09

Monday, June 21, 2021

09

எம் பி சார்ள்ஸ்ம் கொரோனாவும்: கொரோனா வைரஸில் இருந்து தப்பினாலும் ரிஎன்ஏ வைரஸில் இருந்து தப்பிக்க முடியவில்லை!!!

கொரோனாவையே கட்டுப்படுத்தும் தடுப்பூசி பத்து மாதங்களில் ரெடியாகிவிட்டது. ஆனால் தமிழ் தேசிய வைரஸ்களின் அழிவில் இருந்து தமிழ் மக்களை எந்தக் கடவுளாலும் காப்பாபற்ற முடியவில்லை. ஐம்பது வருடங்களாக இந்த தமிழ் தேசிய வைரஸ்கள் உருமாறி, உருமாறி காலத்திற்குக் காலம் தமிழ் மக்களை அழித்து வருகின்றன. சிங்கள பேரினவாதத்துடன் போட்டி போட்டு தமிழ் மக்களை அழித்து வருகின்ற இந்த தமிழ் தேசிய வைரஸ்கள்: தமிழரசுக் கட்சி, தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய புடுங்கிகள்: (ரெலோ, புளொட், புலி) என்றெல்லாம் உருமாறி தமிழ் மக்களிடம் இருந்த கொஞ்ச நஞ்ச உரிமைகளையும் பிடுங்கி எடுத்துக்கொண்டுள்ளனர்.

கேள்விச் செவியன் ஊரைக்கெடுத்த கதையாக தாங்களும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற கோதாவில் வீம்பு பேச்சுக்களும் வீம்புத்தனங்களும் செய்து தமிழ் மக்களை இன்று கடைநிலையில் கொண்டுவந்து விட்டுள்ளனர். அன்று ஆயுதம் ஏந்திப் போராடிய தமிழ் தலைமைகளும் சரி, இன்று பாராளுமன்றம் செல்கின்ற அரசியல் தலைமைகளும் சரி இரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே. இவர்கள் எல்லோருக்கும் அறிவு எட்டாக்கனியாகவே இருந்து வருகின்றது. அதனால் அவர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் முட்டாள்களாகவே எண்ணுகின்றனர். முன்னவர்களது அதிகாரவெறிக்கு தமிழ் மக்கள் மண் மூட்டைகளாக்கப்பட்டனர். பின்னையவர்களது பாராளுமன்றக் கதிரைகளுக்கு தமிழ் மக்கள் மந்தைக் கூட்டங்களாக்கப்பட்டனர்.

கடந்த 50 ஆண்டுகளாக தமிழ் தேசிய ஆயுதக் குழுக்களும் கட்சிகளும் தமிழ் மக்களின் குருதியயை குடித்தே வருகின்றனர். இதில் இரா சம்பந்தன், செல்வம் அடைக்கலநாதன், த சித்தார்த்தன் எல்லோருமே ஒரே டிஎன்ஏ உள்ள வைரஸ்கள் தான். இந்த வரிசையில் கடைசியில் உருமாற்றம் அடைந்தவர்கள் தான் சி வி விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் மற்றும் அவரில் இருந்து திரிபடைந்த மணிவண்ணன்.

வைரஸ்கள் திரிபடைந்து உருமாற்றம் பெறும் பொழுது பொதுவாக அவற்றின் வீரியம் குறைவடைந்து பலவீனமாகும். ஆனால் தமிழ் தேசிய வைரஸ்கள் திரிபடைந்தாலும் அவற்றின் தமிழ் மக்களை அழிக்கின்ற ஆற்றலில் எவ்வித பலவீனமும் ஏற்படவில்லை. அரசியல், பொருளாதார, சமூக, கலாச்சார, பண்பாட்டு அனைத்து நிலைகளிலும் இவர்கள் தமிழ் மக்களை அழித்தொழித்து வருகின்றனர். பொறுப்பற்ற முட்டாள்கள் பொறுப்பான பதவிகளில் அமருகின்ற போது சமூகம் பேரழிவை நோக்கித் தள்ளப்படுவதில் எவ்வித ஆச்சரியமும் இல்லை.

இதற்கு வளர்ந்த நாடுகள் வளர்முக நாடுகள் என்று விதிவிலக்குகள் இல்லை. பிரித்தானிய பிரதமர் பொறிஸ் ஜோன்சனினதும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ரம்மினதும் இந்திய ஜனாதிபதி நரேந்திர மோடியினதும் முட்டாள் தனமான முடிவுகளே இந்நாடுகளில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் கொரோனாவிற்குப் பலியாகக் காரணம். இன்று உலகமெங்கும் வளர்முக நாடுகளில் கொரோனாவிற்கு மக்கள் பலியாவதற்கு முக்கிய காரணம் பிரித்தானிய, அமெரிக்க அரசுகளின் பணத்தாசை மட்டுமே. அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் பதவிக்கு வரும்வரை கொரொனா தடுப்பூசியின் உரிமத்தை சிறிதுகாலத்திற்கு விட்டுக்கொடுப்பதாகத் தெரிவித்து இருந்தார். ஆனால் பதவிக்கு வந்த பின் அதனை அடக்கியே வாசிக்கின்றார்.

கொரோனா தடுப்பூசிக்கான உரிமம் விட்டுக்கொடுக்கப்பட்டு இருந்தால் உலகின் பல நாடுகளில் கொரோனா தடுப்பு வக்சின் உருவாக்கப்பட்டு கூடிய விரைவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வதற்கு பிரித்தானியாவும் அமெரிக்காவும் பெரும் தடையாக உள்ளன. இவர்களே இன்றைய கொரோனா கொலையாளிகள். தங்களுக்கு தேவையான போது மனித உரிமை அரசியலைத் தூக்கிப் பிடிக்கும் இவர்கள் இப்பொழுது தங்களால் பல்லாயிரக் கணக்காண மக்கள் கொல்லப்படுவதை நாசுக்காக மூடி மறைக்கின்றனர். இவர்களுடைய மேற்குலக பிரச்சார ஊடகங்களும் அதனை கண்டும் காணாமல் மௌனமாய் உள்ளன. தமிழ் தேசிய வைரஸ்களைப் போன்றவர்களே இன்னும் இந்த காலனித்துவத்திற்கு அடிமைச்சானம் எழுதிக்கொடுத்துவிட்டு கதையளந்து திரிகின்றனர்.

பொது மக்களின் வரிப்பணத்திலும் உலகெங்கும் இருந்து பெறப்பட்ட தகவலையும் அறிவையும் கொண்டு தயாரிக்கப்பட்ட வக்சீனுக்கு இப்பொது ஒரு சில உலகப்பெரும் மருத்துவ நிறுவனங்கள் உரிமம் பாராட்டுகின்றன. ரஸ்யாவினதும் சீனாவினதும் வக்சீனே இன்று வளர்முக நாடுகளில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வக்சீனை உற்பத்தி செய்து பிரித்தானியாவுக்கு வழங்கிய இந்தியாவுக்கே தன்னிடம் உள்ள வக்சினில் ஒரு பகுதியயை பிரித்தானியா வழங்க மறுத்திருந்தது சில வாரங்களுக்கு முன் வந்த செய்தி.

சுற்றத்தில் என்ன நடக்கின்றது என்பதை பார்க்காமல், கேட்காமல், தீரவும் விசாரிக்காமல் சார்ள்ஸ் நிர்மலநாதன் என்ற வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை” என்று பாராளுமன்றத்தில் முழங்கினார்; அல்ல யாருக்கோ முதுகு சொறிந்தார்.

உலகில் கொரோனாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சீனா, தென் கொரியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகள் மட்டுப்படுத்தப்பட்ட இராணுவ பொலிஸ் அதிகாரம் உடைய நாடுகளே. அந்தக் கட்டமைப்புத் தான் அந்நாடுகளில் கொரோனாவைக் கட்டுப்படுத்த உதவியது. (அது மட்டுமே காரணம் அல்ல என்பதையும் குறித்துக்கொள்க.) அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையும் ஒப்பீட்டளவில் கொரோனாவை கட்டுப்பாட்டுக்கள் வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதற்கு இலங்கையின் இராணுவக் கட்டமைப்பும் ஒரு காரணம் என்பதை மருத்துவத்துறை சார்ந்தவர்களே ஏற்றுக்கொண்டும் உள்ளனர்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பத்தில் விட்ட அறிக்கைகளில் வடக்கு கிழக்கில் கொரோனா தடுப்பு மையங்களை உருவாக்குவதற்கே எதிர்ப்பு தெரிவித்து வந்தது. தாங்களும் ஏதோ அறிக்கை வெளியிட வேண்டும், பாராளுமன்றத்தில் முழங்க வேண்டும் என்பதற்காக சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் அறிக்கை விடுவது பின்னர் அதுபற்றி மௌனமாக இருப்பது என்பது இவர்களுடைய சாக்கடை அரசியல் தந்திரம். அதற்கு தானும் சளைத்தவன் அல்ல என்பதை சாரள்ஸ் நிர்மலநாதன் நிரூபித்துள்ளார். “சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது. இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது” என்று சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்து உள்ளார். எதை எதிர்ப்பது எதை ஆதரிப்பது என்ற விவஸ்தையே இல்லாத முட்டாள்களை பாராளுமன்றம் அனுப்பியதன் விளைவை தமிழ் மக்கள் அனுபவித்துத்தானே ஆக வேண்டும்.

இந்த தமிழ் தேசிய வைரஸ்களுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டால் எஞ்சியுள்ள தமிழ் சமூகமும் அழிந்துபோய்விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒரு விடயம் பற்றி பேசுவதாக இருந்தால் அதனைப் பற்றி தேடி ஆய்வு செய்து பேச வேண்டும். இல்லையேல் தெரியாத விடையத்தை பேசுவதைத் தவிர்க்க வேண்டும். தெரியாத விடையத்தை தெரிந்தது போல் காட்டி இப்படி ஊதிக்கெடுக்கின்ற ஆண்டிகள் சேர்ந்து தமிழ் மக்களுக்கு தமிழீழ மடம் கட்டித் தர வெளிக்கிட்டு உள்ளனர். இவர்கள் மடம் கட்டுகிறார்களோ இல்லையோ தமிழ் மக்களுக்கு கொல்லி வைப்பது என்றே விறகுக்கட்டைகளுடன் வலம்வருகின்றனர். ஜாக்கிரதை!

கனடாவில் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் – முஸ்லீம்கள் என்பதால் இனவெறித்தாக்குதலா என்ற சந்தேகம்..?

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் லண்டன் நகரில் உள்ள ஒரு பூங்காவுக்கு அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு காரில் வந்த வாலிபர் ஒருவர் திடீரென அவர்கள் மீது காரை மோதினார்.

இதில் அவர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவர்கள் தங்களுக்கு என்ன நடந்தது என சுதாரிப்பதற்குள் அந்த வாலிபர் மீண்டும் அவர்கள் மீது காரை ஏற்றினார். இதில் அவர்கள் கார் சக்கரங்களில் சிக்கி நசுங்கினர். இந்த கோர சம்பவத்தில் 74 மற்றும் 44 வயதான 2 பெண்கள், 46 வயதான ஒரு ஆண் மற்றும் 15 வயதான சிறுமி என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதேசமயம் அந்த குடும்பத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் படுகாயங்களுடன் உயிர் தப்பினான்.‌அதனை தொடர்ந்து காரை மோதி தாக்குதல் நடத்திய அந்த வாலிபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார்.‌

இதற்கிடையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு கொலையாளியை போலீசார் தேடினர். சம்பவம் நடந்த சிறிது நேரத்தில் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் அந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே முதற்கட்ட விசாரணையில் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டவர்கள் முஸ்லிம்கள் என தெரியவந்தது.‌ எனவே இது இனவெறி தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.‌ இதனால் அந்த கோணத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

“எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில்விக்கிரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம் முயலக்கூடும்.” – நளின் பண்டார

“எதிர்கட்சியை பலவீனப்படுத்துவதற்கு ரணில்விக்கிரமசிங்கவை பயன்படுத்த அரசாங்கம் முயலக்கூடும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்குள் நுழைவது குறித்து அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேயே அதிகம் பேசுகின்றார்.  பெருமளவிற்கு நெருக்கடியில் சிக்குண்டுள்ள அரசாங்கம் அதிலிருந்து விடுபடுவதற்காக ரணில்விக்கிரமசிங்கவை அமைச்சரவையில் இணைத்துக்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடக்கூடும் .
அல்லது ரணில்விக்கிரமசிங்க நாடாளுமன்றத்திற்கு வந்த பின்னர் எதிர்கட்சி இரண்டாகும் என அரசாங்கம் கற்பனை செய்யக்கூடும் .  அதிகாரத்தை இழக்கும்போது இவ்வாறான முயற்சிகள் இடம்பெறுவது வழமை .
எதிர்கட்சியை பலவீனப்படுத்தி தன்னுடைய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ரணில்விக்கிரமசிங்கவை கூட பயன்படுத்தலாம் என்பதே அரசாங்கத்தின் திட்டம் .  ரணில்விக்கிரமசிங்கவை தனது பக்கம் அரசாங்கம் எடுப்பது குறித்து ஐக்கியமக்கள் சக்திக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர் அனுபவம் உள்ள அரசியல்வாதி. அவருக்கு தனிப்பட்ட இராஜதந்திர தொடர்புகள் உள்ளன.எங்களிற்கு ஆட்சேபனையும் இல்லை ஆனால் எதிர்கட்சி பலவீனப்படாது. என நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

“சீனாவே கொரோனா வைரஸ் பரவக்காரணம்.” – பைடனின் முதல் வெளிநாட்டுப்பயணத்தில் இதுவே மிக முக்கியமானது !

ஓராண்டுக்கும் மேலாக உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கொலைகார கொரோனா வைரஸ் சீனாவின் வுகான் நகரில்தான் முதன் முதலில் அடையாளம் காணப்பட்டது. பின்னர் அங்கிருந்து உலக நாடுகளுக்கு இந்த  வைரஸ் பரவியது.

இதனால் கொரோனா வைரஸ் சீனாவில் தோன்றியதாகவும், அங்குள்ள ஆய்வகத்தில் இருந்தே இந்த வைரஸ் கசிந்ததாகவும் அமெரிக்கா தொடர்ந்து குற்றம் கூறி வருகிறது. ஆனால் அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை சீனா மறுத்து வருகிறது.

கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து உலக சுகாதார அமைப்பு சீனாவில் ஆய்வு நடத்தி கடந்த மார்ச் மாதம் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தது. ஆனால் இந்த அறிக்கை திருப்திகரமாக இல்லை என அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் விமர்சனம் செய்தன.

எனவே கொரோனா வைரஸ் தோற்றம் மற்றும் பரவல் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவதற்கு உலக நாடுகள் பலவும் அழைப்பு விடுத்துள்ளன.

இந்த விசாரணையில் சீனா பங்கேற்று கொரோனா வைரஸ் குறித்த உண்மையான தகவல்களை வழங்க வேண்டும் என்று உலக நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஆனால் சர்வேத விசாரணையில் தாங்கள் பங்கேற்கப்போவதில்லை என சீனா தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றி வெளிப்படையான தகவல்களை வழங்க சீனாவுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்கப்படும் என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜாக் சல்லிவன்‌ இதுகுறித்து கூறுகையில்,

“கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இருக்கவும், உண்மையான தரவுகள் மற்றும் தகவல்களை வழங்குவதற்கும் நாங்கள் சர்வதேச சமூகத்துடன் ஒருங்கிணைந்து, தொடர்ந்து அழுத்தம் கொடுப்போம். சர்வதேச விசாரணையில் நாங்கள் பங்கேற்கப்போவதில்லை என அவர்கள் (சீனா) கூறியதை நாங்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சர்வதேச விசாரணைக்கு முழு ஆதரவை வழங்கும் அதே வேளையில், இதுபற்றி அமெரிக்கா ஏற்கனவே தனியாக விசாரணையை தொடங்கியுள்ளது.
இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முதல் வெளிநாட்டு பயணத்தின் போது வெளிநாட்டு தலைவர்களுடன் அவர் விவாதிக்கும் முக்கிய விவகாரங்களில் கொரோனா வைரஸ் தோற்றம் பற்றிய சர்வதேச விசாரணையும் அடங்கும்.” என ஜாக் சல்லிவன் தெரிவித்தார்.

Zoom மென்பொருளுக்கு பதிலாக இலவசமாக பயன்படுத்தக்கூடிய இலங்கை மாணவர்களுக்கான மென்பொருள் விரைவில் !

பாடசாலை மாணவர்கள் வீட்டிலிருந்து இணையவழியூடாக கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இலவசமாக பயன்படுத்தக்கூடிய மென்பொருள் ஒன்றை எதிர்வரும் சில வாரங்களில் அறிமுகப்படுத்தவுள்ளதாக டிஜிட்டல் தொழில்நுட்ப மற்றும் நிறுவன மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இந்த புதிய மென்பொருளானது, நிகழ்நிலை (Zoom) மென்பொருளைப் போன்றது என்றும், இலங்கையின் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழு ஆகியவற்றுடன் இணைந்து இத்திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், நேற்று பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜப்பானிடம் இருந்து இலங்கைக்கு ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகள் விரைவில் !

இலங்கைக்கு ஆறு இலட்சம் அஸ்ட்ராசெனகா தடுப்பூசிகளைப் பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஜப்பான் பிரதமர் யொசிஹிடே சுகாவிடம் முன்வைத்த கோரிக்கைக்குச் சாதகமான பதில் கிடைத்துள்ளது.

இந்த விடயத்தை ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக உநுதிப்படுத்தியுள்ளது. ஜனாதிபதிக்கும், இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் சுகியாமா அக்கிராவிற்கும் இடையில், இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போதே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

கொரோனா வைரஸ் தொற்றொழிப்பு, மருத்துவ மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு உபகரணங்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் ஜனாதிபதி முன்வைத்த கோரிக்கைக்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. சமுத்திர அனர்த்தம் தொடர்பில் விரைவாகப் பதிலளிப்பதற்குத் தேவையான தொழிநுட்ப உதவிகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பிலும் ஜனாதிபதி, ஜப்பான் தூதுவரின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

ஜப்பான் தூதுவர் அலுவலகத்தின் பிரதித் தூதுவர் கித்தமுரா டொசிகிரோ, முதலாவது செயலாளர் இமமுரா காயோ, ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.ஜயசுந்தர, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே ஆகியோரும் இச்சந்திப்பின்போது கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுக்கொண்ட, சுமார் ஆறு இலட்சம் பேர், இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் இன்று 2,716 பேருக்கு கொரோனா !

இலங்கையில் இன்று இதுவரையில் 2,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக  இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

குறித்த அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,716 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 213,377 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 2,168 பேர் இன்று பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 180,427 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,843 ஆக அதிகரித்துள்ளது.

“கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது.” – சார்ள்ஸ் நிர்மலநாதன்

இலங்கையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் தொடர்ந்தும் ஈடுபடுத்தப்பட்டால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அமர்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மேலும் அங்கு பேசிய அவர்,

இலங்கை அரசாங்கம் இந்தியா, அமெரிக்கா, பிரித்தானியாவை எதிர்த்து சீனாவின் பக்கம் நிற்பதனாலேயே கொரோனா தடுப்பூசிகளை வழங்க குறித்த நாடுகள் முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார்.

இவ்வாறு இலங்கையால் கொரோனா தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய முடியாமைக்கு அரசின் இராஜதந்திர கொள்கையின் பலவீனமே காரணம் என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுட்டிக்காட்டினார்.

சுகாதாரத்துறையினர் செய்ய வேண்டிய வேலைகளை இராணுவத்தினர் செய்வதனாலேயே நாடு தற்போது பேராபத்தை எதிர்கொண்டுள்ளது என்றும் இந்த செயற்பாடு தொடர்ந்தால் மக்கள் அழிவதனை யாராலும் தடுக்க முடியாது என்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார்.

16 வயது சிறுமியை இணையம் வழியாக பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த ஒருவர் கைது !

16 வயது சிறுமி இணையம் வழியாக பாலியல் தொழிலுக்கு விற்பனை செய்த ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர் பல வாடிக்கையாளர்களுக்கு குறித்த சிறுமியை விற்பனை செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த சந்தேக நபர் கல்கிஸ்சையில் ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுத்து இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டார் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக குறித்த சிறுமியின் தாயிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கடந்த மூன்று மாதங்களாக சந்தேக நபருடன் தொடர்புடையவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அதே நேரத்தில் குறித்த சந்தேகநபர் நேற்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிட்டார்.

2021ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இலங்கையில் !

2021ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இலங்கையில் நடாத்துவது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வருடத்துக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இந்தியாவில் நடாத்த சர்வதேச கிரிக்கெட் பேரவை தீர்மானித்திருந்தது.

எனினும், தற்போது இந்தியாவில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த போட்டித்தொடரை இலங்கையில் நடாத்துவதற்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டுடன் இந்திய அதிகாரிகள் கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.