September

September

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு !

உலகக் கிண்ண ரி20 போட்டிக்கான இலங்கை அணிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ அனுமதி வழங்கியுள்ளார்.

அதற்கமைய பெயரிடப்பட்டுள்ள வீரர்களின் விபரங்கள் வருமாறு,

தசுன் ஷானக்க (தலைவர்)
தனஞ்சய டி சில்வா (உப தலைவர்)
குசல் பெரேரா
தினேஸ் சந்திமல்
அவிஷ்க பெர்னாண்டோ
பானுக ராஜபக்ஷ
சரித் அசலங்க
வனிந்து ஹசரங்க
கமிந்து மெண்டிஸ்
சாமிக கருணாரத்ன
மஹீஷ் தீக்ஷன
பிரவீன் ஜயவிக்ரம
நுவன் பிரதீப்
துஷ்மந்த சமீர
லஹிரு மதுஷங்க
லஹிரு குமார
பினுர பெர்னாண்டோ
அகில தனஞ்சய
புலின தரங்க

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் !

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 48 ஆவது கூட்டத் தொடர் நாளை 13 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாக உள்ளது. ஜெனிவாவில் ஆரம்பமாகும் இந்த கூட்டத்தொடர் ஒக்டோபர் 8 ஆம் திகதி வரை நடைப்பெறும். அனைத்துலக நாடுகளின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட உள்ளது.

முதல் நாளான நாளை இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பான நிலவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் வாய்மூல அறிக்கையை வெளியிடுவார்.

மேலும் அன்றைய தினமே ஆப்கானிஸ்தான் , வெனிசூலா , மத்திய அமெரிக்க நாடான நிகரகுவா மற்றும் மியன்மார் ஆகிய நாடுகள் குறித்தும் கவனத்தில் கொள்ளப்பட உள்ளது.

கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளிட்ட பல நாடுகள் ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்ற உள்ளன.

இலங்கையின் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்கள் குறித்து இந்த நாடுகள் கேள்விகளை எழுப்பலாம். மறுபுறம் ஏற்கனவே வலியுறுத்தப்பட்ட சர்வதேச பொறிமுறைக்கான அழுத்தங்களும் காணப்படும் என கணிக்கப்படுகின்றது.

அதே போன்று வெளிவிவகார அமைச்சர் பேரசிரியர் ஜீ.எல். பீரிஸ் இணைய வழியாக கலந்துக்கொண்டு உரையாற்றவுள்ளார்.

இதன் போது தேசிய நல்லிணக்கம், காணாமல் போனோர் விவகாரம் மற்றும் நட்டஈடு வழங்குதல், பயங்கரவாத தடைச்சட்டம், மனித உரிமை நிலவரம் மற்றும் அரசியல் தீர்வு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்தும் விளக்கமளிக்கவுள்ளார்.

இந்த நிலைப்பாட்டை கொழும்பில் உள்ள அனைத்துலக இராஜதந்திர மையங்களுக்கும் ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

100 மில்லியனை எட்டிய இலங்கை பாடகி யொஹானியின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் !

தற்போது உலகளவில் மிகவும் பரவலாக பேசப்படும் இலங்கை யுவதியான யொஹானியின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது.

“யொஹானி”யின் “மெனிக்கே மகே ஹிதே” பாடல் இலங்கையையும் தாண்டி உலகளாவிய ரீதியில் மிகவும் பரபல்யமடைந்து, தமிழ், ஹிந்தி, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இலங்கை வரலாற்றில் சர்வதேச ரீதியில் “யூடியூப்” பார்வைகளின் எண்ணிக்கை 100 மில்லியனைத் தாண்டிய பாடல் என்ற பெருமையை “மெனிக்கே மகே ஹிதே” பெற்றுள்ளது.

நேற்று மாலை 6.30 மணிளவில், 10 கோடி பார்வையாளர்கள் என்ற மைல் கல்லை எட்டியுள்ளது. அண்மையில் 50 மில்லியனை எட்டியிருந்த குறித்த பாடல் மிக விரைவாக 100 மில்லியனை எட்டி சாதனை படைத்துள்ளது.

பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்க தயாராகும் இலங்கை – எதிர்ப்பு தெரிவித்துள்ள பேராசிரியர் திஸ்ஸ விதாரண !

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம் மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக சிறுவர் நோய் நிபுணர்களின் நிறுவனம் குறிப்பிட்டுள்ளதது என அதன்  வைத்திய நிபுணர் ஆர்.எம்.சுரன்ன பெரேரா தெரிவித்தார்.

இதன் முதற்கட்டமாக நாள்பட்ட நோய்கள் கொண்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் செப்டம்பர் மாத இறுதி வாரத்தில் இருந்து அவர்களுக்கான பைசர்  தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் நாட்டில் தற்போது பாடசாலை திறப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படவில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டாம் என்றும் இது குறித்து ஆராயும்படியும் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினால் சினோபாம் அல்லது ஸ்புட்னிக் தடுப்பூசிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

தொலைக்காட்சி செவ்வி ஒன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் அதிகரிக்கும் இராணுவ ஆட்சியின் வன்முறைகள் – மொத்த உயிர்பலி 1,058 !

மியன்மார் நாட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற பொதுத்தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி கடந்த பிப்ரவரி 1ந்திகதி ஆட்சியை கைப்பற்றிய இராணுவம், நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை கைது செய்து சிறை வைத்தது.
இதனை தொடர்ந்து இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு மாபெரும் போராட்டம் வெடித்தது.‌ நாட்டில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க கோரியும், சிறை வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். அதேவேளை இராணுவ ஆட்சிக்கு எதிராக பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் உருவாகியுள்ளது. இந்த குழுக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே அவ்வப்போது மோதல் நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டங்கள், கிளர்ச்சியாளர்கள் குழுக்களை இராணுவம் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. மியான்மரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்தை ஒடுக்கும் நடவடிக்கையில் இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் இதுவரை 1,058 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் மியான்மரை விட்டு வெளியே அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், மியான்மர் இராணுவத்திற்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே நேற்று திடீரென துபாக்கிச்சண்டை நடைபெற்றது. இந்த மோதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். இராணுவ ஆட்சிக்கு எதிராக மியான்மரில் தங்களால் செயல்பட்டு வரும் தேசிய ஒருமைப்பாட்டு அரசை ஐ.நா. அங்கீகரிக்க வேண்டும் என மியான்மார் எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

“தேவைப்படுவோருக்கு உள்ளாடைகள் வழங்க நான் தயார். சதொசாவில் குறைந்த விலையில் பெறுங்கள்.” – அமைச்சர் பந்துல !

அத்தியாவசியமற்ற அல்லது அவசரமற்ற 623 பொருட்களின் இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்படுவதாக அண்மையில் அரசால் அறிவிக்கப்பட்டிருந்தது.  சர்வதேச ரீதியிலான அவசர நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே, அவசரமற்ற பொருட்களுக்கான இறக்குமதி விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, கையடக்க தொலைபேசிகள், நிலையான தொலைபேசி உள்ளிட்ட தொலைத் தொடர்பு சாதனங்கள், மின் விசிறிகள், தொலைகாட்சி, குளிர்சாதன பெட்டி, சலவை இயந்திரம், டிஜிட்டல் புகைப்பட கருவிகள் உள்ளிட்ட வீட்டு சாதனங்கள், ஆடைகள் முக்கியமாக  உள்ளாடைகள் போன்ற இறக்குமதிகளுக்கு எதிராக 100 சதவீத காசு எல்லை வைப்பு தேவைப்பாட்டினை விதிப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பெரிய பேசுபொருளாகியிருந்தது. உள்ளாடைகள் தொடர்பிலாக பல கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் உலவிக்கொண்டிருந்தன.

இந்த நிலையில் இலங்கையில் உள்ளாடைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்ற பொறுப்பை வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் தான் ஏற்றுக் கொள்வதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆடை உற்பத்தியாளர்கள் சிலருடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் பந்துல குணவர்தன இதனைத் தெரிவித்தார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

நாட்டில் தேவை ஏற்படும் எந்த ஒரு நபருக்கும், எந்த ஒரு தரத்திலும் உள்ளாடை வழங்குவதற்கு வர்த்தக அமைச்சர் என்ற அடிப்படையில் நான் தயார். உள்ளாடைகள் அதிகம் கையிருப்பில் உள்ளன. இலங்கையிலுள்ள ஆடைத் தொழிற்சாலைகளில் இதுவரை உள்ளாடைக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை.

எதிர்காலத்தில் தேவைப்படும் நபர்களுக்கு அதனை குறைந்த விலையில் சதொச ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடன் பிரச்சினையை தீர்க்க மேலும் 250 கோடி அமெரிக்க டொலர்களை கடன் வாங்கும் அரசு !

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எதிர்கொண்டுவரும் பாரிய கடன் பிரச்சினையை தீர்ப்பதற்காக 250 கோடி அமெரிக்க டொலர்களை சர்வதேச சந்தையிலிருந்து கடனாகப் பெற முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

எரிசக்தி அமைச்சு இதற்கான பேச்சுக்களை ஆரம்பித்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

கன்செப்ட் குளோபல் என்கின்ற நிதி நிறுவனத்தின் ஊடாக இந்த பெருந்தொகை கடனைப் பெறவுள்ளதோடு, அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது.

இரண்டு வருட நிவாரண காலத்துடன் சேர்த்து இந்த கடன் தொகையை 12 வருடங்கள் என்ற அடிப்படையில் மீளச்செலுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்படவுள்ளது. 03 சதவீத வருட வட்டி இதற்காக விதிக்கப்படவுள்ளதாகவும் தெரியவருகின்றது.

“எங்களது குடும்பம் மகனின் உழைப்பில் தான் வாழ்கிறது. அவரை விடுதலை செய்யுங்கள்.” – பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவரின் தாய் !

2020ஆம் ஆண்டிலிருந்து சமூக வலைத்தள பதிவுகள் தொடர்பாக இறுக்கமான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. முக்கியமாக தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பான பதிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தோரும் – விடுதலைப்புலிகளின் தலைவர் மற்றும் – அமைப்பின் சின்னங்களை பகிர்ந்தோர் என பலர் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுடைய விடுதலை தொடர்பில் சாணக்கியன் உள்ளிட்ட கூட்டமைப்பின் அங்கத்தவர்கள் வலியுறுத்தியும் இன்னமும் அரசு தரப்பிலிருந்து முடிவு கிடைக்கவில்லை.

அண்மையில் இது தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியால் ஒரு விசாரணைக்குழு நிறுவப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் திருகோணமலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் ஜனாதிபதியிடம் முக்கிய கோரிக்கை  ஒன்றை முன்வைத்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் பெற்றோர்கள்  ஊடக சந்திப்பு ஒன்றினை நேற்று (சனிக்கிழமை) ஏற்பாடு செய்திருந்தனர்.

இதன்போது அதில் கலந்துகொண்ட பாலகிருஷ்ணன் சுகுந்தகுமாரி கூறியுள்ளதாவது, “கடந்த வருடம் 27.11.2020 திகதியன்று, எனது மகனான பாலகிருஷ்ணன் ரதிகரன் (28 வயது)  முகநூலில் கவிதை ஒன்றினை பதிவிட்டமைக்காக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் சுமார் ஒரு வருடமாக எனது மகனை இழந்து, எங்களது குடும்பம்  துன்பத்தில் உள்ளது. எனவே, ஜனாதிபதி எமது நிலைமையை உணர்ந்து அவரை விடுதலை செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று குறித்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட  சண்முகராஜா கலைச்செல்வி தெரிவித்துள்ளதாவது,  “கடந்த 02.07.2021 திகதியன்று  எனது மகன் விதுலக்ஸ்சன் (24 வயது) கைது செய்யப்பட்டார்.

மேலும், எங்களது குடும்பம் அவரது உழைப்பில்தான் வாழ்கின்றது. ஆகவே எனது மகனை மீட்டுத் தருமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்ட கிறிஸ்டி வினோத் லிஷாலினி தெரிவித்துள்ளதாவது, “எனது கணவர் கிறிஸ்டி வினோத் (36 வயது) கைது செய்யப்பட்டு, சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  இரண்டு பெண் பிள்ளைகளை கொண்ட எனது குடும்பம் தற்சமயம் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றது.

ஆகவே, அவரை விடுதலை செய்து எங்களது துயரை போக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

யாழ்.பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி சடலமாக மீட்பு – பத்து ஆண்டுகளுக்குப் பின்பு முதல் மருத்துவத்துறை மாணவி !

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவி ஒருவர் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மருத்துவ பீடத்தை சேர்ந்த திருலிங்கம் சாருகா என்ற முதலாமாண்டு மாணவி ஒருவரே நேற்று மாலை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கற்றல் சுமை காரணமாக அவர் உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவருடைய மரணத்துக்கான காரணம் இதுவரை உறுதியாக தெரியவரவில்லை.

சுன்னாகத்தினைச் சேர்ந்த குறித்த மாணவி உடுவில் மகளிர் கல்லூரியில் முதன்மையான மாணவியாக திகழ்ந்துள்ளார்.

குறித்த கல்லூரியில் பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் மருத்துவத் துறைக்குத் தெரிவாகி பாடசாலைக்கு பெருமை சேர்த்தவர் என்றும் அண்மையில் வெளியாகிய பல்கலைக்கழக பரீட்சை முடிவுகளிலும் நிறைவான புள்ளிகளைப் பெற்றிருந்தவர் என்றும் நெருக்கமான மருத்துவப்பீட மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட மகன் எங்கே.. – விடை தெரியாமலேயே இறந்து போன தந்தை !

இறுதி யுத்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடியலைந்த தந்தை ஒருவர், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

வவுனியா- மதியாமடு, புளியங்குளம் எனும் முகவரியில் வசித்து வந்த, காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனுக்கு, நீதி கேட்டுப் போராடிய செபமாலை இராசதுரை (பிறப்பு:1948.12.04), தனது மகன் பற்றிய உண்மை நிலை ஏதும் அறியாமலேயே  நேற்று முன்தினம்  (வெள்ளிக்கிழமை) உயிரிழந்துள்ளார்.

கடந்த 2009ம் ஆண்டு இறுதி யுத்த முடிவின்போது 2009.05.24 அன்று ஓமந்தை சோதனைச் சாவடியில் வைத்து, இராணுவத்தினர் இவரது மகனான இராசதுரை விஜி (பிறப்பு: 1987.05.07) என்பவரை கைது செய்து, குடும்பத்தினரிடமிருந்து தனியாக பிரித்து அழைத்துச் சென்றிருந்த நிலையில், கடந்த 12 வருடங்களாக மகன் பற்றிய நம்பகரமான தகவல் ஏதும் அறியாமலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் ஆயிரத்து 668 நாட்கள் கடந்தும் நடைபெற்று வரும் ‘காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு நீதி கேட்கும் தொடர் போராட்டத்தில்’ தனது முதுமைக் காலத்திலும் செபமாலை இராசதுரை அவர்கள் நல்ல தேக ஆரோக்கியத்தோடு தன்னை இணைத்துக் கொண்டு, இதுவரைக் காலமும் போராடி வந்தமை குறிப்பிடத்தக்கது.