02

Thursday, September 23, 2021

02

யாழில் மேலும் ஒரு வாள்வெட்டுச்சம்பவம் – அதிரடிப்படையினரை இன்னும் காணவில்லை !

யாழ்ப்பாணத்தில் வெவ்வேறு பகுதிகளில் அண்மைக்காலமாக வாள் வெட்டுக்குழுக்கள் தொடர்ச்சியாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. கடந்த இரண்டு தினங்களுக்குள் கோப்பாய், புத்தூர் பகுதிகளில் பாரிய வாள்வெட்டுச்சம்பவங்கள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இது தொடர்பில் யாழ். பொலிஸார் கைது நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதாக கூறி வருகின்ற போதிலும் கூட இன்று வரை அது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டதாக தெரியவில்லை.

இது தொடர்பில் பேசியிருந்த யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் “யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பிரதேசங்களிலும் சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினரின் உதவியுடன் சிறப்பு பொலிஸ் ரோந்து நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளோம் .” எனக்கூறியிருந்தார்.

இந்நிலையில்  யாழ்ப்பாணம் – கோப்பாய், செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்காக மூன்று விசேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க நேற்றைய தினமும் நேற்று (வியாழக்கிழமை) மாலை, மருதனார்மடம் சந்தைக்கு முன்பாக உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்த வன்முறைக் குழுவொன்று, அங்கிருந்தவர்களை அச்சுறுத்தியதுடன் ஒருவர் மீது தாக்குதலையும் மேற்கொண்டுள்ளது.

மேலும் வீட்டிலிருந்த பெறுமதியான பொருட்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியவற்றினை அடித்து சேதப்படுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த 6 பேர் உள்ளடங்கிய குழு, 4 மோட்டார் சைக்கிள்களில் வாள், இரும்பு, கம்பி மற்றும் கூரிய ஆயுதங்களுடன் வந்திறங்கி, வீட்டுக்குள் புகுந்து அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

நா.உ சிறீதரனை சீன கடலட்டை பண்ணைக்கு அழைத்து சென்ற படகு உரிமையாளரிடம் இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணை !

கிளிநொச்சி மாவட்டம், பூநகரி – கௌதாரிமுனையில் சீனர்களால் நடாத்தப்படும் கடலட்டைப் பண்ணையைப் பார்வையிடச் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோரை ஏற்றிச் சென்ற படகு உரிமையாளரை இராணுவப் புலனாய்வாளர்கள் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

கௌதாரிமுனையில் மூன்று மாதங்களாக சீன நாட்டவரால் நடத்தப்படும் கடலட்டைப் பண்ணை தொடர்பில் உள்ளூர் மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர். இது தொடர்பில் நேரில் ஆராய்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர், அவரின் உதவியாளர்கள் மற்றும் செய்தியாளர்கள் ஆகியோர் கௌதாரிமுனைக்கு நேற்றுமுன்தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் படகில் பயணித்து முற்பகல் 10.30 மணியளவில் கரை திரும்பியிருந்தனர்.

மேற்படி  குழுவினர் படகில் சென்று வந்த விடயம் செய்தியாக வெளிவந்த நிலையில் இராணுவப் புலனாய்வாளர்கள் சிலர், நேற்றுமுன்தினம் மாலை மீனவர் சங்கம் ஊடாக படகின் உரிமையாளரான படகோட்டியிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த விசாரணை தொடர்பாக மீனவர் சங்கம் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

“மட்டக்களப்பின் எந்த ஒரு முக்கியமான கூட்டங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.” – அமைச்சரிடம் சாணக்கியன் முறைப்பாடு !

“மட்டக்களப்பின் எந்த ஒரு முக்கியமான கூட்டங்களுக்கும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், அமைச்சர் பிரசன்ன ரணதுங்க விடம் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று(01.07.2021) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்துள்ள நிலையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே  இரா.சாணக்கியன்  மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர்,

“இன்று மட்டக்களப்பின் நிலையானது குரங்கின் கையில் பூமாலை கிடைத்தது போன்று உள்ளது. மட்டக்களப்பு அரசியல்வாதிகளின் நிலைமை. அதிகாரத்தில் உள்ளவர்களின் நிலைமை. ஏன் என்றால் இன்றைய இந்த கூட்டத்திற்கு கூட நான் அமைச்சரிடம் பேசியே வருகை தந்துள்ளேன்.

மட்டக்களப்பில் இடம்பெறுகின்ற முக்கிய கூட்டங்களுக்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை. கூட்டமைப்பின் சார்பில் இங்கு நாங்கள் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றோம். எனினும் எங்களுக்கு அழைப்பு விடுக்கப்படுவதில்லை.

இதன் காரணமாகவே இன்றைய தினம் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரன் ஜனா வருகை தரவில்லை. மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பதற்கு தேவையாகவுள்ள பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் குறித்து எங்களிடம் முன்மொழிவுகள் உள்ளன. எனினும் அவற்றினை முன்வைப்பதற்கு எங்களுக்கு சந்தர்ப்பங்கள் கிடைப்பது இல்லை. எங்களையும் கூட்டங்களுக்கு அழைத்தால் நாங்களும் முன்மொழிவுகளை முன்வைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பல திட்ட முன்மொழிவுகளை அமைச்சரிடம் கையளித்துள்ளார்.

குறிப்பாக உல்லாச பிரயாணத்துறை வளர்ச்சி சம்பந்தமான சில திட்டங்களில் இவ் துறையோடு சம்பந்தப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதனையும், மட்டக்களப்பு மாவட்ட உல்லாச பிரயாணத்துறையை மேம்படுத்துவதிலுள்ள நன்மைகள் சம்பந்தமாகவும் இதன் மூலம் ஏற்படும் வேலைவாய்ப்பு மற்றும் அபிவிருத்தி சம்பந்தமாகவும் சிலபல திட்ட முன்மொழிவுகளை கையளித்துள்ளார்.