09

Monday, October 18, 2021

09

“அற்புதவிளக்குடன் வந்த பஷிலுக்கு பலர் கூடி பட்டாசு வெடித்த போது பாயாத கொரோனாச்சட்டம் உரிமையைக் கேட்ட மக்கள் மீது பாய்கிறது.” – மனோ கணேசன் காட்டம் !

“அற்புதவிளக்குடன் வந்த பஷிலுக்கு பலர் கூடி பட்டாசு வெடித்த போது பாயாத கொரோனாச்சட்டம் உரிமையைக் கேட்ட மக்கள் மீது பாய்கிறது.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

 

பட்டாசு வெடித்தவர்கள் மீது ஏன் இந்த கொரோனா சட்டம் பாயவில்லை?சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்ற எதிரணியின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , சீ.வி.விக்னேஸ்வரன்,  வேலு குமார், உதய குமார் ஆகிய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே மனோகணேசன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் உரையாற்றிய போது ,

சுதந்திர சதுக்கத்தில் இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. ஒரே நாடு, ஒரே சட்டம் என்று சொன்னீர்களே என இவர்களுக்கு நாம் ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது. ஏனெனில், தங்கள் துன்பம், துயரம் காரணமாக மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்கிறார்கள். அவர்களை இந்த அரசின் பொலிஸ் படை கைது செய்து, சுய தனிமைக்கு அனுப்புகிறது. ஆனால், நேற்று இந்நாட்டுக்கு அமெரிக்காவில் இருந்து, அலாவுதீனின் அற்புத விளக்குடன் வந்த பசில் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்து, பல இடங்களில் பலர் கூடி நின்று பட்டாசு வெடித்தார்கள். அவர்கள் மீது ஏன் இந்த கொரோனா சட்டம் பாயவில்லை?  –

அன்று, ஒரே நாடு, ஒரே சட்டம் என்று நீங்கள்தானே சொன்னீர்கள். இன்று, பொது மக்களுக்கு ஒரு சட்டம், ராஜபக்சர்களுக்கு ஒரு சட்டமா?

தோட்ட தொழிலாளர்கள் வேதனம் இல்லாமல், துன்பத்தில் சிக்கி, நிர்க்கதி நிலையை நோக்கி தள்ளப்பட்டுள்ளனர். இரசாயன கப்பல் அழிவினால், மீனவர்கள் தொழில் இழந்து தவிக்கின்றனர். உரம் இல்லாமல், விவசாயிகள், விளைச்சல் இல்லாமல், வருமானம் இல்லாமல் துன்புறுகின்றனர்.

இதனாலேயே நாடு முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. மக்கள் தங்கள் துன்பங்களை நாட்டுக்கு தெரிவிக்க வேறு வழி இல்லை. ஆனால், அரசாங்கம் பொலிஸை போட்டு, மக்களை கைது செய்கிறது. கொரோனாவை காட்டி, தனிமைப்படுத்துகிறது.

அதேவேளை பசில் ராஜபக்ச பலரை கூட்டி நிறுத்தி பதவி பிரமாணம் செய்கிறார். அவரை வாழ்த்தி அவரது கட்சி நபர்கள் கூடி நின்று பட்டாசு வெடிக்கிறார்கள். அவர்களை பொலிஸ் கண்டுக்கொள்வது இல்லை. இது என்ன நியாயம்? இது சுதந்திர சதுக்கம். இங்கே இன்று சுதந்திரத்தை தேட வேண்டியுள்ளது. நீங்கள்தானே ஒரு நாடு ஒரு சட்டம் என்று சொன்னீர்கள். இன்று மக்களுக்கு ஒரு சட்டம். அரசனுக்கு இன்னொரு சட்டமா?

இலங்கை பொலிஸ் மீது எனக்கு அன்பு இருக்கிறது. ஆனால், அந்த பொலிஸ், அரசியல்வாதிகளின் பேச்சை கேட்டு ஆடக்கூடாது. சட்டம் உருவாக்குவது பாராளுமன்றத்தில் ஆகும். நீங்கள் புது புது சட்டங்களை உருவாக்கி மக்களை அடிமைப்படுத்த முயல வேண்டாம். மக்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுங்கள். ஆர்ப்பாட்டங்கள் நின்று போகும்.

இன்று இந்த நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை ஒன்று சேர்த்து, நாம் சிங்கள, தமிழ், முஸ்லிம், பெளத்த, இந்து, இஸ்லாம், கத்தோலிக்கம் என்ற இலங்கை நாட்டை உருவாக்குவோம். என்றார்.

பூகம்பமாகும் கொத்தலாவல பல்கலைக்கழக சட்ட மூல விவகாரம் – இணையவழிக்கற்பித்தலை நிறுத்தவுள்ள ஆசிரியர்கள் !

அரசாங்கத்தின் அடக்குமுறைகளை கண்டித்து, இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஆசிரியர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் க.உதயரூபன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்பில் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார். ஆனால், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவருடன் சேர்ந்து 30க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். இது சுயாதீன நீதிச் சேவையைக் கேள்விக்குள்ளாக்குகின்ற விடயமாகும். நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்ட பின்பும் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் தனிமைப்படுத்தியிருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

இலங்கையில் இறையாண்மைக்கு இந்தச் சம்பவம் ஒரு சவாலாக இருக்கின்றது. தற்போதைய நிலையில் ஊடகங்களின் சுதந்திரமும் பறிக்கப்பட்டு, எமது கருத்துச் சுதந்திரங்களும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளன. மாணவர்களின் உரிமைகள் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் குரல்கொடுத்து வந்திருக்கின்றது. பல்கலைக்கழக மாணவர்களின் நியாயமான போராட்டத்தை நியாயப்படுத்தியே எமது சங்கத்தின் பொதுச் செயலாளர் நேற்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

தற்போது ஜோன் கொத்தலாவல கல்வி நிலையத்தை, ஒரு தனியார் கல்வி பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். இலவசக் கல்வியை தொடர்ந்து கல்விக் கொள்கையில் நடைமுறைப்படுத்த வேண்டிய கடப்பாடு, கல்வி அமைச்சருக்கு உள்ளது. அவரும் ஒரு பேராசிரியர் என்ற அடிப்படையில் கல்வி, உயர்கல்வி மற்றும் மாணவர்கள் தொடர்பில் கூடிய கவனம் செலுத்த வேண்டியவராவார். ஆனால், தற்போதைய விடயங்களில் அவர் மௌனமாக இருப்பதையிட்டு, நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கல்விபுலத்தில் உள்ளவர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடாவடித்தனங்களுக்கு நாங்கள் எதிர்க்கின்றோம். இதற்காகவே, மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நாங்கள் முன்னெடுத்துவந்த இணையவழி கல்வி நடவடிக்கைகளிலிருந்து விலகிக்கொள்ள தீர்மானித்துள்ளோம். இது தொடர்பான தீர்மானத்தை, எமது மத்திய குழு எடுத்துள்ளது” என்றார்.

“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டால் கைதுகள் தொடரும்.”- நாடாளுமன்றில் அமைச்சர் சரத் வீரசேகர !

பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றில் பேசிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர் ,

எதிர்க்கட்சி தவறான தகவல்களை முன்வைத்து மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கிறது என்றார்.

கொவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் ஒன்றுகூடுதல் மற்றும் ஆர்பாட்டங்களை நடத்துதல் என்பவற்றை தடை செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைய பொலிஸ்மா அதிபரால் அமுல்படுத்தப்படுகின்றது.

ஆர்பாட்டக்காரர்களை தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது அவர்களை சோதனைக்குட்படுத்துவது அல்லது வீட்டு தனிமைப்படுத்தலுக்கு அனுப்புவது ஆகியன பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மேற்கொள்ளப்படுகின்றன; பொலிஸாரால் அல்ல.

அதன்படி பொதுச்சுகாதார பரிசோதகர்களின் உத்தரவுப்படி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோர்  தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டனர் என அமைச்சர் மேலும் கூறினார்.

“டெல்டா திரிபு தொடர்பான விடயங்களை அரசும் ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகமும் மறைக்கின்றன.” – உபுல்ரோகண குற்றச்சாட்டு !

இந்தியாவில் மிக விரைவாக பரவி அதிகளவிலான மரணங்களை ஏற்படுத்தியிருந்த கொரோனா வைரஸின் திரிபான டெல்டா வைரஸ் தற்போது உலகின் பல பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இலங்கையிலும் சில தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் டெல்டா வைரஸ் குறித்த உண்மையான உத்தியோகபூர்வ தகவல்களை அரசாங்கம் வெளியிடுவதில்லை எனவும்  பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

டெல்டா வைரஸ் குறித்த உண்மையான உத்தியோகபூர்வ தகவல்களை அரசாங்கம் வெளியிடாததன் மூலம் அரசாங்கம் உண்மை நிலவரத்தை மறைக்கின்றது என
பொதுசுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல்ரோகண தெரிவித்துள்ளார்.

ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழகமும் தகவல்களை மறைக்கின்றது. இவ்வாறான முடிவுகளை மூடியகதவுகளின் பின்னால் எடுக்க முடியாது என குறிப்பிட்டுள்ள அவர் தரவுகளை பகிரங்கப்படுத்துவதில்லை என தீர்மானித்தால் அதிகாரிகள் அதற்கான காரணங்களை வெளியிடவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இல்லாவிட்டால் முழு நாட்டிற்கும் பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.

“சேதனப் பசளையின் நன்மை தீமை தெரியாதவர்கள் தான் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள்.” – அனுராதா ஜகம்பத்

விவசாயிகளை பிழையாக நடத்துவதற்கு அரசியல் தலையீடு இருக்கின்றது இதனால் தான் விவசாயிகள் இன்று சேதனை பசளையை வேண்டாம் என்று கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரசாயன பசளையின் பாதிப்பு காரணமாகதான் விவசாயிகள் இன்று வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் சேதனப் பசளை தொடர்பாக விவசாயிகள் மத்தியில் அதனுடைய நன்மை தீமை இதுவரைக்கும் சென்றடையவில்லை.
இன்று அரிசியை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. தற்போது விவசாயிகள் கூட இதில் அதிர்ச்சி அடைந்த நிலையில் காணப்படுகின்றனர் என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இரசாயன பசளை மூலமாக விவசாயம் செய்து வந்தவர்கள் புரிந்து கொண்டால் இன்று வெளிநாட்டில் இருந்து அரிசி இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டிருக்காது முதலில் நாங்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும்.
இரசாயனப் பசளையா அல்லது சேதன பசளையா என்பது பிரச்சனை இல்லை, மொத்தமாக எமது நாட்டின் பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தியை எவ்வாறு அடைய முடியும் என்பதை பார்க்க வேண்டும். எமது ஜனாதிபதியின் திட்டம் ஒரு புது திட்டமானது. ஆகவே நாங்கள் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்பதற்கு அப்பால் எங்களுக்கு பொருந்தக்கூடிய பசளை முறையை உருவாக்க வேண்டும். எமது நாட்டின் பொருளாதாரத்தை உயர்வடையச் செய்கின்றவர்கள் விவசாயிகள் ஆனால் இன்றைய நாளில் அதிக அளவு நஷ்ட்டத்தில் இருப்பவர்களும் விவசாயிகளாகதான் இருக்கின்றார்கள்.
இதற்கான காரணம் இராசயன பசளை முறைமையே. இரசாயன பசளை விவசாயிகளுக்கு இனாமாக வழங்கப்பட்டாலும் அவர்களுடைய வாழ்வாதாரம் உயர்வடையவில்லையே, தற்போது சேதனை பசளை முறைமையை ஆரம்பித்து இருக்கின்றோம் ஆகவே விவசாயிகள் உணரவேண்டும் எமது நாட்டுக்கு சிறந்தது சேதனப் பசளை என்பதை. இந்த சேதனப் பசளையின் நன்மை தீமை தெரியாதவர்கள் தான் இன்று ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுகின்றார்கள் அவர்களை நாங்கள் தெளிவுபடுத்த வேண்டும் இன்று விவசாயிகள் ஏமாற்றப்பட்டு கொண்டு வருகின்றனர். விவசாயிகள் சேதனப் பசளை உற்பத்தி செய்வார்களாக இருந்தால் அரசாங்கம் அவர்களுக்கு மானியமாக பணம் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றது அதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நம்புகின்றேன் என்றார்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கைதுக்கு பல்கலைக்கழக ஊழியர் சங்கம் கண்டனம் !

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய தலைவரான ஜோசப் ஸ்டாலின் உட்பட்ட தொழிற்சங்கவாதிகள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் 31 பேர் வரை நேற்று (08.07.2021) கொழும்பில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அவர்களுடைய கைது தொடர்பில் பல்கலைக்கழக ஊழியர் சங்கம்  தன்னுடைய கண்டனங்களை வெளியிட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவை மீறி சம்பந்தப்பட்டோர், எதுவென அறிவிக்கப்படாத கொரோனா தனிமைப்படுத்தல் முகாமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்கு தகவல் கிட்டியுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டமானது ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பாக நேற்று (08.07.2021) நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவிருந்த நிலையில், கவ்விச் சுதந்திரத்தை வலியுறுத்தி இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது எனவும் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஒரு தொழிற்சங்கம் என்ற வகையிலும் நியாயத்திற்காக பாடுபடுகின்ற ஒரு அமைப்பு என்ற ரீதியிலும் தோழர் ஜோசப் ஸ்டாலினுக்கும் அவரது போராட்ட சகாக்களுக்கும் ஏற்பட்டுள்ள மோசமான நிலை குறித்து நாம் கவனம் செலுத்த வேண்டியது எமது கடமையாகும். இலங்கை ஆசிரியர் சங்கமானது எமது பல்கலைக்கழக ஊழியர் சங்கத்துடன் தோழமை உறவு பூண்டு, தொழிற்சங்க மற்றும் மனித உரிமை பொதுத் தளங்களில் மேதினம் உள்ளிட்ட பல செயற்பாடுகளில் எமது சங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றதோடு, எமது சங்க அங்கத்தினர் மீதான உள்ளக விசாரணைகளுக்கு அவர்களின் சார்பில் எவ்வித எதிர்பார்ப்புமின்றி முன்னிலையாகி உதவியும் வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

உலகை நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கும் கொரோனா இலங்கையையும் விட்டுவைக்கவில்லை என்பது உண்மைதான் எனினும் பெருந்தொற்றுக் கால சுகாதார நடைமுறைகள் என்ற போர்வையில் நியாயமான மக்கள் உரிமைச் செயற்பாடுகளையும் சுகாதார நடைமுறைகளினை பின்பற்றி நடைபெறும் ஜனநாயக ரீதியிலான மக்கள் போராட்டங்களையும் ஒடுக்கும் அரசாங்கத்தின் செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

அத்துடன் நேற்றைய போராட்டக்காரர்கள் மீதான நியாயமற்ற அத்துமீறல்களையும் அராஜகங்களையும் வன்மையாகக் கண்டிப்பதோடு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக அரசாங்கம் என்ற வகையில் மக்களினதும் மக்கள் செயற்பாட்டாளர்களினதும் செயற்பாடுகளை நியாயபூர்வமான வழியில் அணுக வேண்டும் என்று கௌரவ ஜனாதிபதி அவர்களையும், அரசாங்கத்தினையும் வேண்டி நிற்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே நேரம் நேற்று கொழும்பில் நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இடம்பெற்ற போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட தேரர்,இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் உள்ளிட்ட 11 பேர் முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

உடுத்திய உடுப்போடு சரியான உணவோ சுத்தமான குடிநீரோ தமக்கு கிடைக்கவில்லை எனவும் தனிமைப்படுத்தல் விதிகளை பயன்படுத்தி தம்மை வேண்டும் என்றே தண்டிப்பதாகவும் கைதுசெய்யப்பட்மோர் விசனம் தெரிவித்துள்ளனர்.

யாழில் ஒரு வாரத்தில் 12பேர் சாவு

யாழில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 12 பேர் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் தொற்றாளர்களது எண்ணிக்கை கணிசமாக வீழ்ச்சியடைந்து வருகின்ற போதிலும் நாளாந்த உயிரிழப்புகள் தொடர்ச்சியாக பதிவாகும் நிலை நீடித்து வருகிறது.
ஜூலை 01 முதல் ஜூலை 07 வரையான ஒரு வாரத்தில் மட்டும் இவ்வாறு 12 கொரோனா இறப்புகள் யாழ். மாவட்டத்தில் பதிவாகியுள்ளன.
இதன்படி, ஜூலை மாதம் முதலாம் திகதி 4 பேரும், ஜூலை 2ஆம் திகதி 2பேரும், ஜூலை 4 ஆம் திகதி ஒருவரும், 5ஆம் திகதி ஒருவரும், ஜூலை 6ஆம் திகதி 3 பேரும், 7ஆம் திகதி ஒருவரும் உயிரிழந்துள்ளனர். யாழ். மாவட்டத்தில் ஜூலை 7ஆம் திகதி வரையில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களது மொத்த எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் பிரதேச செயலர் பிரிவு வாரியாக நோக்கும் போது, யாழ்ப்பாணம் பிரதேச செயலர் பிரிவில் – 33 பேரும், கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் 12 பேரும், உடுவில் பிரதேச செயலர் பிரிவில் – 09 பேரும், சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவு, பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவு மற்றும் சங்கானை பிரதேச செயலர் பிரிவில் தலா 8 பேரும், தெல்லிப்பளை பிரதேச செயலர் பிரிவில் 5 பேரும், கரவெட்டி பிரதேச செயலர் பிரிவு, சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவு, வேலணை பிரதேச செயலர் பிரிவு ஆகியவற்றில் தலா 3பேரும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் 2பேரும், ஊர்காவற்துறை பிரதேச செயலர் பிரிவில் ஒருவரும் கொரோனாத் தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டவர்களுக்கான வீசா காலம் நீடிப்பு

தற்போது இலங்கையில் வசிக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் இன்று (09) முதல் ஓகஸ்ட் 08 வரை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது என குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. கொரோனாத் தொற்று நிலைமையை கருத்திற் கொண்டு, இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் காலவதியாகும் வீசாக்களுக்கு அக்காலப் பகுதிக்கான வீசாக்கட்டணம் மாத்திரம் அறவிடப்படும் என்பதுடன், அதற்காக எவ்வித தண்டப்பணமும் அறிவிடப்படாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொத்தலாவல பல்கலைக்கழகம் இராணுவமயமகாதாம் – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிப்பு

கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் இராணுவ மயமாக்கப்படுகிறது எனத் தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை என உயர் கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் நாட்டில் இருக்கும் ஏனைய பல்கலைக்கழகங்கள் போன்றது அல்ல. இதற்கு விசேட தனித்துவமாக அம்சங்கள் இருக்கவேண்டும். அதற்காகத்தான் இதற்கு விசேட சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக நாட்டில் இருக்கும் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர்களுக்கு பட்டம் வழங்கும் தாதியர் கல்லூரி. இவையும் பல்கலைக்கழம். இவற்றுக்கு விசேட தனித்துவம் இருக்கவேண்டும். சாதாரண பல்கலைக்கழங்களில் மேற்கொள்வதை இங்கே மேற்கொள்ள முடியாது. இவற்றுக்கிடையில் பெரும் வித்தியாசம் உள்ளது.
மேலும் எமது அரசாங்கம் 10 நகர பல்கலைக்கழகங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இவை சாதாரண பல்கலைக்கழங்களுக்கு மாற்றமானவை. நாட்டில் இருக்கும் பெளத்த பாலி பல்கலைக்கழகம், தொழிநுட்ப பல்கலைக்கழகம் என பல இருக்கின்றன. இவை அனைத்தும் விசேட நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டவையாகும். இதன் மூலம் இந்த பல்கலைக்கழகங்கள் பல்கலைக்கழங்கள் மானியங்கள் ஆணைக்குழுவினால் கண்காணிக்கப்படுவதில்லை என அர்த்தப்படுவதில்லை. அனைத்து பல்கலைக்கழங்களும் மானியங்கள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு கீழே செயற்படுகின்றன. அந்த விடயங்கள் அவ்வாறே இருக்கின்றன.
அத்துடன் கொத்தாலாவலை பல்கலைக்கழக நிர்வாக சபை உறுப்பினர்களில் மானியங்கள் ஆணைக்குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரும் இருக்க வேண்டும். ஆணைக்குழுவின் தலைவர் நிர்வாக உறுப்பினராக இருக்கின்றார். அதேபோன்று பேராசிரியர்களை நியமிக்கும் குழுவில் மானியங்கள் ஆணைக்குழுவின் இரண்டு உறுப்பினர்கள் இருக்கின்றனர். அங்கு கற்பிக்கப்படும் பாடநெறிகள் தொடர்பாகவும் நிதி தொடர்பாகவம் பல்கலைக்கழக ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படுகின்றது.
எனவே கொத்தலாவலை பல்கலைக்கழகம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் கண்காணிக்கப்படும் பல்கலைக்கழகமாகும். அவ்வாறு இல்லாமல் சுயாதீனமாக செயற்படக்கூடியதல்ல. அதேபோன்று இது இராணுவ மயமாக்குவதற்கு மேற்கொள்ளப்படும் திட்டம் என தெரிவிப்பதாக இருந்தால், அது பொய்யாகும். அவ்வாறான எந்த தீர்மானமும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

ஜூலை 12-ஆம் திகதியன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள் – அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை !

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறும் அனைத்து நாட்களும் தலைநகர் டோக்கியோவில் அவசரநிலை அமுலில் இருக்கும் என ஜப்பான் அரசு அறிவித்துள்ளது.

ஜூலை 12-ஆம் திகதியன்று தொடங்கும் இந்த அவசரநிலை ஆகஸ்ட் 22-ஆம் திகதி வரை அமலில் இருக்கும் என்று அந்த நாட்டின் பிரதமர் யோஷீஹிடே சுகா தெரிவித்துள்ளார்.

இந்தத் திகதிகளில் உணவகங்களிலும், மதுபான விடுதிகளிலும் மதுபானங்களை விற்பனை செய்ய தடை விதிக்கப்படும் என்றும் உள்ளூர் நேரப்படி இரவு 8 மணிக்கே மூடப்பட வேண்டும் என்றும் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் போது பார்வையாளர்களை அனுமதிக்கலாமா..? வேண்டாமா..? என்பது குறித்த கடினமான முடிவை எடுக்க அரசு அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டி அமைப்பாளர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

வரும் ஜூலை 23ஆம் திகதி அன்று டோக்கியோவில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் ஜப்பானில் வைரஸ் தொற்றின் காரணமாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை ஜப்பானில் நடத்துவதற்கு அந்த நாட்டில் கடுமையான எதிர்ப்பும் உள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது தள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.

கொரோனா வைரஸ் திரிபுகளின் விளைவுகளை கருத்தில் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளுக்கு வைரஸ் தொற்று பரவாமல் இருக்க வேண்டும் எனும் நோக்கத்திற்காகவும், நாம் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது என ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக டோக்கியோவில் அவசர நிலை அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து ஒலிம்பிக் விளையாட்டு நிகழ்வுகளிலும் பார்வையாளர்களை தடை செய்வதற்காக அதன் ஏற்பாட்டாளர்கள் பரிசீலனை செய்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா வைரஸ் மேலதிகம் பரவுவதை தடுப்பதற்காக நாம் வலிமையான மற்றும் எளிதில் புரிந்துகொள்ள வேண்டிய செய்தியை வழங்க வேண்டும், ஆனால் இது மிகவும் கடினமான முடிவாக இருக்கப் போகிறது என்று டோக்யோ 2020 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளின் தலைவர்  மோட்டோ தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக் ஏற்பாட்டுக் குழு மற்றும் ஜப்பான் அதிகாரிகள் ஆகியோரின் சந்திப்பிற்கு பிறகு அவசரநிலை தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தலைவரும் தாமஸ் பேக் ஜப்பான் வந்துள்ளார்.

ஜப்பானில் ஜூலை 23-ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 8-ஆம் திகதி வரை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெற உள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் புதிய கொரோனா அலை தொடங்கியது. ஒப்பீட்டளவில் குறைவான கொரோனா வைரஸ் பாதிப்பை சந்தித்திருந்த ஜப்பானில் இதுவரை ஜப்பானில் சுமார் 14,900 பேர் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

புதன்கிழமை அன்று 2,150 பேர் ஜப்பானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 920 பேர் டோக்கியோவில் உள்ளவர்கள்.

ஜப்பானில் கொரனோ வைரஸ் தடுப்பூசி வழங்கும் பணிகள் சற்று மந்தமாகவே உள்ளன. இதுவரை அந்த நாட்டின் ஒட்டு மொத்த மக்கள் தொகையில் 15 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி முழுமையாக வழங்கப்பட்டுள்ளது.

டெல்டா திரிபின் அச்சுறுத்தல் அங்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸ் நெருக்கடி காரணமாக எழுந்த எதிர்ப்பால் சென்ற ஆண்டு நடைபெறுவதாக இருந்த ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன் காரணமாக பல பின்னடைவுகளும் நிதி நெருக்கடியும் ஏற்பட்டன.

அசாகி சிம்புன் எனும் ஜப்பானிய செய்தித்தாள் கடந்த ஜூன் மாதம் நடத்திய கருத்துக் கணிப்பில் ஜப்பானில் உள்ள 80 சதவீதம் பேர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

பார்வையாளர்கள் பகுதியும் ஒலிம்பிக் நிகழ்வுகள் நடக்கும் இடங்களில் அமைக்கப்படவில்லை. ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு இருக்கும் பரவலான எதிர்ப்பு காரணமாக பல நிறுவனங்களும் விளம்பரம் செய்ய முன்வரவில்லை.