September

September

“மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் – வகுப்பின் நடுவே திரை.” – தலிபான்களின் கீழ் பல்கலைகழகங்களின் நிலை !

தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால்,வகுப்பின் நடுவே திரை கட்டி மாணவர்கள் ஒருபுறம் மாணவிகள் ஒருபுறம் எனப் பிரித்து அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர். இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.

இதனால், ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. மீறுவோர் மிக மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால், 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நுழைந்த பின்னர் தலிபான்களின் ஆதிக்கம் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் ஆதிக்கம் இல்லாத ஆப்கனில் பெண் கல்வி பெருமளவில் உயர்ந்தது. பெண்கள் சினிமா துறையில் கூட பளிச்சிட்டனர். அதுபோல் பாப் ஸ்டார்களும் உருவாகினர். இப்படியிருக்க கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. ஆனால், தலிபான்கள் தாமாகவே முன்வந்து இந்த முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். பெண்கள் கல்வி கற்க அனுமதித்திருந்தாலும் கூட பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கண்களைத் தவிர முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களை மதிப்போம் என்று தலிபான்கள் கூறியிருந்தாலும் கூட இதுபோன்ற கெடுபிடிகளும், கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதும் போன்ற தலிபான்களின் நடவடிக்கை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது வீழ்ந்தது பஞ்ச்சீர் மாகாணம் !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர் கைப்பற்றினார்கள். அதிபர் அஷ்ரப்கனி நாட்டை விட்டு ஓடி விட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது.

இந்த மாகாணத்தில் முன்னாள் புரட்சிப்படை தளபதி அகமதுஷாமசூத் மகன் அகமது மசூத் தலைமையிலான வடக்கு கூட்டணி படை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அந்த பகுதியை கைப்பற்ற தலிபான்கள் முயற்சித்தனர்.

 

இதற்கு வடக்கு கூட்டணி படை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தலிபான்கள் படைகளை உள்ளே நுழைய விடாமல் இரு வாரங்களாக வடக்கு கூட்டணி படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

இதையடுத்து மாகாணத்தின் 4 பக்கங்களில் இருந்தும் தலிபான் படையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை எதிர்த்து வடக்கு கூட்டணி படையினரால் போராட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் படைகள் முன்னேறியது.

இதையடுத்து வடக்கு கூட்டணி படை முக்கிய இடங்களை விட்டு பின்வாங்கியது. இந்த நிலையில் தலிபான்கள் தாக்கியதில் வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் வடக்கு கூட்டணி படை நிலை குலைந்தது. இந்த படையின் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பஞ்ச்சீர் பகுதி தலிபான்களிடம் வீழ்ந்துள்ளதுள்ளதாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றது.

“நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை.”- அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை எனவும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன்கருதியே அவசரகால விதிமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும் அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கத்தினால் பொருட்கள் மீதான அதிக விலையை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த அவசரகால ஒழுங்கு விதிகள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. தற்போது பல முக்கிய பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவசரகால ஒழுங்கு விதிகள் இன்றி வேறு சட்டங்களின் ஊடாக விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

“இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ்

“இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

கொரோனாவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமது நாடு இன்று எமது ஒரு மௌனமான வன்முறைக்கு மோசமாக முகங்கொடுத்துள்ளது. மௌனமாகவே வருகின்ற நோயால் மௌனமாகவே மக்கள் உயிரிழந்து போகின்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் இறந்த உடலங்களை தூக்கிச் செல்வதற்கு கூட ஒருவரும் முன்வராத சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையில் குறித்த அனர்த்தத்தை கட்டுப்படுத்த நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மறுபுறம் முடக்கப்படுவதால் நாடு பாரிய பொருளாதாரத்தை இழக்கும் நிலை காணப்படுகின்றது என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த இரண்டிற்கும் நடுவில் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக அல்லலுறும் நிலை நீடித்து வருகின்றது. இந்த இரண்டு பக்க அடியிலிருந்து மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் எதிர்க் கட்சியினர் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் மனித குலத்தை பலியெடுத்துவரும் இந்த கொரோனா பெருந்தொற்றை இல்லாதொழிக்க உலக நாடுகள் தமக்கிடையே இருந்த அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றுபட்டு உறுதிகொண்டுள்ளனர்.

அதுபோல இலங்கைத் தீவிலும் அனைத்து தரப்பினரும்தத்தமது சுயநலன்களிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு எமது நாட்டிலிருந்து இந்த பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

வளர்ந்த தேசங்களே இன்று இந்த பெருந் தொற்றால் ஆடிப்போயுள்ள நிலையில் வளர்ந்துவரும் எமது நாடான இலங்கை தீவு எம்மாத்திரம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் உலக நாடுகளின் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தீவின் கொரோனா அனர்த்தங்களின் பதிவுகள் குறைவாகவே உள்ளது.

இதற்கு காரணம் நாட்டில் தற்போதுள்ள நிர்வாகத்திறன் என்றே கூறவேண்டும். இந்நேரம் வினைத்திறன் அற்ற ஆட்சியொன்று இருந்திருந்தால் இன்றைய அவலங்களை விடவும் அதிகளவான அவலங்களை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும்.

அந்தவகையில் இந்த சூழலில் இருந்து நாம் மீண்டெழ வேண்டும். நாட்டின் பொருளாதாதையும் நாம் மீண்டெழச் செய்ய வேண்டும். அந்நிலையில் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒரு திட்டமிட்ட செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றது. இந்த துர்ப்பாக்கிய நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது.

இதை கட்டுப்படுத்தவே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அரிசி சீனி போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச நிர்ணய விலை கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பல மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு ரெலோவும் புளொட்டும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியளிக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் தனியான அறிக்கை ஒன்று ஆவணமாக தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு மாறான வேறு ஒரு ஏற்பாட்டுக்கும் தாம் இணங்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் வேறு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு ரெலோவும் புளொட்டும் அனுப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

இரா.சம்பந்தனினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஓர் வரைபு என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றினை பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்ட ஜோர்ஜ் மாஸ்டர் காலமானார் !

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்த ஜோர்ஜ் மாஸ்டர் எனப்படும் வேலுப்பிள்ளை குமார் பஞ்சரட்ணம் தமது 85 வயதில் காலமானார்.

நீண்ட காலமாக சுகவீனம் அடைந்திருந்த அவர் இன்றைய தினம் காலமானார்.

1936ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் திகதி பிறந்த அவர், அஞ்சல் அதிபராக பல்வேறு மாகாணங்களிலும் செயற்பட்டிருந்தார்.

பின்னர், 1994 ஆம் ஆண்டு அஞ்சல் அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மொழிப்பெயர்ப்பாளராக செயற்பட்டிருந்தார்.

இந்தநிலையில், அவர் மீது சுமத்தப்பட்டிருந்த அனைத்து குற்றச்சாட்டுக்களிலும் இருந்து 2016 ஆம் ஆண்டு யூலை 7ஆம் திகதி ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் 10ஆயிரத்தை தொட்ட கொரோனா உயிர்பலி !

நாட்டில் மேலும் 189 கொவிட் மரணங்கள் இன்று பதிவாகியுள்ளது என  சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று (04) மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாட்டில் இதுவரையில் பதிவாகியுள்ள கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆக அதிகரித்துள்ளது.

இதனையடுத்து, நாட்டில் மொத்த கொவிட் பலி எண்ணிக்கை 10,000ஐ கடந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 96 ஆண்களும், 93 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஐ.நாவுக்கு அனுப்புகின்ற கடித விடயத்தில் கூட ஒற்றுமையுடன் செயற்பட முடியாத தமிழ் தலைவர்கள் !

இலங்கை தமிழரசு கட்சி தவிர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது கையொப்பத்துடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கு கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளது. ஐந்து கட்சிகள் இந்த கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சி.வி.விக்னேஸ்வரன், செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரன் மற்றும் விநோநோகராதலிங்கம் ஆகியோர் இதில் கைச்சாத்திட்டுள்ளனர். அத்துடன் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஷ் பிரேமசந்திரன் மற்றும் என்.சிறிகாந்தா ஆகியோரும் இதில் கைச்சாத்திட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து இந்த கடிதத்தில் விளக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.எவ்வாறாயினும் இலங்கை தமிழரசு கட்சியின் பிரதிநிதிகள் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட்டிருக்கவில்லை. இந்தநிலையில் அந்த கட்சியின் பிரதிநிதிகள் நாளைய தினம்  கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில் இந்த விடயம் குறித்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறித்த கடிதத்தில் கைச்சாத்திட மறுத்துவிட்டதாக குறிப்பிட்டார்.

இதே நேரம்  ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு, ஆணையாளர் மிச்செல் பச்லெட் அம்மையாருக்கு இலங்கை தமிழரசு கட்சியின் முன்னெடுப்பில் ஆவணமொன்று அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது..

ஏற்கனவே ரெலோவின் முன்னெடுப்பில், பல கட்சிகள் கையொப்பமிட்ட ஆவணமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் “இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் கையொப்பமிட மாட்டார்கள் என அவர்களின் கூட்டணி முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை தமிழரசு கட்சி தயாரித்த ஆவணத்தில், பான்கீ மூனால் 2010 இல் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு தயாரித்த அறிக்கையில், இலங்கை இராணுவமும், விடுதலைப் புலிகளும் சர்வதேச மனிதாபிமான சட்டங்கள், மனித உரிமை சட்டங்களை மீறியுள்ளனர்.

இவற்றில் சில போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்களாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வாக்கியத்தால், இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறிதரன், சாள்ஸ் நிர்மலநாதன், கலையரசன் ஆகியோர் அதிருப்தியில் இருப்பதுடன் மூவரும் தனியாக ஐ.நாவிற்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமது அதிருப்தியை ஆவணத் தயாரிப்பில் ஈடுபட்ட சுமந்திரனிடம் அறிவித்துள்ளதாகவும், அவை ஏற்கப்படாததன் காரணமாக கையொப்பமிட மாட்டோம் என உறுதியாக தெரிவித்துள்ளனர்.

……………………………………………………………………………….

இந்த இடத்தில் தமிழ் மக்கள் இந்த தமிழ்தலைவர்கள் பேசும் போலித்தேசியம் தொடர்பில் உற்றுநோக்க வேண்டிய தேவையுடையோராகவுள்ளனர். தேர்தல்காலங்களில் மேடைக்கு மேடை இவர்கள் தனிநாடு தனிநாடு என முழுங்கிவிட்டு ஆளுக்கொரு கொள்கையுடன் – ஆளுக்கொரு கட்சி என மேலும் பிரியப்போகிறார்கள். ஓட்டு அரசியலுக்காக மட்டுமே இவர்கள் இயங்குகிறார்கள் என்பதை இதைவிட தெளிவாக ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாது.

இவர்களுடன் ஒப்பிடும் போது அரச தரப்பில் இணைந்து நிற்கும் தமிழ்தலைவர்கள் எவ்வளவோ மேல் போல படுகிறார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் சர்வதேசத்தினுடைய இந்த வாய்ப்பை வழமை போல இந்த போலி தமிழ்தேசியவாதிகள் எப்படி வீணடிக்கப்போகிறார்கள் என. !

“கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை.” – நாமல் ராஜபக்ச

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசியல் ஆதாயம் பெறுவதற்காக முன்னெடுக்கவில்லை எனவும் மொழி மத அடிப்படையில் இதனை முன்னெடுக்கவில்லை எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எந்தமாவட்டங்களிற்கு தடுப்பூசியை வழங்கவேண்டும் எவ்வளவு தடுப்பூசியை வழங்கவேண்டும்,எந்த தடுப்பூசியை வழங்கவேண்டும் என்பதை சுகாதார அமைச்சே தீர்மானிக்கின்றது என அவர் தெரிவித்துள்ளார். சமீபவாரங்களில் மன்னார் கண்டி ஆகிய பகுதிகளிற்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை! : இன்பத் தமிழ் வானொலி உரையாடல்

“கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” பாரதி சிவராஜா

இலங்கையின் இடதுசாரி அமைப்பான புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி மற்றும் இலங்கைக்கு வெளியே இலங்கைத் தமிழர்களால் பிரித்தானியாவில் அண்மைக்காலத்தில் உருவாக்கப்பட்ட தமிழ் சொலிடாரிட்டி என்ற இரு கட்சிகளையும் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் என்ற விடயம் சிக்கலுக்குள் தள்ளிவிட்டிருந்தது தெரிந்ததே. இதன் காரணமாக புதிய ஜனநாயக மார்க்ஸிச லெனினிசக் கட்சி உறுப்பினர் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இவ்வாறான நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த சிலர் தங்களை கட்சியில் இருந்து விலகி நிற்கின்றனர். லண்டனில் தமிழ் சொலிடாரிட்டி அமைப்பின் உறுப்பினர் ஒருவர் நீண்டகாலம் காதலித்த பெண்ணுடன் உறவு முறிவு ஏற்பட்டு பின்னர் வேறொருவரை காதலித்து மணம் முடித்தது தொடர்பில் கையெழுத்துப்போராட்டம் ஒன்றும் முடுக்கிவிடப்பட்டு தங்களை முற்போக்காளர்கள் என கூறிக்கொள்ளும் 20 பேர் கையெழுத்திட்டு இருந்தனர். ஆயினும் தமிழ் சொலிடாரிட்டி கையெழுத்திட்டவர்கள் சமூக விரோத அரசியலை முன்னெடுத்தவர்கள் என்றும் கட்சியயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள வக்கற்றவர்கள் என்றும் சாடியிருந்தது.

கையெழுத்துப் போராட்டத்தில் கையெழுத்திட்ட பாராதி சிவராஜா, கையெழுத்திடுவதற்கு முன் ஆண் – பெண் உறவு, காதல், திருமணம் பற்றி மேற்கொண்ட உரையாடல் இது. “கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி.” கையெழுத்திட்ட ஏனைய 19 மார்க்சிய பெண்ணியலாளர்கள் இவ்வுரையாடலை எந்தப் பார்வையில் பார்ப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும்.

‘காதலை திருமணமாகச் சுருக்கும் சமூகப் புரிதல் பற்றிய மார்க்சிய பெண்ணியப் பார்வை’ என்ற இந்த உரையாடல் காதலர் தினத்தை முன்னிட்டு 2018 பெப்ரவரி 10ம் திகதி அவுஸ்திரேலியாவில் இருந்து வலைத்தளமூடாக ஒலி பரப்பாகும் இன்பத் தமிழ் வானொலியின் கருத்துக்களம்’ நிகழ்ச்சிக்காக பதிவு செய்யப்பட்டது. பாரதி சிவராஜா வட்ஸ்அப் ஊடாக பலருக்கும் அனுப்பிய இப்பதிவு தேசம்நெற்றையும் அடைந்தது. இப்பதிவின் முக்கிய பகுதி சுருக்கித் தரப்பட்டுள்ளது.

இதன் எழுத்துவடிவம்:

பாரதி: காதல் என்பது ஒரு பீல் தான். காதல் ஒருக்கா தான் வரும் என்டதில எனக்கு எந்த உடன்பாடும் இல்லை. காதல் கட்டாயமா வரும். வரலாம். காதல் என்கிறது ஒரு தேடல் தான். அது மனிதர்களிடம் உணர்வு இருப்பது வரைக்கும் அது வந்துகொண்டு இருக்கும். 18 வயசில தான் வரும் 16 வயசில தான் வரும் 60 வயசில வராது என்கிறதெல்லாம் பச்சைப் பொய்யான விஷயம். எந்த வயசிலயும் காதல் வரலாம். எத்தனை தடவையும் வரலாம்.

வானொலிக் கலைஞர்: காதல் என்பதை திருமணம் என்ற வரையறைக்கு அப்பால் தான் தமிழர்கள் வைத்திருக்கிறார்கள். அதற்கு முன்னால் இருக்கக்கூடிய காதல் என்பது எமது சமூகத்தால் எச்சரிக்கை உணர்வுடனேயே அங்கீகரிக்கப்படுகிறது என்பது என்னுடைய குற்றச்சாட்டு. அதை ஒருத்தரும் அதை ஏற்றுக் கொள்வதில்லை. அதை திருமணம் என்கின்ற ஒரு மார்ஜினுக்குள் வைத்த பிறகு தான் உங்களுடைய காதல் அங்கீகரிக்கப்படுமே தவிர…

பாரதி: காதலைத் திருமணம் என்டுறத்தோடு கொண்டு போனாலே அது காதல் இல்லை என்பது தான் என்னுடைய வாதம். எல்லாரும் சொல்லுவாங்க காதல் கல்யாணத்துல முடிக்கிறது தான் வெற்றி என்டு. ஆனால் கலியாணத்தில் முடிந்தால் அது தோல்வி. நீங்க அங்க ஒரு புளொக் போட்டிடுவீங்க. நீ என்னும் ஒருத்தரை காதலிக்க ஏலாது என்டு.

வா.கலைஞர்: காதலை நீங்கள் திருமணத்துக்கு கொண்டு வந்து வைத்தால் காதல் முடிந்தது அது தோல்வி என்று நீங்கள் சொன்னீர்கள். ஏன்? நமது பண்பாடு என்ன சொல்லுகிறது, காதல் வந்து திருமணத்தில் முடிந்து, ஒன்றாக இணைந்து, ஒரு ஜென்மம் பூராகவும் வாழ்ந்து போவதுதான் காதல். அப்படி இல்லாட்டி அது நெறி தவறிய வாழ்க்கை என்றுதானே தமிழ் பண்பாடு சொல்கிறது?

பாரதி: தமிழ் பண்பாடு என்று சொல்லாதீர்கள். தமிழ் கலாச்சாரம். கலாச்சாரம் மாறும் பண்பாட்டில் எங்கயுமே அப்படி சொல்லவில்லை. ஒருத்தரோட வாழ்ந்து, ஒருத்தரோட சாகுறது தான் பண்பாடு என்று தமிழ் பண்பாட்டில் இல்லை. காதல் போய் கலியாணத்தில தான் முடியும் என்டா, நீங்க கலியாணம் முடிச்சிட்டு இன்னும் ஒருத்தரையும் லவ் பண்ணக்கூடிய ஒரு செட்டப் இருக்குமென்றால் அது பிரச்னை இல்லை. ஆனால் கலியாணம் என்டுறது அப்பிடியே முடிச்சுவிடுறீங்க. காதல் என்டுறது ஒரு பீலிங் தான், நீங்க அது முடியும் முடியாது என்டதெல்லாம் இல்லை. அது எவ்வளவு தூரம் உங்களோட ரவல் பண்ணுது என்டத தான் நீங்க பார்க்கனும்.

நீங்க ஒராளோட இருக்கிறீங்க. ஒராள் உங்களோட பாசமா இருக்கிறார். அதை லவ் என்டு பீல் பண்ணுறீங்க. ஒராளோட பழகுறீங்க அவங்க மேல ஈர்ப்பு வருது. அது தான் லவ்.. அது லவ் இல்லை. இது தான் லவ் என்டு யார் தீர்மானிக்கிறது?

எங்கட ஆட்களை எல்லாம் பாருங்க. நீங்க என்ன கள்ள வேலை செய்து காசு சம்பாதிச்சாலும் மனிசி ஒன்டும் சொல்ல மாட்டா. சந்தோஷமா இருப்பா. ஆனா மனுஷன் வேற ஒரு பிள்ளைய பார்த்தவுடன கள்ளக் காதல் என்டுவா. அப்ப இவ்வளவு காலம் உழைச்சது கள்ள காசு தானே? அது என்ன அந்த ரெண்டு மனநிலை எங்க இருந்து வந்தது?

இதில என்னும் முக்கியமான விசயத்தை நான் சொல்ல வேணும் என்னென்றால் மதங்களை நீங்க பார்த்தீங்க என்றால் ஆண்கள் பல காதல் செய்யலாம். பல திருமணம் செய்யலாம். ஆனா பெண்கள் ஒரு காதல் தான் செய்யனும். ஒரியினலா இருக்க வேணும். அப்படி போனாலும் உடன்கட்டை ஏறிடனும்; அல்லாட்டி வெள்ளைப் புடவையை கட்டிட்டு இருக்க வேணும்; பொட்டை அழிச்சிட்டு இருக்கனும்; கலர் அஸ்திரம் கட்டக்கூடாது ஏதோ எல்லாம் சொல்லிட்டு இருப்பாங்க. ஆனா முருகனுக்கு ரெண்டு பொண்டாட்டி இருக்கும் கிருஷ்ணணுக்கு ஆயிரமாயிரம் அது எவ்வளவு என்டு தெரியா. நபி என்றவர் எத்தனையோ கல்யாணம் முடித்து இருப்பர். மதங்களுக்கு ஆண்கள் நாலு கல்யாணம் முடிக்கலாம்.

வா.கலைஞர்: அப்போ ஆணுடைய காதல் வேறு பெண்னுடைய காதல் வேறு அப்படியா

பாரதி: மனிதர்கள் என்பது இயற்கையான ஒரு படைப்பு. அதில் ஆண்பால் பெண்பால் இரண்டும் தான் இருக்கு. அதில் எப்படி இன்னொருத்தனுக்கு சட்டம். இன்னொருத்திக்கு ஒரு சட்டம்.

வா.கலைஞர்: இங்குதானே நீங்கள் சொல்கிற கலாச்சாரமும் பண்பாடும் என்பது உதைக்கிறது. ஏனென்றால் ஒருவனுக்கு ஒருத்தி என்பது விதிக்கப்பட்ட விதி? இங்க விதிக்கப்பட்ட நெறிமுறை?

பாரதி: அது நாங்கள் உருவாக்கிக் கொண்டது.

வா.கலைஞர்: உருவாக்கினது என்னவோ அதைத்தானே. அப்படி இருப்பவனை தானே நல்லவன்; நல்ல குடும்பம் என்று சொல்கிறார்கள்; பல்கலைக்கழகம் என்று சொல்கிறார்கள். நீங்க சொன்ன மாதிரி ஒரு உணர்வை இங்கே எப்படி பார்ப்பார்கள் என்றால், கொச்சைப்படுத்தி தான் பார்ப்பார்களேயொழிய, அது அவருடைய ஃபீலிங் என்று யாரும் பார்ப்பது கிடையாது.

பாரதி: சமூகத்தில் மாற்றி செய்யப்படுகிற டைம்ல சமூகத்தில் அது பிரச்சினையான விஷயமாகத்தான் இருக்கு. சமூகத்திலிருந்து நாங்கள் ஒன்றை மாறி செய்யும்போது பிரச்சினையாகத்தான் பார்க்கப்படுகிறது. உண்மையாகவே நீங்கள் பார்க்கும்போது அது தான் சரியாக இருக்கும். அதற்கு நாங்கள் சொல்கிறோம், அறிவு ரீதியாக நாங்கள் பார்க்காத எந்த ஒரு விஷயமும் பிழையாகத் தான் இருக்கும்.

வா.கலைஞர்: அப்படியானால் உங்களிடம் கேட்டால் தமிழ் பெண்களிடம் காதல் பற்றிய பார்வை என்பது வித்தியாசமாக மாறிவிட்டதா? அதாவது தமிழ் பெண்களும் ஒன்றுக்கு மேற்பட்ட காதலுக்கு அவர்கள் தங்களைத் தயார்படுத்திவிட்டார்கள் என்பதே உங்களுடைய வாதம் அப்படியா?

பாரதி: நான் வாதமே செய்யத் தேவையில்லை. இங்கே வேண்டாம். எங்கட நாட்டுக்கே போய் பாருங்கோ. எத்தனையோ வீடுகளில் கல்யாணம் கட்டின ஒரு பெண் பக்கத்து வீட்டு ஆணையும் அல்லது இன்னும் ஒரு ஆணையோ காதலிப்பது சாதாரணமாக நடக்குது. ஆனால் அது மறைக்கப்படலாம் அல்ல தெரியாமல் இருக்கும். இது வீட்டுக்கு வீடு வாசல்படி. அப்ப இது இயற்கையான விஷயம் இது.

ரொம்ப கலாச்சாரமான தலிபான் இருக்கிற இடங்களிலேயே பெண்கள் வெளியில் வர இயலாது. பெண்கள் முகத்தை மூடிக்கொண்டு அங்கே இப்படியான விஷயங்கள் நடக்கிறது. இதுதான் உண்மை எந்த மதம், எந்த கலாச்சாரம் ஒன்றும் செய்ய இயலாது. அவங்களுக்கு வெளிப்படையாக செய்வதற்கு நீங்கள் அனுமதிக்கவில்லையானால் அவர்கள் மறைமுகமாக செய்வார்கள். இதுதான் இயற்கையான விஷயம்.

இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

தம் முற்போக்குத் திரைகளை தாமே கிழிக்கும் முற்போக்குப் பெண்ணியப் போராளிகள்!!!

இலங்கைத் தமிழ் இடதுசாரி கட்சிகள் ஈடாட்டம்!