16

16

பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? – நாடாளுமன்றில் நளின் பண்டார கேள்வி !

நாட்டில் திடீரென ஏன் இத்தனை சோதனை சாவடிகள். பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்றத்தின் இன்றைய (16) அமர்வில் கலந்துகொண்டு தொடர்ந்து உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை எழுப்பியுள்ளார். இது தொடர்பில் மேலும் பேசிய அவர்,

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு எதுவும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதா? பிங்கிரிகமயிலிருந்து நான் பாராளுமன்றத்துக்கு வரும் வழியில் 21 பொலிஸ் சோதனை சாவடிகளை கடந்து வர வேண்டியிருந்தது. இதில் 10 இடங்களில் எனது வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தார்கள்.

பிங்கிரியவிலிருந்து பாராளுமன்றத்துக்கு வரும்வரையில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர ஏன் இத்தனை சோதனை சாவடிகளை அமைத்துள்ளார்? பாராளுமன்றம் மீது எவரும் குண்டுத்தாக்குதல்கள் நடத்த உள்ளார்களா? இல்லை என்றால் பிரபாகரன் மீண்டு வந்து குண்டு தாக்குதல் நடத்த உள்ளாரா? எதற்காக இத்தனை சோதனை சாவடிகள்? எனவும் அவர் இதன்போது கேள்வி எழுப்பினார்.

பொதுமக்களை அச்சுறுத்தி மட்டக்களப்பின் அமைதியை சீர்குழைக்கும் சுமனரத்ன தேரர் – பொலிஸார் வேடிக்கை பார்ப்பது ஏன்..?

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தொடர்ச்சியாக பொதுமக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், பொலிஸார் கைகட்டி அதனை வேடிக்கை பார்ப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் விசனம் வெளியிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளரின் அறையினை முற்றுகையிட்டு நேற்றைய தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். இதன்காரணமாக நேற்றைய தினம் பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக முடங்கியிருந்தது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு கோரியதாகவும் அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இந்த போராட்டத்தினை குறித்த மத குரு முன்னெடுத்திருந்தார்.

இந்தநிலையில் இதற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இரா.சாணக்கியன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“பிரதேச செயலாளரையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் வகையில் குறித்த மத குரு போராடிவருவதாகவம் பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கெவிழியாமடு பகுதியில் வன இலாகாவுக்குரிய காணியை விகாரை அமைப்பதற்கு மட்டக்களப்பு மங்களராம விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கோரியுள்ளார்.

அதனை வழங்குவதற்கு தனக்கு அதிகாரம் இல்லையென பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் தெரிவித்ததை தொடர்ந்தே இவர் அவரின் அறையினை முற்றுகையிட்டு போராட்டம் நடாத்தியிருந்தார்.
இதன்காரணமாக பட்டிப்பளை பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் முற்றாக நேற்றைய தினம் முடங்கியிருந்தது. பிரதேச செயலாளரையும், அரசாங்க ஊழியர்களின் நடவடிக்கைக்கு அச்சுறுத்தும் வகையில் குறித்த பிக்குவின் நடவடிக்கைகள் காணப்பட்டன.

அங்குள்ள ஊழியர்கள் வீதியில் இறங்கி குறித்த பிக்குவை கைது செய்யக்கோரி போராட்டம் நடாத்திய போதும் மக்களையும் ஊழியர்களையும் காப்பாற்ற வேண்டிய பொலிஸார் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தனர். பெண் ஒருவர் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் போது இவர்கள் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ. எமது மக்களுக்கு இவ் நாட்டில் எவ்வித பாதுகாப்பும் இல்லை வாழும் உரிமையும் இல்லை.

இவரின் இவ்வாறான செயல்பாடுகள் ஆனது எமது மாவட்டத்தில் தொடர்ந்தும் நடைபெற்றுக்கொண்டு வருகின்றது. நாடாளுமன்றத்தில் கூட இவரின் செயல்பாடுகள் பற்றி எடுத்துரைத்திருந்தேன். இவரினால் எமது மக்களும் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். தற்போது ஒரு நாடு ஒரு சட்டம் அமுல்படுத்தப்படுவது இதுதானா என்ற கேள்விக்குறி எழுகின்றது.

இவ்வாறான செயல்பாடுகளுக்கு மக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்த வேண்டும் அரச தரப்பு அரசியல்வாதிகளை நம்பி இருந்து எவ்வித பலனும் கிடைக்கப்போவதில்லை. எமது மக்களே மென்மேலும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர். எமது மக்களுக்கான பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி !

சினிமா துறையை ஒரு தொழிலாக பதிவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தீர்மானம் குறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டதுடன், இது இலங்கையின் சினிமா துறைக்கு ஊக்குவிப்பு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை பெற்றுக்கொடுக்க உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மற்றும் கைத்தொழில் அமைச்சர் இணைந்து இந்த கூட்டுப் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.

இலங்கை சினிமா துறையில் ஏராளமான தனித்துவமான திரைப்படங்கள் உருவாக்கப்பட்டுள்ள அதேநேரத்தில், இலங்கை உலகளாவிய சினிமாவிற்கு புகழ்பெற்ற ஒளிப்பதிவாளர்களை வழங்கியுள்ளதாக அந்தப் பிரேரணையிர் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் உள்ளூர் சினிமா துறையை ஒரு முக்கியத் துறையாக அறிவிக்காததன் விளைவாக, அதன் அளவும் வளர்ச்சியும் ஒரு சிறிய உள்ளூர் சந்தைக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதென்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உலகளாவிய கொரோனா தொற்றுநோயால் உள்ளூர் சினிமா துறை நெருக்கடிகளை எதிர்கொண்டது.

சினிமா துறையின் முன்னேற்றம் மற்றும் ஊக்குவிப்பின் மூலம் வாழ்வாதாரங்களின் எண்ணிக்கை, சமூக மற்றும் கலாசார, பொருளாதார மாற்றங்கள் மற்றும் சுற்றுலா மற்றும் கல்வித் துறைகளுக்கு உதவுதல் போன்ற பல நன்மைகளை அடைய முடியும் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அது கணிசமான அளவில் பொருளாதாரத்திற்கு உதவும் எனவும் பிரேரணையில் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் சினிமாவை ஒரு தொழிலாக அங்கீகரிப்பதன் மூலம் உலகின் பெரும்பாலான நாடுகளில் சினிமா துறை மேம்பட்டு வருவதையும் அவதானிக்க முடிகிறதெனவும் அதில் கூறப்படுகிறது.

11 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட அமெரிக்க ஊடகவியலாளர் விடுதலை !

இராணுவ ஆட்சி நடந்து வரும் மியன்மாரில் இணையதள பத்திரிகை ஒன்றில் நிர்வாக ஆசிரியராக பணியாற்றி வந்தவர் அமெரிக்க பத்திரிகையாளரான டேனி பென்ஸ்டா். 37 வயதான இவர் கடந்த மே மாதம் இராணுவ ஆட்சியாளா்களால் கைது செய்யப்பட்டார். அவா் மீது தவறான தகவல்களை பரப்பி வன்முறையைத் தூண்டியது, சட்டவிரோத அமைப்புகளுடன் தொடா்பு கொண்டது, விசா மோசடி போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

இது தொடா்பான விசாரணையின் முடிவில், டேனி பென்ஸ்டருக்கு 11 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த 12-ந்திகதி மியன்மார் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மியன்மாரில் கடந்த பெப்ரவரி மாதம் இராணுவம் ஆட்சியை கைப்பற்றியது முதல் அங்கு பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டு ஊடகத்தினர் மீது வன்முறை கட்டவிழத்துவிடப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வரும் நிலையில் அமெரிக்க பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில் மியன்மாரில் இருக்கும் முன்னாள் அமெரிக்க தூதர் பில் ரிச்சர்ட்சன், பத்திரிகையாளர் டேனி பென்ஸ்டரை விடுவிப்பது குறித்து இராணுவ ஆட்சியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

இதில் டேனி பென்ஸ்டரை விடுதலை செய்ய மியன்மார் அரசு ஒப்புக்கொண்டது. அதன்படி சிறை தண்டனை விதிக்கப்பட்ட 3 நாட்களுக்கு பிறகு டேனி பென்ஸ்டர் நேற்று சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவர் அமெரிக்கா செல்வதற்கும் மியான்மர் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சீவின் கப்பல் இலங்கைக்கு ஆபத்தில்லை – அரசாங்கம் அறிவிப்பு !

இலங்கைக் கடற்பரப்பில் சீனக் கப்பல் பயணிப்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அல்ல என அரசாங்கம் கூறியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

சீன கப்பலில் உரங்களை தவிர ஆயுதங்கள் ஏதும் இல்லாத காரணத்தினால் குறித்த கப்பல் கடற்பரப்பில் பயணிப்பதால் தேசிய பாதுகாப்பிற்கு பிரச்சினை இல்லை என கூறினார்.

இதேவேளை மாகாண சபைகளை முற்றாக இல்லாதொழிப்பது தொடர்பாக இதுவரை எந்த கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றும் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

இணைய வழியில் சந்தித்த உலகின் பொருளாதார வல்லரசுகளின் தலைவர்கள் – பழைய நண்பருக்கு வணக்கம் என ஆரம்பித்த சீனா !

உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா, சீனா இடையே தற்போது மோதல் போக்கு நிலவி வருகிறது. வர்த்தகம், கொரோனா வைரஸ், ஹாங்காங், தைவான் ஆகிய நாடுகள் மீதான சீனாவின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் இடையே இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு இருக்கிறது.

தென்சீன கடல் பகுதியில் சீனா அத்துமீறி செயல்படுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு இடையே சமீபத்தில் அமெரிக்காவின் வாஷிங்டனில் அமெரிக்கா- சீனா உறவுகள் குறித்த தேசிய கமிட்டி கூட்டம் நடந்தது.

இதில் அமெரிக்காவுடன் இருக்கும் கருத்து வேறுபாடுகளை களைய சீனா தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன் – சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்தநிலையில் இரு நாட்டு தலைவர்களும் காணொலி காட்சி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சீன ஜனாதிபதி கூறும்போது, “பழைய நண்பருக்கு வாழ்த்துக்கள்” என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளின் உறவுகள் மற்றும் கொரோனா தொற்று உள்ளிட்ட சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்துள்ளனர்.

ஜோபைடன் கூறும்போது, “நாடுகள் இடையேயான போட்டிகள் எளிமையாக, நேரடியானதாக இருக்க வேண்டும். அது மோதலாக மாறாமல் இருப்பதை உறுதி செய்வது சீன-அமெரிக்காவின் தலைவர்கள் என்ற முறையில் நமது பொறுப்பு என்று தோன்றுகிறது” என்றார்.

ஜின்பிங் பேசும்போது, “உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் ஒருமித்த கருத்தை உருவாக்க தீவிர நடவடிக்கைகளை எடுத்து சீனா-அமெரிக்காவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்த வேண்டும் உறவுகள் நேர்மறையான திசையில் முன்னோக்கி செல்கின்றன” என்றார்.

அமெரிக்கா-சீனா இடையே மோதல் போக்கு உள்ள நிலையில் இரு நாட்டு தலைவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணி விபரம் வெளியானது – இரண்டு இலங்கை வீரர்களுக்கு கிடைத்த கௌரவம் !

20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நேற்றுடன் நிறைவடைந்தது. இந்த முறை டி20 சாம்பியனாக ஆஸ்திரேலிய அணி மகுடம் சூடியது. நியூசிலாந்து அணி இரண்டாம் இடம் பிடித்தது.
இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் சங்கம் சார்பில், மிகவும் மதிப்புமிக்க டி20 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் ஆசிய நாடுகளை சேர்ந்த 4 வீரர்கள் மட்டுமே  இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் இந்திய வீரர்கள் மேற்கு இந்தியத்தீவுகள் அணியை சேர்ந்த வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஐ.சி.சியின் மிகவும் மதிப்புமிக்க டி20 அணியின் வீரர்கள் விவரம் வருமாறு,
1.டேவிட் வார்னர்(ஆஸ்திரேலியா)
2.ஜோஸ் பட்லர்-விக்கெட்கீப்பர்(இங்கிலாந்து)
3.பாபர் ஆசம்-கேப்டன்(பாகிஸ்தான்)
4.சரித் அசலங்கா(இலங்கை)
5.ஏடன் மார்க்ரம்(தென் ஆப்பிரிக்கா)
6.மொயின் அலி(இங்கிலாந்து)
7.வணின்டு ஹசரங்கா(இலங்கை)
8.ஆடம் ஸாம்பா(ஆஸ்திரேலியா)
9.ஜோஸ் ஹாசில்வுட்(ஆஸ்திரேலியா)
10.ட்ரெண்ட் பவுல்ட்(நியூசிலாந்து)
11.ஆன்ரிச் நார்ட்ஜே(தென் ஆப்பிரிக்கா)
12.சஹீன் அப்ரிடி(பாகிஸ்தான்)

“புதிதாக உருவாகவுள்ள சஜித் கொரோனா கொத்தணி.” – காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன

“கொரோனாவுடன் விளையாடக்கூடாது. போராட்டம் நடத்தி அரசியல் செய்வதற்கான நேரம் இதுவல்ல. எதிரணியின் போராட்டத்தால் ‘சஜித் கொத்தணி’ உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.” இவ்வாறு காணி அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-

“மக்களை வீதியில் இறக்கி, சீரற்ற காலநிலையில் அவர்களை வதைப்படுத்தி அரசியல் நடத்தும் நேரம் இதுவல்ல. நாட்டில் கொரோனா இருப்பது எதிரணி உறுப்பினர்களுக்குத் தெரியாதா? அவர்களுக்குத் தெளிவில்லை என்பதுதான் அவர்களின் நடத்தைமூலம் அறியமுடிகின்றது.

ஆரம்பத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி ஏற்பட்டது. அதன்பின்னர் புத்தாண்டு கொத்தணி உருவானது. ஆசிரியர்களின் போராட்டத்தாலும் கொத்தணி பரவியது.

சஜித்தின் போராட்டத்தில் சஜித் கொத்தணியும் உருவாகும் அபாயம் உள்ளது. எமது அரசுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலம் உள்ளது. தேர்தல் ஊடாக அரசை வீழ்த்துங்கள். மாறாக மக்களைப் பணயம் வைக்க வேண்டாம்” – என்றார்.

அரசுக்கு எதிராக கொழும்பை முற்றுகையிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் – பலப்படுத்தப்பட்ட பாதுகாப்பு !

விவசாயம் அழிப்பு, பொருட்களின் விலையேற்றம், பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும் ஐக்கிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டம் கொழும்பில் இன்று மாலை முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

“இது ஆரம்பம் மட்டுமே. மக்களின் வாழும் உரிமை உறுதிப்படுத்தப்படும்வரை போராடுவோம். உயிர்த் தியாகம் செய்வதற்கும் நாம் தயார்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சூளுரைத்தனர்.

காவல்துறை உள்ளிட்ட அரச படைகளின் பல்வேறு தடைகளுக்கு மத்தியிலும் பெருந்திரளான மக்கள் கொழும்பு நோக்கி வந்து நிவாரணம் வேண்டும், வாழ்க்கைச்சுமை குறைக்கப்பட வேண்டும், நாட்டு வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும், உரப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் எனக் கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்துக்கு முன்னால் பேரணி ஆரம்பமாகி, ஹெட் பார்க் மைதானம் வரை சென்று அங்கு கவனயீர்ப்புப் போராட்டத்துடனான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் போராட்டத்தால் கொழும்பிலும், அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

யாழ்.தென்மராட்சியில் பாதைகளை அடைத்து வைத்துள்ள தனியார் குழு – குளத்துக்கூடாக பயணம் செய்யும் மக்கள் !

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தை  நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

இராமாவில் கிராமசேவகர் பிரிவு மற்றும் தாவளை இயற்றாலை கிராமசேவகர் பிரிவின் எல்லைக்குட்பட்ட தெருவை தனியார் சிலர் அடைத்து வைத்துள்ளமையால் மக்கள் குளத்துக்கு ஊடாக தமது பயணத்தை மேற்கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கொடிகாமம் கொயிலாமனை மக்கள் கவனயீர்பு  போராட்டம்! - தமிழ்க் குரல்

இதனால் மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டை மிகுந்த சிரமத்தின் மத்தியில் மேற்கொள்கின்றனர். இடுப்பளவுக்குள்ளான குளத்து நீரிற்குள்ளால் பாடசாலைக்குச் செல்லும் துன்பியலான நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்திவரும் இவ் வீதியை தனியார் சிலர் அது தமது காணி எனத் தெரிவித்து குளத்துடன் இணைத்து வீதியையும் மறித்து வேலியினை அடைத்துள்ளனர். இதனால் சுமார் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாரிய வெள்ளத்தின் மத்தியில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.தமது வீதிக்கு உரிய நடவடிக்கை வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ் வீதியானது சாவகச்சேரி பிரதேச சபை வீதி வரைபடத்தில் குறியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.