05

Friday, August 6, 2021

05

“அரசாங்கம் அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

“அரசாங்கம் அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறது.” என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அரசின் போக்கு தொடர்பாக  சஜித் பிரேமதாச அறிக்கை ஒன்றினை நேற்று வெளியிட்டிருந்தார். குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மக்களின் ஏமாற்றத்திற்கு காரணமாகியுள்ள இந்த அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் உள்ள மக்கள் ஏற்கனவே அணிதிரண்டுள்ளனர். இதனைத் தாங்க முடியாத அரசாங்கம் தற்போது அடக்குமுறை, அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி செயற்பட்டு வருகிறது.

ஜனநாயகத்தின் போர்க்களத்தில் போராடும் போராளிகளை தண்டிப்பதே அரசாங்கத்தின் வேலையாக இருக்கின்றது.

அரசாங்கத்தின் இயலாமை, தோல்வி மற்றும் உணர்வற்ற தன்மையை மறைக்க ஜனநாயக அரசியல் அரங்கில் உள்ள ஆர்வலர்கள் , சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் மக்களை தண்டிக்க எந்த வகையிலும் அனுமதிக்க போவதில்லை.

அரசாங்கத்தின் இந்த சர்வாதிகார, பாசிச வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்துவதாகவும் சஜித் பிரேமதாச குறித்த அறிக்கையில்  குறிப்பிட்டுள்ளார்.

முகக்கவசங்களுக்கு bye சொல்கிறது இங்கிலாந்து..!

ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக கொரோனாவை வெற்றி கொண்டு வெளிவருவதை தெளிவாக அவதானிக்க முடிகிறது. முக்கியமாக உலகின் பல பகுதிகளும் முடங்கிப்போயிருக்க ஐரோப்பிய நாடுகள் படிப்படியாக முகக்கவசங்களை தூக்கி வீச ஆரம்பித்துள்ளன. முக்கியமாக யூரோ உலக்கிண்ண போட்டிகளை காண ஆயிரக்கணக்கில் ரசிகர்கள் குவிந்த வண்ணமுள்ளனர்.

கொரோனா  பரவலால் அதிக உயிர்சேதத்தை சந்தித்த நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்று. கடுமையான கட்டுப்பாடுகள், தடுப்பூசி போடுவதை அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக இங்கு கொரோனா பரவல் குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தளர்வுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

தற்போது  முக கவசம்  அணிவது கட்டாயமாக உள்ளது. விரைவில் இந்த கட்டுப்பாடு அகற்றப்படுகிறது. இது குறித்து இங்கிலாந்து வீட்டு வசதிதுறை மந்திரி ராபர்ட் ஜென்ரிக் கூறியதாவது:-

வருகிற 19-ந்திகதி முதல் கொரோனா கட்டுப்பாடுகளை சட்டப்பூர்வமாக நீக்க தயாராகி வருகிறோம். அதன் பிறகு யாரும் முககவசம் அணிய தேவை இருக்காது. இங்கிலாந்தில் தடுப்பூசி போடும் திட்டம் வெற்றி பெற்றுள்ளது. எனவே கட்டுப்பாடுகள் நீக்கப்பட உள்ளன.” என்று அவர் கூறியுள்ளார்.

ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 48,000 தொலைபேசி அழைப்புக்கள்!

கடந்த ஆறு மாதங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக கிட்டத்தட்ட 4,000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மேலும் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 48,000 தொலைபேசி அழைப்புகளிலிருந்து இருந்து தகவல்கள் கிடைத்ததாகவும் அந்த ஆணைக்குழுவின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஆண்டு சிறுவர் துஸ்பிரயோகம் குறித்து 8,165 முறைப்பாடுகள் கிடைத்தன என்றும் தேசிய சிறுவர்கள் பாதுகாப்பு ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதேவேளை சிறுவர்களின் நடத்தையில் ஏதேனும் மாற்றம் இருந்தால், அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அல்லது 1929 க்கு தகவல் வழங்கவுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தரம் 6 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இவை குறித்து தெளிவூட்டும் வகையில் மூன்று புதிய புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

நேர்முக வர்ணனையில் அருவருக்கத்தக்க விதமாக பேசிய தினேஷ்கார்த்திக் !

இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் நேர்முக வர்ணனையின்போது, அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாக பேசியமைக்காக இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டையையும், பக்கத்துவீட்டுக்காரரின் மனைவியையும் ஒப்பிடும் வகையில் தினேஷ் கார்த்திக் பேசியமைக்கு சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன.

தினேஷ் கார்த்திக்கின் ஆபாசமான இத்தகைய விமர்சனத்துக்கு அவரின் மனைவியும், தாயும் கூட கண்டனம் வெளியிட்டனர்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் மன்னிப்புக் கோரியுள்ளார். தினேஷ் கார்த்திக் தனது கிரிக்கெட் வர்ணனையின்போது, “ பெரும்பாலான துடுப்பாட்ட வீரர்கள் தங்களின் மட்டையை விரும்பவதில்லை. அது அவர்களுடனே இருக்கும். ஆனால், மற்ற வீரர்கள் பயன்படுத்திய மட்டைகளைதான் அதிகமாக விரும்புவார்கள். மட்டை என்பது அடுத்தவர் மனைவி போல. அதுதான் சிறந்ததாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சமூகவலைத்தலங்களில் கடும் கண்டனம் எழுந்திருந்த நிலையில், இலங்கை – இங்கிலாந்து இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியின், வர்ணனையில் தனது முந்தைய அருவருக்கத்தக்க பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

கடந்த போட்டியில் நான் பேசிய பேச்சுக்கு அனைவரிடமும் மன்னிப்புக் கோருகிறேன். உண்மையில் எந்த உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை. ஆனால், அது தவறுதான்.

அனைவரிடமும் இதற்காக மன்னிப்புக் கோருகிறேன். நிச்சயமாக அந்த வார்த்தை சரியானது அல்ல என்றார்.

இலங்கையில் இணையத்தில் விற்கப்பட்ட 15 வயதுச்சிறுமி – மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சர் கைது !

இலங்கையில் 15 வயது சிறுமி பாலியல் தேவைகளுக்காக இணையத்தளம் ஊடாக விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட மாலைத்தீவு பிரஜை, மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரொருவர் என தெரியவந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கல்கிசையில் 15 வயதான சிறுமியொருவர் பாலியல் தேவைகளுக்காக பலருக்கு விற்பனை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுமியின் தாய் உட்பட 32 சந்தேகநபர்கள் கைதுசெய்யபப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த சிறுமியுடன் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார் என்ற சந்தேகத்தில் 45 வயதான மாலைதீவு பிரஜையொருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் கைதுசெய்தது.

இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் மாலைத்தீவின் முன்னாள் நிதி இராஜாங்க அமைச்சரான மொஹமட் அஷ்மாலி என இலங்கை காவல்துறையினருடன் உறுதிப்படுத்தியுள்ளதாக மாலைத்தீவு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை, கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபரான முன்னாள் இராஜாங்கம் அமைச்சர் எனக்கூறப்படும் நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

15வயது சிறுமியை இணையத்தில் விற்ற விவகாரம் – மாலைதீவு பிரஜை உட்பட மேலும் நால்வர் கைது !

15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வேறொரு இணையத்தளத்தில் சிறுமியை விற்பனை செய்வதற்காக விளம்பரத்தை பிரசுரித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த சிறுமியை இணையத்தளத்தின் மூலம் பணம் கொடுத்து வாங்கியதற்காக மாலைதீவு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதேவேளை, சிறுமியைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்வதற்கு அறையொன்றை வழங்கிய விடுதியொன்றின் முகாமையாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்” என குறிப்பிட்டார்.

குறித்த வழக்கு தொடர்பில் ஏற்கனவே குறித்த சிறுமியின் தாய் உட்பட 26 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“மிளகாய் தோட்டத்தில் புல்லு பிடுங்கி பிள்ளைகளை படிக்க வைக்கிறேன்.எனது கணவனை விடுவியுங்கள்” 

ஏப்ரல் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடைய  முகமட் ஹஸ்தூனின் மனைவியான ஷாரா எனப்படும் புலஸ்தினி ராஜேந்திரன்  தொடர்பாக விசாரணைகள் இன்னமும் முடிந்தபாடில்லை. இந்நிலையில் இவருக்கு உதவி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட தனது கணவரான தேவகுமார் என்பவரை விடுதலை செய்யுமாறு  அவரது மனைவியான டிலோஜினி தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றார்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாங்காடு பகுதியிலுள்ள அவரது வீட்டில் நேற்று (04) ஊடகவியலாளர்கள் சந்திப்பு இடம்பெற்றது. இதன்போது அவர் தெரிவிக்கையில் ,

எனது கணவரான தேவகுமார் என்பவரை சாரா என்ற புலத்தினியை இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாக சந்தேகத்தில் சிஐடியினரால் கடந்த வருடம் 7 மாதம் 11 ம் திகதி வீட்டில் வைத்து கைது செய்தனர்.

இந்த நிலையில் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை இந்த நிலையில் கொழும்பில் இருந்து கல்முனை நீதிமன்றத்திற்கு கடந்த ஏப்ரல் 8 ம் திகதி கொண்டு வந்து மட்டக்களப்பு சிறையில் அடைத்து வைத்துள்ளதுடன் சட்டமா அதிபரிடம் இருந்து ஆவணம் வந்ததும் விடுவதாக தெரிவித்தனர். ஆனால் அது தொடர்பாக இதுவரையும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனக்கு 4 பிள்ளைகள் கல்வி கற்று வருகின்றனர் நாங்கள் வாழ்வாதரம் எதுவும் இன்றி வறுமையில் இருக்கின்றோம். நான் மிளகாய் தோட்டத்தில் புல்லு பிடுங்க கூலி தொழிலுக்கு சென்று அதில் வரும் சம்பளத்தில் வருமானம் எதுவும் இன்றி வறுமையிலும் கஷ்டத்திலும் வாழ்ந்து வருகின்றேன்.

இந்த நிலையில் அண்மையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், சாரா என்பவர் உயிருடன் இல்லையென ஊடகங்கள் வாயிலாக தெரிவித்துள்ளார். அப்படி இருக்கும் போது எனது கணவர் செல்வராசா தேவகுமார் சாராவை இந்தியாவுக்கு தப்பி ஓட உதவி செய்தது என்பது எப்படி சாத்தியமாகும்.

சாரா உயிருடன் இல்லை என்றால் தப்பிக்க எப்படி உதவி செய்திருக்க முடியும். எனவே எனது கணவர் நிரபராதி. எனவே, எனது பிள்ளைகளின் எதிர்காலம் அவர்களது கல்வி போன்றவற்றில் கவனம் செலுத்தி அவரை விடுவித்து தருமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசியல் படுத்தும்பாடு – தமிழ்மக்களுக்கு தீர்வு கொடுக்க வேண்டும் என்கிறார் ரணில் விக்கிரமசிங்ஹ !

“ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு தமிழ் மக்களின் பிரச்னைகளுக்குக்  கட்டாயம்  தீர்வு காணப்பட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையின் உள்நாட்டுப் போர் வடக்கு மற்றும் கிழக்கின் அபிவிருத்திகளை முடக்கிவிட்டது. எமது ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்திகள் குறித்து பாரிய செயற்றிட்டங்களை முன்னெடுத்திருந்தோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் ஒத்துழைத்திருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் மிக ஆர்வமாக மக்களுக்கான தேவைகளை நிறைவேற்றுவதில் ஈடுபட்டிருந்தனர். எதிர்காலத்திலும் வடக்கின் அபிவிருத்திகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படும்.

30 வருட காலப் போர் காரணமாக யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்ய முடியாமல் போனது. எனவே, இங்கு தொழில் வாய்ப்புக்களும் வாழ்வாதார ஊக்குவிப்புக்களும் ஏற்படுத்தப்பட வேண்டும்.

அவ்வாறில்லையெனில் அங்கு வாழும் இளையோரின் எதிர்காலம் கேள்விக்குள்ளாகிவிடும். மறுபுறம் தமிழ் மொழி தொடர்பான சட்ட அமுலாக்கம் உட்பட ஏற்றத்தாழ்வுகளும் உள்ளன. அவையும் தீர்க்கப்பட வேண்டும்.

அதேபோன்று தமிழ் மக்களின் அரசியல் பிரச்னைகளுக்கும் தீர்வு எட்டப்பட வேண்டும். ஒருமித்த நாட்டுக்குள் அரசியல் தீர்வு ஒன்றுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இதனூடாகவே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வை எட்ட முடியும். அவர்களின்  பிரச்சினைகளுக்குக் கட்டாயம்  தீர்வு காணப்பட வேண்டும்” – என்றார்.

………………………………………………………………………………………………………………………………………

தமிழ்மக்கள் தொடர்பில் உளமார்ந்த அக்கறை உடைய ஒரு நபராக ரணில் விக்கிரமசிங்ஹ இருந்திருப்பாராகில் ஆட்சியும் அதிகாரமும் பாராளுமன்றில் பெரும்பான்மையான பிரதிநிதிகளின் ஆதரவும்  இருந்த போது தமிழ் மக்களின் வாழ்க்கை தொடர்பாகவும் வாழ்வியல் முன்னேற்றம் தொடர்பாகவும் ஏதாவது செய்திருக்க முடியும்.

அப்பொழுது எதையுமே செய்யாது இன்று பாராளுமன்றத்தில் ஒரு அதிகாரமும் இல்லாத சூழலில் – ஒரே ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை மட்டும் வைத்துக்கொண்டு என்ன மாற்றத்தை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் ரணில் விக்கிரமசிங்ஹ என்பது தான் தெரியவில்லை. இதை தான் காலம் கடந்த ஞானம் என்பர் போலும். என்ன காலம் சற்று அதிகமாகவே கடந்து விட்டது.

மியன்மாரில் இராணுவத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட மக்கள் படை – கிராம மக்களை சுட்டுத்தள்ளிய இராணுவம் !

மியன்மாரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த பிப்ரவரி மாதம் 1-ந்திகதி இராணுவம் கவிழ்த்துவிட்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. மேலும் நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்து வீட்டு காவலில் வைத்துள்ளது.
இராணுவ ஆட்சிக்கு எதிராகவும், ஆங் சான் சூகிக்கு ஆதரவாகவும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தை இராணுவம் கொடூரமாக அடக்கிவருகிறது. இதில், இராணுவ ஆட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்குழுவினர் மட்டுமின்றி பொதுமக்களும் கொல்லப்படுகின்றனர்.
இந்நிலையில், மத்திய மியான்மரில் இராணுவத்துக்கு எதிரான மோதல் தீவிரமடைந்துள்ளது. சில பகுதிகளில் இராணுவத்திற்கு எதிராக மக்களே ஒன்று சேர்ந்து பாதுகாப்பு படைகளை உருவாக்கி உள்ளனர்.
இதில், காட்டுப்பகுதியை ஒட்டி உள்ள ஒரு கிராமத்தில் நடந்த மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர். இராணுவத்திற்கு எதிரான பாதுகாப்பு படையினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 890 ஆக உயர்ந்துள்ளதாக கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது.
வெள்ளிக்கிழமை கிராமத்திற்குள் புகுந்த இராணுவ வீரர்கள் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சுட்டுத் தள்ளியதாகவும், அதனால் அனைவரும் வீடுகளை பூட்டிக்கொண்டு உள்ளே இருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இறந்துபோனவர்களின் உடல்களை மீட்பதற்கு கூட வெளியேற முடியாத நிலையில் இருந்துள்ளனர். சனிக்கிழமை 17 உடல்களும், இன்று 8 உடல்களும் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து இராணுவம் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் பலர் ஊரை காலி செய்து சென்றுவிட்டனர். காட்டுப்பகுதியில் உள்ள தங்கள் குழுவினரை இராணுவம் வேட்டையாடி வருவதாக பாதுகாப்பு படை உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

“அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற தயார்.” – அமைச்சர் தினேஷ் குணவர்தன

இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் 245 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அமெரிக்க இராஜாங்க செயலாளர் அண்டனி பிளிங்கனுக்கு எழுதிய கடிதத்தில் அவர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.

இரு நாடுகளினதும் மக்களினதும் முன்னேற்றத்திற்காக 1948 முதல் ஆரம்பமான அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவு தொடர்ந்தும் வலுப்படுத்தப்படும் என தான் நம்புவதாகவும் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அமெரிக்கா வழங்கிய விலைமதிப்பற்ற உதவிக்கும் இலங்கை அரசாங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

2019 ல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்த பின்னர் அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு வலுவான நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.