12

Monday, October 18, 2021

12

திருகோணமலையிலிருந்து நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது !

திருகோணமலை விடுதி ஒன்றிலிருந்த சட்டவிரோதமான முறையில் நியூஸிலாந்து செல்ல முயன்ற 63 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த அனைவரும் கடல் மார்க்கமாக தப்பிச் செல்ல முயன்றுள்ளனர். இவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

“வடக்கு கிழக்கில் உடனடியாக பொதுசன வாக்கெடுப்பை நடாத்துங்கள்.” – குவாட் அமைப்பிடம் எம்.கே.சிவாஜிலிங்கம் கோரிக்கை !

ஐக்கிய நாடுகள் சபை வடக்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென அமெரிக்கா, இந்தியா, அவுஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளை உள்ளக்கிய குவாட் அமைப்பிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வல்வெட்டித்துறையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (10) நடந்த ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இது தொடர்பான கடிதம் ஏற்கனவே இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று நாட்டு தூதரகங்களிற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழ் தேசிய கட்சிகளிற்கும், அதன் பாராளுமன்ற உறுப்பினர்களிற்கும் அந்த கடிதம் பார்வைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அனுப்பப்பட்ட அந்த கடிதத்திலே 1987 ஆம் ஆண்டின் இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாகிய, நடைமுறையிலுள்ள மாகாண சபைகள் முறைமையானது இலங்கையால் கடந்த 3 வருடங்களாகக் கைவிடப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கமானது தேர்தலை நடாத்துவதற்கு எவ்வித முயற்சியையும் எடுக்காமல், பதிலாக சபைகளுக்குக் கையளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களை அகற்றுவதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய-இலங்கை ஒப்பந்தமானது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்குரிய பிராந்தியத்தை தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாகத் தெளிவாக அங்கீகரித்துள்ளது. குறித்த உடன்படிக்கையின் மூலமாகக் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பிற்கான 13வது திருத்தத்தை இலங்கையானது எப்பொழுதுமே முழுமையாக அமுல்படுத்தவில்லை என்பதுடன் தற்பொழுது அதனை மேலும் பலமிழக்கச் செய்வதிலேயே ஈடுபட்டுள்ளது.

இந்திய – பசுபிக் பிராந்தியத்தில் நிரந்தர அமைதியை அடைவதற்கும் அதே சமயம் எமது பிராந்தியத்தில் சுதந்திரத்தையும் ஸ்திரத்தன்மையையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கும் உதவுவதன் பொருட்டு தமிழ் மக்கள் உலகிலுள்ள அதிகாரம்மிகுந்த நாடுகளில் ஒன்றாகிய இந்தியாவிடம் அழைப்பு விடுக்கின்றனர்.

தமிழ் மக்களுக்கு எதிரான கடந்த கால வன்முறை வடிவங்கள் மீள – இடம்பெறாமலிருப்பதற்கு உத்தரவாதம் அளிக்கவல்ல நிரந்தர அரசியல் தீர்வினை சனநாயக ரீதியில் நிலைநாட்டுவதற்காகவும், அவர்களுக்கான ஈடுசெய் நீதியை வழங்குவதன் பொருட்டும் அவர்களை அடக்குமுறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுவிப்பதன் பொருட்டும் இலங்கையின் வடக்கு- கிழக்குப் பிராந்தியத்திலுள்ள மக்களுக்காக ஐ.நாவினால் கண்காணிக்கப்படுகின்ற குவாட் நாடுகளான அவுஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான், ஐக்கிய அமெரிக்கா போன்றனவற்றால் நடாத்தப்படுகின்றதுமான பொதுசன வாக்கெடுப்பினை ஒருங்கிணைப்பதற்காக உடனடியானதும் அவசரமானதுமான நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு இந்தியாவிடம் கோருகின்றேன் என்கிறார்.

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” – நிதி அமைச்சர் பசில்

“சிலர் எதிர்பார்ப்பதை போல நாட்டில் எந்தவகையிலும்  பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.” என்று நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் உணவு பாதுகாப்பு தொடர்பாக விவசாய அமைச்சர் மற்றும் அதனுடன் இணைந்த இராஜாங்க அமைச்சுகளுடன் நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

இந்த ஆண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில்  ஒவ்வொரு அமைச்சுக்கும்   உற்பத்தி பொருளாதாரம் தொடர்பான பல்வேறு திட்டங்களுக்காக 25,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது . நாட்டில் உணவுப் பற்றாக்குறையுடன் பஞ்சம் ஏற்படும் என்று சிலர் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.  அவர்கள் எதிர்பார்ப்பதைப்  போல் நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

நாம் இம்முறை வரவு – செலவு திட்டத்தில்  உற்பத்திப் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். இந்த முறை வரவு – செலவுத் திட்டத்தில் கிராமத்துக்குப் பணம் அனுப்பும் முறையை உருவாக்கியுள்ளதாகவும்  உற்பத்தித் துறையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு  இம்முறை வரவு – செலவு திட்டத்தில் கிராம மற்றும் பிரதேச செயலக மட்டத்தில்  நிதி ஒதுக்கீடு  செய்யப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள ஒரு மில்லியன் இளைஞர்கள் – பகிரங்கப்படுத்தியது ஐக்கிய மக்கள் சக்தி !

எதிர்வரும் மாதங்களில் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேற உள்ளனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களிடம் பேசிய அவர் 1983 கலவரத்தின்போது அல்லது யுத்தத்தின்போது கூட இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறவில்லை என கூறினார்.

இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை வலுப்படுத்துவதற்காக கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்வதற்கு திட்டமிட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த வளர்ச்சி ஏமாற்றமளிப்பதாகக் கூறிய நாடாளுமன்ற உறுப்பினர் மயந்த திஸாநாயக்க, நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்திற்காக தற்போதைய சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

நாட்டின் வருங்கால சந்ததியினர் நாட்டை வளர்ப்பதற்கும் தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் கைகோர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

காணி அபகரித்தல் , சட்டவிரோத குடியேற்றம் என்பவற்றுக்கான ஆதாரங்களை நோர்வே, நெதர்லாந்து உயர்ஸ்தானிகர்களிடம் கையளித்த சாணக்கியன் !

மட்டக்களப்பில் இடம் பெற்று வரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்தும் இடம் பெற்று வருவதாகவும்  தொல்பொருள் திணைக்களத்தின் அத்துமீறல் இடம்பெற்று வருவதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் மற்றும் நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நோர்வே உயர்ஸ்தானிகர் ட்ரினி ஜோரானில் எஸ்கெடல் மற்றும் நெதர்லாந்து நெதர்லாந்து உயர்ஸ்தானிகர் தன்சா கோங்க்றிப் ஆகியோரை இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் சந்தித்து பேசியுள்ளார்.

மட்டக்களப்பில் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மற்றும் துரிதமாக முன்னேற்றும் செயல்பாடுகளில் முதன்மையான தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் இயற்கை அழகுடன் காணப்படும் மட்டக்களப்பு மாவட்ட சுற்றுலா துறையை மேம்படுத்தும் பல திட்டங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பில் இடம்பெற்றுவரும் காணி அபகரித்தல் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் மண் அகழ்வு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து ஆராயப்பட்டதுன், இதற்கான ஆதாரங்களுடன் கூடிய ஆவணமும் கையளிக்கப்பட்டது.

இதன் போது சாணக்கியன் விசேட கோரிக்கை ஒன்றினையும் முன்மொழிந்திருந்தார்.குறிப்பாக தொல்பொருள் எனும் பெயரில் காணிகள் சூறையாடப்படுவதை தடுக்கும் நோக்குடன் தொல்பொருள் சம்பந்தமான செயற்பாடுகள் அனைத்தும் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பின் ஊடாக சர்வதேச கண்காணிப்புடன் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

இதன்மூலம் நாம் எதிர்கொள்ளும் சட்ட விரோத காணி அபகரிப்பு போன்ற பிரச்சினைகளை தடுக்க முடியும் என இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன், இன்றைய குறித்த சந்திப்பானது சமகால அரசியல் பரிமாற்றத்துடன் முற்றுப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு – தாய் மற்றும் மகன் மீது கத்திக்குத்து – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட சுழிபுரம் – காட்டுப்புலம் பகுதியில் குடும்ப பெண் மீதும் அவருடைய மகன் மீதும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நிலையில் இருவரும் யாழ்.போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ,

அயல் வீட்டாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக 45 வயதான குடும்ப பெண் மீதும் அவருடைய 16 வயதான மகன் மீதும் கத்தியால் வெட்டியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த இருவரும் சங்கானை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அயல் வீட்டாரான 51 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.