02

Sunday, September 26, 2021

02

இங்கிலாந்தின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாது திணரும் இந்தியா – ஆறுதலளித்த ஷர்துல் தாகூர் !

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதல், மூன்று போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளன. ஒரு டெஸ்ட் டிராவில் முடிந்தது. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெறுகிறது.
நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் ஜோ ரூட் பந்து வீச்சை தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய அணியின் முதல்நிலை துடுப்பாட்டவீரர்கள் யாரும் சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 11 ஓட்டங்கள், கே.எல்.ராகுல் 17 ஓட்டங்கள், புஜாரா 4 ஓட்டங்கள் என ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அதன்பின்னர் தலைவர் கோலி-ரவீந்திர ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடினர்.
ஜடேஜா 10 ரன்களில் ஆட்டமிழக்க, தலைவர் கோலி அரை சதம் அடித்த நிலையில், ராபின்சன் ஓவரில் அவரும் ஆட்டம் இழந்தார். அதன்பின்னர் வந்த வீரர்களும் அணியின் ஓட்டத்தை  உயர்த்தமுடியாமல் தடுமாறினர். ரகானே 14 ஓட்டங்களிலும், ரிஷப் பண்ட் 9 ஓட்டங்களிலும்  ஆட்டமிழந்தனர்.
இந்த நெருக்கடியான  நேரத்திலும் நேர்த்தியாகவும் அதிரடியாகவும் ஆடிய ஷர்துல் தாகூர், 31 பந்துகளில் அரை சதம் அடித்து நம்பிக்கை அளித்தார். ஆனால், அவர் 57 ஓட்டங்கள் எடுத்த நிலையில், துரதிர்ஷ்டவசமாக வோக்சிடம் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன்பின்னர் பும்ரா (0), உமேஷ் யாதவ் (10) அடுத்தடுத்து ஆட்டமிழக்க, இந்திய அணி முதல் இன்னிங்சில் 191 ஓட்டங்களிலும் சகலவிக்கெட்டுக்களையும்.  இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 3 விக்கெட், ஓக்ஸ் 4 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை ஆடுகிறது.
இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடி வரும் இங்கிலாந்து அணி ஒன்பது ஓவர்கள் முடிவடைந்துள்ள நிலையில் 21 ஓட்டங்களுக்கு இரண்டு விக்கெட்டுக்களை இழந்து துடுப்பெடுத்தாடி வருகின்றது.

உலகம் முழுதும் சீனாவின் வீடியோ கேம்ஸ் – ஆனால் சீனாவில் கேம்ஸ் விளையாட புதிய தடை !

உலகம் முழுவதும் பல சீன வீடியோ கேம்கள் மக்களை ஆக்கிரமித்துள்ளது. எல்லா ஆன்ரோய்ட் போன்களிலும் சீனாவின் செயலிகளும் – வீடியோ கேம்ஸ்களுமே ஆக்கிரமித்துள்ளன.

சீனாவில் குழந்தைகளின் எதிர்காலதத்தைக் கருத்தில் கொண்டு, இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும் என்ற புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் வீடியோ கேம் விளையாட புதிய விதிமுறைகள் இன்றுமுதல் அமல்படுத்தப்பட்டுள்ளன. அந்நாட்டின் வீடியோ கேம் ஒழுங்குமுறை ஆணையமான, நேஷனல் பிரஸ் அண்ட் பப்ளிகேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பு பிறப்பித்துள்ள உத்தரவின்படி, சீனக் குழந்தைகள் இனி வாரத்தில் 3 மணி நேரம் மட்டுமே வீடியோ கேம் விளையாட முடியும்.

18 வயதுக்கு உட்பட்ட அனைவருக்கும் இந்த சட்டம் பொருந்தும். 18 வயதுக்குக் கீழ் உள்ளோர் தங்களின் உண்மையான பெயர், விவரங்களை அளித்தால் மட்டுமே வீடியோ கேம் விளையாட பதிவு செய்துகொள்ள முடியும். வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் மாலை 8 மணி முதல் 9 மணி வரை மட்டுமே 18 வயதுக்குக் குறைவானோர் வீடியோ கேம் விளையாட முடியும். தேசிய விடுமுறை நாட்களிலும் இதே நேரத்தில் விளையாடலாம்.

சீன அரசின் இந்த முடிவு, டென்சென்ட் (TENCENT), நெட்ஈஸ் (NetEase) போன்ற புகழ்பெற்ற ஆன்லைன் வீடியோ கேம்ஸ் தயாரிப்பு நிறுவனங்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக ஆன்லைன் கேம்ஸ் சார்ந்து விதிக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கட்டுப்பாடுகள் சீனாவின் தொழில்நுட்பம் சார்ந்த பங்கு வர்த்தகத்தின் தலையெழுத்தையே புரட்டிப் போட்டுவிடக்கூடும் என்றும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.

ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட கைப்பேசி !

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் சிறையில் இருந்து கைப்பேசி ஒன்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு கைப்பேசி கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு – பரிதாப நிலையில் ஆப்கான் என ஐ.நா கவலை !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை பிடித்துள்ளன. அமெரிக்கப் படைகள் முற்றிலுமாக வெளியேறிய நிலையில், எப்போது வேண்டுமென்றாலும் அதிபர், மந்திரி சபைகளை அமைக்க தலிபான்கள் தயாராகி வருகின்றன.
ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய மகிழ்ச்சியில் தலிபான் வீரர்கள், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் வலம் வரும் நிலையில், பெரும்பாலான நாடுகள் தங்களது உதவிகளை நிறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு சேவைகள் முடங்கப்படும், ஊழியர்கள் சம்பளம் பெற முடியாத நிலை ஏற்படும் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
மனிதாபிமான கண்டோட்டத்தில் ஆப்கானிஸ்தான் சூழ்நிலை மிகவும் பரிதாபமாக உள்ளது என ஆப்கானிஸ்தானின் ஐ.நா.வுக்கான மனிதாபிமான ஒருங்கிணைப்பாளர் ரமீஸ் அலாக்பரோவ் கவலை தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தான் கடந்த சில நாட்களாக உணவு விலை 50 சதவீதம் அளவிற்கும், பெட்ரோல் விலை 75 சதவீதம் அளவிற்கும் அதிகரித்துள்ளது.
பெரும்பாலான சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்ட நிலையில், அரசு சேவைகள் செயல்பட முடியாது. அரசு ஊழியர்கள் சம்பளம் பெற முடியாது. இப்படியே சென்றால் இன்னும் ஒரு மாதத்திற்குள் உணவு பற்றாக்குறை ஏற்படும். மூன்றில் ஒருவர் பசியால் வாடும் நிலை ஏற்படும் என ரமீஸ் அலாக்பரோவ் தெரிவித்துள்ளார்.
நேற்று, காந்தகார் பகுதியில் கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுடன் தலிபான்கள் அணி வகுப்பு நடத்தியுள்ளனர். விமானங்களை இயக்க அனுபவம் வாய்ந்த விமானிகள் இல்லாத நிலையில், கத்தார் ஏர்வைஸ் விமானம், தங்களுடைய விமானிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.

இலங்கையின் காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு சர்வதேச அளவில் அதிகரித்துள்ள கேள்வி !

உலக இளவில் கொரோனா பரவல் சற்றும் குறையாது அதிக பரவலை காட்டி வருகின்ற நிலையில் , தடுப்பூசிகளுக்கு நிகராக இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான சவப்பெட்டிகளுக்கும் கேள்வி அதிகரிதது வருகின்றது.

இதே நிலை இலங்கையிலும் தொடர்கின்றது. இலங்கையில் கொவிட் மரணங்களின் அதிகரிப்பையடுத்து கல்கிசை- மொரட்டுவ மாநகர சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட காட்போட் பிரேதப் பெட்டிகள் இலங்கையில் பிரபலமாக ஆரம்பித்திருந்து.

இந்த தகவல் வெளிநாடுகளுக்கும் பரவ ஆரம்பித்த நிலையில் , வெளிநாடுகளிலிருந்து பல கொள்வனவுக் கட்டளைகள் வந்துள்ளன. கல்கிசை – மொரட்டுவ மாநகர சபை உறுப்பினர் பிரியந்த சகபந்து வியட்நாமிலிருந்து பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும் தாய்லாந்திலிருந்து 1000 காட்போட் பிரேதப் பெட்டிகளுக்கு கோரிக்கை விடப்பட்டுள்ளது. அவை வரும் திங்கட்கிழமை அந்நாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது என்றார்.

கொவிட் சடலங்களுக்காக வடிவமைக்கப்பட்ட இப்பிரேதப் பெட்டிகளுக்கு இலங்கையில் தற்போ பெரும் கேள்வி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசின் எந்த நகர்வுகளாலும் கட்டுப்படாத கொவிட் தொற்று – 3500க்கும் அதிகமான புதிய தொற்றுக்கள் – 204 உயிர்ப்பலி !

நாட்டில் மேலும் 846 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இன்று இதுவரை 3,619 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 447,749 ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து இதுவரை பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 378,168 ஆக அதிகரித்துள்ளது.

அதே நேரம் நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் மேலும் 204 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 9,604 ஆக அதிகரித்துள்ளது.

பஹன்துடாவ நீர்வீழ்ச்சியில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு காணொளி வெளியிட்ட ஜோடிக்கு நேர்ந்த கதி !

பலாங்கொடை, பெலிஹுல்ஓயா – பஹன்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பாலியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு, அதனை காணொளியாக பதிவுசெய்து ஆபாச இணையத்தளங்களில் பதிவேற்றிய  குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பன்னிப்பிட்டியவைச் சேர்ந்த 24 வயதான யுவதி ஒருவரும், மஹரகமவைச் சேர்ந்த 34 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீடிப்பதற்கு பிரித்தானியா தீர்மானம் – இலங்கை அரசு வெளியிட்டுள்ள தகவல் !

பிரித்தானியாவின் 2000 ஆம் ஆண்டின் 7 ஆம் இலக்க பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கான தடையை நீடிப்பதற்கு பிரித்தானிய உள்துறைச் செயலாளர் தீர்மானித்துள்ளமை குறித்து தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் வெளிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குடிமக்களின் உயிருக்கு அச்சுறுத்தலையும், உலகளாவிய மற்றும் பிராந்திய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஆபத்தையும் விளைவிக்கும் பயங்கரவாதம் மற்றும் வன்முறைத் தீவிரவாதத்தை தணிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் பிரித்தானியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தாம் உறுதிபூண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

கொரோனோவால் ஊடகவியலாளரான  ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழப்பு !

கொரோனோ தொற்றுக்கு உள்ளாகியிருந்த சுயாதீன ஊடகவியலாளரான  ஞானப்பிரகாசம் பிரகாஸ் உயிரிழந்துள்ளார்.  கொடிகாமத்தை சேர்ந்த பிரகாஸ் , சுயாதீன ஊடகவியலாளராக யாழில் இருந்து வெளிவரும் பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் , செய்திகள் எழுதி வந்ததுடன், உள்நாட்டு, வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளை கட்டுரைகளை எழுதி வந்தார்.

அதேவேளை சில இணையத்தளங்களில் செய்தி பதிவேற்றுனராகவும் கடமையாற்றி வந்தார். அத்துடன் முகநூலில் உடனுக்கு உடன் உள்நாட்டு, வெளிநாட்டு செய்திகளை பதிவேற்றி வருபவர். அந்நிலையில் கடந்த ஐந்து நாட்களாக தலைவலி, இருமலுடன், இலேசான காய்ச்சலுடன் பீடிக்கபப்ட்டு இருந்த நிலையில், நேற்றைய தினம் புதன்கிழமை அண்டிஜன் பரிசோதனையை தானாக முன் சென்று பரிசோதித்த போது, அவருக்கு, தொற்று உறுதியானது. குறித்த விடயம் தொடர்பில் தன்னுடைய முகநூல் ஒன்றிலும் பதிவிட்டிருந்தார்.

குறித்த பதிவுகளில்,   புதன்கிழமை மாலை 3 மணிக்கு தனது முகநூலில் “கடந்த ஐந்து நாட்களாக இலேசான தலைவலி இருமலுடன் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டிருந்தேன். சற்று தேறிவரும் நிலையில் இன்று அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. குணமடைந்த பின்னர் தடையின்றி எனது பணிகள் தொடரும். அதுவரை காத்திருங்கள்” என பதிவு ஒன்றினையும் பதிவேற்றி இருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் மாலை திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதை அடுத்து, வீட்டார் அவரை வைத்திய சாலைக்கு கொண்டு சென்ற போது, உயிரிழந்துள்ளார். இவர் தனது ஏழாவது வயதில் தசைத்திறன் குறைபாடு நோயினால் பாதிக்கப்பட்டதால்  நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவற்றை எல்லாம் தாண்டியும் அவர் ஊடக துறையில் தனக்கென்று ஒரு இடத்தினை தக்க வைத்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அன்னாருக்கு தேசம் குழுமத்தினர் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான்கள் ஒப்புதல் !

அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் போட்டியில் விளையாட ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தலிபான் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த ஒப்புதலின் மூலம் நவம்பரில் டாஸ்மேனியாவில் நடைபெறும் அவுஸ்திரேலிய அணியுடனான ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் மோதும்.

தலிபானின் இந்த ஒப்புதல் மூலம் ஆப்கானிஸ்தான் அணியின் சர்வதேச கிரிக்கெட் பயணம் வழக்கம் போல் தொடரும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.  ஆப்கானிஸ்தான் கிரிக்கெட்  தலைமை நிர்வாகி ஹமீத் ஷின்வாரி செய்திச் சேவையிடம், “அணியை அவுஸ்திரேலியாவுக்கு அனுப்ப தலிபான்களிடமிருந்து எங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளது” என்று கூறியுள்ளார்.

2001 இல் தலிபான்கள் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்னர், பெரும்பாலான பொழுதுபோக்கு நிகழ்வுகள் மற்றும் விளையாட்டுக்களை தடை செய்தனர். பல விளையாட்டு மைதானங்கள் மற்றும் அரங்கங்கள் பொது மரணதண்டனை இடங்களாக பயன்படுத்தப்பட்டன.