03

03

தலதா அத்துகோரளவை வாய்மொழிமூல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் !

பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வாய்மொழி மூல பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான சம்பவம் தொடர்பில்  கவனம் செலுத்துவதாக சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனே இன்று தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவாதத்தின் போது, ​​சில அரசாங்க தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரள மீது வாய்மொழிமூல பாலியல் வசைபாடுகளை நடத்தியதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ரோகிணி கவிரத்ன கவலை தெரிவித்தபோது சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

மேற்படி செயற்பாடானது பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளை மீறுவதாகவுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்களை விமர்ச்சிப்பதற்கும் தனிப்பட்ட விடயங்கள் தொடர்பில் விவாதிப்பதற்கும் இது இடமல்ல. மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் இடமாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் 12 பெண் பாராளுமன்ற உறுப்பினர்களே உள்ளனர். பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள்  அவமானத்திற்கு உட்படுவது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும் என்றார்.

யாழில் அதிகரிக்கும் கொரோனாத்தொற்று – ஒக்சிசன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு !

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாக வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்துள்ளார்.

யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் நாளொன்றுக்கு 120 வரையான ஒக்சிசன் சிலிண்டர்கள் இதுவரை பாவிக்கப்பட்டு வந்தது எனினும் தற்போது கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக குறித்த சிலிண்டர் பாவனை 180 ற்கு மேல் அதிகரித்துள்ளது.

ஒவ்வொரு நாளும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் இருந்து மூன்று தடவைக்கு மேல் வாகனங்கள் அனுராதபுரம் சென்று சிலிண்டர்கள் பெற்று வருகின்றன.
யாழ்ப்பாண குடாநாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதன் காரணமாக வைத்தியசாலை விடுதிகளில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்திலும் கொரோனா தொற்றாளர்கள் அதிகளவில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் எனவே தற்போதுள்ள நிலையில் மருத்துவ வளங்கள் அனைத்தும் கொரோனா தொற்றுக்குள்ளாருக்கு பாவிக்கப்படுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி போடாதவர்கள் தான் அதிகமாக இறப்பினை சந்திக்கின்றார்கள் எனவே பொதுமக்கள் அனைவரும் இந்தத் தடுப்பூசியைப் போடுவதன் மூலம் உயிரிழப்புகளில் இருந்து தம்மைக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

அத்தோடு இனிமேல் வைத்தியசாலைக்கு வருவோர் தமக்குரிய தடுப்பூசி அட்டையினை கொண்டு வருதல் மிக அவசியமான ஒன்றாகும் எனவே எதிர்வரும் காலத்தில் பொதுமக்கள் இந்த கொரோனா தொற்றால் இருந்து தங்களை பாதுகாப்பதற்கு உரிய வழிமுறைகளை கையாள வேண்டும் அத்தோடு அனைவரும் இந்த தடுப்பூசியினை பெறவதன் மூலம் இந்த தொட்டியில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

எனவே பொதுமக்கள் தற்போதுள்ள நிலையை அனுசரித்து அனைவரும் செயற்படுவதன் மூலம் குறித்த தொற்றிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

பாய மறுத்த 142 கோடி பெறுமதியான குதிரை – தகர்ந்தது இலங்கையின் பதக்கக்கனவு !

இலங்கை சார்பில் டோக்கியோ 2020 ஒலிம்பிக்கில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய மெதில்டா கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே வெளியேறியுள்ளார்.

தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். இலங்கை சார்பில் ஒலிம்பிக் போட்டிகளில் குதிரையேற்ற போட்டியில் பங்குபற்றிய முதலாவது இலங்கையர் என்ற பெருமையை கார்ல்ஸன் பெற்றிருந்தார்.

ஒலிம்பிக் வீராங்கனை மெடில்டா கார்ல்ஸன் தோல்வி

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.

தனியாள் குதிரையேற்றப் போட்டியில் மெதில்டா கார்ல்ஸன் இன்று பங்கேற்றிருந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட இலங்கையைச் சேர்ந்த ஏனைய வீரர்கள் தாம் பங்கேற்ற அனைத்து போட்டிகளிலும் பதக்கங்களை பெற தவறியிருந்தனர்.

இந்த நிலையில், இறுதியாக மெதில்டா கார்ல்ஸன் மீது இலங்கை ஒலிம்பிக் ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பை வைத்திருந்தனர்.

எனினும், குதிரையேற்ற போட்டியில் கார்ல்ஸன் முதலாம் சுற்றிலேயே தோல்வியை வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்ததுடன், இலங்கையின் இறுதி நம்பிக்கையும் தகர்ந்து போனது.

இலங்கை சார்பாக பங்கேற்ற மடில்டா கார்ல்சனின் குதிரை பாய மறுத்ததால் அவர் தோல்வியுற்று வெளியேறினார்.

கார்ல்சனின் உத்தரவின்படி ஆரம்பத்தில் பாய்ந்த குதிரை, எட்டாவது தடை தாண்டலின் போது குதிரை பாய மறுத்தது. இதனால் கார்ல்சன் தோல்வியைத் தழுவிக்கொண்டு களத்திலிருந்து வெளியேறினார்.

142 கோடி பெறுமதியான குதிரையுடன் களத்தில் குதித்திருந்த மெடில்டாகார்ல்ஸன் வெற்றி பெறுவதற்காகவே தான் வந்துள்ளதாக ஊடகங்களிடம் கூறியிருந்த நிலையில் இவர்ருடைய குதிரை மீதான பெறுமதி பலருடைய கவனத்தையும் ஈர்த்திருந்தது.

“கடற்றொழில் கற்கைகளுக்கான பீடத்தை முல்லைத்தீவில் உருவாக்க முயற்சிக்கின்றேன்” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா !

புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வவுனியா பல்கலைக்கழகமானது அறிவுசார்ந்து சிந்தித்து எதிர்காலத்தை முன்னகர்த்தும் சந்ததியை உருவாக்கும் அறிவுக்கூடமாக மிளிர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும் கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வவனியா பல்கலைக்கழகம் தொடர்பில் கருத்தக் கூறும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

1997 ஆம் ஆண்டிலிருந்து யாழ் பல்கலைக்கழகத்திலிருந்து சில பீடங்கள் வவுனியா வளாகத்திற்கு மாற்றப்பட்டு அது வவுனியா வளாகமாக இயங்கிவந்தது. இந்நிலையில் அந்த வளாகம் இந்த மாதம் முதல் பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த நிலைக்கு உயர்த்த அல்லது பங்களித்த அனைவருக்கும் எனது பாராட்டுக்களையும் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்

இதேநேரம் வன்னியுடன் யாழ்ப்பாணத்திற்கான தொடர்புகள் இல்லாத காலங்களில் இந்த வவுனியா வளாகத்தின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டதுதான் இந்த வளர்ச்சிக்கான சாத்தியமாகி இருக்கிறது.

வவுனியா பல்கலைக்கழகமாக மாற்றம் பெறுவதற்கு நடவடிக்கையை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, பிரதமரர் மஹிந்த ராஜபக்ச மற்றும் கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் ஆகியோருக்கு மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதேபோன்று கடல்தொழில் தொடர்பான கற்கை நெறிகளுக்கான தனியான பீடம் ஒன்றினை முல்லைத்தீவு மாவட்டத்தில் உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன். அந்த முயற்சியும் விரைவில் சாத்தியமாகும் என்று நான் நம்புகின்றேன்.

இதேவேளை இன்னொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். அதாவது எனது அரசியல் அணுகுமுறை எந்தளவுக்கு நடைமுறை சாத்தியமானது என்பதை இங்கே நிரூபிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு இடத்திலிருந்து ஆரம்பித்து எமது எதிர்பார்ப்புகளை நோக்கி படிப்படியாக நகரமுடியும் முடியும் என்ற அணுகுமுறையே சாத்தியமானது என்பதை நான் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கூறிவருகின்றேன்’ என்றும் அவர் கூட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்கு பாராட்டு தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம் !

கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளில் இலக்கை அடைவதற்கான பாதையில் இலங்கை பயணிக்கிறது என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டம்பர் மாதத்துக்குள் இலங்கை தடுப்பூசி செலுத்தும் இலக்கை அடையும் நிலையில் உள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியெசஸ் கூறியுள்ளார்.

இது குறித்து தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் இதற்காக அரசாங்கத்துக்கும் நாட்டு மக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் ருவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில்,

“செப்டம்பர் இலக்குக்கு முன்னதாக, இலங்கை தனது மக்கள்தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடுவதை கண்டு மகிழ்ச்சி! அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் அவர்களின் முயற்சிகளுக்கு நன்றி. வைரஸை கட்டுப்படுத்துவதற்கான நிரூபிக்கப்பட்ட பொது சுகாதாரம் மற்றும் சமூக நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, ஒரே நாளில் 5 இலட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்திய இலங்கையின் சாதனையை WHO கடந்த வாரம் பாராட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

“தடுப்பூசிகளைப் பெறுவதில் வடக்கு மக்கள் மிகுந்த ஆர்வம்.” – சவேந்திர சில்வா பாராட்டு !

வடக்கு மாகாணத்தில் கொரோனாத் தடுப்பூசிகளைப் பெறுவதில் மக்கள் மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். இதனை நாம் வரவேற்கின்றோம் என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

கொரோனாத் தடுப்பூசியைப் பெறுவதில் வடக்கு மக்கள் ஆரம்பத்தில் ஆர்வத்தைக் காட்டவில்லை. எனினும், அவர்கள் தற்போது மிகுந்த ஆர்வத்தைக் காட்டி வருகின்றனர். ஒவ்வொரு மாகாண மக்களும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

கொரோனாவை விரட்டக்கூடிய ஒரே ஆயுதம் தடுப்பூசியே. எனவே, நாட்டிலுள்ள மக்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை வழங்குவதில் அரசு அதிக சிரத்தையுடன் செயற்படுகின்றது.

தடுப்பூசிகளைப் பெற்றுவிட்டோம் எனக் கருதி சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் இருக்கக்கூடாது.

கொரோனாத் தடுப்புக்கான சுகாதார விதிகளை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும்” – என்றார்.

“முல்லைத்தீவு , அரசாங்கத்தின் திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்படுகின்றது.” – து. ரவிகரன் குற்றச்சாட்டு!

முல்லைத்தீவு- வட்டுவாகல் பகுதியும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளும் அரசாங்கத்தின் சில திணைக்களங்களினாலும் படையினராலும் அபகரிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக துரைராசா ரவிகரன் மேலும் கூறியுள்ளதாவது,

“வட்டுவாகலை அண்மித்த பகுதிகளில் 617 ஏக்கர் காணிகள் கடற்படை வசமும் 400 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இராணுவத்தின் வசமும் உள்ளன. மேலும் பெரிய விகாரை ஒன்றையும் அப்பகுதியில் அமைத்து, பெரும்பான்மையினரின் ஆதிக்கத்தை நிலை நாட்டி வருகின்றனர்.

இதேவேளை கடந்த 2017ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக  வட்டுவாகல் நந்திக் கடல் மற்றும் நந்திக் கடல் சேர்ந்த பகுதிகளில் உள்ள சுமார் 10230 ஏக்கர் நிலப்பரப்பை  வன ஜீவராசிகள் திணைக்களம், தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

மேலும் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாம் அமைந்துள்ள காணிகள், முள்ளிவாய்க்கால் கிழக்கு மக்களுக்கும் வட்டுவாகல் மக்களுக்கும் உரியவையாகும்.

இந்நிலையில் கடந்த 29ஆம் திகதி, வட்டுவாகல் பகுதியில் கடற்படையினருக்கான காணி அளவீட்டிற்காக,  நிலஅளவைத் திணைக்களத்தினர் சென்றவேளை அவர்களை வழி மறித்த மக்கள், எதிர்ப்பினை தெரிவித்து  போராட்டம் ஒன்றையும் முன்னெடுத்திருந்தனர்” என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.