October

Sunday, January 23, 2022

October

“ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைக்கு வருகை.” – பெற்றோர்களுக்கு நன்றி சொன்ன கல்வி அமைச்சர் !

அனைத்து மாகாணங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இன்று பாடசாலைகளுக்கு சமூகமளித்துள்ளதாக கல்வி அமைச்சரான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

மஹரகமவில் உள்ள பல பாடசாலைகளில் கண்காணிப்பு விஜயத்தினை கல்வியமைச்சர் மேற்கொண்டார். சுகாதார வழிகாட்டல்களின்படி மீண்டும் திறக்கப்பட்ட பாடசாலைகளை பராமரிக்க உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொவிட் -19 தொற்றுநோயால் நீண்ட காலம் தடைபட்டிருந்த கல்வி நடவடிக்கை முடிவிற்கு வந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பாடசாலைகளை மீண்டும் திறக்க முயற்சித்த கல்வி அமைச்சு, மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு அவர் தனது நன்றியையும் தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்ப பிரிவுகளே இன்று திறக்கப்பட்டன.

இதற்கமைய முதல் கட்டமாக , கிட்டத்தட்ட 3,800 பாடசாலைகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

தகுதியான நபரை கண்டுபிடித்து விருதை வழங்குங்கள் – oldy of the year விருதை நிராகரித்த ராணி 2-ம் எலிசபெத் !

இங்கிலாந்தை சேர்ந்த பிரபல பத்திரிகை ஒன்று பொது வாழ்க்கையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் முதியவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ‘oldy of the year’ (ஆண்டின் சிறந்த முதியவர்) என்கிற விருதை வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டின் சிறந்த முதியவர் விருதை 95 வயதான இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத்துக்கு வழங்க அந்த பத்திரிகை நிறுவனம் முடிவு செய்தது.  ஆனால் ராணி 2-ம் எலிசபெத் அந்த விருதை பெற மறுத்துவிட்டார். இது தொடர்பாக அவர் அந்த பத்திரிகைக்கு எழுதிய கடிதத்தில் ‘‘முதுமை என்பது நீங்கள் உணர்வதில்தான் உள்ளது. அதாவது முதுமை என்பது மனதில்தான் உடலில் அல்ல. நான் என்னை முதுமையாக உணரவில்லை. எனவே நான் இந்த விருதுக்கு தகுதியானவர் அல்ல. தகுதியான நபரை கண்டுபிடித்து அந்த விருதை வழங்குவீர்கள் என நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

மறைந்த இங்கிலாந்து இளவரசரும், ராணி 2-ம் எலிசபெத்தின் கணவருமான பிலிப் கடந்த 2011-ம் ஆண்டு தனது 90 வயதில் ஆண்டின் சிறந்த முதியவர் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ராணி 2-ம் எலிசபெத்தின் வைத்தியர்கள் அவரை சில நாட்கள் ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தியதை தொடர்ந்து, அவர் தனது நெதர்லாந்து பயணத்தை ரத்து செய்ததாக பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.

தனது கணக்குகளை முடக்கிய சமூகவலைத்தளங்களுக்கு ட்ரம்ப் கொடுக்கவுள்ள பதிலடி – வருகிறது Truth Social !

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப். கடந்த ஆண்டு அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் 2-வது முறையாக போட்டியிட்டார். அவரை எதிர்த்து ஜோ பைடன் களம் இறங்கினார். இந்த தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்தார்.
தோல்வியை ஏற்றுக் கொள்ளாமல் சமூக வலைதளங்கள் பல்வேறு சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். இதனால் சமூக வலைதளங்கள் இவரது கணக்குகளை முடக்கின. ஆகவே, சமூக வலைதளங்களுக்கும் டிரம்பிற்கும் இடையில் பனிப்போர் நடைபெற்றது.
TRUTH Social: Donald Trump to launch social network, saying 'your favourite  president has been silenced' | World News | Sky News
இந்த நிலையில் தனி சமூக வலைதளம் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதற்கு Truth Social (உண்மை சமூகம்) எனப் பெயரிட்டுள்ளார். இதன் பீட்டா பதிப்பு நவம்பர் மாதம் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தலிபான்கள் டுவிட்டரில் மிகப்பெரிய அளவில் செயல்முறையில் இருக்கையில் நாம் உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை உங்களுக்கு பிடித்தமான அமெரிக்க ஜனாதிபதி அமைதியாக இருக்கிறார் எனத் தெரிவித்துள்ளார்.

“குறைவடைய ஆரம்பித்துள்ள கொரோனா பரவல்.” – உலக சுகாதார அமைப்பு

உலக அளவில் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு கடந்த வாரத்தில் உயிரிழப்பு குறைந்துள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.  வேர்ல்டோ மீட்டர் கணக்கின்படி, உலக அளவில் கொரோனாவில் 24 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 48.91 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். 21.17 கோடி பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனாவுக்குத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு உலக அளவில் மக்களுக்குச் செலுத்தப்படுவதன் காரணமாக, பாதிக்கப்படுவோர் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது. உயிரிழப்பு எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கெப்ரியாசிஸ் வாராந்திர ஆய்வு குறித்து நேற்று அளித்த பேட்டியில் கூறுகையில், ´´கொரோனாவால் பாதிக்கப்பட்டு உலக அளவில் உயிரிழப்போர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த வாரத்தில் உலக அளவில் 50 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஓராண்டில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட மிகக் குறைவான உயிரிழப்பு இதுவாகும். உலக நாடுகள் அளித்த கணக்கின்படி 50 ஆயிரம், ஆனால், உண்மையில் உயிரிழப்பு அதிகமாகக் கூட இருக்கலாம்.

ஐரோப்பாவைத் தவிர்த்து உலகின் பல்வேறு நாடுகளிலும், மண்டலங்களிலும் கொரோனாவால் உயிரிழப்போர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதேசமயம், பல நாடுகள் புதிதாக கொரோனா அலைகளையும், உயிரிழப்பையும் சந்தித்து வருகின்றன. குறைவான அளவு தடுப்பூசி செலுத்திய மக்கள் இருக்கும் நாடுகளில் கொரோனாவால் உயிரிழப்பு அதிகமாக இருக்கிறது´´ எனத் தெரிவித்தார்.

“ஆட்சியை எங்களிடம் ஒப்படையுங்கள்.” – சஜித் பிரேமதாஸ

“அனைத்து விடயங்களிலும் படுதோல்வியடைந்துள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு, ஆட்சியை எங்களிடம் ஒப்படைத்துவிட்டு உடனடியாக வீடு செல்ல வேண்டும்.” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார்.

அன்னாசி விவசாயிகளின் பிரச்சினைகளை ஆராய தொம்பே கிரிந்திவெல விவசாயிகளை சஜித் பிரேமதாஸ நேரில் சந்தித்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

நாட்டுக்கு பெரும் பலத்தைத் தரும் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலையில் உள்ளனர்.  இளைஞர்களைப் பாஸ்போர்ட் வரிசையில் இழுத்து இளைஞர்களின் வாழ்க்கையுடன் அரசு விளையாடுகின்றது.

நாட்டின் எதிர்காலத்தைப் பொறுப்பேற்க இருக்கும் இளைஞர் சமுதாயம் ஏமாற்றமடைந்து, அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானால் இந்த நாடு என்னவாகும். எவருக்கும் தீங்கு விளைவிக்காமல் தமது பலத்தால் இந்த நாட்டுக்கு உணவு வழங்கிய விவசாயிகளை, அரசு படுகுழிக்குள் தள்ளியுள்ளது.

விவசாயிகளின் பயிர்கள் சேதமடைந்தால் இழப்பீடு வழங்குவதாக அரசு இன்று பெருமை பேசினாலும், குறைந்தபட்சம் பல மாதங்களாக தெருவில் நிற்கும் அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் பிரச்சினைகளைத் தீர்க்க நிதியை ஒதுக்கவில்லை.

இப்படியான அரசு, விவசாயிகளின் பிரச்சினைகளுக்குப் பதில்களை வழங்கி அவர்களது பயிர்ச்செய்கைகளுக்கு இழப்பீடுகளை எவ்வாறு வழங்க முடியும்?” எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

ஹசரங்க அதிரடியுடன் சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி !

ரி20 உலகக்கிண்ண போட்டித் தொடரின் தகுதிகாண் முதற்சுற்று போட்டிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதற்கமைய, நேற்று இடம்பெற்ற போட்டியில் அயர்லாந்து அணியை 70 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்பில் வனிந்து ஹசரங்க 71 ஓட்டங்களையும், பெதும் நிஸங்க 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர். அணித்தலைவர் தசுன் சானக்க ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப்பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் ஜோசுவா லிட்டில் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். அதன்படி, 172 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 18.3 ஓவர்கள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 101 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக Andrew Balbirnie 41 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

பந்து வீச்சில் மஹீஸ் தீக்சன அதிகபட்சமாக 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இந்த வெற்றியை தொடர்ந்து சூப்பர் 12 சுற்றுக்கு இலங்கை அணி தகுதி பெற்றுள்ளது.

“அரசின் மீது மக்கள் அதிருப்தி. இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லை.” – ஆளுங்கட்சி உறுப்பினர் ஜெகத் குமார

அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதால் மாகாண சபை தேர்தலை இந்த நேரத்தில் நடத்த வேண்டாம் எனஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர் ,

அரசாங்கம் மீது மக்கள் விரக்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர். எனவே இந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது.அரசாங்கம் எடுத்த முடிவுகளை மக்கள் உணர்ந்து கொள்ள இன்னும் ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும், அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

எனவே அந்த நேரத்தில் தேர்தலை நடத்தி நாம் வெற்றி பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சாதனைகள் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் அவரின் இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது. சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இல்லாதாக்குவதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு !

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன்மூலம் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதலில் வகுக்கப்பட்டிருந்த 18 என்ற வயதெல்லை 18-22 எனத் திருத்தப்படுகிறது. பாலியல் நடுநிலையைப் பேணுவதும் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்.

மேலும் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் ஊடாக பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கெதிராக மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக தடுத்து வைத்தல் நிறுவனமொன்றில் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் – முழுமையாக எரிக்கப்பட்ட இந்துக்களின் வீடுகள் !

பங்களாதேஷில் இந்துக்கள் குறைவான தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பங்களாதேஷின் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கோவில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் இந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது. இது மீனவ கிராமம் ஆகும். அங்கு வசிக்கும் அனைவரும் இந்துக்கள் ஆவர். அவர்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.

இதையடுத்து பக்கத்து பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.

ஏராளமானவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பங்களாதேஷில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும். அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதை கண்டிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.