04

04

“தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய இந்தியா துணை நிற்கும்.” – இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா

“ஐக்கிய இலங்கைக்குள் சமத்துவம், சமாதானம், நீதி மற்றும் கௌரவம் ஆகியவற்றுக்கான தமிழ் மக்களின் அபிலாஷைகளை இலங்கை பூர்த்தி செய்ய வேண்டும். இவை நிறைவேற இந்தியா துணை நிற்கும்.” என இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலாளர், இரவு உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் கல்வியலாளர்களைச் சந்தித்து இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

யாழ். திருநெல்வேலியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் வைத்து அரசியல் பிரமுகர்களையும், கல்வியலாளர்களையும் வெளிவிவகாரச் செயலாளர் சந்தித்து கலந்துரையாடினார். இதன்போது இரவு நேர விருந்துபசாரமும் இடம்பெற்றது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லே, யாழ். இந்திய துணைத் தூதர் ராகேஷ் நடராஜ் ஜெயபாஸ்கரன் ஆகியோரும் இதன்போது உடனிருந்தனர்.

இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ், வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், சுரேஷ்  பிரேமச்சந்திரன், யாழ். மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் ஆகியோரும், அரசியல் ஆய்வாளர்களான கே.ரி. கணேசலிங்கம், நிலாந்தன், யாழ்ப்பாணம் வர்த்தக சங்கத் தலைவர் ஜெயசேகரம், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

இதன்போது அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம், வடக்கு – கிழக்கு இணைப்பு, வடக்கில் இந்தியத் தரப்பின் செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன என்று சந்திப்பில் கலந்துகொண்டவர்கள்  தெரிவித்தனர்.

தடுப்பூசி வழங்குதல் என்பதை  தடுப்ழுசி லழுங்குதல்  என எழுதி மொழிப்பிழை – மனோ கணேசன் ஆவேசம் !

நான் முன்பை விட ஆளுமையுடன் ,பலத்துடன், கோபத்துடன் மீண்டும் வருவேன் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

அவருடைய முகநூல் பதிவிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தடுப்பூசி வழங்குதல் என்பதை தடுப்ழுசி லழுங்குதல் என மொழிப்பிழையாக கொரோனா தடுப்பூசி வழங்கும் நிலையம் ஒன்றில் எழுதியுள்ளது என்பதை சுட்டிக்காட்டும் போதே  அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

என் காலத்தில் பேராசிரியர் சந்திரசேகரனை “அரச கரும மொழிகள் ஆணைக்குழு” தலைவராக நியமித்து, அங்கே ஒரு தொடர்பாடல் நிலையத்தையும் அமைத்திருந்தேன்.

மொழிப்பிழைகள் என் கவனத்துக்கு வந்த உடன் ஓடியோடி திருத்தங்கள் செய்யப்பட்டன. அவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, நாட்டில் எந்த மூலையில் மொழிப்பிழை நடந்தாலும்,முதல் பொறுப்பு கூற வேண்டிய அந்த ஊர் நாடாளுமன்ற உறுப்பினரை விட்டு விட்டு நாடாளுமன்றத்திலும், ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும், மேடைகளிலும், பதில் சொல்லவும், ஏச்சு-பேச்சு வாங்கவும் ஒரு “அப்பாவி” அமைச்சர் இருந்தார். வெயில் நன்றாக அடிக்க, அடிக்கத்தான் நிழலின் அருமை தெரியும். அடிக்கட்டும்.! தெரியட்டும்.! எழுதி வைத்துக்கொள்ளுங்கள் நான் மீண்டும் வருவேன் என தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னணி 2019 ஜனாதிபதி தேர்தலா..?

2019 ஜனாதிபதி தேர்தலை மையமாக வைத்தே ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தாக்குதலின் பொறுப்பை இரண்டுபேர் மீதுமட்டும் சுமத்தி சம்பந்தப்பட்டவர்களை காப்பாற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டினார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த தாக்குதல் இருவரால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் இதன் பின்னணியில் பெரிய குழு இருப்பதாகவும் தலதா அத்துகோரள குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக இந்த அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் கேள்வியெழுப்பினார்.