02

Friday, August 6, 2021

02

“நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்ல அரசு முயற்சிக்கின்றது.” – அநுரகுமார திஸாநாயக்க

“தேர்தல் முறைமை சீர்திருத்தம் ஊடாக நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்வதற்கே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது.” என  ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை சீர்திருத்தம் தொடர்பில் தமிழ் முற்போக்குக் கூட்டணி மற்றும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றுடன் நடைபெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

தேர்தல் முறைமை சீர்திருத்தம் ஊடாக நாட்டை மீண்டும் இரு கட்சி முறைமைக்கு கொண்டு செல்வதற்கே தற்போதைய அரசு முயற்சிக்கின்றது. நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட தேர்தல் முறைமை மாற்றங்களில் விகிதாசார தேர்தலை முறைமையே முற்போக்கான, ஜனநாயகமான தேர்தல் முறைமையாக விளங்குகின்றது.

இம்முறைமையை மாற்றுவதாக இருந்தால் தற்போது இருப்பதைவிடவும் மேலும் சிறந்த முற்போக்கான, ஜனநாயகம்மிக்க புதிய முறைமையாகவே இருக்கவேண்டும். உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகியவற்றில் சிறு கட்சிகளின் பிரதிநிதித்துவமும் மக்களின் சார்பில் இருக்கவேண்டும். அதேபோல் அனைத்து தேர்தல்களுக்கும் சம முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும். ஜனநாயகத்தின் அடிப்படை அம்சமும் இதுதான்.

ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல் பழைய முறைமையிலேயே நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை, மாகாண சபை, நாடாளுமன்றம் ஆகிய மூன்றுக்கும் ஒரே தேர்தல் முறைமை இருக்கவேண்டும். இவை தொடர்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது. எமது யோசனைகள் தெரிவிக்குழுவில் முன்வைக்கப்படும். ஏனைய கட்சிகள் மற்றும் அமைப்புகளை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

மீட்கப்பட்ட பழங்குடியின பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் – நீதி கேட்டு விக்டோரியா மகாராணியின் சிலை தகர்ப்பு !

கனடா நாட்டில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கம்லூப்ஸ் என்ற இடத்தில் பள்ளிக்கூடம் ஒன்று கடந்த காலத்தில் செயல்பட்டு வந்தது. அதன் வளாகத்தில் 215 குழந்தைகளின் எலும்புக்கூடுகள் புதைந்திருந்தமையானது கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து அது கடுமையான  அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
கனடாவில் உள்ள பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் புதைக்கப்பட்ட குழந்தைகளின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகின்றன. இது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கனடாவின் தேசிய தினத்தையொட்டி, பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில்  பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும், பழங்குடி சமூகங்களுக்கான ஆதரவை திரட்டுவதற்காகவும் மானிட்டோபா தலைநகர் வின்னிபெக்கில் ஆயிரக்கணக்கானோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலமாகச் சென்ற அவர்கள், சட்டமன்ற வளாகத்தில் விக்டோரியா மகாராணியின் முக்கிய சிலையை தகர்த்து கீழே தள்ளினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் உருவானது.
பழங்குடியினர்பழங்குடியினர் பராமரிப்பு பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பட்டதால், கனடா தினத்தன்று தேசிய கொண்டாட்டங்களை ரத்து செய்ய வேண்டும் பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் ஏற்கனவே வலியுறுத்தினர். இதனால் கனடா முழுவதிலும் உள்ள நகராட்சிகள் கொண்டாட்டங்களை ரத்து செய்தன.
போராட்டங்களின்போது, பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளிகளுடன் தொடர்புடைய நபர்களின் சிலைகள் அழிக்கப்பட்டன. சில சிலைகள் அகற்றப்பட்டுள்ளன.

“தடுப்பூசி வழங்குவதில் வன்னி மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.” – செல்வம் அடைக்கலநாதன்

இலங்கையில் படிப்படியாக அனைத்து பகுதிகளுக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆரம்பம் முதல் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளில் வடக்கு – கிழக்கு புறக்கணிக்கப்பட்டதாக கூட்டமைப்பினர் விசனப்பட்டு வந்த நிலையில் யாழ்ப்பாணத்திற்கு கடந்த மாதம் 50,000 தடுப்பூசிகள் வழங்கப்பட்டது. இது தொடர்பாகவும் அதே தலைமைகள் அதிருப்தி வெளியிட்டு தம்சார்ந்த பகுதிகளுக்கும் தடுப்பூசி வழங்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கொரோனா தடுப்பூசி வழங்குவதில் வன்னி மக்கள் பாரபட்சம் காட்டி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இவ் அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கொரோனா தொற்று நாட்டில் பரவலாக காணப்படும் நிலையில் தடுப்பூசிகளை வழங்குவதற்கு அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எனினும் தற்போது இந்நடவடிக்கையில் அரசின் ஈடுபாடு போதுமானதாக காணப்படாமையினாலேயே பல பகுதிகளிலும் மக்கள் முதலாவது தடுப்பூசியை கூட பெற்றுக்கொள்ள முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு சென்றுள்ளனர்.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவை உள்ளடக்கிய வன்னி பிரதேசத்தில் இதுவரை எந்த ஒரு பொது மகனுக்கும் தடுப்பூசி வழங்கப்படவில்லை.

ஆடைத்தொழிற்சாலை ஊழியர்கள் மற்றும் சுகாதார பகுதியினருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பொது மக்களுக்கு வழங்க பாரபட்சம் காட்டி வரும் அரசாங்கம் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும்.

வட மாகாணத்தின் நுழைவாயிலாக காணப்படும் வவுனியா மக்களுக்கு தடுப்பூசியை வழங்குவது கட்டாயமாகும் என்பதனை புரிந்துகொள்ள வேண்டும். அதற்குமப்பால் இன்று வவுனியாவில் கொரோனா தொற்றாளர்கள் விகிதாசார அடிப்படையில் பார்க்கின்ற போது அதிகமாக காணப்படுகின்றனர். கொரோனா மரணங்கள் 19 வரை அதிகரித்துள்ளது. இது அம் மாவட்டத்தில் வாழும் மக்கள் தொகையோடு ஒப்பிடுகையில் அதிகமாகவே பார்க்கப்படுகின்றது.

இதேபோன்று மன்னார் மாவட்டமும் இந்தியாவில் பரவியுள்ள டெல்டா வைரஸ் பரவல் மீனவர்கள் மூலம் பரவுவதற்கு அதிகம் வாய்ப்புள்ள மாவட்டமாக காணப்படுகின்றது. ஏனவே இங்குள்ள மக்களுக்கும் உடனடியாக தடுப்பூசியை வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

முல்லைத்தீவில் மீன் வியாபாரத்திற்காக பல மாவட்டங்களிலும் இருந்து மக்கள் வந்து செல்வதனாலும் குறித்த மாவட்டம் வட மத்திய மற்றும் கிழக்கு மாகாண எல்லைகளை கொண்டு காணப்படுவதனாலும் ஏனைய மாகாண மக்கள் பல்வேறு தேவைகளின் பொருட்டு இங்கு வந்து செல்வதனாலும் முல்லைத்தீவு மாவட்ட மக்களுக்கு குறித்த தடுப்பூசி கட்டாயமாக செல்லுத்தப்படவேண்டிய தேவை காணப்படுகின்றது.

எனினும் தற்போதைய அரசாங்கம் இது தொடர்பில் அக்கறையின்றி காணப்படுகின்றமையை பார்க்கும்போது பாரபட்சமாக செயற்படுவதாகவே எண்ணத்தோன்றுகின்றது என அவர் குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“இலங்கையின் கிரிக்கெட் அவமானகரமானதாக மாறியுள்ளது.” – அர்ஜுன ரணதுங்க வருத்தம் !

இலங்கையில் தற்போது கிரிக்கெட் விளையாட்டு மிகவும் அவமானத்திற்கு உள்ளாகி உள்ளதாக முன்னாள் இலங்கை அணித் தலைவர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கடந்த 04 வருடங்களுக்கும் மேலாக இலங்கை கிரிக்கெட் அணி தொடர்தோல்விகளை சந்தித்து வருகின்ற நிலையில் இது தொடர்பில் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர். இந்நிலையில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அர்ஜுன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறிய போது ,

போட்டிகளில் தோற்பது குறித்தும், வீரர்களின் ஒழுக்கம் குறித்தும் தற்போது பேசப்பட்டு வருவதாகவும் தான் அணித் தலைவராக இருந்தபோது நாட்டிற்காக விளையாடிய வீரர்கள் மட்டுமே அணியில் இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவ்வாறான ஒரு அணி இருந்ததால் தங்களுக்கு உலக கிண்ணத்தை வெல்ல முடியுமானதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய வீரர்களின் ஒழுக்கம் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கனடாவில் அதிகரித்துள்ள அதியுச்ச வெப்பம் – உருகும் தார் சாலைகள் – 400க்கும் அதிகமானோர் பலி !

வழக்கத்துக்கு மாறாக, கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் அண்மைய நாட்களில் பதிவாகியுள்ளது.
சுட்டெரிக்கும் வெயிலால் தார் சாலைகள் உருகும் நிலை ஏற்பட்டுள்ள நிகழ்வு அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதீத வெப்பத்தால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் சமீபத்தில் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வரலாறு காணாத இந்த வெப்பத்தால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி நேற்று முன்தினம் வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்தனர். கனடா மட்டுமின்றி, அமெரிக்காவின் மேற்குப் பகுதியிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், கனடா மற்றும் அமெரிக்காவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு பலியானோர் எண்ணிக்கை 486 ஆக அதிகரித்துள்ளது.
வெப்பத்தின் தாக்கத்தைத் தணித்துக் கொள்ளும் பொருட்டு சாலையோரத்தில் நீரூற்றுகள் அமைக்கப்பட்டுள்ளன. மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் அணியின் புதிய சாதனை

இங்கிலாந்து அணியுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய சாதனை ஒன்றை இலங்கை அணி படைத்துள்ளது.

இதன்படி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை அணி இடம்பிடித்துள்ளது.

1975ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கை அணி 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் 390 ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி 428 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்படி இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.

2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணி சந்தித்த தொடர்களில் 62 சதவீதமானவற்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.

இதேவேளை இந்திய கிரிக்கெட் அணி 427 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் தோல்வியடைந்துள்ளதுடன் பாகிஸ்தான் அணி 414 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் நாட்டை வந்தடைவு

மேலும் ஒரு மில்லியன் டோஸ் சினபோர்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்துள்ளன.

இன்று (02) அதிகாலை 5.00 மணியளவில் UL 869 எனும் விமானம் மூலம் குறித்த தடுப்பூசிகள் வந்தடைந்துள்ளன என மருந்து உற்பத்தி, விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்தார்.

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு தடுப்பூசி

உயர்கல்வி மற்றும் மேலதிக கல்வி நடவடிக்கைகளுக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு கொரோனாத் தடுப்பூசி செலுத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முற்பதிவின் அடிப்படையில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதோடு, இன்று (02) முதல் அதற்கான பதிவுகளை மேற்கொள்ள முடியுமென கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் அறிவித்துள்ளது.

pre-departure-vaccine.covid19.gov.lk எனும் இணையத்தளத்துக்குப் பிரவேசித்து பதிவுகளை மேற்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவைத் தொடர்ந்து இரு நாள்களில் உரிய தொலைபேசி இலக்கத்துக்கு குறுஞ்செய்தி மூலம் உரிய திகதி மற்றும் இடம் தொடர்பான விடயங்கள் அனுப்பி வைக்கப்படுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இனிமேல் டெல்டாவே ஆதிக்கம் செலுத்தப்போகின்றது.” – எச்சரிக்கின்றது உலக சுகாதார அமைப்பு !

உலகை அச்சுறுத்தி வருகிற கொரோனா வைரசின் புதிய மாறுபாடு ‘பி.1.617.2.’ ஆகும். இது டெல்டா வைரஸ் என அழைக்கப்படுகிறது. இந்தியாவில் முதன்முதலாக காணப்பட்ட இந்த வைரஸ் இப்போது உலகமெங்கும் காட்டுத்தீயாக பரவி வருகிறது.
இந்த வைரஸ் இனி வரும் மாதங்களில் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று உலக சுகாதார அமைப்பு, தனது கொரோனா வாராந்திர தொற்றுநோய் புதுப்பிப்பு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
 டெல்டா வைரஸ் பாதிப்பினை 96 நாட்கள் தெரிவித்துள்ளன. இதன் மாறுபாடுகளை அடையாளம் காணத் தேவையான வரிசை முறை திறன்கள் குறைவாக இருப்பதால், இது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்த நோய்த் தொற்று, பல நாடுகளில் தொற்று பரவல் அதிகரிப்புக்கும், ஆஸ்பத்திரிகளில் நோயாளிகள் சேர்க்கை அதிகரிப்புக்கும் காரணம் ஆகும்.
இந்த வைரஸ் பரிமாற்றத்தின் அதிகரிப்பு காரணமாக  டெல்டா வைரஸ் மற்ற வகைகளுடன் போட்டியிட்டு, இனி வரும் மாதங்களில் ஆதிக்கம் செலுத்தும். கொரோனா வைரஸ் தொற்றை எதிர்த்து போராடுவதற்கு தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகள், தனிநபர் இடைவெளி பராமரிப்பு, சமூக அளவிலான கட்டுப்பாடுகள், தொற்று தொடக்கம் முதல் இருந்து வரும் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு அம்சங்கள் ஆகியவை கொரோனா வைரஸ் உள்ளிட்ட கவலைக்குரிய வகைகளுக்கு எதிராக வலுவாக செயல்படும்.
புதிய வகையான கவலைக்குரிய வைரஸ்களின் அதிவேக பரிமாற்றத் தன்மை என்பது நீண்ட காலத்துக்கு நடவடிக்கைகளை பராமரித்து வர தேவையாக இருக்கலாம். குறிப்பாக குறைந்த தடுப்பூசி பாதுகாப்பு சூழலில், மேற்கூறிய பிற நடவடிக்கைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

ஒரு நாள் தொடரையும் மோசமான வகையில் இழந்த இலங்கை அணி !

இலங்கை யணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. ஏற்கனவே மிக மோசமான வகையில் இருபதுக்கு இருபது தொடரை இழந்துள்ள நிலையில் ஒரு நாள் தொடரையும் நேற்றைய தினம் இலங்கை இழந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இங்கிலாந்து அணி, முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் தனஞ்சய டீ சில்வா அதிகபட்சமாக 91 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். மேலும், தசுன் சானக 47 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

5 விக்கெட் வீழ்த்திய சாம் கர்ரன்இங்கிலாந்து அணி சார்பில் அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட சாம் கரண் 5 விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து அணி சார்பில் தலைவர் ஒயின் மோர்கன் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களை பெற்றுக் கொண்ட நிலையில் ஜோ ரூட் ஆட்டமிழக்காது 68 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஜேசன் ரோய் 52 பந்துகளுக்கு முகங்கொடுத்து 60 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் சாமிக கருணாரத்ன மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் பெற்று கொண்டனர்.

இதன் மூலம் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

இதற்கமைய 2 க்கு 0 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி தொடரை கைப்பற்றியுள்ளது.