October

October

“ஈஸ்டர் தாக்குதலை ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க மாட்டேன்.” – மைத்திரிபால சிறிசேன

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டியே அறிந்து நாட்டை விட்டுவெளியேறும் அளவிற்கு பலவீனமான நபர் தான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து தான் ஆரம்பத்தில் அறித்ததாக தெரிவிக்கப்படும் கருத்துக்கள் முற்றிலும் பொய்யானது என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை அரசாங்கம் என்ற ரீதியில் பொறுப்பேற்க தயாராக இருப்பதாக தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி, ஒருபோதும் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்கப் போவதில்லை என்றும் தெரிவித்தார்.

இதேவேளை இரசாயன உரத்திற்கு தடை விதித்து சேதன பசளைக்கு செல்வது பெரும் பிரச்சினையை தோற்றுவிக்கும் என்பதனால் அத்திட்டத்தை கட்டம் கட்டமாக செயற்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரியதாக மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

இருப்பினும் சேதன பசளை தொடர்பாக ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொள்வதற்கு தனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன குற்றம் சாட்டியுள்ளார்.

“லொஹாத் ரத்வத்தை விவகாரம் போன்ற தவறுகள் எங்கும் நடக்கின்றது. அதனை பெரிதுபடுத்த முடியாது.” – அமைச்சர் டக்ளஸ்

“லொஹாத் ரத்வத்தை விவகாரம் போன்ற தவறுகள் எங்கும் நடக்கின்றது. அதனை பெரிதுபடுத்த முடியாது.”  என கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மட்டக்களப்பில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிகழ்வொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். அந்த நிகழ்வில் மேலும் பேசிய அவர் ,

இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்களை நிறுத்துவதற்கு எமது அரசாங்கம் சகல முயற்சிகளையும் எடுத்துவருகின்றது. ஜனாதிபதி  , பிரதமர்  ஆகியோர் எங்களுக்கு முழு ஆதரவு வழங்குகின்றனர். இந்தியாவுடன் பகைத்தாலும் எமது மக்களை பாதுகாக்கவும் வளங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்ற நிலைப்பாட்டில் அவர்கள் உள்ளனர். விரைவில் அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அதன் பின்னர் நான் மட்டக்களப்புக்கு வருகைதந்து இங்குள்ள பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்குவேன். சஜித் பிரேமதாச தனது தேர்தலுக்காக வீட்டுத்திட்டம் என்ற ஒன்றை பயன்படுத்திக்கொண்டார்.மக்களுக்கு கொஞ்சகொஞ்ச காசை வழங்கி வாக்கினை அபகரிக்க நினைத்தார் முடியவில்லை.எங்களது கஜனா காலியாகவுள்ளது. கைவிடப்பட்டுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மிகுதி பணத்தினை வழங்கக்கூடிய நிலையில்லை.இது மட்டக்களப்பில் மட்டுமன்றி முழுநாட்டுக்குமான பிரச்சினை.

தற்போது இந்த அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ள எதிர்பானது தற்காலிகமானது.எவ்வாறு இந்த நாட்டில் இருந்த வன்முறைக்கு தீர்வுகண்டாரோ, இந்த நாட்டில் ஏற்பட்ட கொரனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்தினாரோ அதேபோன்று இந்த பொருளாதார,மக்களின் வாழ்வாதார பிரச்சினையையும் தீர்த்துவைப்பார் என்று நம்புகின்றோம்.

இராஜாங்க அமைச்சர் லொஹாத் ரத்வத்தை விவகாரம் தவறுகள் எங்கும் நடக்கின்றது.இதனை எல்லா இயக்கங்களும் எல்லாரும் செய்த செயற்பாடுதான்.அதனை நாங்கள் பெரிதுபடுத்தமுடியாது. இது அரசாங்கத்தின் கொள்கையில்லை.அது தனிமனித விவகாரம். அவர் அவ்வாறு நடந்துகொண்டாரா இல்லையா என்பதையறிய விசாரணை நடைபெற்றுவருகின்றது.அதன் பின்னரே அது உண்மையா பொய்யா என்பது தெரியும்.

2013ஆம்ஆண்டில் பல்கலைக்கழக ஆசிரியர் குழு என்னும் அமைப்பு ஒரு குறிப்பிட்ட பெண்மணியின் பெயரைக்கூறி இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டு தாக்கப்பட்டு களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவர் அவர் அழைத்துச்செல்லப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டதாக அந்த அமைப்பு கூறியிருந்தது. அந்த அமைப்பு தற்போது குறித்த பெண் உயிருடன் உள்ளதாக சொல்லப்போகின்றார்கள்.இவ்வாறு பல பொய்பித்தலாட்ட செயற்பாடுகள் உள்ளன.” னவும் அவர் கூறியுள்ளார்.

 

யாழில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உருவ பொம்மையை எரித்து போராட்டம் !

யாழ்ப்பாணம்-குருநகரில் உள்ளூர் இழுவை மடி தொழிலாளர்கள்  கறுப்புக் கொடி கட்டி எதிர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உள்ளூர் இழுவை மடிதொழில் தடை செய்யப்பட வேண்டும் எனத் தெருவித்ததை எதிர்த்து குருநகர் வல்வெட்டித்துறை மீனவர்கள் ஒன்றிணைந்து இந்த எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் குருநகர் பகுதியில் கறுப்புக் கொடிகள் கட்டப்பட்டு கர்த்தால் அனுஷ்டிக்கப்படுகின்றது.

குருநகர் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் உருவ பொம்மையும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

“உலக அமைதியை நிலை நிறுத்துவோம்.” – சீனா அறிவிப்பு !

சீனா அனைத்து வகையான மேலாதிக்கம் மற்றும் அதிகார அரசியல், ஒருதலைப்பட்சத்தை எதிர்கிறது” என சீன ஜனாதிபதி ஜிஜின்பிங்  தெரிவித்துள்ளார்.

மேலும், அமைதி, மேம்பாடு, நீதி, ஜனநாயகம், சுதந்திரம் ஆகிய மதிப்புகளை ஊக்குவிக்குமாறு அனைத்து நாடுகளையும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தாய்வான் கடந்த சில மாதங்களாக சீனாவின் ஆக்கிரமிப்பு குறித்து தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகு தாய்வான் உருவானது. என்றாலும் தாய்வான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என சீன அரசு கூறி வருகிறது.

தேவைப்பட்டால் தாய்வானைக் கைப்பற்ற, படை பலத்தைப் பயன்படுத்த தயங்கமாட்டோம் என்று சீன ஜனாதிபதி ஜிஜின்பிங் சில மாதங்களுக்கு முன்பு கூறினார். தொடர்ந்து தாய்வான் சீனாவுடன் இணையும் என்று அவர் தெரிவித்து வந்தார்.

சீனா சமீபத்திய ஆண்டுகளில் தாய்வானைச் சுற்றி தனது போர்ப் பயிற்சியை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 18, 19 ஆகிய திகதிகளில் சீனாவின் சுமார் 40 போர் விமானங்கள் சீனா – தாய்வான் இடையிலான எல்லையைக் கடந்துள்ளன என்றும், அப்போது படை பலத்தைக் கொண்டு சீனா அச்சுறுத்துவதாக தாய்வான் அதிபர் சாய் இங்-வென் கூறி இருந்தார்.

சீனா தைவானை தாக்கினால் நாங்கள் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்கா கூறியிருந்தது. இந்த நிலையில் உலக அமைதியை நிலை நிறுத்துவோம் என்று சீனா  கூறியுள்ளது.

தென்னாபிரிக்க அணியினர் இனவெறிக்கு எதிராக முழங்காலிட்டு ஆதரவு – பிரபல வீரர் டி காக் விலகியதற்கான காரணம் என்ன ..?

இனவெறிக்கு எதிராக இனி ஒவ்வொரு போட்டி தொடங்கும் முன்பும் தென் ஆப்பிரிக்க அணியினர் முழங்காலிட்டு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவில் காவலர் டெரிக் செவின், அமெரிக்க கறுப்பினத்தவர் ஜார்ஜ் பிளாய்ட் ஏதோ திருடிவிட்டார் எனக் கருதி அவரின் கழுத்தில் முழங்காலை மடக்கி அமர்ந்து கொலை செய்தார். இந்தச் சம்பவம் உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்து எதிர்ப்பலைகளை உருவாக்கியது, கண்டனத்தை எழுப்பியது. இனவெறிக்கு எதிராக மற்றொரு போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலை இந்தச் சம்பவம் உருவாக்கிவிட்டதாகக் கருத்துகள் பரவின.

கறுப்பினத்தவர்கள் மட்டுமின்றி யாருமே இனரீதியாக ஒதுக்கப்படக் கூடாது என்பதற்கு ஆதரவாக விளையாட்டு பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியினர் முழங்காலிட்டு, கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாகவும், இனவெறிக்கு எதிராகவும் ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில் இனவெறிப் பிரச்சினையாலே கிரிக்கெட் வாழ்க்கையை இழந்த தென் ஆப்பிரிக்காவும் இனவெறிக்கு எதிராகக் களமிறங்கியுள்ளது. இனிவரும் போட்டிகள் அனைத்திலும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முழங்காலிட்டு இனவெறிக்கு எதிராக ஆதரவு தெரிவிப்பார்கள் எனத் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் லாசன் நைடோ வெளியிட்ட அறிக்கையில், “இனவெறியை அனைவரும் கடந்து வருவதற்கு ஒற்றுமையாக இருந்து, பிணைப்புடன் இருந்து நமக்குள் வலிமையை ஏற்படுத்த வேண்டும். இனவெறி நம்முடைய பலவீனத்தைப் பயன்படுத்தி விடக்கூடாது. நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் இடையே பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. ஆனால், இனவெறி என்று வரும்போது அனைவரும் அதற்கு எதிராக ஒன்றுபட வேண்டும்.

எங்களின் ஆர்ச்பிஷப் டெஸ்மண்ட் டூடுவின் 90-வது பிறந்த நாளில் உலகெங்கும் இருக்கும் தென் ஆப்பிரிக்க மக்கள் பங்கேற்றனர். தென் ஆப்பிரிக்காவுக்குச் சுதந்திரம் பெற்றுத் தந்தவருக்கு சிறந்த அஞ்சலியாக இருந்தது. ஒன்றுபட்ட தென் ஆப்பிரிக்காவுக்காகப் பணியாற்றுகிறோம் என்பதையும் உணர்த்தியது” என்று தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்க மறுத்து மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் பிரபல வீரர் டி காக் விலகியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில்  வென்ற தென்னாப்பிரிக்க அணி களத்தடுப்பை தெரிவு தேர்வு செய்தது. சொந்தக் காரணங்களுக்காக இந்த ஆட்டத்திலிருந்து பிரபல வீரர் டி காக் விலகியுள்ளதாக தெ.ஆ. அணி தலைவர் பவுமா தெரிவித்தார். இது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. மேலும் .ஆ. கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கையால் அதிருப்தி அடைந்து, கருப்பர்களின் வாழ்க்கை முக்கியம் இயக்கத்துக்குத் தனது ஆதரவைத் தெரிவிக்க முடியாத காரணத்தால் இந்த ஆட்டத்திலிருந்து அவர் விலகியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் டி காக்கை பலரும் விமர்சனம் செய்துள்ளார்கள். எனினும் இதுகுறித்த தன் நிலைப்பாட்டை டி காக் விரைவில் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காதல் திருமணத்துக்காக அரச வாழ்க்கையை துறந்த ஜப்பான் இளவரசி மகோ !

ஜப்பான் இளவரசி மகோவும் சாமானிய பிரஜையான கெய் கொமுருவும் இன்று (26) திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

அந்நாட்டு நேரப்படி இன்று (26) முற்பகல் 10 மணியளவில் குறித்த இருவரும் பதிவுத் திருமணம் செய்துக் கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த 2012 ஆம் ஆண்டு டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்தவ பல்கலைக்கழகத்தில் மகோ கல்வி பயின்றபோது அவருக்கு கெய் கொமுரு அறிமுகமாகியுள்ளார். இதனையடுத்து இருவரும் திருமண பந்தத்தில் இணைந்துக்கொள்ளவிருந்த நிலையில், அதற்கு பல எதிர்ப்புகள் காணப்பட்டன.

ஜப்பானிய வழக்கத்தின் படி, அரச குடும்பத்தில் உள்ளவர்கள் சாதாரண பிரஜையொருவரை திருமணம் செய்துகொள்ளும் பட்சத்தில் அவர்கள் அரச குடும்பத்திலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கமாகும். இந்நிலையில், ஜப்பானிய இளவரிசியான மகோ தமது காதலருக்காக அரச குடும்பத்திலிருந்து வெளியேறியதாக அறிவித்திருந்தார்.

அத்துடன், அரச குடும்பத்தினால் வழங்கப்பட்ட பெருந்தொகையான பணத்தையும் அவர் நிராகரித்துள்ளதுடன், அவர்களின் திருமண நிகழ்வும் மிகவும் எளிமையாக இடம்பெற்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர், மகோ மற்றும் அவரது கணவர் ஆகியோர் அமெரிக்காவில் குடியேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம்.” – முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன்

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம் என முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தெரிவித்தார்.

அவர் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த செய்திக்குறிப்பில் மேலும்,

”வடக்கில் றோலர் தொழில் செய்யும் பலர் அரச உத்தியோகத்தர்களாகவும் வேறு தொழில் முயற்சியில் ஈடுபடுபவர்களே. தொடர்சியாக கடல் தொழிலில் ஈடுபடும் ஒரு சிலரே றோலர் வைத்துள்ளார்கள். அவர்கள் தங்கள் குடும்பத்தை போலவே கடலையும் நேசிப்பவர்கள். ஆனால் கடலை கொள்ளையடிக்க முதலீடு செய்தவர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். அவர்களை கண்டு நாங்கள் பயப்படபோவதும் இல்லை.

ஒரு சிலர் வாழ்வதற்காக எங்கள் மண் வளத்தையும் கடல் வளத்தையும் அழிப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. உருவப்பொம்மை என்ன எங்களை சுட்டுப்போட்டாலும் எங்கள் வளங்களை அழிப்பவர்களிற்கு எதிராக போராடுவோம்.

குடத்தனையில் மணல் கொள்ளைக்கு எதிராக போராடிய நண்பன் கேதீஸை சுட்டுக் கொன்றதனை மறக்கவும் இல்லை அதற்கு பயந்து மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்தாமல் பயந்து ஒதுங்கவும் இல்லை. ஆகவே எங்கள் போராட்டம் தொடரும்” என குறிபிட்டுள்ளார்.

“இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு.” – ஐக்கிய மக்கள் சக்தி எச்சரிக்கை !

தோல்வியடைந்த அரசு வீடு செல்வதே உத்தமம் என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அமைச்சர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார ஆகியோர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் ஊடங்களின் வெளியாகியிருந்ததை நாம் அவதானித்தோம். அதுமட்டுமன்றி ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் 11 கூட்டணி கட்சிகள், அரசின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றன.

விசேடமாக அரசில் அங்கம் வகிக்கும் சுசில் பிரேமஜயந்த கடுமையான விமர்சனம் ஒன்றை அரசுக்கு எதிராக முன்வைத்தார். இந்த அரசு தோல்வியடைந்து விட்டது என அவர் கூறினார். அரசு எடுத்த அனைத்துத் தீர்மானங்களும் தோல்வியடைந்துவிட்டன என்று அவர் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

அரசின் தீர்மானங்கள் தோல்வியடைந்துள்ளதை, அரசில் அங்கம் வகிப்பவர்களே புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர். நாடு மிகவும் மோசமான நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது. மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசில் அங்கம் வகிப்பவர்கள் பாரிய இடர்களை எதிர்கொண்டுள்ளமை தெளிவாகியுள்ளது.

இந்த அரசை உடனடியாக வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இல்லையேல் நாட்டுக்குத்தான் பேரழிவு” – என்றார்.

“வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும்.” – அமைச்சருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

விவசாயம் குறித்து தெரியாத அமைச்சர் வாக்குகேட்டு ஊருக்குள் வந்தால் அவர்களுக்கு மண்வெட்டி பதிலளிக்கும் என வெலிமடை பிரதேச விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.

பதுளை – வெலிமடை விவசாயிகள் நடத்திய எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தமது பொறுமைக்கும் எல்லை உண்டு என குறிப்பிட்ட விவசாயிகள் தற்போது பெரும்போகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளபோதும் விவசாயத்தை முன்னெடுக்க வழியில்லாமல் இருப்பதாகவும் குறிப்பிட்டனர்.

அமைச்சரினால் இரசாயன உரம் இன்றி விவசாயம் செய்ய முடியும் என்பதை நிரூபித்து காட்ட முடியுமா என்றும் அவர்கள் சவால் விடுத்தனர்.

இரசாயன உர பாவனைக்கு இலங்கையில் தடை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தமக்கு உரத்தை வழங்குமாறு கோரி விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லை.” – கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி !

இலங்கையில் சுமார் 60 வீதமானவர்களுக்கு போஷாக்கான உணவுகள் கிடைப்பதில்லை என உணவு உரிமை தொடர்பில் கண்காணிக்கும் தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரிய வந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவுதலின் பின்னர் இவ்வாறு போஷாக்கான உணவுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது.

கொழும்பு, யாழ்ப்பாணம், புத்தளம், கம்பஹா, களுத்துறை, காலி, மட்டக்களப்பு, கண்டி, நுவரெலியா மற்றும் பதுளை ஆகிய 10 மாவட்டங்களில் இந்தக் கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்குபற்றியவர்களில் 71 வீதமானோர் குறைந்த விலையில் உணவுப் பொருட்கள் கொள்வனவு செய்துள்ளனர் எனவும், 69 வீதமானவர்கள் வாரமொன்றில் ஐந்து நேரம் உணவு உட்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை 14 வீதமானவர்கள் வாரமொன்றில் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஒருவேளை உணவையேனும் பெற்றுக்கொண்டதில்லை என கருத்துக் கணிப்பு மூலம் தெரிய வந்துள்ளது.