10

10

ஆனந்தசங்கரி – அரவிந்தன் மோதல் பின்னணி என்ன? யார் இந்த அரவிந்தன்!!!

ஒரு காலத்தில் தமிழீழம் கேட்டு இலங்கையின் எதிர்க்கட்சியாகவும் வந்து, தமிழ் அரசியலைத் தீர்மானித்த தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று நொந்து நூடிள்ஸ்ஸாகி சீரழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. அரவிந்தன் கோஸ்டி சங்கரியர் பணத்தை சூறையாடுகிறார் என்பதும் சங்கரியர் அரவிந்தன் பணத்தை மோசடி செய்துவிட்டார் என்று ஒப்பாரி வைப்பதும் சமூக வலைத்தளங்களில் தவறணை உரிமையாளர்கள் வேதம் சொல்லும் அளவுக்கு தரம் குறைந்துவிட்டது. சங்கரி ஐயா சொத்துக்களை விற்று காசடித்தாரா இல்லையா என்பதை அரவிந்தன் தரப்பு ஆதாரத்தோடு வைக்கவில்லை. போக்கடி போக்காக சொல்லி வருகின்றனர்.

இந்தச் சொத்துக்களின் மீது பலருக்கும் கண் இருக்கின்றது என்பது உண்மை. அந்த சொத்துக்களுக்காகத்தான் கட்சியில் பலரும் இன்னும் ஒட்டிக்கொண்டுள்ளனர் என்பது அதைவிடவும் உண்மை. இவர்கள் எல்லோரும் சங்கரி ஐயாவில் பழியைப் போட்டுவிட்டு தாங்களும் சுருட்டிக்கொள்ளவே எண்ணுகின்றனர்.

தமிழர் விடுதலைக் கூட்டணியில் உள்ள முரண்பாடு கட்சியின் கொள்கை சம்பந்தப்பட்டதாக ஒரு போதும் இருக்கவில்லை. அதற்கு அப்படி ஒரு பெரிய கொள்கையும் இல்லை.

லண்டனில் தசாப்தங்களாக வாழ்ந்த சண்முகராஜா அரவிந்தன், யாழ் மாநகரசபை உறுப்பினராக இருந்து காலத்தில் அப்போது மேயராக இருந்த செல்லன் கந்தையாவை தாக்கி தன் சாதியத் திமிரை வெளிப்படுத்தியவர். அதைவிட அவருக்கு குறிப்பான அரசியல் பின்னணி எதுவும் கிடையாது. லண்டனில் கூட்டணிக்கு பெரிய காசு சேர்க்கும் அளவிற்கு நாணயமானவரோ நம்பிக்கையானவரோ அல்ல. அவர் வற்புறுத்தியிருந்தால் சில சமயம் சில நூறுகளை யாராவது வழங்கி இருப்பார்கள். அந்த சொற்ப பணத்தை ஏமாற்றும் அளவுக்கு சண்முகராஜா அரவிந்தன் ஒரு முட்டாளும் அல்ல. அவர் ஒன்றும் உழைக்கவும் இல்லை அதே சமயம் ஊரைக் கொள்ளையடிக்கவும் இல்லை. பிரித்தானிய அரசின் உதவிப் பணத்தில் தான் அவர் இலங்கையில் அரசியல் நகர்த்துகிறார் என்பது பலரும் அறிந்த விடயம்.

அரவிந்தனுக்கு மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை இருந்ததாக நான் அறியவில்லை. ஆனால் அவருக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமைப் பொறுப்பில் எப்போதும் ஒரு கண் இருந்தது மிகவும் உண்மை. ஆனால் அதற்கான தகுதி அவருக்கு இருக்கின்றதா என்றால் இன்றைக்கு இலங்கையில் உள்ள தமிழர் விடுதலைக் கூட்டமைப்பில் உள்ள தமிழ் அரசியல் தலைவர்களுக்கு (சுமந்திரன் தவிர்ந்த) என்ன தகுதி இருக்கின்றதோ அது அரவிந்தனிடமும் இருக்கின்றது. அரவிந்தன் ஒரு வடிகட்டிய தமிழ் குறும் தேசியவாதி. சாதிய பிரதேச வெறியில் ஊறியவர். பெண்களை இரண்டாம்தரப் பிரஜைகளாகவே பார்ப்பவர். பதவி ஆசையைத் தவிர கட்சியைப் போல் அவரிடம் கொள்கையும் இல்லை கோதாரியும் இல்லை. தமிழ் காட்சி ஊடகங்களுக்கு நேரத்தை நிரப்புவதற்கு சங்கரி ஜயாவிலும் பார்க்க இவர் சிறந்த தெரிவாக ஐபிசி மற்றும் ஊடகங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

தலைவர் எப்ப சாவார் கதிரை எப்ப காலியாகும் என்று லண்டனில் இருந்து வந்த அரவிந்தனுக்கு சங்கரி ஐயா ஒமிக்கிரோனுக்கும் டிமிக்கி கொடுத்துவிட்டு இருப்பது பெரும் சங்கடம் தான்.

தான் தாயகத்திற்கு வரும் முன்பே பொன் சிவகுமாரனின் சகோதரர் பொன் சிவசுப்பிரமணியம் அவர்களை வற்புறுத்தி அனுப்பி வைத்துவிட்டு, அதன் பிறகு அவருக்கே முதுகில் குத்தியவர் அரவிந்தன். சங்கரி ஐயா பொன் சிவசுப்பிரமணியத்திற்கு எதிராகத் திரும்பிய போது அதற்கு முழுவீச்சாக ஆதரவு கொடுத்து அவரைக் கட்சியில் இருந்தே நீக்க முயற்சித்தனர். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது போல் இப்போது அரவிந்தன் – சங்கரி ஐயா இழுபறி இப்போது சில ஆண்டுகளாகவே தொடர்கிறது.

சங்கரி ஐயா இன்னும் நிறைய காலம் வாழ முடியுமா என்பது கேள்விக்குறி. இந்நிலையில் அவரும் கட்சியின் பொறுப்புக்களை ஒப்படைத்து தன் தலைமைத்துவப் பண்பைக் காட்டவில்லை. சாகும் வரைக்கும் தான் தான் தலைவர் என்று இலங்கையில் உள்ள ஏனைய தலைவர்களைப் போல் தானும் சன்னதம் ஆடுகின்றார். இன்றைய நவீன தத்துவவியல் உலகத்திலும் நாம் இன்னும் பரராஜசேகரனை சங்கிலியன் முதுகில் குத்திய அரசியலில் தான் நின்று கொண்டிருக்கிறோம்.

இலங்கைத் தமிழ் அரசியல் சூழலில் சங்கரி ஐயாவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரம் இருந்தது உண்மை. ஆனால் அவர் அதை இவ்வளவு கீழ்நிலைக்கு கொண்டு வந்தது மிகத் துரதிஸ்டம். இன்றுள்ள இலகைத் தமிழ் தலைவர்கள் எல்லோரும் மதிக்கக் கூடியவராக அவர் இருந்திருக்க முடியும். ஆனால் அவர் அதை கெடுத்துக்கொண்டு அரவிந்தன் போன்ற சில்லறைகளுடன் எல்லாம் கீழ்நிலைக்கு இறங்கி சண்டை செய்வது தமிழ் அரசியலின் துரதிஸ்டம்.

2010க்கயையொட்டி சங்கரி ஐயாவின் 75வது பிறந்த தின நிகழ்வு லண்டனில் நடைபெற்றது. அப்போது நான் எழுதிய பதிவில் ‘சங்கரி ஐயா அரசியலில் இருந்து ஒதுங்குவது அவருக்கும் நல்லது தமிழ் மக்களுக்கும் நல்லது எனச் சுட்டிக்காட்டி இருந்தேன். அதற்குப் பின்பும் அவரோடு பல தடவைகள் நேர்காணலை மேற்கொண்டு இருந்தேன். அபோதெல்லாம் சங்கரி ஐயாவுடன் மட்டுமல்ல அவரது குடும்பத்தவர்களில் ஒருவராக ஏன் பொன் சிவசுப்பிரமணியத்தின் குடும்பத்திலும் ஒருவராக இருந்தவர் அரவிந்தன். குடும்பம் என்பது சின்ன அரசியல் என்றால் அரசியல் என்பது பெரிய குடும்பம். ‘அரசியலில் இதெல்லம் சகஜம் அப்பா!’

நியூயோர்க்கில் தொடர் மாடிக் குடியிருப்பில் தீப்பரவல் 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் பலி !

நியூயோர்க்கில் உள்ள தொடர் மாடிக் குடியிருப்பில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 9 சிறுவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழந்தனர்.

அத்துடன் இந்த தீப்பரவலில் காயமடைந்த மேலும் 32 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நியூயோர்க் நகர முதல்வர் எரிக் அடம்ஸ் (Eric Adams) தெரிவித்துள்ளார்.

அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

19 தளங்களை கொண்ட குறித்த தொடர் மாடிக் குடியிருப்பின் ஒவ்வொரு தளத்திலும் பலர் தீப்பரவலில் சிக்கியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களை மீட்கும் பணிகளில் தீயணைப்பு வீரர்களும், பாதுகாப்பு தரப்பினரும் முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று !

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 4 ஆவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் கொல்லப்பட்டவர்களின் 48 ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணியளவில் அனுஷ்டிக்கப்பட்டது.

மாநாட்டில் கொல்லப்பட்டவர்களில் நினைவாக, யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவாலயத்தில் நினைவஞ்சலி நடத்தப்பட்டது.

இதன்போது அரசியல் கட்சி பிரதிநிதிகள் பொது மக்களை கலந்துகொண்டு அஞ்சலியை செலுத்தினர்.

1974 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி தொடக்கம் 10 ஆம் திகதி வரை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நான்காவது உலக ஆராய்ச்சி மாநாட்டின் இறுதிநாள் விருந்துபசார வைபவத்தின் போது வன்முறைக் கும்பலொன்றினால் நடத்தப்பட்ட தாக்குதலில் மாநாட்டில் கலந்துகொண்டிருந்த 11 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ லண்டனுக்கு சென்று கட்சியின் பெயரை சொல்லி பணம் சேர்த்த அரவிந்தன், ஒரு ரூபாய் கூட தரவில்லை.” – ஆனந்தசங்கரி காட்டம் !

“தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் தலைவரும் நான் தான். தலைமையும் நான் தான்” என தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் செயலாளர் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்தார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் ஒருபகுதியிளர் தாங்கள்தான் கட்சி தலைமை என அறித்துள்ளமை தொடர்பாக கட்சியின் செயலாளர் வீ. ஆனந்தசங்கரி தெரிவித்த போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் ஆரம்பகால உறுப்பினருடன் தீர்மானம் எடுக்கும் உறுப்பினர் ஆகிய நான் தந்தை செல்வா. ஜீ.ஜீ.பொன்னம்பலம்இ அமிர்தலிங்கம். சிவசிதம்பரம் ஆகியோர் தொடங்கிய கடசிதான் இந்த கட்சி இந்த கட்சியின் அருமை பற்றி இவங்களுக்கு தெரியாது.

மூக்கை பிடித்தால் வாயை திறக்கத் தெரியாது நாட்டின் வரலாறு தெரியாது தாங்கள்தான் ஹீரோ என நினைத்து கொண்டிருக்கின்றனர். உண்மையில் சம்மந்தன் இந்த கட்சியை திட்டம் போட்டு குலைத்தபோது எவ்வளவே அவமானங்கள் உயிர் அச்சுறுத்தில் மத்தியில் கஷ்டப்பட்டு இந்த கட்சியை வளர்த்து கொண்டு வருகின்றேன்.

கடந்த 14 வருடத்துக்கு முன்னர் லண்டனுக்கு சென்ற அரவிந்தன் கட்சியின் பெயரை சொல்லி பணம் சேர்த்தவர். எங்கள் கட்சிக்கே எனது கையிலையே ஒரு ரூபாய் கூட பணம் தரவில்லை. ஆனால் கட்சிக்கு குறிப்பிட்ட 3 பேர் 5 இலச்சம் ரூபா பணம் வழங்கியுள்ளனர்.

சம்மந்தன், சேனாதிராஜா கட்சியை குலைத்துச் சென்றார்களே அப்போதே கட்சியின் ஆயுட்கால உறுப்பினர் பதவியும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் கூட்டத்திற்கு வந்தவர்கள் ஒரு சதம் கூட கட்சிக்கு தரவில்லை. இவர்கள் வியாபாரிகள் இவர்களை விடமுடியாது நான் கட்சியை வியாபாரம் செய்யவில்லை.

நான் ஒரு செம்பு காசுகூட இலஞ்சம் வாங்கியது கிடையாது. எனக்கு ஒரு கோடி பணம் வந்தது அத்துடன் கிடந்த சிறிய காணி ஒன்றையும் 32 இலச்சத்துக்கு விற்று எனது பணத்தையும் போட்டு யாழ்ப்பாணத்தில் 10 மில்லியன் ரூபாவிற்கு கட்சிக்கு மாடி கட்டிடம் ஒன்றை வாங்கினேன் அவர்களுக்கு அதில் ஒரு கண்.

கடந்த தேர்தல் காலத்தில் லண்டனில் சொகுசாக வாழ்ந்துவிட்டு எங்கள் கட்சி காணியை ஈடுவைத்து தேர்தலில் போட்டியிட தருமாறு என கேட்டார்கள் அப்படிப்பட்டவர்கள் தான் இவர்கள். பழம்பெரும் தலைவர்கள் தமது உயிரை பயணம் வைத்து செயற்பட்டுவந்த பாரம்பரிய கட்சியினை 50 வருடமாக கட்டி காப்பாற்றி வருகின்றேன் லண்டனில் இருந்து வந்து மட்டக்களப்பில் இருந்து 5 பேருடன் வந்து கட்சியை எடுத்துபோகமுயல்கின்றனர்-அவர்களிற்கு பைத்தியம்.

கட்சியினுடைய விதிப்படி 3 மாத்தில் கட்டணம் கட்டாவிட்டால் உறுப்பினர் பதவி காணாமல் போய்விடும். ஆனால் இவர்களுக்கு உறுப்புரிமை இருந்தால்தானே உரிப்புரிமை போவதற்கு இவர்கள் உறுப்புரிமை இருப்பதாக வருகின்றனர்.  ஆனால் இவர்கள் ஒருவரிடமும் உறுப்புரிமைக்கான விண்ணப்பம் கிடையாது.

நான், சவால் விடுகின்றோன் பொய்சென்னேன் களவு எடுத்தேன் என யாராவது நேர்மையான 10 பேர் வந்து நிரூபித்தால் நான் செய்தது குற்றம் என்றால் நான்கட்சியை விட்டுவிட்டு போகிறேன் என்றார்

“ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளது.” – நாமல் ராஜபக்ஷ

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்த போதே இதளை ஏற்றுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் மேலும் பேசியுள்ள அவர் ,

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுடன், ராஜபக்ஷ ஆட்சியின் புகழ் வீழ்ச்சியடைந்துள்ளதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் இது தற்காலிகமானது. இந்த ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான திட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதேநேரம், இரசாயன உரப் பாவனையைத் தடைசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்த தீர்மானம் ஒரு வலுவான முடிவு. ஆனால் பொறுப்பான அதிகாரிகளால் அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்த முடியவில்லை. 2019ஆம் ஆண்டு பதவியேற்றவுடன், இரசாயனமற்ற உரத்திற்கு மாறுவதற்கான தனது முடிவை ஜனாதிபதி அறிவித்ததார். ஆனால் அதிகாரிகள் அதைத் தொடராததால் அதைத் தவறவிட்டுள்ளனர்.

இரசாயன உரத்திற்கு மாறுவதற்கான செயன்முறை உள்ளது என்பது உண்மைதான். அது 10 ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்டிருக்க வேண்டும்.  இந்த விடயம் தொடர்பாக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படாததால் இறுதியாக ஜனாதிபதி கடுமையான தீர்மானமொன்றை எடுக்க நேரிட்டது. எனவே, தலைவர்கள் தங்கள் தேசத்தின் முன்னேற்றத்திற்காக இதைச் செய்ய வேண்டும் என்றும் நாமல் கூறியுள்ளார்.

புனித சிவனொளிபாதமலை யாத்திரையின் போது போதைப் பொருள் கடத்திய 18 இளைஞர்கள் !

சிவனொளிபாதமலை யாத்திரையின் போது ஹட்டன் வீதியூடாக போதைப் பொருள் கடத்திய 18 இளைஞர்களை ஹட்டன் பொலிஸார் கடந்த 08 ஆம் திகதி கைது செய்தனர்.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 18 இளைஞர்கள், ​​கஞ்சா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹட்டன் பிரதேச ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் இந்நடவடிக்கையில் ஈடுபட்டனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கு ஹட்டன் பொலிஸ் நாய் பிரிவின் அதிகாரிகள் ஸ்டூவர்ட் நாயின் உதவியையும் நாடியுள்ளனர்.

சந்தேக நபர்கள் 20 மற்றும் 30 வயதுடைய அனுராதபுரம், பாணந்துறை, கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்களை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றங்கள் நிரூபணம் – ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை !

மியன்மாரில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்ட ஆங் சான் சூகிக்கு, நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்துக்கு எதிராக போராட்டங்களைத் தூண்டியதாகவும், கொரோனா தடுப்பு விதிகளை மீறியதாகவும் அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபணம் ஆகியுள்ளதால், இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

டொலர் பற்றாக்குறை – இன்னும் 10 நாட்களில் இலங்கை சந்திக்கவுள்ள நெருக்கடி !

எதிர்கால எரிபொருள் இறக்குமதிக்கு சுமார் 200 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை உள்ளது எனவும் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குமாறு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

ஜனவரியில் நுகரப்படும் எரிபொருளுக்கு நாட்டுக்கு 350 மில்லியன் டொலர் தேவைப்படுவதாகக் கூறிய அவர், தற்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் சுமார் 150 மில்லியன் டொலர் இருப்பதாகவும் கூறினார். இம்மாத எரிபொருள் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மேலும் 200 மில்லியன் டொலரை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 10 நாட்களுக்கு தேவையான எரிபொருள் பெற்றோலிய கூட்டுத்தாபன வசம் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். அமைச்சரவையால் பணம் வழங்கப்படும் என நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

காதலிக்க மறுத்த பெண்ணின் உறவினர்கள் மீது இளைஞர் குழு வாள்வெட்டுத்தாக்குதல் – 07 பேர் வைத்தியசாலையில் !

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் பெண் ஒருவரை காதலித்து வரும் இளைஞர் ஒருவர் அவரது குழுவினருடன் பெண்னின் உறவினர் மீது மேற்கொண்ட வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் சம்பவத்தில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு. தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருபக்கமாக காதலித்து வந்துள்ளதாகவும், அப்பெண்ணுக்கு விருப்பமில்லாத நிலையில் அவரை இளைஞன் பின் தொடர்ந்து தொந்தறவு கொடுத்து வந்துள்ளதாகவும் இதனையடுத்து இருவரது உறவினருக்கிடையே இரண்டு தடவைகள் கைகலப்புக்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இருபக்கமும் சமாதானமாக சென்றனர்.

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று (09) இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

சம்பவத்தின் 7 பேர் படுகாயமடைந்ததையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் – குமார வெல்கம

“நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும்.” என நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் ஸ்தாபகர், முன்னாள் பிரதமர் எஸ்.டப்ள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்கவின் 123 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச்சிலைக்கு மலரஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்ப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷவின் நிர்வாகத்தின் விளைவினை 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் காலத்தில் நாட்டு மக்களுக்கு எடுத்துரைத்தேன். நான் குறிப்பிட்டதை மக்கள் ஏற்கவில்லை தற்போது அனுபவ ரீதியில் அதனை ஏற்றுக் கொண்டுள்ளார்கள்.

அரசாங்கத்தின் தவறான நிர்வாகத்தினால் நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளார்கள். நாட்டு மக்கள் இனியொருபோதும் ராஜபக்ஷர்களுக்கு ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கமாட்டார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மீது நாட்டு மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும் 2019ஆ ம் ஆண்டுக்கு பிறகு இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபய ராஜபக்ஷ தொடர்பில் கருத்துரைப்பது பயனற்றதாகும். ஜனாதிபதியால் நாட்டையல்ல ஒரு பிரதேச சபையினை கூட சிறந்த முறையில் நிர்வகிக்க முடியாது என்பதை நாட்டு மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை முழுமையாக இல்லாதொழிக்கப்பட வேண்டும் அல்லது ஜனாதிபதிக்கு மிதமிஞ்சிய வகையில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறைக்கப்பட வேண்டும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நிறைவேற்று அதிகாரத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தவில்லை.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை  அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் ஊடாக நாடாளுமன்றிற்கு வழங்கினார். பின்னர் அவர் தலைமையிலான சுதந்திர கட்சியினர் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் ஊடாக பாராளுமன்றின் அதிகாரத்தை மட்டுப்படுத்தி நிறைவேற்று அதிகாரத்தை மீண்டும் ஜனாதிபதிக்கு வழங்கினார்கள். நாடு தற்போது எதிர்க்கொண்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்பு கூற வேண்டும் என்றார்.