04

04

“சிறைச்சாலை அவசர செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேர் இணைப்பு .” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“சிறைச்சாலையில்  அவசர செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.” என  நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினா நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி. சமிந்த விஜேசிறி   எழுப்பிய கேள்விக்குப் பதிலகளிக்கும்போதே  மேற்கண்டவாறு  நீதி அமைச்சர் அலி சப்ரி கூறியுள்ளார்.

மேலும் தெரிவித்ததாவது:-

“சிறைச்சாலைகள் பாதுகாப்பு அலுவலகர்களாக 7762 அதிகாரிகள் உள்ளனர். ஆனால், 5567 பேரே தற்போது சேவையில் உள்ளனர். 2305 பதவி வெற்றிடங்கள் சிறைச்சாலைகள் திணைக்களத்தில் நிலவுகின்றன. சிறைச்சாலைகள் திணைக்களத்தில் காணப்படும் பதவி வெற்றிடங்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ள கைதிகளை அதிவிசேட பாதுகாப்பு பூஸா  சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். பூஸா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பூஸா, அங்குனுகொல மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளில் தொலைபேசி பாவனையும் தடைசெய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் உரிய வகையில் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகள் புலனாய்வு பிரிவு மறுசீரமைக்கப்பட்டுள்ளதுடன், சிறைச்சாலைகளில் செயற்படும் அவசர செயலணியும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் செயலணிக்கு இராணுவத்திலிருந்து விலகியுள்ள 500 பேரை இணைத்துக்கொள்ள நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்றார்.

“ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானதல்ல.” – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

ஆசிரியர்களது கோரிக்கைகளுக்கு அரசு ஆதரவு; எனினும் உடனடியாக நிறைவேற்றுவதில் பாரிய சிரமம்

ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு பெற்றுக்கொடுப்பது சாத்தியமில்லை என்பதை ஆசிரியர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும். சம்பள முரண்பாடுகள் தொடர்பில் ஏனைய தரப்பினருடனும் கலந்துரையாடி முறையான தீர்வொன்றை எதிர்வரும் வரவு – செலவு திட்டத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்கிழமை வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது ஐக்கிய மக்கள் சக்தியின்உறுப்பினர் ரோஹினி கவிரத்ன, ஆசிரியர்கள் சம்பள முரண்பாடு தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுவரும் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபம் குறித்து எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

ஆசிரியர்களுக்கு நிவாரணம் அல்லது சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாங்கள் இருக்கின்றோம் என்றும் அவர் தெரிவித்தார்.

மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படும் வகையில் ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் நியாயமானதல்ல. அடுத்தாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் இவர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்போம் என்றும் அவர் கூறினார்.

“ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.” – டயனா கமகே சாடல் !

“ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.” என ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகிக்கும் ஆளுந்தரப்பு பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே கடுமையாக சாடியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

ரிஷாத் பதியுதீனுக்கும் பிள்ளைகள் உள்ளது. அவர்களுக்கு பெற்றோர்கள் என்ற உணர்வு இல்லையா? அவர்களின் வீட்டில் இவ்வாறான குற்றங்கள் இடம்பெறுகின்றது என்பது தெரிந்துகொண்டும் எப்படி அவரால் இருக்க முடிந்தது. ஹிசாலினியின் மரணத்திற்கு அவரது பெற்றோர், ரிஷாத் பதியுதீன் மற்றும் குற்றவாளிகள் சகலரும் பொறுப்புக்கூறியாக வேண்டும்.

அப்பாவி சிறுமி ஒருவரின் மரணம் இன்று நாட்டில் பாரிய முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த சிறுமி எவ்வாறு இறந்தார் என்பதை எமக்கு தெரியவில்லை. ஆனால் சர்வதேச ரீதியிலும் இது பாரிய சிக்கலை ஏற்படுத்தும் காரணியாகும். சிறுவர் வன்கொடுமைகள் நிறுத்தப்படும் ஆண்டாக இந்த ஆண்டு உள்ள நிலையில், இலங்கையில் சிறுவர் துஸ்பிரயோகம், சிறுவர் பணிக்கு அமர்த்துதல் ஒரு பேரலையாக தாக்கிக்கொண்டுள்ளது. இதனை தடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதி முன்னெடுத்து வருகின்றார்.

ஹிசாலினியின் மரணம் குறித்த விசாரணைகள் அடுத்த இரண்டு வாரங்களில் முடிவுக்கு கொண்டுவரப்பட்டு உண்மைகளை கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் குற்றவாளிகள் மட்டுமல்ல குறித்த சிறுமியின் பெற்றோரும் தப்பிக்க முடியாது. ஹிசாலினி பணிக்கு அமர்த்தப்படும் வயதில் இல்லை என்பதை தெரிந்தும் அவரை பணிக்கு அனுப்பியது மிகப்பெரிய தவறாகும். எனவே அவர்களும் தப்பிக்க முடியாது. நாட்டில் இவ்வாறு பல சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டுள்ளது. இவற்றை தடுக்க கடுமையான சட்டதிட்டங்களை கொண்டுவர வேண்டும். சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர வேண்டும். அதற்கே நாம் இங்கு இருக்கின்றோம்.

என்றார்.

“காரணமே இல்லாமல் என்னை கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளார்கள்.” – நாடாளுமன்றில் ரிஷாட் பதியுதீன் !

24 மணிநேரமும் மூடிய அறைக்குள் அடைத்து வைத்து மலசலகூடத்துக்கு மட்டும் வெளியில் செல்ல அனுமதிப்பதாக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் 102 நாட்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (புதன்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“ஜனாதிபதியும் பிரதமரும் இந்தச் சபையில் இருக்கின்றார்கள்.என்னை கடந்த ஏப்ரல் 24ஆம் திகதி கைது செய்தார்கள். வெறும் 5 நாட்கள் மாத்திரமே என்னை விசாரணை செய்தார்கள். 102 நாட்கள் என்னை தடுத்துவைத்துள்ளார்கள். 97 நாட்கள் வரையில் அறையில் அடைத்து வைத்துள்ளார்கள். 24 மணி நேரமும் அந்த அறை மூடப்பட்டு, மலசலகூடத்துக்கு மட்டும் என்னை வெளியில் செல்ல அனுமதிக்கிறார்கள்.

இன்றுவரை எந்தவிதமான விசாரணைகளும் இடம்பெறவில்லை. நான் பொய் கூறவில்லை. வேண்டுமென்றால் வந்து பார்க்க முடியும்.

ஜனாதிபதி அவர்களே, இன்னுமொரு விடயம். என்னைக் கைது செய்தபோது, பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் ‘என்னை ஏன் கைது செய்கிறீர்கள்?’ என்று நான் கேட்டபோது, எனது அமைச்சில் பணிபுரிந்த மேலதிக செயலாளர் பாலசுப்பிரமணியத்துடன், ஒன்றரை நிமிடம் தொலைபேசியில் உரையாடியதாக கூறினார்கள். இதனால்தான் என்னை கைது செய்துள்ளதாக கூறினார்கள். வேறு எந்தக் காரணமும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்தார்.

ரிஷாட்டின் கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, பாலசுப்ரமணியம் தற்போது நாட்டில் இல்லையெனவும் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

இதனைத் தொடர்ந்து ரிஷாட் பதியுதீன் எம்.பிக்கு வழங்கப்பட்ட 2 நிமிட கால அவகாசம் நிறைவடைந்துள்ளதாக தெரிவித்து சபாநாயகர் ஒலிவாங்கியை நிறுத்திவிட்டு, நாடாளுமன்ற சபை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்தார்.

சிறுமி ஹிஷாளினி மரணம் தொடர்பான வினாக்களுக்கு ரிஷாட் முற்றுப்புள்ளி வைப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் கூட அவர் அது தொடர்பாக பேசியிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி செயலகத்தின் முன்பு ஆசிரியர் சங்கத்தினர் போராட்டம் – 42 பேர் கைது !

ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக இன்று (புதன்கிழமை) போராட்டம் நடத்திய 16 பெண்கள் உட்பட 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பல கோரிக்கைகளை முன்வைத்து அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் பேரணி ஜனாதிபதி செயலகத்தின் முன்பாக முன்னெடுக்கப்பட்டது.

எனினும் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தீர்வின்றி முடிவுற்றுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

எதிர்ப்பில் ஈடுபட்ட ஆசிரியர் – அதிபர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

எனினும் கலந்துரையாடலில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் பிரதான வீதிக்கு சேதம் ஏற்படுத்தியமை, பெருமளவான மக்களை ஒன்றுகூட்டியமை, பெருந்தெருக்கள் சட்டத்தின் கீழ் போக்குவரத்திற்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

“புனர்வாழ்வளிக்கப்பட்ட புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கவே வடக்கின் நிலங்கள் இராணுவத்திடம் உள்ளது.” – சிறீதரனுக்கு , சமல் பதில் !

கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே என அமைச்சர் சமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

இன்று (04.08.2021) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின்போது உரையாற்றிய அவர், நாட்டுக்கு தேவையான உணவுகளை உற்பத்தி செய்து மக்களுக்கு வழங்குவதே இதன் பிரதான நோக்கம் என கூறினார்.

வடக்கு மாகாணத்தில் பாதுகாப்பு படைகளின் கீழ் இயங்கும் விவசாய பண்ணைகள் குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் சமல் ராஜபக்ஷ, மன்னார் மாவட்டத்தில் வெள்ளம்குலம் பிரதேசத்தில் உள்ள நூறு ஏக்கர் நிலப்பரப்பில் இலங்கை இராணுவம் விவசாய பண்ணைகளை நடத்தி வருவதாக கூறினார்.

மேலும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதே இதன் நோக்கமெனவும் அமைச்சர் சமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

“வேலை செய்யும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக உயர வேண்டும்.” – நாடாளுமன்றில் மனோ கணேசன் வலியுறுத்தல் !

“வேலை செய்யும் குறைந்தபட்ச வயதெல்லை 18 ஆக உயர வேண்டும்.” என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் இன்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

குறைந்தபட்ச சம்பளம் தொடர்பில் திருத்த சட்டமூலத்தின் மீது பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது,

கேகாலை, இரத்தினபுரி, கண்டி, கொழும்பின் அவிசாவளை, களுத்துறை, மாத்தளை, ஆகிய மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளில் இருந்து நகர வீடுகளுக்கு பெரும்பாலும் வீட்டு வெளியாட்கள் வருவதில்லை. இந்த நடைமுறை நுவரேலியா மாவட்டத்தில் மாத்திரமே அதிகமாக நடக்கின்றது. இது ஒரு உளவியல் பிரச்சினை. வறுமை அல்ல. இதை அமைச்சர் கண்காணிக்க வேண்டும்.

குறிப்பாக, நுவரேலியா மாவட்ட பெருந்தோட்ட பகுதிகளிருந்து குறை பதின்ம வயதை கொண்ட சிறுவர்கள் வீட்டு வேலைக்கு அனுப்பப்பட்டால், அந்த பகுதி கிராம சேவையாளர், பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆகியோர் பொறுப்பு ஆக்கப்பட வேண்டும். இத்தகைய பணிப்புரையை அமைச்சர் விடுக்க வேண்டும்.

வேலைக்கு அமர்த்த கூடிய குறைந்தபட்ச வயதெல்லை, 14ல் இருந்து 16 ஆக இவ்வருடம் ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. தற்சமயம் இந்த வயதெல்லை 18 ஆக உயர்த்தப்பட வேண்டி அமைச்சரவையில் அனுமதி கோரப்பட்டுள்ளதாக அறிகிறேன். இது ஒரு நல்ல காரியம். இதை செய்யுங்கள். சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வாருங்கள். நாங்கள் இரண்டு கைகளையும் உயர்த்தி ஆதரவு வழங்குகிறோம்.

தோட்ட தொழிலாளருக்கு ஆயிரம் ரூபா சம்பளம் என்றும், 25 நாட்கள் வேலை என்றும், ஆகவே மொத்தம் சம்பளம் 25,000 தொழில் அமைச்சர் கூறினார். அது உண்மையல்ல. அது அழகான கனவு மட்டுமே. நடைமுறையில், எத்தனை நாட்கள் வேலை, எவ்வளவு நிறை என்ற தடைகள் உள்ளன. ஆகவே தான் இன்று தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சினை நீதிமன்றத்தில் இருக்கிறது.

இன்று தொழில் அமைச்சர் கொண்டு வந்துள்ள சட்ட திருத்தம் மூலமாக, இத்தகையை துறைகளில் குறைந்தபட்ச நாட்சம்பளம் ரூ. 500 என்றும், மாத மொத்த சம்பளம் ரூ. 12,500 என்றும் கூறப்படுகிறது. இதைவிட குறைந்தபட்ச நாட்சம்பளம் ரூ. ஆயிரம் என்றும், மாத சம்பளம் 25 ஆயிரம் என்றும் தெளிவாக குறிப்பிட்டு இருந்தால் நீதிமன்றத்துக்கு இன்று போக வேண்டியது இல்லையே. ஆகவே இதை கவனத்தில் கொள்ளும்படி அமைச்சருக்கு கூறுகிறேன்.

நீதிமன்றத்தில் நியாயம் கிடைக்கா விட்டால், தோட்ட தொழிலாளருக்கு என விசேட சட்டம் கொண்டு வருவதாக அமைச்சர் கூறினார். இது நடைமுறையாகும் என்றால், அதற்கும் இரண்டு கைகளையும் உயர்த்தி தமிழ் முற்போக்கு கூட்டணி ஆதரவு தரும் என நான் இங்கே உறுதி கூற விரும்புகிறேன்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தூக்கியெறிந்து விட்டு தடுப்பூசி போட்டுக்கொண்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ !

அண்மையில் கொரோனாத்தாக்கத்துக்கு உள்ளாகியிருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அதிலிருந்து மீண்டதனை தொடர்ந்து கங்காராம விகாரைக்கு வழிபடச்சென்று பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ,

கொவிட் -19 வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ளாது நிராகரித்தமையே எனக்கும் எனது மனைவிக்கும் கொவிட் தொற்று ஏற்படக் காரணமாகும். ஆனால் நாம் ஏன் தடுப்பூசியை நிராகரித்தோம் என்றால், நாம் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முன்னர் நாட்டு மக்கள் சகலருக்கும் தடுப்பூசி கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காகவாகும்.

இந்த தெளிவான கொள்கையில் இருந்து நான் மீண்டும் கூறிக்கொள்வது ஒன்றுதான். இந்த நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் முழுமையாக தடுப்பூசிகளை பெற்றுக்கொடுக்கும் வரையில் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் நான் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள மாட்டேன் என கூறியிருந்தார்.

இந்நிலையில், நேற்றையதினம் (04.08.2021)எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சஜித் பிரேமதாச கொவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்! - Hiru News -  Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka

தனது முகப்புத்தகத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கொவிட் தொற்றுக்குள்ளான சந்தர்ப்பத்தில் சிகிச்சை அளித்த வைத்தியர்களின் அறிவுறுத்தலின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொவிட் தடுப்பூசி செலுத்தவில்லை எனில் மீண்டும் குறித்த தொற்றுக் உள்ளாக வாய்ப்பிருப்பதாகவும் அதனால் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் தனக்கு வைத்தியர்கள் கடுமையாக எச்சரித்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டு பால்மா உற்பத்திகளுக்கு பழக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.” – அரசாங்கம் அறிவிப்பு !

“இலங்கையில் உள்நாட்டு பால்மா உற்பத்தியை அதிகரித்து விநியோகிப்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என அமைச்சரவை இணை பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்

நேற்று செவ்வாய்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில் ,

நாட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கு தேவையான அந்நிய செலாவணி இருப்பு அரசாங்கத்திடமுள்ளது. எனவே இது தொடர்பில் அநாவசிய சிக்கலை ஏற்படுத்திக் கொள்ளத் தேவையில்லை.

 

பால்மா தொடர்பில் பற்றாக்குறை ஏற்படும் என்று நாம் கருதவில்லை. எதிர்வரும் காலங்களில் இலங்கையில் உள்நாட்டு பால்மா உற்பத்தியை அதிகரித்து விநியோகிப்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்தியாவசிய உணவு பொருட்களை இறக்குமதி செய்வது தொடர்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது.

நாட்டில் இறக்குமதிக்காக மாதாந்தம் 50 மில்லியன் டொலர் நிதி செலவிடப்படுகிறது. எரிபொருள் இறக்குமதிக்காகவும் 200 மில்லியன் டொலர் செலவிடப்படுகிறது. நாட்டில் அந்நிய செலாவணி தொடர்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை அனைவரும் அறிந்த காரணியாகும்.

இருந்த போதிலும் கடந்த மாதம் செலுத்தப்பட வேண்டியிருந்த ஒரு பில்லியன் டொலர் கடன் மீள செலுத்தப்பட்டுள்ளது.

அதன் பின்னர் ஒழுங்கு முறைக்கமைய அந்நிய செலாவணி இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்கும், டொலர் வருமானத்தை ஈட்டுவதற்கான வேலைத்திட்டங்களிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அதற்கமைய நாட்டுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் மற்றும் எரிபொருள் என்பவற்றை இறக்குமதி செய்வதற்கான போதிய அந்நிய செலாவணி இருப்பு அரசாங்கத்திடம் காணப்படுகிறது.

எனவே இது தொடர்பில் சிக்கலை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை கிடையாது என்றார்.

“சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு கூட தமிழர்களை நம்பவில்லை.” – சி.வி.விக்னேஸ்வரன்

“எங்கள் சிங்கள அரசியல்வாதிகள் விட்டில் பூச்சிகளைப் போன்றவர்கள். எரியும் நெருப்பைத் தேடிப் போய்த் தம்மை எரித்துக் கொள்ளும் சுபாவம் உடையவர்கள். அவர்கள் சீனர்களை நம்புவார்கள் ஆனால் தமிழர்களை நம்பமாட்டார்கள்.” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில்,

சீன கம்யூனிசக் கட்சியின் 100 வது வருடத்தை முன்னிட்டு நாங்கள் தங்க நாணயங்களை வெளிக்கொண்டு வருகின்றோம். ஏற்கனவே பல நிறுவனங்களின் முன் ஆங்கில, தமிழ் ஏன் சிங்கள மொழி கூடப் பாவிக்கப்படாமல் சீன மொழியில்
மட்டும் பெயர்ப்பலகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒரு வேளை எமக்கு நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து தான் இவ்வாறான செயல்களில் நாம் ஈடுபடுகின்றோமோ நான் அறியேன். ஆனால் இவ்வாறான நடவடிக்கைகள் பூகோள அரசியலில் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தப் போகின்றது என்பது பற்றி சிந்தித்தோமா? முகத்தைப் பகைத்து
மூக்கை வெட்டும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.

சிங்கள மக்கள் தமிழ், முஸ்லிம் மக்களுடன் ஒன்றிணைந்து நாட்டை மீட்டெடுக்க இதுவே சரியான நேரம். ஆனால் சிங்கள ஆட்சியாளர்கள் சீனர்களை நம்பும் அளவிற்கு தமிழர்களையும் முஸ்லிம்களையும் நம்பவில்லை.

இந்த நடவடிக்கையே இன்று நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட பிரதான காரணமாக அமைந்தது. தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து, முதலீடுகளை நாட்டுக்குள் கொண்டுவந்து புலம்பெயர் மக்களின் ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்ள சிங்கள மக்கள் முன்வர வேண்டும்.

நெருக்கடி நிலைமையில் இருந்து மீள்வதற்கு கைகொடுக்க தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என்பதை அரசாங்கத்திற்கும் சிங்கள மக்களுக்கும் கூறிக்கொள்ள விரும்புவதாக சி.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.