10

Friday, August 6, 2021

10

புகைத்தலை வியாபாராமாக்கியவர்ளே சுவாசத்தை சீராக்கும் இன்ஹேலரையும் வழங்க உள்ளனர்!

புகைத்ததால் நுரையீரல் பிரச்சினை என்றால் இழுத்து சுவாசத்தை சீராக்கலாம் என புகைத்தல் வணிகக் நிறுவனம் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் புதிய முதலீட்டை மேற்கொண்டுள்ளது. சுவாசப் பிரச்சினையைச் சீராக்கி சுவாசத்தை சீர்படுத்தும் ‘இன்ஹேலர்’ உபகரணத்தை தயாரிக்கும் பிரித்தானியாவின் மருத்துவ நிறுவனமான வெக்ரூரா நிறுவனத்தை வாங்கும் முயற்சியில் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் இறங்கி உள்ளது. ஒரு பில்லியன் டொலருக்கு வெக்ரூரா நிறுவனத்தை வாங்குவதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளது. இதன்படி புகைத்தலுக்கு அப்பால் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் நிறுவனம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் வருமானத்தை ஈட்டலாம் என மதிப்பிடுகின்றது.

பிலிப் மொறிஸ் இன்ரநசனல் புகைத்தலுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்பதற்கான மருத்துவ சுவிங்கம் தயாரிக்கும் டெனிஸ் நிறுவனத்திற்கு 820 மில்லியன் டொலர் செலுத்தியுள்ளது. அதேசமயம் தனக்கு போட்டியான அல்ற்றியா நிறுவனத்தையும் தனக்குள் வளைத்துப் போட்டுக் கொள்ள, 200 பில்லியன் டொலர்களை பிலப் மொறிஸ் இன்ரநசனல் செலவழித்துள்ளது. இந்த இணைவின் மூலம் சிகரெட் பிடிப்பவர்களை அதனிலும் சற்று ஆபத்து குறைந்த புகைத்தல் முறைக்கு அடிமையாக்குவததை நோக்கி பிலிப் மொறிஸ் இன்ரநசனல் இறங்கியுள்ளது. பிள்ளையயையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டும் பல்தேசிய நிறுவனங்களும் அதற்குத் துணைபோகும் அரசுகளும் இப்படித்தான் இயங்குகின்றன.

முற்றிலும் இலாப நோக்கத்தோடு செயற்படும் நிறுவனங்களிடம் மக்களின் சுகாதார பராமரிப்பும் அது தொடர்பான ஆய்வுகளும் கையளிக்கப்படுவது தற்போது வைத்தியர்களால் வழங்கப்படும் மருந்துகள் தொடர்பில் பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

உடலில் சீனியயைக் கட்டுப்படுத்தும் (நீரிழிவு) மருந்துகள், கொலஸ்திரோலைக் கட்டுப்படுத்தும் மருந்துகள், இதயத் தாக்கத்தை கட்டுப்படுத்தும் மருந்துகள் என ஆண்டாண்டு காலத்துக்கும் மருந்து எடுக்கப்பட வேண்டும் என்று சொல்லப்படும் மருந்துகள் தொடர்பில் பலர், மருத்துவ நிபுணர்கள் உட்பட கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மருந்துகளின் அதீத பாவனையால் 500,000 பேர் கொல்லப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் மதிப்பீடு செய்துள்ளது. அதல் 70 வீதமான மரணங்கள் ஓபியோய்ட் எனப்படும் போதைப்பொருள் சேர்க்கையுள்ள மருந்துகளின் தாக்கத்தால் ஏற்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. 2017ம் ஆண்டில் 117,000 பேர் ஓபியோய்ட் அதிதமான காரணத்தினால் மரணத்தை தளுவியுள்ளனர்.

தற்போது உலக சுகாதார நிறுவனத்தின் தலைமையை ஏற்றுள்ள சௌமியா சுவாமிநாதனின் தந்தை சுவாமிநாதன் இந்தியாவில் பசுமைப் புரட்சியை ஏற்படுத்துகின்றேன் என்று ஆரம்பித்து, செயற்கை உரங்களுக்கு இந்தியப் பயிர்களையும் செயற்கை உர மற்றும் மருந்து பல்தேசிய கொம்பனிகளுக்கு இந்திய விவசாயிகளையும் அடிமையாக்கியவர். இதனால் பல நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான விவசாயிகள் கடன்சுமை தாங்காமல் தற்கொலைக்கும் சென்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிணமானாலும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நோக்கத்தோடு முற்றிலும் இலாபநோக்கத்தோடு இயங்கும் பல்தேசிய நிறுவனங்களின் பெயர்களை உச்சரித்துக்கொண்டே மக்கள் அவர்களுக்கான சவக்குழியயை தாங்களே வெட்டுகின்றனர். பொருளாதார வளர்ச்சி என்ற மாயைக்காட்டி அரசுகளும் இதற்கு உடந்தையாகவே இருக்கின்றது.

பொருளாதார வளர்ச்சி என்ற பெயரில் சுற்றாடலை அசுத்தப்படுத்தவும் எமது உடல்களை அசுத்தப்படுத்தவும் பிலிப் மொறிஸ் இன்ரநசனல் போன்ற பல்தேசியக் கொம்பனிகள் இயங்கவும் தங்கள் பொருட்களை விளம்பரப்படுத்தவும் விற்பனை செய்யவும் அரசுகள் ஒப்புதல் அளித்தன. இப்போது ஒப்புதல் அளிக்கின்றன.

ஆசிய அபிவிருத்தி வங்கியிடம் இருந்து இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடன் !

கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளும் வகையில் இலங்கைக்கு 150 மில்லியன் டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வளரும் உறுப்பு நாடுகளுக்கு தடுப்பூசி தொடர்பான ஆதரவை வழங்க டிசம்பர் 2020 இல் தொடங்கப்பட்ட ஆசிய பசிபிக் தடுப்பூசி அணுகல் வசதியின் ஒரு பகுதியாக இந்த நிதி வழங்கப்படவுள்ளது.

கொரோனாவில் இருந்து மக்களை பாதுகாக்கவும், பாதித்துள்ள பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் இந்த கடனுதவியை வழங்க தீர்மானித்துள்ளதாக வங்கியின் தலைவர் மசாட்சுகு அசகவா தெரிவித்துள்ளார்.

குறித்த கடன் ஒப்பந்தத்தில் திறைசேரியின் செயலாளர் எஸ். ஆர். அட்டிகலே மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

“நான் எடுத்த முயற்சி காரணமாகவே 16 கைதிகள் அண்மையில் விடுதலை செய்யப்பட்டனர்.” – சுரேன் ராகவன்

“எதிர்வரும் ஆறு மாதங்களுக்குள் நாட்டினுடைய பொருளாதாரத்தை பஷில்ராஜபக்ஷ மீட்டெடுப்பார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது.” என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

வவுனியா மாவட்டத்திலுள்ள நகரசபை மற்றும் பிரதேச சபைகளின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவனுக்கும் இடையிலான சந்திப்பு இன்று வவுனியாவில் இடம்பெற்றது.

இதன்பின்னர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னிமாவட்டத்தில் பொருளாதார, அரசியல் சமூகபிரச்சனைகள் இருக்கின்றன. இவற்றை கட்சி ரீதியான பிரிவினைகளை பார்த்து, செய்தால் மக்களுக்கு நன்மை செய்யமுடியாமல் போகும். தேர்தல் காலத்தி்ல் அரசியல் செய்வது வழக்கமானவிடயம். ஆனால் தேர்தலுக்கு அப்பாற்பட்டு ஜனநாயகத்தை நிலைநிறுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருக்கின்றேன் எனவும் தெரிவித்துள்ளார்.

வன்னிமாவட்ட மக்கள் கொரோனா நோய்த்தாக்கத்தில் குறைந்தளவில் பாதிக்கப்பட்டுள்ளமை மகிழ்ச்சியளிக்கின்றது. மக்களினுடைய பொறுப்புணர்ச்சியினாலேயே அது நடந்துள்ளதென நம்புகிறேன். அடுத்தவாரம் இந்த மக்களிற்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாடு இடம்பெறும். குறிப்பாக வன்னியில் உள்ள குளங்களை திருத்தவேண்டும். கமத்தினூடாக எமது பொருளாதாரம், மற்றும் சமூகம், வளர்ச்சியடைய இலகுவான வழி அதுவே.

அத்துடன் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும் கேந்திரமாக இலங்கை மாறியிருப்பதாக ஐக்கியநாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் ஏற்றுக்கொண்டுள்ளது. எமது மக்கள் நோயின்றி நலமாக வாழவேண்டும் என்று எடுத்த முயற்சியில் சில தடைகள் ஏற்ப்பட்டது உண்மையே. சில பொருளாதார திட்டங்களை ஏற்ப்படுத்தும் போது தடைகள் ஏற்படும்.

இதேவேளை கைதிகள் தொடர்பில் நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம். இதன் பணி மேலும் தொடரும். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் இன்னுமொரு தொகுதி கைதிகளை விடுதலை செய்வதற்கு தாயாராக இருக்கிறோம். அவர்கள் விடுதலைபெற வேண்டும். “நான் எடுத்த முயற்சி காரணமாக 16 கைதிகளை அண்மையில் விடுதலைசெய்திருக்கிறோம்.

அவர்கள் பிழைசெய்திருக்கலாம். அவர்கள் கொண்ட நோக்கத்துடன் அவர்கள் செய்தது அரசுக்கோ அல்லது நீதிக்கோ பிழையாக இருக்கலாம். ஆனால் போர் முடிந்து 11 வருடங்களிற்கு பின்னர் பொது மன்னிப்புகொடுத்து அவர்கள் வாழவழிவிடப்பட வேண்டும் என்பதில் ஆழமான நம்பிக்கை கொண்டவன் நான். அத்துடன் காணாமல் போனோர் தொடர்பாக நாடாளுமன்றத்தில் புதிய சீர்சிருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

காணாமல் போனோருக்கான நிலையம் முழுமையாக இயங்கும் வகையில் தடைகளை நீக்கியிருக்கின்றோம். உடைந்த உறவினை வளர்த்தெடுத்து சமாதானத்தின் பாதையில் செல்லவேண்டும். நியாயமான விடயத்திற்காக இந்த நாட்டை வளர்த்தெடுக்கவேண்டும். இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியில் இருப்பது என்பதனை மறுக்ககூடாது. அதனை மறைப்பதில் ஒரு பலனும் இல்லை. எனவே பசில் மீது இருக்கும் நம்பிக்கை மூலமாக பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவரக்கூடிய திட்டங்களை எடுப்பதற்கான முழுமையான பொறுப்பினை கொடுக்கவேண்டும் என்று அரசாங்கம் முன்வந்துள்ளது.

எதிர்வரும் ஆறு மாதங்களிற்குள் அவரது வருகையின் நன்மையினை நாங்கள் எதிர்பார்த்துள்ளோம். அவர் செய்வார் என்ற ஆழமான நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இந்தியாவில் நரேந்திரமோடி 45 புதிய அமைச்சர்களை நியமித்துள்ளார். எனவே புதிய அமைச்சுக்களை உருவாக்குவதோ அல்லது புதியவருக்கு அமைச்சினை வழங்குவதோ அரசியலில் புதியவிடயமல்ல.எனவும் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்க படைகள் – 85 சதவீத பகுதிகளை கைப்பற்றிய தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்கப் படைகள் வெளியேறி வரும் நிலையில், மீண்டும் தலிபான்களின் ஆதிக்கம் மேலோங்கி உள்ளது.  நாடு முழுவதும் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றனர். அரசுப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை தொடர்ந்து கைப்பற்றி வரும் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியில் தஜிகிஸ்தான் நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள படாக்ஸ்கான் மற்றும் கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். தாக்குதல்களை தடுக்க முடியாமல் ஆப்கானிஸ்தான் படை வீரர்கள் தலிபான்களிடம் சரணடைந்து வருகின்றனர். இராணுவத்தின் ஒரு குழுவினர் தஜிகிஸ்தான் நாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.
கடந்த மூன்று நாட்களில் மட்டும் 10 மாவட்டங்கள் தலிபான்கள் வசம் சென்றுள்ளன. இதில் 8 மாவட்டங்களை சண்டை போடாமலேயே தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானிஸ்தானின் 85 சதவீத பகுதிகளை தங்கள் வசம் கொண்டு வந்துள்ளதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர். மொத்தம் உள்ள 398 மாவட்டங்களில் 250 மாவட்டங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக, தலிபான் அதிகாரிகள் மாஸ்கோவில் செய்தியாளர்களிடம் கூறி உள்ளனர்.
அதன்பின்னர் துர்க்மெனிஸ்தானுடனான ஆப்கானிஸ்தானின் முக்கிய எல்லைப் பகுதியை கைப்பற்றியதாகவும் தலிபான் அமைப்பு இன்று தெரிவித்துள்ளது. முக்கியமான டோர்கண்டி எல்லை துறைமுகம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
ஆனால், துறைமுகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர்கள் தற்காலிகமாக வேறு இடத்திற்கு சென்றுவிட்டதாகவும், எல்லை பகுதியை மீண்டும் கைப்பற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆப்கானிஸ்தானின்  உள்துறை அமைச்சக  செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

டோனி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் !

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு தொடங்கியது முதலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக டோனி இருந்து வருகிறார்.  சர்வதேச தொடர்களில் இருந்து ஓய்வுபெற்ற எம்.எஸ். டோனி, ஐ.பி.எல். போட்டியில் பேட்டிங்கில் திணறி வருகிறார்.  இந்தாண்டு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி  சிறப்பாக செயல்பட்டாலும் தோனியின் அதிரடியை காணமுடியவில்லை. எனவே, அவர் இந்தாண்டு ஓய்வை அறிவிப்பார் என கூறப்பட்டது.
இதனால் டோனி ஓய்வு பெற வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தாலும் கூட அவருடைய ரசிகர்கள் பலர் அவர் தொடர்ந்தும் விளையாட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சி.எஸ்.கே. அணியின் சி.இ.ஓ. காசி விஸ்வநாதன், சென்னை அணிக்காக டோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் விளையாடுவார் என தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் விளையாடலாம். அவர் முழு உடற்தகுதியுடன் உள்ளார். கடும் பயிற்சிகளை செய்து வருகிறார். பின்னர் எதற்காக அவர் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெறவேண்டும்?
அவர் ஒரு நல்ல வழிகாட்டி. மிகவும் அனுபவம் வாய்ந்த ஒரு தலைவன். எங்களைப் பொறுத்தவரை தோனி இன்னும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறார். அவர் அணிக்காக சிறந்த விஷயங்களைச் செய்து கொடுப்பார். மேட்சை வெற்றிகரமாக முடித்துத் தருவதில் சிறந்தவர் அவர். இன்றும் அதையே செய்து வருகிறார் என தெரிவித்தார்.

ஹெய்டி ஜனாதிபதி படுகொலையில் வெளிநாடுகளுக்கும் பங்கு – கொலம்பியாவின் 26 இராணுவ வீரர்களும் அடக்கம் !

கரீபியன் தீவு நாடான ஹெய்டி  நாட்டின் ஜனாதிபதி ஜோவனல் மோயிஸ் (வயது 53) கடந்த புதன்கிழமை அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.

இந்த பயங்கர சம்பவத்தில் படுகாயம் அடைந்த அவரது மனைவி மார்டின் மோயிஸ் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தநிலையில் ஹெய்டிஜனாதிபதி படுகொலை செய்யப்பட்டதின் பின்னணியில் வெளிநாட்டு சதி இருந்தது தற்போது அம்பலமாகி உள்ளது. ஜனாதிபதி ஜோவனல் மோயிசை படுகொலை செய்த கூலிப்படையினர் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதை அறிந்த போலீசார் உடனடியாக அங்கு விரைந்து அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். அப்போது கூலிப்படையினர் போலீசாரை துப்பாக்கியால் சுட்டனர்.

பல மணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் கூலிப்படையை சேர்ந்த 3 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். இறுதியாக கூலிப்படையினர் 17 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில் அவர்களில் 15 பேர் கொலம்பியாவை சேர்ந்தவர்கள் என்பதும் 2 பேர், ஹெய்டி-அமெரிக்கர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும் ஜனாதிபதி படுகொலையில் கொலம்பியாவை சேர்ந்த 26 பேர் மற்றும் 2ஹெய்டி -அமெரிக்கர்கள் என மொத்தம் 28 பேருக்கு தொடர்பு இருப்பதும், அவர்களில் 8 பேர் தற்போது தலைமறைவாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஹெய்டி ஜனாதிபதி கொலையில் தொடர்புடைய கொலம்பியாவை சேர்ந்த 26 பேரில் பெரும்பாலானோர் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

“கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்காதே” – யாழிலும் போராட்டம் !

யாழ்ப்பாணத்தில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (10.07.2021) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து யாழில் போராட்டம்புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியின் ஏற்பாட்டில், யாழ்.மத்திய பேரூந்து நிலையத்திற்கு முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்,  அனைவருக்கும் தடுப்பூசி வழங்கு, பாதுகாப்பு வழிகளைச் செய்து பாடசாலைகளை தொடங்கு, கொரோனா திறைமறைவில் எங்களை வதைக்காதே, உணவுப் பொருட்கள், எரிபொருட்களின் விலையை உடனே குறை,  விவசாயிகள் மற்றும் மீனவர்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிக்குத் தீர்வு காண்,  உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தி இருந்தனர்.

இந்த நிலையில் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து அவ்விடத்திற்கு வருகைதந்த யாழ்ப்பாண பொலிஸார், போராட்டத்தை நிறைவு செய்யுமாறு வலியுறுத்தியமையை தொடர்ந்து போராட்டம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

எப்போதும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் திட்டம் இல்லை – அரசாங்கம் உறுதி !

நாட்டில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வந்த இரசாயன உரப்பாசவனைக்கு அரசு தடையை ஏற்படுத்தியுள்ளதுடன் நாட்டின் அனைத்து விவசாயிகளையும் சேதன உரப்பாவனைக்கு மாறிவிடுமாறு வலியுறுத்தியும் வருகின்றது. முக்கியமாக இந்த விடயத்தில் நாட்டின் ஜனாதிபதி உறுதியாக செயற்பட்டு வருவதுடன், இன்றைக்கு பிரச்சினைகள் இருந்தாலும் எதிர்ப்புக்கள் இருந்தாலும் பரவாயில்லை எதிர்கால தலைமுறைக்காக இதனை ஏற்றுக்கொண்டு சேதன உரப்பாவனைக்கு மக்களை பழக்கப்படுத்துங்கள் என ஜனாதிபதி ஆளுனர்களையும் அரச அதிகாரிகளையும் வலியுறுத்தி வருகிகன்றார்.  இந்த திட்டம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ள போதும் கூட அரசு இந்த விடயத்தில் உறுதியாக உள்ளதனை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அண்மையில் இரசாயன உர இறக்குமதிக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக ஊடகங்களில் வௌியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அறிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்திலும் இரசாயன உரங்களை இறக்குமதி செய்யும் தீர்மானம் அரசாங்கத்திற்கு இல்லை என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

“போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு.” – அமைச்சர் நாமல்ராஜபக்ஷ

நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் ஐக்கியமக்கள் சக்தி , ஜே.வி.பி ஆகிய கட்சிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் கொரோனா தனிமைப்படுத்தல் சடடத்தை காரணம் காட்டி தொடர்ந்து கைது செய்யபடபடுகின்றனர்.

கடந்த 8ஆம் திகதி கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் குறித்த சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கை  நாடாளுமன்றத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களை பெண் காவல்துறை உத்தியோகத்தர் அச்சுறுத்தியிருந்ததுடன் ஊடகவியலாளர்களின் கமரா மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

அதே நேரம் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீதான பொலிஸாரின் அடக்குமுறைகள் தொடர்பாக நேற்றைய பாராளுமன்ற அமர்விலும் சலசலப்புக்கள் ஏற்பட்டிருந்தன. இதற்கு பதிலளித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர “பொதுக்கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதால் இவ்வாறான செயல்களில் ஈடுபடுவோர் தொடர்ந்து கைது செய்யப்படுவர் என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபட மக்களுக்கு உரிமை உண்டு என்றாலும் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீற முடியாது என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சியினர் மற்றும் ஆசிரியர் சங்கம் முன்னெடுத்த போராட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கைகள் குறித்த கேள்வி பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

போராட்டத்தில் ஈடுபடுபவர்களை பொலிஸார் கைது செய்யும் நடவடிக்கையை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் நல்லாட்சி அரசாங்கத்திலோ அல்லது தற்போது ஆட்சியில் இருக்கும் கோட்டாபய-மஹிந்த அரசாங்கத்திலும் சரி இந்த நடவடிக்கையை நான் என்றும் ஏற்றுக்கொள்ளவில்லை.

கொரோனா தொற்றுக்கு எதிராக உலகமே எதிர்த்துப் போராடிவரும் நிலையில் பொதுமக்கள் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“எதிர்க்கட்சியினரின் தேவையற்ற ஆரப்பாட்டங்களால் மக்கள் ஆதரவு பெற்ற மொட்டுக்கட்சியை ஒன்றுமே செய்ய முடியாது.”- பஷில்ராஜபக்ஷ

நாட்டில் அரசுக்கெதிரான போராட்டங்கள் ஐக்கியமக்கள் சக்தி , ஜே.வி.பி ஆகிய கட்சிகளினால் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கியமாக ஜோன் கொத்தலாவல பல்கலைகழக சட்ட மூலம், பொருளாதார நெருக்கடி, சேதன உர பாவனையை கட்டாயப்படுத்துதல், தேவையற்ற கைதுகள் – கொலைக்குற்றவாளிகள் விடுதலை என அரசின் பல நகர்வுகளையும் எதிர்த்து இந்தப்போராட்டங்கள் எதிர்க்கட்சிகளால் தொடர் போராட்டங்கள் மேற்கொ்ளப்பட்டு வருவதுடன் சில இடங்களில் மக்களும் அணிதிரள ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் போராட்டங்களில் ஈடுபடுவோர் கொரோனா தனிமைப்படுத்தல் சடடத்தை காரணம் காட்டி தொடர்நது கைது செய்யபடபடுகின்றனர். இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நேற்று ஐக்கியமக்கள் சக்தியின் தலைமையில் பாரிய எதிர்ப்பு போராட்டம் சுதந்திரசதுக்கத்தின் முன்னால் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் “ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது என்பதை எதிரணியினரிடம் சொல்லிவைக்க விரும்புகின்றேன்.” என  நிதி அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளருமான பஸில் ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நான் நாடாளுமன்ற உறுப்பினராக – அமைச்சராகப் பதவியேற்றவுடன் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை  எதிரணியினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.

குறிப்பிட்ட ஒரு சிலரைக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான அரசைக் கவிழ்க்கவே முடியாது.

நாட்டு மக்கள் மனதில் ‘தாமரை மொட்டு’ சின்னமே இருக்கின்றது. இந்த ‘மொட்டு’க்கு வாக்களித்துத்தான் நாட்டின் பலமிக்க ஜனாதிபதியையும், மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத்துடனான அரசையும் மக்கள் தெரிவு செய்தார்கள்.

எதிரணியினரின் இந்த ஆர்ப்பாட்டங்கள், நாட்டு மக்கள் ஜனாதிபதிக்கும் அரசுக்கும் வழங்கிய அமோக ஆணைக்குத் தூசு.

எனவே, பிரயோசனமற்ற இந்த ஆர்ப்பாட்டங்களைக்  கைவிட்டுவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலன் சார்ந்த அரசின் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு எதிரணியினரிடம் கேட்டுக்கொள்கின்றேன் – என்றார்.