October

Sunday, January 23, 2022

October

கிழக்கில் அதிகரிக்கும் பொலிஸாரின் அராஜகம் – பைக்கில் சென்றவரை நிறுத்தி தாக்கிய பொலிஸார் !

மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் ஒருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியிருந்தது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவரை போக்குவரத்து பொலிஸார் நிறுத்தியதாகவும், அதனை அவதானிக்காது குறித்த நபர் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதன் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழர் பகுதியில் பொதுமகனை கொடூரமாக தாக்கிய பொலிஸார் - வெளியான காணொளி -  தமிழ்வின்

குறித்த நபரை பின்தொடர்ந்து வந்த பொலிஸ் அதிகாரி இடையில் மறித்து அந்த நபர்மீது தாக்குதல் நடத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்தநிலையில் மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரை உதைத்து கன்னத்தில் அறைந்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரி இன்று (சனிக்கிழமை) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

பொலிஸ் அதிகாரி தாக்கும் வகையிலான காணொளி வெளியாகி நேற்று (வெள்ளிக்கிழமை) பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்து.

இந்நிலையில் குறித்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்திருந்த அமைச்சர் சரத் வீரசேகர, பொலிஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.

கிழக்கில் காவல்துறையினரின் அடாவடிகள் அண்மைய நாட்களில் அதிகரித்து வருகின்றது.  ஐஸ் போதை பாவித்ததாக கைது செய்யப்பட்ட இளைஞனின் மரணம் , இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் பாதுகாவல் பொலிஸ் ஒருவரால் பிரஜை கொலைசெய்யப்பட்ட விவகாரம் என்பன குறிப்பிடத்தக்கது.

”புலிகள் உருவாக்கிய கூட்டமைப்பில் புலிகளால் துரோகிகள் எனப்பட்டோரும் உள்ளனர்.” – மனோகணேசன்

விடுதலைப் புலிகளால் துரோகிகள் என குறி வைக்கப்பட்டு தேடியழிக்கப்பட்ட கட்சியியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

யாழில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து வெளியாகியிருந்த செய்திக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் தமிழீழ விடுதலை புலிகளால் கூட்டமைக்கப்பட்ட அமைப்பே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

2009 ஆம் வருட இறுதிப்போர் வரை மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடன் இருந்தவர்களும், இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருக்கின்றார்கள் என தெரிவித்தார்.

காலத்தின் கட்டாயத்தினாலேயே ஆயுதப்போர் இடம்பெற்றது என சுட்டிக்காட்டிய மனோ கணேசன், அதில் எது தவறு எது சரி என தீர்ப்பு வழங்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.

வடக்கில் டக்ளஸ்தேவானந்தாவின் உதவியுடன் பெருகும் சிங்களக்குடியேற்றங்கள் – கஜேந்திரன் குற்றச்சாட்டு !

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உதவியுடன் வவுனியா மாவட்டத்தில் சிங்கள மக்களை குடியேற்றும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சுமத்தியுள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரை நிகழ்த்திய அவர்,

மிழர் தாயகப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் தமிழ் மக்களின் இன விகிதாசாரத்தை குறைக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை பகுதியில் நேற்றைய தினம் சிங்கள மக்களுக்கு காணி வழங்குவதற்கு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டமைக்கும் அவர் கண்டனம் வெளியிட்டுள்ளார்.

நிர்வாணமாக புகைப்படமெடுத்துக்கொண்ட 200 பேர் – காரணம் என்ன ?

காலநிலை மாற்றத்தால் சுருங்கிய ‘டெட் சீ’ என்ற உப்பு கடல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த 200 பேரை நிர்வாணமாக்கி நியூயார்க் புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

இஸ்ரேல் – ஜோர்டான் நாடுகளுக்கு இடையில் இருப்பதுதான் ‘டெட் சீ’. இதை உப்பு கடல் என்றும் அழைக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் இந்த டெட் சீ அதன் அளவில் சுறுங்கி விட்டது. இந்நிலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் விளைவுகளை மக்களுக்கு உணர்த்த 200 பெண்கள், ஆண்களை நிர்வாணமாக்கி நியூயார்க்கைச் சேர்ந்த ஸ்பென்சர் ட்யூநிக் என்ற புகைப்பட கலைஞர் புகைப்படம் எடுத்துள்ளார்.

ஆடையில்லாத 200 பெண்கள், ஆண்கள் மீது வெள்ளை நிறம் பூசப்பட்டு ‘டெட் சீ’-யின் நிலப்பரப்பில் நிற்கவைக்கப்பட்டனர். இவரது முயற்சிக்கு மத அடிப்படைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பல தரப்பில் இருந்தும் பாராட்டு குவிந்து வருகிறது. 10 வருடங்களுக்கு முன்பு இதே இடத்தில் புகைப்படம் எடுக்கும்போது இந்த கடல் பரப்பளவு பெரிதாக இருந்தது. தற்போது அதன் அளவு சுருங்கிவிட்டது’ என்று ஸ்பென்சர் ட்யூநிக் தெரிவித்துள்ளார்.

“மீனவர்கள் தவறு செய்தால் அவர்களை கைது செய்யுங்கள். அடிப்பதோ துன்புறுத்துவதோ உங்களுடைய பணி அல்ல.” – எம்.கே.சிவாஜிலிங்கம்

“எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கு, மீனவர் பிரச்சினையை வைத்து எங்களுக்கு எதிராக திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது.” என  தமிழ்த் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

இன்று வல்வெட்டித்துறையில் இடம்பெற்ற இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இலங்கை இடையிலான கடல் எல்லையில் நடைபெறுகின்ற பிரச்சினைகள் ஆண்டாண்டு காலமாக இந்தப் பகுதியில் இருந்த போதிலும் இழுவைப் படகுகள் வந்ததன் பின்பு பிரச்சினைகள் ஆரம்பித்தது. இழுவைப் படகுகள் தொடர்பில் கண்மூடித்தனமான சிந்தனைகள் எம்மத்தியில் காணப்படுகின்றன. உலகில் இரண்டு நாடுகள் மட்டுமே இழுவைப் படகை தடை செய்துள்ளன.

அடி மடி என்பதுதான் தவறானது. அது கடலின் அடி வரையுள்ள வளங்களை சுரண்டுவதன் மூலம் சுற்றாடலுக்கு பாதிப்பு ஏற்படுகின்றது. மீன்வளம் முழுவதுமாக அழிக்கப்படுகின்றது. ஆழம் குறைந்த பகுதிக்கு வரும்போதே இந்தப் பிரச்சனை உருவாகிறது. அடி முறையை தடை செய்யுங்கள். இழுவை மடி முறையை தடை செய்யவேண்டாமென நான் மாகாண சபையிலும் தெளிவாக கூறியிருந்தேன்.

சிலர் நினைத்தார்கள் நான் ஒரு சிலருக்காக ஆதரவாக இருக்கின்றேன் என்று.நல்லாட்சி அரசின் காலப்பகுதியில் ஏன் இந்த இழுவை மடி முறையை தடை செய்யவில்லை. இந்திய இலங்கை அரசுகள் எல்லை தாண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.கடலோரக் காவல் படை கடற்படை என்பன நவீன முறைகள் கொண்டிருந்தும் கூட இருநாட்டு மீனவர்களும் எல்லை தாண்டுவதை தடுக்க முடியவில்லை.

இரு நாட்டு மீனவர்களுக்கும் முரண்பாடுகள் ஏற்படுகின்றது. இதனை தவிர்க்க வேண்டும்.இரு நாட்டு அரசுகளும் பேசி இதற்கு முடிவுகட்ட வேண்டும். இரண்டு பகுதியிலும் உயிர்ச் சேதங்கள் வரக்கூடாது. மீனவர்கள் தவறு செய்தால் அவர்களை கைது செய்யுங்கள் அவர்களை அடிப்பதோ துன்புறுத்துவதோ உங்களுடைய பணி அல்ல. தென்னிலங்கை மீனவர்கள் வடபகுதி கடலில் தொழில் செய்கின்றார்கள். இதனை அனுமதிக்க முடியாது.

எங்கள் நாட்டு மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசுக்குரியது. அதை போல இந்திய மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இந்திய அரசின் பொறுப்பு. எமக்காக குரல் கொடுக்கும் தமிழக மக்களுக்கு, மீனவர் பிரச்சினையை வைத்து எங்களுக்கு எதிராக திசை திருப்புவதை அனுமதிக்க முடியாது. அடி முறையை தடை செய்யுங்கள் இழுவை மடி மீன்பிடி முறையை விஞ்ஞான முறைப்படி அனுமதியுங்கள் என்றார்.

நெதர்லாந்து அணியை பந்தாடி சாதனையுடன் இலகு வெற்றி பெற்ற இலங்கை அணி !

ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன. அதன்படி, இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்ப்டி, முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பில் அதிகபட்சமாக கொலின் 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். ஏனைய வீரர்கள் அனைவரும் 10ற்கும் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்து வௌியேறினர்.

அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர். மஹீஸ் தீக்‌ஷன ஒரு ஓவர்களை வீசி 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, 45 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.. அதன்படி, முதற்சுற்று போட்டிகளில் இலங்கை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

“என்னை மணல் கொள்ளையன் என்ற சாணக்கியன் தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன் மண் வியாபாரத்தில் ஈடுபட்டார்.” – பிள்ளையான் !

“என்னுடைய வெற்றியை  சகிக்க முடியாது கூட்டமப்பினர் என்னை மணல்கொள்ளைகாரன் என சாடுகின்றனர்”  என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் அரச தரப்பு மட்டக்களப்பு மாவட்ட எம்.பியுமான  சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று அரச தரப்பால் கொண்டுவரப்பட்ட 2021.03.10 மற்றும் 2021.04.06 ஆகிய திகதிகளில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அரச பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (கோப் குழு) அறிக்கைகள் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அங்கு மேலும் கூறுகையில்,

என்னைப் போன்றவர்களை அரசியலில் இருந்து அகற்றுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பொய்ப்   பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். சாணக்கியன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் என்னைப் பற்றி கூறியுள்ளார். என்னிடம் மண் அகழ்வுப் பத்திரம் இருப்பதாகப் பொய் கூறியுள்ளார். அதற்கான ஆதாரமாக சில விடயங்களை முன்வைத்துள்ளார். ஆனால், அது வேறு ஒரு நபர். அவர் நான்தான் என என்னைக் குற்றவாளியாக்க முயற்சிக்கிறார்.  சாணக்கியன் எம்.பியும்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மண் வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை மறந்துவிட்டார்.

மழை முன்னர் புற்றீசல்கள் கிளம்பி வரும். அதேபோன்று மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அமைச்சர் பஸில் ராஜபக்ச கூறியவுடன் அதில் போட்டியிடத் தயாராகவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர்தான் இன்று முன்வந்து போராடுகின்றனர். மாகாண சபைத் தேர்தல் இல்லாமல் போகவும் அவர்களே காரணம்.

கடந்த காலத்தில் என்னைப் பழிவாங்கி என்னை அரசியலில் இருந்து வெளியேற்ற என்னை நல்லாட்சி அரசில் சிறையில் அடைத்தனர். ஆனால், மக்கள் மத்தியில் நான் பிரபல்யம் பெற்று அதிகூடிய வாக்குகளைப் பெற்று விட்டேன் என்பதற்காக அதனைப் பொறுத்துக்கொள்ள முடியாது. இவர்கள் என்னை ஒரு கொள்ளைக்காரன் போன்றும், மண் கொள்ளைக் கும்பல் தலைவன் போன்றும்  காட்ட  முயற்சிக்கின்றனர்” என்றார்.

“தாய்வானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம்.” – ஜோபைடன்

தாய்வானை சீனா தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமெரிக்க  ஜனாதிபதி ஜோபைடன் சிஎன்என் நிகழ்ச்சியில் பேசும்போது, “ நாங்கள் இதில் பொறுப்புடன் இருக்கிறோம். தைவானுடனான எங்கள் உறவில் எந்த மாற்றமும் இல்லை. சீனா தாய்வானை  தாக்கினால் நாங்கள் நிச்சயம் பாதுகாப்போம்” என்று தெரிவித்தார்.

தாய்வான் -சீனா இடையே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவும் நிலையில் இரு நாடுகளும் மீண்டும் ஒன்றிணைவதற்கான முயற்சியில் சீன ஜனாதிபதி ஜி-ஜின்-பிங் தீவிரமாக இருக்கிறார். சீனா அமைதியான முறையில் தாவானுடன் ஒன்றிணைய விரும்புகிறது என்று கடந்த வாரம் சீன அதிபர்  தெரிவித்தார்.

”தாவான் சீனப் பிரதேசத்தின் ஒரு பகுதி. சமீபத்தில் தாய்வான் ஜலசந்திக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் போர்க் கப்பல்களை அனுப்பியுள்ளன. இந்த பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத் தன்மைக்கு அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகள் அச்சுறுத்தல் விடுத்துள்ளன  என்று சீனா தெரிவித்தது.

முன்னதாக ,சீனா  கனவு காண்கிறது. தலிபான்கள் வழியைப் பின்பற்ற நினைக்கிறது. ஆனால், நாங்கள் எங்களைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று தாய்வான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதே நேரம் தாய்வான் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளியிட்ட அறிவிப்பானது, அமெரிக்காவின் கொள்கையில் ஏற்பட்ட மாற்றம் இல்லை என வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

கைப்பந்து வீராங்கனையின் தலையை துண்டித்து படுகொலை செய்த தலிபான்கள் !

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதும், பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. தங்களது உயிர்களை பாதுகாத்துக்கொள்ள ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறி வருகிறார்கள்.

இந்த நிலையில் தலிபான்களால் பெண் வீராங்கணை ஒருவர்,  தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவம் நடைபெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தானில் மகளிர் தேசிய கைப்பந்து அணி வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி. இவர் இந்த மாதம் தொடக்கத்தில் காபுல் நகராட்சி கைப்பந்து கிளப் சார்பில் நடைபெற்ற கைப்பந்து விளையாட்டில் பங்கேற்றுள்ளார். இதன்பிறகு, மஹ்ஜூபின் ஹகிமி தலிபான்களால் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்துவிட்டதாகவும், இந்த சம்பவம் வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் கைப்பந்து விளையாட்டு அணியின் பயிற்சியாளர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து, பயிற்சியாளர் மேலும் கூறுகையில், “கைப்பந்து போட்டியில் பங்கேற்ற வீராங்கணை மஹ்ஜூபின் ஹகிமி இந்த மாத (அக்டோபர்) தொடக்கத்தில் தலை துண்டிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அவர்களின் குடும்பத்தை தவிர வேறு யாருக்கும் தெரியாது. இதுப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்று தலிபான்கள் மிரட்டி வைத்துள்ளனர்.

மஹ்ஜூபின் மட்டும் இல்லாமல், கைப்பந்து விளையாட்டு அணி உள்பட மற்ற விளையாட்டு வீராங்கணைகளையும் தலிபான்கள் வீடு தேடி மிரட்டி வருகின்றனர். வீட்டைவிட்டு வெளியேறி கண்காணாத இடத்திற்கு போய்விடும்படியும் கட்டாயப்படுத்துகின்றனர். இதனால், வீராங்கணைகள் விரக்தியிலும், பயத்திலும் உள்ளனர்” என்றார்.

யாழில் அதிகரிக்கும் வாள்வெட்டுச்சம்பவங்கள் – இரவு நேரத்தில் வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு குழு அட்டகாசம் !

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டுக்குழுக்களின் அட்டகாசம் அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. காவல்துறையினர் இதுதொடர்பில் பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. வாள்வெட்டும் – வன்முறைகளும் யாழில் நாளுக்கு நாள் அதிகரித்துச்செல்கின்ற நிலையில்  நீர்வேலியில் உள்ள வீடொன்றுக்குள் சென்ற வாள் வெட்டுக்குழு தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீர்வேலி தெற்கு ஜே 268 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள வீடொன்றினுள் நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இரவு புகுந்த வாள் வெட்டுக் குழு, வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்துவிட்டு தப்பிச் சென்றுள்ளது.

மோட்டார் சைக்கிளில், வாள்கள், கம்பிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் வந்த 4 பேர் கொண்ட கும்பலே இவ்வாறு தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிது.

முப்படைகள், பொலிஸாரை சந்தித்து யாழில் இயங்கும் வாள் வெட்டுக்குழுக்களை அடக்குவேன் என வடமாகாண ஆளுநர் கலந்துரையாடிய சில மணி நேரங்களில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.