05

Friday, September 17, 2021

05

சிறுமி ஹிசாலினி மரணம் தொடர்பில் முதன்முறையாக வாய்திறந்த ரிஷாட் பதியூதீன் !

“என்னுடைய சகோதரி 34 வயதில் புற்றுநோயால் இறந்த போது எவ்வாறான துன்பத்தையும் வேதனையையும் தந்ததோ அதே போன்றதொரு வேதனையைத்தான் ஹிசாலினியின் மரணமும் எனது குடும்பத்திற்கு ஏற்படுத்தியுள்ளது..” என நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் தெரவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம்பெற்று வரும் அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

என்னுடைய வீட்டிலே பணிபுரிந்த நிலையில் தீக்காயங்களுக்கு இலக்காகி உயிரிழந்த தங்கை ஹிசாலினியின் மரணம் எனக்கும் எனது மனைவி உள்ளிட்ட குடும்பத்தினருக்கும் மிகுந்த மனைவேதனையை அளித்திருக்கின்றது.

16 வயது பூர்த்தியடைந்த பின்னர் தான் ஹிசாலினி எங்களுடைய வீட்டிற்கு வேலைக்காக தரகர் ஒருவரின் மூலம் வந்தார்.

அவர் பணிக்கு வரும்போது சிறுமியின் தாயாரோ குடும்பத்தாரோ வந்து சிறுமி யாரின் வீட்டில் பணி புரிய போகின்றார் அவரின் தங்குமிடம் எவ்வாறு உள்ளது என்பதை அவதானித்துச் செல்லவில்லை. எவ்வாறெனினும் ஒரு தனிநபர் வாழ்வதற்கான அறை, அதற்கு அருகில் குளியலறையோடு ஒழுங்கான கட்டமைப்போடு அவருக்கு வீட்டு ஏற்பாட்டை நாங்கள் செய்து கொடுத்திருக்கின்றோம்.

கடந்த பத்து வருட காலமாக அங்கு பணியாற்றுபவர்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். குறித்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி 6.45 மணியளவில் இடம்பெற்றிருக்கின்றது.
எனது மாமனாரும் அவரின் மனைவியும் உறங்கச் சென்ற வேளை இந்த சிறுமியின் கதறல் கேட்டு வெளியில் வந்து பார்த்தபோது சிறுமி தீப்பற்றிய நிலையில் இருந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் பற்றி நடுநிலையான விசாரணைகளை நடத்தும்படியும் ரிஷாட் பதியூதீன் நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் வலியுறுத்தினார்.

கிளிநொச்சியில் இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்பு – நாளை முதல் அகழ்வுப் பணி !

கிளிநொச்சி – விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் இருப்பதை அவதானித்ததையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

இந்த நிலையில், கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி குறித்த எச்சங்களை பார்வையிட்ட பின்னர் எச்சங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளையும் கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியை கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதிபதி லெனின்குமார் பார்வையிட்டதுடன், விசாரணைகளையும் மேற்கொண்டார்.

அதன்அடிப்படையில் மேலும் எச்சங்கள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில், அகழ்வு பணிகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

அதற்கமைய குறித்த இடத்தில் நாளை முதல் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை – சுகாதார அமைச்சர் பவித்ரா

கொவிட் தொற்று உறுதியாகி, அபாய நிலையில் இல்லாத நோயாளர்களை வீடுகளில் வைத்து வைத்திய கண்காணிப்புக்கு உட்படுத்தும் நடைமுறையை நாடளாவிய ரீதியாக அமுல்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறையானது இதுவரையில் மேல் மாகாணத்தில் மட்டுமே அமுல்படுத்தப்பட்டு வந்தது.

எதிர்வரும் 9 முதல் இந்த நடைமுறையை நாடளாவிய ரீதியில் அமுல்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி மேலும் தெரிவித்தார்.

இலங்கையில் நிறைந்து போன பிணவறைகள் – நடைபாதையில் படுத்துக்கிடக்கும் கொரோனா தொற்றாளர்கள் – மக்களிடையே பெரும் பீதி !

இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று (04) 94 பேர் உயிரிழந்துள்ள நிலையில் கொரோனா தொடர்பான அச்சம் மேலும் அதிகரித்துள்ள நிலையில் , கொரோனா தடுப்பு நிலையங்கள் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அந்த வகையில் இதுவரை இரத்தினபுரி, கராப்பிட்டிய, றாகம மற்றும் ஐ.டி.எச் மருத்துவமனைகள் அவசர நிலையை அறிவித்துள்ளன. மேலும் தற்போது பாதிக்கப்படுவோருக்கு ஆபத்தான அறிகுறிகள் உள்ளதுடன், நோயின் தாக்கமும் பாரதூரமாக உள்ளது.

Gallery

இதில், களுபோவில வைத்தியசாலையில் இடமின்றி வைத்தியசாலை நடைபாதையிலும், மக்கள் இடமின்றி தவிப்பதை காணக்கூடியதாகவும் உள்ளது.

அத்துடன், பிணவறைகளில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருப்பதையும் இந்த புகைப்படங்கள் வெளிக்காட்டுகின்றன.

 

இலங்கையில் எகிறும் கொரோனா – ஒரே நாளில் பதிவான அதிகூடிய மரணங்கள் !

இலங்கையில் கொரோனா தொற்றினால் நேற்று (04) 94 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிவிப்பில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,821ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இலங்கையில் பதிவான அதிகூடிய ஒருநாள் கொரோனா இறப்பாக இந்த எண்ணிக்கை பதிவாகி உள்ளது.

மேலும் நாட்டில் இன்று 1,885 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இன்று இதுவரையில் 2,669 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 321, 424 ஆக அதிகரித்துள்ளது.

“தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் இருந்து கடற்படை தளபதி வசந்த கரன்னகொட எவ்வாறு விடுவிக்கப்பட்டார்..? – சர்வதேச மன்னிப்புச் சபை கேள்வி !

தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு, காணாமலாக்கப்பட்டதாக கூறப்படும் வழக்கில் இருந்து கடற்படை தளபதி வசந்த கரன்னகொட எவ்வாறு விடுவிக்கப்பட்டார்..? என்பதை சட்டமா அதிபர் திணைக்களத்தின் முடிவு குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளது.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கில் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கடத்தி, காணாமல் ஆக்கியமை, அவர்களைக் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னாகொட உள்ளிட்ட பிரதிவாதிகள் 14 பேருக்கு எதிராக சட்ட மா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட குறித்த குற்றப்பத்திரிகையை இரத்து செய்யக்கோரி முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட ரிட் மனு தாக்கல் செய்திருந்தார். குறித்த மனு  நேற்று கொழும்பு மேல் நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தபோதே கரன்னாகொட மீது குற்றச்சாட்டுகளை தொடர முடியாது என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விடயம் குறித்து கருத்து வெளியிடுகையிலேயே சர்வதேச மன்னிப்புச் சபையின் ஆசிய – பசுபிக் பிராந்திய பணிப்பாளர் யாமினி மிஸ்ரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“பல தசாப்தங்களாக பல்லாயிரக்கணக்கான மக்கள் வலுக்கட்டாயமாக காணாமல்போன நிலையில்,  கட்டாயமாக காணாமலாக்கப்பட்டவர்கள் பட்டியலில் உலகளவில் இரண்டாவது இடத்தில் இலங்கை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இந்த வழக்கு ஏற்கனவே இலங்கை நீதிமன்றங்களில் விதிக்கப்பட்ட தடைகளால் தடைப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், நேற்யை முடிவு பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நீதி வழங்குவதில் மேலும் தாமதத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், சட்டமா அதிபர் திணைக்களம் அதன் முடிவிற்கான காரணங்களை விளக்க வேண்டும்.மேலும் இலங்கை அதிகாரிகள் காணாமல் போன மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

‘பூமியில் விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி விரைவில் எழுந்து ஆட்சியை கைப்பற்றும்.” – மைத்திரிபால சிறிசேன சபதம் !

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் நிறைவேற்றப்படவில்லை என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

புத்தளம் மாவட்டத்தில் இடம் பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பூமியில் விழுந்துள்ள பலம் பொருந்திய கட்சி விரைவில் எழும். ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உரிய நேரத்தில் தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும்.

இடம்பெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல் ஆகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன என்ற புதிய கூட்டணியை உருவாக்கினோம்.

தேசிய பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் ஆட்சிமாற்றம் ஏற்படும் போது மாற்றமடையாத உறுதியான அரசியல் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றார்