October

October

கிராமத்துக்குள் நுழைந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள் – நைஜீரியாவில் சம்பவம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ,ராணுவம் போராடி வருகிறது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

“நாளை பாடசாலை வராத ஆசிரியர்களை எப்போதும் பாடசாலைக்குள் நுழையவிடமாட்டேன்.” – வடமேல்மாகாண ஆளுநர்

21ஆம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் எனவும் அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில்லை எனவும் வடமேல்மாகாண ஆளுநர் ராஜ கொலுரே அறிவித்துள்ளார்.

கல்வியமைச்சின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி என்ற அடிப்படையிலும் ஆளுநர் என்ற அடிப்படையிலும் 21ஆம் திகதி பாடசாலைக்கு கடமைக்கு திரும்பாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர் 25 ம் திகதி பாடசாலைக்கு வருபவர்களையும் அனுமதிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.” – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல் !

“ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் நாம் முன்வைத்துள்ளோம். முன்னைய ஆட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தத் தான் முயற்சிகளை எடுத்தும் ஏனையவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்து எம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது. நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் தமக்கான நியாயம் கேட்டு போராடுகின்றனர். விவசாயிகள் உரம் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை எனக் கவலைப்படுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமக்கான கொடுப்பனவுகள் வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றனர். மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசு இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாமும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பங்காளிக் கட்சியாக அரசுக்கு நிலைமைகளை எடுத்துக்கூறி வருகின்றோம்” என்றார்.

அனுராதபுரத்தில் ஜனாதிபதி கோத்தாபாயவின் உருவப்படம் மீது தாக்குதல் !

அனுராதபுரம் – பதவியா பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் ​​ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உருவப்படம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் ஜனாதிபதியின் உருவப்படம் மீது தாக்குதல்! - தமிழ்வின்

விவசாயம் செய்வதற்கு இரசாயன உரங்கள் கோரி அனுராதபுரத்தில் பதவியா பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உருவப்படம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அம்பாறையில் நாமல்கம பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தின் போது, ​​ஜனாதிபதி உடையணிந்த வந்த ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திடீரென அதிகரித்த கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை – உடனடியாக நிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை !

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாக காணப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12,158 பேர் பெற்றுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10,145 பேர் சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த திங்கட்கிழமை (18) மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கடவுச்சீட்டு பெறும் போக்கு இவ்வாறு இருப்பதன் காரணமாக திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

“யாழில் சட்டவிரோத மணல்கொள்ளையில் பொலிஸார்.” – பருத்தித்துறையில் எம்.ஏ.சுமந்திரன் !

வடமராட்சி கிழக்கில் காவல்துறையினருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள் அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் காவல்துறையினரிடம் தகவல் வழங்கும் போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறையினரிடம் முறைப்பாடளித்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது. எனவே காவல்துறையினருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது. எனவே இந்த குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

“பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை. பாடசாலைகளுக்கு அவர்களை அனுப்பவேண்டாம்.” – பெற்றோரிடம் ஆசிரியர்சங்கம் கோரிக்கை !

அதிபர் ஆசிரியர்கள் நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.

இன்று மதியம் நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல்வாதிகளுடனும் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும் 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும் அதிபர்களும் ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக பணியை பகிஸ்கரித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். அந்த வகையிலே 21, 22ம் திகதி பாடசாலைகள் அனைத்திற்கும் அதிபர் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பகிஸ்கரித்தால் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பகிஸ்கரிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும் அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர் அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம். இந்த இடத்திலேயே 21, 22ம் திகதிகளில் பகிஸ்கரிப்பினை மேற்கொண்டு 25ஆம் திகதி நாங்கள் பாடசாலைக்கு செல்ல தயாராகவுள்ளோம். அரசாங்கம் பல்வேறு விதமான கபட நாடகங்கள் மேற்கொண்டு ஆசிரியர் அதிபர்களுக்கு எதிராக சமூகத்தை திருப்பும் வகையிலே ஏற்படுவதை நீங்கள் அறிவீர்கள்.

இந்த அரசாங்கம், பெற்றோர் மாணவர்கள் உடன் அதிபர் ஆசிரியர்களை மோதவிட்டு பிரச்சனையை திசை திருப்பலாம் என்று சிந்திக்கின்ற நிலையில் தொழிற்சங்க ரீதியாக நாங்கள் முடிவு எடுத்து அரசாங்கம் அறிவித்த திகதிகளில் பாடசாலைக்குச் செல்லாமல் நாங்கள் மாணவர்களின் கல்வியை வழங்கும் நோக்கில் எங்கள் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் 25 ஆம் திகதி பணிக்குச் செல்வோம்.

21, 22ம் திகதிகளில் மாணவர்கள் பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது. 25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும்பொழுது உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளை செய்ய தயாராக இருக்கின்றோம் என்றார்.

ஓமானுடன் 3.6 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை !

இலங்கை மற்றும் ஓமானிற்கு இடையில் எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக  3.6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான கடன் ஒப்பந்தம்  ஒப்பந்தமொன்று எதிர்வரும் வாரம் கைச்சாத்திடப்படவுள்ளதாக  எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையிலும் அதன் விலையை அதிகரிக்க மேற்கொண்ட தீர்மானத்திற்கு கோட்டாபாய ராஜபக்ச எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.

இதனால் ஒரு லீற்றர் டீசல் 35 ரூபாவினாலும் ஒரு லீற்றர் பெற்றோல் 18 ரூபாவினாலும் நட்டத்தை எதிர்கொண்டு வருவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக கடன் ஒப்பந்தமொன்று ஓமானுடன் கைச்சாத்திடப்படவுள்ளது. இவ்வாறு பெற்றுக்கொள்ளப்படும் கடனை திருப்பிச் செலுத்துவதற்காக 5 வருட சலுகைக் காலத்துடன் 20 வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக உதய கம்மன்பில தெரிவித்தார்.

நாட்டின் எரிபொருள் தேவைக்காக மாதமொன்றுக்கு 350 மில்லியன் டொலர் செலவிடப்படுவதாகவும், தற்போது கொள்வனவு செய்யவுள்ள எரிபொருளானது ஒரு வருடத்திற்கு போதுமானதாக இருக்குமெனவும் அவர் தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடியிடம் பகவத்கீதையை கையளித்த அமைச்சர் நாமல் !

குஷிநகர் சர்வதேச விமானநிலைய திறப்புநிகழ்விற்காக இந்தியா சென்றுள்ள அமைச்சர் நாமல் ராஜபக்ச இந்திய பிரதமர் நநேரந்திரமோடியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன் பகவத்கீதையின் மொழிபெயர்ப்பை கையளித்துள்ளார்.


இது தொடர்பில் இலங்கை பிரதமரின் ஊடக பிரிவு தெரிவித்துள்ளதாவது,

கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று அக்டோபர் 20 ஆம் தேதி திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீக சுற்றுலாவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தின் துவக்க விழாவானது இலங்கையின் கொழும்பு விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் மற்றும் 12 முக்கிய பிரமுகர்களுடன் புத்தரின் புனித நினைவுச்சின்னங்களை கொண்டு சென்ற விமானம்  தரையிறங்கியதன் மூலம் ஆரம்பமாகியது.

புராதன நகரமான குஷிநகர் கெளதம புத்தரின் இறுதி ஓய்வு இடமாகும், அங்கு அவர் இறந்த பிறகு மஹாபரிநிர்வாணம் அடைந்தார். இந்த நிகழ்வின் விசேட அம்சமாக, இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையே 2500 வருடங்களாகக் காணப்படும் நட்புறவின் அடையாளமாக, பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூலான பகவத்கீதை வெளியீட்டின் முதற் பிரதி, இலங்கையின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களால் இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டு வெளியீடு செய்துவைக்கப்பட்டது. அது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பரஸ்பர உறவை மேலும் வளர்க்கும் செயலாகும்.

பிரதமர், மகிந்த ராஜபக்ச அவர்களின் அறிவுறுத்தலுக்கு அமைவாக, புத்தசாசன சமய, மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் இயங்கும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் பகவத்கீதை என்னும் இந்நூல் பதிப்பிக்கப்பட்டது.
பாரத தேசம் இந்த உலகிற்குத் தந்த மிகப் புனிதமான நூல் பகவத்கீதை. அந்தப் பெருமைமிகு நூலினை இலங்கையில் வாழ்கின்ற இந்துக்கள் மட்டுமல்லாது, சகல மதத்தவர்களும் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த நூல். அனைத்து மதத்தவர்களும் அறியும் வகையில் பகவத்கீதையில் அமைந்த சமஸ்கிருத சுலோகங்களை, சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் அறியும் வண்ணம் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

“வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றத் தயாராக இருக்கிறேன்.” – ஆளுநர் ஜீவன் தியாகராஜா

தனது அதிகாரத்திற்குற்பட்ட வகையில் வடக்கு மாகாண மக்களின் உடனடி தேவைகளை நிறைவேற்றுத் தயாராக இருப்பதாக ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேரில் சந்தித்து அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

மேலும் மக்களின் உடனடி தேவைகளை எழுத்துமூலமாக ஒப்படைக்குமாறும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா கோரியுள்ளார்.

இந்த சந்திப்பின்போது வடக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக இரா.சம்பந்தன் சில விடயங்களை முன்னிலைப்படுத்தியிருந்தார் என்றும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டார்.

வடக்கு மாகாண எழுச்சி தொடர்பாக ஆளுநர் தெரிவித்த கருத்தை வரவேற்ற இரா.சம்பந்தன் தனது வாழ்த்துக்களையும் பகிர்ந்து கொண்டார்.