09

Friday, December 3, 2021

09

“பசில் ராஜபக்ஷவின் மூளை, இங்கிருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும்.” – அமைச்சர் ரோஹித புகழ்ச்சி !

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு ஏழு மூளைகள் இல்லை. அவருக்கு ஒரு மூளையே உண்டு. பசிலின் மூளை, இங்கிருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும் என்றும்  அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவித்த அவர்,

பசிலின் மூளை, இங்கிருக்கும் அனைத்து மூளைகளை விடவும் சிறந்த மூளையாகும். அந்த மூளை வெற்றிகரமானதும் தூர நோக்குடையதுமான மூளையாகும். ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி என்னும் கட்சிக்கு எதிர்வரும் நவம்பர்  2ஆம் திகதி ஐந்தாண்டுகள் பூர்த்தியாகின்றன. இலங்கையின் பெரும் கட்சியாக தற்பொழுது உருவாகியுள்ளது.

இந்தக் கட்சியை இவ்வாறு உருவாக்கியதன் பெருமை பசில் ராஜபக்ஷவையே சாரும். 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சிறந்த தீர்வுகளை அவர் வழங்குவார். இந்த வரவு செலவுத் திட்டம் மிகவும் வெற்றிகரமான ஒரு வரவு செலவுத் திட்டம் என்பதை நான் சபையில் பதிவு செய்கின்றேன் என ரோஹித அபேகுணவர்தன தெரி வித்துள்ளார்.

“முஸ்லீம்களை புறக்கணிக்குமாறு கூறிவிட்டு முஸ்லிம் நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள அலைந்து திரிகின்றனர்.” – இம்ரான் மஹ்ரூப்

“முஸ்லீம்களை புறக்கணிக்குமாறு கூறிவிட்டு முஸ்லிம் நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள அலைந்து திரிகின்றனர்.” என கேட்கின்றோம் என எதிர்க்கட்சி உறுப்பினர்  தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அரசாங்கத்தின் அண்மைகால நடவடிக்கைகளை பார்க்கும்போது மீண்டும் இனவாதத்தை கையில் எடுத்துக்கொண்டு நாட்டில் இனங்களுக்கிடையில் பிரச்சினை ஒன்றை ஏற்படுத்தப்போகின்றதா என்ற சந்தேகம் எழுகின்றது. குறிப்பாக இந்த அரசாங்கம் ஆட்சியமைத்த பின்னர் பெரும்பான்மை சமூகத்தினரால் அமைக்கப்பட்ட அரசாங்கமாக இருந்தாலும் 20ஆவது திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றக்கொள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டது. இ்வ்வாறான நிலையில் அரசாங்கம் மீண்டும் இனவாதத்தை தூண்டுகின்ற நடவடிக்கையை ஆரம்பித்திருக்கின்றது.

குறிப்பாக ஞானசார தேரரின் முஸ்லிம் மக்களை தூண்டும் இனவாத செயற்பாடு சீசன் போன்று காலத்துக்கு காலம் ஆரம்பிக்கப்படுகின்றது. இந்த இனவாதம் மீண்டும் தூண்டப்படுவதன் நோக்கம் ஒரு தேர்தலை எதிர்நோக்குவதற்கா அல்லது பொருளாதார பிரச்சினையை மறைப்பதற்காகவும் பொருள் மாபியாவை மறைப்பதற்காகவுமா என எண்ணத்தோன்றுகின்றது. அரசாங்கத்தில் இருக்கும் சில அமைச்சர்கள் இனவாத்தை போஷித்தவர்கள்.

குறிப்பாக முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்களை புறக்கணிக்குமாறும் அவர்களுடன் உறவு வைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் பிரசாரம் செய்த கம்மன்பில, விமல் வீரவன்ச, சரத் வீரசேகர போன்ற அமைச்சர்கள் இன்று முஸ்லிம் நாடுகளுக்கு சென்று அங்கிருக்கும் அபிவிருத்திகளை பெற்றுக்கொள்ள அலைந்து திரிகின்றதை காண்கின்றோம். பங்களாதேஷிடம் கடன் கேட்கும் நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டிருக்கின்றது.

கடந்த காலங்களில் அமைச்சர்கள் அரபு நாடுகளுக்கு சென்று வட்டியற்ற கடனை பெற்றுவரும் நிலைமையே இருந்தது. ஆனால் அரசாங்கம் கொடுக்கல் வாங்கல் செய்துவரும் சீனா கடனை வழங்கிவிட்டு நாட்டை எழுதிக்கொள்ளும் கலாசாரமே இருந்து வருகின்றது. ஆகையால் எதற்காக இந்த இரட்டை முகம் என்றே நாங்கள் அரசாங்கத்திடம் கேட்கின்றோம்.

அதுமாத்திரமல்லாது திருகோணமலை கிண்ணியா பிரதேசத்தில் காணி எல்லை பிரச்சினை எழுந்திருக்கின்றது. அதனால் அங்குள்ள விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. சிறுபான்மை மக்கள் என்பதால்தான் இந்த பிரச்சினை அங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் பெரும்பான்மை மக்கள் அங்கு பாரிய இயந்திரங்களை பயன்படுத்தி காடழிப்புகளை மேற்கொண்டுவருகின்றனர். அதனை யாரும் கண்டுகொள்வதில்லை என்றார்.

இலங்கையில் காவல்துறை தடுப்புக்காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள் தொடர்பில் சிவிக்கஸ் மொனிட்டர் வெளிப்படுத்தியுள்ள ஆவணம் !

இலங்கையில் நியாயமான உரிமைகளை முன்னிறுத்தி மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டங்கள் அரசாங்கத்தினால் முடக்கப்படல், அரசாங்கத்தை விமர்சிப்பவர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படல், காவல்துறை தடுப்புக்காவலின் கீழ் இடம்பெறும் சித்திரவதைகள், பயங்கரவாத்தடைச்சட்டத்தின் முறையற்ற பிரயோகம் உள்ளடங்கலாக அண்மைக்காலத்தில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான இடைவெளியில் ஏற்பட்டுள்ள சுருக்கம் தொடர்பில் தென்னாபிரிக்காவின் ‘சிவிக்கஸ் மொனிட்டர்’ அமைப்பு விரிவாக ஆவணப்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க்கை தளமாகக்கொண்டு இயங்கிவரும் ‘சிவிக்கஸ் மொனிட்டர்’ என்ற அமைப்பானது சர்வதேச ரீதியில் சிவில் சமூக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்குக் காணப்படும் சுதந்திரம் தொடர்பான ஆய்வுகளை மதிப்பீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்நிலையில் அண்மைய காலத்தில் இலங்கையில் சிவில் சமூக செயற்பாடுகளின் நிலவரம் தொடர்பில் அவ்வமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

“தேவைப்பட்டால் கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. எல்லோருமே ஆதரவு தரதயார்.” – பஸில் ராஜபக்சவிடம் எம்ஏ.சுமந்திரன் !

நிலுவையில் இருக்கும் மாகாணசபைத் தேர்தல்களை அடுத்த மார்ச் மாதத்துக்கு முன்னர் நடத்தி முடிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது என நிதி அமைச்சர் பஸில் ராஜபக்ச இன்று நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் கூட்டத்தில் அறிவித்தார்.

இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணையைக் கையில் எடுத்து புதிய மாற்றங்களோடு அதை விரைந்து நிறைவேற்றுவதற்கு ஆராயப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது. இந்தத் தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்றைய கூட்டத்துக்கு முதல் தடவையாக சமுகம் தந்தனர். அச்சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என பஸில் ராஜபக்ச கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது எனவும், அதற்காக
மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் அவர் அங்கு சொன்னார்.

இந்த விடயத்தில் சில சமயங்களில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அச்சமயம் அங்கு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., அத்தகைய சட்டம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல என்று விளக்கினார்.

இது தொடர்பில் தாம் ஒரு தனிநபர் சட்டமூலம் ஒன்றைச் சமர்ப்பித்திருக்கின்றேன் எனவும், கால விரயத்தைத் தடுப்பதற்காக அதையே தேவையான மாற்றங்களோடு சமர்ப்பித்து நிறைவேற்றலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்துக்களை கூட்டத்தில் பங்குபற்றிய சட்டமா அதிபரின் பிரதிநிதியும் அங்கீகரித்தார். மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கட்டாயம் அல்ல என்று குறிப்பிட்ட சுமந்திரன் எம்.பி., அப்படி தேவைப்பட்டாலும் கூட, கூட்டமைப்பு, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜே.வி.பி. எல்லாமே ஒரேயடியாக ஆதரவு தர முன்வந்து இருக்கின்றன என்பதால் மூன்றில் இரண்டு பங்கு அல்ல, அதையும் தாண்டி முழு நாடாளுமன்றத்தின் ஆதரவுடனும் இத்தகைய சட்டமூலத்தை விரைந்து நிறைவேற்ற முடியும் என்றும் கூறினார். ஏனைய உறுப்பினர்களும் அந்தக் கருத்தை அங்கீகரித்தனர்.

இதேவேளை, இதுவரை இருந்த தேர்தல் சட்டத்தை அப்படியே மீண்டும் சட்டமாக்கினால் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் விடயம் அதில் வராது என்பதைச் சுட்டிக்காட்டினார் பஸில் ராஜபக்ச.

முதலில் பழைய சட்டத்தை உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வந்து, பின்னர் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் ஏற்பாடுகளைப் புதிய சட்டம் மூலமாகச் சமர்ப்பித்து நிறைவேற்றலாம் என்றார் சுமந்திரன். அந்தக் கருத்தும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

புதிய சட்ட மூலங்களை ஒழுங்குபடுத்தும் ஏற்பாடுகளை சட்டமா அதிபர் திணைக்களம் சட்ட வரைஞர் திணைக்களத்துடன் சேர்ந்து மும்முரமாக ஈடுபடும் எனத் தெரியவருகின்றது.