July

July

“அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை.” – இரா.சாணக்கியன்

“அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன். அது யாராக இருந்தாலும் பரவாயில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மீனவர்களின் படகுகளிலிருந்து ஆழ்கடலில் வைத்து களவாடப்படும் மீன்கள், சுறுக்குவலைகள் தொடர்பில் இன்று (23.07.2021) மாளிகைக்காடு அந்நூர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற மீனவர்களுடனான கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

கல்முனை பிரதேச செயலக விவகாரத்தில் ஒன்றுமில்லை. அதை வைத்து அரசியலை மட்டுமே செய்கிறார்கள். அந்த செயலகத்தை தரமுயர்த்துவதனால் முஸ்லிம்களுக்கு எவ்வித நஷ்டமும் இல்லை. பெயர் பலகையில் மாற்றம் வருமே தவிர தமிழர்களுக்கும் பெரிதாக ஒன்றும் கிடைக்கபோவதுமில்லை.

இது தொடர்பில் நான் பெரிதாக பேசுவதில்லை என்கிறார்கள். இதில் பேச ஒன்றுமில்லை. இதனை வைத்து கொண்டு அரசியல் மட்டுமே நடக்கிறது. சந்தர்ப்பம் வரும் போது மீனவர்களின் பிரச்சினையை பற்றி நாடாளுமன்றத்தில் பேசுவேன். கல்முனை பிராந்தியத்திற்கு தடுப்பூசி வழங்கவேண்டும் என்று நான் மட்டுமே தான் நாடாளுமன்றத்தில் பேசினேன். அநியாயத்திற்கு எதிராக எப்போதும் குரல் கொடுப்பேன் அது யாராக இருந்தாலும் பரவாயில்லை என தெரிவித்துள்ளார்.

கோலாகலமாக ஆரம்பித்த 32-வது ஒலிம்பிக் போட்டிகள் – 11,683 வீரர்கள் பங்கேற்பு !

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. அவ்வகையில், 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டே இந்த போட்டி நடந்திருக்க வேண்டியது. ஆனால், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு இந்த ஆண்டு நடைபெறுகிறது.

லேசர் ஜாலங்கள், கண்கவர் கலைநிகழ்ச்சிகள்... வண்ணமயமாக தொடங்கியது டோக்கியோ ஒலிம்பிக்

ஒலிம்பிக்கின் அதிகாரப்பூர்வ தொடக்க விழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில்  இன்று மாலை தொடங்கியது.  கண்கவர் கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டமாக விழா நடைபெறுகிறது.
ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடந்தன. எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் உறுதியாக உள்ளன.

அதற்கு வசதியாக நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த பிரச்னையுமின்றி ஒலிம்பிக் போட்டி இன்று தொடங்குகிறது.

கலைநிகழ்ச்சி

போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் நடக்கும். கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. மொத்தம் 11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.

இலங்கை சார்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ இதில் பங்கேற்க உள்ளார். ஆரம்ப நிகழ்வை பார்வையிடும் சந்தர்ப்பம் ஜப்பான் மக்களுக்கு கிடைக்காது. இந்த நிகழ்வை நேரலையாக ஒளிபரப்புவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலங்கையில் வேகமெடுக்கும் டெல்டா !

நாட்டில் டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையில் மேலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கமைய இதுவரை 61 டெல்டா வகை கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கோட்டே, கொலன்னாவ, அங்கொட, நவகமுவ, மாபாகே, கட்டுநாயக்க, நீர்கொழும்பு, இரத்மலானை, பேருவளை, காலி, மாத்தறை, தம்புள்ளை, வவுனியா மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலேயே இவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதே நேரம் நாட்டில் மேலும் 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 292,608 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் இதுவரை 265,708 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் 3,959 பேர் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உலகில் 75% கடந்த டெல்டா வகை கொரோனா – உலக சுகாதார அமைப்பு கவலை !

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட கொரோனா வைரசுகளில் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டவை டெல்டா வகையை சோந்தவையாக உள்ளன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபற்றி வெளியிடப்பட்டு உள்ள அறிக்கையில், இந்தியா, சீனா, ரஷ்யா, இஸ்ரேல், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் கடந்த 4 வாரங்களாக கொரோனா நோயாளிகளிடம் இருந்து சேகரிக்கப்பட்டு, டெல்டா வகை என்று உறுதி செய்யப்பட்ட கொரோனா மாதிரிகளின் எண்ணிக்கை 75% கடந்துள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக கண்டறியப்பட்ட டெல்டா வகை கொரோனா, மற்ற வகைகளை விட அதிக வேகத்தில் பரவும் தன்மை கொண்டது.
உலகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டங்கள் விரிவுபடுத்தப்பட்டு வந்தாலும், சில நாடுகளில் தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என தனது அறிக்கையில் உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

“மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. ” – சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை

“மாகாண மட்டத்தில் சிறுவர்கள் தொடர்பான நீதவான் நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அமைக்கப்படவுள்ளன. ” என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பிரதித் தலைவி சுஜாதா அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாட்டில் இவ்வாறான நீதிமன்றங்கள் இரண்டு மாத்திரமே உண்டு. சிறுவர்கள் தொடர்பான வழக்குகளை தீர்ப்பதற்கு இவை போதுமானதல்ல.

இதேபோன்று, வழக்கு விசாரணை சந்தர்ப்பங்களில் சிறுவர்கள் வயதானவர்களுடன் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்படுகின்றது. சிறுவர்கள் தொடர்பான வழக்குகள் ஒத்திவைக்கப்படுகின்றமையும் நிலவுகின்றது. இந்த நிலைமையை கவனத்திற் கொண்டு, அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய வகையில், இவ்வாறான நீதிமன்றங்கள் 18 ஐ அமைப்பதற்கு ஆலோசிக்கப்பட்டிருப்பதாக  அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் காலம் கடந்த சிறுவர்கள் தொடர்பான சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

ரிஷாட் பதியுதீனின் வீட்டு பணிப்பெண் துஷ்பிரயோகம் – பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது !

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் வீட்டில் சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய மற்றுமொரு சம்பவம் தெரிய வந்துள்ளது.

இதன் போது, கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை பாராளுமன்ற உறுப்பினரின் வீட்டில் பணி புரிந்து வந்த பணிப்பெண் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

22 வயதுடைய குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.

44 வயதுடைய மதவாச்சி பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் !

தமிழர்கள் மீதான அரசின் இனப்படுகொலைக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (வெள்ளிக்கிழமை) காலை முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று  முன்னெடுக்கப்பட்டது.

கருப்பு ஜூலை 23 நினைவு நாளை நினைவுகூர்ந்து தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று காலை 10 மணி முதல் 11 மணி வரை  இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்,  கறுப்பு ஜூலை தமிழினப் படுகொலை நாள், கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் எங்கே?, இன அழிப்புக்கு நீதி வேண்டும்,  அரசியல் கைதிகளை விடுதலை செய், வெளியேறு இராணுவமே வெளியேறு உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பினர்.

குறித்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், பொது அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

சீனாவில் வரலாறு காணாத மழை – மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதிப்பு !

சீனாவில் வரலாறு காணாத மழை பெய்த நிலையில், வெள்ள பாதிப்பில் சிக்‍கி 30க்‍கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய சீனாவின் ஹென்னான் மாகாணத்தில் கடந்த ஒரு வாரமாகப் பெய்துவரும் கனமழை காரணமாக கயங்கர வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது. ஒரு வருடத்தில் பெய்யும் மழை, மூன்று நாட்களில் கொட்டித் ​தீர்த்ததால் குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. ஷெங்ஷெள நகரில் மட்டும் மூன்று நாட்களில் 62 சென்டி மீட்டர் மழை பதிவானது.

இந்நிலையில், மழை பாதிப்பில் சிக்‍கி உயிரிழந்தோரின் எண்ணிக்‍கை 33ஐக்‍ கடந்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் மூன்றரை லட்சத்துக்‍கும் மேற்பட்டோர் பாதுகாப்பான பகுதிகளுக்‍கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

“ஆளுங்கட்சியுடன் இணைந்து மாவட்ட அபிவிருத்திக்கான நகர்வுகளை நானும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மேற்கொள்கின்றோம்.” – வியாழேந்திரன்

“ஆளுங்கட்சியுடன் இணைந்து மாவட்ட அபிவிருத்திக்கான நகர்வுகளை நானும் சிவனேசதுரை சந்திரகாந்தனும் மேற்கொள்கின்றோம்.” என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.

மேலும் சில ஊடக நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயற்படுகின்றன. நாங்கள் ஊடக சுதந்திரத்தை மதிக்கிறோம். ஆனால் ஒரு சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பதிவிடும்போது அறிந்து கொண்டு, அது தொடர்பில் எம்மிடமும் கேட்டு பதிவிடுங்கள் என அவர்  தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், டெப் கணனிகளை வழங்கும் செயற்றிட்டத்தின் கீழ் மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட 14 பாடசாலைகளுக்கு 778 டெப் கணனிகள் வழங்கு வைக்கும் நிகழ்வு வெல்லாவெளி கலைமகள் வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர்,

பாராளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தனும் நானும் இணைந்து எடுத்த முயற்சியின் பலனாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 5 கல்வி வலயங்களுக்குமாக 3943 டெப் கணனிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. மாவட்டத்தின் கல்வி வளர்ச்சிக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கிக் கொண்டிருக்கின்றோம். இன்னும் நாம் கல்வித்துறைசார் வளர்ச்சியை மேம்படுத்துத்துவதற்காக பல்வேறுபட்ட செயற்றிட்டங்களை உருவாக்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

ஆளும் கட்சியில் இருக்கின்ற நாங்கள் ஒவ்வொரு துறைசார்ந்த வினைத்திறன் மிக்க சேவையை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினூடாக பெற்றுக் கொடுப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்கனை முன்னெடுத்து வருகின்றோம். எதிர்வரும் காலங்களில் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டங்களில் கல்வி தொடர்பான விடயங்களை முதலாவதாக ஆராயப்படும் விடயமாக நாம் கொண்டு வந்திருக்கின்றோம்.

அடுத்த கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி தமிழருக்கானது இந்த வாய்ப்பை தாரை வார்க்கத் துணைபோகும் தமிழ் தலைவர்கள் என தெரிவித்து என்னுடைய பெயரையும், பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தனின் பெயரையும் இட்டு கல்விச் சமூகம் கிழக்கு மாகாணம் என எனக்கு ஒரு மொட்டைக் கடிதம் வந்துள்ளது. மாவட்டத்திலே சிரேஸ்ட நிலையிலுள்ளவர்களை அடுத்தடுத்து பதவி நிலைகளுக்குத் கொண்டு வந்தால்தான் அடுத்தடுத்து எம்மவர்களுக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நாங்கள் கலந்துரையாடியுள்ளோம்.

இவ்வாறான விடயங்களை நாசமாக்கியவர்கள் இந்த மாவட்டத்தினுடைய முன்னாள் அரசியல்வாதிகள்தான். கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் பதவி திருமதி.நகுலேஸ்வரி புள்ளநாயகத்துக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும். தற்போதும் அதற்குரிய கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார்.

தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க நடவடிக்கை !

மொடர்னா கொவிட் தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் தவறான பிரச்சாரங்களை பரப்புவோரை கண்டுபிடிக்க குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளின் உதவியுடன் சிறப்பு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி ஒருவர் செய்த முறைப்பட்டுக்கமைய இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மொடர்னா கொவிட் தடுப்பூசி உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றும் நெனோ தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது எனவும் சமூக ஊடகங்களில் சில தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளார்.