித்திற்கு ஆதரவு அளிப்பதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது .

இதற்கிடையே, திடீரென ஆப்கானிஸ்தானின் வெளியுறவுத்துறை மந்திரி சலமாய் ராசூல் இதே பதவிக்கு போட்டியிடுவதாக 6 மாதங்கள் முன் அறிவித்தார். ஆப்கானிஸ்தானுக்கு பல நாடுகள் ஆதரவு தந்தாலும், திடீரென கடைசி கட்டத்தில் வந்ததால் முன்கூட்டியே பலர் மாலத்தீவிற்கு ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்து இருந்தனர்.

அதோடு ஆப்கானிஸ்தான் ஏற்கனவே 1966-67ல் இந்த பதவியில் இருந்துள்ளது. மாலத்தீவு இந்த பதவியை வகித்தது இல்லை. மாலத்தீவு ஏற்கனவே பலரிடம் பேசி ஆதரவை பெற்று இருந்தது.

இந்நிலையில் இன்று நடந்த வாக்கெடுப்பில் மாலத்தீவு வெற்றிபெற்றது. இதையடுத்து ஐ.நா. பொதுச்சபை 76வது தலைவராக மாலத்தீவின் வெளியுறவுத்துறை மந்திரி அப்துல்லா ஷாகித் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 193 உறுப்பினர்கள் கொண்ட பொதுச்சபையில் 191 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இவருக்கு ஆதரவாக 143 வாக்குகள் விழுந்தன. 48 வாக்குகள் எதிராக சென்றன.

வரும் செப்டம்பரில் 76-வது பொதுச்சபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தை ஷாகித் துவக்கி வைப்பார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரானை மக்கள் கூட்டத்தில் வைத்து அறைந்த நபரால் பரபரப்பு !

தெற்கு பிரான்சில்  பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மக்கள் கூட்டத்திற்கு நடுவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர் மேக்ரான் கன்னத்தில் அறைந்துள்ளார்.
Macron during a visit to Montpellier, southern France, in April.
இதை பாதுகாப்பு வீரர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக அவர்கள் சுதாரித்துக்கொண்டு அந்த நபரை கீழே தள்ளினர். மேக்ரானை தாக்கிய வீடியோ வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு அவமரியாதை என்று பிரான்ஸ் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் கூறினார்.
மேக்ரான் தென்-கிழக்கு பிரான்சின் டிரோம் பகுதியில் கொரோனாவிற்கு பின் வாழ்க்கை எப்படி திரும்பிக் கொண்டிருக்கிறது என்பது குறித்து மாணவர்கள், உணவகங்கள் நடத்துபவர்களை சந்தித்து கேட்டு அறிந்து கொள்வதற்காக சென்றிருந்தார். அப்போது இச்சம்பவம் நடந்துள்ளது.

பிற்போடப்பட்டது லங்கா பிரீமியர் லீக் !

இம்முறை இடம்பெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை ஒத்தி வைப்பது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் சபை ஆராய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொவிட்-19 பரவலை கருத்திற் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை எதிர்வரும் யூலை மாதம் 30 ஆம் திகதி முதல் ஓகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது.

எனினும், இருபதுக்கு 20 உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் பின்னர் லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரை நடத்துவது தொடர்பில் ஸ்ரீ லங்கா கிரிக்கெட் ஆராய்ந்து வருகின்றது.

இதற்மைய, எதிர்வரும் நவம்பர் முதல் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் குறித்த போட்டித் தொடர் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை. ” – கெஹெலிய ரம்புக்வெல்ல

ஊடக அமைச்சில் பதிவு செய்யப்பட்ட ‘மூன்றாம் வகுப்பு’ ஊடகவியலாளர்கள் என யாரும் இல்லை என ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

ஊடக மாநாடொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் கடந்த காலத்தில் கொல்லப்பட்ட சில ஊடகவியலாளர்கள் மூன்றாம் வகுப்பு ஊடகவியலாளர்கள் என விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அமைச்சர் கெஹெலிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் ஹேரத் கருத்துக்கள் தங்களைக் குறிப்பதாக ஊடகவியலாளர்கள் தங்களைத் தாங்களே எடுத்துக்கொண்டால்,  நான் அதைப் பற்றி வருந்துகிறேன் என்றும் எந்தவொரு உறுப்பினரும் மூன்றாம் வகுப்பு என்று அழைக்கப்படுவதை தான் விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஹேமந்த ஹேரத் தனது கருத்துக்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஊடக உரிமைகள் குழுக்கள் கோரியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

“மக்கள் திட்டினாலும் அடித்து விரட்டினாலும் அடிவாங்கிக் கொண்டாவது வேலையை செய்யுங்கள்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவுரை !

சேதன பசளை விடயத்தில் (கரிம உரம்) மக்கள் திட்டினாலும் அடித்து விரட்டினாலும் அடிவாங்கிக் கொண்டாவது வேலையை செய்ய வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர்களுடன் நேற்று (7.06.2021)ம் திகதி மாலை இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த அறிவுரையை வழங்கினார்.

அவர் அங்கு மேலுமு் பேசுகையில்,

சேதன பசளை கொண்டு தேயிலை பயிர்ச்செய்கையை முன்னெடுக்க முடியும் எனவும் அதற்கு நல்ல விலை இருப்பதாகவும் கூறிய ஜனாதிபதி, அடுத்த போகத்திற்கான விவசாய நடவடிக்கையில் சேதன பசளையை பயன்படுத்த விவசாயிகளை தௌிவுபடுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

நாட்டு மக்களுக்கு இந்த நல்ல விடயம் குறித்து தௌிவு இல்லை எனவும் அதனால் தௌிவூட்டல் செய்ய வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். தற்போது நாட்டில் சேதன பசளை உள்ளதாகவும் இது ஒரு நல்ல திட்டம் என்பதால் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினரின் நன்மை கருதி சேதன பசளை பாவனைக்கு நாம் பழக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

எனினும் அரசினுடைய இந்த நடவடிக்கை இலங்கையை பேரழிவுக்குள் கொண்டு செல்லவுள்ளது எனவும் அரசு மக்களை சிந்திக்காது சீனாவுக்கு சார்பாக செயற்பட்டு அந்நாட்டு கரிமக்குப்பைகளை இலங்கைக்கு இறக்குமதி செயகின்றது எனவும் சஜித்பிரேமதாஸ தலைமையிலான எதிர்க்கட்சியினர் தொடர்ந்தும் குற்றம்சுமத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“45 ஆண்டுகள் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதில்லை.”- அமைச்சர் சரத் வீரசேகர

“45 ஆண்டுகள் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதில்லை.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக தன் சம்பந்தமாக பல்வேறு பொய்ப் பிரசாரங்கள் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக வெளியிடப்பட்டு வருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நாடாளுமன்றத்தில் இன்று விசேட உரை ஒன்றை நிகழ்த்திய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

தனிமைப்படுத்தலுக்காக அழைத்துச் சென்ற சிலரை மீண்டும் திரும்ப அழைத்து வரவில்லை. அதற்காக நான் எவருக்கும் எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. தனிமைப்படுத்த அழைத்துச் செல்லப்பட்ட நபர்களுக்கு ஆடைகளை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மட்டுமே நான் வழங்கினேன்.

இது மனிதாபிமானம் கருதி எடுக்கப்பட்ட நடவடிக்கை. என்னை மாத்திரமல்ல எனது மகனையும் சம்பந்தப்படுத்தி பல்வேறு பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.

அந்த குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை .45 ஆண்டுகள் இராணுவ மற்றும் அரசியல் வாழ்க்கையில் எப்போதும் சட்டவிரோத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்டதில்லை.

நிலவை பார்த்து நாய்கள் குரைக்கும், நரிகள் ஊளையிடம். பொய்ப் பிரசாரங்கள், சேறுப்பூசும் நடவடிக்கைகளால் நான் தளர்ந்து போய்விட மாட்டேன் எனவும் சரத் வீரசேகர குறிப்பிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேத்திக்கு 7 வருட சிறைத் தண்டனை !

மகாத்மா காந்தியின் பேத்தியும், தென்னாப்பிரிக்காவின் முன்னாள் எம்பியுமான இலா காந்தியின் மகள் ஆஷிஷ் லதா ராம்கோபினுக்கு பண மோசடி வழக்கில் தென்னாபிரிக்க நீதிமன்றம் 7 வருட சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

Mahatma Gandhi's great-grandaughter sentenced to 7 years jail in SA | World  News

இந்தியாவிலிருந்து தென் ஆபிரிக்காவுக்கு தனக்கான சரக்குகள் (புடவைகள்) வந்துள்ளதாகவும், ஆனால், இறக்குமதி செலவுகள் மற்றும் சுங்கக் கட்டணத்தை செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்றும், துறைமுகத்தில் உள்ள பொருட்களை விடுவிக்க அவசரமாக பணம் தேவை எனவும் தொழிலதிபரான மகாராஜ் என்பவரிடமிருந்து ராம்கோபின் 6 மில்லியன் தென்னாபிரிக்க ரெண்ட் (சுமார் 8 .7 கோடி இலங்கை ரூபா) பணம் பெற்றுள்ளார்.

இறக்குமதி செய்யப்படாத சரக்கு தொடர்பில் போலி ஆவணங்களை மகாராஜிடம் காண்பித்து இவ்வாறு அவர் பணம் பெற்றுள்ளார். பின்னர் குறித்த ஆவணங்கள் போலியானவை என கண்டறியப்பட்டதையடுத்து, தென்னாபிரிக்காவின் டர்பன் நீதிமன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மகாராஜ் குற்றவியல் வழக்கு தாக்கல் செய்தார்.

பின்னர் இந்த வழக்கில் பிரதிவாதியான ஆஷிஷ் லதா ராம்கோபின் 50 ஆயிரம் ரண்ட் பெறுமதியான பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நீண்ட விசாரணையின் பின்னர் ஆஷிஷ் லதா ராம்கோபின் குற்றவாளி என நிரூபணமானதையடுத்து, அவருக்கு 7 வருட சிறைத் தண்டனை விதித்து நேற்று (7) தீர்ப்பளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த தீர்ப்பு தொடர்பில் மேன்முறையீடு செய்ய முடியாது என்ற நிபந்தனையுடன் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி தலைவராகிறாரா ரணில் ..?

சஜித் பிரேமதாஸ தலைமையிலான அணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளனர் என வெளியாகும் தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

சஜித் அணியில் உள்ள சம்பிக்கரணவக்க உள்ளிட்ட குழுவினர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவுள்ளனர் எனவும், நாடாளுமன்றம் வரவுள்ள ரணிலை எதிர்க்கட்சித் தலைவராக்குவதற்கு நகர்வை அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையிலேயே மேற்படி தகவலை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

பயணத்தடைக்காலத்திலும் குத்தகை செலுத்த வற்புறுத்தியதால் ஒருவர் தற்கொலை !

கோவிட்- 19 நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கடலுணவு வியாபாரி ஒருவர், வாகன குத்தகைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் நிதி நிறுவன உத்தியோகத்தர்களின் நெருக்கடி காரணமாக தனது உயிரை மாய்த்துள்ளார்.

வடமராட்சி கிழக்கு உடுத்துறை ஆழியவளையைச் சேர்ந்த சிவலிங்கம் சிவதரன் (வயது-34) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு நேற்று ஞாயிற்றுக்கிழமை தவறான முடிவை எடுத்து உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“கடலுணவுகளை கொள்முதல் செய்து விற்பனை செய்து வரும் அவர், நிதி நிறுவனம் ஒன்றில் குத்தகைக் கட்டணத்தில் வாகனத்தை வாங்கியுள்ளார்.

தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள பயணத்தடை காரணமாக அவரது தொழிலில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. எனினும் மாதாந்தக் கட்டணத்தைச் செலுத்துமாறு நிதி நிறுவனம் அவரிடம் கோரியுள்ளது. அத்துடன், அந்த நிறுவனத்தின் அலுவலகர்கள் அவரிடம் சென்று பணத்தைக் கோரியுள்ளனர்.

தன்னிடம் 35 ஆயிரம் ரூபாய்தான் தற்போது உள்ளது. மிகுதியை கிடைத்தவுடன் செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நிதி நிறுவன அலுவலகர்கள் அவரை ஏசியுள்ளனர்.

இந்த நிலையில் மன விரக்த்தியில் அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்” என்று பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையில் இடம்பெற்ற விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் என தினமும் மோட்டார் சைக்கிளில் பயணிக்கும் ஒருவர் பயணத்தடையினால் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தமையினால் ஏற்பட்ட மன விரக்தியில் தவறான முடிவெடுத்து தனது உயிரைத் துறந்துள்ளார்.

வதிரி கரவெட்டியைச் சேர்ந்த கோபசிங்கம் மயூரதன் (வயது-36) என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை இவ்வாறு உயிரை மாய்த்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

“அவர் சில தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டவர். அதனால் அவர் தினமும் ஆலயங்கள், ஊர்கள், வெளிமாவட்டங்கள் எனமோட்டார் சைக்கிளில் பயணித்து வருபவர். கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தமையினால் தற்கொலை செய்யப் போகின்றேன் என்று விரக்தியுடன் தெரிவித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவர் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துள்ளார்” என்று உறவினர்களினால் சட்ட மருத்துவ அதிகாரி முன்னிலையான விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இரண்டு சடலங்களையும் உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உள்படுத்திய பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா, விசாரணைகளின் பின்னர் சடலங்களை உறவினர்களிடம் ஒப்படைத்தார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பயணத்தடை மற்றும் தொழில் இழப்புகளால் இவ்வாறு தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்கும் சம்பவங்கள் அதிகரிக்கும் எனச் சுட்டிக்காட்டியுள்ள சமூக ஆர்வலர்கள், கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தியுள்ளனர்.

2022ல் நாமல் பிரதமராக பதவியேற்கிறாரா..? -முற்றுப்புள்ளி வைத்த அமைச்சர் கெஹெலிய !

விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான நடவடிக்கைகள் உள்ளன என்பது உண்மைக்கு புறம்பான தகவல் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாமல் ராஜபக்ஷ 2022 அல்லது அடுத்த பொதுத் தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பிரதமராக நியமிக்கப்படுவார் என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்தியுள்ள அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இதுபோன்ற கூற்றுக்கள் வெறும் ‘அரசியல் வாசகங்கள்’ என கூறினார்.

தற்போது பரவி வரும் கதைகளை நீங்கள் பார்த்தால், நாளை வேறு யாராவது நியமிக்கப்படுவதை நீங்கள் காணலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இதுபோன்ற கூற்றுக்களை ஊடகங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.