09

09

இங்கிலாந்தில் மோசடிகள் அதிகரிக்கின்றது! தமிழர்கள் தமிழர்களையே மோசடி செய்கின்றனர்!!!

இங்கிலாந்தில் பல்வேறு விதமான மோசடிகள் தொடர்ந்து வருவதும் இந்த மோசடிகளினால் அப்பாவிகள் பலர் பாரிய இழப்புகளுக்கும் உள்ளாகி வருவதும் தொடர்கதையாகி வருகின்றது. வியாபாரம், இலாப மீட்டுவது என்ற பெயரில் ஊரையடித்து உலையில் போடும் வேலைகளில் பலர் ஈடுபட்டு வருகின்றனர். லண்டன் தமிழர்கள் சிலரும் தங்களை சமூகத் தலைவர்களாகக் காட்டிக்கொள்பவர்களும் கூட இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பணத்தை எப்படியாவது ஈட்டலாம் அதுவே தங்களது திறமை எனக்கருதும் இந்த உதவாக்கரைகள் தனிப்பட்ட பலரின் வாழ்க்கையை நாசமாக்குவதற்கு துணை போகின்றனர்.

இந்த மோசடிகளில் பெரும் இழப்பை ஏற்படுத்துவது வீட்டை வைத்து மேலதிக கடன்பெற்று முதலீடு செய்வது தொடர்பான மோசடிகள். ஹரோவில் இளம் தம்பதியினர் இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்ட சிலர் ஆதாரங்களை வழங்கி உள்ளனர். அவர்களுக்கு எதிராக தற்போது சட்ட நடவடிக்கைகளும் தயாராகி வருகின்றது. ஒரு வயதான தம்பதிகள் இவ்வாறான ஒரு முதலீட்டு திட்டத்தில் 200,000 பவுண்களை வழங்கி கடந்த சில மாதங்களாக எவ்வித வருமானத்தையும் பெறாமல் அவர்கள் இருக்கின்ற வீடே தற்போது வங்கியினால் விற்கப்படும் அபாய நிலைக்கு வந்துள்ளது. இவ்வாறு பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் வீடுகளை வாங்குவதற்கு சட்டத்தரணிகளுக்கு செலுத்தப்படுகின்ற பணத்தை ஒரு சில சட்டத்தரணிகள் கையாடல் செய்துவிட்டு தலைமறைவாகி உள்ளனர். இவ்வாறு வீட்டை வாங்கவதற்கு வாங்குபவர்களிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக 100,000 பவுண் வரை செலுத்திய தம்பதியினர் வீடும் வாங்காமல் அவ்வளவு பணத்தையும் இழந்து தொடர்ந்தும் வாடகை வீட்டில் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டு உள்ளனர்.

பப் அல்லது பார் – தவறணை நடத்துகிறோம் என்ற பெயரில் அரை நிர்வாண நடனங்களை ஏற்பாடு செய்து அவ்வாறான இடங்களில் போதைப்பொருட்களையும் கண்டும் காணாமல் அனுமதித்து இளம் சமூதாயத்தை அழிக்கும் தொழிலிலும் ஒரு சில தமிழ் தவறணை உரிமையாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

அதீதமாக ஆசைப்பட்டு இல்லாதவர்களை ஆவணங்களில் உருவாக்கி தனிப்பட்ட மோசடிகளில் ஈடுபட்டு இருந்ததையும் இழந்துகொண்டிருக்கின்றனர். இவர்கள் வீட்டையும் வைத்துக் கொண்டு அரச உதவிகளையும் எடுக்கும் பேராசையில் வீட்டை அவணங்களில் ஒருவரை உருவாக்குவது அல்லது இன்னொருவரின் பெயரில் வீட்டை மாற்றுவது போன்ற மோசடிகளும் தொடர்ந்து இடம்பெறுகின்றது. பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வருவபவர்கள் இங்குள்ளவர்களின் பெயர்களில் வீட்டை வாங்கி அந்த வீட்டில் இருந்துகொண்டே அரச உதவியை எடுப்பது போன்ற பல்வேறு மொள்ளமாரித்தனங்களிலும் ஈடுபடுகின்றனர்.

கிறடிட்காட் மோசடி மிகச் சாதாரணமான மோசடியாக இன்னமும் காணப்படுகின்றது. அண்மையில் கிங்ஸ்ரன் மருத்துவமனையில் மரணமானவரின் கிறடிட் காட்களை காணவில்லை என அவருடைய குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் கிறடிட் காட் தொலைத்துவிட்டதாக தாங்களே முறைப்பாடு செய்துவிட்டு அதனை பயன்படுத்திய சம்பவங்களும் சாதாரணமாக நடைபெற்று வருகின்றது. இவ்வாறானவர்கள் சிலர் மாட்டுப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளது.

பிரித்தானிய பிரதமரே தன்னுடை இல்லத்தைத் திருத்துவதற்கான செலவை மூடி மறைத்த மோசடி தேசிய ஊடகங்களில் இன்னமும் ஓய்ந்தபாடில்லை. இந்த நேர்மையின்மை சமூகத்தின் பல்வேறு மட்டங்களிலும் வெளிப்பட்டு வருகின்றது. முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ரம் 13 தடவைகள் பாங்கிரப்சி செய்து ஜனாதிபதியானார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மதப் படுகொலைகளுடன் சம்பந்தப்பட்டவர் என்ற குற்றச்சாட்டு இன்னமும் பலமாக உள்ளது. மோசடிகளைச் சகித்துக்கொள்கின்ற சமூகம் ஒன்று உருவாகிக்கொண்டு இருக்கின்றது.

சீனா ஏன் தமிழர்களுக்கு தேவையில்லை ..? – சுமந்திரன் விளக்கம் !

“வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை.”  என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். குறித்த பேட்டியில் அவர் மேலும் தெரிவித்துள்ளதன் படி,

வட – கிழக்கில் சீனாவின் பிரசன்னத்தை நாங்கள் வரவேற்கவில்லை என நான் தெளிவாக தெரிவித்திருப்பதுடன் அதற்கான காரணத்தையும் தெரிவித்துள்ளேன். எங்கள் அரசியல் அபிலாசை என்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை அடிப்படையாக கொண்டது – இந்த இரண்டு கருத்துக்களும் சீனாவிற்கு அந்நியமான விடயங்கள்.

எங்கள் அரசியல் உரிமைகளை மனிதஉரிமைகள் மற்றும் ஜனநாயக கொள்கைகளின் அடிப்படையில் வெல்வதற்கு சீனாவின் செல்வாக்கு முட்டுக்கட்டையாக விளங்கும் – சீனா எங்கள் பகுதிகளில் கால்பதிப்பதை நாங்கள் விருப்பாததற்கு இது ஒரு காரணம்.

இரண்டாவது காரணம் நாங்கள் தென்சீன கடற்பகுதியில் இல்லை – தென்சீன கடற்பகுதியில் இருந்திருந்தால் நாங்கள் சீனாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை அங்கீகரித்திருப்போம்,ஆனால் நாங்கள் இந்து சமுத்திர பகுதியில் இருக்கின்றோம்,இந்திய கரையிலிருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ளோம்.  இந்தியாவின் நியாயபூர்வமான பாதுகாப்பு கரிசனைகளை நியாப்படுத்துவதற்காக ஏற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பதற்காக எங்களை யாரும் குற்றம்சொல்ல முடியாது.

சீனா இந்தியாவுடன் நட்புறவு பாராட்டும் நாடு இல்லை. இதன் காரணமாக இந்திய கரைக்கு மிக அருகில் உள்ள வடகிழக்கில் சீனா காலூன்ற அனுமதிப்பது– இந்தியாவிற்கு எதிராக மேலும் பகைமை நடவடிக்கைகளில் சீனா ஈடுபடுவதற்கு அனுமதிப்பதற்கு சமமானது. என தெரிவித்துள்ள சுமந்திரன் இதனை நாங்கள் செய்யக்கூடாது என நினைக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.
இந்த காரணங்களிற்காக நாங்கள் வடக்குகிழக்கில் சீனாவை விரும்பவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“52 நாட்கள் மைத்திரிபால செய்த சூழ்ச்சியால் நேர்ந்த கதி.” – வே. இராதாகிருஷ்ணன்

“மைத்திரிபால சிறீசேன 52 நாட்கள் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி.” என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வே. இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

இந்த அரசுக்குள், அரசியல் ரீதியிலும் தற்போது நெருக்கடி நிலைமை உருவாகியுள்ளது. இராஜாங்க அமைச்சு பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்த நீக்கப்பட்டுள்ளார். மறுபுறத்தில் மைத்திரிபால சிறிசேனவும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றார். எனவே, அரசு வெகுவிரைவில் கவிழும் என்பதேயே நாட்டில் இடம்பெறும் அரசியல் சம்பவங்கள் மூலம் உணர முடிகின்றது.

எதிர்காலத்தில் புதிய கூட்டணிகள் உருவாகலாம். புதிய பயணம் பற்றி மைத்திரிபால சிறிசேனவும் கருத்து வெளியிட்டுள்ளார். அந்தவகையில் நாமும் தேர்தலுக்கு தயாராகவே இருக்கின்றோம். தேர்தலை மட்டும் எதிர்ப்பார்த்து வருபவன் தலைவர் கிடையாது, நாளை சமூகதாயம் பற்றி சிந்திப்பவனே உண்மையான தலைவர். அவ்வாறானவர்களுக்கே நாம் ஆதரவு வழங்க வேண்டும்.

அதேவேளை, தமிழ் பேசும் கட்சிகள் இணைந்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தன. அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பை பெறுவதற்கே ஆரம்பத்தில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அதன்பின்னர் சமஷ்டி, சுயநிர்ணயம் உள்ளிட்ட விடயங்களும் உள்வாங்கப்பட்டன. இதனால் மலையக மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஆவணத்தில் கையொப்பமிடவில்லை.

ஆனாலும் தமிழ்த் தேசியக் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் முயற்சிக்கு நாம் முழு ஆதரவை வழங்குவோம். அதற்கு தடையாகவோ – எதிராகவோ நிற்கமாட்டோம். அரசமைப்பின் 19 ஆவது திருத்தச்சட்டத்தால் நாட்டில் ஜனநாயகம் பாதுகாக்கப்பட்டது. 20 மூலம் அது நீக்கப்பட்டது. அதனால் ஏற்பட்டுள்ள அவல நிலையை மக்கள் இன்று உணர ஆரம்பித்துள்ளனர். இந்த உண்மையைதான் மைத்திரி இன்று கதைக்கின்றார். ஆனால் 52 நாட்கள் அவர் அரசியல் சூழ்ச்சி செய்திருக்காவிட்டால், இன்றும் அவரே ஜனாதிபதி என்றார்.

நடு வீதியில் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்ட நபரால் பரபரப்பு !

ராகம பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றை நபர் ஒருவர் உடைத்து திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் இன்று (09-01-2022) காலை 10.30 மணியளவில் ராகம ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹபாகே வீதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த பல்பொருள் அங்காடியில் சிறு குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் வாசனை திரவியத்தை எடுத்துக்கொண்டு பணம் செலுத்தாமல் வெளியே வந்துள்ளார்.

பல்பொருள் அங்காடியின் அருகில் இருந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் அவரை பிடிக்க முற்பட்ட போது முச்சக்கர வண்டி சாரதியை கையில் வைத்திருந்த கத்தியால் குத்திவிட்டு குறித்த நபர் தப்பிச் சென்றுள்ளார்.

இதேவேளை, மற்றொரு குழு சந்தேக நபரை துரத்திச் சென்ற போது, யாரும் நெருங்க வேண்டாம் என்றும் அவ்வாறு செய்தால் கழுத்தை அறுத்துக் கொள்வதாக அவர் மிரட்டியுள்ளார். இதையடுத்து சந்தேக நபர் கையில் வைத்திருந்த கத்தியால் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார். குறித்த பல்பொருள் அங்காடியில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவத்தின் போது சந்தேகநபர் நோயாளர் காவு வண்டி மூலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த சந்தேக நபரின் சடலம் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இச்சம்பவத்தில் நாகொல்ல, உக்குவெலவத்தை பகுதியைச் சேர்ந்த 44 வயதான ரெஜி வனசுந்தர என்பவரே உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, இச்சம்பவத்தில் காயமடைந்த ராகம பிரதேசத்தில் வசிக்கும் 36 வயதான தினுக லக்ஷான் பீரிஸ் என்னும் முச்சக்கர வண்டியின் சாரதி ராகம வைத்தியசாலையின் விபத்துப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பத்துடன் செயற்கை சூரியனை உருவாக்கி சீனா சாதனை !

சீனா உருவாக்கி உள்ள செயற்கை சூரியன் ஏழு கோடி டிகிரி செல்சியசில் தொடர்ந்து 17 நிமிடங்கள் ஒளி வீசி சாதனை படைத்துள்ளது. இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். உலக நாடுகளில் அரசியல், எல்லை பிரச்சினை, கடல் பகுதி ஆக்கிரமிப்பு, ஏவுகணை தயாரிப்பு மற்றும் சோதனை, விளையாட்டு, அறிவியல், ஆராய்ச்சிகள், ஆய்வுகள் என அனைத்து துறைகளிலும் தனக்கென்று ஒரு தனி முத்திரையை சீனா தொடர்ந்து பதித்து வருகிறது. இந்த சாதனைக்கு அணி சேர்க்கும் விதமாக சீனாவின் செயற்கை சூரியன் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியானது அணுக்கரு இணைவு மூலம் உருவாகிறது.

சூரியனின் மையப் பகுதி ஹைட்ரஜன் கருக்களை ஹீலியமாக இணைப்பதன் மூலம் 1.5 கோடி டிகிரி செல்சியஸ் வெப்பத்தை ஏற்படுத்துகிறது. இது, பல வகைகளில் மனித இனத்துக்கு பலனை அளித்து வருகிறது. சீனா கடந்த 1999ம் ஆண்டிலிருந்தே ‘ஈஸ்ட்’ என்ற பெயரில் செயற்கை சூரியனை உருவாக்கும் திட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, ரூ.70 லட்சம் கோடி வரை செலவிட்டுள்ளது. ஆரம்பத்தில், மிக குறைந்த நேரம் மட்டுமே குறைந்த அளவிலான வெப்பத்தை மட்டுமே இந்த செயற்கை சூரியன் உற்பத்தி செய்தது. இதை படிப்படியாக மேம்படுத்திய சீன விஞ்ஞானிகள், சில தினங்களுக்கு முன் 7 கோடி டிகிரி செல்சியசிஸ் வெப்பத்தை உருவாக்கினர்.

இது சூரியனை விட 5 மடங்கு அதிக வெப்பமாகும். 17 நிமிடங்கள் இந்த வெப்பநிலை நீடித்தது. மாசு ஏற்படாத வகையில் சுத்தமான எரிசக்தியை தயாரிப்பதற்கான சீனாவின் செயற்கை சூரியன் திட்டத்துக்கு உலகளவில் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. அதே நேரம், சீனா இந்த திட்டத்தை தீய நோக்கங்களுக்கு பயன்படுத்தவும் வாய்ப்புகள் இருப்பதாக அச்சம் ஏற்பட்டுள்ளது. சீனாவில் செயற்கை சூரியனை உருவாக்கிய அதே விஞ்ஞானிகள் பிரான்ஸ் நாட்டிலும் இதே போன்ற திட்டத்தை செயல்படுத்தி வருகின்றனர். இதற்கு, ‘இட்டர்’ என பிரான்ஸ் பெயரிட்டுள்ளது.

“சீனாவுடனான நட்புறவு நீண்ட காலம் நீடிக்கும்.” – பிரதமர் மகிந்த உறுதி !

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இன்று காலை கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பில் பல இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

சீனாவில் மருத்துவம் கற்கும் பெருமளவிலான இலங்கை மாணவர்கள் மீண்டும் சீனாவுக்கு திரும்புவதில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் சுற்றுலா, முதலீடு, கொவிட்-19  நிவாரணம் மற்றும் கொவிட் பிந்தைய ஏற்பாடுகள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டதாக மஹிந்த ராஜபக்ஷ ருவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.

இலங்கைக்கு சீன அரசு அளித்து வரும் ஆதரவுக்கு பிரதமர் இந்த சந்திப்பில் நன்றி தெரிவித்ததுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு நீண்ட காலம் நீடிக்கும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.

ஜனாதிபதி கோத்தாபாய இழந்த இரண்டு வருடத்தை பெற சர்வஜன வாக்கெடுப்பு !

நான் கொவிட்டினால் இழந்த இரண்டு வருடங்களை சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் என பொதுமக்களிடமிருந்து எனக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டியை சேர்ந்த இளைஞர் ஒருவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

கண்டி தலதாமாளிகைக்கு வழிபாட்டிற்காக சென்றவேளை நான் மக்களுடன் உரையாடிக்கொண்டிருந்தேன் அவ்வேளை இளைஞர் ஒருவர் முன்வந்து சேர் நீங்கள் கொவிட்டினால்இரண்டுவருடங்களை இழந்துள்ளீர்கள் சர்வஜனவாக்கெடுப்பின் மூலம் ஏன் அதனை பெற்றுக்கொள்ள முடியாது என கேள்வி எழுப்பினார் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
உங்களை எனது ஆலோசகராக்கவேண்டும் என நான் அவரிடம் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி மக்களிற்கு எனது கஸ்டங்கள் குறித்து தெரிந்திருக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.