August

August

ஐபிஎல் போட்டிக்காக இரண்டு இலங்கை வீரர்கள் தெரிவு !

எதிர்வரும் ஐபிஎல் போட்டிக்காக இலங்கை அணியின் இரு வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கை – இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித்தொடர் இலங்கையில் நடந்தது. குறித்த தொடரில் சிறப்பாக பிரகாசித்த இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிது ஹசரங்க மற்றும் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர ஆகியவர்களே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த இருவரையும் ரோயல் செலன்ஜர் பங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலிபான்கள் ஆட்சி தொடர்பில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள இலங்கை !

“இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது.” என வெளியுறவு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஆப்கானிஸ்தானில் வாழும் இலங்கையர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களை பாதுகாப்பாக இலங்கைக்கு மீள அழைத்து வருவதே எமது முதன்மையான கவலையாகும். ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்கள் அங்கிருந்து வெளியேற விரும்பினால், அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், இந்தியா, பாகிஸ்தான் அரசாங்கங்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு வெளிநாட்டு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள இலங்கையர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குமாறு வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கேட்டுக் கொண்டார். இந்த நோக்கத்திற்காக தேவையான அனைத்து வசதிகளையும் வழங்க இலங்கை அரசாங்கம் தயாராக உள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள மொத்தமான எண்பத்தாறு (86) இலங்கையர்களில், இதுவரை நாற்பத்தாறு (46) பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இன்றைய நிலவரப்படி, இருபது (20) இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளதுடன், வெளிநாட்டு அமைச்சு அவர்களை வெளியேற்றுவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இதற்கிடையில், இருபது (20) ஏனைய இலங்கையர்கள் ஆப்கானிஸ்தானில் தங்குவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். தலிபான்கள் பொதுமன்னிப்பு வழங்கியிருப்பதுடன், எந்த வெளிநாட்டினருக்கும் தீங்கு செய்யமாட்டோம் என உறுதியளித்துள்ளமையை தெரிவிப்பதில் இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை, அந்த உறுதிப்பாட்டை தொடர்ந்தும் மதிக்குமாறு தலிபான்களைக் கேட்டுக் கொள்கின்றது.

இஸ்லாமிய பாரம்பரியத்தைப் பின்பற்றி ஆப்கானிஸ்தானில் பெண்கள் தொழில்களில் ஈடுபடலாம் மற்றும் பெண்கள் பாடசாலைகளுக்குச் செல்லலாம் என தலிபான்கள் அளித்த உறுதிமொழிகளைக் கண்டு இலங்கை அரசாங்கம் மகிழ்ச்சியடைகின்றது.

நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று நிறுவப்படும் என தலிபான்கள் வெளியிட்ட அறிவிப்பை இலங்கை அரசாங்கம் கவனத்தில் கொள்கின்றது.

தற்போது தலிபான் ஆட்சியில் இருப்பதால், சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமையை உறுதிப்படுத்துமாறும், ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து மக்களினதும் பாதுகாப்பு மற்றும் கௌரவத்தைப் பாதுகாக்குமாறும் இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுக்கின்றது.

ஒட்டுமொத்த தெற்காசியப் பிராந்தியத்திலும் சீர்குலைக்கும் விளைவை ஏற்படுத்தக்கூடிய பாதுகாப்பான இடத்தையும், சட்டவிரோத போதைப்பொருள் வர்த்தகத்தையும் மேம்படுத்த முயலும் தீவிர மதவாதக் குழுக்களின் சாத்தியக்கூறுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவலை கொண்டுள்ளது.

அன்றாட நிலைமைகளை அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது. சார்க் உறுப்பினர் என்ற வகையில், இது சம்பந்தமாக எந்தவிதமான பிராந்திய முயற்சிகளுக்கும் உதவுவதற்கு இலங்கை தனது பங்களிப்பை வழங்கத் தயாராக உள்ளது.” எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தில் அரசுடன் சேர்ந்து  எம்.ஏ.சுமந்திரன் கூட்டுசதி செய்கிறார்.” –  காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் குற்றச்சாட்டு!

காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகமான “ஓ எம் பி (office on missing pesons) நம் தாயகத்தில் மாயமாக திரும்பவும் தோன்றுகிறது என  வவுனியாவில் கடந்த 1646 வது நாளாக போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர்கள்,

சுமந்திரன்-ஜிஎல் பீரிஸ் கலந்துரையாடலின் பிறகு, கிளிநொச்சியில் ஓ எம் பி (office on missing pesons) அலுவலகங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.  செப்டம்பர் ஐ.நா அமர்வுகளுக்கு முன்பு இந்த அலுவலகங்கள் பல இடங்களில் தோன்றுவதில் நாம் ஆச்சரியப்படக்கூடாது. இது இலங்கைக்கு ஐநா அமர்வில் அதிக கால அவகாசம் பெற சுமந்திரன் மற்றும் ஜிஎல் பீரிஸ் கூட்டின் சதியே.

சர்வதேச மனித உரிமைகள் குழு மற்றும் ஐநாவை சமாதானப்படுத்துவதற்கான சுமந்திரனின் தந்திரமே இந்த அலுவலகமாகும். 12 வருடங்கள் தமிழர்களுக்கு நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பெறுவதற்கு பொன்னான நாட்கள் இருந்தன. ஆனால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரன் மற்றும் சம்பந்தன் தமிழர்களை ஏதோ காரணத்திற்காக வெறுக்கிறார்கள். அவர்கள் தமிழர்களை பழிவாங்குகிறார்கள்.

உலகம் எங்கள் போராட்டம் மீது அதிக கவனம் செலுத்துகிறது. எமது போராட்டம் எமது மற்றைய போராட்டங்களுக்கும் புத்துயிர் கொடுப்பதை சில தமிழ் அரசியல்வாதிகளும், சிங்கள புத்தி ஜீவிகளும் விரும்பவில்லை.

காணாமல் ஆக்கப்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் அனைவரும் சர்வதேச விசாரணைக்காகவும் அரசியல் தீர்வுக்காவும்  அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் இந்தியாவின் ஈடுபாடு வேண்டும் என்பதில் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஊழல் செய்த தமிழ் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து நாம் அனைவரும் இலங்கையால் அழிக்கப்படுவதற்கு முன், எங்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் பாதுகாக்கப்பட்ட தாயகத்தை பெறவேண்டும் என்றனர்.

“ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவ பிரிட்டன் தயார் ” – பிரதமர் போரிஸ் ஜோன்சன் அறிவிப்பு !

தேவைப்பட்டால் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைப்பதற்கு உதவி செய்யப்படும் என்று பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன்  தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் அரசு வீழ்த்தப்பட்டு அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளனர். அங்கு விரைவில் என்னமாதிரியான அரசு அமைக்கப்படும் என்பதைத் தெரிவிப்போம் என்று தலிபான்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், நிச்சயமாக ஜனநாயக ஆட்சி இருக்காது ஷாரியத் சட்டத்தின்படியே ஆட்சி இருக்கும் என்பதை மட்டும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

காபூல் தாலிபான்களிடம் சிக்க காரணமே அவர்கள் தான்: பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய போரிஸ்  ஜோன்சன் - லங்காசிறி நியூஸ்

இந்நிலையில், பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

“ஆப்கன் பிரச்சினைக்குத் தீர்வு காண அரசியல் மற்றும் ராஜாங்க ரீதியாக உதவிகள் செய்ய பிரித்தானியா தயாராக இருக்கிறது. தேவைப்பட்டால் ஆட்சி அமைப்பதில் தலிபான்களுக்கு உதவி செய்வோம்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி மற்ற நாடுகளில் தஞ்சம் புக மக்கள் காட்டிய பதற்றம் சற்றே தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்புகிறது. இதுவரை ஆப்கனில் இருந்து 1615 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்களில் 399 பேர் பிரிட்டன் குடிமக்கள், 320 பேர் தூதரக ஊழியர்கள், 402 பேர் ஆப்கன் மக்கள்” என்று கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தான் மீண்டும் பயங்கரவாதத்தின் புகலிடமாக அமைந்துவிடாமல் இருப்பதை வல்லரசு நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் ஏற்கெனவே கேட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.

 

 

“நாடாளுமன்ற உறுப்பினர்களே உங்கள் சம்பளத்தில் 75 வீதத்தை நாட்டு மக்களுக்காக வழங்குங்கள்.” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கேண்டுகோள் !

முடக்கநிலையின்போது கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும், மாதாந்த சம்பளம் பெறாத குடும்பத்தினருக்கு, ஊதியத்தில் ஒரு சதவீதப் பகுதியை நன்கொடையாக வழங்கும் யோசனையொன்றை சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க முன்வைத்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த யோசனையை குறிப்பிட்டுள்ளார்.

இதில், தாம் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளத்தில் 75 வீதம், அரச மற்றும் தனியார் ஊழியர்களின் சம்பளத்தில் 50 வீதம் மற்றும் சிறு தொழிலாளர்களின் சம்பளத்தில் 30 வீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என கூறியுள்ளார்.

அத்துடன் தொற்று நிலைமையை முன்வைத்து, நாட்டு மக்களின் மன உறுதியை வீழ்த்தும் திட்டத்தை எதிர்க்கட்சிகள் செயற்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இலங்கையில் ஒரே நேரத்தில் மூன்று கொரோனா பிறழ்வுகள் – உலகில் இதுவே முதன்முறை !

கொரொனாவால் பாதிக்கப்பட்ட 88 பேரின் மாதிரிகளில், மரபணு சோதனை செய்யப்பட்ட மாதிரிகள், கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட கொரொனாவால் பாதிக்கப்பட்ட 88 பேரின் மாதிரிகளில், 84 பேருக்கு டெல்டா வைரஸ் திரிபு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என  ஸ்ரீஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவத் துறை பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதை தெரிவித்தார்.

இதன் மூலம் இலங்கையில் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 201 ஆக உயர்ந்துள்ளது.

முன்னதாக, தீவின் பல்வேறு பகுதிகளில் இருந்து 117 டெல்டா தொற்று கண்டறியப்பட்டது.

மாத்தளை, இரத்தினபுரி, நுவரெலியா, காலி, வவுனியா, மஹரகம, மாலபே மற்றும் கம்பஹாவைச் சேர்ந்தவர்களுக்கே இவ்வாறு டெல்டா தொற்றியுள்ளது.

இலங்கையில் மூன்று வகையான கொரோனா வைரஸ் பரவி வருகின்றமை சமீபத்தில் கண்டறியப்பட்டது.மேலும், மூன்று பிறழ்வுகள் ஒரே நேரத்தில் அடையாளம் காணப்படுவது உலகில் இதுவே முதல் முறை என்றும் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.

இந்த டெல்டா வகை கொழும்பு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் எதிர்காலத்தில் இது ஒரு புதிய வகையாக உருவாக வாய்ப்புள்ளது.

அவர் குறிப்பிட்டார். இந்த வகையின் மாற்றங்கள் இன்னும் ஆராயப்படுகின்றதாக குறிப்பிட்டார்.

தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

பாரிஸில் ஓகஸ்ட் 11 இல் தாயும் மகளும் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு உறவுக்கார ஆண் தான் இக்கொலையைப் புரிந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. அமைச்சர் ரிச்சட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய பெண் குழந்தை ஷாலினி ஜூட் குமார் யூலை 3இல் தீக்குழித்து தற்கொலைக்கு முயற்சித்து யூலை 15இல் தீக்காயங்கள் காரணமாக உயிரிழந்தார். கனடாவில் சுனில் சுமித்திரா வீட்டில் கணவனின் தொல்லை தாங்க முடியாமல் ஏப்ரல் பிற்பகுதியில் தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பில் மே 1, சுமித்திராவின் சினேகிதி தனோ பரதன் விரிவான பதிவு ஒன்றை பதிவிட்டு உள்ளார். மார்ச் 03 வட்டக்கட்சியில் தாய் ஒருத்தி மூன்று குழந்தைகளையும் அணைத்துக் கொண்டு கிணற்றினுள் குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார். தனது கணவர் குடித்துவிட்டு செய்கின்ற கொடுமைகள் தாங்க முடியாமையினாலேயே அவர் இந்த விபரீத முடிவுக்கு வந்தார். இச்சம்பவத்தில் மூன்று குழந்தைகளும் உயிரிழந்தனர். இவை கடந்த சில மாதங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறைகள். அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளிய சம்பவங்கள்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் 2015 ஓகஸ்ட் 09 இல் சஜிந்திகாவைக் காதலித்து அவரைத் திருமணம் செய்வதாகவும் கூறி ஏமாற்றி அவரைத் தாயுமாக்கி சஜிந்திகாவையும் ஆறு மாதக் குழந்தையையும் அடித்துக்கொலை செய்து எரித்த சம்பவம் இவ்வாண்டு ஓகஸ்ட் 07 இல் அம்பலமாகியது. குற்றவாளியான மனோராஜ் வவுனியாவில் கைதுசெய்யப்பட்டார்.

இவை நாளாந்தம் உலகெங்கும் வாழும் தமிழ் பெண்களுக்கு நிகழும் அநீதிகளில் ஒரு சில மட்டுமே. ஆனால் இந்த அநீதிகளுக்கு எதிராக தமிழ் புலம்பெயர் சூழலில் வாழும் பெண்ணிய முற்போக்கு போராளிகள் குரல்கொடுத்தது என் காதுகளுக்கு எட்டவில்லை. மேற்படி செய்திகள் தேசம்நெற் மற்றும் எனது முகநூலிகளில் பதிவாகி உள்ளது.

லண்டனில் கடந்த 30 ஆண்டுகளாக வாழும் நான் குடும்பவன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘சவுத்தோல் சிஸ்ரர்ஸ்’, ‘புரோக்கின் அரோ’ போன்ற அமைப்புகளுடன் தொடர்பை ஏற்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான இருப்பிடங்கள் கிடைப்பதற்கு வழிசெய்துள்ளேன். தொடர்ச்சியாக குடும்ப வன்முறை பற்றிய செய்திகளுக்கு எனது ஊடகங்களில் முன்னுரிமை அளித்து பிரசுரித்துள்ளேன்.

பெண்ணியம் பேசும் முற்போக்கு கோஸ்டியொன்று பெண்களுக்கு எதிரான செயற்பாடுகளுக்காக தற்போது முகநூலில் நியாயத்திற்காகப் போராடுவதாக ஒரு அறிக்கைவிட்டுள்ளது. பல்வேறுவ கையிலும் தினம் தினம் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் பெண்களுக்காக குரல் கொடுப்பவர்கள் வரவேற்கப்பட வேண்டியவர்களே. அதே சமயம் பெண்ணிய போர்வை போர்த்திக்கொண்டு பிலிம் காட்டுபவர்களும் தற்போது முகநூலில் பெருகி உள்ளனர். இவர்கள் பெண்கள் மீது நடத்தப்படுகின்ற மோசமான மேற்குறிப்பிட்ட வன்முறைகளை ஓரம்கட்டிவிட்டு, தங்களுடைய சொந்த நலன்களை அடைவதற்கு பெண்ணிய போர்வைக்குள் ஒழிந்துகொள்கின்றனர். இவர்களின் போர்வைகளை களைந்து அவர்களை அடையாளப்படுத்துவது உண்மையான பெண் ஒடுக்குமறைகளுக்கு எதிரான போராட்டங்களுக்கு செயற்பாடுகளுக்கு அவசியமானது. இதன் மூலம் மட்டுமே பாதிக்கப்பட்ட பெண்களும் அவர்களுக்காகக் குரல்கொடுக்கும் பெண்களும் சுதந்திரமாக தமது கருத்துக்களை முன்வைக்கவும் போராடவும் முடியும்.

ஆனால் இந்த முற்போக்கு பெண்ணிய போராளிகள் தற்போது கையில் எடுத்திருக்கும் விடயம் மிக அபத்தமானது. தங்களுடைய சொந்த அரசியல் நோக்கங்களுக்காக இவர்களுடன் சம்பந்தப்படாத இரு பெண்களைக் கூட அவர்கள் பந்தாட முற்பட்டுள்ளமை அவர்களது முகத்திரையை அவர்களையே அம்பலப்படுத்த வைத்துள்ளது. நான் இந்தப் பதிவை மிகவும் கனத்த உணர்வோடு எழுதுகின்றேன். ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிராக அணி திரள்வோம்’ என்ற இந்த அறிக்கையுடன் நேரடியாகவும் மறைமுகமாகவும் சம்பந்தப்பட்ட முக்கியமானவர்களை நான் நன்கு அறிவேன். என்னைப் பொறுத்தவரை உண்மைக்கு மட்டுமே முதலிடம். ஏனையவை எல்லாம் இரண்டாம் பட்சம். அது நட்பாக, உறவாக, தோழமையாக இருந்தாலும் இதுவே என் நிலைப்பாடு. கடந்த காலங்களிலும் இதையே செய்துள்ளேன்.

Sri Lanka Democracy Foorum SLDF – இலங்கை ஜனநாயக முன்னணி என்ற பெயரில் செயற்பட்ட சின்னத்துரை ராஜேஸ்குமார் – ராகவன் ரிபிசி வானொலி உடைப்பில் சம்பந்தப்பட்ட விடயத்தை அம்பலப்படுத்தியதன் மூலம் அவருக்கும் எனக்கும் இருந்த நட்பு முடிவுக்கு வந்தது. ‘ராகவன் அண்ணை’ என்றே நான் அவரை எப்போதும் அழைத்திருக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக மௌனம் காப்பது மிக ஆபத்தானது. சட்ட வல்லுனரான அவர் சட்ட நடவடிக்கையில் இறங்குவார் என்றே எதிர்பார்த்திருந்தேன். மாறாக அவர் கையெழுத்து வேட்டையில் இறங்கி தேசம்நெற்க்கு மூடு விழாச் செய்ய முற்பட்டதெல்லாம் வரலாறு. நட்புக்காக, குடும்ப உறவுக்காக, சட்ட உதவிகளுக்கு நம்பி இருந்ததால் என்று பல்வேறு காரணங்களுக்காக ‘முற்போக்கு வாதிகள்’ என்று சொல்லிக்கொண்டவர்கள் சிலர் கையெழுத்திட்டனர். இன்னும் சிலர் உள்ளடக்கம் என்னவென்று தெரியாமலேயே பெயரைக் கொடுத்தனர். இப்படி இந்தக் கையெழுத்து வேட்டையில் பெயரைக் கொடுத்த ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம் இருந்தது.

இப்போது வந்துள்ள சுரண்டல்களுக்கு எதிராக அணிதிரண்ட கோஸ்டியலுக்கும் இப்படிக் காரணங்கள் இருக்கும். சிலர் தம்பதி சமேதர்களாகவும் பேரைக் கொடுத்து இருக்கிறார்கள். கட்டியாச்சு உதோட இத்தினை வருசமாய் குப்பை கொட்டுறம். இனி என்ன ஒரு கையெழுத்தையும் போடுவம் என்று பேரைக் கொடுத்தவையும் இருப்பினம். அதனால் உமா ஷனிக்கா வின் முகநூல் போராட்டத்தின் பின்னணி பற்றி ஒரு பதிவு அவசியமாகின்றது.

அதற்கு முன் இப்பதிவு உண்மையில் ‘முற்போக்கு முகமூடிகளுடன் பெண்கள் மீது செய்யப்படும் சுரண்டல்களுக்கு எதிரான…’ பதிவு அல்ல என்பதை நீங்கள் மேலுள்ள குறிப்பின் மூலமாக அறிந்திருப்பீர்கள். சிலவேளை அவர்கள் தங்கள் செயற்பாடுகளை தாங்களே சுயவிமர்சனம் செய்யும் வகையில் தலைப்பிட்டு இருந்தால் அத்தலைப்பு மிகச் சரியானது.

இந்த அறிக்கை தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் யூலை 17இல் திருமணம் செய்து கொண்டதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையே அல்ல. இந்த அறிக்கையின் பின்னுள்ள உண்மை நோக்கத்திற்கும் அவ்வுறுப்பினரின்ரின் முன்னாள் காதலிக்கும் இந்நாள் மனைவிக்கும் சம்பந்தம் கிடையாது. அவ்வுறுப்பினரும் அவருடன் சம்பந்தப்பட்ட உறவும் ஒரு weakest link என்பதால் அவர்களுடைய strategyக்கு அது வாய்ப்பாக அமைந்தது அவ்வளவுதான். தன்னையும் தாங்கள் சார்ந்தவர்களது பெயர்களையும் அடிபடவிடாமல் பாதுகாத்துக்கொண்டு எவ்வித சம்பந்தமும் இல்லாத தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரையும் அவர் தொடர்புபட்ட உறவுகளையும் வைத்து இப்பந்தாடல் இடம்பெற்றிருக்கின்றது.

தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் நீண்டகாலமாக ஒரு பெண்ணை காதலித்தார். இது உலகறிந்த உண்மை. அந்த உறவைத் தொடர முடியவில்லை. அதனால் அவ்வுறவு முறிந்தது. அதுவும் உலகறிந்த உண்மை. அதற்குப் பின் தனக்கு பிடித்த ஒருவரைச் சந்தித்தார். இரு மனம் இணைந்தது. யூலை 17இல் மணவாழ்க்கையில் அவர்கள் இணைந்தனர். இதுவும் உலகறிந்த உண்மை. அதற்கு மேல் 20 பெண்ணிய போராளிகள் கையெழுத்திட்ட அறிகையில் உள்ள சோடிப்புகள் விவாகரத்து வழக்குகளில் இரு தரப்பு சட்டத்தரணிகளும் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களை உசுப்பிவிட்டு பணம் கறக்கின்ற வேலை. இந்த விவாகரத்துச் சட்டத்தரணிகள் (பெரும்பாலானவர்கள்) போன்ற கேடிகளை வேறெந்த தொழில்துறையிலும் காண முடியாது. அதே போல் தான் இந்த அறிக்கையின் பிதாமகர்கள்.

இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்களுக்கு மிக நெருக்கமானவர்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டு இருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் தங்களைச் சுற்றி நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி அறிந்திருந்தனர். இந்த அறிக்கையில் கையெழுத்திட்டவர்கள் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்தவர்களுடன் நெருங்கிய அரசியல் உறவையும் கொண்டிருந்தனர்.

இலங்கையில் இருந்து கையெழுத்திட்ட மோகனதர்ஷனியின் கட்சியுடன் சம்பந்தப்பட்ட ஒருவரின் மகன் திருமணம் செய்த தனது மனைவியை மிகக் கொடூரமான முறையில், தலைகீழாக தொங்கவிட்டு சித்திரவதை செய்தவர். அப்பெண்ணின் சொத்துக்களை எல்லாம் சுரண்டிக் கொண்டவர். தற்போது பாதிக்கப்பட்ட பெண் விவாகரத்து பெற்றுச் செல்ல அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்து வாழ்கின்றான். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இவ்வாண்டு ஏப்ரல் சுமித்திரா சுனில் கணவனின் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். தீப்பொறி குழவினருக்கு – ரகுமான் ஜான் உட்பட இந்த விடயம் தெரியாதா? சுனில், தீப்பொறிக்கு குழுவின் உறுப்பினர்களுக்கு மிக வேண்டப்பட்டவர். இன்றும் தொடர்பில் உள்ளனர். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

தீப்பொறிக் குழவினர் சம்பந்தப்பட்ட, கூட்டுப் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டு பற்றி சம்பந்தப்பட்டவர்கள் ஏன் மௌனமாக உள்ளனர். அவ்வாறானதொரு சம்பவமே இடம்பெறவில்லை என்று வாதிட்டார்கள். பின்னர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தான் சம்பந்தப்படவில்லை என்று ஒருவர் எழுதி வாங்கியுள்ளார். ‘Men Can Stop Rape’ என்று முகநூல் முகப்பில் பதிவிடும் உமா செனிக்கா இந்த விடயத்திற்கும் ஒரு கையெழுத்துப் போராட்டம் நடத்தவில்லை. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இதற்கு மட்டுமா மௌனமாக இருந்தனர். 13 வயது மலையகச் சிறுமியை பல தடவை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய பொங்கு தமிழ் கணேசலிங்கம் இன்றும் வவுனியா வளாகத்தில் விரிவுரையாளராக உள்ளார். இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். மேலதிக தகவல்கள் தேவைப்படின் இராஜேஸ் பாலா வை கேளுங்கள். சிலவேளை அவர் உங்கள் ‘முற்போக்கு’ வரைவிலக்கணத்தினுள் வரமாட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர்ச்சியாக பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்தி வரும் விரிவுரையாளர்கள் இளங்குமரன், விசாகரூபன் பற்றி இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர். இது தொடர்பாக மேலதிக விபரங்கள் எனது ‘யாழ் பல்கலைக்காகழகம் ஒரு பார்வை’ என்ற நூலில் உள்ளது. இது பற்றி மேலதிக விபரங்கள் தேவையானால் அல்லது தமிழ் சமூகத்தில் உள்ள ‘womanizers’ பற்றி மேலதிக விபரங்கள் தேவையானள் அவுஸ்திரேலியா மற்றும் சர்வதேச புலனாய்வுப் புயல் அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள் முழுவிபரமும் finger tipsஇல் வைத்திருப்பார். மேலும் நீங்கள் moral policing செய்வதாக இருந்தால் ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுடன் உறவு பற்றி அருண் அம்பலவாணரிடம் கேளுங்கள். இதில் கையெழுத்திட்டவர்களுடைய விபரங்களும் கூட அவரிடம் இருக்க வாய்ப்புள்ளது.

மட்டக்களப்பு ஜெயில் உடைக்கும் போது கூட தம்பி பிரபாகரனின் ஆட்கள் வந்தால் தான் வெளியில வருவன் என்று அடம்பிடித்த நிர்மலா ராஜசிங்கம், சொலிடாரிட்டி உறுப்பினரை ஒரு பிடி பிடித்திருக்கின்றா. சொலிடாரிட்டி உறுப்பினர் அயோக்கியனாம். நிர்மலா ராஜசிங்கத்தின் அரசியல் அயோக்கியத்தனங்களை ‘பூரணி பெண்கள் அமைப்பு பற்றிய அவணப்படுத்தலில் இருந்து …’ இன்னொரு சந்தர்ப்பத்தில் பட்டியலிடுவோம்.

இதைவிடவும் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்த கருணா, பிள்ளையான் குழுவினர் பல்வேறு பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டு இருந்தமை சர்வதேச உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த முற்போக்காளர்கள் மௌனமாகவே இருந்தனர்.

இப்படியெல்லாம் இருக்கும் போது எவ்வித பாலியல் சுரண்டலும் அற்ற தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினரின் உறவு முறிவு மற்றும் புதிய உறவு விடயத்தில் இந்த முற்போக்கு பெண்ணிய வாதிகள் இவ்வளவு முக்க என்ன காரணம்? “பத்து பிள்ளைகள் பெற்றவளுக்கு ஒற்றைப் பிள்ளை பெற்றவள் முக்கிக்காட்டிய கதை போல்” என்பர். இப்பழமொழி ஆணாதிக்கப் பழமொழியா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது. ஆனால் இவர்கள் தாங்களும் பெண்ணிய வாதிகள் என்று காட்ட முக்குவது நகைச்சுவையாகவே உள்ளது.

இந்த அறிக்கையின் பின்னணி:

என் மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் போராட்டங்களின் பின்னரே இந்தப் பின்னியைப் பதிவு செய்கின்றேன். இதில் மீண்டும் உண்மைக்கு முதலிடம் அளிக்க வேண்டும் என்ற முடிவுடனேயே இப்பதிவு. இப்பதிவைத் தொடர்ந்து என் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சேறடிப்புகள் இடம்பெறும் என்பதை மிகத் தெளிவாக அறிவேன். இது எதுவும் எனக்கு புதிதும் அல்ல. என் எழுத்துக்களால் அம்பலப்படுத்தப்பட்ட ஈழபதீஸ்வரர் ஆலய தர்மகர்த்தா ஆர் ஜெயதேவன், எஸ்எல்டிஎவ் சட்ட வல்லுனர் ராகவன், இந்திய உளவுநிறுவன முகவர் வெற்றிச்செல்வன், ரில்கோ புரப்பட்டி சேர்விஸ் உரிமையாளர் திலகராஜா, தீபம் தொலைக்காட்சி உரிமையாளர் பத்மநாதன் என இந்தப் பட்டியல் மிக நீளமானது. எனக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளுக்கும் குறைவில்லை. த ஜெயபாலன் ஒரு பொய்யன், முட்டாள், பொம்பிளைப் பொறுக்கி, துரோகி, கைக்கூலி, அரசாங்கத்தின் ஏஜென்ட், காட்டிக் கொடுத்தவன், ஏமாற்றுக் காரன், ஆணாதிக்கவாதி, பூஸ்சுவா என்றெல்லாம் குற்றச்சாட்டுகள் பொலியப்படும். ஆனால் சேற்றுக்குள் இறங்காமல் நாற்றுநட முடியுமா? ஒரு ஊடகவியலாளனாக களைகளைப் பிடுங்கி நாற்று நட வேண்டியது என்னுடைய பொறுப்பு.

பாவம் அந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர். அவருடைய முன்னாள் காதலி. இவர்களைவிடவும் பாவம் தற்போது அவரை மணந்து கொண்டவர். லேட்டஸ்ட் முற்போக்கு மொழியில் சொல்வதானால் ‘இணையர்’. நாங்கள் செயலில் தெளிவில்லாவிட்டாலும் மொழியில் தெளிவாய் இருப்பம் இல்ல.

பாடசாலைகளில் bullyingஇல் பாதிக்கப்படுவது strong ஆனவர்கள் அல்ல. Weak ஆனவர்கள் தானே. இந்த தமிழ் சொலிடாரிட்டி உறுப்பினர் இந்த ‘முற்போக்கு’ உலகிற்கு புதியவர். ஒரு புலி ஆதரவாளராக இருந்தவர். அவருடைய முறிந்த உறவு இலங்கையில். புதிய உறவும் weakest link. இவர்களை முற்போக்கு பெண்ணிய போராளிகள் தங்கள் strategical taget ஆக்கியுள்ளனர். இதற்கு அவ்வுறுப்பினரின் இணையின் பெயரைக் குறிப்பிட்டு ‘இப்ப இவரை யார் வைத்திருக்கிறார்கள்?’ என்று fake ID இல் வந்து comment அடிக்கிறார் ஒருவர். இதையெல்லாம் தெரிந்துகொண்டு தான் இந்த முற்போக்குப் புயல்கள் இரு அப்பாவிப் பெண்களின் தலையை பந்தாடுகின்றனர்.

மீண்டும் விடயத்திற்கு வருவோம். இதில் கையெழுத்திட்டுள்ள ராகுல் சந்திரா வேறு யாருமல்ல. ரகுமான் ஜான். இந்த அறிக்கைக்கும் பெண்கள் மீதான சுரண்டலுக்கும் மிக நெருக்கமான சம்பந்தம் உள்ளது. சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாவிப் பெண்களின் தலைகள் உருட்டப்படுகிறது. இதனை வெறும் தனிநபர் பிரச்சினையாகவும் பார்த்துவிட முடியாது. ஏனெனில் சம்மந்தப்பட்டவர்கள் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் இயங்கு சக்தியாகவும் இருப்பதால் அறிக்கையின் குற்றச்சாட்டு தமிழ் சொலிடாரிட்டிக்கு எதிராகவும் வைக்கப்பட்டு இருப்பதால் இதனை விரிந்த தளத்தில் நோக்க வேண்டியுள்ளது.

அண்மைக்காலம் வரை ரகுமான் ஜானில் எனக்கு மிகுந்த மரியாதை இருந்தது. அவர் என்னுடைய நண்பனாகவும் ஏதோ நான் இன்று எழுதுகின்ற இந்த கொஞ்ச அரசியல் விளக்கம் கூட அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டது தான். எனக்கு அரசியல் பூஜ்ஜியம் என்று நீங்கள் முணுமுணுப்பதில் எனக்கு பூரண உடன்பாடு உண்டு. ஆனால் உண்மையை மறைப்பதில் எனக்கு துளியும் உடன்பாடு கிடையாது. ரகுமான் ஜான் திரைமறைவில் இருந்து இதனைச் செய்வதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இன்னொருவர் மீது குற்றச்சாட்டை பொது வெளியில் வைக்கின்ற போது அக்குற்றச்சாட்டு உண்மையானால் அதனை உங்களுடைய சொந்த அடையாளங்களுடன் வைக்க வேண்டும். இல்லையேல் ‘கம்’ என்று இருக்க வேண்டும்.

இப்பொழுது நீங்கள் பந்தாடுகின்ற இப்பெண்கள், இன்றோ இன்னுமொரு நாளோ மனநிலை பாதிக்கப்பட்டு அவர்களுக்கு ஏதும் நடந்தால் நீங்கள் பொறுப்புடையவர்கள். தீப்பொறி உறுப்பினரொருவரால் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டதாகச் சொல்லப்பட்ட பெண், பல ஆண்டுகளுக்குப் பின்னர் வெளிநாடு வந்து திருமணமாகி குழந்தைகளும் பிறந்த பின்னரே மனப்பிறள்வு ஏற்பட்டு மரணமானார். மனநலப் பாதிப்பு என்பது கொரோனா போல் தொற்று ஏற்பட்டு பத்து நாட்களிலோ இரு வாரங்களிலே வந்து ஆட்டிப்படைப்பதில்லை. அது வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களின் விளைவாக எப்போதும் வரலாம். எப்போதும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். உடைந்துபோகும் மனநிலையில் இருக்கும் இரு vulnerable பெண்கள் அவர்களை அறியாமலேயே ஆட்டத்திற்குள் திட்டமிட்டு இழுத்துவிடப்பட்டு உள்ளனர். அவர்கள் பாதிக்கப்பட்டால் அந்தப் பழியயையும் பாவம் அவ்வுறுப்பினரின் தலையில் கட்டலாம் என்பது உங்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும்.

ஊமா செனிகாவின் முகநூலில் நிரோஜன் ஞானசீலன் சுட்டிக்காட்டியது போல் இந்த அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கும் குற்றம்சாட்டியவர்களுக்கும் இடையே நீண்ட கால பகையும் உறவு இருந்து வந்தது என்பது உண்மையே. குற்றச்சாட்டப்பட்டவர் பல்வேறு அமைப்புகளில் சம்பந்தப்பட்டவராக இருந்தாலும் தமிழ் சொலிடாரிட்டியே தாக்குதல் இலக்காக அமைந்தது. அதற்கு முக்கிய காரணம் குற்றத்தை முன்வைத்தவர்களுக்கு அவ்வமைப்பு சார்ந்தவர்களுடன் இருந்த தனிப்பட்ட பகைமையே. இதற்கும் பெண்ணியத்திற்கும் முடிச்சுப் போட்டது முளங்காலுக்கும் மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போட்டதைப் போன்றது.

தமிழ் சொலிடாரிட்டி அரசியல் பற்றி நான் அதிகம் அக்கறைகொள்வதில்லை. ஏதோ நாலு நல்லது செய்கிறார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. எனக்கு அரசியலே இல்லை என்பது அவர்களுடைய கணிப்பு. நான் தத்துவஞானி கோக்கிரட்டீஸ் போல ‘ எனக்கு ஒன்றும் தெரியாது என்பது எனக்கு நன்கு தெரியும்’.

இதற்குள் கொரோனா வந்து லொக்டவுன் எல்லோரையும் வீட்டிற்குள் முடக்கிவிட்டது உங்களுக்கே தெரியும். மன உளைச்சல் கூடி பலரும் பாதிப்புக்கு உள்ளாகிவிட்டனர். அதற்குள் அவ்வுறுப்பினர் பொது அழைப்பு ஒன்றை விடுத்துவிட்டு தனது திருமணத்தை செய்துவிட்டார். இவர் ஐயரைக் கூப்பிடாவிட்டாலும் இது கனன்றுகொண்டு இருந்த ஓமத்தில் ஐயர் நெய்யூற்றியது போல் ஆக்கிவிட்டது. நாள் நட்சத்திரம் பாராமல் ஐயர் இல்லாமல் செய்த திருமணம் எல்லோ அது தான் ஏழரை ஆட்டுது. பாவம் அவர்.

முற்போக்கு ஜீவன்களே உங்களுக்கு என் தாழ்மையான வேண்டுகோள் என்னவென்றால் யாராவது எதையாவது நீட்டினால் வாசித்து தீர விசாரித்து உங்கள் பெயரைக் கொடுங்கள். தேவையில்லாமல் உங்கள் பெயரைக்கெடுத்துக் கொள்ளாதீர்கள். உங்கள் இணையர்கள் பெயரைக் கொடுத்துவிட்டார்கள் என்பதற்காக நீங்களும் உடன்கட்டை ஏறாதீர்கள்.

எவ்வறிக்கை யார் யாரிடம் இருந்து வரினும்
அவ்வறிக்கையின் மெய்ப்பொருள் கண்டு கையெழுத்திடுக.

“நாட்டை நீண்ட காலத்துக்கு மூடிவைக்கும் நிலையேற்படலாம். தயாராகுங்கள்.” – – மக்களுக்கான உரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ !

ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்களை முன்னெடுக்க இது சரியான நேரமில்லை 30 வயதிற்கு மேற்பட்ட 43 வீதமானவர்களுக்கு தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற நாட்டு மக்களுக்கான ஜனாதிபதியின் விஷேட உரையின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரே வழி தடுப்பூசி ஏற்றுவதேயாகும் என்று, உலக சுகாதார ஸ்தாபனம், வைத்திய நிபுணர்கள் மற்றும் உலகத் தரம்வாய்ந்த வேலைத்திட்டத்தினூடாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் தான், இலங்கைக்குத் தடுப்பூசிகளைக் கொண்டுவருவதற்காக, கடந்த காலங்களில் நான் விசேட ஆர்வம் காட்டியிருந்தேன். சீனா, இந்தியா போன்ற நாடுகளின் தலைவர்களுடன், இது தொடர்பில் தனிப்பட்ட ரீதியில் உரையாடினேன். மேலும் பல நாடுகளின் அரச தலைவர்களுக்கு, நான் தனிப்பட்ட ரீதியில் கடிதங்களை அனுப்பினேன். தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் நாடுகளுடன், நமது நாட்டு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாகவும் தூதுவர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்கள் ஊடாகவும் கலந்துரையாடினோம். தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களை, எமது அதிகாரிகள் நேரடியாகத் தொடர்புகொண்டனர்.

எமது நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி ஏற்ற வேண்டுமென்ற என்னுடைய தேவையின் காரணமாகவே, இந்த அனைத்துவித முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
இந்த முயற்சிகளின் பலனாகவே, தற்போது ஒவ்வொரு மாதமும், எமக்குத் தேவையான தடுப்பூசிகள், பாரியளவில் கிடைத்துக்கொண்டு இருக்கின்றன.

எமக்கு முதன் முதலாக, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசியே கிடைக்கப்பெற்றது.  அதன் பின்னர், சீனா உற்பத்தி செய்த சினோஃபாம் தடுப்பூசி எமக்குக் கிடைக்கப்பெற்றாலும், அந்தத் தடுப்பூசிக்கு, தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் (NMRA) அனுமதி கிடைக்கப்பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, பொதுமக்களுக்கு அந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொடுக்கும் பணி, சுமார் ஒரு மாதகாலம் தாமதமானது. எவ்வாறெனினும், இவ்வாண்டு மே மாதம் 8ஆம் திகதி முதல், சினோஃபாம் தடுப்பூசி ஏற்றும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. தவிர, அமெரிக்காவிடம் இருந்து ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகளும் ஜப்பானிலிருந்து அஸ்ட்ரா செனெக்கா தடுப்பூசிகளும், ரஷ்யாவிலிருந்து ஸ்பூட்னிக் தடுப்பூசிகளும் எமக்குக் கிடைக்கப்பெற்றுள்ளதால், தடுப்பூசி ஏற்றும் நாடுகளின் பட்டியலில், நாம் உயர்ந்த இடத்தில் இருக்கிறோம். இம்மாதம் 19ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள், ஒரு கோடியே இருபது இலட்சத்து பத்தொன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று மூன்று (12,019,193) பேருக்கு, முதலாவது அலகு தடுப்பூசியை வழங்கியுள்ளோம்.

அதேவேளை, ஐம்பத்து ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரத்து நூற்று எண்பத்தைந்து (5,124,185) பேருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்கியுள்ளோம். தவிர, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்காக, மேலும் சுமார் மூன்று மில்லியன் தடுப்பூசிகள், கைவசம் எம்மிடம் இருக்கின்றன. இன்னும் மேலதிகமாக மூன்று மில்லியன் தடுப்பூசிகள், இம்மாத இறுதியில் கிடைக்கவுள்ளன.

இது வரையில், 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் 98 சதவீதமானோருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதோடு, அவர்களில் 43 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியும் ஏற்றப்பட்டுள்ளது. ஓகஸ்ட் 31ஆம் திகதிக்குள், 81 சதவீதத்துக்கும் மேற்பட்டோருக்கு, இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்குவதற்கான இயலுமையும் உள்ளது. செப்டெம்பர் 10ஆம் திகதிக்குள், 100 சதவீதமானோருக்கு இரண்டாம் அலகுத் தடுப்பூசியை வழங்க முடியும்.

அந்த நிலைமையுடன், தொற்றுக்குள்ளாகும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதனால் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் குறைவடையும். நாட்டிலுள்ள முன்வரிசைச் சுகாதார ஊழியர்கள், துறைமுகம் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவையாளர்கள், பாதுகாப்புத் தரப்பினர், தொழிற்சாலைகளின் ஊழியர்களுக்கு, முன்னுரிமை அடிப்படையில் நாம் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கூட, முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி ஏற்றியுள்ளோம். இதற்கு மேலதிகமாக, 30 வயதுக்குக் குறைந்த சுமார் ஒரு மில்லியன் தொழிற்சாலை ஊழியர்களுக்கும் தடுப்பூசி பெற்றுக் கொடுத்திருக்கிறோம்.

நாடு முழுவதிலும் மகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகளை விதித்தல், கிராம சேவகர் பிரிவுகளைத் தனிமைப்படுத்தல், ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்தல், அரச சேவையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைத்தல், திருமணம் உள்ளிட்ட நிகழ்வுகளைத் தடுத்தல், சில வர்த்தக நடவடிக்கைகளை மூடிவிடல், மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்தை நிறுத்துதல், மதஸ்தலங்களில் பொதுமக்கள் கூடுவதைத் தடுத்தல் போன்ற கட்டுப்பாட்டு முறைமைகளைத் தொடர்ந்தும் நாம் அமுல்படுத்தி வருகின்றோம்.

கொவிட் 19 தொற்றுப் பரவல் முதலாம் அலையின் போது நாம் முன்னெடுத்த நடவடிக்கைகள் காரணமாக, அதனை வெற்றிகரமாக முறியடிக்க எம்மால் முடிந்தது. அப்போதைய சந்தர்ப்பத்தில், அது தவிர வேறு வழிகள் இருக்காத பட்சத்திலேயே, அவ்வாறான தீர்க்கமானதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டி ஏற்பட்டது.

அதனால், நாட்டை சில மாதங்களுக்கு முழுமையாக மூட நேர்ந்தது. அவ்வாறான நடவடிக்கைகள் மூலம், முதலாவது அலையைக் கட்டுப்படுத்த முடிந்தது.
நாட்டை நாம் அடிக்கடி மூட நடவடிக்கை எடுத்திருந்தாலும், அதனால் ஏற்பட்ட பக்க விளைவுகளையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். கொரோனா முதலாவது அலை ஏற்பட்ட காலப்பகுதியானது, இந்நாடு சுதந்திரம் அடைந்ததற்குப் பின்னர் மிகக் குறைந்த பொருளாதார வளர்ச்சியைக் காண்பித்த காலப்பகுதியாகும்.

விசேடமாக, இலங்கைக்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாக ஈட்டித்தந்த ஆடைத் தொழிற்றுறையானது, இதனால் மிகப்பெரிய நட்டத்தை எதிர்கொண்டது. அவர்களுக்கான ஏற்றுமதிக் கட்டளைகள் நிறுத்தப்பட்டன. இதனால், பலருக்கு வேலைவாய்ப்பு இல்லாமல் போனது. ஏற்றுமதி வருமானம் இழக்கப்பட்டது.

4.5 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை வருமானமாகக் கொண்டிருந்த சுமார் 3 மில்லியன் மக்களின் வாழ்வாதாரத்துக்கு வழிவகுத்த சுற்றுலாத்துறையும் முழுமையாக ஸ்தம்பித்தது. இலட்சக்கணக்கான வேலைவாய்ப்புகள் இதனால் இழக்கப்பட்டன. அடிக்கடி முன்னெடுக்கப்பட்ட நாட்டை முடக்கும் செயற்பாடுகள் காரணமாக, நிர்மாணத்துறைத் தொழிற்றுறைகளுக்கும் பாரிய அடி விழுந்தது. அவர்களுக்குத் தேவையானளவில் ஊழியர்களை வரவழைத்து வேலைகளை முன்னெடுக்க முடியாமல் போனது. தேவையான சந்தர்ப்பத்தில், மூலப்பொருட்களைத் தருவித்துக்கொள்ள முடியாமல் போனது. இந்தத் துறைக்காக நாம் எதிர்பார்த்திருந்த தேசிய மற்றும் சர்வதேச முதலீடுகள் அனைத்தும், கடந்த சுமார் ஒன்றரை வருடக் காலப்பகுதியில் இழக்க நேரிட்டது.

எமது தேசிய பொருளாதாரத்துக்கு மேலுமொரு உந்துசக்தியாக, சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நடவடிக்கைகள் காணப்படுகின்றன. 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களும், இந்தக் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து இந்த வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாமல் தடைகள் ஏற்படுத்தப்பட்ட காரணத்தால், அந்த நிறுவனங்களுக்கான வருமானங்கள் இழக்கப்பட்டு, அவற்றை நடத்துவதற்காக எடுக்கப்பட்ட கடன்களையும் ஊழியர்களுக்கான ஊதியத்தையும் வழங்க முடியாமல், பாரிய பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டது. லீஸிங் முறைமையில் வாகனங்களைக் கொள்வனவு செய்தவர்களால் அதனைச் செலுத்த முடியாமல் போனது. வீட்டுக் கடன் பெற்றவர்களால், அதனையும் திருப்பிச் செலுத்த முடியாமல் போனது.

இவை தவிர, 4.5 மில்லியனுக்கும் அதிகமான சுய தொழில்கள் மற்றும் நாளாந்தம் வருமானத்தைப் பெறுவோரின் வருமான வழிகள் என்பன முழுமையாக இல்லாமல் போயின. இதனால், அவர்களது வாழ்க்கை நிர்க்கதி நிலைமைக்குத் தள்ளப்பட்டது. இந்த அனைத்துவிதத் தடைகளுக்கு மத்தியிலும், மக்களை வாழ வைப்பதற்கான பொறுப்பு எமக்கு இருந்தது. அந்தப் பொறுப்பை நாம் தட்டிக்கழிக்கவில்லை.

கொரோனா காரணமாக நாட்டை முடக்கிய ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், நாளாந்த வருமானத்தை இழந்து நிர்க்கதிக்கு ஆளான மக்களுக்கு, 5,000 ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்குவதற்காக, ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் 30 பில்லியன் ரூபாயைச் செலவிட்டிருக்கிறோம். இதுவரையில், பல தடவைகள் இந்தச் செலவை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கிறது.

அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களின் செலவுகளுக்கு மேலதிகமாக, தத்ததமது வீடுகளில் தனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்கு, இரண்டு வாரக் காலத்துக்குத் தேவையான சுமார் 10,000 ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொதிகளை வழங்கி வருகிறோம். இவ்வாறான இக்கட்டான சூழ்நிலைகளுக்கு மத்தியிலும், 1.4 மில்லியனாகக் காணப்படும் அரச ஊழியர்களுக்கான ஊதியத்தைக் குறைக்கவோ கொடுப்பனவுகளைக் கழிக்கவோ இல்லை.

எமக்கான அந்நியச் செலாவணி வருமானம் குறைந்த போதிலும், கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்த அரசாங்கம் தவறவில்லை. கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் எடுக்கப்பட்டிருந்த கடன்கள் காரணமாக, வருடமொன்றுக்கு நாம், 4 பில்லியன் அமெரிக்க டொலர்களைக் கடன் தவணையாகச் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றோம். அவற்றை, உரிய காலத்தில் செலுத்தியும் வருகின்றோம்.

நாட்டை மீண்டும் ஒரு முறை முற்றாக முடக்கினால், இந்நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும். அது, இந்த நாடு பொறுத்துக்கொள்ளக்கூடிய சூழ்நிலை அல்ல. விசேடமாக, ஏற்றுமதித் தொழிற்றுறையில் ஈடுபட்டிருக்கும் ஆடைத் தொழிற்றுறைக்கு, பாரியளவு ஏற்றுமதிக் கட்டளைகள் கிடைத்துள்ளன. அந்தக் கட்டளைகளை உரிய நேர காலத்துக்கு வழங்க முடியாது போனால், பாரியளவு அந்நியச் செலாவணியை நாம் இழங்க வேண்டிய ஏற்படும்.

அதேபோன்று, வீழ்ச்சியடைந்துள்ள சுற்றுலாத்துறையைக் கட்டியெழுப்பவும் நாம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இப்போதைய நிலைமையில், நாளாந்தம் சுமார் 200 சுற்றுலாப் பயணிகள், நாட்டுக்கு வருகை தரும் நிலைமை உருவாகியுள்ளது. நாட்டை முடக்கினால், சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதை, மீண்டும் முதலில் இருந்தே ஆரம்பிக்க வேண்டி ஏற்படும்.

அதேபோன்று, நாளாந்த வருமானம் பெறுவோர், சிறு மற்றும் மத்தியதர வர்த்தக நடவடிக்கைகள், நிறுவனங்கள் போன்றவற்றுக்கு, நாட்டை மூடுவதால் வழங்க வேண்டிய நிவாரணங்களை வழங்குவதிலும், நாட்டின் தற்போதைய பொருளாதாரச் சூழ்நிலை காரணமாகச் சிக்கல் ஏற்படும்.

இந்த நாட்டை முழுமையாக மூடுவதால் ஏற்படக்கூடிய விளைவுகள் தொடர்பில் பொதுமக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று இந்த உலகில் காணப்படும் ஒரு சில நாடுகளைத் தவிர்ந்த, பொருளாதார ரீதியாக வல்லரசுகளாக இருக்கும் நாடுகள் கூட, நாட்டைத் திறந்தே வைத்திருக்கின்றன.

உலகின் சுற்றுலாத்துறை, படிப்படையாக வழமைக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறது. நாடுகளைத் திறந்து வைத்திருக்கும் அரசாங்கங்கள், இந்தச் சந்தர்ப்பத்தைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றன. சிறிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் எமது நாடும், இந்தச் சந்தர்ப்பத்தைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதை விடுத்து, மீண்டும் இந்த நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாகச் சரிவடையச் செய்யும் நிலைமைக்குச் செல்ல முடியாது.

இது, மாற்றுக் கருத்தாளர்கள், தொழிற்சங்கங்கள், வைத்தியர்கள், ஏனைய சுகாதார ஊழியர்களுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் இடம்பெறும் போட்டியோ மோதலோ அல்ல. நாம் யதார்த்தத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். இது, இந்த முழு உலகமும் எதிர்கொண்டுள்ள தீவிரமான பிரச்சினையாகும். இன்று ஒவ்வொரு நாடும், புதிய பொதுமைப்படுத்தல் முறைமையை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் என்ற ரீதியில் நாம் எடுக்க வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் சரியாக எடுத்துக்கொண்டிருக்கிறோம்.

ஒட்சிசன் விநியோகம், இடைநிலை சிகிச்சை நிலையங்களை உருவாக்கல் மற்றும் தடுப்பூசி ஏற்றல் போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் செய்கின்ற போதிலும், நோயாளிகளை நிர்வகிப்பதென்பது, மருத்துவர்களின் பொறுப்பில் இருக்கின்றது. அதேபோன்று, இதுவரை காலமும் தமது உயிர்களைப் பணயம் வைத்துச் செயற்பட்டு வரும் வைத்தியர்கள், தாதியர்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரச் சேவை ஊழியர்களதும் சேவையை, நான் மனதாரப் பாராட்டுகின்றேன். அத்துடன், தங்களுடைய உயிர்களைத் தியாகம் செய்துள்ள சுகாதாரத் துறையின் அனைத்துத் தரநிலை அதிகாரிகளுக்கும், நான் எனது மரியாதையைச் செலுத்துகின்றேன்.

இது, வேலைநிறுத்தம், போராட்டங்களுக்கான காலம் அல்லவென்பது தெளிவாகிறது. நாட்டை அராஜக நிலைமைக்குக் கொண்டுவரத் தயாராகாதீர்கள். “

சுகாதாரத் துறையானது இப்பிரச்சினையை ஒரு கோணத்தில் மாத்திரம் பார்க்கின்ற போதிலும், அரசாங்கம் என்ற ரீதியில் நாம், வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்தல், ஊதியம் வழங்கல், நிவாரணங்களைப் பெற்றுக்கொடுத்தல் போன்ற நடவடிக்கைகளை ஒரு குறையும் இல்லாமல் மேற்கொள்ள வேண்டும். அதற்காக, நமது நாட்டின் சிறு பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்யவேண்டி ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் அதிகமானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிலும் பலர், நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் ஆவர். அதேபோன்று, தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாதவர்களாகவும் காணப்படுகின்றனர். இவ்வாறான நாட்பட்ட நோய்களுக்கு ஆளாகியுள்ளவர்கள், கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவுடன், உரிய மருத்துவச் சிகிச்சைகளுக்கு உள்ளாக வேண்டும். அத்துடன், இவ்வாறான நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளோரை, வாரத்துக்கு ஒரு முறையேனும் அன்டிஜன்ட் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு, சுகாதாரத் துறையினருக்கு நான் ஆலோசனை வழங்கியுள்ளேன்.

இனிவரும் நாட்களில், இந்நாட்டை நீண்ட காலத்துக்கு மூடி வைக்க வேண்டிய நிலைமை ஏற்படுமாயின், நாட்டிலுள்ள அனைவரும், மிகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதற்குத் தயாராக வேண்டுமென்று நான் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறான முக்கியமான தருணத்தில், நாட்டிலுள்ள அனைத்துத் தரப்பினரும், இந்தத் தீர்மானமிக்க நிலைமையைப் புரிந்துகொண்டு, திட்டமிட்ட முறையில் நாட்டை முன்னோக்கிக் கொண்டுசெல்ல வேண்டும். அதனால், ஒரு குழுவாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தோற்கடிப்பதற்கு ஒன்றிணைந்துப் பணியாற்ற முன்வருமாறு, அனைவரிடமும் நான் கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறேன்.

“71ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல் கையிருப்பில் உள்ளது – பதறாதீர்கள் ” – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் ஒரு மாதத்துக்குப் போதுமான எரிபொருள் கையிருப்பில் இருப்பதால் வரிசையில் காத்திருந்து நேரத்தை வீணாக்க வேண்டாமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அரசுக்கு எதிரான நபர்களின் அறிக்கைகளால் மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என இன்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார்.

நாட்டில் கிடைக்கத்தக்க எரிபொருள் அளவு குறித்த தகவலை நேற்று நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். அதன்படி 71ஆயிரம் மெட்ரிக் தொன் பெற்றோல், 99ஆயிரம் மெட்ரிக் தொன் ஓட்டோ டீசலை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் கையிருப்பில் வைத்துள்ளது.

கொவிட் நிலைமைக்கு முன் நாட்டில் 5500 மெட்ரிக் தொன் ஓட்டோ டீசல் மற்றும் 3300 மெட்ரிக்தொன் பெற்றோல் என்பன தினமும் பயன்படுத்தப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

“ஆப்கானிஸ்தான் மக்களுக்காக எல்லைகளை திறந்து வையுங்கள்.” – UNHCR  கோரிக்கை !

ஆப்கானிஸ்தான் மக்களுக்காக அண்டை நாடுகள் தங்களின் எல்லையைத் திறந்து வைக்குமாறு அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் UNHCR  கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் கட்டுக்குள் வந்தபிறகு அங்கிருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் வெளியேறி வருகின்றனர். கடந்த திங்கள் ஆப்கன் விமான நிலையத்தில் மக்கள் அலைகடலென திரண்டதும் அங்கிருந்து விமானத்தில் தொற்றியவாறு உயிர்பிழைக்க முயற்சித்து தோற்றதும் உலக நாடுகளை உறையவைத்துள்ளது.

அங்கிருந்து இன்னமும் மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேற முற்படுகின்றனர். ஆனால், விமானநிலையம் செல்ல முடியாது தலிபான்கள்  மக்களை விரட்டியடிக்கத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக தங்களின் எல்லைகளைத் திறந்துவைக்க வேண்டுமென்று அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ஷாபியா மன்டூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர், “ஆப்கானிஸ்தான் மக்களில் பெரிம்பாலோனார் வழக்கமான பாதைகள் வழியாக நாட்டை விட்டு வெளியேற முடியவில்லை. இன்று அங்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களுக்கு முறையாக வெளியேற வாய்ப்பில்லாமல் இருக்கிறது. ஆகையால் நாள்தோறும் மாறிக்கொண்டிருக்கும் பதற்றமானன சூழலைக் கருத்தில் கொண்டு அண்டை நாடுகள் ஆப்கன் மக்களுக்காக எல்லைகளைத் திறந்து வைக்க வேண்டும்” என்று கோரியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் இருந்து இதுவரை 9000 பேரை அமெரிக்கா மீட்டுள்ளது. இவர்கள் அனைவரும் காபூல் விமானநிலையம் வாயிலாக வெளியேறியுள்ளனர்.

ஆப்கானிஸ்தான் தலிபான்கள் தங்களின் ஆட்சி 1996ல் இருந்ததுபோல் இருக்காது. இஸ்லாமிய சட்டத்துக்கு இணங்க பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும் என்றெல்லாம் கூறினர் தலிபான்கள். ஆனால், அங்கு நிலைமை மாறவில்லை எனக் கூறுகிறது ஐ.நா.,வின் ஆராய்ச்சிக் குழு. தலிபான்கள் அச்சுறுத்தல் குறித்து  ஐ.நா சார்பாக நார்வேஜியன் சென்டர் ஃபார் குளோபல் அனாலிஸிஸ் இந்த ஆவணத்தை எழுதியுள்ளது.