09

Monday, December 6, 2021

09

“புரட்சிகரமான மாற்றத்தை நான் ஏற்படுத்தும் போது சில தடங்கல்களும் ஏற்படும்.” – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

“புரட்சிகரமான மாற்றத்தை மக்கள் வேண்டி நின்றனர். அதனைச் செய்யும்போது ஏற்படும் தடங்கல்கள் மற்றும் தடைகளுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும். ஆனாலும், அச்சவாலை வெற்றிகொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ  தெரிவித்துள்ளார்.

புனர்நிர்மாணம் செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கும் நிகழ்வு, மண்டாடுவ பொது விளையாட்டரங்கில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்தும் பேசிய ஜனாதிபதி,..

அன்று நாம் வழங்கிய வாக்குறுதியை அவ்வாறே நிறைவுசெய்ய முடியவில்லை. ஆனாலும், அதில் எந்தவொரு குறையையும் வைக்காது, மக்கள் தம்மீது வைத்த நம்பிக்கையைப் பாதுகாப்பதாக தெரிவித்தார்.

சேதன விவசாயம் போன்று, மீள்பிறப்பாக்கச் சக்திவலு உற்பத்திக்கான மாற்றத்தை ஏற்படுத்துவதையும் தாம் ஒருபோதும் பின்வாங்கப் போவதில்லை.

பயறு, கௌப்பி, உளுந்து, மஞ்சள்  உட்பட 16 வகையான உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வது முழுமையாக நிறுத்தப்பட்டது. இன்று அதன் பிரதிபலனை விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர். கறுவா, மிளகு, மஞ்சளுக்கான உயர் விலையை விவசாயிகள் பெற்றுக்கொள்கின்றனர். விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்ற அந்த வருமானத்தைக் குறைக்காமல் இருப்பதற்கும் நுகர்வோரைப் பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெளிவுபடுத்தினார்.

இந்நிலைமையைப் புரிந்துகொண்டு, பசுமை விவசாயச் சவாலை வெற்றிகொள்வதற்கு ஒன்றிணையுமாறு அனைத்து விவசாயிகளிடமும் கேட்டுக்கொண்ட ஜனாதிபதி, விவசாயிகள் மீதோ மக்கள் மீதோ அழுத்தங்களைப் பிரயோகித்து, இம்மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தாம் எதிர்பார்க்கவில்லை.

தாம் அதிகாரத்துக்கு வந்தவுடன், மதில்களில் சித்திரங்களை வரைந்த இளைஞர்கள் மாற்றத்தை ஆரம்பித்தனர். மேலும் பலர், கைவிடப்பட்டிருந்த வயல்களில் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டனர். அன்று வைத்த நம்பிக்கையுடன் புரட்சிகரமான மாற்றத்துக்காக மீண்டும் முன்வருமாறு ஜனாதிபதி அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.

நாடாளுமன்றிலும் தகாத வார்த்தைகளை பயன்படுத்திய இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த !

எதிரணியினருடன் ஏற்பட்ட காரசாரமான விவாதத்தில் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவை அமைதிப்படுத்தும் வகையில் செயற்ப்பட்டார்.

உர விவகாரம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியினருடன் காரசாரமான விவாதம் இடம்பெற்றது.அமைச்சருக்கு அருகில் அமர்ந்திருந்த லொஹான் ரத்வத்த எதிரணியினரை நோக்கி கூச்சலிட்டதுடன் கெட்டவார்த்தையை பயன்படுத்தியிருந்தார்.

இதன்போது அருகில் இருந்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, ரத்வத்தவின் தலையில் கைகளை வைத்து அவரை அமைதிப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

இருப்பினும் கோபத்தில் மீண்டும் மீண்டும் கடும்சொற்பிரயோகங்களை மேற்கொள்ள இராஜாங்க அமைச்சரைக் கட்டுப்படுத்த மஹிந்தானந்த அளுத்கமகே பல முயற்சிகளை மேற்கொண்டார்.

அண்மையில் லொஹான் ரத்வத்த சிறைச்சாலையில் கைதிகளை மண்டியிடவைத்து துப்பாக்கி முனையில் அச்சுறுத்திய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையர்களை விசித்திரமான விலங்குகள் என்றே சீனத்தூதுவர் கருதுகிறார்.” – சரத் பொன்சேகா

இலங்கை மக்களை விசித்திரமான விலங்குகள் என்றே சீனத்தூதுவர் கருதுகிறார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது  தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

“மிகவும் துரதிர்ஷ்டமான ஒரு விடயம் இன்று, விவசாயிகள், விவசாய நிலத்தில் அல்ல வீதியில் நிற்கின்றார்கள். அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். சீனாவின் குப்பைகளை ஏற்றிய கப்பல் ஒன்று இன்று இலங்கையை சுற்றிக்கொண்டிருக்கின்றது. சீன மக்களின் குப்பைகளைக் கொட்டுவதற்கான இடம் இலங்கை அல்ல. சீனா எவ்வளவு பெரிய நாடாக இருந்தாலும் பரவாயில்லை, அவர்களின் தாளத்திற்கு எம்மால் ஆட முடியாது. அரசாங்கமும் இதனை புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டின் கௌரவத்தை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும். இது இறையாண்மை உள்ள ஒரு நாடு. இவற்றை பாதுகாக்கும் வகையில் வெளிநாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வேண்டும்.

சீன அரசாங்கம் இந்த விடயத்தில் மிகவும் வெட்கக்கேடான முறையில் செயற்படுகின்றது. இலங்கையில் விசித்திரமான ஒரு விலங்கு இனம் வாழ்வதாகவே சீனத் தூதுவர் நினைத்துக்கொண்டுள்ளார்.

இந்த நாட்டிற்கு பாதிப்பான எந்த விடயத்திற்கும் நாம் இடமளிக்கப்போவது இல்லை. ஆகவே அவரது குப்பையுடனான கப்பலை அவரது நாட்டிற்கே கொண்டு சென்று எங்கேயாவது இறக்கிக்கொள்ளுமாறு நாம் கோரிக்கை விடுக்கின்றோம்” என்றார்.

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பதை பசில் ராஜபக்ஷவே தீர்மானிப்பார் – எரிசக்தி அமைச்சர்

எரிபொருள் விலையை அதிகரிப்பதா இல்லையா என்பது குறித்து நிதி அமைச்சரினால் தீர்மானம் எடுக்கப்படும் என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

அமைச்சில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது மண்ணெண்ணெய்க்கான கேள்வி அதிகரித்துள்ள நிலையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிதத்தர்.

மேலும் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் பாரிய வேறுப்பாடு இருப்பதால் மண்ணெண்ணெய்யை பயன்படுத்த மக்கள் முன்வந்துள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

இவ்வாறு மக்கள் பெரும் நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ள நிலையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படக் கூடாது என்பதே தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பாக இறுதி தீர்மானம் எடுக்கும் அதிகாரம் நிதி அமைச்சருக்கே இருக்கிறது என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

பதவி விலகுகிறாரா வெளிவிவகாரத்துறை அமைச்சர்..? – பேராசிரியர் ஜீ.எல் பீரிஸின் நிலைப்பாடு என்ன..?

வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ்  பதவி விலகுவதாக வெளியான தகவல்களில் உண்மை இல்லை என அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்  இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே அமைச்சு பதவியை துறக்க தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் அடிப்படையற்றது.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகேவுடன்இணக்கமாக செயற்பட முடியாது. ஆகவே வெளிவிவகாரத்துறை அமைச்சர் பதவி விலகத் தீர்மானித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் பொய்யானதாகும்.

வெளிவிவகாரத்துறை அமைச்சின் செயலாளர், வெளிவிவகார அமைச்சின் அனைத்து அதிகாரிகளும் ஒத்துழைப்புடன் செயற்படுகிறார்கள் என்றும் தெரிவித்த அவர் பிரித்தானியாவுடனான தொடர்பின் தன்மைகள் பற்றி குறிப்பிட்ட போது ,

அண்மையில் பிரித்தானியாவிற்கு மேற்கொண்ட அரசமுறை பயணம் இலங்கைக்கு சாதகமானதாக அமைந்துள்ளது. பல்துறைசார் அபிவிருத்தி தொடர்பில் பிரித்தானிய இராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டன.

பிரித்தானியா இலங்கையுடன் முதலீடு மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல துறைகளில் தொடர்பு கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளது. பிரித்தானியா ‘பிரெக்ஸிட்’ தீர்மானத்திற்கமைய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகியதை தொடர்ந்து அதற்கு சிறந்த சந்தை வாய்ப்புக்கள் அவசியமாகியுள்ளன.

பொதுச்சபை தீர்மானங்களுக்கமைய பிரித்தானியா இலங்கையுடன் பல்துறைகளில் தொடர்பு கொள்ள தீர்மானித்துள்ளது. இலங்கையில் கொரோனா தாக்கத்தின் பின்னரான பொருளாதார முன்னேற்றம், தென்னாசிய வலய நாடுகளை காட்டிலும் கொரோனா தடுப்பூசி செலுத்தலில் முன்னேற்றம், ஏனைய பொது காரணிகள் ஆகியவற்றை கருத்திற் கொண்டு பிரித்தானியா இலங்கையில் முதலீடு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்ற வேண்டுமாயின் சர்வதேசத்தின் நம்பிக்கையை வெல்வது அவசியமாகும். இலங்கை உலக நாடுகள் அனைத்தினதும் நம்பிக்கையை வென்றுள்ளது. பிரித்தானியாவின் தீர்மானம் அரசாங்கத்திற்கு சாதகமாக அமையும்.

காணாமல்போன ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுமிகள் !

கொழும்பு – வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் வீட்டிலிருந்து மாயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வாழைத்தோட்டம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

13 – 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரிகள் இருவர் மற்றும் உறவுக்கார சிறுமி ஒருவர் ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, குறித்த சம்பவம் தொடர்பில் முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் இந்த விடயம் தொடர்பில் சிறுமிகளின் பெற்றோர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வாழைத்தோட்டம் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

“அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காதீர்கள்.” – இரா.சாணக்கியன்

அரசாங்கத்தில் இருந்து கொண்டு அரசாங்கத்தினை விமர்சிக்காமல் வெளியேறிதன் பின்னர் விமர்சியுங்கள் என அரசாங்கத்தின் பங்காளிக்கட்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றிய அவர்,

“அரசாங்கத்திலிருந்து கொண்டு ஆளும் கட்சியினர் அரசாங்கத்தினை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர். அரசாங்கத்திலிருந்து கொண்டு எதிர்கட்சிக்கான வேலையினை செய்ய முடியாது. அரசாங்கத்திலிருந்து வெளியேறியதன் பின்னர் எங்களுடன் இணைந்து அந்த வேலையினை செய்யுங்கள்.

அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சு பதவிக்காகவும், சலுகைகளுக்காகவும் அரசாங்கத்தினை விமர்சிப்பதாகவே நாங்கள் நினைப்போம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருடா வருடம் வெள்ளக்காடாகும் யாழ்ப்பாணம் – நிவாரணப்பொருட்கள் கையளிப்பதுடன் முடிந்து போகும் பெருஞ்சோகம் !

யாழ். மாவட்டத்தில்  சீரற்ற காலனிலையால் 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனரென யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக யாழ்ப்பாணம்,நல்லூர், சண்டிலிப்பாய், சங்கானை,உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய், சாவகச்சேரி, பருத்தித்துறை, மருதங்கேணி பிரதேச செயலர் பிரிவுகளிலேயே அதிகமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது. இந்த தடவை பெரு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு மக்கள் இடம்பெயர்ந்த பகுதிகளே கடந்த வருடமும் வெள்ளப்பெருக்கால் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும். கடல் பகுதிகள் இல்லாத மாவட்டங்கள் கூட வெள்ளப்பெருக்கை முறையாக கட்டுப்படுத்தி அனர்த்தத்தை வெற்றிகரமாக எதிர்கொள்கின்ற நிலையில் மூன்று பக்கமும் கடல் சூழ்ந்த யாழ்ப்பாணம் வருடா வருடம் வெள்ளத்தால் பாதிக்கப்படுவது வாடிக்கையாகிவிட்டது.

ஒரு பக்கத்தில் குளங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு நகரங்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றன. மக்கள் பொறுப்பற்ற விதத்தில் குப்பைகளை வாய்க்கால்களிலும் வடிகால்களிலும் கொட்டி மூடிவிடுகின்றமையால் வடிகாலமைப்பு தொகுதிகள் முழுமையாக குப்பைகளால் நிறைந்து போயுள்ளன. நீர் போகவழியில்லாது பெரிது பெரிதாக எழுப்பப்ட்டுள்ள சுவர்கள் என இந்த வெள்ளப்பெருக்குக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள் நாம் அனைவரும் மட்டுமே.

மாநகரசபைகளும் – பிரதேசசபைகளும் மழைக்காலத்தில் மட்டுமே அறிக்கைகள் விட்டுக் கொண்டிருக்கின்றன. மக்களை பாதுமுகாக்கும் நோக்கமுடையாராயின் வெள்ளம் வருவதற்கு முன்பே இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு வருடமும் மழை வந்த பிறகே வெள்ளம் பற்றியும் சிந்திக்கிறார்கள்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இந்த வெள்ள காலகட்டங்களில் மேற்கொள்ளும்  பணிகள் அளப்பரியன. பாராட்டுதற்குரியன. ஆனால் பொருட்களை கொடுப்பதற்கு அப்பால் கடந்த வருடமும் வெள்ள காலத்தில் மக்கள் இடர்பட்ட அதே பகுதிகள் இந்த வருடமும் இடர்படுகின்றன. ஏன் இவ்வாறு குறித்த பகுதிகள் மட்டும் அனர்த்தத்துக்குள்ளாகின்றன..? அதற்கான தீர்வு திட்டங்கள் போன்றன தொடர்பில் அறிக்கைகளை தயாரித்து சம்பந்த தரப்பினரிடம் சேர்க்க வழி செய்வதுடன் அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டு வருவதற்கான நகர்வுகளையும் தன்னார்வ அமைப்புக்கள் மேற்கொள்ள வேண்டும்.

பொறுத்திருந்து பார்ப்போம் இந்த அனர்த்தத்துக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என்ன என்ன பதில்களையெல்லாம் கூறப்போகிறார்கள் என !