September

September

இலங்கையில் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வேண்டுகோள் விடுக்கும் கர்ப்பிணி தாய்மார்கள் !

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்ட கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம்  வேண்டுகோள் விடுக்க ஆரம்பித்துள்ளனர் என  மருத்துவர்சனத் லெனரோல் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கர்ப்பிணித் தாய்மார்கள் பலர் தங்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் வரை கர்ப்பம் தரிப்பதனை ஒருவருடம் தாமதப்படுத்துமாறு அண்மையில் விசேட வைத்தியர் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த கோரிக்கையைத் தவறாகப் புரிந்துக் கொண்டமையின் காரணமாகக் கர்ப்பிணி தாய்மார்கள் வயிற்றில் வளரும் கருவை கலைக்க வைத்தியர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சட்டத்திற்கமைய தாயின் உயிருக்கு ஆபத்தாக இருந்தால் மாத்திரமே கரு கலைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உலகிற்கு வந்த புதிய நோயாகும். உலகம் முழுவதும் அதன் செயற்பாடு பற்றிய வரையறுக்கப்பட்ட தரவுகள் மாத்திரமே இன்னமும் உள்ளது. மேலும் ஒரு வருடத்திற்குள் விஞ்ஞானிகள் அதற்கு புதிய தடுப்பூசி அல்லது மருந்தை உருவாக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஒருவருட கர்ப்பத்தைத் தாமதப்படுத்துவது தாய்க்கும் கருப்பையில் வளரும் குழந்தைக்கும் நன்மையை ஏற்படுத்தும் என நிபுணர் தனது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல் உடனடியாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தடுப்பூசிகளைப் பெற்றுக் கொள்வதன் மூலம் வயிற்றில் வளரும் குழந்தை அல்லது தாய் கொரோனா தொற்றினாலும் ஏற்படும் ஆபத்துக்களைக் குறைத்துக் கொள்ள முடியும் என மகளிர் வைத்திய நிபுணர் சனத் லெனரோல் மேலும் தெரிவித்துள்ளார்.

விடைபெற்றார் சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர் !

சிம்பாப்வே அணியின் முன்னணி துடுப்பாட்டவீரர் பிரெண்டன் டெய்லர். 35 வயதான இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதன்முறையாக ஜிம்பாப்வே அணியில் அறிமுகம் ஆனார். தற்போது வரை 34 டெஸ்ட், 204 ஒருநாள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
டெஸ்ட் போட்டியில் 6 சதங்களுடன் 2320 ஓட்டங்களும், ஒருநாள் போட்டியில் 11 சதங்களுடன் 6677 ரன்களும், டி20-யில் 934 ஓட்டங்களும் அடித்துள்ளார்.
தற்போது அயர்லாந்து- சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். ஓய்வு பெறும் கடைசி போட்டியில் சிறப்பான வகையில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், தொடக்க வீரராக களம் இறங்கிய டெய்லர் 7 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அடைந்தார். இதன்மூலம் ஏமாற்றத்துடன் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்த பயணத்திற்காக எப்போதும் நன்றிக்குரியவனாக இருப்பேன். நன்றி. என டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

திடீரென வீடியோ மூலமாக பேசிய அல்கொய்தாவின் இறந்து போனதாக கூறப்பட்ட தலைவர் !

அமெரிக்காவில் இரட்டை கோபுரம், பென்டகன் உள்ளிட்ட இடங்களை விமானத்தை மோதவிட்டு பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவம் கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ந்திகதி நடைபெற்றது. இந்த தாக்குதல் 9/11  எனக் குறிப்பிடப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியில் அமெரிக்கா இராணுவம் ஈடுபட்டது. தலிபான் தலைவர் பின்லேடன் உள்பட முக்கிய பயங்கரவாத தலைவர்கள் கொலை செய்யப்பட்டனர். அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பின் தலைவர் அய்மன் அல்-ஜவாஹிரி கடந்த ஆண்டு உடல்நலம் குன்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது. அதன்பின் அவர் பொதுவெளியில்  தோன்றவில்லை.
இந்த நிலையில் நேற்று வீடியோவில் தோன்றி செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. 9/11 தாக்குதல் சம்பவம் அனுசரிக்கப்படும் நாளில் வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது. சிரியாவில் ரஷிய இராணுவம் மீது அல்-கொய்தா இராணுவம் நடத்திய தாக்குதலை பாராட்டியுள்ளார்.
எஸ்.ஐ.டி.இ. உளவுக்குழு இந்த வீடியோவை ஆராய்ந்து நேற்று வெளியிடப்பட்டதை உறுதி செய்துள்ளது. இந்த வீடியோவில் தலிபான் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை.

தமிழர்களிடையே மேலும் தூணடப்படும் மதப்பிரச்சினை – மடுவில் பிள்ளையார் சிலை அகற்றப்பட்டு அந்தோனியார் சிலை !

மன்னாரில் இந்துக்களுக்கும் – கிறிஸ்தவர்களுக்குமான உறவில் தொடர்ச்சியான விரிசல் நிலை ஏற்பட்டுவருகின்றது. திருக்கேதீீஸ்வர வளைவு உடைப்பு தொடங்கி இன்றுவரை அந்த பிரச்சினையை சில விசமிகள்  தங்களுடைய அரசியல் சுயலாபத்துக்காக பயன்படுத்துவது போல தோன்றுகிறது.

 

இந்த நிலையில் குறித்த  மன்னார் மடு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் பிள்ளையார் சிலை ஒரே இரவில் சிதைக்கப்பட்டு அப்பகுதியில் அந்தோனியார் சிலை வைக்கப்பட்ட சம்பவம் புதிய பல அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,

மடு – பரப்புக்கடந்தான் வீதியில் மடு தேவாலயத்திற்கு அண்மையில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக அப்பகுதியில் மரத்தின் கீழ் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பகுதியில் சிறிய கோயில் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்த நிலையில் முதல் கட்டமாக மூலஸ்தானம் அமைக்கப்பட்டு அதற்குள் தற்காலிகமாக பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த பகுதியில் உள்ள பிள்ளையார் சிலையை சில விஷமிகள் தூக்கிவிட்டு அந்தோனியார் சிலையை வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் உட்பட எவரும் நடவடிக்கை எடுக்க முன்வரவில்லையெனவும் கொரோனா ஊரடங்கு காலப்பகுதியில் இவ்வாறான மத வாத செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாகவும் பொது மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

ஆரம்பமானது ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் – இலங்கை தொடர்பில் வெயளியிடப்பட்டுள்ள கடும் அதிருப்தி !

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத்தொடர் இன்றைய தினம் ஜெனிவாவில் ஆரம்பமாகியது.  இன்று(13) ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48வது கூட்டத்தொடரானது எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி வரையில் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரின்போது நிறைவேற்றப்பட்டிருந்தது. இந்த தீர்மானத்திற்கு அமைவாக இலங்கையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்த வாய்மூல அறிக்கையினை மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சல் பட்ச்லெட் இன்றைய தினம் முன்வைத்திருந்தார்.

இதன் போது உரையாற்றிய அவர் ,  இதன்போது மரணதண்டனை கைதி துமிந்த சில்வா விடுதலை, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னகொட, குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.

மேலும் மனித உரிமைகள் தொடர்பாக போதுமான முன்னேற்றத்தை இலங்கை உறுதி செய்ய தவறியமை குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் கவலை வெளியிட்டுள்ளதோடு,  இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

அத்தோடு காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்றும் சட்டத்தரணி உள்ளிட்ட பலர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையினையும்  சுட்டிக்காட்டிய அவர், உடனடியாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மீளாய்வு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்நிலையில் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பாக நீதியை நிலைநாட்டுவதற்கான செயற்பாடுகள் குறித்து உறுப்பு நாடுகள் தொடர்ந்தும் அவதானம் செலுத்தவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

“சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும்.” – தமிழக முதல்வருக்கு அடைக்கலநாதன் கடிதம் !

தமிழகம் – திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

திருச்சி சிறப்பு முகாமில் உள்ள இலங்கைத் தமிழர்கள் தம்மை விடுவிக்க கோரி நடத்தி வரும் போராட்டம் தொடர்பாக இன்று திங்கட்கிழமை (திங்கட்கிழமை) ஊடகத்துக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், “அவர்களின் போராட்டம் தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில், அவர்கள் அனைவரும் துரிதமாக விடுதலை செய்யப்பட வேண்டும், நீதிமன்றத்தில் எந்தவித வழக்குகளும் இல்லாதவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.வழக்கு உள்ளவர்களின் வழக்குகள் அனைத்திற்கும் அவர்கள் தீர்ப்பை பெறும் காலம் உடனடியாக துரிதப்படுத்தப்பட வேண்டும்.

அத்தோடு இலங்கையில் இருந்து எல்லை தெரியாமல் இந்தியக் கடல் எல்லைக்குள் சென்றவர்கள் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் ஏனையவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் அவர்களுடைய கோரிக்கைகளை மனதில் கொண்டு செயற்பட்டு, அவர்களை அவர்களது குடும்பங்களுடன் இணைக்க அரசு முன்வர வேண்டும்.

அதேவேளை சட்டத்துக்கு முரணான செயற்பாடுகளை யாரும் செய்யக்கூடாது. இனிவரும் காலங்களில் இந்திய சட்டங்களுக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுவதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

மேலும் திருச்சி சிறப்பு முகாமில் இருப்பவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்பது எமது கோரிக்கையாக உள்ளது. அதற்கான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்கிறோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

“மத்திய வங்கி அரசியல் தளமாக மாறுவது ஒரு மோசமான நிலை.” – ஐக்கிய மக்கள் சக்தி

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட் கப்ராலை நியமிப்பது அரசாங்கத்தின் அரசியல் நியமனம் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் மத்திய வங்கி, ஒரு சுயாதீன நிறுவனமாக, அரசியல் தலைமையகமாக மாறும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் ஆளுநர், பேராசிரியர் டபிள்யூடி லட்சுமணன் தனது இராஜினாமா குறித்து ஊடகங்களுக்கு ஒரு தீவிரமான அறிக்கையை வெளியிட்டார். நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிக்க ஒரு சுயாதீனமான திட்டத்தை முன்னெடுக்கும் போது அவர் எதிர்கொண்ட சவால்களையும் இதன் போது முன்னிலைப்படுத்தினார் .

அரசியல் தலையீடுகளால் பொருளாதாரத்தை நிர்வகிக்க முடியவில்லை என அவர் தெரிவித்தாகவும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

மத்திய வங்கி அரசியல் தளமாக மாறுவது ஒரு மோசமான நிலை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

“கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும்.” – இத்தலியில் பிரதமர் மஹிந்த !

“கடந்த காலத்தின் குறைகளைப் பற்றி விவாதிப்பதற்குப் பதிலாக, நாம் நிகழ்காலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டும். சகோதரத்துவம் மற்றும் புரிதலின் ஊடாக உறவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்.” என ஜி-20 சர்வமத மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

மேலும் மனிதக் கடத்தலை முற்றாக இல்லாதொழிப்பது இலங்கை அரசாங்கத்தின் பிரதான அணுகு முறையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இத்தாலியின், பொலஞ்ஞா நகரில் நடைபெறும் ஜி-20 சர்வமத மாநாட்டின் ஆரம்ப தினமான நேற்றைய முதலாவது அமர்வில் உரையாற்றியபோதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உரையைாற்றிய அவர்,

ஒரு தேசத்தின் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே எதிர்காலம் தங்கியுள்ளது. பொருளாதார, அரசியல் மற்றும் சமூக இலக்குகளை அடையும்போது எமது எதிர்காலம், ஒரே தேசம் என்ற ரீதியில் அதன் ஒற்றுமை மற்றும் சகவாழ்விலேயே தங்கியுள்ளது. இன, மத மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை என்பன எமது பிராந்தியத்தின் முக்கிய அம்சமாகும். எமது நாடுகளில் பல்வேறு இன, மத மற்றும் கலாசார பின்னணிகளை கொண்ட மக்கள் வசிக்கின்றனர்.

எனினும், இந்த வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து, பல்வேறு சமூகங்களை இணைத்து முதிர்நிலை தேசம் என்ற உணர்வை கட்டியெழுப்பும் சவாலுக்கு நாம் பதிலளித்துள்ளோம். தீவிரவாத சித்தாந்தங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் என்பன மிக முக்கியமான சவால்களாகும். இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த செப்டெம்பர் 11 பயங்கரவாதத் தாக்குதல்களின் சோகமான சம்பவங்களை நினைவுகூர வேண்டும். அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் நாம் அத்துயரத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும்.

குற்றவாளிகள் மற்றும் அவர்களினால் கூறப்படும் நோக்கம் என்னவாக இருப்பினும் இந்த சம்பவம் அனைத்து விதத்திலும் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை நினைவூட்டுகிறது. கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதற்குமான நட்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

நவீன தேவைகளுக்கேற்ப கல்வியின் உள்ளடக்கத்தை திருத்துதல் மற்றும் இளைஞர்களை திருப்திகரமான வாழ்வாதாரத்தை நோக்கி ஈடுபடுத்துவதற்கே இலங்கை அரசாங்கம் தற்போது முன்னுரிமை வழங்கியுள்ளது. முழு உலகமும் தற்போது எதிர்நோக்கியுள்ள கடுமையான சுகாதார நெருக்கடி, அனைவரையும் ஒன்றிணைப்பதற்கு உதவியுள்ளது.

கொவிட் – 19 நெருக்கடியானது பல்வேறு மதங்கள், இனங்கள் மற்றும் நாகரிகங்கள் என்ற வேறுபாடின்றி ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொற்றிலிருந்து தப்பித்து மீண்டும் வாழ்வை ஆரம்பிக்க வேண்டுமாயின் சர்வதேச ஒத்துழைப்பை பலப்படுத்த வேண்டும்.

நவீன மருத்துவத்தின் மூலம் கிடைக்கும் தடுப்பூசி மற்றும் பிற பாதுகாப்புகள் உலகம் முழுவதும் காணப்பட வேண்டியதுடன், சர்வதேச அமைப்பு மற்றும் வலுவான பொருளாதாரத்தை கொண்ட நாடுகளிடமிருந்து நிதி உதவிகளை பெற்றுக் கொள்வதற்கு பொருளாதார ரீதியில் வலுவற்ற நாடுகளுக்கான சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும். இது சிலர் மாத்திரமன்றி அனைவரும் வெற்றி பெறுவதற்கான போராட்டமாகும்.

கொவிட் தொற்று காரணமாக நாடுகள் தமது எல்லையை தற்காலிகமாக மூடுவது உகந்தது என்ற போதிலும், தனிமைப்படுத்தல் என்பது அதற்கு தீர்வல்ல. அத்துடன் நல்லிணக்கம் என்பது காலத்தின் முக்கியமான தேவையாகும்.

ஒரு வேளை சாப்பாட்டை குறைத்து நாட்டுக்காக அர்ப்பணிப்பு செய்யுமாறு இலங்கை மக்களிடம் ஆளும்கட்சி கோரிக்கை !

“நாம் எமது சம்பளங்களை கொடுத்து அர்ப்பணிப்பு செய்துள்ளோம். அது போல இரண்டு வேளை சாப்பிட்டு மக்கள் அர்ப்பணிப்பு செய்ய வேண்டுமென ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பின் போதே  அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும்  தெரிவித்திருந்த போது ,

நாடு பாரிய பொருளாதாரப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது. சில சந்தர்ப்பங்களில் மூன்று வேளை சாப்பிட்ட மக்கள் இரண்டு வேளை சாப்பிட்டு அர்ப்பணிப்பு செய்ய நேரிடலாம். நாம் எமது சம்பளங்களை கொடுத்து அர்ப்பணிப்பு செய்துள்ளோம். 2000 ரூபா கொடுப்பனவு போதுமானதல்ல என்பது எமக்குத் தெரியும், அரசாங்கத்திடம் இருந்தால் இரண்டாயிரம் இல்லை இருபதாயிரம் வழங்குவோம்.

எனினும், தற்பொழுது பாரிய நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு இரண்டு வேளை உணவு உட்கொண்டு மக்கள் செய்யும் அர்ப்பணிப்பு எதிர்கால தலைமுறையின் வளர்ச்சிக்கு உதவியாக அமையும். நாட்டின் வருமானம் இல்லாது போனால் அரசாங்கத்தினால் எதையும் செய்ய முடியாது.

மக்கள் எதிர்பார்த்த எல்லா விடயங்களையும் செய்ய முடியாமைக்காக நாம் வருந்துகின்றோம். நாம் அனைவரும் அர்ப்பணிப்பு செய்வதன் மூலம் முன்னோக்கிச் செல்ல முடியும் என கருதுகின்றேன். எதிர்க்கட்சி உள்ளாடைகளை பிடித்துக் கொண்டு கூச்சலிடுவதாகவும், அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் எதனையும் செய்யவில்லை எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

மக்களின் 14 பில்லியன் ரூபாயினை அபகரித்தவர் எப்படி மத்திய வங்கி ஆளுநராகலாம்..? – ஜே.வி.பி கேள்வி !

இலங்கை மத்திய வங்கிக்கு அரசியல்வாதியொருவரை ஆளுநராக நியமிப்பதால் நாட்டிற்கு அபகீர்த்தி ஏற்படும் என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.

2008 முதல் 2012 வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய திறைசேரி பிணைமுறி பரிமாற்றங்கள் மூலம் இலங்கை மக்களின் 14 பில்லியன் ரூபாயினை அபகரித்தவர் அஜித் கப்ரால் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் கிரேக்கத்தின் கருவூல பத்திரங்களை அஜித் கப்ரால் எப்படி கொள்வனவு செய்தார் என ஜேவிபியின் தலைவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

அஜித் கப்ராலை நியமிப்பது இலங்கையின் அரசியல் நிலைநிலைமை குறித்து சர்வதேச சமூகம் கொண்டுள்ள நிலைப்பாட்டினை மேலும் மோசமாக்கும். சுயாதீன அமைப்பை அரசியல்வாதி கைப்பற்றுவதன் காரணமாக இலங்கையின் பொருளாதாரம் கறுப்புபட்டியலில் இணைக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.