16

16

தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா கைதுக்காக கலவரம் – 117 பேர் வரை இறப்பு !

தென்னாபிரிக்காவில் வன்முறை மற்றும் கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை, 117ஆக அதிகரித்துள்ளது. தென்னாபிரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிஜேக்கப் ஜுமா, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு ஏழு மாகாணங்களில் குழப்பநிலை நீடித்து வருகின்றது.

ஜேக்கப் ஜூமா: ஓர் அரசியல் கைதியின் வளர்ச்சியும், வீழ்ச்சியும் - BBC News  தமிழ்

இதனால் அங்கு வன்முறை மற்றும் கலவரங்களை கட்டுப்படுத்த பொலிஸாருக்கு உதவியாக 20,000 க்கும் மேற்பட்ட துருப்புக்களை அரசாங்கம் அனுப்பி வைத்துள்ளது. இதுவரை 2,200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், தற்போது நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வன்முறையின் மையமான குவாசுலு-நடால் மாகாணத்தில், நிலைமை நிலையற்றதாகவே உள்ளதாகவும் ஆனால் மிகவும் மேம்பட்ட ஸ்திரத்தன்மையை நோக்கி நகர்வதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய அமைதியின்மை, முன்னாள் ஜனாதிபதி ஸூமாவை சிறையில் அடைத்ததன் மூலம் தூண்டப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி ஜேக்கப் ஸுமாவுக்கு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அந்த நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம், 15 மாதம் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து ஜேக்கப் ஸூமாவை கைது செய்ய எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், கடந்த வாரம் ஜேக்கப் ஸூமா பொலிஸில் சரணடைந்தார்.

இந்தநிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜேக்கப் ஜுமாவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது கலவரம் மற்றும் வன்முறையாக உருவெடுத்துள்ளது.

“கொரோனா தொடர்பாக சட்டவிதிகள் அனைவருக்கும் பொதுவானது.” – அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

ஜோசப் ஸ்டாலின், கால்மாக்ஸ் போன்றோருக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான சட்ட விதி முறையாகவே அமைய வேண்டும் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கூறினார்.

விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் தற்போது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனர்த்தமாகும். இது அரசியல் கோஷம் அல்ல. முழு உலகமும் ஏற்றுக்கொண்ட முறைக்கு அமைய இலங்கையிலும் சுகாதார வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இது குறிப்பிட்ட நபர்களை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தப்படவில்லை. இதனால் அனைவருக்கும் பொதுவான சட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிசாருக்கு நேர்வதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

கொரோனா வைரஸ் பரவல் போன்ற பேரனர்த்தங்களின் போது தொழில் உரிமைகள் என்ற போர்வையில் அரசியல் கட்சிகளினதும் ஏனைய சக்திகளினதும் செயல்பட முயற்சிக்கின்றன. இவ்வாறான சந்தர்பங்களில் சுகாதார வழிகாட்டல்களை மீறுவோரை பொலிசார் கைது செய்ய நேர்வதாகவும் அவர் மேலும் கூறினார்.

இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாய இராணுவ பயிற்சி. !

“கொள்ளையர்கள், சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுபவர்கள், பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவோர், பாதாள உலகக்குழுவினர், போதை பொருள் கடத்துபவர்கள் போன்றோர் இருக்கும் வரை அச்சமும், சந்தேகமும் இல்லாமல் இந்த சமுதாயத்திலே வாழமுடியாது. ஆகவே அவற்றை முதலில் ஒழிக்க வேண்டும். அப்படி ஒழித்து மக்கள் நிம்மதியாக, அச்சமின்றி வாழ கூடிய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதே எமது நோக்கம். அதற்காக இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கட்டாயம் இராணுவப் பயிற்சி வழங்கப்பட வேண்டும்.” என பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர  வலியுறுத்தியுள்ளார்.

பாணந்துறை – அலுபோமுல்ல மற்றும் ஹிரன பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய காவல் நிலையங்களைத் திறந்து வைத்து உரையாற்றுகையில், அமைச்சர் சரத் வீரசேகர இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் உரையாற்றிய அவர்,

18 வயதிற்கு மேல் அனைவருக்கும் ஆயுத பயிற்சி வழங்க வேண்டும் என நான் நாடாளுமன்றத்தில் கூறியபோது என்னை கேலி செய்தார்கள். இராணுவ பயிற்சி என்பது எல்லோரும் நினைப்பதை போல் இராணுவ வீரராகும் செயற்பாடு அல்ல. 18 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு இராணுவ பயிற்சி வழங்குவதற்கு சிறந்த இடம் இராணுவ முகாம்களே. அங்குதான் ஒழுக்கமும், அனைத்து வசதிகளும் காணப்படுகின்றது. அதனால் தான் அங்க பயிற்சியை வழங்க தீர்மானித்தோம்.

தலையமைத்துவ பண்பையும், ஆளுமை திறனையும் வளர்க்கும் முகமாக 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும், இராணுவ பயிற்சியை வழங்கினால் நிச்சிமயமாக ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்க முடியும் என்றார்.

“வடக்கு – கிழக்குக்கான கொரோனா தடுப்பூசிக்கு விசேட திட்டம்” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட  அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

“நூறுவீதம் அரசபல்கலைகழகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது.” – ஜனாதிபதி கோத்தபாய

கல்விச்சீர்திருத்த நடவடிக்கைகளை எதிர்ப்பவர்கள் தங்கள் அரசியல் நோக்கங்களை முன்னெடுப்பதற்கு பதில் நவீன கல்விமுறைக்கான யோசனைகளை முன்வைக்கவேண்டும் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நூறுவீதம் அரசபல்கலைகழகங்களை மாத்திரம் வைத்துக்கொண்டு செயற்படமுடியாது என தெரிவித்துள்ள ஜனாதிபதி அதேவேளை தனியார் பல்கலைகழகங்களை வர்த்தகமாக முன்னெடுப்பதை எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.


தனியார் பல்கலைகழகங்கள் மூலம் கிடைக்கும்வருமானத்தை கல்வி அபிவிருத்திக்கு ஒதுக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். பல பல்கலைகழக பட்டதாரிகள் அரசாங்க தொழில்வாய்ப்பினை எதிர்பார்க்கின்றனர் என தெரிவித்துள்ள ஜனாதிபதி வேலைவாய்ப்பை வழங்குவது மாத்திரம் அரசாங்கத்தின் பணியில்லை வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான முழுமையான பொருளாதார சூழ்நிலையை உருவாக்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பு என குறிப்பிட்டுள்ளார்.

“ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கா வெளியேறுவது அச்சமூட்டுகிறது.” – ஜோர்ஜ் டபிள்யு புஷ்

2001-ம் ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டை கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தான்  விவகாரத்தில்  அமெரிக்கா  தலையிட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி அல்கொய்தா தீவிரவாதிகள் மற்றும் தலிபான்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தன. இந்தப் போரில் ஆப்கானிஸ்தான் படைகளும் அமெரிக்கப் படைகளின் கீழ் போரிட்டன.

தலிபான்கள் விரட்டப்பட்டு ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. எனினும் தீவிரவாதத்துக்கு எதிராக அமெரிக்கா நடத்திய இந்தப் போரில் இதுவரைஅமெரிக்கா தரப்பில் 2,400 வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கான் இராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் தீவிரவாதம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாகவே ஆப்கானிஸ்தானிலிருந்து தங்களது படை வீரர்களைத் திரும்பப் பெறும் முயற்சியில் அமெரிக்கா  ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் அனைத்து அமெரிக்க வீரர்களும் நாடு திரும்புவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வேகமாக வெளியேறிவரும் நிலையில், அந்நாட்டின் 85 சதவீதப் பகுதிகள் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரம் பல ஆப்கான் வீரர்கள் அச்சம் காரணமாக அயல்நாடுகளிடம் தஞ்சமடைய ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானிலிருந்து மேற்கத்திய நாடுகளின் படைகள் வெளியேறுவது பயத்தை அளிக்கிறது என்று  ஜோர்ஜ் டபிள்யு புஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி பத்திரிகை ஒன்றுக்கு ஜோர்ஜ் டபிள்யு புஷ்  அளித்த பேட்டியில் கூறுகையில், “இது ஆபத்தைக் குறிக்கும். ஆப்கனிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்தியப் படைகள் வெளியேறுவது அந்நாட்டில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுவதற்கு வழிவகுக்கும். அவர்கள் அங்குள்ள கொடுங்கோலர்களால் தண்டிக்கப்படலாம். நினைக்க முடியாத ஆபத்தை ஏற்படுத்தலாம். இந்த முடிவு சோகத்தை அளிக்கிறது” என்றார்.

 

 

அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வாருங்கள் – ஐக்கிய மக்கள் சக்தியிடம் ரணில் வேண்டுகோள் !

ஐக்கிய மக்கள் சக்தியால் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை முழு அரசுக்கும் எதிரான பிரேரணையாக மாற்றப்பட வேண்டும்.” என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

கட்சித் தலைமையமான சிறிகொத்தாவில் நேற்று (15) நடைபெற்ற கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுடான சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

அரசில் தனி நபர் ஒருவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையானது அரசில் உள்ள தரப்பினரை ஒற்றுமையடையச் செய்யும் வகையிலானதாகவே அமையும்.

எவ்வாறாயினும் தனி நபருக்கு எதிராக அன்றி ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முழு அரசுக்கும் எதிராகவே நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர வேண்டும்.

இதற்கமைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை அரசுக்கு எதிரான பிரேரணையாக ஐக்கிய மக்கள் சக்தி மாற்றியமைக்க வேண்டும் – என்றார்.

திருச்சி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் விடுதலை !

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை அகதிகள் 10 பேர் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற,எல்லை மீறி மீன் பிடி தொழிலில் ஈடுபட்ட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் தமிழ்நாடு காவல் துறையால் கைது செய்யப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 78 பேர் உள்ளிட்ட வெளிநாட்டினர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்த சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்கள் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை கடந்த 9 ம் திகதி தொடக்கம் ஆரம்பித்திருந்தனர். தங்களது தண்டனை காலம் முடிந்தும் அகதிகளுக்கான சிறப்பு முகாம் என்ற பெயரில் தனி சிறையில் அடைக்கப்பட்டிருப்போர் உடனடியாக விடுவிக்க வேண்டும், இல்லாவிட்டால் தங்களை கருணை கொலை செய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ் நாடு முதலமைச்சருக்கு இலங்கைத் தமிழர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில்,சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களின் விடுதலை குறித்து முதலமைச்சரோடு கலந்து ஆலோசிக்கபட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,தங்களின் விடுதலைக்கு உதவிய அனைவருக்கும் சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை அகதிகள் நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

அபாய வலயமாக அறிவிக்கப்பட்ட கொழும்பு நகரம் !

‘டெல்டா’ வைரஸ் பரவல் அபாய வலயமாக கொழும்பு நகரம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு மாநகரை அண்மித்த பகுதிகளில் ‘டெல்டா’ வைரஸ் தொற்றுடன் மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று கொழும்பு மாநகர சபையின் தலைமை மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

உருமாறிய கொரோனா வைரஸ் வகைகள் பரவுவது கொழும்பு மாநகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் தீவிரமடைந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

உருமாறிய டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்கள் சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.

டெல்டா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் பரிசோதனை முடிவுகள் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும், உருமாறிய வைரஸ்கள் தொடர்பாக சுகாதார அமைச்சு மேலதிக ஆய்வுகளை மேற்கொள்கின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.