September

Wednesday, October 20, 2021

September

ஆங்கிலப்படப்பாணியில் இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறையிலிருந்து தப்பித்து சென்ற பாலஸ்தீனப் போராளிகள் !

பலத்த பாதுகாப்பு நிறைந்த இஸ்ரேலின் கில்போவா சிறையிலிருந்து பாலஸ்தினத்தை சேர்ந்த 6 சிறை கைதிகள் தப்பிச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாலஸ்தீனக் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு கரை அருகே அமைந்துள்ள கில்போவா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 5 பாலஸ்தீனப் போராளிகள் மற்றும் போராளி இயக்கத்தின் முன்னாள் படைத் தளபதி ஒருவர், கழிவறையின் தரையில் பள்ளம் தோண்டி தப்பி சென்றனர். அவர்கள் மேற்கு கரை அல்லது ஜோர்டான் நாட்டிற்கு செல்லக்கூடும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், “இஸ்ரேலின் பாதுகாப்பு வாய்ந்த சிறைகளில் ஒன்றான கில்போவா சிறையில் அடைக்கப்பட்டிருந்த பாலஸ்தீனியர்கள் 6 பேர் சிறையிலிருந்து சுரங்கம் தோண்டி தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்றவர்களில் முன்னாள் தீவிரவாதியும் ஒருவர். திங்கட்கிழமை அதிகாலை நடந்த இந்தச் சம்பவத்தை சிசிடிவி காட்சி மூலம் இஸ்ரேல் அதிகாரிகள் உறுதிப்படுத்தி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைக் கைதிகள் தப்பிச் சென்றது ஷாவ்ஷாங்க் ரீடெம்ப்ஷன் ஆங்கில படத்தில் வரும் காட்சிகள் போல் உள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடித்த பிரித்தானியாவிற்கு நன்றி – அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீடிக்க பிரித்தானியா மேற்கொண்ட தீர்மானதிற்கு நன்றி தெரிவிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் அவர் தெரிவித்த போது ,

பிரித்தானியாவின் தீர்மானத்தை அடுத்து, பயங்கரவாதம் தொடர்பாக ஐரோப்பா உள்ளிட்ட அனைத்து நாடுகளும் தெளிவடைந்துள்ளன.

உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்தாலும் அரசியல் ரீதியான செயற்பாடு காரணமாக பிரித்தானியா குறித்த தீர்மன்றத்தை எடுத்துள்ளது. அத்தோடு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48வது கூட்டத் தொடரில் இணைய வழியில் கலந்து கொள்ளவுள்ளதாக குறிப்பிட்ட அமைச்சர்  இதன்போது நாட்டின் அனைத்து துறைகளிலும் பெறப்பட்ட பாரிய முன்னேற்றம் தொடர்பிலான உண்மை நிலையை முழுமையாக மனித உரிமைகள் பேரவைக்கு அறிவிக்கவுள்ளதாகவும்  கூறியுள்ளார்.

இதேவேளை நியூசிலாந்தில் இடம்போற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக இலங்கையில் உள்ள அனைத்து புலனாய்வு பிரிவுகளும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும். இதற்கான பணிப்புரையை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ விடுத்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் உத்தரவை மீறி பலருக்கு கொரோனா பரவ காரணமான இளைஞருக்கு 05 ஆண்டுச்சிறை !

உலகம் முழுவதும் கொரோனா இன்னமும் மிகத்தீவிரமாக பரவி வரும் நிலையில் உவ்வொரு நாடுகளும் பல கட்டுப்பாடுகளை விதித்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றன.  முக்கியமாக பலநாடுகள்  தொற்று பாதித்தவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பரிந்துரையை மிகததீவிரமாக பின்பற்றி வருகின்றன.

இந்நிலையில் வியட்னாம் அரசு கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் அவருக்கு அளிக்கப்பட்ட 21 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுதலைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றி மற்றவர்களுக்கும் தொற்று பாதிக்கக் காரணமாக இருந்ததால் அவருக்கு சிறைத் தண்டனை விதித்துள்ளது.

28 வயதான லே வான் ட்ரி என்ற இளைஞர் கா மவ் மாகாணத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த ஜூலை மாதம் கொரோனாவின் ஹோ சி மின் நகரிலிருந்து தனது சொந்த ஊரான கா மவுக்கு திரும்பியுள்ளார். அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால் அவர் கடந்த ஜூலை 7ஆம் தேதி முதல் வீட்டுத் தனிமையில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டார். ஆனால் அவர் அதைப் பின்பற்றாமல் வெளியில் சுற்றித் திரிந்துள்ளார். இதனால், கா மவ் நகரில் கரோனா வேகமாகப் பரவியது. ஒருவர் உயிரிழந்தார்.

இது உறுதியான நிலையில் லே வான் ட்ரி என்ற அந்த இளைஞர்க்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியட்நாமில் இதுவரை 5,40,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 13,000 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரியை கணவன் – பிள்ளைகள் முன்னிலையிலேயே சுட்டுக்கொன்ற தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள தலிபான் பயங்கரவாதிகள் கடந்த முறை தங்களது ஆட்சியில் இருந்தது போல் இல்லாமல் இந்த முறை‌ பெண்களுக்கு உரிய மரியாதை, உரிமைகளை வழங்குவோம் என்றும் அவர்கள் வேலைக்கு செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என ஆரம்பத்தில் தெரிவித்திருந்த போதும் அவர்களுடைய அண்மைக்கால நகர்வுகள் பாரிய அதிருப்தியை அனைவரிடமும் ஏற்படுத்தி வருகின்றது.

முக்கியமாக உயர் பதவிகளில் இருந்து பெண்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன் அமைச்சுப்பதவிகள் எதுவும் பெண்களுக்கு வழங்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆப்கான் வாழ் பெண்களிடையே அதிருப்தி மேலெழ ஆரம்பித்துள்ளது.

Taliban kills pregnant police officer in Afghanistan in front of her family  || ஆப்கானிஸ்தான்; தலீபான்களால் கர்ப்பிணி போலீஸ் அதிகாரி சுட்டுக்கொலைஇந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் பொலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பத்தின் முன்னிலையில் தலிபான் பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த பெண் பொலீஸ் அதிகாரி பானு நிகரா. ஏற்கனவே 2 குழந்தைகளுக்கு தாயான இவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பானு நிகரா வீட்டுக்குள் துப்பாக்கிகளுடன் நுழைந்த தலிபான் பயங்கரவாதிகள் அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையில் அவரை சுட்டுக்கொன்றனர்.

ஆனால் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கும் தங்களுக்கும் எந்த தொடர்புமில்லை என தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

“94 இலட்சத்துக்கும் அதிகமானோர் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர்.” – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா

நாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 94 இலட்சத்துக்கும் அதிகமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரை 27.2 மில்லியன் தடுப்பூசிகள் நாட்டிற்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றில் 94 இலட்சத்து 14,852 பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது 20 முதல் 29 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கையும்மெய்யுமாக சிக்கிய பொலிஸ் – கட்டிவைத்த பிரதேசவாசிகள் !

சிலாபம் குற்றத்தடுப்பு பிரிவில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறித்த உப பொலிஸ் பரிசோதகர் சிலாபம் – அம்பகந்தவில என்ற மீனவக் கிராமத்திற்கு சென்று அங்குள்ள மீன்பிடிப் படகில் தொழில்புரிகின்ற மீனவர் ஒருவரது இளவயது மனைவியுடன் தகாத தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து சிலாபம் குற்றத்தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி லலித் ரோஹண கமகே என்பவரிடம் முறைப்பாடும் செய்யப்பட்டிருக்கின்றது.

அண்மையில் இரவுவேளையில் குறித்த பொலிஸ் அதிகாரி குறித்த பெண்ணின் வீட்டிற்குச் சென்றபோது பிரதேசவாசிகளால் கையும் மெய்யுமாகப் பிடித்து கட்டிவைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த பொலிஸ் அதிகாரி திருமணமாகாவர். இந்நிலையில் கிராம மக்கள் இணைந்து வழங்கிய முறைப்பாட்டிற்கமைய அவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.

“நியூசிலாந்தில் இலங்கையர் நடத்திய குரூரமான பயங்கரவாத தாக்குதல்.” – அமைச்சர் தினேஷ் குணவர்த்தன கவலை !

நியூசிலாந்தில் இடம்பெற்ற குரூரமான பயங்கரவாத தாக்குதலை மேற்கொண்ட நபர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதில் கவலையளிப்பதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றிய அவர், இந்த தாக்குதலை அரசாங்கம் வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

மேலும் இந்த தாக்குதலால் நியூசிலாந்து அரசாங்கதிற்கும் அந்நாட்டு மக்களுக்கும் ஏற்பட்டுள்ள கவலையில் இலங்கை அரசாங்கம் பங்கெடுப்பதாகவும் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.

சர்வதேச ரீதியாக மீண்டும் பயங்கரவாத செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இதன்போது மேலும் தெரிவித்தார்.

“அவசரகால சட்டத்தின் மூலம் ஜனாதிபதியால் இறப்புவீதத்தை கட்டுப்படுத்த முடிந்ததா..? – ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி !

அவசரகால சட்டத்தின் மூலம் கொரோனா தொற்றினால் ஒருநாளைக்கு உயிரிழக்கும் 200 பேர் என்ற எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததா.? என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் நிறைவேற்றும் வகையில் இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் கூறிய போது ,

உலக நாடுகள் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபடும் நிலையில் இலங்கை அரசாங்கம் மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை நசுக்குவதில் அதிக கவனம் செலுத்துகின்றது.

இதேவேளை ஜனாதிபதியினால் அமுல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தின் மூலம் கொரோனா தொற்றினால் ஒருநாளைக்கு உயிரிழக்கும் 200 பேர் என்ற எண்ணிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்த முடிந்ததா.?  என்றும் எரான் விக்ரமரத்ன கேள்வியெழுப்பினார்.

ஜனாதிபதியின் தற்போதைய நடவடிக்கை எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுபவர்களுக்கு பிழையான உதாரணமாகிவிடும். அரசாங்கம் தனது குறுகிய நோக்கத்திற்காக சுயாதீன நிறுவனங்களை பலவீனப்படுத்தி, நிபுணர் ஆலோசனையைப் புறக்கணித்து, சம்பந்தப்பட்ட அனுபவம் அல்லது புரிதல் இல்லாத இராணுவத்திற்கு அதிகாரத்தை வழங்குவதன் மூலம் ஆபத்தான முன்னுதாரணத்தை காட்டுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்தவே முடியாது.” – இரா.சம்பந்தன்

“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்தவே முடியாது.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளில் தமிழரசுக் கட்சி தவிர்ந்த தமிழீழ விடுதலை இயக்கமும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகமும் கையெழுத்திட்டுள்ள விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதை வெளிக்காட்டுகின்றது என ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளாகத் தற்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி, ரெலோ மற்றும் புளொட் ஆகிய மூன்று கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இந்நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்ற ஏனைய தமிழ்க் கட்சிகள், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளருக்கு அனுப்பத் தயாரித்த அறிக்கையில் கூட்டமைப்பின் இலங்கைத் தமிழரசுக் கட்சி தவிர்ந்த ஏனைய இரு பங்காளிக் கட்சிகள் (தமிழீழ விடுதலை இயக்கம், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்) கையெழுத்திட்டமை தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது.

இது தொடர்பில் எனக்கு அறிவிக்கப்படவும் இல்லை. எனவே, இந்த விடயம் தொடர்பில் என்னால் கருத்துத் தெரிவிக்கவும் முடியாது. ஆனால், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் ஆணையாளருக்கு அறிக்கை அனுப்பும் விவகாரத்தைப் பயன்படுத்தித் தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எந்தச் சக்தியாலும் பிளவுபடுத்த முடியாது என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்.” என்றார்.

இறுதிநாளில் மாறிய போட்டியின் திசை – இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியபந்துவீச்சாளர்கள் !

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாட செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு முழு இலக்குகளையும் இழந்தது. தாகூர் 57 ஓட்டங்கள் , கோஹ்லி 50 ஓட்டங்கள் பெற்றதே அதிகமாக இருந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஆரம்பவீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் 368 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ஓட்டங்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.