October

October

இத்தாலியில் துயரம் – பிள்ளைகளை கொன்றுவிட்டு தப்பித்த இலங்கை தாய் !

இத்தாலியின் வெரோனா பகுதியில் இலங்கை தாய் ஒருவர் தமது இரண்டு பிள்ளைகளையும் கொலை செய்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கமைய, 3 மற்றும் 11 வயதுடைய இரண்டு பெண் பிள்ளைகளே இவ்வாறு கொல்லப்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொலை செய்யப்பட்ட இரண்டு சிறுவர்களும் படுக்கையறையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்கள் பிரிந்து வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் தாய் உளவியல் ரீதியாக தாக்கப்பட்டவரா? என்பது தொடர்பில் இத்தாலி காவல்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பால்வெளிக்கு வெளியே முதல் கோளை கண்டுபிடித்தது நாசா !

விண்வெளியில் ஏராளமான கோள்கள் சுற்றி வருகின்றன. சூரிய மண்டலத்தில் இல்லாத 5 ஆயிரம் புறகோள்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பூமி சூரியனை சுற்றுவதை போல இந்த புறகோள்கள் மற்ற நட்சத்திரங்களை சுற்றி வருகின்றன. அவைகள் நாம் வாழும் பால்வெளி கெலக்சிக்கு உள்ளே தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பால்வெளிக்கு வெளியே கோள் இருப்பதற்கான அறிகுறிகளை வானியல் வல்லுனர்கள் கண்டுபிடித்துள்ளனர். அது ஒருகோள் என்று கண்டுபிடிக்கப்பட்டால் பால்வெளிக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்ட முதல் கோளாக இருக்கும்.

அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே தொலைநோக்கி மூலம் இந்த கோள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இது பால்வெளியில் இருந்து 2.8 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது.

கிட்டத்தட்ட சனி கிரகத்தின் அளவை கொண்டுள்ள இந்த புதிய கண்டுபிடிப்புக்கு எம்51-1 என்று பெயரிடப்பட்டுள்ளது.

இது குறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இணை ஆசிரியர் நியா இமாரா கூறும்போது, ‘நாம் பால்வெளிக்கு வெளியே ஒரு கிரகத்தை பார்க்கிறோம் என்பது உறுதிப்படுத்த சில ஆண்டுகள் காத்திருக்க வேண்டியது இருக்கும்.

சுற்றுப்பாதைக்கு எவ்வளவு நேரம் எடுக்கும் என்பது பற்றி நிச்சயமற்ற தன்மை நிலவுவதால் அதை எப்போது பார்க்க முடியும் என்பது எங்களுக்கு தெரியாது’ என்றார்.

இலங்கையில் தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை !

இலங்கையில் தேர்தல் விதிமுறைகளை சட்டப்பூர்வமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக இலங்கையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் காலங்களில் விதிமுறைகள் வர்த்தமானி ஊடாக வௌியிடப்படுவதாகவும் அவற்றை மீறுபவர்களுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு விதிமுறைகளை மீறுவதை குற்றமாக கருத்திற் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“ராஜபக்ஷக்கள் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருப்பேன்.” – ஒலுவிலில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

“ஜனாதிபதி, பிரதமர் எள்ளென்றால் நான் எண்ணெயாக இருந்து அம்பாறை மீனவர்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்பேன். கடந்த காலங்களில் இந்த அரசின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்ட வாக்குறுதிகளை என்னால் முடிந்தவரை நிறைவேற்ற தயாராக உள்ளேன்.” என கடற்தொழில் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீண்டகாலமாக இழுபறியில் இருந்துவரும் ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று (புதன்கிழமை) ஒலுவில் துறைமுக வளாகத்தை பார்வையிட்டதுடன், துறைமுக குளிர்சாதன வசதிகள் மேம்பாடு, மீன் சந்தைப்படுத்தல் வசதிகள் தொடர்பில் ஆராய்ந்தார்.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,

இந்த ஒலுவில் துறைமுக விவகாரம் தொடர்பில் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா எம்.பியும் கரிசனைகொண்டு என்னிடமும், ஜனாதிபதி கோத்தாபய, பிரதமர் மஹிந்தவுடனும் பல்வேறு கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார்.

மீனவர்கள் இன்று என்னை சந்தித்து முன்வைத்த பிரச்சினைகளை நான் கூடிய விரைவில் தீர்த்து வைக்க தயாராக உள்ளேன். யாருக்கும் பயப்பட தேவையில்லை. மீனவர்களுக்கு தேவையாக உள்ள ஒலுவில் துறைமுகம் யாருக்கும் பாதில்லாத வகையில் பிரச்சினைகள் முடிக்கப்பட்டு விரைவில் திறக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எல்லா மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்.” – யாழ்.மாநகர முதல்வர்

நான் பௌத்த மதத்திற்கு எதிரானவனும் அல்ல மதவாதியும் அல்ல எனவும்  எல்லா மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும். எனவும் யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று (புதன்கிழமை) இடம்பெற்றது. அதன் போது, நாக விகாரையின் விகாராதிபதி ஆரிய குளத்தின் புனரமைப்பு பணிகளை நிறுத்துமாறு கோரி மாநகர முதல்வருக்கு, அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் சபையில் முதல்வர் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

நான் ஒரு மதவாதி அல்ல , அத்தோடு பௌத்த மதத்துக்கு எதிரானவும்அல்ல. நான் இந்து மதத்தைச் சேர்ந்தவன். அதனால் ஏனைய மதங்களுக்கு எதிரானவன் அல்ல. என்னை மதவாதி என சித்தரிக்கும் வகையில் நாகவிகாரை விகாராதிபதியினால் யாழ் மாநகர முதல்வர் என எந்தவித மரியாதையும் வழங்காது கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

எனவே என்னை தவறான புரிதலுடன் இந்த கடிதத்தை அனுப்பியுள்ளார்கள் என விகாராதிபதிக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.

அப்பகுதி புனிதபிரதேசமாக இருக்க வேண்டும் நான் ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் அந்த வகையில் நாம் எதிர்காலத்தில் அடையகூடிய தமிழ் தேசியத்தை ஒரு மதச் சார்பற்ற இடமாக அனைத்து மத மக்களும் தாம் விரும்பிய மதத்தை வழிபடுகின்ற அல்லது தங்களுடைய மத அனுஷ்டானங்களில் ஈடுபடுகின்ற இடமாக தமிழ்த்தேசம் கட்டி அமைக்கப்படும்” என்றார்.

மனித குலத்திற்கு எதிரான குற்றச்செயல் புரிந்துள்ள ஜனாதிபதி கோத்தாபாயராஜபக்ஷ – விசாரணையை வலியுறுத்தும் சர்வதேச அமைப்பு !

இலங்கை ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளர் உட்படபல சிரேஸ்ட அதிகாரிகளை மனிதகுலத்திற்கு எதிரான குற்றச்செயல்களிற்காக விசாரணை செய்யவேண்டும் என கோரும்வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டசமர்ப்பணத்தை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் என்ற சர்வதேச அமைப்பு சர்வதேசகுற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.

பிரித்தானியாவில்  வாழும் 200 இலங்கை தமிழர்களின் சார்பில் இந்த மனுவை குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் தாக்கல் செய்துள்ளது.
நீதிமன்றத்தின் நியாயாதிக்க வரம்பிற்குள் உள்ள குற்றங்கள் பற்றிய தகவலின் அடிப்படையில் வழக்குரைஞர் விசாரணையை தொடங்குவதற்கு அனுமதிக்கும் ரோம் சட்டத்தின் 15வது பிரிவின் கீழ் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண முன்னாள் இராணுவதளபதி ஜகத்ஜயசூரிய ஆகியோர் உட்பட பல தனிநபர்களின் பெயர்கள் இந்த சட்ட சமர்ப்பணத்தில் காணப்படுகின்றன. இவர்கள் கடத்தல் சட்டவிரோதமாக தடுத்துவைத்தல் சித்திரவதை போன்ற நடவடிக்கைகளின் மூலம் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களிற்கு பொறுப்பாளிகளாகயிருந்தார்கள் என சர்வதேச அமைப்பு தனது சட்டசமர்ப்பணத்தில் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொண்ட துன்புறுத்தலின்கடுமை காரணமாக அவர்களிற்கு இலங்கையிலிருந்து தப்பி பிரிட்டனில் தஞ்சமடைவதை தவிரவேறு வழியிருக்கவில்லை என முன்வைக்கப்பட்டுள்ள சட்ட சமர்ப்பணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் தலைமையிலான பாதுகாப்பு படையினரின் அச்சுறுத்தல் மிரட்டல் துன்புறுத்தல் கொள்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் தாயகத்திற்கு திரும்புவதற்கான உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன என குளோபல் ரைட் கொம்பிலயன்ஸ் தனது மனுவில் தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள குடும்பத்தவர்கள் மற்றும் உறவினர்கள் துன்புறுத்தல்கள் மற்றும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் துன்பத்தில் சிக்குண்டுள்ளனர் என தெரிவித்துள்ள சர்வதேச அமைப்பு பிரிட்டனிலும் அவர்கள் துன்புறுத்தல் கண்காணிப்பு போன்றவற்றை எதிர்கொள்கின்றனர் என தெரிவித்துள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இவ்வாறானதொரு சட்ட சமர்ப்பணம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல் தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

இனவிகிதாசாரத்தை மாற்றும் விதத்தில் வவுனியாவில் அதிகரிக்கும் சிங்கள குடியேற்றங்கள் !

வவுனியா வடக்கில் இன விகிதாசாரத்தை மாற்றியமைக்கும் செயற்பாட்டுக்கு எதிராக எதிர்வரும் வெள்ளிக் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளது.

வவுனியா, பழைய பேரூந்து நிலையம் முன்பாக எதிர்வரும் வெள்ளிக்கிழமை தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் ஏற்பாட்டில் குறித்த கண்டன ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது.

மதவாச்சியில் உள்ள 1330 சிங்கள குடும்பங்களை வவுனியா வடக்கு பிரிவில் இணைத்து இன விகிதாசரத்தை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனி தெரிவித்துள்ளது.

தமிழ் மக்களின் நிலத்தையும், இருப்பையும் காக்க தமிழ் மக்களை இவ் ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிணையுமாறும் தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் தெரிவித்துள்ளார்.

தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் தற்கொலை முயற்சி – வவுனியாவில் பரபரப்பு !

வவுனியா தேக்கவத்தை பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரத்தில் ஏறி இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

குறித்த இளைஞர் மல்லாவி பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவுத்திருமணம் செய்துள்ளார். பின்னர் அவரை அழைத்துக்கொண்டு வவுனியா தேக்கவத்தை பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டில் சிலகாலம் வாழ்ந்துள்ளார்.

IMG20211027161609 01

இந்நிலையில் கடந்த 21 ஆம் திகதி பெண்ணின் உறவினர்கள் குறித்த வீட்டிற்கு வருகைதந்து பெண்ணை வாகனம் ஒன்றில் ஏற்றி அவர்களது வீட்டிற்கு அழைத்துச்சென்றனர். இந்நிலையில் தன்னை தாக்கிவிட்டு தனது மனைவியை அவர்கள் கடத்திச்சென்றதாக குறித்த இளைஞர் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.

எனினும் காவல்துறையினர் குறித்த விடயத்தில் எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை என தெரிவித்து வவுனியா காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள தொலைத்தொடர்பு கோபுரத்தில் குறித்த இளைஞர் ஏறி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டியதுடன்,கூரிய ஆயுதத்தால் தனது கையினையும் அறுத்திருந்தார்.

சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருகை தந்திருந்தனர். எனினும் காவல்துறையினர் குறித்த விடயத்தில் உரிய நடவடிக்கையினை எடுக்கவில்லை என கோபுரத்தில் ஏறிய இளைஞரின் உறவினர்கள் காவல்துறையினருடன் முரண்பட்டதுடன் நீண்டநேரமாகியும், இளைஞரை மீட்பதற்கான நடவடிக்கையையும் அவர்கள் எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.

இதேவேளை குறித்த இளைஞரை மீட்பதற்காக மற்றும் இரு இளைஞர்கள் கோபுரத்தின் மீது ஏறியநிலையில் அவர்களது முயற்சியும் பலனளிக்கவில்லை.

வலி வடக்கின் மக்கள் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ள இராணுவத்தினர் !

யாழ்ப்பாணம் வலி வடக்கில் மக்களுக்கு சொந்தமான காணிகளில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தினர் அவற்றை நிரந்தரமாக சுவிகரிக்க முயற்சிப்பதாகவும்  குறித்த காணிகளில் தென்னை மரங்களை நாட்டி தொடர்ந்து நிலைகொண்டிருக்க இராணுவத்தினர் திட்டமிட்டுள்ளதாகவும் வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

குறித்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

யாழ்ப்பாணம் வலி வடக்கிலிருந்து வெளியேறி 31 வருடங்களாக மக்கள் தமது சொந்த இடங்களில் மீள குடியேற முடியாத நிலையில் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். மயிலிட்டி, பலாலி, வசாவிளான், குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளில் 3500 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படாமல் தொடர்ந்தும் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் மக்கள் தமது காணிகளை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

மயிலிட்டி, பலாலி பகுதிகளில் முழுமையான மீள்குடியேற்றம் இடம்பெறாத நிலையில் மயிலிட்டி மீனவர்கள் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளதுடன், சுமார் 2000 ஏக்கர் விவசாய நிலம் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளதால் விவசாயிகளும் தொழில் பாதிப்பை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில், பருத்தித்துறை – பொன்னாலை வீதியில் மக்களின் உறுதி காணிகளில் வளர்ந்துள்ள தென்னைகளை வெட்டும் படையினர் புதிதாக அங்கே அதிகளவு தென்னைகளை நடுவதற்கு குழிகளை வெட்டுகின்றனர். இதனால் அந்த நிலம் மக்களுக்கு மீள வழங்கப்படுமா என்ற பாரிய சந்தேகம் எழுந்துள்ளது.

மக்களின் வீடுகள், பாடசாலை, தேவாலயங்கள், ஆலயங்கள், கன்னியர் மடங்கள் அழிக்கப்பட்டுள்ளது. மயிலிட்டி மக்கள் குடியேற்றப்படாமல் உள்ள நிலையில் துறைமுகத்தை பெரும் செலவில் புனரமைத்தும் மயிலிட்டி மக்களுக்கு பயன் எதுவுமில்லை என சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் 31 வருடகால மீள்குடியேற்ற ஏக்கத்தை தீர்ப்பதற்கு சகல தரப்பும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என வலி வடக்கு மீள்குடியேற்ற புனர்வாழ்வு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

வெளியானது ஞானாசாரதேரர் தலைமையிலான ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணிக்கான வர்த்தமானி – ஒரு தமிழருக்கு கூட இடமில்லை !

ஒரே நாடு ஒரே சட்டம் என்பதற்கான புதிய வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பொது பல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞனசார தேரர் தலைமையில் ‘ஒரே நாடு ஒரே சட்டம் ‘ என்பதற்கான 13 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணி ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதன்படி விசேட வர்த்தமானி அறிவிக்கப்பட்டுள்ளது,

இலங்கை அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை அரசியலமைப்பின் 33ஆம் உறுப்புரையினால், ஜனாதிபதிக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இந்த செயலணியின் உறுப்பினர்களாக, பேராசிரியர் தயானந்த பண்டார, பேராசிரியர் சாந்திநந்தன விஜேசிங்க, பேராசிரியர் சுமேத சிறிவர்த்தன, என். ஜி.சுஜீவ பண்டிதரத்ன, சட்டத்தரணி இரேஷ் செனெவிரத்ன, சட்டத்தரணி சஞ்ஜய மாரம்பே, எரந்த நவரத்ன, பாணி வேவல, மௌலவி மொஹொமட், விரிவுரையாளர் மொஹொமட் இந்திகாப், கலீல் ரஹமான், அஸீஸ் நிசார்தீன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த செயலணியின் செயலாளராக ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் ஜீவந்தி சேனநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலணி உறுப்பினர்கள் குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒருமுறை அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறும், இறுதி அறிக்கையை 2022 பெப்ரவரி 28 அல்லது அதற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி பணித்துள்ளார்.

எவ்வாறிருப்பினும் இந்த செயலணியில் தமிழர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.