20

20

“அரசின் மீது மக்கள் அதிருப்தி. இப்போதைக்கு மாகாணசபை தேர்தல் இல்லை.” – ஆளுங்கட்சி உறுப்பினர் ஜெகத் குமார

அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதால் மாகாண சபை தேர்தலை இந்த நேரத்தில் நடத்த வேண்டாம் எனஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு மேலும் பேசிய அவர் ,

அரசாங்கம் மீது மக்கள் விரக்தியிலும் குழப்பத்திலும் உள்ளனர். எனவே இந்த நேரத்தில் தேர்தலை நடத்த முடியாது.அரசாங்கம் எடுத்த முடிவுகளை மக்கள் உணர்ந்து கொள்ள இன்னும் ஏழு முதல் எட்டு மாதங்கள் ஆகும், அரசாங்கம் எடுத்த முடிவுகளுக்கு மக்கள் உடன்படுவார்கள் என்று நினைக்கிறேன்.

எனவே அந்த நேரத்தில் தேர்தலை நடத்தி நாம் வெற்றி பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி அமெரிக்க மருத்துவ விஞ்ஞானிகள் சாதனைகள் !

அமெரிக்காவின் நியூயோர்க் நகரைச் சேர்ந்த என்.ஒய்.யு லங்கோன் மருத்துவமனையில் மூளைச் சாவடைந்த ஒரு நபரின் சிறுநீரகம் செயலிழக்கும் நிலையில் இருந்தது. அவருடைய குடும்பத்தினரின் அனுமதியைப் பெற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பன்றியினுடைய சிறுநீரகத்தை பொருத்தி சோதனை மேற்கொண்டனர்.

பன்றியின் சிறுநீரகம் அவரின் இரத்தக் குழாய்களில் இணைக்கப்பட்டு, உடலுக்கு வெளியே வைத்து மூன்று நாட்கள் வரை பராமரிக்கப்பட்டுள்ளது. சிறுநீரகம் மூளைச் சாவடைந்த நபரின் நோயெதிர்ப்பு மண்டலத்தால் உடனடியாக நிராகரிக்கப்படாமல் இயங்கியுள்ளது. சிறுநீரக செயல்பாட்டின் சோதனை முடிவுகள் “மிகவும் சாதாரணமாகத் தோன்றியது” என்று ஆய்வுக்கு தலைமை தாங்கிய மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் கூறியுள்ளார்.

மேலும் முன்னர் இருந்த சிறுநீரகத்தின் செயல்பாடு மிக மோசமானதாகவும், கெரோட்டினின் அளவு அசாதாரணமாகவும் இருந்ததாக குறிப்பிடும் அவர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு கெரோட்டின் அளவு வழக்கமான நிலைக்கு வந்துவிட்டதாகவும் தெரிவிக்கிறார்.

இது உறுப்பு மாற்று சிகிச்சையில் ஒரு மைல்கல்லாகவும், லட்சக்கணக்கானோர் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக காத்திருக்கும் நிலையில், உறுப்புகளின் பற்றாக்குறையை நீக்கும் வகையிலும் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

 

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இல்லாதாக்குவதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிப்பு !

சிறுவர்களுக்கு மரண தண்டனையை இரத்து செய்வதற்கான திருத்தப்பட்ட சட்டமூலம் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்தை நீதி அமைச்சர் அலி சப்ரி நாளை (வியாழக்கிழமை) நாடாளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளார்.

இதன்மூலம் இளந்தவறாளர்கள் (பயிற்சிப் பாடசாலைகள்) திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக முதலில் வகுக்கப்பட்டிருந்த 18 என்ற வயதெல்லை 18-22 எனத் திருத்தப்படுகிறது. பாலியல் நடுநிலையைப் பேணுவதும் இச்சட்டத்திருத்தத்தின் நோக்கமாகும்.

மேலும் தண்டனைச் சட்டக்கோவையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தத்தின் ஊடாக பதினெட்டு வயதுக்கு உட்பட்டவர்களுக்கெதிராக மரண தண்டனை வழங்குவதற்குப் பதிலாக தடுத்து வைத்தல் நிறுவனமொன்றில் தடுத்துவைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன.

பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிராக தொடரும் வன்முறைகள் – முழுமையாக எரிக்கப்பட்ட இந்துக்களின் வீடுகள் !

பங்களாதேஷில் இந்துக்கள் குறைவான தொகையில் வாழ்ந்து வருகின்றனர்.  இதனால் அவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தப்படுகிறது. இதில் ஏராளமானோர் ஏற்கனவே கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வாரம் பங்களாதேஷின் குமிலா என்ற இடத்தில் துர்கா பூஜை நடந்தது. அப்போது ஒரு பிரிவினர் அவர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். இதில் 6 பேர் கொல்லப்பட்டனர். கோவில் சேதப்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் மீண்டும் இந்துக்கள் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலைநகரம் டாக்காவில் இருந்து 255 கி.மீட்டர் தூரத்தில் பிர் காஞ்ச் உபசிலா என்ற கிராமம் உள்ளது. இது மீனவ கிராமம் ஆகும். அங்கு வசிக்கும் அனைவரும் இந்துக்கள் ஆவர். அவர்கள் இஸ்லாம் மதத்தை அவமதித்ததாக பேஸ்புக் மூலமாக தகவல் பரவியது.

இதையடுத்து பக்கத்து பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் அந்த கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 20 வீடுகள் எரிந்து சாம்பல் ஆகின. மேலும் 66 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.

ஏராளமானவர்கள் மீது தாக்குதலும் நடந்தது. இதையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு தப்பி ஓடினார்கள். இது பற்றிய தகவல் கிடைத்ததை அடுத்து தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டார்கள். இந்த கலவரம் தொடர்பாக 52 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதற்கிடையே பங்களாதேஷில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுவதற்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவு செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘மத நம்பிக்கைகளுக்கு மதிப்பு அளித்து வங்காள தேசம் செயல்பட வேண்டும். அவர்கள் விழாக்கள் நடத்துவதற்கு ஆதரவாக இருக்க வேண்டும். இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடப்பதை கண்டிக்கிறோம்’’ என்று கூறப்பட்டுள்ளது.

கிராமத்துக்குள் நுழைந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேரை கொன்று குவித்த பயங்கரவாதிகள் – நைஜீரியாவில் சம்பவம் !

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவர்களை ஒடுக்க முடியாமல் ,ராணுவம் போராடி வருகிறது. இந்த அசாதாரண சூழலை பயன்படுத்தி அங்கு மேலும் பல்வேறு பயங்கரவாத குழுக்கள் உருவாகியுள்ளன. இவர்கள் கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று குவிப்பதோடு, கொள்ளை மற்றும் வழிப்பறி சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வடமேற்கு மாகாணம் சோகோட்டோவில் உள்ள கோரோனியோ நகருக்குள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பயங்கரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதலை நடத்தியதில் 30 பேர் கொன்று குவிப்பட்டனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள் நேற்று முன்தினம் சோகோட்டோ மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்துக்குள் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

மோட்டார் சைக்களில் வந்த 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கிராம மக்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளுக்கு பயந்து மக்கள் வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டபோதிலும், பயங்கரவாதிகள் கதவுகளை உடைத்து வீடுகளில் இருந்தவர்களை தரதரவென வெளியே இழுத்து வந்து சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.

பயங்கரவாதிகளின் இந்த அட்டூழியத்தால் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

“நாளை பாடசாலை வராத ஆசிரியர்களை எப்போதும் பாடசாலைக்குள் நுழையவிடமாட்டேன்.” – வடமேல்மாகாண ஆளுநர்

21ஆம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் எனவும் அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில்லை எனவும் வடமேல்மாகாண ஆளுநர் ராஜ கொலுரே அறிவித்துள்ளார்.

கல்வியமைச்சின் முடிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பான அதிகாரி என்ற அடிப்படையிலும் ஆளுநர் என்ற அடிப்படையிலும் 21ஆம் திகதி பாடசாலைக்கு கடமைக்கு திரும்பாத ஆசிரியர்களின் சம்பளத்தை இடைநிறுத்தி வைப்பதற்கு தீர்மானித்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட பின்னர் 25 ம் திகதி பாடசாலைக்கு வருபவர்களையும் அனுமதிக்கப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

“நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.” – மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல் !

“ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.” இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் நாம் முன்வைத்துள்ளோம். முன்னைய ஆட்சியில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தத் தான் முயற்சிகளை எடுத்தும் ஏனையவர்கள் அதற்கு இடமளிக்கவில்லை.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள் குறித்து எம்மால் திருப்தியடைய முடியாதுள்ளது. நாட்டு மக்கள் தமது அத்தியாவசிய மற்றும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் தமக்கான நியாயம் கேட்டு போராடுகின்றனர். விவசாயிகள் உரம் தருமாறு கோரிக்கையை முன்வைத்துள்ளனர். மரக்கறி உற்பத்தியாளர்கள் தமது விளைச்சலுக்கு ஏற்ற விலை இல்லை எனக் கவலைப்படுகின்றனர். ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தமக்கான கொடுப்பனவுகள் வேண்டும் எனக் கேட்டு நிற்கின்றனர். மக்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதாக அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

அரசு இது குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும். நாமும் ஆளும் கட்சிக்குள் இருக்கும் முக்கிய பங்காளிக் கட்சியாக அரசுக்கு நிலைமைகளை எடுத்துக்கூறி வருகின்றோம்” என்றார்.

அனுராதபுரத்தில் ஜனாதிபதி கோத்தாபாயவின் உருவப்படம் மீது தாக்குதல் !

அனுராதபுரம் – பதவியா பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் ​​ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உருவப்படம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகச் சிங்கள ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அனுராதபுரத்தில் ஜனாதிபதியின் உருவப்படம் மீது தாக்குதல்! - தமிழ்வின்

விவசாயம் செய்வதற்கு இரசாயன உரங்கள் கோரி அனுராதபுரத்தில் பதவியா பகுதியில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் உருவப்படம் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதேவேளை, அம்பாறையில் நாமல்கம பகுதியில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தின் போது, ​​ஜனாதிபதி உடையணிந்த வந்த ஒருவர் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

திடீரென அதிகரித்த கடவுச்சீட்டு பெறுவோரின் எண்ணிக்கை – உடனடியாக நிறுத்தப்பட்ட கடவுச்சீட்டு வழங்கும் நடவடிக்கை !

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.இதற்கு முன்னர் ஒரு நாள் சேவையின் கீழ் சேவை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரமாக காணப்பட்டதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனினும், நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டதன் பின்னர், ஒரு நாள் சேவையின் கீழான விண்ணப்பங்களின் எண்ணிக்கை 1,500 ஐ கடந்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.அதற்கமைய, கொழும்பிலுள்ள பிரதான காரியாலயத்தில் கடந்த 10 நாட்களுக்குள் ஒரு நாள் சேவையை 12,158 பேர் பெற்றுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் சாதாரண சேவையின் கீழ் 11,242 பேர் கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இவற்றுக்கு மேலதிகமாக மாத்தறை, கண்டி, வவுனியா மற்றும் குருணாகல் ஆகிய பகுதிகளிலுள்ள பிராந்திய அலுவலகங்களில் கடந்த 10 நாட்களுக்குள் 10,145 பேர் சேவையை பெற்றுக் கொண்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

கடவுச்சீட்டு பெறுவதற்கான ஒக்டோபர் மாத முற்பதிவுகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்தநிலையில் எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான தினங்கள் மற்றும் நேரங்களை பொதுமக்கள், முற்பதிவு செய்து கொள்ளமுடியும் என்றும் குறிப்பிட்டார்.

குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் திகதி மற்றும் நேர முற்பதிவு வசதியின் கீழ், கடந்த சில நாட்களில் நாளாந்தம் 1,000 கடவுச்சீட்டுக்கள் வழங்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். கடந்த திங்கட்கிழமை (18) மாத்திரம் ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளின் கீழ், கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான 4,700 விண்ணப்பங்கள் கிடைத்ததாகக் குறிப்பிட்ட அவர், கடவுச்சீட்டு பெறும் போக்கு இவ்வாறு இருப்பதன் காரணமாக திணைக்களம் கடுமையான சிரமத்துக்கு உள்ளாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதத்தில் இருந்து இந்த நெரிசல் குறையும் என்றும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.

“யாழில் சட்டவிரோத மணல்கொள்ளையில் பொலிஸார்.” – பருத்தித்துறையில் எம்.ஏ.சுமந்திரன் !

வடமராட்சி கிழக்கில் காவல்துறையினருடன் இணைந்தே சட்டவிரோத மணல் கொள்ளை இடம்பெற்று வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இன்றைய தினம் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட பின் கருத்து தெரிவிக்கும் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த அவர்,

நீண்ட நாட்களாக சட்டவிரோதமான மணல் கொள்ளை இந்த பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. குறிப்பாக நான் ஒரு முறை எனது வாகனத்தில் வரும் போது கடத்தல்காரர்கள் என்னை கண்டதும் தமது வாகனத்தை திருப்பிக் கொண்டு சென்றதை நான் நேரடியாக கண்டேன்.

அதேபோல் இப்பகுதி மக்கள் மிகவும் அச்சம் அடைந்துள்ளார்கள் அதாவது சட்டவிரோத மணல் அகழ்வு தனியார் காணிகளில் இடம்பெற்று வருகின்றது.

சட்டவிரோதமாக மணல் அகழ்வு தொடர்பில் காவல்துறையினரிடம் தகவல் வழங்கும் போது அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக கூறுகிறார்கள் ஆனால் அவ்வாறு முறையிடும்போது மணல் கடத்தல்காரர்களிடமிருந்து காவல்துறையினரிடம் முறைப்பாடளித்தவர்களுக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவ்வாறு தான் தற்போதைய நிலை காணப்படுகின்றது. எனவே காவல்துறையினருடன் இணைந்து இந்த சட்டவிரோத மணல் கொள்ளை ஈடுபடுவது என்பது நிரூபணமாகின்றது. எனவே இந்த குறித்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.