11

11

“எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் கொதிக்கும் தாரால் குறிவைத்தும் எம்மை அடக்கினர்.”- எஸ்.சிறீதரன்

“எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறீதரன் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2021.10.06 ஆம் திகதி நடைபெற்ற நயினாதீவு நீர்வழங்கல் திட்டத்திற்கான கடல்நீரை நன்னீராக்கும் சுத்திகரிப்பு நிலையத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய, கிராமிய மற்றும் பிரதேச நீர்வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, ‘சயனைட் குப்பிகளையும், புத்தகங்களையும் ஏந்திய வடக்கு மாகாண இளைஞர்களை இன்று புத்தகங்களையும், பேனாவையும் ஏந்த வைத்திருப்பதாகவும், இந்த நல்லெண்ணத்திற்கு வித்திட்டவர்கள் இன்றைய ஜனாதிபதியும், பிரதமருமே’ என்று குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் பேசிய போதே எஸ்சஜறீதரன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய அவர்,

இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த  குறிப்பிட்டிருந்த கருத்து உண்மைக்குப் புறம்பான புனைவாகும். அது அமைச்சரின் சிங்கள பௌத்த பேரினவாத சிந்தனையையே எடுத்துக்காட்டுகிறது. தமிழர்களின் உரிமைப் போராட்டம் குறித்தோ, அதன் வரலாறு பற்றியோ, தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தோற்றுவாய் குறித்தோ இராஜாங்க அமைச்சர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. என்றாலும், இத்தகைய கருத்துக்களை வெளியிட முன்னராவது வரலாற்றை அறிவதற்கு அவர் முயற்சித்திருக்க வேண்டும். இந்த நாட்டில் எழுபது ஆண்டுகளுக்கு மேலாகப் புரையோடிப் போயிருக்கும் இனப் பிரச்சினைக்கு அடித்தளமிட்டது யார் என்பதையும், தமது சொந்த நாட்டில் இழைக்கப்பட்ட அநீதிகளை எதிர்த்து, அமைதிவழியில் போராடிப் பெறமுடியாதுபோன அடிப்படை உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவே தமிழர்கள் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டார்கள் என்பதை இனியாவது இராஜாங்க அமைச்சர் கற்றுககொள்வது அவரது அரசியல் எதிர்காலத்துக்கு தேவையானதாக அமையும்.

சுதந்திர இலங்கையில் என்ன நிகழ்ந்தது என்பதை அப்போது பிறந்தேயிராத அமைச்சர் அறிந்திருக்க மாட்டார். அதன் விளைவாகத்தான் அவர் வெளியிட்டுள்ள கருத்தும் அத்தனை அபத்தமாக அமைந்துள்ளது. 1957 இலும், 1965 இலும் இலங்கையில் இனச் சமத்துவத்தை அங்கீகரிக்க அடிப்படையாக அமைந்த பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் சிங்கள அதிகார பீடங்கள் தான் கிழித்தெறிந்தன. பன்மைத்துவமற்ற அரசியலமைப்பை உங்கள் இனத்தவர்கள் தான் உருவாக்கினார்கள், பௌத்தத்தை மட்டும் முதன்மை பெற வைத்து, தரப்படுத்தலை சிங்களத் தலைவர்களே மேற்கொண்டார்கள், தமிழ்மொழியைப் புறக்கணித்து, தமிழர் தாயகத்தில் நிலவிய மரபுரிமை சார்ந்த கூட்டு வாழ்வைச் சிதைத்து, சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கினார்கள், இனவாதிகளை உருவாக்கி எம்மின மக்களை வெட்டிச் சரித்தும், சொத்துக்களை அழித்தும், தீயிட்டுக் கொழுத்தியும், தமிழ்ப் பெண்களின் மார்புகளில் சிங்கள ‘ஸ்ரீ’ ஐ கொதிக்கும் தாரால் குறிவைத்தும், பச்சிளம் குழந்தைகளை கொதித்த தார்ச்சட்டிகளுள் வீசி எறிந்தும், தமிழ் இளைஞர்களின் கண்களை உயிரோடு தோண்டி எடுத்தும் ஓரினத்தின் இருப்பை அடியோடு ஆட்டம்காண வைத்து, அவர்களின் உணர்வுகளை கொதிநிலைக்கு இட்டுச்சென்றது யாரென்பதை இந்த உலகம் அறியும்.

தமிழர்கள் ஒரு அறிவார்ந்த சமூகம் என்பதை எண்பித்த வரலாற்றுச் சாட்சியமாய், தமிழர்களின் தனிப்பெரும் கல்வி அடையாளமாய் இருந்த தெற்காசியாவின் அறிவுக் களஞ்சியமான யாழ்ப்பாணம் பொதுநூலகத்தை 1981 யூன் 30ம் திகதி நள்ளிரவு தீயிட்டுக் கொழுத்தி எமது இனத்தின் அறிவாண்மையைச் சிதைக்கும் செயலில் சிங்கள இனவெறியர்கள் ஈடுபட்டதை, அப்போது ஆறு வயதுச் சிறுவனாக இருந்த நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லைத்தான். இந்த அவலம் மிகுந்த வரலாற்றால் வெஞ்சினம் கொண்ட இளைஞர்கள் தான், வெகுண்டெழுந்து எமக்கான வரலாற்றைப் படைத்தார்கள். அடக்கப்படுகிற போது விடுதலை பெற வேண்டுமென்ற உணர்வு மனித சமூகத்தின் தன்னியல்பான குணாம்சம். அதனையே எங்கள் இளைஞர்களும் செய்தார்கள். அவர்கள் ஒருபோதும் வன்முறையை விரும்பியவர்களல்ல. ஆயுதங்களை அவர்கள் விரும்பி ஏற்றவர்களும் அல்ல. தங்களையும், தங்கள் இனத்தையும் தற்காத்துக் கொள்வதற்காக போராடி அதற்காகவே தங்கள் உயிர்களை ஈர்ந்தார்கள். தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களே ‘ஆயுதங்களை நாம் ஒருபோதும் விரும்பி ஏற்கவில்லை. அவை எம்மீது வலிந்து திணிக்கப்பட்டவையே’ என்று 1985 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து வெளிவந்த சஞ்சிகை ஒன்றுக்கு  வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.

இவற்றைவிட சிங்கள இனவாத அரசு காலம்காலமாக மேற்கொண்டுவந்த தமிழினப் படுகொலைகளும், தமிழர்களின் வாழ்வியல்ப் போக்கைத் திசைமாற்றியதில் பெரும் பங்கு வகித்தன. வடக்கு இளைஞர்களைத் தாம் புத்தகமும், பேனாவும் தூக்க வைத்திருப்பதாகப் பெருமிதம் கொள்ளும் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, இனவாத அரசால் வயதுவேறுபாடற்று மேற்கொள்ளப்பட்ட சிறுவர் படுகொலைகள் குறித்தும் அறிய முற்பட வேண்டும். நவாலிப் படுகொலை, நாகர்கோவில்ப் பாடசாலைப் படுகொலை, கொக்கட்டிச்சோலைப் படுகொலை, வாகரைப் படுகொலை, செஞ்சோலைப் படுகொலை, முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்புப் படுகொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்ட ஆயிரக் கணக்கான அப்பாவிச் சிறுவர்களின் உயிரிழப்புக்களுக்கும், இறுதிப் போரின்போது இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் வைத்து காணாமலாக்கப்பட்ட பலநூற்றுக் கணக்கான சிறுவர்களுக்கும் நீதியைப் பெற்றுக்கொடுக்கத் திராணியற்ற பேரினவாத நாட்டில், தமிழ் மாணவர்களின் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் அக்கறையும், பெருமிதமும் அடைவது நகைப்புக்கிடமான செயலாகும்.

வரலாறு இவ்வாறிருக்க, நல்லெண்ணத்திற்கு வித்திட்டதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிடும் இன்றைய ஜனாதிபதியும், பிரதமரும் தற்போது எம் இனம் மீது பிரயோகித்துவரும் அடிப்படை வன்முறைகள் கூடவா அமைச்சரின் கண்களுக்கு இன்னும் புலப்படவில்லை?. நாம் கண்ணீர் விட்டு அழவும் தடையுத்தரவு தருகின்றீர்கள். ஒவ்வொரு அப்பாவித் தாய், தந்தையின் நெஞ்சிலும் ஆணியால் அடிக்கிறீர்கள், தங்கள் தாய், தந்தையரின் கல்லறைகள் இல்லாது போன காலத்திலும், அவர்கள் புதையுண்ட நிலங்களை முத்தமிடத் துடிக்கின்ற பிள்ளைகளின் தலையிலே சம்மட்டியால் அடிக்கின்றீர்கள். அவர்களை நினைந்து அழுவதையும், தொழுவதையும் பயங்கரவாதம் என பறைசாற்றுகிறீர்கள். இலங்கை தேசத்தில் வாழ்கின்ற சிங்கள தேசிய இனம் போலவே நாமும் ஓர் தேசிய இனமாக, எமக்கென்றோர் தனித்துவமான பண்பாட்டு, விழுமியங்களோடு இந்த வரலாற்றுத் துயர்களை எல்லாம் மறந்து வாழ முற்படும் வேளையில் சர்வதேச மனித உரிமை சாசனங்களை மீறி, இலங்கையின் உள்நாட்டு அடிப்படை உரிமைகளுக்கு முரணாக, சர்வதேச சமவாயங்களின் அடிப்படைக் கோட்பாடுகளைக் கூட அங்கீகரிக்கத் தவறி, எமது சமூக, பண்பாட்டு, விழுமியங்களை நிராகரித்து ‘பௌத்த புராண, இதிகாசமான மகாவம்ச சிந்தனைகளிலிருந்து சிங்களதேசம் மீண்டு வந்து தமிழ் மக்களுக்கு சமத்துவமான தீர்வொன்றைத் தருமென்று நான் துளியேனும் நம்பவில்லை’ என்ற தமிழீழ தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனையை மெய்ப்பிப்பதாகவே உங்கள் செயற்பாடுகள் இன்றும் அமைந்துள்ளன.

கைதுகள், காணாமலாக்கல்கள், நில ஆக்கிரமிப்பு, மரபுரிமைச் சின்னங்களை அழித்தல், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் என தமிழ்த்தேசிய இனம் மீதான உங்களின் அடிப்படை இனவன்முறைகள் இன்னும் இன்னும் அதிகரித்துச் செல்லும் அதிபயங்கரமான சூழலில் எமது போராட்டம் குறித்து கருத்துரைப்பதற்கு அருகதையற்ற இராஜாங்க அமைச்சர், சயனைட் குப்பியும், துப்பாக்கியும் ஏந்திய எங்கள் பிள்ளைகளை தாமே புத்தகங்களை ஏந்த வைத்திருப்பதற்காக தெரிவித்துள்ள கருத்தை அவரது அரசியல் அறியாமையின் வெளிப்பாடாகவே நான் பார்க்கிறேன்.” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.” – எம்.ஏ.சுமந்திரன்

13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரனை அவர் சந்தித்த பின்னரே ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் வந்து எங்களுடைய மீனவர்களுடைய மீன்பிடி உபகரணங்களை பாதிக்கச் செய்த பல விடயங்கள் அண்மைக் காலமாக நடந்திருக்கின்றன.அவர்களுடைய இலட்சக்கணக்கான மீன்பிடி உபகரணங்களுக்கு சேதங்கள் ஏற்பட்டது. இந்த விடயங்கள் சம்பந்தமாகவே இந்தியத் துணைத் தூதருடன் பேசி இருக்கின்றோம். இவற்றுக்கு என்ன செய்யலாம் என்று இழப்பீடுகள் தொடர்பாகவும் நாம் பேசியிருக்கிறோம். வடமராட்சி கிழக்கில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பாக அங்குள்ள மீனவ சங்கங்கள் எனக்கு அனுப்பிய கடிதத்தை இந்திய பிரதித்தூதரிடம் நான் அனுப்பியிருந்தேன்.

அத்துமீறி பிரவேசித்து எங்களுடைய வளங்களை சுரண்டுவதால் மீன் வளங்கள் அற்றுப்போகின்றது. 2018 ஆம் ஆண்டு இழுவை மடி தொழிலை தடுக்க வேண்டும் என ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டது. அது சட்டமாக்கப்பட்டாலும் மீன்பிடி அமைச்சு அந்த சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பது தான் இதற்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

அந்த சட்டத்தை அமுல்படுத்தினால் இந்த பிரச்சினை பெரிய அளவிலே தீர்ந்து விடும். அந்த சட்டம் கொண்டுவரப்பட்டபோது இந்திய வெளிவிவகார அமைச்சு ஓர் எச்சரிக்கை ஒன்றை தமிழக மீனவர்களுக்கு விடுத்திருந்தது. ஒரு கடுமையான சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆகவே இலங்கை கடற்பரப்புக்குள் போகவேண்டாம் என எச்சரித்தது.இதன் காரணமாக ஓரிரு வருடங்களாக வராமல் இருந்த தமிழக மீனவர்கள், அந்த சட்டம் அமுல்ப்படுத்தப்படவில்லை என தெரிந்த பின்னர் மீண்டும் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அத்துமீறுபவர்களை கைது செய்து இந்த சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வது என்பதை மீன்பிடி அமைச்சு செய்ய வேண்டும். ஆகவே சட்டத்தை அமுல்படுத்தாமல் இருப்பதே அத்துமீறல் தொடர்ச்சியாக நடப்பதற்குக் காரணமாக இருக்கின்றது. மீன்பிடி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு நாங்கள் கூறுவது என்னவென்றால் சட்டங்களை இயற்றி கொடுத்திருக்கின்றோம். இதற்கான ஆயுதத்தை உங்களிடம் கொடுத்திருக்கின்றோம். அதை வைத்துக் கொண்டு செயல்படுத்தாமல் விடுவது எங்களுடைய மீனவர்களுக்கே பாதிப்புகளை ஏற்படுத்தும்.

பதின்மூன்றாம் திருத்தம் தொடர்பிலும் சில கருத்துப் பரிமாற்றங்களை செய்து இருக்கின்றோம்.இந்திய வெளியுறவுச் செயலாளருடன் பேசியதன் தொடர்ச்சியாக 13ம் திருத்தத்தில் இருக்கின்ற முழு அதிகாரங்களையும் அமுல்படுத்த வேண்டும் என்பதை இந்தியா தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றது. முழு அதிகாரத்தையும் அமுல்படுத்துவதாக இருந்தால் காவற்துறை அதிகாரத்தையும் அமுல்படுத்த வேண்டும். ஒவ்வொரு மாகாணத்துக்கும் காவற்துறை பிரிவு ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். முழுமையாக 13ஆம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவோம் என்று அரசாங்கம் சொன்னால் அதனை செய்து காட்ட வேண்டும் என்றார்.

மேற்படி சந்திப்பின்போது நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுடன் வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சுகிர்தனும் பங்கேற்றிருந்தார்.

இலங்கையில் ஒரே நாளில் எகிறிய அத்தியாவசிய பொருட்களின் விலைகள் – முழுமையான விபரங்கள் !

இன்று முதல் கோதுமை மாவின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. செரண்டிப் மற்றும் பிரீமா நிறுவனங்களால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லிட்ரோ சமையல் எரிவாயுகளின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட போதிலும் சிறிய விலை குறைப்பினை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.அதன்படி, 12.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 75 ரூபாயினாலும், 5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 30 ரூபாயினாலும், 2.5 கிலோ எடைக்கொண்ட சமையல் எரிவாயுவின் விலை 14 ரூபாயிவினாலும் குறைக்கப்பட்டுள்ளது.

நேற்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்பட்ட விலையில் இருந்தே விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில் 12.5 கிலோ எடை சமையல் எரிவாயுவின் புதிய விலை 2675 ரூபாயாகவும் 5 கிலோ 1071 ரூபாயாகவும், 2.5 கிலோ 506 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 503 ரூபாவாலும், 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் விலையை 231 ரூபாவாலும் அதிகரிக்க அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதன்படி, 5 கிலோ கிராம் சிலிண்டரின் விலை புதிய விலை 1,101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் 2.5 கிலோ கிராம் சிலிண்டரின் புதிய விலை 520 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எசீமேந்து விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் 50 கிலோ கிராம் சீமேந்து 93 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் நாட்டில் சமையல் எரிவாயு, கோதுமை மா, பால்மா சீமெந்து உள்ளிட்ட பொருட்களின் விலைகள் சடுதியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து  கொத்து, தேநீர்,சாப்பாட்டு பார்சல்  உள்ளிட்டவற்றின் விலைகளை அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, 10 ரூபாயால் விலையை அதிகரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாணின் விலையை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி 450 நிறையுடைய ஒரு இறாத்தல் பாணின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“அரசியல்கட்சியும் உள்ளே வரவேண்டாம். வந்தால் அடித்து விரட்டுவோம்.” – பருத்தித்துறை, முனை கடற்தொழிலாளர்கள்

இந்தியன் இழுவைபடகையும், தடைசெய்யப்பட்ட அனைத்து தொழில்களையும் உடனடியாக நிறுத்தும் வரை எந்த வொரு அரசியல் கட்சிகளும் தமது எல்லைக்குள் உட்பிரவேசிக்க வேண்டாம் என   அறிவித்துள்ளனர்.

முனை கடற்தொழிலாளர்கள் இன்று (திங்கட்கிழமை) முன்னெடுத்த எதிர்ப்பு போராட்டத்தின் போதே இவ்வாறான அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.

அத்தோடு அரசியல் கட்சிகள் மீறி தமது இடத்திற்கு வரும் பட்ச்சத்தில் மக்களால் அடித்து விரட்டப்படுவார்கள்  என்பதனையும் தாம் உறுதியாக, மனவருத்தத்துடன் அறியத்தருவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

அது மாத்திரமின்றி தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு யாரும் முன்வராவிட்டால் நாங்கள் எங்கள் பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளுவோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க மற்றும் தலிபான்களுக்கிடையில் பேச்சு – அமெரிக்கா எங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான்கள் வலியுறுத்தல் !

ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதை  அடுத்து கடந்த ஓகஸ்ட மாதம்  தலிபான்கள் ஆப்கானிஸ்தானை முற்றிலுமாக கைப்பற்றினார்கள். இதைத் தொடர்ந்து அவர்களது ஆட்சி அங்கு வந்துள்ளது. ஏற்கனவே 5 ஆண்டுகள் தலிபான்கள் ஆட்சியின் கீழ் ஆப்கானிஸ்தான் இருந்தது. அப்போது பல்வேறு கொடூர செயல்களில் அவர்கள் ஈடுபட்டனர். இதனால் பாகிஸ்தான், சவுதி அரேபியா தவிர எந்த நாடுகளும் அப்போது தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்கவில்லை.

ஆனால் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றியுள்ள அவர்கள் பழைய காலத்தை போல மோசமான செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

ஆனாலும் கடுமையான அடக்குமுறைகளை தலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். பெண்களின் உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரண தண்டனை உள்ளிட்ட கொடூர தண்டனைகளையும் வழங்கி வருகிறார்கள். இதனால் மற்ற நாடுகள் தலிபான்கள் ஆட்சியை அங்கீகரிக்க தயங்கி வருகின்றன.

இந்தநிலையில் பரம எதிரியான அமெரிக்காவுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ள தலிபான்கள் முயற்சி செய்தனர். இது சம்பந்தமாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லாமல் கட்டார் நாட்டில் உள்ள டோகாவில் இருதரப்பு பிரதிநிதிகளும் ரகசியமாக பேச்சு வார்த்தை நடத்தினார்கள் தலிபான்கள்.

அதைத்தொடர்ந்து கடந்த சனிக்கிழமையும்,நேற்றும் இரு தரப்பினருக்கும் இடையே அதிகாரப்பூர்வமான பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது அமெரிக்கா கடுமையான நிபந்தனைகளை விதித்தது.

இதை ஏற்றுக் கொள்ள தலிபான்கள் மறுத்தனர். இதனால் பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் நடத்தப்பட்டது. அதிலும் சரியான முடிவுகள் எட்டப்படவில்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் செயல்படாதது போல் ஒடுக்கப்பட வேண்டும் என்பது அமெரிக்காவின் முக்கிய கோரிக்கையாகும்.

ஆனால் தலிபான்கள் தங்கள் தரப்பில் தெரிவித்த கோரிக்கைகளை ஏற்க வேண்டும், தங்கள் அரசை அங்கீகரிக்க வேண்டும் என்று கூறினார்கள். அவ்வாறு அமெரிக்கா செய்யவில்லை என்றால் ஐ.எஸ். பயங்கரவாதிகளையும் மற்ற பயங்கரவாதிகளையும் எங்களால் கட்டுப்படுத்த முடியாது என்று தலிபான்கள் எச்சரித்தார்கள்.

எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடுகள் ஏற்படவில்லை. அதே நேரத்தில் ஆப்கானிஸ்தான் மக்கள் பாதிப்பு அடையாமல் இருக்க உணவு, மருந்து உள்ளிட்ட மனிதாபிமான உதவிகளை செய்வதற்கு தயாராக இருப்பதாக அமெரிக்கா கூறியுள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் என்ன வி‌ஷயங்கள் பேசப்பட்டது? என்ன முடிவுகள் எடுக்கப்பட்டது? என்பது பற்றி அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை.

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.” – இரா.சாணக்கியன்

“கிழக்கு மாகாண ஆளுநர் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.”என  மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில்  நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

களுவாஞ்சிகுடியில் உள்ள எனது அலுவலகத்தில் திருகோணமலையிலிருந்து உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் விசாரணைக்காக வருகைதந்திருந்தார்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பாகவும் கிழக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப்பொலிஸ்மா அதிபர் மண் அகழ்வு விடயமாக கேட்கவிரும்புவதாக கேட்டிருந்தார்.அதற்கு நான் இணக்கம் தெரிவித்திருந்தேன்.சரியான விடயத்தினை செய்யப்போகின்றார்கள் என்று நம்பியிருந்தேன்.

ஆனால் 10-09-2021 சிங்கள பத்திரிகையொன்றில் கிழக்கு மாகாண ஆளுனர் தெரிவித்திருந்த செய்தியொன்று வெளிந்திருந்தது. அதில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் 07ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  நாடாளுமன்றத்தில் நான் தெரிவித்த கருத்தினை வைத்து ஆளுனரினால் சிரேஸ்ட பொலிஸ்மா அதிபரிடம் 09ம் திகதி ஒரு முறைப்பாட்டினை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரை என்ன என்பது கூட தெரியாமல் கிழக்கு மாகாண ஆளுனர் இவ்வாறாக நடந்துகொள்வது மிகவும் கவலையான விடயம். கிழக்கு மாகாண ஆளுனரை பொறுத்தவரையில் அவர் கிழக்கு மாகாணத்தில் முற்றுமுழுதாக தமிழ் பேசும் மக்களுடைய விடயங்களை சரியான வகையில் கையாளாகதவராகவே இருந்துவருகின்றார்.

கடந்த காலத்தில் மயிலத்தமடு-மாதவனை மேய்ச்சல் தரை காணி விடயம் தொடர்பில் அவரின் செயற்பாடுகள்,மண்மாபியாக்களை கட்டுப்படுத்திலான அணுகுமுறைகள்,மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் அவர் நடந்துகொள்ளும் விதங்களை பார்க்கும்போது கிழக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் நலன்களை விட ஏனையவர்களின் நலனையே நோக்காக கொண்டுசெயற்படுகின்றார்.கிழக்கு மாகாண ஆளுனரின் செயற்பாடுகள் பொலிஸாரையும் நெருக்கடிக்குள் தள்ளும் செயற்பாடாவேயுள்ளது.

நாடாளுமன்றத்தில் நான் பேசிய ஒரு விடயத்தினை இவ்வாறு விசாரணைசெய்யுமாறு கூறினால் வருங்காலத்தில் மக்கள் பிரதிநிதிகள் உரையாற்றுவதற்கு அச்சம்கொள்ளும் நிலையே ஏற்படும். கடந்த காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இனவாத அரசியலை செய்கின்றது என்று அவர் ஊடகங்களுக்கு எனது பெயரை கூறி தெரிவித்தது தொடர்பில் நாடாளுமன்றத்தில் சிறப்புரிமை மீறல் என முறையிட்டபோதிலும் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அண்மையில் கூட  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அவர்கள் கைதுசெய்யப்பட்டது அவரது சிறப்புரிமையினை மீறும் ஒரு செயல்.தியாக தீபம் திலிபன் நினைவுதினத்தினை அமைதியான முறையில் அனுஸ்டித்தபோது அவரை கழுத்தைப்பிடித்து இழுத்துச்சென்றதானது பாராளுமன்ற உறுப்பினர் என்றதுக்கே மதிப்பளிக்காத தன்மையினை அங்கு காணமுடிந்தது.கட்சி பேதங்களுக்கு அப்பால் மக்கள் பிரதிநிதிகளுக்கு இருக்கும் சிறப்புரிமையை மதிக்கவேண்டும்.

அதிகாரிகளின்  இவ்வாறான செயற்பாடுகள் காரணமாகத்தான்  நாடாளுமன்ற சிறப்புரிமையும் சவாலுக்குவந்துள்ளது.இது தொடர்பில் சபாநாயகர் தனது கவனத்தினை செலுத்தவேண்டும். நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமையினை பாதுகாக்கவேண்டியது அவரின் பொறுப்பு. கிழக்கு மீட்பு கோசத்தினை செய்துவந்தவர்கள் இன்று காணி,மண் என பல கொள்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.இவர்கள் தங்களுக்கு வாக்களித்த மக்களுக்காக ஏதாவதுசெய்யவேண்டும்.

இன்று ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 200பேருக்கு மட்டுமே இவர்களினால் வேலைவாய்ப்பினைப்பெற்றுக்கொடுக்கமுடிந்தது. 2021ஆம் ஆண்டு ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 33325பேருக்கு இலங்கையில் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.இதில் சிங்கவர்களுக்கு 31517பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது.தமிழ் மக்களுக்கு 1060பேருக்கு வழங்கப்பட்டுள்ளது,748முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 33325பேரில் வெறும் ஆயிரம் தான் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்டில் 25வீதத்திற்கு மேல் தமிழ் பேசும் மக்கள் வாழும்போது இனவிகிதாசார அடிப்படையில் வழங்கியிருந்தால் கூட இதில் 8000பேருக்காவது நியமனங்கள் வழங்கியிருக்கவேண்டும்.இந்த விடயத்தினைக்கூட உங்களால் கையாளமுடியாவிட்டால் உங்களால் என்ன அபிவிருத்தியை செய்யமுடியும்.

அண்மைக்காலமாக தூக்கத்திலிருந்த சில இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கும் இங்கும் கருத்துச்சொல்வதும்,ஒருநாளும்  நாடாளுமன்றத்தில் உரையாற்றாதவர்கள் இன்று பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.சாணக்கியன் பேசுகின்றார் என்ற காரணத்தினால் உங்களது மக்களுக்கு ஏதாவது குரல்கொடுக்கவேண்டும் என்று உங்களுக்கு ஆர்வம் வந்ததை வரவேற்கின்றேன்.

20வது திருத்த சட்டத்திற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு இலட்சம் வேலைவாய்ப்பில் 748 முஸ்லிம்களுக்குதான் நியமனம் வழங்கப்பட்டுள்ளது தொடர்பிலாவது சிந்திருக்கவேண்டும்.தனிப்பட்ட இலாபங்களுக்காக மாறிவிட்டு என்னை விமர்சிக்கவரவேண்டாம்.நான்  நாடாளுமன்றத்தில் அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பேன்.இதுவே எங்களது கட்சியின் நிலைப்பாடுமாகும்.

தேசிய இனவிகிதாசாரத்தில் நியமனங்களைக்கூட பெற்றுவழங்கமுடியாதவர்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதானது தங்களது தனிப்பட்ட சுயலாபங்களுக்காகவேயாகும். என தெரிவித்தார்.

வட மாகாண புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா பதவிப்பிரமாணம் !

வட மாகாண புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட ஜீவன் தியாகராஜா இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வட மாகாண ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமனம்! | Kuruvi

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர் இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய ஜீவன் தியாகராஜா, தனது பதவியை இராஜினாமா செய்த நிலையில் வட மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வௌ்ளைப்பூண்டு மோசடியை வெளிப்படுத்திய அதிகாரிக்கு கொலைமிரட்டலை அடுத்து வெள்ளைவான் அச்சுறுத்தல் !

நுகர்வோர் அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்று பணிப்பாளர் துசான் குணவர்த்தன கிருலப்பனையில் உள்ள தனது வீட்டிற்கு அருகில் வெள்ளை வானில் இனந்தெரியாத குழுவினர் நடமாடுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
துசான் குணவர்த்தன இது குறித்து கிருலப்பனை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த வியாழக்கிழமை சந்தேகத்திற்கு இடமான நபர்கள் வெள்ளை வானில் தனது வீட்டிற்கு அருகில் காணப்படுகின்றனர் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். வானிலிருந்து இறங்கிய நபர் ஒருவர் எனது வீட்டின் கேட்டில் உள்ள இலக்கத்தை உறுதிப்படுத்தியதை தான் பார்த்ததாக அயலவர் ஒருவர் தெரிவித்துள்ளார் என அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
தனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாதத்திற்கு முன்னரே பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“டெல்லியை அழிக்க 5 நிமிடம் போதும்.” – பாகிஸ்தான் அணுகுண்டு தந்தையின் உயிரை காவுவாங்கிய கொரோனா !

பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைக்கப்பட்டவர் அப்துல் காதிர்கான். இந்தியா அணுகுண்டு கண்டுபிடித்ததைத் தொடர்ந்து, எதிலும் இந்தியாவுடன் போட்டி போடும் பாகிஸ்தானும் அணுகுண்டு உருவாக்கும் முயற்சியில் இறங்கியது. அப்போது, பாகிஸ்தானும் அணுகுண்டை உருவாக்க முக்கிய காரணமாக இருந்தவர் அப்துல் காதிர்கான். அணு விஞ்ஞானியான இவர் பாகிஸ்தானில் அணு குண்டை உருவாக்கியதால், அந்நாட்டினர் இவரை பெருமையுடன் பாகிஸ்தானின் அணுகுண்டு தந்தை என்று அழைத்து வந்தனர்.

85 வயதான அப்துல் காதிர்கான் சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அண்மையில் கொரோனா தொற்று பாதிப்பும் ஏற்பட்டு, உயிருக்கு போராடினார். இஸ்லாமாபாத்தில் உள்ள கே.ஆர்.எல். மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் பிறந்து, பாகிஸ்தானுக்கு குடிபெயரந்து அந்நாட்டின் அணு ஆயுதத்தின் தந்தை எனப் போற்றப்பட்டவர் அப்துல் காதிர்.
இவரது மறைவு குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ட்விட்டரில் பதிவிட்ட இரங்கல் செய்தியில், டாக்டர் அப்துல் காதிர் கான் மறைவு செய்திகேட்டு மிகவும் துன்பப்பட்டேன். தேசத்துக்கு அணு ஆயுதத்தை வடிவமைத்த கானின் சேவை தேசத்தால் விரும்பப்பட்டது, தேசமும் அவரை நேசித்தது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் அப்துல் காதிர் கான் அளித்த பேட்டியில், ராவல் பிண்டி நகலிருந்து வெறும் 5 நிமிடங்களில் டெல்லி தாக்கி அழிக்க முடியும் அதற்கான வல்லமை பாகிஸ்தான் அணு ஆயுதத்துக்கு இருக்கிறது எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

“எங்களை பயங்கரவாதிகள் என கூறிவிட்டு சிங்கள தலைவர்கள் கே.பியை கட்டிதழுவி வரவேற்கின்றனர்.”- இரா.சாணக்கியன்

நாடாளுமன்றில் தமிழ் மக்களின் உரிமைகளிற்காக குரல்கொடுக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை பயங்கரவாதிகள் என அழைப்பவர்கள் கேபி எனப்படும் குமரன் பத்மநாதனை கட்டிதழுவி வரவேற்கின்றனர் என தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த கேபியை கட்டித்தழுவினார் அவருடன் நிகழ்ச்சியில் இணைந்துகொண்டார் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

எனினும் நாடாளுமன்றத்தில் தமிழ்மக்களின் உரிமைகள் குறித்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரையாற்றினால் பயங்கரவாதிகள் என கூச்சலிடுகின்றனர் எனது உரையின்போது கூட அவ்வாறு கூச்சலிட்டனர் என சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

கேபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நல்லாட்சி அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுக்கதவறிவிட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.