September

September

“இளைஞர்களை உசுப்பேற்றி சாணக்கியன் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்” – சிவநேசதுரை சந்திரகாந்தன் சாடல் !

“வெளிநாட்டு பிரதிநிகளின் வருகையால் நாட்டில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.”  என நாடாளுமன்ற உறுப்பினரும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவருமாகிய சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று (புதன்கிழமை) போரதீவுப் பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட ஆணைகட்டியவெளி சின்னவத்தை 02 கிலோமீட்டார் வீதி கொங்கறீற்று வீதியாகப் புனரமைப்பு செய்து மக்கள் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

” நானும் போராட்ட காலத்தில் இருந்து அவதானித்திருக்கின்றேன். எல்லா பத்திரிகைகளிலும் வெளிநாட்டு பிரதிநிதிகளில் வருகையை பெரிய எழுத்துகளில் தான் எழுதுவார்கள். அவ்வாறான செய்திகள் வந்து மக்களை ஈர்ப்புச் செய்திருக்கின்றதே ஒழிய நடைமுறைகளிலே எதுவும் நடைபெறவில்லை என்பதை நாங்கள் உணர்ந்திருக்கின்றோம். எமது மக்களை மெல்ல மெல்ல யதார்த்தத்திற்குக் கொண்டு வருகின்றோம்.

என்னுடைய அரசியல் வாழ்க்கையும் சாணக்கியனின் வயதும் ஒன்றாக இருக்கும். அவரது பாண்டித்தியம் சிறப்பானது. ஆனால், அவர் எங்களுடைய பாதையில் வந்து என்னைப் போன்று அரசாங்கத்துடன் இணைந்து மக்களுடன் சேவையாற்ற முற்பட்டு தோற்றுப்போனார். தோற்றுப் போன பின்னர் அரசியல் வெற்றிக்காகவே தமிழ்த் தேசியம் என்கின்ற ஆடையை அணிந்தார். இன்று அதைத் தக்க வைத்துக் கொள்வதற்காக இளைஞர்களை உசுப்பேற்றுகின்றார். எவ்வாறு தேசிய உணர்வு மாறி மாறி வர முடியும்.

இவ்வாறான பேச்சுக்கள் எதையாவது பெற்றுத் தந்தால் நியாயமாக இருக்கும். ஆனாலும் எதிர்க்கட்சி அரசியலும் தேவைதான் சில நியாயமான விடயங்களும் பேசுகின்றார்கள். ஆனால் மக்களைக் குழப்புகின்ற, சிங்கள மக்களோடு குரோதமான மனநிலையை உண்டுபண்ணுகின்ற விடயங்களை ஏற்றுக்கொள்ள முடியாது. பிழையான விடயங்களை எதிர்த்துக் கொண்டு அரசின் பங்காளியாக எமது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து கொடுப்பதுதான் காலத்தின் தேவை. இது நாங்கள் கற்றிந்த பாடம். இந்த அரசியல் கற்றுத்தந்த கசப்பான உண்மையும் இதுவே.

யார்மீதும் தனிப்பட்ட விமர்சனத்தைச் செய்வதில் எவ்வித பயனும் இல்லை. இவர்கள் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி என்கின்ற விடயத்தைக் கொண்டு வந்து ஒரு அரசியல் எழுச்சியை அல்லது இளைஞர்களைத் திருப்பப் பார்த்தார்கள். ஆனால் அதில் தோற்றுவிட்டார்கள். உணர்வை வைத்து மாத்திரம் அனைத்து விடயங்களையும் நோக்காமல் எங்களுடைய எதிர்கால சந்ததியை உறுதியான தளத்தில் கொண்டு செல்வதற்காக நாங்கள் பாடுபட வேண்டும்.

கிழக்கு மாகாணம் என்பது தமிழர்களின் மாகாணமாக இருந்தாலும், நீண்ட காலப்போராட்டத்தினால் பொருளாதார உற்பத்தில் நலிவுற்று பின்தங்கி இருப்பதன் காரணமாகப் பல சவால்களை எதிர்கொண்டிருக்கின்றோம். இந்தச் சவால்களை எதிர்கொள்வதற்கு இன்னும் இன்னும் வீழ்ச்சிப் போக்கான அரசியற் தீர்மானங்களை எடுக்காமல் தந்திரோபாயமான அரசியற் சித்தாந்தத்தை நாங்கள் உருவாக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

“சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு.” – கருணாகரம் ஜனா பெருமிதம் !

தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது எனவும் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு எனவும் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) தொடர்பில் அண்மைக் காலங்களில் வெளிவந்த கருத்துக்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஆரம்பிப்பதற்கு முயற்சி எடுத்த அமைப்பு முதலாவதாகச் சந்தித்த கட்சி தமிழீழ விடுதலை இயக்கம் தான். அதனைத் தொடர்ந்து தான் ஏனைய கட்சிகளை அந்த அமைப்பு சந்தித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு ஒரு பெரிய நீணட வரலாறு இருக்கின்றது. தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஆயுதப் போராட்ட இயக்கங்களிலே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். இதில் சில காலம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கூட இருந்ததாக வரலாறுகள் உண்டு.

தமிழீழ விடுதலை இயக்கம் தான் ஒரு பாதுகாப்புப் படையினரின் அறணை முற்றுமுழுதாக அழிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு அதனைக் காணொளியாகப் படைத்தது. 1984ம் ஆண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தை முற்றுமுழுதாக நிர்மூலமாக்கிய வரலாறு டெலோவுக்கே உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்களுக்குள் பல முரண்பாடுகள் ஏற்பட்டது வெளிப்படையான உண்மை. 2001லே கடந்த கால கசப்பான சம்பவங்களை மறந்து நாங்கள் எல்லோரும் ஒன்றாகினோம். இன்னுமொரு உண்மையும் இருக்கின்றது, ஆயுதப் போராட்ட இயக்கங்களாக இருந்து அரசியற் கட்சிகளாக போராட்ட இயக்கங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்பு 1989ம் ஆண்டில் இருந்து இன்றுவரைக்கும் தொடர்ச்சியாக நடைபெற்ற ஒவ்வொரு பாராளுமன்றத் தேர்தல்களிலும் தமிழீழ விடுதலை இயக்கம் மாத்திரம் தான் பாராளுன்ற உறுப்புரிமையை வகித்திருந்தது.

ஆனால் வரலாறு தெரியாத சில பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்த் தேசியத்தின் குழந்தைப் பிள்ளைகள், 2009 ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் தமிழ்த் தேசியத்துக்குள் வந்தவர்கள் கூறுகின்றார்கள் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் ஒரு கட்சி என்று மக்களுக்குக் காண்பிப்பதற்காக ஜெனீவாவுக்கு அனுப்பிய கடிதத்தில் கையொப்பம் வைத்துள்ளது என்று. தமிழீழ விடுதலை இயக்கத்திற்கு நெடிய நீண்ட வரலாறு இருக்கின்றது. எமது கட்சியின் 50வது ஆண்டு பூர்த்தியை நாங்கள் 2019ம் ஆண்டு கொண்டாடியுள்ளோம். 52வது ஆண்டிலே தமிழீழ விடுதலை இயக்கம் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இந்த விடயங்கள் தெரியாமல் கருத்துக்கள் கூறுவது சிறுபிள்ளைத் தனமானது.

கட்சியிலே தேசியத்துடன் நீண்ட காலம் இருக்க வேண்டும், வளர வேண்டும், பக்குவம் அடைய வேண்டும், அதற்குப் பின்பு இந்த வரலாறுகளைச் சரியாகப் படிக்க வேண்டும். எம்மைப் பொருத்தமட்டில் சுமார் 39 வருடங்களாக போராட்டம், அரசியல் தமிழ் மக்களின் பிரச்சினைகள் என்ற வரலாற்றுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். எங்களுக்கு கடந்த கால வரலாற்றினை யாரும் சொல்லித் தரத் தேவையில்லை. ஆனால் சிலருக்கு இந்த வரலாறுகளை யாராவது சொல்லிக் கொடுக்க வேண்டும் அல்லது ஏதாவது புத்தகத்தில் படித்துத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்த வரலாறுகளைப் பற்றி அறிய வேண்டுமாக இருந்தால் அவற்றைச் சரியானவர்களிடம் கேட்டு அறிந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்

தாய் வெளிநாட்டில் – கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம். !

மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் 10 வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசியில் ஆபாச படத்தை காட்டி அவரை பாலியல் துஷ்பிரயோம் மேற்கொண்ட 21 வயது இளைஞர் ஒருவரை நேற்று (28) கைது செய்துள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சிறுமியின் தந்தையார் வெளிநாட்டில் வேலைவாய்பு பெற்று அங்க பணியாற்றிவரும் நிலையில் தாயாருடன் வாழ்ந்துவரும் குறித்த சிறுமியை சம்பவதினமான நேற்று தனிமையில் இருந்தபோது அங்கு சென்ற இளைஞன் சிறுமிக்கு தனது கையடக்க தொலைபேசியிலுள்ள ஆபாச படத்தை காட்டி சிறுமியை பலாத்தகாரம் செய்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து அவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து குறித்த 21 வயது இளைஞனை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதில் கைது செய்தவரை இன்று (29) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுணதீவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“சிங்கள மக்களையே முட்டாளாக்கும் கோாட்டபாய அரசு.” – சிறீதரன் விசனம் !

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்தார்.

அவரது இல்லத்தில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய நாடுகள் மன்றம் வரை சென்று இலங்கையினுடைய ஜனாதிபதி சில கருத்துக்களை தெரிவித்தார். அதில் இலங்கையினுடைய தமிழ் மக்களின் குரலாக இருக்கும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களை நீங்கள் வாருங்கள் நாங்கள் பேசுவோமென அழைப்பு விடுத்திருக்கின்றார்.

இதே ஜனாதிபதி தான் தனது தேர்தல் காலத்தில் புலம்பெயர் தமிழர்கள் தமிழீழத்தை பெற்று விடுவார்கள். எம்மை மின்சார கதிரையில் ஏற்றிவிடுவார்கள் என்றும் சர்வதேச சமூகத்திற்கு பிழையான கருத்தை கொடுத்து நாட்டை பிளவுபடுத்துகிறார்களென சிங்கள மக்களினிடைய புலம்பெயர் தமிழர்கள் பற்றிய இனவாதக் கருத்துக்களை தெரிவித்து ஆட்சிக்கு வந்தார்.

புலம்பெயர் தமிழர்களை காட்டி சிங்கள மக்களுடைய வாக்குகளை பெற்ற கோட்டாபய அரசாங்கம் தற்போது சிங்கள மக்களை மூடர்களாக்குகின்றனர். சிங்கள மக்கள் இதனை புரிந்து கொள்ள வேண்டும். முஸ்லிம்களின் பொருளாதார நிலையை அழித்து நாசமாக்கி சிங்கள இளைஞர்களை இனவாத ரீதியில் முஸ்லிம்களுக்கு எதிராக திசை திருப்பிய இந்த அரசாங்கம் இன்று அரேபிய நாடுகளுக்கு சென்று கெஞ்சுகின்றனர்.அரசாங்கம் ஏன் இரண்டு முகத்தை கொண்டு இதனை செய்கிறது.

புலம்பெயர்ந்தவர்களை பேச அழைப்பது தொடர்பாக,மக்களின் ஆணையை அதிகமாக பெற்ற கட்சி என்கிற அடிப்படையில் இதனை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். ஆனால் இந்த அரசாங்கம் இதயசுத்தியுடன் அதனை செய்ய முன்வரவேண்டும் என்றார்.

“பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதாகியுள்ள தமிழ் இளைஞர்கள் விரைந்து விடுவிக்கப்பட வேண்டும்.” – ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவிடம் கூட்டமைப்பினர் கோரிக்கை !

ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. இலங்கைக்கு ஜி.எஸ்.பீ. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து வழங்குவது தொடர்பாக ஆராய நாட்டுக்கு விஜயம் செய்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழு நேற்று மாலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை சந்தித்தது.

கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.

இந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பிரிவு, ஜீ.எஸ்.பீ. பிளஸ் வரிச்சலுகையை நீக்குவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழ் மக்கள் மீதான உரிமை மீறல்கள், புதிய அரசியலமைப்பை உருவாக்கல், நில அபகரிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் முழுமையாக நீக்கப்பட்ட வேண்டும் என்றும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் அனைவரும் விரைவில் விடுவிக்கப்பட வேண்டுமென்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகள் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் ஐரோப்பிய ஒன்றியம் தனது கவனத்தை பயங்கரவாத தடைச்சட்டத்துடன் மாத்திரம் மட்டுப்படுத்தக்கூடாது என தமிழ்தேசிய கூட்டமைப்பு வேண்டுகோள்விடுத்துள்ளது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகளுடனான நேற்றைய சந்திப்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் இதனை தெரிவித்துள்ளார்.தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளிற்கு புதிய அரசியல் அமைப்பின் ஊடாக தீர்வை காணவேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகளும் – பல்கலைகழகங்களும் ஆரம்பமாவது எப்போது..? – வெளியாகியுள்ள தகவல் !

2021 ஒக்டோபர் முதல் நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் கட்டம் கட்டமாக மீண்டும் திறக்கப்படும் என மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி முன்பள்ளி மற்றும் ஆரம்பகல்வி இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த டி சில்வா தெரிவித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே இதை குறிப்பிட்டார்.

தொடர்ந்து தெரிவிக்கையில், பாடசாலைகள் நான்கு கட்டங்களாக மீண்டும் திறக்கப்படும். அதன் படி ,

  • முதல் கட்டம்: ஒன்று – ஐந்தாம் வகுப்பு வரை 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்
  • இரண்டாம் கட்டம்: 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகள்
  • மூன்றாம் கட்டம்: சாதாரண தரம் மற்றும் உயர்தர வகுப்புகள்
  • நான்காம் கட்டம்: நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் திறக்கப்படும் என்றார்.

இதேவேளை, நவம்பர் மாதத்திற்குள் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  பல்கலைக்கழக மாணவர்களுக்கான தடுப்பூசி திட்டம் முடிந்தவுடன் பல்கலைக்கழகங்கள் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மூத்த பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

மேலும், நவம்பர் மாதத்திற்குள் மூன்றாம் மற்றும் நான்காம் ஆண்டு மாணவர்களுக்கான அமர்வுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முடியும் என்று நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் நலனுக்காகவே இறப்புச் சான்றிதழ்களை வழங்குகின்றோம்.” – அங்கஜன் இராமநாதன்

“காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் நலனை கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை வழங்கின்றோம். எனவும் காணாமல் போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் உடனடித் தீர்வாகத் தான் அவதானிக்கப்படுகின்றது. அது நிரந்தமான தீர்வாக அமையாது.” என பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித் தலைவரும் யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான இறப்புச் சான்றிதழ் வழங்கப்படும் என்று ஜனாதிபதி நிவ்யோர்க் நகரில் உரையாற்றிய கருத்து தொடர்பில் ஊடகவியாளாலர்கள் எழுப்பிய கேள்விக்கு நேற்று (28) பதில் அளிக்கையிலேயே அங்கஜன் இராமநாதன் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

காணாமல் போனவர்கள் தொடர்பாக சிலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம். மாற்றுக் கருத்து உண்மையாகவும் இருக்கலாம். சிலருக்கு எந்ததொரு முடிவும் இல்லாத நிலை காணப்படுகின்றது. இது இறப்புச் சான்றிதழ் மூலம் கிடைக்குமாயின் அது குறைந்த பட்சம் உடனடி தேவையாக இருக்கும். அதற்காக உறுதி மொழியினை அரசாங்கமே வழங்கும் அது நிலையான கொள்கை உடையது.

பகுதி, பகுதியாகத் தான் தீர்வுகளை எட்ட முடியும். கிடைக்க முடியாத எந்ததொரு தீர்வினையும் பெற்றுக் கொடுக்கவில்லை. முதற்தடவை காணாமற்போனவர்களுக்கான இறப்புச் சான்றிதழ் கிடைக்கப்போகிறது. யுத்தம் முடிந்து 10 வருடம் ஆகிவிட்டது. மேலும் 30, 40 வருடத்திற்கு முற்பட்டவர்களும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். அவர்களின் உறவினர்களின் நலனை கொண்டு அதற்காக உடனடித் தீர்வுக்காக இறப்புச் சான்றிதழ்களை வழங்கின்றோம். இதனை உடனடி மருந்தாக தான் பார்க்கின்றேன். உடனடித் தேவை என்பது மருந்து அதன் பின்னர் தான் மருந்தின் பலன் கிடைக்கும் என்றார்.

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது முட்டை வீச்சு !

பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி வலென்ஸின் நகர மையத்தில் பார்வையாளர்களை சந்தித்த போது அதிபர் இமானுவேல் மக்ரனை ஒருவர் கன்னத்தில் அறைந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏறு்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்று பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மக்ரோன் மீது Lyon நகரில் வைத்து முட்டை வீச்சு இடம்பெற்றுள்ளது.

நகரில் இடம்பெற்ற உணவகம் மற்றும் உணவு வர்த்தக கண்காட்சியை பார்வையிடச் சென்றிருந்த நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்ற நிலையில் இது தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

தமக்கு எதிராக செயற்பட்டவரின் குழந்தையை சுட்டுக்கொலை செய்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பகுதியில் தலிபான்கள் எதிர்ப்புப் படையில் இருந்த போராளியின் குழந்தையைத் தலிபான்கள் கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளனர். ஆப்கானில் ஜனநாயகம் நிலை நாட்டப்படும் என்று தலிபான்கள் உறுதியளித்த நிலையில், நாளுக்கு நாள் அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்ட நால்வரைக் கொன்று பொதுவெளியில் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.

இந்த நிலையில் பஞ்ச்ஷிர் பகுதியில்,  தலிபான்கள் எதிர்ப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த போராளியின் மகனைத் துப்பாக்கியில் தலிபான்கள் சுட்டுக் கொன்றனர். சிறுவன் கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கன் மக்களிடையே அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் ஆட்சி அமைந்துள்ளது. இதுவரை எந்த ஒரு நாடும் ஆப்கானிஸ்தானை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ரஷ்யா, சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் ஆப்கானிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பெண்கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளைத் தலிபான்கள்  கட்டவிழ்த்துள்ளனர்.

யாழ்.மாநகரசபை  அமர்வில்   திலீபனுக்கு அஞ்சலி – புறக்கணித்த ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் !

யாழ்.மாநகர சபை  அமர்வில்  திலீபனுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட அதே வேளை  பொலிஸாரின் செயற்பாடுகளுக்கு எதிராக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாநகர சபைபின் மாதாந்த அமர்வு  இன்று (செவ்வாய்க்கிழமை) மாநகர சபையின் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது சபையின் ஆரம்பத்தில் திலீபனுக்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அது மாத்திரமின்றி   தீபம் திலீபனின் நினைவிடத்தில் வைத்து கடந்த 23 ஆம் திகதி யாழ் மாநகர சபை உறுப்பினர் ரஜீவ்காந் யாழ்ப்பாண  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டமை மற்றும் ஏற்றப்பட்ட தீபத்தை காவல்துறையினர் காலால் தட்டிவிட்டமை உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று இடம்பெற்ற   திலீபனின் அஞ்சலி நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.