06

06

இறுதிநாளில் மாறிய போட்டியின் திசை – இங்கிலாந்தை துவம்சம் செய்த இந்தியபந்துவீச்சாளர்கள் !

இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது.
இதில் 4வது டெஸ்ட், லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி, இந்தியாவை துடுப்பெடுத்தாட செய்யச் சொன்னது. இதைத் தொடர்ந்து விளையாடிய இந்தியா, முதல் இன்னிங்ஸில் 191 ஓட்டங்களுக்கு முழு இலக்குகளையும் இழந்தது. தாகூர் 57 ஓட்டங்கள் , கோஹ்லி 50 ஓட்டங்கள் பெற்றதே அதிகமாக இருந்தது. இங்கிலாந்து சார்பில் கிறிஸ் வோக்ஸ் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து, 290 ரன்கள் குவித்தது. அந்த அணி சார்பில் ஒல்லி போப், அதிகபட்சமாக 81 ஓட்டங்கள் விளாசினார். இந்த தொடரின் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய உமேஷ் யாதவ், இந்தியா சார்பில் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கிய இந்திய தொடக்க வீரர்கள் நிதான ஆட்டத்தைக் கையாண்டனர். ஆரம்பவீரர்களில் ஒருவரான கே.எல்.ராகுல் 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்க, நிலைத்து ஆடிய ரோகித் சர்மா, சதம் விளாசினார். அவர் 256 பந்துகள் விளையாடி 127 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் இந்தியா சார்பில் செத்தேஷ்வர் புஜாரா, ரிஷப் பண்ட், ஷிராதுல் தாக்கூர் ஆகியோர் அரைசதம் அடித்தனர். இதனால் இரண்டாவது இன்னிங்சில் இந்தியா 466 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் மூலம் 368 ஓட்டங்கள் எடுத்தால் இங்கிலாந்து வெற்றி பெறலாம் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று 4வது நாளில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 77 ஓட்டங்கள் எடுத்தது.
ஆனால், இன்று ஆட்டத்தின் ஆரம்பம் முதலே இங்கிலாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது.
இங்கிலாந்து தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் கண்டு, அணியின் ஸ்கோரை உயர்த்தியபோதும் அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் நிலைத்து ஆடவில்லை. டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ மற்றும் மொயின் அலி ஆகியோர் முறையே 5, 0, 0 ஆகிய ஓட்டங்களில் வெளியேறியது இங்கிலாந்துக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.
இந்தியாவுக்காக உமேஷ் யாதவ் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி, 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 5வது மற்றும் கடைசி போட்டி வரும் 10 ஆம் தேதி மான்சஸ்டரில் தொடங்குகிறது.

“மாணவிகள் ஹிஜாப் அணிய வேண்டும் – வகுப்பின் நடுவே திரை.” – தலிபான்களின் கீழ் பல்கலைகழகங்களின் நிலை !

தலிபான்களின் கட்டுப்பாட்டின் கீழ் ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்கள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால்,வகுப்பின் நடுவே திரை கட்டி மாணவர்கள் ஒருபுறம் மாணவிகள் ஒருபுறம் எனப் பிரித்து அமர வைத்து பாடம் எடுக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறுவதாக அறிவித்து வெளியேற ஆரம்பித்தவுடனேயே தலிபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்கத் தொடங்கிவிட்டனர். படிப்படியாக ஒவ்வொரு மாகாணமாகக் கைப்பற்றிய தலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் திகதியன்று தலைநகர் காபூலை தங்கள்வசம் கொண்டுவந்தனர். இதனையடுத்து அமெரிக்க மற்றும் மேற்கத்தியப் படைகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் வெளியேற வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தனர். ஆகஸ்ட் 31 ஆம் அமெரிக்காவின் கடைசி படையும் அங்கிருந்து வெளியேறியது.

இதனால், ஆப்கானிஸ்தானில் 1990களில் இருந்ததுபோல் தலிபான்கள் கடுமையான சட்டத்திட்டங்களை விதித்து இயல்பை முடக்கக்கூடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்தது. இதனால், லட்சக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறினர். கடந்த முறை தலிபான் ஆட்சியின் போது பெண்களுக்கு சுதந்திரம் எந்தவிதத்திலும் இல்லாமல் இருந்தது. பெண்கள் ஹிஜாப் அணியாமல் வெளியே வரக்கூடாது. பெண்கள் கல்வி கற்கவோ, வேலை செய்யவோ அனுமதிக்கக் கூடாது. சினிமா, எழுத்து உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடக் கூடாது என்பது தலிபான்களின் சட்டமாக இருந்தது. மீறுவோர் மிக மோசமான தண்டனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

ஆனால், 2001ல் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நுழைந்த பின்னர் தலிபான்களின் ஆதிக்கம் குறைந்தது. கடந்த 20 ஆண்டுகளில் தலிபான்கள் ஆதிக்கம் இல்லாத ஆப்கனில் பெண் கல்வி பெருமளவில் உயர்ந்தது. பெண்கள் சினிமா துறையில் கூட பளிச்சிட்டனர். அதுபோல் பாப் ஸ்டார்களும் உருவாகினர். இப்படியிருக்க கடந்த 15 ஆம் தேதி ஆப்கானிஸ்தான் முழுமையாக தலிபான்கள் கட்டுக்குள் வந்தது. ஆனால், தலிபான்கள் தாமாகவே முன்வந்து இந்த முறை எங்களின் ஆட்சி முன்பு போல் இருக்காது என்று கூறினர். பெண் கல்வியை அனுமதிப்போம் என்றனர். பெண்கள் கல்வி கற்க அனுமதித்திருந்தாலும் கூட பல்வேறு கெடுபிடிகளை விதித்துள்ளனர்.

பல்கலைக்கழக வகுப்பறைகளில் ஆண்கள், பெண்கள் தனித்தனியே அமர வைக்கப்பட்டு நடுவில் ஒரு திரையும் கட்டப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வகுப்புகள் முடிந்ததும் முதலில் பெண்கள் வெளியேற வேண்டும். அதன் பின்னர் 5 நிமிடங்கள் கழித்தே மாணவர்கள் வெளியேற வேண்டும் என்றும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பெண்களுக்கு பெண் ஆசிரியர்களைக் கொண்டே பாடம் எடுக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. மாணவிகள் கண்களைத் தவிர முகத்தை முழுமையாக மூடும் வகையில் ஹிஜாப் அணிய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெண்களை மதிப்போம் என்று தலிபான்கள் கூறியிருந்தாலும் கூட இதுபோன்ற கெடுபிடிகளும், கர்ப்பிணி போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதும் போன்ற தலிபான்களின் நடவடிக்கை தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது.

தலிபான்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாது வீழ்ந்தது பஞ்ச்சீர் மாகாணம் !

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறியதையடுத்து நாடு முழுவதையும் கடந்த 15-ந்தேதி தலிபான் படையினர் கைப்பற்றினார்கள். அதிபர் அஷ்ரப்கனி நாட்டை விட்டு ஓடி விட்டார்.

இதைத் தொடர்ந்து புதிய ஆட்சி அமைக்கும் முயற்சியில் தலிபான்கள் ஈடுபட்டுள்ளனர். இதுசம்பந்தமாக பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

ஆப்கானிஸ்தானில் அனைத்து மாகாணங்களும் தலிபான்கள் கட்டுப்பாட்டில் வந்த நிலையில் அங்குள்ள பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் கட்டுப்பட மறுத்தது.

இந்த மாகாணத்தில் முன்னாள் புரட்சிப்படை தளபதி அகமதுஷாமசூத் மகன் அகமது மசூத் தலைமையிலான வடக்கு கூட்டணி படை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. அந்த பகுதியை கைப்பற்ற தலிபான்கள் முயற்சித்தனர்.

 

இதற்கு வடக்கு கூட்டணி படை கடுமையான எதிர்ப்பு தெரிவித்தது. இதனால் இரு தரப்புக்கும் இடையே சண்டை மூண்டது. தலிபான்கள் படைகளை உள்ளே நுழைய விடாமல் இரு வாரங்களாக வடக்கு கூட்டணி படையினர் தடுத்து வைத்திருந்தனர்.

இதையடுத்து மாகாணத்தின் 4 பக்கங்களில் இருந்தும் தலிபான் படையினர் உள்ளே நுழைந்தனர். அவர்களை எதிர்த்து வடக்கு கூட்டணி படையினரால் போராட முடியவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக தலிபான் படைகள் முன்னேறியது.

இதையடுத்து வடக்கு கூட்டணி படை முக்கிய இடங்களை விட்டு பின்வாங்கியது. இந்த நிலையில் தலிபான்கள் தாக்கியதில் வடக்கு கூட்டணி படையினரின் செய்தி தொடர்பாளர் பாகீம்தாஸ்தி, முக்கிய தளபதிகள் கைதர்கான், முனீப் அமிலி, வாதூர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இதனால் வடக்கு கூட்டணி படை நிலை குலைந்தது. இந்த படையின் தலைவர் அகமதுமசூத், முன்னாள் துணை அதிபர் அமர்துல்லா சலே ஆகியோர் தப்பி ஓடி விட்டனர். அவர்கள் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாக கருதப்படுகிறது.

இதைத் தொடர்ந்து பஞ்ச்சீர் பகுதி தலிபான்களிடம் வீழ்ந்துள்ளதுள்ளதாக உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டு வருகின்றது.

“நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை.”- அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே

நாட்டில் உணவுக்கான தட்டுப்பாடு இல்லை எனவும் இந்த விடயத்தில் மாஃபியா ரீதியிலான செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும் கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

மக்களின் நலன்கருதியே அவசரகால விதிமுறை தொடர்பான பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளிடம் குறைந்த விலையில் நெல் கொள்வனவு செய்யப்படுகின்ற போதிலும் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே நாடாளுமன்றில் இன்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் நாட்டில் இராணுவ ஆட்சி இடம்பெறுவதாக சில தரப்பினர் குற்றஞ்சாட்டுகின்ற போதிலும் அவ்வாறான செயற்பாடுகள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படவில்லை என அவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார அரசாங்கத்தினால் பொருட்கள் மீதான அதிக விலையை கட்டுப்படுத்த முடியாமல் போயுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

அத்துடன் தற்போது முன்னெடுக்கப்படும் போராட்டங்களையும் அரசாங்கத்துக்கு எதிரான செயற்பாடுகளை தடுப்பதற்காகவே இந்த அவசரகால ஒழுங்கு விதிகள் பிரகடனப்படுத்தப்படுகின்றது. தற்போது பல முக்கிய பதவிகள் ஓய்வு பெற்ற இராணுவ உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அவரை தொடர்ந்து கருத்துரைத்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் அவசரகால ஒழுங்கு விதிகள் இன்றி வேறு சட்டங்களின் ஊடாக விலை அதிகரிப்பு உள்ளிட்ட விடயங்களை கட்டுப்படுத்த முடியும் என தெரிவித்தார்.

“இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” – அமைச்சர் டக்ளஸ்

“இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்” என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர் ,

கொரோனாவில் இருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். எமது நாடு இன்று எமது ஒரு மௌனமான வன்முறைக்கு மோசமாக முகங்கொடுத்துள்ளது. மௌனமாகவே வருகின்ற நோயால் மௌனமாகவே மக்கள் உயிரிழந்து போகின்ற நிலை காணப்படுகின்றது.

இதனால் இறந்த உடலங்களை தூக்கிச் செல்வதற்கு கூட ஒருவரும் முன்வராத சூழ்நிலை உருவாகியுள்ளது. இத்தகைய நிலையில் குறித்த அனர்த்தத்தை கட்டுப்படுத்த நாட்டை முடக்குமாறு சுகாதார தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.

மறுபுறம் முடக்கப்படுவதால் நாடு பாரிய பொருளாதாரத்தை இழக்கும் நிலை காணப்படுகின்றது என பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த இரண்டிற்கும் நடுவில் மக்கள் தமது அன்றாட தேவைகளுக்காக அல்லலுறும் நிலை நீடித்து வருகின்றது. இந்த இரண்டு பக்க அடியிலிருந்து மக்களை பாதுகாக்கவே அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்துவருகின்றது.

இந்நிலையில் எதிர்க் கட்சியினர் தமது சுயலாப அரசியலை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் மனித குலத்தை பலியெடுத்துவரும் இந்த கொரோனா பெருந்தொற்றை இல்லாதொழிக்க உலக நாடுகள் தமக்கிடையே இருந்த அரசியல் பேதங்ளை மறந்து ஒன்றுபட்டு உறுதிகொண்டுள்ளனர்.

அதுபோல இலங்கைத் தீவிலும் அனைத்து தரப்பினரும்தத்தமது சுயநலன்களிலிருந்து விடுபட்டு ஒன்றுபட்டு எமது நாட்டிலிருந்து இந்த பெருந்தொற்றை இல்லாதொழிக்க ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன்.

வளர்ந்த தேசங்களே இன்று இந்த பெருந் தொற்றால் ஆடிப்போயுள்ள நிலையில் வளர்ந்துவரும் எமது நாடான இலங்கை தீவு எம்மாத்திரம் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். அத்துடன் உலக நாடுகளின் தரவுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கை தீவின் கொரோனா அனர்த்தங்களின் பதிவுகள் குறைவாகவே உள்ளது.

இதற்கு காரணம் நாட்டில் தற்போதுள்ள நிர்வாகத்திறன் என்றே கூறவேண்டும். இந்நேரம் வினைத்திறன் அற்ற ஆட்சியொன்று இருந்திருந்தால் இன்றைய அவலங்களை விடவும் அதிகளவான அவலங்களை சந்தித்திருக்க நேரிட்டிருக்கும்.

அந்தவகையில் இந்த சூழலில் இருந்து நாம் மீண்டெழ வேண்டும். நாட்டின் பொருளாதாதையும் நாம் மீண்டெழச் செய்ய வேண்டும். அந்நிலையில் மக்களின் அன்றாட உணவுப் பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஒரு திட்டமிட்ட செயற்பாடுகள் நடந்தேறி வருகின்றது. இந்த துர்ப்பாக்கிய நிலை வேண்டுமென்றே உருவாக்கப்பட்டது.

இதை கட்டுப்படுத்தவே இந்த அவசரகால சட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அரிசி சீனி போன்ற பொருட்களுக்கு அதிகபட்ச நிர்ணய விலை கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நாட்டில் பதுக்கி வைக்கப்பட்ட பல மாதங்களுக்கு தேவையான உணவுப் பொருட்களும் மீட்கப்பட்டு மக்களுக்கு வழங்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

எனவே இன்றைய சூழ்நிலையிலிருந்து மக்களைக் பாதுகாப்பதற்கு அரசியல் பேதங்களைக் கடந்து அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்”என அவர் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு ரெலோவும் புளொட்டும் அனுப்பிய கடிதம் அதிர்ச்சியளிக்கிறது – எம்.ஏ.சுமந்திரன்

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு அறிக்கை அனுப்பும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளான ரெலோவும் புளொட்டும் தவறிழைத்துள்ளதாக எம்.ஏ.சுமந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனினால் தனியான அறிக்கை ஒன்று ஆவணமாக தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் அதற்கு மாறான வேறு ஒரு ஏற்பாட்டுக்கும் தாம் இணங்கவில்லை என்றும் கூறினார்.

இந்நிலையில் வேறு ஒரு ஆவணத்தில் கையெழுத்திட்டு ரெலோவும் புளொட்டும் அனுப்பியுள்ளமை பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் எம்.ஏ.சுமந்திரன் கூறினார்.

இரா.சம்பந்தனினால் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஓர் வரைபு என்பதனால் அதில் திருத்தங்களை மேற்கொள்ள முடியும் என்றும் அவற்றினை பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முடியும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.