12

12

யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டு! தமிழ் தேசிய மக்கள் முன்னணி பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவு!

யூலை 11 மாலை யாழ் சித்தங்கேணி சிவன் கோவில் வளாகத்தில் வாள்வெட்டில் ஈடுபட்ட பிரதேசசபை உறுப்பினர் தலைமறைவாகி உள்ளார். சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் மகாகும்பாபிசேகக் கணக்கு தொடர்பில் எழுந்த வாக்குவாதத்தில் கேள்விகேட்டவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினார் வாளால் வெட்டியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலுக்கு இலக்கானவர் தலையிலும் கையிலும் வெட்டுக் காயங்களுடன் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றார். தாக்குதலுக்கு உள்ளானவர் யாழ் பல்கலைக்கழகத்தில் தற்காப்புக் கலைப் பயிற்சி வழங்கும் பயிற்றுனர் எனவும் தெரியவருகின்றது.

இச்சம்பவம் தொடர்பாக அன்று சிவன்கோவிலின் 6ம் திருவிழாவில் கலந்துகொண்ட பக்தர் ஒருவர் தகவல் தெரிவிக்கையில் சம்பவம் மாலை மூன்று மணியளவில் இடம்பெற்றதாகவும் சித்தங்கேணி பிள்ளையார் கோவிலின் கணக்கு வழக்குத் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் வாக்குவாதப்பட்டதை கேட்கக் கூடியதாக இருந்ததாகவும் தெரிவித்தார். சற்று நேரத்தில் வாக்குவாதம் மோதல்நிலைக்குச் செல்ல தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் வாளை எடுத்து வெட்டியதாகவும் அப்பக்தர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.

சித்தங்கேணி சிவன் கோவிலும் பிள்ளையார் கோவிலும் சித்தங்கேணிச் சந்தியின் இரு புறமும் அருகருகே உள்ள ஆலயங்கள். இந்த ஆலயங்களின் நிர்வாகசபையில் உள்ளவர்களும் பெரும்பாலும் அதே உறுப்பினர்களாக இருப்பர். இந்த மோதலில் சம்பந்தப்பட்ட இருவருமே இரு ஆலயங்களினதும் நிர்வாகசபையில் உள்ளவர்களே.

தமிழ் பிரதேசங்கள் வன்முறை சம்பவங்கள் மலிந்த பிரதேசங்களாக மாறியுள்ள சூழலில் ஒழுக்கம் பண்புகளைப் பேண வேண்டிய ஆலயத்தில் வாள்வெட்டு இடம்பெற்றுள்ளது. சட்டம் ஒழுங்கு நிலைநாட்டுவதற்காக உழைக்க வேண்டிய அரசியல் கட்சியினரே இந்த வாள்வெட்டை மேற்கொண்டும் உள்ளமை தமிழ் பிரதேசங்கள் எதிர்கொள்ளும் ஆபத்தினை கட்டியம் கூறுபவையாக உள்ளன.

தமிழ் பிரதேசங்களில் நடைபெறும் இளைஞர்களின் காடைத்தனங்களின் பின்னால் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு குறிப்பாப தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு தொடர்பு உள்ளது என்ற குற்றச்சாட்டு ஆண்டுகளாக இருந்து வருகின்றது. கடைத்தனங்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு மாறாக அவர்களை சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி வெளியே எடுத்து தங்கள் கட்சியின் நலன்களுக்கு பயன்படுத்தினர் என்ற குற்றச்சாட்டுகள் சமூகவலைத்தளங்களில் பரவலாக பதிவுசெய்யப்பட்டு உள்ளது. இந்தப் பின்னணியிலேயே நேற்று தமிழ் தேசிய முன்னணயின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவரே பட்டப்பகலில் ஒரு ஆலய வளாகத்தில் அடியார்கள் முன்னிலையில் வாள்வெட்டில் ஈடுபட்டுள்ளார்.

ஆலயத்தை பாரம்பரியமாக பராமரித்து வருபவர்களிடம் பிடுங்கிக் கொண்ட புதிய நிர்வாகத்தினர் தற்போது ஆலயத்தை மிகமோசமான முறையில் பரிபாலனம் செய்வதாக பெயர் குறிப்பிடவிரும்பாத அடியார் ஒருவர் தேசம்நெற்க்குத் தெரிவித்தார். இதன் உச்சகட்டம் தான் நேற்று இடம்பெற்ற வாள்வெட்டு என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தாக்குதலில் ஈடுபட்ட தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் தற்போதைய யாழ் மேயர் மணிவண்ணனுக்கு ஆதரவானவர் என்றும் இந்த அணியிலேயே வன்முறைச் சம்பவங்களில் தொடர்புடைய பலர் இருப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகின்றது. இவர்களுடைய மிரட்டல்களுக்கு அஞ்சியே யாழ் ஊடகங்கள் சம்பந்தப்பட்ட பிரதேச சபை உறுப்பினரின் கட்சியை குறிப்பிடுவதைத் தவிர்த்துள்ளனர்.

இத்தாக்குதல் சம்பவத்திற்கு முன்னதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் சிவகுமார் கஜேன் மரணித்து இருந்தார். இவருடைய மரணம் கொலையாக இருக்கும் என்ற சந்தேகம் எழுவதற்கும் கட்சியின் வன்முறை போக்கே காரணம் என நம்பப்படுகின்றது. ஆனால் சிவக்குமார் கஜேனின் மரணம் தற்கொலை என இறந்தவருக்கு நெருக்கமானவர்களிடம் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. காதலித்த பெண்ணை மணக்க அனுமதியாமல் மற்றுமொரு பெண்ணுடன் திருமணத்திற்கு நிர்ப்பந்தித்ததாலேயே சிவக்குமார் கஜேன் தற்கொலை செய்துகொண்டதாக இராமாவில் பகுதியில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டமை தெரிந்ததே

தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் யாழ் மேயர் மணிவண்ணனும் யாழில் நடைபெறும் வன்மறைச் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பான முறையில் செயற்பட வேண்டும். கட்சிக்குள் வன்முறையைக் களையும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வன்முறையுடன் தொடர்புபட்டவர்களை கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும். தங்களுடைய கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களே ஒவ்வொருவராக தற்கொலை செய்வதை பொருட்படுத்தாமல் இருந்துகொண்டு சமூகத்துக்கு எப்படி இவர்களால் வழிகாட்ட முடியும்.

யாழ்ப்பாணம் நல்லலூரடியில் ஒடுக்கபட்ட சமூகப் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடி வந்த போது துரிதகதியில் வந்து அவர்களை விரட்டியடிக்க முழுமூச்சுடன் செயற்பட்ட மேயர் மணிவண்ணன் குழுவினர் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களின் வன்முறை தொடர்பிலும் அவர்களின் தற்கொலைகள் தொடர்பிலும் துரிதகெதியில் செயற்பட வேண்டும்.

சம்பந்தனை கட்சியிலிருந்து நீக்க முயற்சி – மாவையின் பதில் என்ன..?

தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து நீக்குவதற்கான முயற்சிகள் எவையும் இடம்பெறவில்லை என கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தை சேர்ந்த அரசியல்வாதியொருவர் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை கைப்பற்ற முயல்கின்றார் என நான் தெரிவிக்கவில்லை எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

நான் அன்று இந்திய தூதுவரை சந்திப்பதற்காக கொழும்பிலிருந்தேன் அவ்வாறான நிலையில் நான் எப்படி யாழ்ப்பாணத்தில் கருத்து தெரிவிக்க முடியும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளும் சம்பந்தனின் தலைமைத்துவம் தலைமை குறித்து திருப்தியடைந்துள்ளன என தெரிவித்துள்ள மாவை சேனாதிராசா கூட்டணியில் உள்ள எவருக்கும் கட்சியின் தலைமை குறித்து அதிருப்தியில்லை என தெரிவித்துள்ளார்.

கட்சிக்குள் உள்ள அல்லது வெளியிலிருந்து எவராவது பிரச்சினையை உருவாக்க முயல்கின்றார்களா..? என்ற கேள்விக்கு எவரும் இல்லை என மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

“இணையத்தில் விற்கப்பட்ட சிறுமி – விசாரணையை நிறுத்த அரசு திட்டம் ” – ரோஹினி குமாரி விஜேரத்ன

15 வயது சிறுமி பாலியல் நடவடிக்கைகளுக்காக இணையத்தில் விற்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸ் விசாரணையை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை நிறுத்த சிலர் அழுத்தம் கொடுக்கின்றன என்றும் இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சி எதிர்ப்பை தெரிவிப்பதாகவும் ரோஹினி குமாரி விஜேரத்ன கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட அனைத்து சந்தேக நபர்களையும் சட்டத்தின் முன் ஆஜர்படுத்தி, அவர்களுக்கு மன்னிப்பு வழங்காமல் தண்டிக்குமாறு அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

“சிறுவர்களின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும்.” – கெஹலிய ரம்புக்வெல

“பரீட்சை சுமைகள் அனைத்தும், சிறுவர்களின் கல்விக்கு தடையாக இருக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.” என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

அவர் மேலுமு் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றினால் கடந்த சில மாதங்களாக அரசாங்கம் 286 பில்லியன் ரூபாயினை செலவிட்டுள்ளது. மேலும் சுற்றுலாத்துறையிலிருந்து 4 முதல் 5 பில்லியன் ரூபாய் வரையும் ஆடைத் துறையிலிருந்து 1.7 பில்லியனும் அரசாங்கத்திற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதேவேளை பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் தங்களது பரீட்சை மற்றும்  எதிர்காலம் குறித்து மாணவர்கள் கவலை கொண்டுள்ளனர். இந்த சுமைகள் அனைத்தும், சிறுவர்களின் கல்விக்கு தடையாக இருக்க அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்காது.

பொருளாதாரத்தில் பின்னடைவுகள் இருந்தாலும் சிறுவர்களின் எதிர்காலத்திற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுக்கும் எனவும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

பிறந்த சிசுவை கொலை செய்து எரித்த மூன்று பிள்ளைகளின் தாய் !

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பிறந்த சிசு ஒன்றினை கொலை செய்து எரித்த குற்றச்சாட்டின் பேரில் சிசுவின் தாயாரை இன்று (12) மாலை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மத்ரஸா நகர் பேராறு கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வேறு ஒரு நபருடன் உள்ள தகாத உறவு மூலம் நேற்றிரவு (11) சிசு பிறந்துள்ளதாகவும், பிறந்த சிசுவினை கொலை செய்து எரித்துள்ள நிலையில் அதனை தெரு நாய்கள் கவ்விச் சென்ற நிலையில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலை அடுத்து பொலிஸார் சிசுவினை பிரசவித்த பெண்ணைக் கைது செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனார்.

இணைய வழிக்கல்வியை நிறுத்துங்கள் – இலங்கை ஆசிரியர் சங்கம்

அடக்குமுறைகளைக் கையாண்டு அராஜகப் போக்கில் தொழிற்சங்கப் போராட்டங்களை அடக்கமுடியாது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் தலீசன் தெரிவித்துள்ளார்.

யாழில் இன்று இடம்பெற்ற செய்தியளார் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த அவர், அடிப்படைக் கோரிக்கைகளுக்கு ஜனநாயக ரீதியாக பதில் வழங்க அரசாங்கம் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.

இதேவேளை நடைமுறையிலுள்ள இணைய வழிக்கல்வியை நிறுத்துமாறு அனைத்து ஆசிரியர் தொழிற்சங்கங்களும் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இணையவழி கல்வி தோல்வியை சந்தித்துள்ள இந்நிலையில் அரசாங்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிப்பது, பரீட்சைகளை நடாத்தி சாதரணமான நிலையில் எல்லாம் உள்ளது என கூற முனைவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி – வாகை சூடியது இத்தாலி !

16-வது ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் விறுவிறுப்பான இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்றது.
இன்று அதிகாலை நடந்த போட்டியில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இத்தாலி, இங்கிலாந்து அணியுடன் மோதியது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இங்கிலாந்து வீரர் லூக் ஷா 2-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இத்தாலிக்கு அதிர்ச்சி அளித்தார். அதன்பின் யாரும் கோல் அடிக்கவில்லை. இதனால் முதல் பாதியில் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.
ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் 67-வது நிமிடத்தில் இத்தாலி அணியின் லியனார்டோ போனுக்கி ஒரு கோல் அடித்தார். இறுதியில், இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.
கூடுதல் நேரம் வழங்கியும் இரு அணிகளின் கோல் போடும் முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இதையடுத்து, வெற்றியாளரை நிர்ணயிக்க பெனால்டி ஷூட் அவுட் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் 3-2 என்ற கோல் கணக்கில் இத்தாலி அபார வெற்றி பெற்றது.

போராட்டங்களில் ஈடுபடுவோர் கைது தொடர்பாக ஹனா சிங்கர் அதிருப்தி !

இலங்கை அரசினுடைய நடவடிக்கைகளை கண்டித்து போராட்டங்களில் ஈடுபடுவோர் தொடர்ச்சியாக தனிமைப்படுத்தல் சட்டத்தின் ஊடாக கைது செய்யப்படுகின்றனர். நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கேள்வியெழுப்பப்பட்ட போது பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டதாலேயே குறித்த கைதுகள் இடம்பெற்றதாகவும் கைதுகள் தொடரும் எனவும்  கூறியிருந்தார்.

இந்நிலையில் , அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வதற்கு மக்களிற்கு உள்ள உரிமைக்கு ஆதரவாக இலங்கைக்கான ஐக்கியநாடுகளின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி ஹனா சிங்கர் ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபடுவோர் ஒன்றுகூடுவதற்கான உரிமையில் ஆர்ப்பாட்டங்களிற்கான உரிமையும் அடங்கியுள்ளது. கருத்துசுதந்திரம் பொதுமக்கள் கொள்கைகளில் தாக்கம் செலுத்துதல் போன்ற ஏனைய உரிமைகளை பயன்படுத்துவதற்கு அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை உதவுகின்றது.

கொரோனாவைரசினை கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகள் பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கின்ற நியாயமான நடவடிக்கைகளிற்கு அப்பால் செல்லாமலிருப்பது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேபாளத்தின் புதிய பிரதமராக ஷெர் பகதூர் தேவ்பா நியமனம் – உச்ச நீதிமன்றம அதிரடி தீர்ப்பு !

நேபாளத்தில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் எழுந்த உட்கட்சி பூசலால் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரக்சுக்கு நெருக்கடி ஏற்பட்டது. மே மாதம் பாராளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தோல்வியடைந்து ஆட்சியையும் இழந்தார். பின்னர், எதிர்க்கட்சிகளால் ஆட்சியமைக்க முடியாத நிலையில், மீண்டும் கே.பி. சர்மா ஒலியையே பிரதமராக நியமித்தார் அதிபர்.
இந்த முறையும் அவரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில், பாராளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த பரிந்துரை செய்தார். இதனை ஏற்ற அதிபர் பித்யா தேவி பண்டாரி, பிரதிநிதிகள் சபையை கலைத்து, பிரதமர் தேர்தலுக்கான புதிய தேதிகளை அறிவித்தார். அதன்படி, வரும் நவம்பர் 12 மற்றும் 19 ஆகிய திகதிகளில் இடைத்தேர்தல் நடத்தப்படும்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமர் பதவியேற்க முன்வந்த 61 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பா மற்றும் கே.பி. சர்மா ஒலி ஆகியோரின் கோரிக்கையை அதிபர் பித்யா தேவி ஏற்க மறுத்துவிட்டார். மைனாரிட்டி அரசாக கே.பி.சர்மா ஒலி அரசு நீடிக்கிறது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட எதிர்த்து நேபாள காங்கிரஸ் தலைமையிலான எதிர்கூட்டணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு விசாரித்து இன்று தீர்ப்பு வழங்கியது.
கலைக்கப்பட்ட பாராளுமன்றத்தை மீண்டும் நிலைநிறுத்த உத்தரவிட்ட நீதிபதிகள், புதிய பிரதமராக நேபாள காங்கிரஸ் தலைவர் ஷெர் பகதூர் தேவ்பாவை 2 நாட்களில் நியமிக்கும்படி உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பினால் கே.பி.சர்மா ஒலிக்கு மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றம் அதனை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.

யாழில் 103 மில்லியன் ரூபாய் பெறுமதியிலான கேரளக்கஞ்சா மீட்பு !

யாழ்ப்பாணம் அனலைத்தீவு கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கை கடற்படையினர் இன்று திங்கட்கிழமை அதிகாலை நடத்திய சோதனை நடவடிக்கையில், படகொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 344 கிலோ 550 கிராம் எடையிலான கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இவற்றுடன் மூன்று சந்தேக நபர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன் குறித்த படகையும் பறிமுதல் செய்திருக்கின்றனர்.

இலங்கைக்கு சொந்தமான கடற்பிரதேசத்தில் குறிப்பாக வடக்கு கடற்பிரதேசத்தில் சட்டவிரோத பொருட்கொடுக்கல் வாங்கல் மற்றும் போதைப்பொருட்கள் கொடுக்கல் வாங்கல் என்பன இடம்பெற்று வரும் பின்னணியிலேயே இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதாக இலங்கை கடற்படை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் இலங்கைப் பெறுமதி 103 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.