September

September

“தமிழர்களை குறிப்பாக மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.” – ஹானா சிங்கருக்கு கடிதம் !

இலங்கையில் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்படுகின்ற தாக்குதல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு கடிதம் ஒன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் மூலமாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் மேலும் வலியுறுத்தப்பட்டுள்ளதாவது ,

இலங்கை கடற்படையின் தாக்குதலில் இருந்து தமிழர்களை குறிப்பாக தமிழ் மீனவர்களை பாதுகாக்க வேண்டும்.

மன்னார் பேசாலை – வங்காளைபாடு பிரதேசத்திலிருந்து கடந்த 24 ஆம் திகதி கடற்தொழிலுக்கு சென்று கரை திரும்பிய மீனவர்கள் இருவரை இலங்கை கடற்படையைச் சேர்ந்த இருவர் மதுபோதையில் தாக்கியுள்ளனர். கிராம சேவையாளர் அப்பகுதியில் மீனவர்கள் தாக்கப்படுவதை எதிர்த்து கேள்வி கேட்டதைத் தொடர்ந்து அப்பகுதியில் முறுகல் நிலை ஏற்பட்டதுடன், அங்கு நின்ற மீனவர்கள், பெண்கள், கிராமசேவகர் உட்பட அனைவரையும் கடற்படையினர் தாக்கியிருந்தனர்.

இதனால் அப்பகுதியில் உள்ள தமிழர்கள் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சத்திலுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பிர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார். காவல்துறையினர் மீதான நடுநிலைமையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை.தமிழர்களை குறிப்பாக மீனவர்களை கடற்படையினரிடம் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்  என்பதால், இந்தச் சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி ஹானா சிங்கருக்கு அறிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

 

“சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்காது ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரிக்கிறது அரசாங்கம்.” – செல்வம் அடைக்கலநாதன்

அத்தியாவசிய பொருட்களை விடுத்து சிகரெட்டுக்கான வரியை அதிகரிப்பு செய்யுங்கள் என  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் பிரதமர் மற்றும் நிதி அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு தொடர்பாக இன்று(செவ்வாய்க்கிழமை) அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்துளார்.

குறித்த கடிதத்தில் மேலும் ,

“அத்தியாவசிய பொருட்களுக்கான வரியை அரசாங்கம் அதிகரிக்கும் போது, சிகரெட்டின் மீதான வரியை அதிகரிக்க ஏன் பின்வாங்குகின்றது. இவ்வாறான சூழலில் தான் அரசாங்கம் ஏழைமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரியை அதிகரித்து வருகின்றது. ஒரு சிகரெட்டின் விலையினை ரூபாய் 20.00 தினால் உயர்த்தியிருந்தால் சுமார் 100 பில்லியன் ரூபாயினை இழக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது.

இன்று பெருமபாலான சிறுவர்கள் முதல் பெரியோர் வரை இதனை பயன்படுத்துவதும் இதற்கு அடிமையாகி காணப்படுவதினாலும் இது ஓர் பாரிய சமூக சீர்குலைவிற்கு  வழிவகுத்துக்கொண்டிருக்கிறது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. எனவே இதனை தடுக்க வேண்டுமென்றால் அரசாங்கம் சிகிரெட் மீதான முறையான வரி முறைமையை கடைப்பிடிக்க வேண்டும்.

அவ்வாறான வரி முறைமையினால் அரசாங்கம் தனது வருமானத்தை அதிகரிக்கச்செய்வதோடு பாவனையிலும் சடுதியான வீழ்ச்சியினை ஏற்படுத்த முடியும். இன்றைய காலப்பகுதியில் சிகரெட்  பாவனையை குறைப்பதானது கொவிட் -19 கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பாரிய உதவியாக அமையும் என்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே மக்கள் பிரதிநிதி என்ற வகையில், எதிர்வரும் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்வைக்கப்படவுள்ள 2022ம் ஆண்டிற்கான வரவு செலவுத்திட்டத்தில் நாட்டிற்கும் நாட்டுமக்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் சிகரெட் மீது முறையாக வரி அறவிடப்படும் கொள்ளையொன்றினை உருவாக்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவீர்கள் என தீர்க்கமாக நான் நம்புகின்றேன்” என தெரிவித்துள்ளார்.

“ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருங்கள்.” – வைத்தியர் ஹேமந்த அறிவுறுத்தல் !

“ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.” என சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் இதை கூறினார்.

மேலும் தெரிவிக்கையில்,

12 – 19 வயதிற்குட்பட்ட குறைபாடுகள் உள்ள பிள்ளைகளுக்கே தடுப்பூசி போடும் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. எனினும், ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்த எந்த முடிவும் இதுவரை எடுக்கவில்லை. ஆரோக்கியமான குழந்தைகளுக்கான தடுப்பூசிகளை போடும் போது, நாங்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

அதனால்தான் இது குறித்து நிபுணர்கள் தங்கள் பரிந்துரைகளை முன்வைக்கவில்லை. எனவே, ஆரோக்கியமான குழந்தைகளின் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு தடுப்பூசி மையங்களுக்கு விரைந்து செல்ல வேண்டாம்.

நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம், சரியான நேரத்தில் ஆரோக்கியமான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து நிபுணர்கள் பொருத்தமான பரிந்துரைகளை வெளியிடுவார்கள். இதற்கிடையில், மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் விதிகளைப் பின்பற்றத் தவறினால், கட்டுப்பாடுகளை தளர்த்துவது COVID-19 நிலைமையை மோசமாக்கும் என்றும் டாக்டர் ஹேரத் கூறினார்.

முடிவுக்கு வந்தது ஏமன் நாட்டின் பூதக்கிணறு தொடர்பான மர்மங்கள் !

ஏமன் நாட்டில் உள்ள அல்மாரா பாலைவனத்தின் நடுவே 367 அடி ஆழமும், 30 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு பெரிய கிணறு உள்ளது. இந்த கிணறை அப்பகுதி மக்கள் பர்ஹட்டின் கிணறு என அழைக்கின்றனர். இந்தக் கிணற்றிலிருந்து தொடர்ந்து துர்நாற்றம் வீசுவதால் அதில் பூதம் இருப்பதாக வதந்தி பரவியது.
அதிசய கிணறு மரமம் வௌியானது - உள்ளே அற்புதங்கள்
இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த 10 பேர் கொண்ட ஆராய்ச்சிக் குழுவினர் துணிச்சலுடன் அந்தக் கிணற்றில் இறங்கி ஆய்வு செய்தனர்.
இதுதொடர்பாக ஆய்வுக்குழு தலைவர் கூறுகையில், இந்தக் கிணறு குகைபோல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் அழகான நீர்வீழ்ச்சி ஒன்று இருக்கிறது. மேலும் அதிகமான பாம்புகள், இறந்த விலங்குகள் மற்றும் குகை முத்துக்கள் இருக்கின்றன. இங்கு எந்த பூதமும் இல்லை என தெரிவித்தார்.
பறவைகள், விலங்குகள் அதிகமாக இறந்துகிடப்பதாலேயே துர்நாற்றம் வீசுகிறது. இது பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பழமையானது என மதிப்பிட்டுள்ளோம். இந்த கிணறு ஏமன் நாட்டிற்கான ஒரு புதிய வரலாற்றை எழுதும் என நம்புகிறோம். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விரைவில் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் என குறிப்பிட்டார்.

“விலகுவோர் விலகலாம். யார் விலகிச் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது.” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

நாட்டில் தற்போதைய அரசாங்கத்தில் இணைந்துள்ள சிறு அரசியல் கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேற யோசனை இருந்தால், அவர்கள் எந்த நேரத்திலும் அத்தகைய தீர்மானத்தை எடுக்க முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த போது ,

அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறிச் செல்ல விரும்பினால் அவர்களை வலுக்கட்டாயப்படுத்தி தடுத்து வைக்க எங்களுக்கு எந்த ஒரு தேவையும் இல்லை. யார் சென்றாலும் அரசாங்கம்  கவிழாது. சிறு கட்சிகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறும் என்று எதிர்க் கட்சிகள் கனவு காண்கின்றனர். எதிர்க்கட்சிகளில் சிலர் எப்போதும் அரசாங்கத்தின் செயல்பாடுகளைப் பற்றி அவநம்பிக்கை கொண்டுள்ளனர்.

உலகச் சந்தையில் தற்போதைய சூழ்நிலை காரணமாக பல நாடுகளில் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ளது. கடுமையாகப் பாதிக்கும் இந்தச் சூழ்நிலையை நாமும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் எதிர்க்கட்சி ஆளும் கட்சி அரசாங்கத்தில் இருந்திருந்தால் இலங்கையின் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும்.

“அரசாங்கம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிக்கிறது.” – சஜித் பிரேமதாச குற்றச்சாட்டு !

நாட்டின் வளங்களைத் துச்சமாகக் கருதி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்கின்ற அரசாங்கம், மறுபுறம் அப்பாவிப் பொதுமக்களின் நிலங்கள் சூறையாடுவதை ஊக்குவிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சாட்டியுள்ளார்.

பாணமவில் உள்ள ராகம்வேல கிராமத்தில் இடம்பெற்றுவருவதாகக் கூறப்படும் நில அபகரிப்பு சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.

இவை அனைத்தும் நாட்டின் பொதுச் சொத்துக்கள் என்றும் இது ஒரு தனிநபருக்கோ அல்லது குழுவிற்கோ சொந்தமானது அல்ல என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டினார்.

அரசியல் அதிகாரத்தையோ அல்லது பணபலத்தையோ பயன்படுத்தி இந்தக் காணிகளை எந்தவொரு தரப்பினரும் கொள்ளையடிப்பதற்கு அனுமதிக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

இத்தகைய செயற்பாடுகள் மூலம் அரசாங்கம் நாட்டை மிகமோசமான நிலைக்குத் தள்ளியிருக்கின்றது என குற்றம் சாட்டிய சஜித் பிரேமதாச, உரிய சட்டங்களுக்கு மாறாக இடம்பெற்றுவரும் நில அபகரிப்பைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

தரம் 08 இல் கல்வி பயிலும் சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று இரவு மட்டக்களப்பு அரசடி,பொற்கொல்லர் வீதியில் உள்ள வீடு ஒன்றில் சிறுமி ஒருவர் தூக்கில் தொங்குவதாக தகவல்கள் கிடைத்ததை தொடர்ந்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

குறித்த சிறுமி மட்டக்களப்பின் பிரபல பெண்கள் பாடசாலையில் தரம் 08 இல் கல்வி பயிலும் 13 வயது சிறுமியென பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதாகவும் குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பெற்றோர் வெளியில் சென்ற நிலையில் சகோதரிகள் இருவர் வீட்டிலிருந்துள்ளதாகவும் உயிரிழந்த சிறுமி சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த நிலையில் அவரது அக்கா குளியலறையிலிருந்துள்ளதாகவும் குளியலறையிலிருந்து வந்தபோது சூம் ஊடாக கற்றல் நடவடிக்கையிலிருந்த தங்கை தூக்கில் தொங்கிய நிலையிலிருந்துள்ளதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சிறுமியின் மரண விசாரணையை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி சிதம்பரப்பிள்ளை ஜீவரெட்னம் மேற்கொண்டார்.

அதனை தொடர்ந்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

“பாடசாலைகளை திறந்தாலும் நாங்கள் கற்பிக்க மாட்டோம்.” – இலங்கை ஆசிரியர் சங்கம் உறுதி !

இலங்கையில் ஆசிரியர் சங்கம் தொடர்ச்சியாக தனது கற்பித்தல் நடவடிக்கைகளை புறக்கணித்து வருகிறது. ஆசிரியர் போராட்டங்களை நிறுத்த அரசு சில தீர்வுகளை முன்வைத்திருந்த போதும்கூட ஆசிரியர் சங்கம் திருப்தியடையவில்லை. இரண்டு மாதங்களுக்கும் அதிகமாக தொடரும் ஆசிரியர் போராட்டங்களால் மாணவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையில் கல்வி  தனியார் மயமாகிக்கொண்டிருக்கும் சூழலில் – பணமிருப்போர் மட்டுமே கற்கலாம் என்ற சூழல் உருவாகிக்கொண்டிருக்கும் சூழலில் ஆசிரியர்களின் இந்த போராட்டங்கள் இலவசக்கல்வியின் தரத்தையும் அதன் மீதான மாணவர்களின் நம்பிக்கையையும் சிதைத்து விடும் அபாயம் உருவாகியுள்ளது. கடந்த 4 மாதங்களாக பாடசாலைகளட் நடைபெறாத சூழலில் கா.பொ.த உயர்தரம் – சாதாரண தர பரீட்சைக்கு தயாராகும் மாணவர்கள் இதனால் மிகுந்த இடர்பாடுகளை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் வேகமாக பாடசாலைகளை ஆரம்பிக்க  கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ள நிலையில் ,

யார் பாடசாலைகளை திறந்தாலும், ஆசிரியர்கள் சம்பள பிரச்சனை தீரும் வரை அவர்கள் கற்பித்தல் செயற்பாட்டில் பங்கேற்க மாட்டார்கள் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சின் செயலாளர் ஆசிரியர்-அதிபர் பிரச்சனையை தீர்க்காமல் ஊடக சந்திப்புகளில் முரண்பாடான அறிக்கைகளை கூறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எந்த அடிப்படையில் கல்வி அமைச்சின் செயலாளர் மீண்டும் வேலை செய்யச் சொல்கிறார்? அவரது நகைச்சுவைகளை யார் ஏற்றுக்கொள்வார்கள்? உடனடியாக இந்த நகைச்சுவைகளை சொல்வதை நிறுத்துங்கள். பாடசாலைகளை திறந்து நடைமுறை ஆய்வுகளை நடத்துவதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? முதலில் எமது பிரச்சினைக்கு ஒரு தீர்வைக் கொடுங்கள்.

அவர் ஒக்டோபரில் தனியாக பாடசாலையைத் தொடங்க முயற்சித்திருக்கலாம். இந்த வேலை நிறுத்தத்திற்கு நேற்று (27 ம் திகதி) 78 நாட்கள் ஆகும். நாங்கள் குழந்தைகளைப் பற்றி சிந்திக்கிறோம்.

பாடசாலைகள் தொடங்குவதற்கு முன்பு கல்வி அதிகாரிகள் முறையான முடிவை எடுப்பார்கள் என்று நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

16 வருடங்களின் பின் ஜேர்மனியில் ஏஞ்சலா மெர்கலின் கட்சியை வீழ்த்தி ஆட்சி அமைக்கிறது ஜனநாயக யூனியன் கட்சி !

ஜெர்மனியில் கடந்த 16 ஆண்டுகளாக மத்திய வலதுசாரி கட்சியான ஜெர்மனி கிறிஸ்தவ  ஆட்சி அதிகாரத்தில் இருந்தது. அந்த கட்சியின் தலைவரான ஏஞ்சலா மெர்கல் தொடர்ந்து 16 ஆண்டுகளாக பிரதமராக இருந்து வந்தார்.
இதற்கிடையே, அங்கு 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பாராளுமன்ற தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. இந்த தேர்தலில் ஏஞ்சல் மெர்கல் போட்டியிடவில்லை. அவருக்கு பதில் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியின் சார்பில் ஆர்மின் லஷெட் போட்டியிட்டார். அவரை எதிர்த்து மத்திய இடதுசாரி கட்சியான ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் சார்பில் ஒலாப் ஷோல்ட்ஸ் போட்டியிட்டார்.
இந்நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டு நேற்று காலை முடிவுகள் வெளியாக தொடங்கின.
இதில் ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி நாட்டில் 16 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சியை சிறிய வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.
இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சி 29.5 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும், ஜெர்மனி கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் கட்சி 24.1 சதவீத வாக்குகளைப் பெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், இரு கட்சிகளுமே ஆட்சி அமைப்பதற்கான தனிப்பெரும்பான்மையை பெறவில்லை என கூறப்படுகிறது. எனினும் ஆட்சி அமைக்க தங்களுக்கு முழு ஆதரவு கிடைத்துள்ளதாக ஜெர்மனி சமூக ஜனநாயக கட்சியின் பிரதமர் வேட்பாளரான ஒலாப் ஷோல்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

“மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுங்கள்.”- பேராசிரியர் திரு. மஞ்சு வீரசிங்க

தடுப்பூசி ஏற்றலுக்கு எதிராக ஒரு சிலர் வர்த்தக நோக்கங்களுக்காக பரப்பி வரும் மூடநம்பிக்கைகளுக்கு ஏமாறாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இன்னும் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத இளைஞர்கள் முதலாம் கட்ட கொவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுமாறு கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் சமுதாய மருத்துவ விஞ்ஞானம் தொடர்பான பேராசிரியர் திரு. மஞ்சு வீரசிங்க தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி ஏற்றுவதால் பாலியல் பலவீனம் மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படுவதாக ஒருசிலர் கூறும் கருத்துக்களுக்கு எந்தவொரு விஞ்ஞான ரீதியான அடிப்படையும் இல்லையெனச் சுட்டிக்காட்டும் பேராசிரியர், விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்படாத அவ்வாறான தவறான கதைகளுக்கு ஏமாறாமல் புத்திசாதுரியமாக நடந்து கொள்வதன் மூலம் நபர்களையும் அதேபோல் நாட்டையும் பாதுகாக்க முடியும் என்பதையும் தெரிவிக்கின்றார்.

கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் நோக்குடன் பல்வேறு தளங்கள் மூலமாக பரப்பப்பட்டு வரும் தவறான கருத்துக்களை விஞ்ஞான ரீதியாக பரிசீலனை செய்வதற்கு அரசாங்க தகவல் திணைக்களத்தால் ஒழுங்குபடுத்தப்பட்ட ஊடகக் கலந்துரையாடலில் பேராசிரியர் இதனைக் குறிப்பிட்டுக் கூறினார். இன்றைய (27) கலந்துரையாடல் அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி பெற்றுக் கொள்வதால் கொவிட் 19 உயிரிழப்பு வீதத்தைக் குறைத்துக் கொள்ள முடிந்துள்ளது. அதனால் இளைஞர்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்கும் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை சீர்குலைக்க வேண்டாம் எனவும், மருத்துவ முறைகளைப் பரப்புகின்ற போர்வையில் தவறான கருத்துக்களைப் பரப்புவர்களிடம் திரு. வீரசிங்க வேண்டுகோள் விடுத்தார்.

நேற்றை தினம் (26) வரைக்கும் 12 மில்லியன் பேருக்கு கொவிட் 19 தடுப்பூசி இரண்டு கட்டங்களும் வழங்கப்பட்டுள்ளதுடன், மேலும் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கப்பட்டவர்களில் 2.2 மில்லியன் பேருக்கு மாத்திரமே இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்க வேண்டியும் உள்ளது. இலங்கையில் மட்டுமன்றி முழு உலகிலுமே கொவிட் 19 கட்டுப்பாட்டுக்குள்ள சிறந்த தீர்வு தடுப்பூசியாகும்.

பேராசிரியர் சுட்டிக்காட்டிய வகையில், தொற்று நோய்களுக்கு எதிராக தடுப்பூசி தொடர்பான சட்டம் முதன்முதலாக 1853 ஆம் ஆண்டு பிரித்தானிய பாராளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது. அது சின்னமுத்து நோய்க்கானதாகும். மேலும் 170 வருடகாலமாக தடுப்பூசி ஏற்றலுக்கு எதிரான தரப்பினர்கள் ஒரே விதமான தர்க்கங்களையே முன்வைக்கின்றனர். குறித்த தடுப்பூசியால் பயனில்லை எனவும், ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் பதார்த்தங்கள் இருக்கலாம் எனவும் மற்றும் மேற்கத்தேய மருத்துவ விஞ்ஞானத்தின் ஏகபோகவாதத்தை நாடு ஏற்றுக்கொள்ளக் கூடாது போன்ற கருத்துக்கள் அவற்றில் சிலவாகும்.

1885 ஆம் ஆண்டில் நீர்வெறுப்பு நோய்க்கும், 1920 ஆம் ஆண்டில் தொண்டை அழற்சி நோய்க்கும் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டதுடன், மேலும் 1949-1955 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பல்வேறு தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தடுப்பூசி வழங்குவதால் பல்வேறு நோய்களை குறைந்த மட்டத்திற்குக் கொண்டு வருவதற்கு முடிந்தமையால் தொற்று நோய்களுக்கு முக்கிய சிகிச்சையாகவும், தீர்மானம் மிக்க காரணியாகவும் காணப்படுவது தடுப்பூசியே என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றாளர்களின் உயிரிழப்பு வீதம் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைவதற்கும் தடுப்பூசி ஏதுவாக அமைந்தமையை கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஹோமாகம மூன்றாம் நிலை கொவிட் 19 சிகிச்சை மருத்துவமனையின் விசேட மருத்துவ நிபுணர் எரங்க நாரங்கொட குறிப்பிட்டுக் கூறினார்.

இரண்டு கட்ட தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டு, ஒருமாத காலத்தின் பின்னரே நோய் எதிர்ப்புச்சக்தி முழுமையாக ஏற்படுமெனவும் கூறினார். குறித்த காலத்தை பூர்த்தி செய்யாவிட்டால் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், சிகிச்சை பலனளிக்காமல் மோசமான நிலைமைக்கோ அல்லது உயிரிழப்போ ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு.

தடுப்பூசி வகைகளுக்கு ஏற்ப அதிக நோய் எதிர்ப்புக் கிடைப்பதாக, பொதுமக்கள் மத்தியில் காணப்படும் எண்ணங்கள் பொய்யானவை எனவும், உலக சுகாதார தாபனம் அங்கீகரித்துள்ள 08 தடுப்பூசி வகைகளும் ஒரே சமமான நோய் எதிர்ப்புச் சக்தியை வழங்குவதாகவும் மருத்துவர் அவர்கள் தெளிவுபடுத்திக் கூறினார்.

பைசர் தடுப்பூசி 12 வயது தொடக்கம் 18 வயது வரையான பிள்ளைகளுக்கு மாத்திரமே அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் எந்தவொரு தடுப்பூசியின் மூலமும் ஒரே சமமான நோய் எதிர்ப்பு சக்தியே கிடைக்கின்றது.

இலங்கை தெற்காசிய நாடுகளில் சிசு மரணம் குறைவான நாடாக காணப்படுவதற்கான காரணமாக அமைவது, குறிப்பிட்ட காலங்களில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்குவதாலேயாகும் என குடும்ப சுகாதாரப் பணியகத்தின் பணிப்பாளர், சமுதாய மருத்து விசேட நிபுணர் திருமதி. சித்ரமாலி டி சில்வா குறிப்பிட்டுக் கூறினார். 1961 ஆம் ஆண்டில் பிள்ளைகளுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்திட்டம் ஆரம்பித்தாலும், நாடுபூராகவும் 1978 ஆம் ஆண்டிலேயே மேற்கொள்ளப்பட்டது.

பிள்ளைகளுக்குக் காலத்திற்குக் காலம் நோய்த்தொற்று ஏற்படுவதற்குள்ள சந்தர்ப்பங்களை ஆராய்ந்து அவற்றுக்குக் குறித்த காலத்தில் தடுப்பூசி வழங்குகின்றமையால், சிசு மரணத்தைக் குறைத்துக் கொள்வதற்கு இயலுமை கிட்டியுள்ளமையாலும், கொவிட் 19 தடுப்பூசி 12 வயதுக்குக் குறைவான பிள்ளைகளுக்கு வழங்குவதற்கு உலக சுகாதார தாபனம் அங்கீகரிக்கவில்லை எனவும் விசேட நிபுணத்துவ மருத்துவர் சுட்டிக்காட்டினார்.