09

09

“ஆப்கானிஸ்தானை தலிபான்களிடம் இருந்து அந்நாட்டு இராணுவம் பாதுகாக்கட்டும்.” – வெளியேறுவது உறுதி என்கிறார் பைடன் !

தோஹாவில் சமீபத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் உடன்பாடு ஏற்பட்டது. ஆப்கன் அரசுடன் தலிபான்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும், ஆப்கனிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்பன உள்ளிட்ட முடிவுகள் எட்டப்பட்டன.  இதனை தொடர்ந்து படிப்படியாக அமெரிக்கப்படைகள் வெளியேற ஆரம்பித்துள்ளன. இந்நிலையில் அமெரிக்க படைகளுடன் இணைந்து போரிட்ட ஆப்கான் இராணுவ வீரர்களிடையே உயிர் தொடர்பான அச்சுறுத்தல் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் ஆப்கான்வீரர்கள் வேறு நாடுகளுக்கு சென்று உயிர்பாதுகாப்பு பெற வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கப் படை திரும்பப் பெறப்படும் என அதிபா் ஜோ பைடன் உறுதியாக  தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் ஜோ பைடன் கூறியதாவது:
ஆப்கானில் தேசத்தைக் கட்டமைக்கும் பணிக்காக அமெரிக்க இராணுவம் அங்கு செல்லவில்லை. அந்த நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்த ஆப்கான் தலைவா்கள் ஒன்றிணைந்து முயற்சிகளை எடுக்கவேண்டும். மேலும், ஆயிரக்கணக்கான அமெரிக்கா்களை ஆபத்தில் சிக்கவைக்க அமெரிக்கா விரும்பவில்லை.
தலிபான்களை நம்பவில்லை என்றபோதும், ஆப்கான் அரசை காக்கும் திறன் அந்நாட்டு இராணுவத்துக்கு உள்ளது என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ஆப்கனில் அமெரிக்க ராணுவ நடவடிக்கை வரும் ஆகஸ்ட் 31-ம் திகதியுடன் முழுமையாக முடிவுக்கு வந்துவிடும் என்றார்.

உத்தரவை மீறினால் ஆறு மாத சிறை! மீண்டும் அறிவுறுத்துகிறார் அஜித் ரோஹண

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறினால் நபர் ஒருவருக்கு 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்படுவதோடு 6 மாத சிறைத்தண்டனை விதிக்க நீதிமன்றத்தால் முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண மீண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய, முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளியைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுகளில் நேற்று (வியாழக்கிழமை) காலையுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மேலும் 298 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 48,542 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்து அவர், அவர்களில் 41,000 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஏனையோருக்கு எதிராக வழக்கு எதிர்வரும் வாரங்களில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் , நாம் தமிழர் அமைப்பு , ஆவா குழு ஆகியவற்றின் சின்னங்களுடனும் வாளுடனும் 21 வயது இளைஞன் கைது !

வடக்கில் சமீப காலமாக வன்முறைக்குழுக்களுடைய செயற்பாடுகள் மிகத்தீவிரமடைய ஆரம்பித்துள்ளன. இதே நேரம் குறித்த வாள்வெட்டு வன்முறைகளுடன் கைது செய்யப்படுவோர் மிகச்சிறிய வயதுடையவர்களாகவும்  இருப்பது கவலைக்குறியதாகும். அடுத்தடுத்து வன்முறைச்சம்பவங்கள் பதிவாகிக்கொண்டிருக்கின்றன.  இந்நிலையில் ஆவா குழுவுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகததின் அடிப்படையில் கிளிநொச்சியில் 21 வயது இளைஞர் ஒருவரின் வீடு சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அவர் கைதும் செய்யப்பட்டுள்ளார்.

விடுதலைப்புலிகள் மற்றும் நாம் தமிழர் அமைப்புக்களின் சின்னங்கள், ஆவா குழுவின் சின்னம் மற்றும் வாள் என்பவற்றை தனது கையடக்க தொலைபேசியில் வைத்திருந்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றச் செயல் ஒன்றுக்கான இரும்பு வாள் ஒன்றை மறைத்து வைத்திருக்கின்றார் என்ற தகவல் விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்தமையினையடுத்து கிளிநொச்சி உதயநகர் பகுதியினை சேர்ந்த 21 வயது இளைஞன் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

அதன் போது அவரிடம் இருந்து வாள் ஒன்றும் இரண்டு கையடக்கத்தொலைபேசிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. அவரது கையடக்க தொலைபேசி சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதே விடுதலைப்புலிகள் அமைப்பு, நாம் தமிழர் கட்சி மற்றும் ஆவா குழுவின் புகைப்படங்கள் கையடக்கத்தொலைபேசியில் இருப்பது விசேட அதிரடிப்படையினரால் அவதானிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு வாள்களுடன் இளைஞர் ஒருவரின் புகைப்படமும் காணப்பட்டுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வனத்திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ள தமிழர் நிலங்களை விடுவிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் கோரிக்கை !

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்புத் திணைக்களங்களினால் கையகப்படுத்தப்பட்டுள்ள விவசாய நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சர் சி.பி. ரத்நாயக்காவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

வட மாகாணத்தில் தற்போது வனத்துறையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளில், யுத்தத்திற்கு முற்பட்ட காலப் பகுதியில் விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டமையினை அமைச்சர் டக்ளஸ் டக்ளஸ் தேவானந்தா துறைசார் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவிற்கு தெளிவுபடுத்தியுள்ளார்.

அத்துடன், குறித்த காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு வட மாகாண விவசாயிகள் ஆர்வமாக இருப்பதாக சுட்டிக்காட்டிய அமைச்சர் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில், அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

அதேபோன்று, வடக்கு, கிழக்கு பிரதேசத்தில் ஏற்றுமதித் தரத்திலான நண்டு, இறால், மீன் வளர்ப்பு பண்ணைகளை உருவாக்கி நீர்வேளாண்மையை விருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.

இந்த விடயங்களை ஏற்றுக் கொண்ட அமைச்சர் சி.பி. ரத்நாயக்கா, சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தம்மிடம் உறுதியளித்ததாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

“சாதாரண மக்களுக்கு இராணுவ சிந்தனையை ஊட்ட முயற்சிக்கிறார்கள்.”- நாடாளுமன்றில் கஜேந்திரகுமாரும் சாணக்கியனும் குற்றச்சாட்டு !

உயர்கல்வி துறையை இராணுவ மயமாக்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.

ஜோன் கொத்தலாவலை தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான சட்டமூலம் நேற்று நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

இராணுவத்துக்கான பயிற்சிகளையும், கற்கைகளையும் வழங்குவதில் தங்களுக்குப் பிரச்சினை இல்லை. ஆனால் இதன் ஊடாக பொதுமக்களது உயர்கல்வி திட்டம் இராணுவமயமாக்கப்படுகின்றமையையே எதிர்ப்பதாகக் கூறினார்.

இவ்வாறு பல கல்லூரிகள் அமைக்கப்பட்டு அவை பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன. அதேநேரம், உள்நாட்டில் யுத்தம் ஒன்று ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலையில், இராணுவம் யாருடன் சண்டையிடுவதற்காகப் பலப்படுத்தப்படுகிறது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

வெளிநாட்டு சக்திகளுடன் தான் இராணுவம் சண்டையிடப் போகிறது என்றால், கடலோரப் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவர் உரையாற்றும் போது ஆளுந்தரப்பில் சிலர் அவருக்கு எதிராகத் தகாத வார்த்தையைப் பிரயோகித்திருந்த நிலையில், அதனை நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை, ஜோன்கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்ட மூலத்தின் ஊடாக, அரசாங்கம் சமூகத்திலுள்ள சாதாரண மக்களுக்கும் இராணுவச் சிந்தனையை ஊட்ட முயல்வதாக அகில இலங்கை தமிழ் காங்கிரசின் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சாதாரண பல்கலைக்கழகங்களின் சித்தாந்தம் வேறு.சுதந்திர சிந்தனைக்கு பொதுவான பல்கலைக்கழகங்களில் இடமளிக்கப்பட்டிருக்கும். ஆனால் இராணுவம் என்பது சாதாரண மக்களில் இருந்து வேறுபட்டது. பாதுகாப்பு பல்கலைக்கழகங்களில் இராணுவத்துக்கே உரியச் சிந்தனைகளே விதைக்கப்படும்.

ஆனால் சமூகத்தில் சுதந்திர சிந்தனையே விதைக்கப்பட வேண்டும்.

அரசாங்கம், இந்த சட்ட மூலத்தின் ஊடாக, ஜோன் கொத்தலாவலை பாதுகாப்பு கல்லூரியை விரிவுபடுத்தி, இராணுவத்தில் தொழில் வாய்ப்பினை கூடப் பெற விரும்பாத சாதாரண மக்களையும், உள்ளீர்க்க வகை செய்கிறது என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சுட்டிக்காட்டினார்.

கொத்தலாவ பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்துக்கு எதிராக வெடிக்கும் போராட்டம் – போராட்டத்தில் ஈடுபட்டோர் கைது !

சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலம் பல தரப்பினரிடையேயும் பல்வேறுபட்ட எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஜே.வி.பியினருடைய எதிர்ப்பு குறித்த பல்கலைகழத்துக்கான சட்டமூலம் வெளியிடப்பட்ட நாள்முதல்

குறித்த சட்டமூத்தை உடனடியாக மீள பெறுமாறு வலியுறுத்தி போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பத்தரமுல்லை, நாடாளுமன்ற சுற்றுவட்டத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் அமைப்பினர், பொது மக்கள் என பலரும் இதில் கலந்துகொண்டு குறித்த சட்டமூலத்தை அரசாங்கம் வாபஸ் பெறவேண்டும் என வலியுறுத்தினர். எனினும், குறித்த ஆர்ப்பாட்டமானது தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு எதிரானது எனத் தெரிவித்து பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க முற்பட்டமையால், அங்கு பாரிய சர்ச்சை ஏற்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்த இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்ட 31 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், பொலிஸார் ஊடகவியலாளர்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் செயற்பட்டதை அடுத்து அங்கு பொலிஸாருக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இடையிலும் முரண்பாடுகள் ஏற்பட்டன.

அதேநேரம, குறித்த சட்டமூலத்திற்கு எதிராக நேற்று ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

அங்கும் ஏற்பட்ட சர்ச்சை தீவிரமடைந்ததை அடுத்து ஜே.வி.பியின் நான்கு உறுப்பினர்கள் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இதனால் ஹட்டன் பகுதியிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.