04

Monday, December 6, 2021

04

16 வயது சிறுவன் கார் ஓட்டியதால் வந்த விபரீதம் – ஒருவர் பலி . நால்வர் படுகாயம் !

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில் வெலிசர பொது மயானத்துக்கு அருகில் இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து காயடைந்தவர்கள் ராகம போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பிலிருந்து நீர்கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு காரொன்று வீதியை விட்டு விலகி, எதிர் திசையில் பயணித்த இரு மோட்டார் சைக்கிள், முச்சக்கரவண்டி மற்றும் காரொன்றின் மீதும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பதினாறு வயது இளைஞன் செலுத்திய காரொன்றே இந்த விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பாக மஹபாகே பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

“மகிந்தராஜபக்ஷ அரசியலிலிருந்து விலக வேண்டும்.” – அமைச்சர் வாசுதேவ நாணயக்கார

கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான அரசில் பல கட்சிகள் அங்கத்துவம் பெற்றுள்ள நிலையில் ராஜபக்ஷக்களுடைய நடவடிக்கைகள் பங்காளிக்கட்சி தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றது. முக்கியமாக அரசின் நிலை தொடர்பில் விமல் வீரவங்ச , மைத்திரிபால சிறீசேன, வாசுதேவநாணயக்கார ஆகியோர் தொடர்ச்சியாக அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் அரசின் செயற்பாடுகள் தொடர்பில் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார தெரிவிக்கும் போது அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்த போது ,

அரசாங்கம் ஒரு திசையில் செல்கிறது, பதினொரு சகோதர கட்சிகளான நாங்கள் வேறு திசையில் பயணிக்கிறோம். நாம் தேசியவாத இடதுசாரி திசையில் பயணிக்கிறோம்.

அரசின் திட்டம் எங்களுக்கு ஒத்து வராது. எதிர்காலத்தில் 11 சகோதர கட்சிகளும் அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டும். அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களும் ஜனாதிபதி மற்றும் நிதியமைச்சரால் எடுக்கப்படுகிறது.

மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக இருந்தாலும் அவர் அரசியல் ரீதியாக செயலிழந்துள்ளார். அவர் அரசியல் மேடையிலிருந்து விலக வேண்டும் .
அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும் மக்களின் எதிர்பார்ப்புகளை அழித்து வருவதாகவும் நாணயக்கார தெரிவித்தார்.

டமாஸ்கஸின் புறநகர் பகுதியை குறிவைத்து இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் !

சிரிய தலைநகர் டமாஸ்கஸின் புறநகரில் உள்ள ஒரு பகுதியை குறிவைத்து இஸ்ரேல் பல ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ள சிரிய அரச செய்தி நிறுவனமான சனா, இதனால் பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டதாக கூறியுள்ளது.

ஈரான் ஆதரவு போராளிகளின் இராணுவ நிலைகள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் இலக்குகளை குறிவைத்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரிய கண்காணிப்பு அமைப்பு கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, சிரியாவின் தலைநகரின் புறநகர் பகுதிகளை நோக்கி இஸ்ரேலிய ஏவுகணை தாக்குதலை நடத்தியது என்றும் இருப்பினும் அவை சிரியாவினால் தடுக்கப்பட்டன என்றும் அறிவிக்கப்பட்டது.

ஒக்டோபர் 14 அன்று, மத்திய சிரியாவில் ஈரானிய நிலைகள் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் சிரிய அரசாங்கத்துடன் இணைந்த ஒன்பது போராளிகளும் கொல்லப்பட்டனர். நாட்டின் தெற்கில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக சிரியா குற்றம் சாட்டிய சில நாட்களுக்குப் பின்னர் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.

“வவுனியாவின் வெடுக்குநாறி மலையில் பௌத்தவிகாரைகளின் சிதைவுகளே உள்ளன.” – தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம்

நெடுங்கேணி வெடுக்குநாறி மலையில் அண்மைக்காலமாகவே இந்துக்கோவில் என்றவகையில் பூசைகள் இடம்பெற்று வருகின்றது. முன்னர் பௌத்தவிகாரைகளின் சிதைவுகளே காணப்பட்டதாக தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுர மனதுங்க தெரிவித்துள்ளார்.

வவுனியாவிற்கு இன்று (04) விஜயம் செய்த அவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நெடுங்கேணி வெடுக்குநாறி மலைதொடர்பான விடயம் நீதிமன்றில் இருக்கின்றது. எனவே அந்த பிரச்சனையில் நாம் ஏனைய பணிகளை செய்யமுடியாத நிலமை ஏற்பட்டுள்ளது. ஆயினும் ஒலிபெருக்கியினை பயன்படுத்துவதற்கான அங்கிகாரத்தினை நாம் வழங்கியிருந்தோம். ஆனால் அதிலும் சில இடஞ்சல்கள் ஏற்பட்டிருப்பதை எங்களால் காணக்கூடியதாக இருக்கின்றது. அது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்று நாங்கள் சொல்லவேண்டும். குறிப்பாக அண்மைக்காலாமாகவே இந்துக்கோவில் என்ற வகையில் அங்கு பூசைகள் இடம்பெற்றுவருவதாக எம்மால் அறியமுடிகின்றது. இதற்கு முன்னர் பௌத்தவிகாரைகளின் சிதைவுகள் அங்கு காணப்படுவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. இது ஒரு முக்கியத்துவமான பிரச்சனை என்றவகையில் இனங்களிற்கிடையே பிளவை ஏற்படுத்தக்கூடாத வகையில் ஐக்கியத்தை ஏற்படுத்தும் வண்ணம் இந்த விடயத்தை பார்க்கவேண்டும். அந்த வகையில் இது தொடர்பில் அவதானம் எடுத்து பொதுமக்களுக்கான ஏற்பாடுகளை செய்வதற்கான ஒழுங்குகளை நாம் செய்வோம்.

இலங்கையில் எந்த ஒரு பிரதேசத்திற்கும் சென்று குடியிருப்பதற்கான தகுதி ஒவ்வொரு நபருக்கும் இருக்கின்றது. அதில் எந்தத்தடையும் இல்லை. இங்கு முன்னெடுக்கப்பட்ட அகழ்வுகள் மூலம் பௌத்தவிகாரை இருந்திருப்பதற்கான எச்சங்களை நாம் காண்கின்றோம். அதேபோல இந்து சமயத்திற்குரிய சில விடயங்களையும் அங்கு காண்கின்றோம். இலங்கையில் பௌத்த விகாரைகள் அமையப்பெற்றுள்ள இடங்களில் இந்துக்கடவுள்களுக்கான பூசைகளும் இடம்பெற்றுவருவதை அனைவரும் அறிவீர்கள்.

எனவே அவ்வாறு இன ஐக்கியத்தோடு இருக்கும் நடைமுறைகளையும், செயற்ப்பாட்டையும் எதிர்காலத்தில் நாங்கள் ஏற்பாடுசெய்வோம். அந்த பிரதேசத்திற்குள் பிரவேசிப்பதனை தடுக்கவேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது. இந்த சந்தர்ப்பத்தில் அடாத்தான கட்டிட நிர்மாணங்கள் அங்கு ஏற்ப்படுத்தப்படுகின்றமை தடைசெய்யப்படவேண்டிய ஒரு விடயம்.

அத்துடன் அந்தப்பிரதேசத்தில் இருக்கக்கூடிய புராதன சொத்துக்கள் பாதுகாக்கப்படவேண்டிய தேவை இருக்கின்றது. குறிப்பாக தொல்பொருட்திணைக்களம் என்றவகையில் அந்த பொறுப்பு எமக்கிருக்கின்றது. அதற்காகவே இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றவே தவிர இனிவரும் காலங்களில் முழுமையான ஏற்பாடுகளும் சீர்செய்யப்படும் என்றார்.

வெடுக்குநாறி மலை பலகாலமாக தமிழர்களுடைய வழிபாட்டிடமாக பல காலமாக திகழ்ந்து வந்த நிலையில் அண்மைக்காலமாக தொல்லியல்திணைக்களத்தினுடைய பார்வைக்குட்பட்டு  வெடுக்குநாறிமலை பௌத்தத்துக்கானது என உரிமை கோரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

யாழில் செயற்படும் சிறுவர் வாள்வெட்டுக்குழு – 10 சிறுவர்கள் கைது !

யாழ்ப்பாணத்தில் சிறுவர்களால் நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய 10 சிறுவர்கள் யாழ்.குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ். நாவாந்துறைப் பகுதியில் அண்மையில் 14 வயது சிறுவன் மீது 10 பேர் கொண்ட அணி ஒன்று வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டது. அதில் அச்சிறுவன் காயங்களுடன் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். இது தொடர்பில் யாழ். காவல்நிலையக் குற்றத் தடுப்புப் பிரிவினரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத் தடுப்புப் பிரிவினர் சம்பவத்துடன் தொடர்புபட்டனர் என்று முறையிடப்பட்ட 10 பேரையும் நேற்றுக் கைதுசெய்தனர். இதில் கைதுசெய்யப்பட்டவர்கள் அனைவரும் சிறுவர்கள் என்ற அதிர்ச்சிச் செய்தியை காவல்துறையினர் வெளியிட்டதுடன் அவர்கள் அனைவரும 14 தொடக்கம் 17 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், அவர்கள் யாழ். நகரம், நாவாந்துறை, அத்தியடி, நல்லூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து வாள், கைக்கோடாரி என்பனவும் காவல்துறையினரால் மீட்கப்பட்டன எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

யாழில் இளைஞர்களின் அடாவடி மற்றும் வாள்வெட்டு வன்முறைகள் கட்டுப்பாடு இன்றி நடைபெற்றுவரும் நிலையில் சிறுவர்கள் கூரிய ஆயுதங்களை உடமையில் வைத்து குழுவாக இணைந்து இப்படிப்பட்ட வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டமையானது காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த கைது நடவடிக்கைகள் யாழ். குற்றத் தடுப்புப் பிரிவு பதில் பொறுப்பதிகாரி குமாரபேலி தலைமையில் காவல்துறை உத்தியோகத்தர்களான விஜயகாந்த், கபில்தாஸ், செனரத்னா, கஜன் போன்றவர்களால் மேற்கொள்ளப்பட்டன.

கைதுசெய்யப்பட்ட சிறுவர்கள் அனைவரும் சிறுவர் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

அடம்சம்பாவின் சுழலில் சுருண்டது பங்களாதேஷ் – இலகுவான வெற்றியை சுவைத்தது ஆஸி !

நடைபெற்றுவரும் டி20 உலக கோப்பையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ‘குரூப் 12’ முதல் பிரிவில் இடம் பிடித்துள்ள ஆஸ்திரேலியா- பங்களாதேஷ் அணிகள் மோதின.
துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் நாணயச்சுழற்சியில் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட செய்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆடம் சம்பாவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேசம் அணி 15 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 73 ஓட்டங்களில் சுருண்டது.
தொடக்க வீரர் நைம் 16 பந்தில் 17 ஓட்டங்கள் சேர்த்தார். அணி தலைவர்  மஹமதுல்லா 18 பந்தில் 16 ஓட்டங்களும், ஷமிம் ஹொசைன் 18 பந்தில் 19 ஓட்டங்களும் சேர்த்தனர். மற்ற வீரர்கள் ஒற்றையிலக்க ஓட்டத்தில் வெளியேறினர். நான்கு பேர் ஓட்ட கணக்கை தொடங்க முடியாமல் ஓட்டமெதுவுமின்றி ஏமாற்றம் அளித்தனர்.
ஆஸ்திரேலியா அணி சார்பில் ஆடம் சம்பா 4 ஓவரில் 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஐந்து விக்கெட்டுகள் சாய்த்தார். ஸ்டார்க், ஹேசில்வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் 73 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் டேவிட் வார்னர் 14 பந்தில் 18 ஒட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து மிட்செல் மார்ஷ் களம் இறங்கினார். ஆரோன் பிஞ்ச் அதிரடியாக விளையாடி 20 பந்தில் 4 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 40 ஓட்டங்கள் விளாசினார். மிட்செல் மார்ஷ் 5 பந்தில் 2 பவுண்டரி, 1 சிக்சருடன் 16 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலியா 6.2 ஓவரில் 2 விக்கெட்டை மட்டுமே இழந்து 78 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

“தன்மானம் இருப்பின் எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள்.” – சஜித் பிரேமதாஸ சவால் !

“தன்மானம் இருப்பின் அரசுக்குள் இருந்துகொண்டு நாடகமாடாமல் உடனடியாக வெளியேறுங்கள். எம்முடன் இணைந்து நாட்டைப் பாதுகாக்கப் போராடுங்கள்.” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மொட்டு கூட்டணியிலுள்ள பங்காளிக் கட்சிகளுக்கு சவால் விடுத்துள்ளார்.

கேகாலையில் நேற்று நடைபெற்ற அரச எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே சஜித் மேற்கண்டவாறு சவால் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது:-

“தவறிழைத்துவிட்டோம், அன்று சித்திரம் வரைந்த இளைஞர்கள் இன்று நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் என இன்று சிலர் கவலை வெளியிடுகின்றனர். இவ்வளவு நாள் நித்திரையிலா இருந்தார்கள்?

வடக்கையும், தெற்கையும் விற்கும்போது பங்காளிகள் அரசுக்குள்தான் இருந்தார்கள். நாட்டைக் காட்டிக்கொடுக்கும் அமைச்சரவைப் பத்திரம் வரும்போது அமைச்சரவையிலும் இருந்தனர். எனவே, தற்போது நாடகமாடுகின்றனர்.

தன்மானம் இருப்பில் அரசிலிருந்து வெளியேறி, நாட்டைப் பாதுகாக்க எம்முடன் இணைந்து போராடுமாறு சவால் விடுக்கின்றேன்” என்றார்.

“இலங்கை மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.” – சிவஞானம் சிறீதரன் குற்றச்சாட்டு !

“இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கிற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது.” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்பட்ட திறன் வகுப்பறைகளைக் கொண்ட முன்பள்ளியினை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலே முன்பள்ளிகளுக்கு என்று ஒரு திடமான கொள்கை இல்லை முன்பள்ளிகளுக்கு மட்டுமல்ல கல்வியில் கூட கௌரவமான உறுதியான நீடித்து நிலைத்திருக்கக்கூடிய கல்விக் கொள்கை இல்லாததால்தான் இலங்கையின் பொருளாதாரம் அதாளாபாளத்ததுக்குள் தள்ளப்பட்டுள்ளதோடு குடும்ப அரசியல் மயப்படுத்தப்பட்ட சூழலுக்குள்ளும் தள்ளப்பட்டு இலங்கையின் பொருளாதாரம் இன்று நாணயத்தாள்களை அச்சிடுகின்ற பொருளாதாமாக மாறியிருக்கிறது.

நாளாந்தம் நாணயத்தாள்களை அச்சிடுவதும் நாளுக்கு நாள் விலைவாசிகளை அதிகரிப்பதுமாகத்தான் இந்த அரசாங்கத்தின் செயற்பாடு மாறியிருக்கிறது. இது ஒரு நாட்டுக்கு ஆரோக்கியமானது இல்லை. ஒரு நாட்டினுடைய வரவு செலவுத் திட்டம் குறையில் இருப்பதும் அரசாங்கத்திடம் இருக்கவேண்டிய வெளிநாட்டு இருப்புக்கள் இல்லாது இருப்பதும் இந்த நாடு பட்டினியை நோக்கி வறுமையை நோக்கி நகர்ந்து செல்வதையே வழிகாட்டி நிற்கின்றது.

அதேபோல் இன்று இலங்கையில் 2023 ஆம் ஆண்டு ஜனவரியில் அதிகமான பட்டினியை நோக்கி இந்த நாடு நகர போகிறது என்பதனை இந்த நாட்டினுடைய குடும்ப அரசியலில் அங்கத்தவராக இருக்கின்ற சமல் ராஜபக்ஷ அவர்கள் நேற்று கூறியிருக்கிறார். நீங்கள் சோறு இல்லை என்றால் மரவள்ளிக்கிழங்கை சாப்பிடுங்கள் என்று அறுபதாம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வார்த்தைகளை 70 ஆண்டு காலப்பகுதியில் நடந்த சம்பவங்களை மீண்டும் அவர் நினைவூட்டி இருக்கிறார்.

ஆகவே எவ்வளவு தூரம் உலகம் வளர்ந்திருக்கிறது நாகரீகம் வளர்ந்திருக்கிறது. நாடுகளினுடைய பொருளாதாரம் வளர்ந்து இருக்கிறது. ஆனால் இலங்கையில் மட்டும் மக்களை வதைக்கிற மக்களுக்கு விரோதமான செயற்பாடுகளை அரசாங்கம் செய்து கொண்டிருக்கிறது. கிளிநொச்சியில் இன்று ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கிற வெதுப்பகங்கள் கூட்டுறவுச் சங்கங்களின் செயற்பாடுகளை இன்றுதான் ஆரம்பிப்பது போன்று தென்னிலங்கையில் இருந்து வந்த அரசியல்வாதிகளால் படம் போடப்படுகிறது.

பொருளாதாரத் தோல்வியின் விளிம்பில் உள்ள இந்த அரசாங்கம் தன்னை இயங்கும் நிலையில் உள்ளது போன்று காட்டவே இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்தார்.

வட்டுக்கோட்டை என்ன சாதி வெறியர்களின் கோட்டையா? : தேசம் வித்தியா

வட்டுக்கோட்டை – தமிழர்களின் சுயநிர்ணயத் தீர்மானத்துக்கு மட்டுமல்ல சாதிய அடக்குமுறைக்கும் பெயர் போன இடமாக மாறியுள்ளது. சாதியம் என்பது தமிழர்களில் ஆழாமாக வேரூன்றிப் போயுள்ள ஒன்று. அதிலும் யாழ்ப்பாணத்தாரிடம் அதன் தாக்கம் மிக அதிகம். பொதுவாக யாழ்ப்பாணத்தவர்கள் படித்தவர்கள் என்று சொல்லப்படுவது வழமை. ஆனால் அந்த மேதைகளிடம் கூட இந்த விடயத்தில் பகுத்தறிவை காண்பது மிக அரிது. ஏனெனில் சாதியத்தை இந்த சிந்தனை யுகத்தில் கூட வளர்த்தெடுத்ததில் பெரும் பங்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கும் உண்டு. நீண்ட காலத்திற்குப் பின்பு சாதிய அடக்குமுறை பேசபொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் வட்டுக் கோட்டை முதலியார் கோவில் பகுதியில் இடம்பெற்ற ஒரு வாள்வெட்டு சம்பவம்.

கடந்த செப்ரெம்பர் மாதம் 19ஆம் திகதி வேலை முடித்து வீடு திரும்பிய நளவர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை மது போதையிலிருந்த வெளாளம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் வட்டுக்கோட்டை பேபி கடை முடக்கில் வைத்து சைக்கிளுடன் தள்ளியுள்ளனர். குறித்த இளைஞன் ஏன் என்னைத் தள்ளினீர்கள் என்று கேட்டதற்கு கள்ள குளை முறித்ததாக சாதிப் பெயரைச் சொல்லி திட்டியுள்ளார்கள். அதற்குள் தாக்குதலுக்கு உள்ளான இளைஞன் பீதியில் அவரது தந்தைக்கு அறிவித்து, அவரை வரவழைத்தார். தந்தை குறித்த இடத்திற்கு விரைந்து தன்னிலும் வயது குறைந்தவர்கள் என்றும் பாராமல் குறித்த இளைஞர்களிடம் மன்றாடி தன் மகனை அழைத்துச் சென்றுள்ளார். அவ்வாறு இருந்தும் மதுபோதையிலிருந்த வெளாம் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முதலியார் கோவிலடிப் பகுதியில் உள்ள குறித்த நபரின் வீட்டுக்கு வாளோடு சென்று அட்டாகசம் புரிந்ததுள்ளனர். அந்த சம்பவத்தில் முதலில் தாக்குதலுக்குள்ளான இளைஞனின் தந்தைக்கு வாளால் வெட்ட முயற்சிக்க அவர் தனது கைகளால் தடுத்ததில் அவரது கைவிரல் துண்டிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் குறித்த இளைஞர் குழு தகாத வார்த்தைகளால் அங்கிருந்த பெண்கள், சிறுவர்களைத் திட்டி அங்கிருந்த நளவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகளிலும் தாக்குதல்களை மேற்கொண்டு பெரும் அடாவடி புரிந்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இது தொடர்பில் பதிவிட்டோரில் பலர் நீண்ட காலத்திற்கு பின்பு சாதிக்கலவரம் தலை தூக்கியுள்ளது என்ற தொணியில் பதிவிட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது. முதலில் அங்கு நடந்தது கலவரம் அல்ல. அது சாதிய அடக்குமுறை. அது ஒன்றும் மீண்டும் தலை தூக்கவில்லை. காலம் காலமாக அந்த மக்கள் மீது அரங்கேற்றப்பட்டு வருகின்றது. குறித்த சம்பவம் ஊடகங்களாலும் விதை குழுமம் போன்ற சமூக மட்ட அமைப்புகளாலும் வெளிச்சத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

சாதியம் யாழ்ப்பாணத்தின் சகல இடங்களிலும் இருந்தாலும் கூட அது திரைமறைவிலேயே உள்ளது. திருமணம் போன குறித்த சில விடயங்களில் அது வெளித்தெரியும். ஆனால் வட்டுக்கோட்டை அதை அண்டிய பகுதிகள், வரணி, புத்தூர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் மிக அதிகம். எடுத்துக்காட்டாக சில வருடங்களுக்கு முன்பு புத்தூரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் வாழும் கலைமதிக் கிராம குடியிருப்பு பகுதிக்கு அண்மையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்படாமலிருந்த மயானத்தை புனரமைத்து பயன்படுத்துவதற்கு ஒடுக்கும் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் முனைந்தனர். நீண்டதொரு போராட்டத்தின் ஊடாகவே அந்த முயற்சி தடுத்துக்கப்பட்டது.

வட்டுக்கோட்டைப் பகுதியில் சமூகத்தில் தம்மை உயர்ந்தவர்கள் என்று கூறிக்கொள்ளும் சமூகத்துக்கும் ஒடுக்குமுறைக்குள்ளாகும் சமூகத்துக்கும் இடையில் வன்முறைச் சம்பவங்கள் அடிக்கடி இடம்பெறும். குறிப்பாக இந்த அடக்குமுறையாளர்கள் முட்டையில் மயிர் பிடுங்குவது போல ஏதாவது ஒரு சம்பவத்தை இழுத்து வைத்து சண்டைக்கு போவார்கள் என்கின்றார் மாவடியைச் சேர்ந்த சிறி.

குறிப்பாக அங்குள்ள அரச பாடசாலைகளில் கல்வி கற்கும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாறான சாதிய அடக்குமுறைக்கு அதிகம் உள்ளாக்கப்படுகின்றனர். உயர்சமூகம் என்று கூறிக்கொள்ளும் அடக்குமுறையாளர்களால் ஒடுக்கப்பட்ட சமூகத்தைப் பற்றி மிகத் தவறான விம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. எவ்வாறு தமிழ் சினிமா முஸ்லீம் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதோ அது போன்றே ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை வன்முறைளார்களாகவும், குற்றச் செயல்களில் ஈடுபடுவோராகவும் ஒரு விம்பத்தை இவர்கள் கட்டவிழ்த்துவிடுகின்றனர். இதனால் சமூகம் இவர்களைச் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் விளைவால் பாடசாலைகளிலும் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் பல்வேறு சிக்கல் நிலைகளை எதிர்கொள்கின்றனர்.

இது தொடர்பில் வட்டுக்கோட்டைப் பிரதேசத்திலுள்ள ஓர் அரச பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் தேசம்நெற்க்கு தெரிவிக்கையில், எங்களால் பள்ளிக்கூடத்துக்கு சந்தோசமா போய் வர ஏலாது. எங்களை சாதிப் பெயர் சொல்லி வெள்ளாம் அண்ணாமார் கூப்பிடுவினர். நாங்க முறைச்சுப் பார்த்தாக் கூட அடிக்க வருவினம். ரீச்சர், சேர் மார் கூட என்ன நடந்தாலும் எங்களைத் தான் பிழை சொல்லுவினம். எங்களுக்கு படிக்கவே விருப்பம் இருக்காது. இப்பிடி செய்தா யாருக்கு தான் படிக்க மனம் வரும். எங்கட இடத்தில ஓ.எல் வரைக்கும் படிக்குறதே பெரிசு” என்றார்.

அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை தேசம்நெற்க்கு கருத்து தெரிவிக்கையில், “பிள்ளைகள் எல்லோரையும் நாங்க சமமாகத் தான் பார்க்க வேண்டும். ஆனா எல்லா ஆசிரியரும் அப்படி நடத்தினமா என்டு எனக்கு தெரியல. உயர் சமூகப் பெண் பிள்ளைகளிடம் இவங்கள் கதைச்சா அதை யாரும் கண்டா பெரும் பிரச்சினை. இந்த வயசில காதல் அது இது என்டு நிறைய நடக்கும். அதை பக்குவமா யாரும் கையாளுறேல. சாதிய சொல்லி அடிக்கப் போடுவாங்கள். பள்ளிக்கூடத்தில ஒரு விளையாட்டுப் போட்டி ஒழுங்கா நடத்தி முடிக்குறது கூட பெரும்பாடு. பள்ளிக்கூட பிள்ளைகளால பிரச்சனை வருதோ இல்லையோ பார்க்க வாற பெடியள் ஏதாவது வம்மை வளர்ப்பாங்கள். உண்மேலயே இவங்க இப்பிடி சாதிய சொல்லி சொல்லி அவங்களை அவமானப்படுத்தினா அவங்களும் ஒரு அளவுக்கு மேல என்ன செய்வாங்கள்?” என்றார் கவலையோடு.

சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லி வளர்க்க வேண்டிய பாடசாலைகளிலேயே சாதிய ஒடுக்குமுறை இவ்வளவு மோசமாக இருந்தால் இது தவறு என்ற எண்ணம் எங்கு தான் பிள்ளைகள் மனதில் விதைக்கப்படும்? இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டிய என்னுமொரு விடயம் பாடசாலைகளில் ஆசிரியர்களாக பணிபுரிவோரில் பெரும்பான்மையானோர் யாழ்.பல்கலைக்கழக பட்டதாரிகள். அங்கு சாதியத்தை வளர்ப்பது எவ்வாறு என்று கற்று பாடசாலைகளில் கற்பிக்கின்றனர் என்றாலும் தவறிருக்காது. (முற்போக்காக சிந்திக்கின்ற விரல் விட்டு எண்ணக்கூடிய விரைவுயாளர்களுக்கும் மாணவர்களுக்கும் இது பொருந்தாது.)

அண்மையில் இடம்பெற்ற சம்பவம் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் குளை பிடுங்கினான் என்ற ஒரு காரணத்தை கூறியே இடம்பெற்றது. ஆனால் குறித்த இளைஞன் நான் எந்த குளையும் பிடுங்கவில்லை என்று தெளிவாக ஊடகங்களுக்கு பேட்டியளித்துள்ளான். அப்படியே அவன் குளை பிடுங்கியிருந்தால் கூட அதில் என்ன தவறு இருக்கின்றது? அதற்காக வாளெடுத்து வெட்ட போகிறார்கள் எனில் சாதி என்பது எந்தளவு தூரம் இவர்களை சுயபுத்தி அற்றவர்களாக மாற்றியுள்ளது என்று ஒரு கணம் சிந்தித்தால் தமிழ் சமூகம் எந்தளவு தூரம் மோசமான சாதி என்ற மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் உணரமுடியும்.

இதுமட்டுமல்ல வட்டுக்கோட்டையில் இந்த சாதி வெறியர்கள் ஆடும் ஆட்டம் ஒன்று இரண்டல்ல. குறிப்பாக சங்கரத்தைப் பத்திரகாளி அம்மன் கோவில் திருவிழாவுக்கு போய் அங்கு நடத்தும் கூத்துகளைப் பார்த்தாலே தெரியும். எந்தளவு சிந்தனை வளர்ச்சி குன்றிய கூட்டங்கள் என்னும் எமது சமூகத்தில் உலாவுகின்றன.

சிங்களவரிடம் சமஉரிமை கேட்டு பிரித்தானியாவில் கிளாஸ்கோவரை போர்க்கொடு தூக்கத் தெரிந்தவர்களுக்கு தங்கள் வீட்டு கோடிக்குள் தாங்கள் செய்கின்ற ஒடுக்குமுறை தெரிவதில்லை. எமது தமிழ்த் தேசியம் பேசும் கூட்டங்களுக்கு, மனித சமூகத்தை ஏற்கத் தெரியாத இப்படியொரு மந்தைக் கூட்டம் நம்மிலேயே இருப்பது கண்ணுக்கு தெரியாதா? ஏனெனில் அவர்களும் பெரும்பாலோனோர் இந்த மந்தைகளைச் சேர்ந்தவர்களே. ஏன் இப்போது நடந்த இந்த சம்பவத்தில் கூட பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் எந்த தமிழ் எம்.பியும் அறிக்கை விடவில்லை. தமிழ்த் தேசியம் பேசும் எந்தவொரு சட்டத்தரணிக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் ஆரஜாக திராணியில்லை. ஏனெனில் வாக்கு வங்கி சரிந்துவிடும் என்ற பயம்.

ஈபிஆர்எல்எப், ஈபிடிபி, சமத்துவ கட்சி மற்றும் புதிய சனநாயக மார்க்ஸிய லெனினிய கட்சி ஆகிய அமைப்புகள் ஓரளவு இடதுசாரிக்கொள்கைகளுடன் சாதி மறுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள் மத்தியில் வேலை செய்தபோதும் இக்கட்சிகள் இன்னமும் பிரதான நீரோட்டத்தில் இருந்து ஓரம்கட்டப்பட்ட நிலையிலேயே இன்றும் உள்ளனர். பிரித்தானியாவில் சட்டத்தரணியாகச் செயற்பட்ட ரங்கன் என் தேவராஜன் பாதிக்கப்பட்ட சமூகத்தை சென்று சந்தித்து சட்ட ஆலொசனைகளை வழங்கியும் உள்ளார்.

சாதிய பிரச்சனை பேசுபொருளாக மாறும் போதெல்லாம் ஒரு குழுவினம் இது தொடர்பில் கதைப்பதால் தான் பிரச்சனை கதைக்காவிட்டால் சாதிப் பிரிவினை காலப் போக்கில் இல்லாமல் போய்விடும் என்று ஒரு கதை சொல்வார்கள். அடக்குமுறைகளுக்கு எதிராக பேசுவோரையே குழப்பதாரிகளாக மாற்றி பூசி மெழுகிவிடுவார்கள்.

முதலியார் கோவிலடிப் பிரச்சினை தொடர்பில் அங்குள்ள சில படித்த தரப்பினரை தேசம்நெற் தொடர்பு கொண்டிருந்தது. அவர்களில் பெரும்பாலானோர் இப்பிரச்சினை தொடர்பில் பேச மறுத்துவிட்டனர். சாதிப் பிரிவினை தவறு என்று தெரிந்தாலும் அதை வெளிப்படையாகத் தெரிவித்தால் எங்கு தாமும் சமூகத்திலிருந்து புறந்தள்ளப்படுவோம் என்ற பயம் பெரும்பாலானோருக்கு உள்ளது. இந்த பயம் தான் சாதியம் என்னும் எமது சமூகத்தில் வேரூன்ற காரணமாக அமைகின்றது.

மேலும் வட்டுக்கோட்டையில் உயர் சமூகம் எனக் கூறிக்கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்த அரச ஊழியர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம். அவர் எமக்குப் பதிலளிக்கையில், உந்தப் பிரச்சனை பற்றிக் கதைச்சா எங்களையும் வெட்ட வருவாங்கள். இவங்கள் பெரிய ரவுடிகள். உள்ள கெட்ட பழக்கம் முழுக்க இருக்கு. வேலைக்கு போகாம வெளிநாட்டுக் காசில பெரிய பெரிய பைக்குகள் வாங்கி வாள்வெட்டு குரூப்போட சேர்ந்து திரிவாங்கள். இவங்களைப் பார்த்து சின்னப் பெடியங்களும் பழுதாப் போறாங்கள். இவங்களுக்கு சண்டை இழுக்க ஏதாவது வேணும். அதுக்கு தான் சாதிய சொல்லி அவனுகளோட வம்புக்கு போறாங்கள். இவனுகாளால ஊருக்க சமூகங்களுக்க பிரச்சினை. இவனுக மேல ஏகப்பட்ட பொலிஸ் கேஸ் இருக்கு. ஆனால் காசை கொடுத்து வெளில வந்துடுவாங்கள், பெரிய கேஸ் என்டா ஒழிஞ்சு திரிவானுகள். நிம்மதியா இருக்க ஏலாது. கோவில் திருவிழா கூட நிம்மதியா செய்ய ஏலாது. வேலை வெட்டியும் இல்லை. இவங்கள் கேசில பிடிபட்டாலும் சைக்கிள் வக்கீல் எடுக்க இருக்குறார். இதெல்லாம் நான் சொன்னன் என்டு தெரிஞ்சாலே என்னை வெட்ட வந்துடுவாங்கள்” என்றார் பீதியோடு.

இந்த சாதிய மனோநிலையிலிருந்து இன்னும் யாழ் சமூகம் விடுபடவில்லை என்பது துரதிஸ்டவசமானது. யாழ் பல்கலைக்கழத்தில் கூட ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்கள் தகுதி இருந்த போதும் உயர்நிலைகளுக்கு வருவது மிகக் கடினமானது. பல்கலைக்கழகத்தின் முதலாண்டில் யார் எவர் என்று தெரியாமல் காதலில் சிக்குபவர்கள் கூட, இரண்டாம் ஆண்டில் யார் என்ன சாதி என்பது தெரிந்ததும் காதலை முடிவுக்கு கொண்டுவந்துவிடுவார்கள். பேராசிரியர் கா சிவத்தம்பி ஏன் யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக்கப்படவில்லை? அவரைக் காட்டிலும் பேரறிஞ்ஞரான ஒரு துணைவேந்தரையா யாழ் பல்கலைக்கழகம் அன்று தெரிவு செய்தது?

அன்று யாழ்ப்பாண நகர மேயராக இருந்த செல்லன் கந்தையனை கை நீட்டி அடிக்கலாம் என்று மாநகரசபை உறுப்பினர்களை அடிக்க வைத்தது என்ன? அன்று மேயர் செல்லன் கந்தையன் மாநகரசபை உறுப்பினர்களால் பிடிக்கப்பட்ட மாட்டை அவிழ்த்துவிட்டதற்காக இரு தமிழர் விடுதலைக் கூட்டணி மாடுகளால் (உறுப்பினர்களால்) தாக்கப்பட்டார். அவர்களில் ஒருவர் தான் இப்போது சங்கரி ஐயா எப்போது போவார் கதிரை எப்போது காலியாகும் என்று பார்த்துக்கொண்டிருக்கின்றார். அன்று மேயர் செல்லன் கந்தையனை மாட்டை அவிழ்த்து விட்டதைச் சொல்லி அடித்தனர். இன்று குளை வெட்டியதாகச் சொல்லி ஒரு அப்பாவி இளைஞனை அடித்து அவனின் தந்தையின் விரலைத் துண்டித்துள்ளனர்.

அப்போதைய மேயர் செல்லன் கந்தையன் யாழ் பொதுநூலகத்தை திறந்துவைக்கக் கூடாது என்பதில் வாக்கு வங்கியே அற்ற தமிழர் விடுதலைக் கூட்டணி மிக உறுதியாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகள் அரசியல் காரணத்திற்காக யாழ் நூலகம் திறப்பதை தடுத்ததைஇ தமிழீழ விடுதலைப் புலிகளின் சாதி அரசியல் என்று இன்றும் சில மாற்றுக் கருத்துச் சாதியமான்கள் வாதிட்டு தங்கள் சாதிய சிந்தனைக்கு வெள்ளையடிக்கின்றனர்.

இப்போது யாழ்ப்பாணத்தின் சமூகப் பரம்பல் முற்றிலுமாக மாறியுள்ளது. முன்னர் ஒடுக்கும் சமூகம் 60 வீதமாகவும் ஒடுக்கப்படும் சமூகம் 40 வீதமாகவும் இருந்த நிலைமாறி ஒடுக்கும் சமூகம் பெரும்பாலும் புலம்பெயர்ந்து வெளிநாடு செல்ல அவர்களின் சனத்தொகை 40 வீதமாக வீழ்ச்சி கண்டுள்ளது. அதனால் ஒடுக்கப்படும் சமூகத்தின் சனத்தொகை 60 வீததத்தை எட்டியுள்ளது. இதே நிலையை வன்னியிலும் ஒடுக்குகின்ற தமிழர்களின் எண்ணிக்கை 40 வீதமாகவும் ஒடுக்கப்படுகின்ற மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை 60 வீதமாகவும் இருப்பதைக் காணலாம். ஆனால் வடமாகாண அரசியலில் இந்த சனத்தொகையை பிரதிபலிக்கும் விதத்தில் அரசியல் பிரதிநிதிகள் இல்லை. அரசியல், பொருளாதார, கல்வி, கலாச்சார விடயங்கள் அனைத்திலுமே ஒடுக்குகின்ற சமூகமே தொடர்ந்தும் கோலோச்சி வருகின்றது. வட்டுக்கோடை மட்டுமல்ல ஒட்டுமொத்த வடமாகாணமே ஒடுக்குபவர்களின் கோட்டையாகவே இன்னும் இருந்துவருகிறது.

“நாங்கள் முப்படையை வைத்திருந்த காலம் போய் இன்று பத்துபேருடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம்.” – இரா.சாணக்கியன் ஆதங்கம் !

“அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.” என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நேற்று மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.  இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

நாங்கள் முப்படையை வைத்துக் கொண்டிருந்த காலம் போய் இன்று பத்து பாராளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டே பேச்சுவார்த்தைக்குச் செல்லுகின்றோம். அவ்வாறு இருக்கையில் எமது பலம், பலவீனம் என்ன என்பதையும் நான் அறிந்திருக்க வேண்டும்.

இந்த நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு மக்களின் எதிர்ப்பினை சந்தித்த அரசாங்கமொன்று செயலில் இருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. உண்மையில் மிகமிகக் குறுகிய காலத்தினுள் மக்களின் எதிர்பைச் சம்பாதித்த அரசென்று சொன்னால் அது இதுவாகத் தான் இருக்கும்.

பொதுஜன பெரமுன கட்சியின் ஐந்தாவது மாநாட்டிலேயே இதனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. ராஜபக்ஷ குடும்பத்தின் மூவர் மூன்று விதமான கருத்துகளைச் சொல்லியிருந்தார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த நாட்டின் மோசமான நிலைமை குறித்த உண்மையான கருத்தை இதன் போது வெளியிட்டிருந்தார். கடந்த காலங்களிலே தாங்கள் ஒரு தனிக்கட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி, இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் அவர்களின் கட்சி என்பன மொட்டுவின் பங்காளிகள் என்பதை நேற்றைய தினம் உறுதிப்படுத்தியிருந்தனர்.

இவை அனைத்தையும் தாண்டி நாங்கள் தற்போது மட்டக்களப்பின் நிலைமை குறித்துப் பார்த்தால், மட்டக்களப்பில் பசளை இல்லாமல் விவசாயிகள் மிகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை காணப்படுகின்றது. இவ்வாறு இருக்கையில் பொங்கலுக்குப் பின்னர் விவசாயிகள் மில்லியனர்களாகப் போவதாக அலட்சியமான கதைகளையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். இதனை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். ஏனெனில் இந்த மாவட்டத்திலே விவசாயத்தை நம்பி வாழும் மக்களை மிகவும் கேவலப்படுத்தும் முகமாக பசளை இல்லாவிட்டாலும் விவசாயம் செய்ய வேண்டும், மில்லியனர்களாக ஆக முடியும் என்ற பொய்யான விடயங்களைச் சொல்வதன் ஊடாக பொருளாதாரம் தொடர்பாக அவருக்கு இருக்கும் அறிவே வெளிப்படுகின்றது.

இவர்கள் சொல்வது போல் குறைந்த விளைச்சலில் விவசாயிகள் மில்லியனர்களாக ஆகுவதாக இருந்தால் இந்த மாவட்டத்திலே மக்கள் அரிசியை விடுத்து வேறு எதையாவது சாப்பிட வேண்டும். ஏனெனில் விளைச்சல் குறையுமாக இருந்தால் நெல்லின் விலை அதிகரிக்கும் நெல் விலை அதிகரித்தால் அரிசியின் விலை அதிகரிக்கும். அரிசியின் விலை அதிகரித்தால் அன்றாடம் சாப்பிடுவதற்குக் கூட மக்கள் கஷ்டப்படும் நிலைமையே உருவாகும்.

எப்பாடுபட்டாவது விவசாயிகள் முட்டி மோதி விவசாயத்தில் ஈடுபட்டாலும், அடுத்து இருக்கும் மிக முக்கிய பிரச்சனை யானைப் பிரச்சனை. கடந்த சில நாட்களாக யானை தாக்கத்திற்குள்ளாகி எத்தனையோ பேர் மரணத்தைத் தழுவிக் கொண்டனர். இது மிகவும் கவலையான விடயம். கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களிடம் ஒரு கேள்வி. 2020ம் ஆண்டு செம்டெம்பர் மாதம் வரை கிழக்கு மாகாணத்தில் நல்லாட்சி அரசாங்கத்தினால் 670 கிலோமீட்டர் யானை வேலி அமைக்கப்பட்டது. அக்காலத்தில் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட எமது மக்களுக்கு மிக முக்கிய பிரச்சினையாக இருக்கின்ற யானை வேலி விடயத்தைச் செய்திருந்தோம். வடக்கு கிழக்கிலே சுமார் 1200 கிலோமீட்டர் வேலி அமைக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு அரசாங்கத்துடன் இருந்து மக்களுக்கு நன்மை செய்யப் போகின்றோம், கிழக்கை மீட்கப் போகின்றோம் என்று வந்தவர்களால் 2020 செம்டெம்பர் தொடக்கம் 2021 செப்டெம்பர் வரை 40 கிலோமீட்டர் யானை வேலி தான் அமைக்கப்பட்டுள்ளது. அதிலும் தமிழர் வாழும் பிரதேசம் ஒன்றோ இரண்டு தான் இருக்கின்றது. அபிவிருத்தி என்பது வெறுமனே கொங்கிறீற்றுப் பாதை போடுவதோ கிராமத்துக்கு ஒரு வேலைத்திட்டம் என்று சொல்லி காசைப் பிரித்துக் கொடுப்பதோ அல்ல. எமது மக்களின் வாழ்வாதார முன்னேற்றமே மக்களின் பொருளாதார நலனுக்கான அபிவிருத்தி என்பதை நாங்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

அந்த வகையிலே இன்று எங்கள் விவசாயிகள் உரமில்லாமல் களை நாசினிகள் இல்லாமல் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இன்று அரசாங்கத்துடன் இருக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெறுமனே தென்னங்கன்றுகளைக் கொடுத்து வளர்க்கச் சொல்லுகின்றார்கள். ஆனால், அந்தத் தென்னங் கன்றுகளுக்கு வண்டு அடித்தால் அதனைத் தடை செய்வதற்கான உரிய கிரிமி நாசினிகள் இங்கு இல்லை. எங்களுடைய மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து உங்களின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது அபிவிருத்தி அசியல் அல்ல. அண்மையில் காணி அமைச்சர் எமது மாவட்டத்திற்கு வந்த யார் யாருக்கு காணிப் பத்திரம் கொடுத்தார் என்பதை அனைவரும் அறிவார்கள். எமது மக்களுக்கு வழங்கப்படவில்லை. அதேநேரம் இயற்கைப் பசளை தயாரிப்பதற்கு காணி வழங்குவதாகச் சொல்லியிருந்தார்கள். அவை அனைத்தும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கே வழங்கப்பட்டுள்ளது.

எமது மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் சவால் விட்டார் புலம்பெயர் நாடுகளில் இருந்து நிதியைக் கொண்டு வந்து அபிவிருத்தி செய்யுமாறு, ஆனால் என்னால் கொண்டுவரப்பட்ட கனேடிய முதலீட்டுத்திட்டத்தை அபிவிருத்திக் குழுத் தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி தடை செய்ததே சிவநேசதுரை சந்திரகாந்தன் தான்.

எங்களால் கொண்டுவரப்பட்ட திட்டத்தையும் தட்டிக் கழித்து விட்டு எமது மண்ணையும் காணியையும் அபகரித்து விற்ற நீங்கள் மில்லியனர், பில்லியனர் ஆகுவதற்கு எமது மாவட்ட மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிவித்தார்.