August

August

“புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் தனது அமைச்சரவைப் பதவியை இழந்தவர் மங்களசமரவீர .” – இரங்கல் யெ்தியில் கூட்டமைப்பு !

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் இறப்புக்கு தமிழ்அரசியல் தலைவர்கள் பலரும் தங்களுடைய இரங்கல்களை வெளியிட்டு வருகின்றனர்.

முக்கியமாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் தமிழர்கள் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“முன்னாள் அமைச்சரும் தமிழ் மக்களின் உண்மையுள்ள நண்பருமான மங்கள சமரவீரவின் எதிர்பாராத மறைவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

1989 இல் அரசியலில் கால் பதித்த மங்கள சமரவீர, 1994 இல் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் அரசில் அமைச்சராகப் பொறுப்பேற்றார். மேலும், தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காகப் பிரசாரம் செய்யும் ‘சுது நெலும்’ இயக்கத்தையும் முன்னெடுத்துச் சென்றார். அவர் இறக்கும் வரையிலும் இனவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்ந்திருந்தார்.

மங்கள சமரவீர, விடுதலைப்புலிகளுடனான போர் நடத்தப்பட்ட முறைக்கு எதிர்ப்புத் தெரிவித்த காரணத்தால் தனது அமைச்சரவைப் பதவியை இழக்க நேரிட்டது.

பின்னர் அவர் 2015 இல் வெளிவிவகார அமைச்சராக மீண்டும் பதவியேற்று, நீதி, பொறுப்பு மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி அயராது உழைத்தார். இன, மொழி, சாதி, மதம், அல்லது நம்பிக்கை வேறுபாடுகளுக்கப்பால் ஒவ்வொரு குடிமகனும் சமமாக நடத்தப்படும் ஓர் இலங்கையே அவரது தரிசனமாகக் காணப்பட்டது. மங்கள சமரவீரவின் மரணம் நம் அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத பாரிய இழப்பாகும்” என்றுள்ளது.

 

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் ,

சக நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவையில் இணைந்து செயற்பட்ட காலத்திலும் அமரர் மங்கள சமரவீர இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தினை வலுப்படுத்தப்பட வேண்டும் என்ற யதார்த்தத்தினை உணர்ந்து செயற்பட்டிருந்தார்.அன்னாரின் இழப்பினால் துயருற்று இருக்கின்ற அவரின் உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றேன். எனக்கூறியிருந்தார்.

சமரவீரவின் மறைவையொட்டி பொ. ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள இரங்கற்செய்தியில் குறிப்பிட்டுள்ள போது “தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வலுவடைந்தமைக்குச் சிங்களவர்கள் காரணமே தவிர தமிழர்கள் அல்லர். ஆரம்ப காலத்தில் தமிழர்கள் மொழியுரிமை கேட்டார்களே தவிர தனிநாட்டைக் கோரவில்லை. மொழியுரிமை உரியவாறு வழங்கப்படாத நிலைமையிலேயே அவர்கள் தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்தார்கள் எனத் தெரிவித்ததன் மூலம் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயத் தன்மையை வெளிப்படையாகவே ஏற்றுக்கொண்ட மங்கள சமரவீர பேரினவாதச் சேற்றில் மலர்ந்த ஒரு வெண்தாமரை.அன்னாரின் ஆத்மா இயற்கை அன்னையின் மடியில் சாந்தியடையட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.” என தெரிவித்துள்ளார்.

 

 

“பும்ரா என்னை ஆட்டமிழக்கச்செய்ய பந்து வீசியதாக தெரியவில்லை.” – ஜேம்ஸ் ஆண்டர்சன்

லோர்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்துவீசிய இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ரத் பும்ரா தன்னை ஆட்டமிழக்கச் செய்வதை விட, தனக்கு ஷார்ட் பால்களைப் போடுவதிலேயே முனைப்பாக இருந்தார் என்று இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் கூறியுள்ளார்.

இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி முதல் டெஸ்ட் டிரா ஆனதைத் தொடர்ந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 151 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அடுத்த டெஸ்ட் போட்டி ஹெட்டிங்க்லி மைதானத்தில் நடக்கிறது.

இரண்டாவது டெஸ்ட்டில் பும்ரா உள்ளிட்ட இந்திய அணியினரும், ஜேம்ஸ் ஆண்டர்சனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போட்டி முடியும் வரை வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் சீண்டிக் கொண்டும் இருந்தனர்.

இந்த போட்டியில் தனது ஆட்டத்தைப் பற்றி பேசியிருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சன்,

“நான் வந்த முதல் பந்தே எனக்கு எதுவும் புரியவில்லை ஏனென்றால் அதற்கு முன் ஆட்டமிழந்து வந்த அத்தனை பேட்ஸ்மேன்களுமே களத்தில் பந்து நிதானமாக வருவதாகவே சொன்னார்கள். மேலும் நான் ஆட வரும்போது ஜோ ரூட்டும், பும்ரா வழக்கத்தை விட நிதானமாக வீசுவதாகவே சொன்னார். ஆனால் முதல் பந்தே எனக்கு 90 மைல் வேகத்தில் வந்தது. ஒன்றும் புரியவில்லை.

இதுவரை என் கிரிக்கெட் வாழ்க்கையில் நினைக்காத ஒரு விஷயத்தை அப்போது நான் நினைத்தேன். பும்ரா நான் ஆட்டமிழக்க வேண்டுமென்று பந்துவீசியதாகவே தெரியவில்லை. ஷார்ட் பால் வீசுவதிலேயே முனைப்பாக இருந்தார். ஒரு ஓவரில் பல நோபால்கள் வீசி 12 பால்களை வரை கூட போட்டார். இரண்டு பந்துகளை மட்டுமே ஸ்டம்பை நோக்கி வீசினார். அதனால் நான் ஆடிவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த போட்டி முடிந்ததும் இதில் நடந்த வார்த்தை சீண்டல் பற்றிய கேள்வி எழுந்தபோது, எதிரணி அப்படிப் பேச ஆரம்பித்தால் தங்களுக்கும் எப்படி பதில் சொல்வதென்று தெரியும் என இந்திய அணி பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் பதிலளித்தார்.

இதே நேரம்  ரவிச்சந்திரன் அஸ்வினுடன் யூடியூப் சேனலில் உரையாடிய இந்திய அணியின் களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் , ஸ்ரீதர் கூறிய போது “ஆட்டம் முடிந்து, இரு அணி வீரர்களும் ஓய்வறைக்குத் திரும்பியபோது பும்ரா, ஆண்டர்சன் முதுகில் செல்லமாகத் தட்டி, ‘வேண்டுமென்றே செய்யவில்லை, மன்னியுங்கள் ’ எனத் தெரிவித்தார். ஆனால், ஆண்டர்சன் அதைக் கண்டுகொல்லாமல் அலட்சியப்படுத்தி ஒதுக்கினார். அதன்பிறகுதான், இந்திய அணி வீரர்கள் ஆக்ரோஷமானார்கள். அதன் விளைவைத்தான் 5ஆவது நாள் ஆட்டத்தில் பார்த்தோம்” எனக் கூறியமையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.

 

யாழில் இம்மாதம் மட்டும் 70க்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலி!

யாழில் இம்மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான கடந்த 23 நாட்களில் கொரோனா தொற்றுக்கு உள்ளான 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

யாழ். மாவட்ட செயலகத்தின் கொரோனா புள்ளிவிபர அறிக்கையில் இந்த விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ். மாவட்டத்தில் இதுவரையிலான காலப்பகுதியில் கொரோனா தொற்றுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 201ஆக அதிகரித்துள்ளது.

“ஆப்கானிஸ்தானை பாதுகாப்பது அமெரிக்காவின் கடமை .” – அமெரிக்க துணை ஜனாதிபதி

ஆப்கானிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போரில் தலிபான் பயங்கரவாதிகள் வெற்றி பெற்றனர். இதையடுத்து, ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானும் தலிபான்கள் வசம் சென்றது.
இதற்கிடையே, அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஒரு வாரம் அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் வந்திருந்தார். இந்தோ பசிபிக் நாடுகளுடன் அவர் ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து முக்கிய பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளார்.
இந்நிலையில், ஆப்கன் நிலவரம் குறித்து அவர் கூறுகையில்,
அனைத்து நாடுகளுக்கும் அமெரிக்கா தலைமை வகிக்கிறது. ஆகவே எங்களது நாட்டின் பொறுப்பு எங்களுக்கு நன்றாக தெரியும். ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க ராணுவம் வெளியேறினாலும் அப்பகுதியைப் பாதுகாக்க வேண்டியது அமெரிக்காவின் கடமை என்றார்.
20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் குவிக்கப்பட்டிருந்த அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது குறித்து ஆசிய நாடுகளுக்கு தெளிவான விளக்கத்தை அளிக்க கமலா இந்த ஆசிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
சிங்கப்பூரை அடுத்து அவர் வியட்நாம் சென்று வெளியுறவுத்துறை அதிகாரிகளை சந்தித்து கலந்தாலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

குறைக்கப்படுகின்றதா அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம்..?

அரசாங்க மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வெளியாகும் செய்தியில் எந்வித உண்மையுமில்லை என்று வெகுஜன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பின்போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை குறைப்பதற்கோ அல்லது அதற்கான நிதியம் ஒன்றை உருவாக்குவதற்கு எந்த ஏற்பாடும் இல்லை  என அவர் தெரிவித்தார்.

மேலும் இது தொடர்பாக மேற்கொள்ளப்படும் பிரசாரங்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும கூறினார்.

“தலிபான்களுடன் போருக்கு தயார்.” – எதிர்க்கத்துணியும் பஞ்ச்ஷிர் !

ஆப்கனின் முக்கிய மலைப் பிரதேசமான பஞ்ச்ஷிர் மாகாணத்தைத் தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர் அகமத் மசூத். இவர் மறைந்த ஆப்கன் தலைவர் அகமத் ஷா மசூதின் மகன் ஆவார். இவர் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவர்களில் ஒருவராகவுள்ளார்.

இந்நிலையில் தலிபான்களுடன் சண்டையிடத் தயார் என்று அகமத் மசூத் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் தலைநகர் காபூலைத் தலிபான்கள் கைப்பற்றியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இந்த நிலையில் தலிபான்களுக்கு எதிரான போரைத் தலிபான் எதிர்ப்பு முக்கியத் தலைவரான அகமத் மசூத் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அகமத் மசூத் கூறும்போது, “பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கிச் செல்வதற்கான முக்கிய வழி என்பதைத் தலிபான்களுக்கு உணர்த்த விரும்புகிறோம். போர் ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை. எனினும் தலிபான்களுடனான போருக்கு நாங்கள் தயார். சர்வாதிகார ஆட்சியை எதிர்க்க விரும்புகிறோம்” என்று தெரிவித்தார்.

 

“ஓர் நேர்மையான தேசியவாதியை இலங்கை இழந்துள்ளது.” – தமிழ்த் தேசியக் கட்சி இரங்கல் !

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலையில், சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சிகிச்சைப் பலனின்றி இன்று காலை காலமானார்.

இந்நிலையில் , தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.ஸ்ரீகாந்தா அறிக்க ஒன்றை வெளியிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

அவரின் மறைவு குறித்து ந.ஸ்ரீகாந்தா வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

“அரசியல் நீதி கோரி நிற்கும் தமிழ் மக்களின் அபிலாசைகளை நன்கு உணர்ந்து கொண்டு, தேசிய ஒற்றுமைக்காக உறுதியுடன் செயற்பட்ட மங்கள சமரவீரவின் திடீர் மறைவு துயரமளிக்கின்றது.

ஐம்பதுகளிலும், அறுபதுகளிலும் நன்கறியப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் திகழ்ந்த தனது தந்தையார் மகாநாம சமரவீரவின் அடிச்சுவட்டை பின்பற்றி, 1989ல் நாடாளுமன்றத்திற்குள் பிரவேசித்த மங்கள சமரவீர, தனது நேர்மையான செயற்பாடுகள் ஊடாக தமிழ் – முஸ்லிம் மக்களின் மதிப்பையும் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டவர் ஆவார்.

இன மத வேறுபாடுகள் இன்றி இலங்கைத் தீவின் மக்கள் அனைவரினதும் ஜனநாயக உரிமைகளுக்காக அவர் உறுதியுடன் எப்போதும் செயற்பட்டார். அவரின் மறைவினால் துயரமடைந்திருக்கும் அனைவருடனும் நாமும் இணைந்து நிற்கின்றோம்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“அரசு ஊரடங்கு என்கிறது. ஆனால் முழுமக்களும் தெருவில் தான் நிற்கிறார்கள்.” – ஐக்கிய தேசிய கட்சி குற்றச்சாட்டு !

நாடு முடக்கப்பட்டிருப்பதுபோல் தெரியவில்லை என ஐக்கிய தேசிய கட்சி பிரதி தலைவர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

கடந்த வாரம் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையின் சுருக்கம் என்னவென்றால் கொவிட் காரணமாக நாட்டை தொடர்ந்து முடக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அர்ப்பணிப்பதற்கு மக்கள் தயாராகுமாறு மக்களுக்கு அறிவித்திருக்கின்றார்.

மேலும் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை நாளொன்றுக்கு 200 வரை நெருங்கி இருக்கின்றது. நாட்டை மூன்று வாரங்களுக்காவது முடக்கவேண்டும் என்றே நாங்கள் தொடர்ந்து அரசாங்கத்துக்கு தெரிவித்து வந்தோம். இருந்தாலும் அரசாங்கம் 10 நாட்களுக்கு நாட்டை முடக்குவதற்கு தீர்மானித்திருக்கின்றது. என்றாலும் வீதிக்கு சென்று பார்த்தால் பொது மக்கள் வீதிகளில் இறக்கின்றனர். நாடு முடக்கப்பட்டிருப்பது போல் தெரியவில்லை. இவ்வாறான முடக்கத்தை நாங்கள் கோரவில்லை.சுகாதார நிபுணர்கள் தெரிவிக்கும் முறையிலான முடக்கமே தேவையாகின்றது என்றார்.

தமிழருக்காக குரல் கொடுத்த மங்கள இன்று காலமானார்!!!

மங்கள சமரவீர இன்று காலமானார். கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டு இருந்த மங்கள சமரவீர சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலமானார். இலங்கையில் கொரோனாவிற்கு காலமான முக்கியமானவர் இவர். இவர் சென்ற வாரமே காலமானதாக தவறான செய்தி ஒன்றும் வெளியாகி இருந்தது.

நீண்டகாலம் அரசியலில் ஈடுபட்டு வந்த மங்கள இலங்கையின் இரு பிரதான கட்சிகளிலும் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இறுதியில் ஐக்கிய தேசியக் கட்சியில் வெளிநாட்டு அமைச்சராகவும் இருந்து 2020இல் கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்றிருந்தார். இவர் வெளிநாட்டு அமைச்சராக இருந்த காலத்திலேயே இலங்கையை ஐநா மனித உரிமை சாசன உடன்பாடு ஒன்றில் கையெழுத்திட வைத்ததன் மூலம், போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கிடுக்குப்பிடிக்குள் இலங்கை சிக்கியது. அதனால் மங்கள சமரவீர நாட்டைக் காட்டிக்கொடுத்துவிட்டார் என்ற அவப் பெயருக்கு மகங்கள உள்ளானார்.

மங்கள அமெரிக்க தெற்காசிய பிரிவின் பொறுப்பாளர் சமந்த பவருடன் நெருக்கமாக இருந்த காரணத்தினாலேயே போர்க்குற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாடு எட்டப்பட்டு இருந்தது. சமந்தா பவருடன் மங்களவுக்கு இருந்த நெருக்கம் தற்போதைய அரசுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தத் தவறவில்லை.

மங்கள சமரவீர கட்சி அரசியலுக்கு அப்பால் இலங்கை மக்கள் அனைவரும் சம உரிமையோடு வாழ வேண்டும் என்ற எண்ணப்பாட்டை உடையவர். அதனால் சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நன்மதிப்பைக் கொண்டிருந்தார். அவர் யுத்தத்திற்குப் பின் தமிழ் – சிங்கள சமூகங்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தி தமிழ் சமூகத்திற்கு அடிப்படை உரிமைகளை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருந்தவர்.

கட்சி அரசியலில் இருந்து ஓய்வுபெற்ற அவர் தேசபிமான இயக்கம் என்பதனை உருவாக்கி இலங்கையின் இரு பிரதான தேசியக் கட்சிகளும் – ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்று குற்றம்சாட்டி இருந்தார். அவர் இறுதியாக நடத்திய செய்தியாளர் மாநாட்டில் தான் பெருமைப்படுகின்ற இரு விடயங்கள் பற்றிக் குறிப்பிட்டார். அதில் ஒன்று 1981 மே 31 இரவு எரிக்கப்பட்ட யாழ் நூலகத்தை 1990இல் சந்திரிகா குமாரதுங்கவின் சமாதான முயற்சியால், வெண்தாமரை இயக்கத்தினூடாக புனரமைத்து தமிழ் மக்களிடம் கையளிக்க உதவியது எனக் குறிப்பிட்டார். அடுத்தது இலங்கை தொலைத்தொடர்பாடலை தனியார் மயப்படுத்தி தொலைபேசி இணைப்பை அனைவரும் பெறும்வகையில் செய்தது என்றும் கூறினார்.

மங்கள சமரவீர வெளிப்படையாக பேசுவதாலும் சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருந்ததாலும் பல்வேறு சர்ச்சைகளுக்கும் முகம் கொடுத்துவந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இம்மாத சம்பளத்தை கொவிட்-19  நிவாரண நிதியத்திற்கு அர்ப்பணித்த இலங்கை அமைச்சர்கள் !

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தங்களின்  ஆகஸ்ட் மாத சம்பளத்தை  கொவிட்-19  நிவாரண நிதியத்திற்கு  அர்ப்பணிக்குமாறு பிரதமர் மஹிந்தராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக இணக்கம் தெரிவித்துள்ளனர்.

நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடியில் உள்ள நிலையில் கொவிட்-19 வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளவும் அதிக நிதி செலவாகுகிறது.

ஆகவே தற்போதைய நிலையில் அனைத்து தரப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என பிரதமர் குறிப்பிட்டதை அமைச்சரவை உறுப்பினர்கள் அனைவரும் வரவேற்றுள்ளனர்.

நாடு பொருளாதார ரீதியில் நெருக்கடி நிலையில் உள்ளது.  அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து செயற்பட்டால் மாத்திரமே தற்போதைய   சிக்கலான நிலையை வெற்றிக் கொள்ள முடியும். அனைத்து தரப்பினருக்கும் நிதி பற்றாக்குறை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள முடிகிறது. இருப்பினும் கொவிட் தாக்கத்தில் இருந்து மீள்வது குறித்து அதிக அவதானம் செலுத்த வேண்டும்.

ஆகவே அமைச்சரவையின் அனைத்து உறுப்பினர்களும் தங்களின் மாத சம்பளத்தை கொவிட் நிவாரண நிதியத்திற்கு செலுத்தி  நாட்டு மக்களுக்க ஒரு முன்மாதிரியாக செயற்பட வேண்டும். அப்போது தான் நாட்டு மக்களும் தங்களின் விருப்பத்திற்கு அமைய அர்ப்பணிப்புடன் செயற்படுவார்கள்.  என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

‘ இடுகம ‘ கொவிட் நிதியத்திற்கு   கடந்த காலங்களில் பெரும்பாலான தரப்பினர் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.அரச மற்றும் தனியார் நிறுவனத்தினர் நிதி மற்றும் வைத்திய உபகரணங்கள் ஊடாக உதவி புரிந்துள்ளார்கள்.

அமைச்சரவை உறுப்பினர்கள் தங்களின ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திக்கு வழங்க  ஒன்றிணைந்த நிலையில் இணக்கம் தெரிவிப்பதற்கு முன்னர் வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தனது மாத சம்பளத்தை கொவிட் நிதியத்திற்கு வழங்கியுள்ளார்.

இவரது இச்செயலை பாராட்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏனைய தரப்பினரும் இதனை ஒரு எடுத்துக்காட்டாக கருத வேண்டும். என்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.