01

Friday, September 17, 2021

01

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார் பென் ஸ்டோக்ஸ் !

இங்கிலாந்துக்கு சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 4-ம் திகதி நாட்டிங்காமில் தொடங்குகிறது.
இந்நிலையில், அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெறுவதாக பென் ஸ்டோக்ஸ் அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியாவுடனான டெஸ்ட் தொடரிலும் அவர் பங்கேற்க மாட்டார்.
விரல் காயத்தில் இருந்து மீளவும், மனரீதியாக புத்துணர்ச்சி பெறவும் அவர் எல்லாவகையான கிரிக்கெட்டில் இருந்தும் கொஞ்ச காலம் ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளார்.

ஆறு வருடங்களின் பின்னர் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்கு மீண்டும் நேரடி விமானச் சேவை !

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நேரடி விமான சேவைகள் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கா ஏயர் லைன்ஸ் ஆறு வருட இடைவேளைக்குப் பின்னர் ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவிற்க மீண்டும் நேரடி விமானச் சேவையை ஆரம்பித்துள்ளது.

அதன்படி, ரஷ்யாவின் மெஸ்கோவில் இருந்து பயணத்தை ஆரம்பித்த UL 534 என்ற விமானம் இன்று காலை 6.30 மணிக்கு கட்டு நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் 51 பேர் குறித்த விமானத்தில் வருகை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

அதனடிப்படையில் தொடர்ந்து விமானச் சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

“நான் வழங்கிய வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் முயற்சி.” – சஜித் பிரேமதாச காட்டம் !

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக நான் முன்னதாக இருந்த காலத்தில் வழங்கப்பட்ட சட்டப்பூர்வமான வீடுகளிலிருந்து மக்களை வெளியேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அப்பாவி மக்களுக்கு எதிராக அரசாங்கத்தால் மேற்கொள்ளும் குறித்த திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017 ஆம் ஆண்டு வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் ரஜகம, சியத் லங்காகம, சிரிபரகம உள்ளிட்ட ஐந்து கிராமங்கள் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவால் உருவாக்கப்பட்டது.

குறித்த கிராமங்களில் வசிக்கும் 213 குடும்பங்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றிக் குறித்த வீடுகள் மற்றும் காணிகளை ஆளும் கட்சி அரசாங்கம் தங்கள் நண்பர்களுக்கு விற்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரேமதாச தெரிவித்தார்.

பலவந்தமாக மக்களை அவர்களது சொந்த இடங்களிலிருந்து வெளியேறுமாறு பணிப்புரை விடுக்கும் சகல அரச அதிகாரி களுக்கு எதிராகவும் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுத் தாக்கல் செய்யப்படும் என்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்றைய ஒரே நாளில் 2500 ஐ நெருங்கிய கொவிட் தொற்றாளர்கள் எண்ணிக்கை !

இன்றைய தினம் நாட்டில் மேலும் 835 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதனடிப்படையில் இன்று இதுவரையில் 2,490 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 311,329 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 278,910 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,508 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ”இலங்கை மிகவும் மோசமான டெல்டா அலையின் விளிம்பில் உள்ளதாக ஹாங்காங் பல்கலைக்கழகத்தில் வைரஸ் தொடர்பில் ஆராயும்  விசேட நிபுணர், பேராசிரியர் மலித் பீரிஸ் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஒரே ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் – பதக்கவேட்டை நடாத்திய எம்மா மெக்கியான் !

டோக்கியோ ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 4×400மீ  மெட்லே ரிலே நீச்சல் போட்டி இன்று நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா வீராங்கனைகள் பந்தய தூரத்தை 3 நிமிடம் 51.60 நிமிடங்களில் கடந்து தங்கப்பதக்கம் வென்றனர். அத்துடன் 2012-ம் ஆண்டு அமெரிக்க வீராங்கனைகள் 3 நிமிடம் 52.05 வினாடிகளில் கடந்த ஒலிம்பிக் சாதனையை முறியடித்தனர்.
ஒலிம்பிக்: நீச்சல் குளத்தில் இருந்து 7 பதக்கங்களை அள்ளி சாதனை படைத்த ஆஸி.  வீராங்கனை !!
ஆஸ்திரேலிய அணியில் எம்மா மெக்கியான்  இடம் பிடித்திருந்தார். இதில் தங்கப்பதக்கம் வென்றதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்கு தங்கப்பதக்கம், 3 வெண்கலப்பதக்கம் என ஏழு பதக்கங்கள் வென்றுள்ளார்.
இதற்கு முன் 1952-ம் ஆண்டு கிழக்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஓட்டோ ஒரே ஒலிம்பிக்கில் ஆறு பதக்கங்கள் வென்றது சாதனையாக இருந்தது. அதை 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் நடேலி காங்லின் ஆறு பதக்கங்கள் வென்று சமன் செய்திருந்தார்.
தற்போது எம்மா மெக்கியான் ஏழு பதக்கங்கள் பெற்று அவர்களது சாதனையை முறியடித்துள்ளார்.
எம்மா மெக்கியான் 4×100மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ பட்டர்ஃப்ளை, 100மீ பேக்ஸ்ட்ரோக், 4×200மீ ஃப்ரீஸ்டைல் ரிலே, 100மீ ஃப்ரீஸ்டைல், 200மீ பேக்ஸ்ட்ரோக், மிக்ஸ்டு 4×100மீ மிட்லே ரிலே ஆகியப் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.

சம்பள உயர்வு கோரி நுவரெலியாவில் அணிதிரண்ட இரண்டாயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் !

கல்வி சமூகத்தினர் எதிர்நோக்கும் சம்பள முரன்பாடு உள்ளிட்ட பல முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து நுவரெலியா மாவட்டத்தின் ஐந்து கல்வி வலயங்களை சேர்ந்த பத்து அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று ஆகஸ்ட் முதலாம் திகதி காலை போராட்டத்தில் குதித்தனர்.

நுவரெலியா காமினி தேசிய கல்லூரிக்கு முன்னாள் களம் இறங்கிய போராட்டகாரர்கள் அங்கிருந்து வாகன பேரணியாக நுவரெலியா-பதுளை பிரதான வீதி ஊடாக நுவரெலியா நகரை நோக்கி வருகை தந்தனர்.

இதன்போது கல்வி சமூகத்தினர் எதிர் நோக்கும் கோரிக்கைகள் தொடர்பாக எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தி கோஷமும் எழுப்பப்பட்டு பேரணியை இவர்கள் நடத்தினர்.

இப் பேரணியில் நுவரெலியா மாவட்டத்தின் நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, ஹங்குராங்கெத்த மற்றும் அம்பகமுவ ஆகிய கல்வி வலையங்களை சேர்ந்த சுமார் இரண்டாயிரத்திற்கு உட்பட்ட அதிபர்கள், ஆசிரியர்கள் ஒன்றுபட்டு கலந்து கொண்டனர்.

1994 ஆம் ஆண்டுக்கு பின்னராக நாட்டில் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு நிலவி வரும் சம்பள உயர்வு முரன்பாடு மற்றும் சம்பள நிலுவை உட்பட கல்வியை தனியார் மயமாக்கும் கொத்தலாவலை சட்டமூலத்தை கிழித்தெறிய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன், நாட்டின் தேசிய வருமானத்தில் 06% வீதத்தை ஆசிரியர் சேவைக்கு ஒதுக்க வேண்டும் என பல முக்கிய கோரிக்கைகளையும் இவர்கள் முன்வைத்து இந்த பாரிய போராட்டத்தை முன்னெடுத்தனர்.

. “எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருக்கின்றது.” – கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக பிரான்ஸ் மக்கள் போராட்டத்தில் !

ஐரோப்பிய நாடான பிரான்ஸ், கொரோனா வைரசால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றது. சில நாட்களாக பிரான்சில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்ந்தபடி இருந்து வருகிறது. பிரான்சில் கொரோனா 4-ம் அலை தாக்கக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையடுத்து பிரான்சில் மீண்டும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொது இடங்களில் மக்கள் அதிகளவில் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுளுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் பாரீஸ் மற்றும் பிற நகரங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினார்கள். கட்டாய கொரோனா கட்டுப்பாடுகள் தங்களது சுதந்திரத்தை பறிக்கிறது என்று கோ‌ஷமிட்டனர்.

போராட்டக்காரர்கள் கூறும்போது, மனித உரிமை உள்ள நாட்டில் இப்படி செய்வது நம்ப முடியாதது. இதனால் தான் தெருக்களில் இறங்கி போராடுகிறோம். எங்கள் சுதந்திரம் ஆபத்தில் இருப்பதாக நினைக்கிறோம்’ என்றனர்

போராட்டம் நடத்திய மக்களை கலைந்து செல்லுமாறு போலீசார் அறிவுறுத்தினர். ஆனால் மக்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதில் ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.

பாரீசில் நடந்த மோதலில் 3 போலீசார் காயம் அடைந்தனர். போராட்டங்கள் தொடர்பாக 19 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மன் தெரிவித்துள்ளார்.

ஒரு படுக்கையில் மூன்று நோயாளிகள் – கொரோனா தொற்றாளர்கள் போராட்டத்தில் !

இலங்கை முழுமையாக மக்கள் போராட்டக்கமாக மாறிவருவதை அவதானிக்க முடிகின்றது. இறந்த சிறுமி ஹிஷாளினிக்கு நீதி கோரிய போராட்டங்கள் ஒரு புறமும் , கொத்தலாவல சட்ட மூலத்துக்கு எதிராக ஒரு புற போராட்டங்களும் , இரசாயன பசளை நிறுத்தப்பட்டதற்கான விவசாயிகள் போராட்டங்களும், ஆசிரியர் – தாதிமார் போராட்டங்களுமாக நாட்டின் எல்லா பக்கங்களிலும் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளிலும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர்.

வைத்தியசாலையில் போதுமான வசதிகள் இல்லையென கூறி தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வரும் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

தம்புள்ளை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த போராட்டத்தில் ஈடுபட்ட கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் தெரிவித்துள்ளதாவது, “தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் கொரோனா நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட விடுதியில் பதினேழு படுக்கைகள் உள்ளன. அதாவது ஒரு படுக்கையில் இரண்டு அல்லது மூன்று பாதிக்கப்பட்ட நபர்கள் சிகிச்சை பெறுகின்றனர்.

ஆகவே இவ்விடயத்தில் உரிய நடவடிக்கையை சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்” என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வீணானது நிகோலஸ் பூரனின் அதிரடி – போராடி வென்றது பாகிஸ்தான் !

வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி 20 போட்டி   நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வென்று வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 157 ஓட்டங்கள் எடுத்தது. தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 51 ஓட்டங்களில் ஆட்மிழந்தார். ரிஸ்வான் 46 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 158 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பிளெட்சர் ஓட்டமெதுவுமின்றி ஆட்மிழந்தார்.  எவின் லெவிஸ் 33 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.
கிறிஸ் கெயில் 16 ஓட்டங்களுடனும், ஹெட்மயர் 17 ஓட்டங்களுடனும் , பொல்லார்டு 13 ஓட்டங்களுடனும்ஆட்டம் இழந்தனர். நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முயன்றார். அவர் 33 பந்துகளில் 6 சிக்சர், 4 பவுண்டரி உள்பட 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் அணி முன்னிலை பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருது சிறப்பாக பந்து வீசிய மொகமது ஹபீசுக்கு வழங்கப்பட்டது.

தனிப்பல்கலைகழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பித்தது வவுனியா பல்கலைகழகம் !

வவுனியா பல்கலைகழகம் இன்றிலிருந்து தனியான பல்கலைக்கழகமாக தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றது.

யாழ்பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா பல்கலைகழகமாக கடந்தமாதம் தரமுயர்த்தப்பட்டிருந்தது. அதன் உத்தியோக பூர்வ செயற்பாடுகள் அனைத்தும் இன்று முதல் (01) ஆரம்பிக்கப்படவுள்ளது.

அந்தவகையில் இலங்கையின் 17 ஆவது அரச பல்கலைக்கழகமாக வவுனியா பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டு வட மாகாண இணைந்த பல்கலைக்கழக கல்லூரியாக உருவாக்கப்பட்டு 1997ஆம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகமாக தரமுயர்த்தப்பட்டது. தற்போது குறித்த வளாகம் ஒரு தனியான பல்கலைக்கழகமாக தரமுயர்த்தப்பட்டுள்ளது.

வவுனியா பல்கலைக்கழகத்தின் புதிய துணைவேந்தராக கலாநிதி த.மங்களேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார்.