14

Monday, October 18, 2021

14

“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொள்ளமுடியாது.” – சஜித் பிரேமதாஸ

“குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் புரிந்துகொள்ளமுடியாது.” என  எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

அம்பலாங்கொடைக்கு அண்மையிலுள்ள மீனவ சமூகத்தினருடன் வியாழக்கிழமை (14) எதிர்க்கட்சித்தலைவர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

இதன்போது அவர்கள் முகங்கொடுத்திருக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிந்த அவர், அதனைத்தொடர்ந்து அங்கு கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறியதாவது:

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின்கீழ் அம்பலாங்கொடையில் இடம்பெற்றுவரும் மீன்பிடித்துறையை மேலும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு, அதனூடாக மீனவசமூகத்தின் வாழ்க்கைத்தரத்தையும் மேம்படுத்தப்படும். கடலால் சூழப்பட்டிருக்கும் எமது நாட்டில் கடற்பிராந்தியங்களுக்கு அண்மையில் பொருளாதார மத்திய நிலையங்கள் அமைந்திருக்கின்றன.

விசாலமான கடற்பிராந்தியம் எமது நாட்டின்வசமுள்ள போதிலும், மொத்தத்தேசிய உற்பத்தியில் மீன்பிடித்துறையின் பங்களிப்பு வெறுமனே 1.2 – 1.3 சதவீதமாக மாத்திரமே காணப்படுகின்றது. மீன்பிடி நடவடிக்கைகள் மூலம் கிடைக்கப்பெறும் மீன்களில் 20 சதவீதத்திற்கும் குறைவான மீன்கள் மாத்திரமே ஏற்றுமதிக்கு உகந்த நிலையில் காணப்படுகின்றன.

இந்த நிலையை மாற்றியமைப்பதற்கு நாட்டின் மீன்பிடித்துறையில் பாரிய புத்தாக்கத்தை ஏற்படுத்தவேண்டிய அவசியம் காணப்படுகின்றது. அதற்கு நீண்டகால அடிப்படையிலான தேசிய கொள்கையொன்று வகுக்கப்படுவதுடன் அது 5 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றமடைவதாக இருக்கக்கூடாது.

நாட்டிற்குத் தேவையான மீனுற்பத்தி உள்நாட்டிலேயே இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யக்கூடியவகையில் அதன் உற்பத்தியை விரிவுபடுத்துவதே மீன்பிடித்துறையைப் பொறுத்தவரையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நீண்டகால இலக்காகக் காணப்படுகின்றது. அதுபற்றிய தெளிவுடைய நிபுணர் குழுவொன்று கட்சியில் இருப்பதுடன் அவர்களால் மீன்பிடித்துறைசார் கொள்கைத்திட்டம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. குளிரூட்டப்பட்ட அறைகளில் இருப்பவர்களுக்கு மீனவர்களின் பிரச்சினைகளையும் அவர்களின் தேவைகளையும் புரிந்துகொள்ளமுடியாது.

பல்தேசியக்கம்பனிகளால் ஆட்டுவிக்கப்படும் பொம்மையாக மாறியிருக்கும் தற்போதைய அரசாங்கம், எம்.வி எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இன்னமும் உரியவாறு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுக்கவில்லை.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் மீனவ சமூகத்தின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப்பெற்றுக்கொடுப்பதற்கும் மீன்பிடித்துறையை மேம்படுத்துவதற்கும் ஏற்றவகையிலான கொள்கைத்திட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி தயாரித்துவருகின்றது.

எனவே மீனவசமூகத்தின் பிரச்சினைகளை நன்கறிந்த மீனவர்களிடமே அதுபற்றிக் கேட்டறிந்து, அவர்களின் யோசனைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி, கொள்கைத்திட்டத்தைத் தயாரித்து வருகின்றோம் என்று குறிப்பிட்டார்.

அதிகாலையில் பற்றியெரிந்த 13 மாடி கட்டிடம் – 46 பேர் உடல் கருகி பலி !

தெற்கு தைவானில் உள்ள கயோசியுங் என்ற இடத்தில் ஏராளமான மக்கள் வசித்து வந்த 13 மாடி அப்பார்ட்மென்ட் கட்டிடத்தின் ஒரு பகுதியில்  இன்று அதிகாலை 3.30 மணியளவில் திடீரென  தீ விபத்து ஏற்பட்டது. நேரம் செல்ல செல்ல தீ கட்டிடம் முழுவதும் பரவியது.
13 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 46 பேர் உடல் கருகி துடிதுடித்து  உயிரிழந்த பரிதாபம்..! | southern Taiwan Kaohsiung city fire...46 people dead
அதிகாலை என்பதால் கட்டிடத்தில் வசித்து வந்தவர்கள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தனர். தீ வேகமாக பரவ அவர்களால் எளிதாக தப்பிக்க முடியவில்லை. 100-க்கும் மேற்பட்டோர தீயில் சிக்கிக் கொண்டனர். அவர்களில் 32 பேர் சம்பவ இடத்திலேயே கருகி உயிரிழந்தனர்.
55 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் 14 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ விபத்து ஏற்படுவதற்கான சரியான காரணம் தெரியாத நிலையில், அருகில் குப்பைகள் குவிக்கப்பட்டிருந்தது. அதில் இருந்து தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என மீட்புப்படையினர் சந்தேகிக்கின்றனர்.

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் மரணம் – கணவர் கைது !

வவுனியாவில் தீயில் எரிந்து குடும்ப பெண் ஒருவர் மரணமடைந்த நிலையில், சந்தேகத்தில் குறித்த பெண்ணின் கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (14) காலை இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கற்பகபுரம், நான்காம் ஒழுங்கையில் வீடு ஒன்றின் கூரை மற்றும் யன்னல் தூவரம் ஊடாக நெருப்பு மற்றும் புகை என்பன வெளிவந்ததைத் தொடர்ந்து அயலவர்கள் சென்ற போது வீட்டின் அறைப்பகுதியில் குறித்த வீட்டில் வசித்து வந்த பெண் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்துள்ளார்.

இதனையடுத்து அயலவர்கள் கதவினை உடைத்து தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முயற்சித்துள்ளனர். இருப்பினும் குறித்த வீட்டில் வசித்து வந்த குடும்ப பெண் முற்றாக தீயில் எரிந்து மரணமடைந்துள்ளதுடன், அறை ஒன்றும் முழுமையாக எரிந்து உடமைகளும் அழிவடைந்துள்ளன.

இதனையடுத்து அயலவர்கள் கிராம அலுவலர் ஊடாக பூவரசன்குளம் பொலிசாருக்கு வழங்கி தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பூவரசன்குளம் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது குறித்த குடும்பத்தின் கணவர் மிதிவெடி அகற்றும் நிறுவனத்தில் பணி புரிவதாகவும், மனைவிக்கும் அவருக்கும் இடையில் கடந்த பல மாதங்களாக குடும்பத் தகராறு இருந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இன்று (14) காலை கணவர் வேலைக்கு செல்லாது வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் இருந்த மூன்று மகன்களில் ஒருவர் வேலைக்கும், ஒருவர் கடைக்கும் சென்ற நிலையில் மற்ற மகன் மலசலகூடத்திற்கு சென்றுள்ளார். இதன்போது அந்த மகன் வெளியில் வராத வகையில் மலசல கூடம் வெளியில் பூட்டப்பட்ப்பட்டுள்ளது.

இதன்போதே வீட்டில் குறித்த பெண் மீது தீ பற்றியுள்ளது. வீடு தீயில் எரிவதைக் கண்டு அயலவர்கள் வருகை தந்த போது வீட்டில் கணவன் இருக்கவில்லை. அயலவர்கள் தண்ணீர் விசிறி தீயிணை அணைக்க முற்பட்ட போதும் அது பலனின்றி, குறித்த பெண் தீயில் எரிந்து மரணமடைந்துள்ளார். வீட்டின் அறையும் முழுமையாக தீயில் எரிந்து உடமைகளும் நாசமாகியுள்ளன.

குறித்த சம்பவத்தில் கற்பகபுரம் பகுதியைச் சேர்ந்த ரஜேந்திரன் அனற்றா (வயது 43) என்பவரே தீயில் எரிந்து மரணமடைந்தவராவார்.

இச் சம்பவம் தொடர்பில் கணவனின் செயற்பாட்டில் சந்தேகம் அடைந்த பொலிஸார் அவர் நெளுக்குளம் பகுதியில் நின்றிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் பூவரசன்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய ஈரானிய பிரஜைகள் 02 கொழும்பு சிறையில் மரணம் !

கொழும்பு மெகசின் சிறைச்சாலையில் தொற்று நீக்கித் திரவத்தைப் பருகிய சிறைக் கைதிகளில் இருவர் உயிரிழந்துள்ளதாகச் சிறைச்சாலை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த கைதிகள் இருவரும் ஈரானிய பிரஜைகள் எனச் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மேற்படி தொற்று நீக்கித் திரவத்தை பருகிய ஈரானிய சிறைக்கைதிகளான மேலும் 10 பேர் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்கள் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மீண்டும் புலிகளை உருவாக்க முயற்சி – தமிழக அரசுக்கு பா.ஜ.க எச்சரிக்கை !

விடுதலைப்புலிகள் இயக்கத்தை சேர்ந்த சபேசன் என்ற நபர் போதைப் பொருட்கள் மற்றும் ஆயுதங்களுடன் அண்மையில், சென்னையில் கைது செய்யப்பட்டார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

இந்நிலையில், தமிழகத்தில் சமீப காலமாக விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் தீவிரமாகி வருவதாகவும் தி.மு.க அரசு கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சென்னை உட்பட 12 இடங்களில், மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்தின் பயிற்சி கூடங்கள் மற்றும் மறைவிடங்களில், தேசிய புலனாய்வு நிறுவனம் சோதனையிட்டு வருகிறது.  ஆகவே  தமிழக அரசும், காவல் துறையும் நிலைமையின் விபரீதம் உணர்ந்து, இந்த தீய சக்திகளை அடையாளம் கண்டு முற்றிலும் ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளில் இறங்க வேண்டியது காலத்தின் கட்டாயம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை அண்மையில் கைது செய்யப்பட்ட சபேசன் ஆயுதங்களை கடத்தி, அதன் வருவாயில் மீண்டும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை இயக்க முயற்சி செய்ததாக தேசிய புலனாய்வு நிறுவனம் அவர் மீது குற்றம் சாட்டியுள்ளது. சமீப காலமாக இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தீவிரமாகி வருகின்ற நிலையில், திமுக அரசு கவனத்துடன் இருக்க வேண்டியது கட்டாயமாகிறது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் தமிழ் தேசியம், தனி ஈழம் பேசும் பிரிவினைவாத அமைப்புகளும், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக மக்களை தூண்டிவிடும் மாவோயிச தீவிரவாத இயக்கங்கள் பலவும் தி.மு.கவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே எனவும் பதிவிட்டள்ளார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் இத்தகைய சட்ட விரோத செயல்கள் நடைபெறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது இலங்கை !

உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான பயிற்சிப் போட்டியில் இலங்கை 39 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

ஓமானில் நடைபெற்றுவரும் இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய பெத்தும் நிஸ்ஸங்க 76 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளுக்கு 123 ஓட்டங்களை பெற்று 39 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக வனிந்து ஹசரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இவர்களைத் தவிரவும் அணித்தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ண,மஹீஷ் தீக்சன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழத்தினர்.

இந்த வெற்றியுடன் இலங்கை அணி விளையாடிய இரண்டு (ஓமான், பப்புவா நியூ கினியா) பயிற்சி போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் உலக இருபதுக்கு 20 கிரிக்கெட் தகுதிச் சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியினர் தன்னம்பிக்கையுடன் களமிறங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

“அரசாங்கத்தால் தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த சிங்கள சின்னங்கள் திணிக்கப்படுகின்றது.” – சிவஞானம் சிறீதரன்

“கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்பு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு நல்கும்.” என எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்  உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம்  இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் உறுதியளித்துள்ளார்.

இலங்கைக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினான் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின்  காரியாலயத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களால் தமிழர்கள் தற்போது அரச இயந்திரங்களால் நசுக்கப்படும் முறை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.

தமிழர்கள் தமது உணர்வுபூர்வமான நினைவுகளை மேற்கொள்வதற்கு இப்போது இருக்கும் அரசாங்கம் கொரோனாவை காரணம் காட்டி தடைகள் விதிப்பது தொடர்பாகவும் அதனை மீறி நினைவேந்தல்கள் இடம்பெற்றால் புலனாய்வாளர்கள் மூலமாக நினைவேந்தலில் கலந்து கொண்டவர்களை அச்சுறுத்துவது தொடர்பாகவும் எடுத்துரைக்கப்பட்டதுடன் இதேவேளை அரசாங்கம் பாரிய விழாக்களை எந்தவித தடைகளும் இன்றி நடாத்துவது குறித்தும் தமிழ் இளைஞர்கள் புலனாய்வு அச்சுறுத்தலால் நாட்டைவிட்டு வெளியேற எத்தனிக்கின்றார்கள் எனவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாலும் தமிழ் இளைஞர்களிற்கு வேலைவாய்ப்பு கொடுப்பதில் உள்ள பின்னடைவாலும் இலங்கையில் வட பகுதியில் உள்ள தமிழ் இளைஞர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் தொல்பொருள் என்ற போர்வையில் தமிழர்களின் பூர்விக நிலங்கள் அபகரிக்கப்படுவது தொடர்பாகவும் தமிழர்களின் பூர்விக அடையாளங்களை அழித்து பௌத்த சிங்கள அடையாளங்களை திணிப்பது தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை மாகாண சபைகளினுடைய அதிகாரத்திற்குள் இருக்கின்ற பாடசாலைகள், வைத்தியசாலைகளின் அதிகாரங்கள் பறிக்கப்படுகின்றது. அத்துடன் வெளியில் காணி அதிகாரம்  பொலிஸ் அதிகாரம் மட்டும் பேசிக்கொண்டு இருக்கும் போது இருக்கின்ற அதிகாரத்தினையும் இலங்கை அரசு மாகாணங்களிடம் இருந்து பறித்துக்கொண்டு இருக்கிறார்கள் எனவும் இதுவரை மாகாண அரசின் அதிகாரத்திற்குட்பட்ட வடக்கு மாகணங்களில் உள்ள மாவட்ட வைத்தியசாலைகளின் கட்டுப்பாடுகளை இலங்கை அரசு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதுடன் மாகாண பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக ஆக்குவதன் ஊடாகவும் தமிழர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது எனவும் கனேடியத் தூதுவருக்கு தெரியப்படுத்தப்பட்டதுடன்,

கனேடிய தேசிய விழாவில் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதற்கும் ஜெனிவா தீர்மானங்களில் கனடிய அரசாங்கம் மேற்கொண்டுவரும் ஒத்துழைப்புகளுக்கும் கனேடிய அரசிற்கும் நன்றி தெரிவித்தார்.

கனடிய அரசாங்கம் மனிதாபிமானத்துடனும் பக்கர்ச்சார்வபு இன்றியும் தொடர்ந்தும் ஜெனிவா தீர்மானங்களுக்கு ஒத்துழைப்பு தருவோம் எனவும் கனடிய தூதுவர் டேவிட் மக்கினான் இன் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் , ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து ரிஷாட் பதியுதீனுக்கு பிணை !

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவிய குற்றச்சாட்டு மற்றும் ஹிசாலினி மரணம் தொடர்பான வழக்குகளில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிக்கு உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கு இன்று (வியாழக்கிழமை) கொழும்பு கோட்டை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, தலா இரண்டு 50 இலட்சம் ரூபாய் பிணைகளில் அவரை விடுவிக்கக் கொழும்பு கோட்டை நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றி வந்த சிறுமி ஹிஷாலினி மரணித்தமை தொடர்பிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகளுக்காக கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றிலும் அவர் இன்று முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவ்வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டும்.”- அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தல் !

கல்வித்துறையில் பாரிய மறுசீரமைப்பினை ஏற்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியக் குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.

ஆரம்ப பட்டப்படிப்பினை நிறைவு செய்யும் வயதெல்லை அதிகரிக்கப்பட்டுள்ளதால் மருத்துவத்துறை மாணவர்கள் அசௌகரியங்களை முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, அதில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது தொடர்பான பரிந்துரைகள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் இணையத்தளத்தில் பொதுமக்கள் கருத்துகளுக்காகப் பதிவேற்றப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.

ஐ.பி.எல் 2021 – டெல்லியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது கொல்கத்தா !

ஐ.பி.எல். 2021 கிரிக்கெட்டில் நேற்று 2-வது தகுதிச்சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணயச்சுழற்சியில்  வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடச் செய்தது. தொடக்க வீரர்களான பிரித்வி ஷா (18), தவான் (36) ஆகியோர் ஓரளவிற்கு ஓட்டங்கள் அடித்தனர். ஆனால் தவான் 39 பந்துகளை எடுத்துக் கொண்டார். அதன்பின் வந்த ஸ்டாய்னிஸ் 23 பந்தில் 18 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ரிஷாப் பண்ட் 6 ஓட்டங்களிலும் ஹெட்மையர் 17 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஷ்ரேயாஸ் அய்யர் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 27 பந்தில் 30 ஓட்டங்கள் அடிக்க டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ஓட்டங்கள் எடுத்தது. கொல்கத்தா அணியில் வருண் சக்ரவர்த்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 136 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான ஷுப்மான் கில், வெங்கடேஷ் அய்யர் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 12.2 ஓவரில் 96 ஓட்டங்கள் குவித்தது. அரைசதம் அடித்த வெங்கடேஷ் அய்யர் 41 பந்தில் 55 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களால் இவர்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை.
அடுத்து ஷுப்மான் கில் உடன் நிதிஷ் ராணா ஜோடி சேர்ந்தார். அணியின் ஸ்கோர் 16 ஓவரில் 123 ஓட்டங்களாக இருக்கும்போது நிதிஷ் ராணா 12 பந்தில் 13 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அப்போது கொல்கத்தா அணிக்கு 4 ஓவரில் 13 ஓட்டங்களே தேவைப்பட்டது.
ஷுப்மான் கில் 46 பந்தில 46 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கடைசி இரண்டு ஓவரில் 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
19-வது ஓவரை அன்ரிச் நோர்ஜோ வீசினார். இந்த ஓவரில் 3 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் நோர்ஜே. இதனால் கடைசில் ஓவரில் 7 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
அஷ்வின் கடைசி ஓவரை வீசினார். முதல் பந்தில் திரிபாதி ஒரு ஓட்டம் அடித்தார. 2-வது பந்தில் ஓட்டம் எடுக்கவில்லை. 3-வது பந்தில் ஷாகிப் அல் ஹசன் ஆட்டமிழந்தார். 4-வது பந்தில் சுனில் நரைன் ஆட்டமிழந்தார். இதனால் கடைசி 2 பந்தில் 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 5-வது பந்தை திரிபாதி சிக்சருக்கு தூக்கினார். இதனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 136 ஓட்டங்கள் எடுத்து டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.