August

August

“இலங்கையிலுள்ள 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டுள்ளன.” – செல்வராசா கஜேந்திரன்

போர்முடிந்து இன்னமும் யுத்த சூழல் போன்று தான் வடகிழக்கு காணப்படுகின்றது. என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 16ஆம் திகதி யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிலுள்ள கற்கோவளம் பகுதியில் தீர்த்தக்கரை என்னும் இடத்தில் இராணுவ முகாம் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த இராணுவ முகாம் யுத்தம் முடிந்து தொடர்ந்தும் இன்னமும் அந்த இடத்திலே தான் முகாம் இருக்கின்றது.

அதிலே படையினர் முகாமிட்டு இருப்பதாலே பொதுமக்களுக்கு அச்சமான ஒரு நிலை தான் இருக்கின்றது. குறிப்பாக பெண்கள் தனியாக போக்குவரத்து செய்வதிலே ஒரு அச்ச நிலை இருக்கின்றது.

இலங்கையிலே இருக்கிற 20 டிவிசன் படைகளிலே 16 டிவிசன் படைகள் வடக்கு கிழக்கிலே நிலை கொண்டிருக்கின்றன.

அதிலும் வடமாகாணத்தில் 13 டிவிசன் படைகள் நிலை கொண்டிருக்கின்றது. தொடர்ந்தும் இராணுவத்திற்காக காணி சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் தான் படை தரப்பில் இருந்து அரசாங்க தரப்பில் இருந்து முன்னெடுக்கப்படுகின்றது. நாங்கள் இவற்றை வன்மையாக கண்டிக்கின்றோம் என மேலும் தெரிவித்தார்.

“தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்ந்துள்ள இழிநிலை.” – சீமான் வேதனை !

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் அங்கு தடுத்துவைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள். இது தொடர்பில் தமிழக அரசு காத்திரமான எந்த நகர்வுகளையும் மேற்கொள்வதாக தெரியவில்லை. இந்த நிலையில்  கடந்த சில நாட்களுக்கு முன்பு குறித்த முகாமிலுள்ள 15க்கும் அதிகமான இலங்கைத்தமிழர்கள் ஒரே நேரத்தில் தற்கொலைக்கு முயற்சித்திருந்தனர். இது தொடர்பில் இலங்கை தமிழ்கட்சி தலைவர்கள் எவருமே வாய் இது வரை பெரிதாக திறக்கவில்லை.

இந்நிலையில் இது தொடர்பில் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுநாம்தமிழர்  கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

திருச்சி சிறப்பு முகாமிலிருந்து தங்களை விடுவிக்கக்கோரி பட்டினிப்போராட்டத்தை முன்னெடுத்து வந்த தம்பிகளில் நிரூபன், முகுந்தன் ஆகிய இருவரும் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப்பெற்று வரும் செய்தியறிந்து நெஞ்சம் பதைபதைத்துப்போனேன்.

தமிழர்களின் தாய்நிலமான தமிழகத்திலேயே தொப்புள்கொடி உறவான ஈழச்சொந்தங்களுக்கு நேர்கிற இத்தகைய இழிநிலையும், கொடுந்துயரமும் பெரும் மனவேதனையைத் தருகிறது.

ஈழத்தமிழர் எனும் ஒற்றைக்காரணத்துக்காகவே அவர்களைச் சந்தேக வளையத்திற்குள் வைத்துக் கண்காணித்து, அவர்களது சுதந்திரத்தையும், தனியுரிமையையும் மறுத்து, மனித உரிமை மீறலை அரங்கேற்றி வரும் ஆளும் அரசதிகாரத்தின் தொடர் செயல்பாடுகள் யாவும் வன்மையான கண்டனத்திற்குரியது.

திருச்சி மத்தியச்சிறை வளாக முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழச்சொந்தங்கள் 78 பேரும் தங்களை விடுவிக்கக்கோரி தொடர்ச்சியாகக் கோரிக்கை வைத்து, பல்வேறு வடிவங்களில் அறப்போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். தங்களது பக்கமிருக்கும் நியாயத்தை நிலைநாட்டவும், அரசின் செவியைத் திறக்கவுமென, கடந்த 10 நாட்களாகப் பட்டினிப்போராட்டம் செய்து வரும் அவர்களை அரசு கண்டுகொள்ள மறுக்கவே வேறு வழியற்ற நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளது பெரும் மனவலியைத் தருகிறது.

தமிழ்நாட்டிலேயே ஈழச்சொந்தங்களுக்கு நிகழ்ந்தேறும் இக்கொடுமைகளும், அதற்கு எதுவும் செய்யவியலாத சூழலில் நிறுத்தியிருக்கும் அதிகாரமற்ற கையறு நிலையும் குற்றவுணர்ச்சிக்குள் தள்ளி, ஆற்றாமையையும், பெருஞ்சினத்தையும் வரவழைக்கிறது.

ஈழச்சொந்தங்களை விலங்குகள் போல அடைத்து வைத்து, வாழவே விடாது நாளும் துன்புறுத்தி அல்லலுக்கு உள்ளாக்கும் இத்தகைய கொடும் முகாம்களை, ‘சிறப்பு முகாம்கள்’ எனக்கூறுவது கேலிக்கூத்தானது.

சிறப்பு முகாம் எனும் பெயரில் இயங்கும் இவ்வதைக்கூடங்கள் ஈழச்சொந்தங்களின் அடிப்படை சனநாயக உரிமைகளையே முற்றாக மறுத்து, தினமும் அவர்களைத் துயருக்குள் ஆழ்த்தி பெருங்கொடுமைகளை அரங்கேற்றி வருவதாலேயே அவற்றை மூடக்கோரி, பல ஆண்டுகளாக நாங்கள் போராடி வருகிறோம்.

ஈழத்தில் போர் முடிவுற்றப் பிறகு, சிங்களப்பேரினவாத அரசால் வன்னியிலுள்ள முள்வேலி முகாம்களில் தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்ட இழிநிலையே, தமிழகத்திலும் சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் தொடருமென்றால், இது தமிழர் நாடா? இல்லை! சிங்களர் நாடா? என எழும் கேள்விக்கு என்ன பதிலுண்டு?

இன்று நேற்றல்லாது பல ஆண்டுகளாக, சிறப்பு முகாம்கள் எனப்படும் வதை முகாம்களை மூடக்கோரிப் பலகட்டமாகப் போராடியும், கருத்துப்பரப்புரை செய்தும், தேர்தல் மேடைகளில் கோரிக்கையாக வைத்தும் அதனை ஆளுகிற அரசுகள் செய்ய மறுத்து வருவது தமிழர்களைக் கிள்ளுக்கீரையாக எண்ணிச் செயல்படும் திராவிடக்கட்சிகளின் தமிழர் விரோத மனப்பான்மையையே உணர்த்துகிறது.

தமிழகத்திற்குள் வாழ தஞ்சம் கேட்டு வரும் ஈழச்சொந்தங்களுக்குக் குடியுரிமையைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்த திமுக அரசு, இன்றைக்கு மாநில அரசின் அதிகார வரம்புக்குட்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களின் கொடியப்பிடியிலிருந்து அவர்களை விடுவிக்க மறுத்து இரட்டைவேடமிடுகிறது. ஆகவே, இனிமேலாவது இவ்விவகாரத்தில் சீரியக் கவனமெடுத்து, சிறப்பு முகாம்கள் எனும் பெயரில் இயங்கும் அனைத்து வதைக்கூடங்களையும் உடனடியாக மூடி, ஈழச்சொந்தங்களுக்கான நலவாழ்வையும், வாழ்வாதாரத்தையும் ஏற்படுத்தித் தர நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமெனவும், பட்டினிப்போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் உடல் நலிவுற்றிருக்கும் ஈழச்சொந்தங்களின் உயிரைக்காத்து, உடல்நலம் தேற்ற தகுந்த மருத்துவச்சிகிச்சைகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இம்மாத நாடாளுமன்ற சம்பளத்தை கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வழங்க எதிர்க்கட்சி முடிவு !

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய இம்மாத சம்பளத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக நன்கொடை வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (22) கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்னரணதுங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களுடைய சம்பளத்தின் 75 வீதமான பங்கினை மக்கள்நிவாரணத்துக்காக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

பரிசோதனைக்கு வந்த வைத்தியருக்கு உயிர் அசசுறுத்தல் விடுத்த ரிஷாட்பதியுதீன் – விசாரணைகள் ஆரம்பம் !

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் சிறைச்சாலைகள் வைத்தியர் ஒருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சிறைச்சாலைகள் அத்தியட்சகர் ஒருவரின் தலைமையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

மெகசின் சிறைச்சாலையில் நோயாளர்களை பரிசோதிக்கும் அறைக்குள் வைத்து, கடமைகளுக்கு இடையூறு விளைவித்து, கீழ்தரமான வார்த்தைகளில் பேசி, உயிர் அச்சுறுத்தல் விடுத்தமை தொடர்பில் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக கடமைநேர வைத்தியரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்திடமும் பொரளை பொலிஸ் நிலையத்திலும் குறித்த வைத்தியர் முறைப்பாடு செய்துள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய, சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிட்டார்.

“சட்டிகளை ஆற்றில் போட்டால் கொரோனா ஒழியாது.” – முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ராவை கிண்டல் செய்த ஊடகத்துறை அமைச்சர் !

முன்னாள் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சியின் கொகொரோனா தடுப்பு தொடர்பான நடவடிக்கைகள் அனைத்தும் பெரும் நகைச்சுவைக்கு உட்படுத்தப்படடிருந்தன. முக்கியமாக களனி ஆற்றில் மந்திரித்த மட்பாண்டத்தை இட்டமை, தம்மிகபண்டார எனும் அங்கீகரிக்கப்படாத பாணிமருந்தை அருந்தி தவறான முன்மாதிரியாக செயற்பட்டமை , அப்பாணி மருந் தஅருந்தி கொரேனா தொற்றுக்குள்ளானமை  எனப்பல காரணங்களால்  முன்னாள் சுகாதார அமைச்சர் மீது பலரும் கோபத்தை கொட்டித்தீர்தனர். முக்கியமாக சமூக வலைத்தளங்களில் அவர் மீது கடுமையான விமர்சனங்கள முன்வைக்கப்பட்டன.

அண்மையில் அமைச்சரவையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்ட போது அமைச்சர் பவித்ரா சுகாதாரத்துறையிலிருந்து நீக்கப்பட்டு போக்குவரத்துதுறை அமைச்சை பொறுப்பெடுத்தார். இந்நிலையில் புதிதாக தெரிவாகியுள்ள ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும “ பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொரோனா வைரஸை வெற்றி கொள்ள முடியாது என  தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

பாணி அருந்துவதாலும், சட்டிகளை ஆற்றில் எறிவதாலும் கொரோனா வைரஸை வெற்றி கொள்ள முடியாது. விஞ்ஞான முறையின் ஊடாக மாத்திரமே இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும். ஒகஸ்ட் 30 ஆம் திகதிக்குள் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காகும்.

கொரோனா தாக்கத்தை கருத்திற் கொண்டு தற்போது நாடு தழுவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப் பகுதியில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 30 ஆம் திகதிக்கு பின்னர் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியுள்ள நாடு இலங்கை என்ற நிலைக்கு செல்வது பிரதான எதிர்பார்ப்பாக உள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல் தொடரிலிருந்து வெளியேறிய ஜோஸ் பட்லர் !

இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இருந்து ஜோஸ் பட்லர் விளையாடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் உத்தியோகப்பூர்வ ட்விட்டரில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவரது தனிப்பட்ட காரணங்களுக்காக போட்டியிலிருந்து விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவருக்கு பதிலாக நியூஸிலாந்து அணிவீரர் க்ளென் பிலிப் பெயரிடப்பட்டுள்ளதாக ராஜஸ்தான் ரோயல் நிர்வாகம் அறிவித்துள்ளது.

கொவிட்-19 பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கண்டியில் நடைபெற்ற எசல பெரஹெர – நடனக் கலைஞர்கள் 45 பேருக்கு கொரேனா !

கண்டி- எசல பெரஹெரவில் கலந்துகொண்ட நடனக் கலைஞர்கள் 45 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இவர்கள் கதிர்காமத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நடனக் கலைஞர்களும் என்றும் இந்த குழுவில் 76 நடனக் கலைஞர்கள் காணப்படுகின்ற போதிலும் அவர்களுள் 45 பேருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) கண்டியில் நடைபெற்ற ரந்தோலி ஊர்வலத்தின் பின்னர், அவர்களுக்கு என்டிஜன் பரிசோதனை செய்யப்பட்டதுடன், இதில் 45 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவர்கள் உடனடியாக பெரஹெரவில் இருந்து விலக்கப்பட்டதுடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“எமது தலைவர் கருணா தூய்மையானவர்.அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. வலிந்து அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளனர்.” – சரவணமுத்து ஜெயக்குமார்

“எமது தலைவர் கருணா தூய்மையானவர்.அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. வலிந்து அவருக்கு துரோகி பட்டம் சூட்டியுள்ளனர்.” என  தமிழர் ஐக்கிய சுதந்திர முண்ணனியின் வடமாகாண தலைமை ஒருங்கிணைப்பாளர் சரவணமுத்து ஜெயக்குமார் தெரிவித்தார்.

வவுனியாவில் பிரத்தியேக இடம் ஒன்றில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

எமது கட்சி அனைத்து மக்களிற்குமானது. வன்னி மண் போரினால் பாதிக்கப்பட்ட இரத்தபூமியாக இருக்கிறது. அந்த நிலமையை மாற்றவேண்டும். எதிர்காலத்தில் வடக்கில் ஒரு தவிர்க்கமுடியாத சக்தியாக நாம் வலம் வருவோம். எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து தூய்மையானதாக இருக்கும்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக்கருத்துக்கள் இல்லை. கடந்த காலங்களிலும் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். படிப்படியாக ஏனையோரும் விடுவிக்கப்படுவார்கள். அவர்களது விடுதலை என்பது நீதிமன்றின் கைகளில் இருக்கின்றது. ஆகையால் அந்த நிலுவையில் உள்ள வழக்குகள் ஆராயப்பட்ட பின்னர் அனைவரும் விடுவிக்கப்படுவர்.

எமது தலைவர் கருணாவாலேயே 12 ஆயிரம் போராளிகள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு அன்று விடுதலை செய்யப்பட்டனர். அது அனைவரும் அறிந்ததே. எனவே அரசியல் கைதிகள் முழுவதுமாக விடுவிக்கப்படுவர் அது கண்டிப்பாக இடம்பெறும்.
எமது தலைவர் கருணா தூய்மையானவர் என்பதை தற்போது அனைவரும் புரிந்துள்ளனர்.  அவர் யாரையும் காட்டிக்கொடுக்கவில்லை. எமது தலைவனுக்கு திணிக்கப்பட்டே அந்த பட்டம் வழங்கப்பட்டது. அது தற்போது கரைந்துகொண்டு வருகின்றது. தற்போது தவறு என்ன?அது எங்கே நடந்தது என்ற விடயம் மக்களிற்கு நன்றாக தெரியும்.

அது அரசியலாக்கப்பட்டு, அரசியல் கட்சிகளிடத்தில் வேறு விடயம் இல்லாதமையால் கருணா அம்மானை துரோகியாக்கி கடந்த பத்து வருடங்களாக அரசியல் செய்தார்கள். இப்போது எமக்கான நேரம் வந்துள்ளது அதனால் நாம் களம் இறங்கியுள்ளோம். நாம் அதில் வெற்றியடைந்து மக்களின் மனதை வென்றெடுப்போம்.

தமிழ் கூட்டமைப்பை உருவாக்கியதே எமது தலைவர் தான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அதனுடன் இணைந்து செயற்படுவது தொடர்பாக எமது தலைமையே தீர்மானிக்கும். எமது மக்களுக்கு தூய்மையான அரசியலை வழங்க வேண்டும் என்பதில் எமது தலைவர்  உறுதியாக இருக்கின்றார். எனவே நாம் முன்னணி வகித்து ஒரு கூட்டமைப்பினை அமைப்பதற்கும் வாய்ப்புக்கள் இருக்கின்றது என்றார்.

ஊரடங்கு காலத்திலும் தொடரும் வாகன விபத்துக்கள் – ஹயஸ் ரக வாகனத்துடன் மோதுண்டு கிளிநொச்சியில் ஒருவர் மரணம் !

கொரோனா உயிரிழப்புக்கள் போலவே வாகனவிபத்துக்கள் மூலமான உயிரிழப்புக்களும் இலங்கையில் நாளுக்கு நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மற்ற நாட்டகளில் இடம்பெறும் வாகன விபத்துக்கள் கூட ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியன. ஆனால் ஊரடங்கு அமுலில் உள்ள நாட்களிலும் ஏற்படும் வாகனவிபத்துக்களுக்கான எந்தக்காரணமும் ஏற்றுக்கொள்ள முடியாதவை.  இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ள மோட்டார் சைக்கிள் விபத்தும் இது போன்றதுதான் .

 

ஏ-9 வீதி, கிளிநொச்சி – இரணைமடு சந்தியில் இடம்பெற்றுள்ள இந்த வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வந்த ஹயஸ் ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மழை காரணமாக வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை மீறி மோட்டார் சைக்கிளுடன் மோதுண்டு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் பலியானதுடன் மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் கொரோனா பெருந்தொற்று காலத்திலும் நடத்தப்பட்ட பூப்புனித நீராட்டு விழா – 21 பேருக்கு கொரோனா !

யாழ். நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் எம்.எஸ். லேன் பகுதியில் நடைபெற்ற பூப்புனித நீராட்டு விழாவில் கலந்துகொண்ட 21 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற இந்த விழாவில் பங்கேற்ற சிலருக்குக் கொரோனாத் தொற்று அறிகுறிகள் தென்பட்டதை யடுத்து அதில் கலந்துகொண்ட 58 பேருக்கு அன்டிஜென் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களிலேயே 21 பேருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.