September

September

“சம்பந்தன் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை என்று சொல்லி தமிழ்மக்களை நம்பவைப்பார்.”- ஐ.நாவுக்கான கடிதம் தொடர்பில் சிறிதரன் !

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐநாவுக்கு அனுப்பிய கடிதம் தொடர்பில்  அதிலுள்ள  விடயங்கள் தொடர்பில்  நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்

இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

அதாவது இலங்கையில் ஒரு போர்க்குற்றம் நடைபெற்றது  இன அழிப்பு நடைபெற்றது என்பது தெட்டத் தெளிவான உண்மை. அதாவது இன்று காணாமல் போனோர் பற்றியோ அல்லது நில ஆக்கிரமிப்புக்கள் பற்றியும் இன்று எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை என்றும் தமிழர்கள் அடக்கி ஆளப்படுகின்ற ஒரு நிலையே  இங்கு காணப்படுகின்றது.

ஐ.நா வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கும் போது ,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான  தமிழீழ விடுதலை இயக்க அமைப்பினூடாக தங்களுக்கு அனுப்பப்பட்ட கடிதத்தின் தாங்கள் எந்த கையொப்பமும்  இடவில்லை.  அதேபோல சுமந்திரன் அவர்கள்  மின்னஞ்சல் ஊடாக அனுப்பி  வைக்கப்பட்ட கடிதத்தில்  இருதரப்பும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும் என்றும் காரணம் இது ஒரு தரப்பு களத்தில் இல்லை மற்றைய தரப்பான  அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது

குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது . ஒரு இன அழிப்பு இன அழிப்புப் போர்க்குற்றம் புரிந்திருந்தால் அதில் ஒரு தரப்பு இல்லாவிடின் அதனை எவ்வாறு விசாரிப்பது கண்முன்னே நடந்த இனப்படுகொலைக்கு அதில் குறிப்பிட்ட விடயம் எங்களுக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்கவில்லை. அது பற்றி ஆராயலாம் என கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் என தீர்மானித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான ஒரு கலந்துரையாடலின்போது சம்பந்தன் ஐயா குறித்த கடிதத்தை தான் ஒரு தனிமனிதனாக அனுப்பிவிட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்.

அவர் அதனை  அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது காரணம் அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார்.மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள். அவர் நாடாளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை.  மனித உரிமை மீறல்களை புரிந்தார்கள் அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார்.  அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு  உள்ளது.

ஆனால்  கடிதத்தை அனுப்பி விட்டு இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும். என்றால் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக  கருத முடியாது.  அவர் அனுப்பி இருக்கின்ற கடிதம் தொடர்பில் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை. நாங்கள் இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். பேசி இருக்கிறோம். ஆனால் கடந்த 19ஆம் திகதி அனுப்ப வேண்டிய கடிதத்தை நாங்கள் அனுப்ப தவறி இருக்கிறோம் இது எங்களிடம் இருக்கின்ற பெரும் தவறு என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும்!!!

இன்று செப்ரம்பர் 11 இன்றைய உலகின் அரசியல் வரலாற்றையும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றையும் புரட்டிப்போட்ட நாள். ஆம், 20 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலினால் 2977 பொதுமக்களும் 17 தற்கொலையாளிகளுமாக 2996 பேர் கொல்லப்பட்டனர் 6000 பேருக்கு மேல் காயப்பட்டனர். விடுதலைப் போராட்டங்களும் கூட பயங்கரவாதமாகப் பார்க்கப்பட வைக்கப்பட்ட நாள். எமது மண்ணில் நடந்தது விடுதலைப் போராட்டமா இல்லையா என்று எதிரும் புதிருமான கருத்துநிலைக்கு இன்னும் விடையில்லை. விடை கிடைக்கப்போவதும் இல்லை. அவரவர் தம் தம் கருத்துநிலைகளில் உறைந்துபோயுள்ளனர்.

ஆனால் எமது மண்ணில் நடந்த யுத்த வேள்வியில் வகைதொகையின்றி நல்ல மனிதர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அரசியல் முரண்பாடுகள் பல்வேறு இயக்கங்கள் அரசியல் கட்சிகள் என விதிவிலக்கில்லாமல் பல நூற்றுக்கணக்கான பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிக்கப்பட்டது. மனிதவளம் பற்றி எவ்வித சிந்தனையும் இல்லாதவர்களால் வழிநடத்தப்பட்ட விடுதலை இயக்கங்கள் மனித உயிர்களை துவசம் செய்து ‘விடுதலை’ காணலாம் என்று எண்ணிய காலம் அது.

அப்படிப்பட்ட காலத்தில் 2001 செப்ரம்பர் 11 க்கு மூன்று ஆண்டுகளுக்கு முன் நியூயோர்க்கின் இரட்டைக் கோபுரங்களுக்கு பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்த யாழ்ப்பாணத்தில் வழமைபோல் குண்டு வெடிப்பும் உயிரிழப்பும் நடந்தது. எம்என்எம் அனஸின் ‘பிணம் செய்யும் தேசம்’ ஆக இருந்த அன்றைய யாழ்ப்பாணத்தில் யாழ் மாநகர்சபை மேயர் பொன் சிவபாலன், யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் கொல்லப்பட்டனர்.

மேயர் பொன் சிவபாலன் என் நண்பன் பொன் சிவகுமாரனின் சகோதரன். எங்கள் இரு குடும்பங்களும் ஒரு பிள்ளையை சகோதரணை இழந்தது. இன்று இவர்களைப் பற்றி விமர்சிப்பவர்கள் தொடர் எழுதுபவர்கள் பலர் இந்த ‘விடுதலை போராட்டம்’ என்ற பெயரில் தங்களை வளர்த்து அந்த வரலாற்றை தங்களுக்கு ஏற்ப புனைந்து அதில் குளிர்காய்கின்றனர். நேற்று நண்பன் சிவகுமாரனுடன் பேசிய போது தன்னுடைய அண்ணனை காப்பாற்றியிருக்க வாய்ப்பு இருந்தது ஆனால் முடியவில்லை என்று அன்றைய சூழலை மீண்டும் ஒரு முறை மீட்டுக்கொண்டான். இன்று வரலாற்றுத் தொடர்கள் எழுதி வரலாற்றைப் புனைபவர்களும் அவற்றைக் கொண்டாடுபவர்களும் குண்டுச் சத்தத்தை காதால் கூட கேட்டறியாதவர்கள். தங்கள் முன் நடத்தப்பட்ட அத்தனை படுகொலைகளுக்கும் துணை போனவர்கள். இழப்பின் வலியை அறியாமல் அதனை கொண்டாடியவர்கள்.

பொன் சிவபாலன் ஒரு சிறந்த பேச்சாளர். அவருடைய கவிநயம் கொண்ட பேச்சால் பலரையும் வசீகரித்தவர். இன்று கட்சிக்குள் தலைமைப் போட்டிக்கு ‘ஐயா எப்ப போவார், கதிரை எப்ப காலியாகும்’ என்ற நிலை அன்றில்லை. பொன் சிவபாலன் கட்சியால் – தமிழர் விடுதலைக் கூட்டணியால் எவ்விதத்திலும் பயனடையவில்லை. ஆனால் தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு அவரால் பயன் கிடைத்தது. பொன் சிவபாலனின் பேச்சுத் திறமை அவருடைய நேர்மையால் கட்சிக்கு ஒரு வாக்கு வங்கி இருந்தது. அவருக்குப் பின் கட்சி காலாவதியாகிப் போய்விட்டது. கட்சிக்கும் மக்களுக்கும் தொடர்பற்றுப் போய்விட்டது.

பொன் சிவபாலன் போன்ற நேர்மைகொண்ட பலரை இந்த சமூகம் இன்று இழந்துவிட்டது. என் அண்ணனைப் போல் விடுதலைக்குப் போன பல ஆயிரம் ஆயிரம் இளைஞர்கள் யுவதிகள் – இந்த மனிதவளங்கள் வீணடிக்கப்பட்டு விட்டது. இன்று சுயநலம் மிக்க கயமைகொண்ட பலர் வரலாற்றை சூறையாடலாம் என நினைக்கின்றனர். ஆனால் உண்மைகள் நிரந்தரமாக உறங்கிவிடுவதில்லை. அவை தட்டி எழுப்பப்படும். அனைவரது தியாகங்களையும் வரலாறு விடுதலை செய்யும். கலீலியோ கலீலியை வரலாறு விடுவித்தது. திருச்சபையை வரலாறு அம்பலப்படுத்தியது. அதுபோல் உளவாளிகளையும் முகவர்களையும் சந்தர்ப்பவாதிகளையும் வரலாற்றைப் புனைபவர்களையும் வரலாறு அம்பலப்படுத்திவிடும். அவர்கள் இப்போதும் நிம்மதியாகத் தூங்குவதில்லை. சுடுகாட்டிலும் அவர்கள் நிம்மதியாக தூங்க முடியாது ஜிம்மி சவேல் மற்றும் எட்வேர்ட் கொல்ஸ்ரன் போல்.

அமெரிக்க மக்களை ஏமாற்றி உலக நாட்டு மக்களை ஏமாற்றி முஸ்லீம் பயங்கரவாதத்தை உருவாக்கி பின்லாடனை வளர்த்துவிட்ட அமெரிக்க ஏகாதிபத்திய அரசியலும் அம்மணமாகும்.

பொன்.சிவபாலன் 23 ஆவது நினைவு தினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிப்பு !

யாழ் மாநகர சபையின் மறைந்த முன்னாள் முதல்வர் சட்டத்தரணி பொன்.சிவபாலன் அவர்களது 23 ஆவது நினைவு தினம் இன்று யாழ் சித்தன்கேணியில் அனுஷ்டிக்கப்பட்டது.

பொன் சிவபாலன் அவர்கள் தமிழர் விடுதலைக் கூட்டணியினை பிரதிநிதித்துவப்படுத்தி யாழ் மாநகரசபையின் முதல்வராக பணியாற்றியதுடன் பிரபல சட்டத்தரணியுமாக விளங்கினார்.  யாழ் சித்தன்கேணியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கு சுடர் ஏற்றி மலர்மாலை அணிவித்து மலர் தூவி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்வில் வலிகாமம் மேற்கு பிரதேச சபை தவிசாளர் த. நடனேந்திரன் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினர்களான தங்க. முகுந்தன், எஸ் .அரவிந்தன் உட்பட குடும்ப உறுப்பினர்களும் பங்கு கொண்டிருந்தனர்.

1998 ஆம் ஆண்டு செப்ரெம்பர்  பதினோராம் திகதி யாழ் மாநகரசபையில் மாநகர போக்குவரத்து சம்பந்தமான உயர் அதிகாரிகளுடனான கலந்துரையாடலில் கூரைமேல் வைக்கப்பட்ட கிளைமோர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். அவருடன் கூடவே யாழ் நகர இராணுவத் தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிஸ், சிரேஷ்ட காவற்துறை அத்தியட்சகர் சந்திரா பெர்னாண்டோ, உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சந்திரமோகன், உதவிப் காவற்துறை அத்தியட்சகர் சரத் பெர்னாண்டோ, யாழ். தலைமையககாவற்துறை இன்ஸ்பெக்டர் மோகனதாஸ், யாழ் நகர பிரிகேட் மேஜர் கப்டன் ராமநாயக்க, காவற்துறை கான்ஸ்டபிள் ஜெராட், யாழ் மாநகர சபை உதவி ஆணையாளர் பத்மநாதன், வேலைப்பகுதிப் பொறியியலாளர் ஈஸ்வரன், கட்டட வரைபடக் கலைஞர் திருமதி மல்லிகா இராஜரட்ணம், தட்டெழுத்தாளர் பத்மராஜா ஆகியோர் அடங்கிய பன்னிரண்டுபேர் தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அரசியல்வாதி ஒருவரை எப்படி மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடியும்..? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி !

அரசியல்வாதி ஒருவரை எப்படி மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன  கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய வங்கியானது அரசிடமிருந்து பிரிந்து சுயாதீனமாக செயற்படவேண்டும் என்பதே அதன் கொள்கைகளில் முதன்மையானதாகும்.  ஆனால் இப்போது மத்தியவங்கி அரச திணைக்களமொன்றைப்போல மாறியிருக்கின்றது என்று பலரும் விமர்சிக்கின்றார்கள்.

அவ்வாறிருக்கையில் அரசியல்வாதியொருவரை, அதிலும் அமைச்சுப்பதவி வகித்த ஒருவரை உடனடியாகவே மத்திய வங்கியின் ஆளுநராக நியமிப்பதென்பது அக்கட்டமைப்பின் சுயாதீனத்தன்மையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் .

இலங்கை மத்தியவங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்து பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன் விலகவுள்ள நிலையில், அப்பதவிக்கு தற்போதைய இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் நியமிக்கப்படவிருக்கின்றார்.

இதுகுறித்து தனது அபிப்பிராயத்தை வெளியிடுகையிலேயே எரான் விக்ரமரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் இலக்கு எதுவுமின்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள்.”  – தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கம் சாடல் !

“தமிழ்தேசிய கட்சிகளின் தலைவர்கள் இலக்கு எதுவுமின்றி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள்.”  என தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் தெரிவித்துள்ளார்.

இன்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இது தொடர்பில் பேசிய அவர் ,

தமிழ் அரசியல்வாதிகள் எவரும் உண்மையான தமிழ்த்தேசிய விசுவாசத்தில் விடுதலை அரசியலை மேற்கொள்வதாக எமக்கு தெரியவில்லை.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு ஐக்கியத்துடன் ஒருமித்து நீதி கோர முடியாதவர்களினால், காணாமல் போன 1 இலட்சத்து 46ஆயிரத்து 679 பேரை  கண்டுபிடிக்க வழி வகுக்க முடியுமா ..?

அத்துடன், கடந்த 12 வருடங்களாக எந்த விதமான திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலும் இல்லை. கோசங்களுக்கு அப்பால் இலட்சியமும் இல்லை, இலக்கும் இல்லை. அணிகளாக பிரிந்து பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை நட்டாற்றில் தவிக்க விட்டு நர்த்தனமாடுகிறார்கள்.

அதாவது, பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை உளமார புரிந்து கொண்டு, அவர்கள் துயர் துடைக்க எந்த அரசியல்வாதியும் இதுவரை முனையவில்லை எனவும் சிவகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகும் இராஜாங்க அமைச்சர் !

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுவதற்கான கடிதத்தை நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் மத்திய வங்கியின் புதிய ஆளுநராக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், நியமிக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், மத்திய வங்கியின் ஆளுநர் பதவிக்கு, அமைச்சரவை அமைச்சரின் அதிகாரம் கிடைக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், அஜித் நிவாட் கப்ரால் தமது நாடாளுமன்ற உறுப்புரிமையில் இருந்து விலகுகின்றமையினால் வெற்றிடமாகும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமைக்கு, தெரிவு செய்யப்பட இருக்கின்றவர் தொடர்பாக எந்ததொரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

இதேவேளை, மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநராக பதவி வகிக்கும் பேராசிரியர் டபிள்யு.டி.லக்ஷ்மன், எதிர்வரும் செவ்வாய்கிழமை குறித்த பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வளர்ந்தநாடுகளின் தடுப்பூசி திட்டம் தொடர்பில் உலகசுகாதார அமைப்பு காட்டம் !

கொரோனா தடுப்பூசி விநியோகத்தில்  ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல  உலகசுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

உலக சுகாதார மையத்தின் இயக்குநர் டெட்ரோஸ் அதோனம்  ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன்னர் மருந்து நிறுவனங்கள் தடுப்பூசிகள் இருப்பு பூஸ்டர் டோஸை எதிர்கொள்ளவே போதுமானதாக இருக்கிறது என்று கூறின. அந்த மருந்து நிறுவனங்களின் அலட்சியம் என்னை கோபப்படுத்தியுள்ளது. கொரோனா தடுப்பூசி விநியோகத்தில் ஏழைநாடுகள் வளர்ந்த நாடுகளிடம் அபிரிமிதமாக இருக்கும் மிச்சங்களைக் கொண்டு தங்களின் தேவையை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற மனப்பாண்மையில் சில வளர்ந்த நாடுகளும் மருந்து நிறுவனங்களும் செயல்படுகின்றன. இது ஏற்புடையது அல்ல. அப்படிப்பட்டவர்கள் நடத்தையைப் பொறுத்துக் கொண்டு அமைதி காக்க மாட்டேன்.

ஏழை, வளரும் நாடுகளின் சுகாதாரப் பணியாளர்களும், மூத்த குடிமக்களும் மற்ற நாட்டவரைப் போலவே தடுப்பூசியை சமவாய்ப்புடன் பெறத் தகுதியானவர்களே. ஏற்கெனவே நான் கடந்த மாதம் வளர்ந்த நாடுகள் பூஸ்டர் தடுப்பூசியை வழங்குவதை சற்றே நிறுத்தி வைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். தற்போது மீண்டும் அதையே வலியுறுத்துகிறேன்.

இந்த ஆண்டு இறுதி வரையிலாவது வளர்ந்த நாடுகள் மூன்றாம் டோஸ் தடுப்பூசியை நிறுத்திவைக்கலாம். இதன்மூலம், உலகளவில் அனைத்து நாடுகளுமே குறைந்தபட்சம் தங்கள் மக்களில் 40% பேருக்காவது தடுப்பூசி செலுத்த முடியும். இதுவரை உலகளவில் 5.5 பில்லியன் கரோனா தடுப்பூசி பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் 80% தடுப்பூசிகள் வளர்ந்த நாடுகளால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

‘ரஞ்சனுக்கு ஜனாதிபதி விடுதலையளிப்பார்.”- சஜித் பிரேமதாஸ நம்பிக்கை !

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின் விடுதலை தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ கருத்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இலங்கை தேசிய சிறைக்கைதிகள் தினம் செப்டம்பர் 12 ஆகும்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவிடம் எங்கள் அன்புமிக்கவரும், பிரபல நடிகரும் மக்கள் சார்பு அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவை அன்றைய தினம் ஜனாதிபதி மன்னிப்பு வழங்கி அவரை விடுதலை செய்வார் என எதிர்பார்க்கின்றேன் என அவர் அந்த செய்தியில் பதிவிட்டுள்ளார்.

கொரோனாத்தொற்று அச்சம் – தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பொலிஸ் அதிகாரி !

தான் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சந்தேகித்து, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். முகத்துவாரம் பொலிஸ் நிலையத்தில், பயிற்சிக்கால பொலிஸ் கான்ஸ்டபிளாக கடமையாற்றிய 24 வயதுடைய பதுளை – ராகல பகுதியைச் சேர்ந்த பொலிஸ் காண்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

தனக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதாக எண்ணுவதாகவும், அதனால் தன்னுடன் ஒன்றாகப் பழகும் ஏனைய பொலிஸ் நண்பர்களுக்கும் அது தொற்றலாம் என நினைப்பதால் தான் உயிரை மாய்த்துக் கொள்வதாக, குறித்த கான்ஸ்டபிள் கடிதம் ஒன்றை எழுதி வைத்திருந்த நிலையில் அந்தக் கடிதத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொழும்பின் முகத்துவாரம் பொலிஸ் நிலைய தங்குமிட, கழிவரையில் தனது போர்வையை உபயோகித்து நேற்று (9) மாலை 5.30 மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு தற்கொலை செய்துகொண்ட பொலிஸ் காண்ஸ்டபிள் கடந்த மார்ச் 15 ஆம் திகதியே, பொலிஸ் கல்லூரியில் பயிற்சிகளை நிறைவு செய்துள்ளதுடன் கடந்த ஆகஸ்ட் 12 ஆம் திகதியே முகத்துவாரம் பொலிஸ் நிலைய்த்துக்கு சேவைக்காக இணைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் கொழும்பு மேலதிக நீதிவான் காஞ்சனா நெரஞ்சலா டி சில்வா, இன்று ( 10) ஸ்தலத்துக்கு சென்று நீதிவான் நீதிமன்ற விசாரணைகளை ஆரம்பித்ததுடன், சடலம் தொடர்பில் பிரேத பரிசோதனைகளை முன்னெடுக்க உத்தரவிட்டுள்ளார்.

“புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நாவிடம் கூறவில்லை.” – எம்.ஏ.சுமந்திரன்

தமிழீழ விடுதலைப்  புலிகளின் குற்றங்களையும் விசாரிக்க வேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சி ஒருபோதும் ஐ.நா அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ் மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன் போது மேலும் பேசிய அவர் ,

கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பானது இலங்கையில் தமிழ் மக்கள் மீது அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர் குற்றங்களுக்கு நீதி கோரி உலக நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கைக்கு எதிராக ஒரு தீர்மானத்தை கொண்டு வந்திருக்கின்றோம். அது தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் எடுக்கப்பட்ட முயற்சியின் பயனாக கிடைத்தது அது அனைவரும் அறிந்த விடயமாகும்.

ஆனால் தற்பொழுது இலங்கை தமிழரசுக் கட்சிக்கு எதிராக ஒரு விஷமப் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது. புலிகளால் மேற்கொள்ளப்பட்ட குற்றங்களையும்  விசாரிக்க கோரி சம்பந்தனால்  ஒரு ஆவணம் அனுப்பப்பட்டதாக அது முற்றிலும் ஒரு பொய்யான விடயம்.

அத்தோடு தற்பொழுது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது தமிழரசுக்கட்சி தனியாகச் செயற்படப்போகின்றது. கூட்டமைப்பிலிருந்து பிரிந்து செயற்படுகிறது என. அவ்வாறான ஒரு சம்பவம்  இடம் பெறாது எந்த காலத்திலும் இலங்கை தமிழரசுக் கட்சியானது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்படுமே தவிர ஒருபோதும் தனித்து செயற்படுவதற்கு தயாராக இல்லை.

அதே போல எந்தளவுக்கு இணைந்து செயல்பட முடியுமோ அந்தளவுக்கு இணைந்து செயற்படுகின்றோம். அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் எம்முடன்  நல்ல உறவாக உள்ளார்கள்.அவர்களும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படுகின்றோம் என கூறுகின்றார்கள் .

நாங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒற்றுமையாக செயற்படுகின்றோம் எனினும்  கூட்டாகச் ஏற்படும் போது பல பிரச்சனைகள் முரண்பாடுகள் ஏற்படும்.ஆனால் தமிழ் மக்களுக்காக பயணிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் பிரிந்தோ அல்லது தனித்தோ செயற்படவில்லை என்றார்.