14

14

“இந்த வருடம் இலங்கை உணவுப்பற்றாக்குறையை எதிர்கொள்ளும்.” – ஐ.நா வெளியிட்டுள்ள எச்சரிக்கை !

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கை பல சவால்களை இந்த வருடம் எதிர்கொள்ளும் இலங்கை உணவுப்பற்றாக்குறை, அந்நியசெலாவணி நெருக்கடி , கடன் ஆபத்துக்கள் போன்றவற்றை எதிர்கொள்ளும் என ஐ.நாவின் அறிக்கை தெரிவித்துள்ளது.

2022 உலக பொருளாதார நிலை மற்றும் வாய்ப்புகள் குறித்த அறிக்கையிலேயே இலங்கை குறித்து இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்களிற்கான திணைக்களத்தின் இந்த அறிக்கையில் ஒன்றுடன் ஒன்று கலந்த பல பிரச்சினைகள் உலகின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை குறைக்கின்றன என தெரிவித்துள்ளது. 2022 இல் இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2.6 ஆக காணப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஐ.நா அறிக்கை இலங்கையின் முக்கிய சவால்களாக உணவுதட்டுப்பாடு வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைதல் மற்றும் கடன் ஆகியன காணப்படும் என தெரிவித்துள்ளது.

இலங்கை பாக்கிஸ்தானின் மத்திய வங்கிகள் அதிகரித்து வரும் பணவீக்கம் விரிவடையும் நடப்பு கணக்கு பற்றாக்குறைகளிற்கு மத்தியில் வட்டிவீதத்தை அதிகரித்துள்ள என சுட்டிக்காட்டியுள்ள ஐநா மத்திய வங்கிகள் அனைத்தையும் உள்ளடக்கிய மீள் எழுச்சி மற்றும் விலை ஸ்திரதன்மையை பேணுவதற்காக கொள்கை மாற்றங்களின் தருணங்கள் மற்றும்அளவுகள் குறித்து மதிப்பீடு செய்யவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. தென்னாசிய பாரிய பின்னடைவு ஆபத்தினை எதிர்கொள்கின்றது எனவும் ஐநா தெரிவித்துள்ளது.

 

“புலிகளுடனான போரை முடிக்க அமெரிக்கா, இஸ்ரேல் , இந்தியாவுடன் சீனாவும் இலங்கைக்கு உதவியது.” – சீனத் தூதுவர் கி செங்ஹோங்

இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரில் வெற்றி பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கியதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

தெரிசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் குழுவுடனான சந்திப்பின் போதேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு பேசிய அவர்,

பயங்கரவாதத்திற்கு எதிராக இலங்கைக்கு உதவ ஏனைய நாடுகள் தயக்கம் காட்டினாலும், சீனா இலங்கைக்கு தேவையான ஆயுதங்கள் மற்றும் பயிற்சிகளை அளித்து பல தசாப்தங்களாக நீடித்த போரை வெற்றிகரமாக நிறைவு செய்தது. இலங்கையில் மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற போரின்போது, அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளும், இலங்கையில் சீனாவுடன் போட்டிபோடும் இந்தியாவும் யுத்தத்தின் போது அரசாங்கத்திற்கு தமது பூரண ஆதரவை வழங்கியதாக சீனத் தூதுவர் கி செங்ஹோங் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் சீனா இரகசிய நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது என்ற பிரசாரத்தை நிராகரித்த சீன தூதுவர், வடக்கின் அபிவிருத்திக்கு தேவையான உதவிகளை வழங்க சீனா உத்தேசித்துள்ளது. மூன்று தீவுகளில் மின் உற்பத்தித் திட்டங்கள் இரத்துச் செய்யப்படுவதால் இலங்கை பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்தத் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கி மூலம் விலைமனுக்கோரல் விடுக்கப்பட்டு, சீன தனியார் துறையால் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், இதற்கும் சீனத் தூதரகத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கைக்கு இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் நிதிப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு இரு நாடுகளும் ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கடன் நெருக்கடியை இலங்கை வெற்றிகொள்ளும் எனத் தான் நினைப்பதாகவும், இந்தச் சிரமங்கள் தற்காலிகமானவை. எவ்வாறாயினும், சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு நீண்டகாலச் சலுகையாக அமையும் எனத் தெரிவித்துள்ள செங்ஹோங், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இலங்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார்.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த வடகொரியா – பொருளாதார தடை விதித்த அமெரிக்கா !

ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானங்களை மீறி வட கொரியா அணு ஆயுதங்கள் மற்றும் அபாயகரமான ஏவுகணைகளை சோதித்து வருவதால் அந்த நாட்டின் மீது சர்வதேச நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன. இதன் விளைவாக வட கொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது.
இந்த நெருக்கடிக்கு மத்தியிலும் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நாட்டின் இராணுவத்திறனை வலுப்படுத்துவதில்தான் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக ஒலியைவிட 5 மடங்கு வேகமாக செல்கிற ஹைபர்சோனிக் ஏவுகணையை வட கொரியா சோதித்தது.  இந்த பரபரப்பு அடங்குவதற்குள் வடகொரியா மீண்டும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதித்தது.
இதன் காரணமாக  அமெரிக்கா புதிய பொருளாதார தடையை விதித்துள்ளது. ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வட கொரியாவின் ஏவுகணை திட்டங்களுக்கான உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தைப் பெறுவதில் அவர்கள் ஆற்றிய பங்குக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகார வரம்புக்குள் இருக்கிற இந்த 5 பேரின் சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன.
இதனால் கடும் கோபம் அடைந்த வடகொரியா, அமெரிக்காவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், ஜோ பைடன் நிர்வாகம் தொடர்ச்சியாக இதுபோன்ற மோதல் போக்குடன் செயல்பட்டால் கடும்  விளைவுகளை அமெரிக்கா சந்திக்க நேரிடும் எனவும் பகிரங்க எச்சரிக்கையை  கிம் ஜாங் உன் அரசு விடுத்துள்ளது. வடகொரியாவின் வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பெயரில் இந்த எச்சரிக்கை செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

மைத்திரிபால சிறிசேனவை சிறையில் அடைக்க முயற்சி !

மைத்திரிபால சிறிசேனவை திட்டமிட்ட அடிப்படையில் சிறையில் அடைப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியில் செயற்படுபவர்கள் யார் என்பதும் எமக்குத் தெரியும். நேரம் வரும்போது விவரம் வெளியிடப்படும்.” என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது ,

“எமது தலைவர் அரசை விமர்சித்து வருவதால், ஏதாவது செய்து அவரைச் சிறையில் அடைப்பதற்கான நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சவாலை அவர் எதிர்கொள்வார். எமது கட்சியும் தயார் நிலையில்தான் உள்ளது.

மைத்திரிபால சிறிசேனவைப் பலவந்தமாகச் சிறையில் அடைக்க முற்படுவது யார் என்பதும் எமக்குத் தெரியும். அரச பிரதானிகளா அல்லது வெளியில் உள்ளவர்களா எனத் தற்போதே குறிப்பிட முடியாது. நேரம் வரும்போது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவோம்.

நாட்டில் சட்டம் என்று ஒன்று இருக்கின்றது. ஆனால், அதற்கு அப்பால் சென்று, மைத்திரியைச் சிறையில் அடைக்க வேண்டும் எனச் சில அமைச்சர்கள் வலியுறுத்தி வருகின்றனர். எனவே , இதன் பின்னணியில் இரகசிய நிகழ்ச்சி நிரலொன்று இருக்கக்கூடும்.அதேவேளை, அரசிலிருந்து வெளியேறுவது தொடர்பில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், அரசின் பயணம் தவறெனில் அதனைத் தைரியமாகச் சுட்டிக்காட்ட மத்திய செயற்குழு அனுமதித்துள்ளது. அரசின் பதவிக் காலம் முடியும் வரை நாம் அரசில் அங்கம் வகிப்பாமோ என்பதை இப்போது கூறமுடியாது. சிலவேளை, எமது கட்சி நீக்கப்படக்கூடும்” – என்றார்

“இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலுவோர் கைது செய்யப்படுவர்.” – சரத்வீரசேகர

பொரளை கிறிஸ்தவ தேவாலயத்தில் கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னால் முக்கிய சூத்திரதாரி ஒருவர் உள்ளார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

கர்தினால் மல்கம் ரஞ்சித் வெளியிட்டுள்ள கருத்துக்கள் குறித்து பதலகமவில் தனது கருத்தினை வெளியிட்டுள்ள சரத்வீரசேகர மேலும் தெரிவித்த போது,

தேசிய பாதுகாப்பினை கட்டியெழுப்புவதில் அரசாங்கம் அடைந்துள்ள முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சதியாக இது இருக்கலாம். ஐந்து மணியளவிலேயே சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்டதால் சந்தேநபரை கைதுசெய்வதற்காக சிசிடிவியில் மூன்று மணிக்கு பின்னர் பதிவான காட்சிகளையே பொலிஸார் விசாரணை செய்தனர்.

கொழும்பில் மருத்துவமனையொன்றில் கைக்குண்டு மீட்கப்பட்டது போன்ற சம்பவமாக இது இருக்கலாம். பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கத்தின் முன்னேற்றத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும் முயற்சியாக இருக்கலாம். இலங்கை அரசாங்கத்தை செயல் இழக்கச்செய்வதன் மூலம் இலங்கையை பாதுகாப்பற்ற இடமாக சித்தரிப்பதற்கு முயலும் தனிநபர் அல்லது குழுவினரை கைதுசெய்வதற்கான முயற்சிகளை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர் என சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

‘கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம்” – அமெரிக்காவை எச்சரிக்கிறது ரஷ்யா !

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்தால் கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் படைகளை குவிப்போம் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத் துறை இணையமைச்சர் செர்கெய் ரியப்கோவ் கூறுகையில்,

‘உக்ரைனையோ சோவியத் ஒன்றியத்தில் அங்கம் வகித்த மற்ற நாடுகளையோ நேட்டோ அமைப்பு தன்னுடன் இணைத்துக் கொள்ளக் கூடாது என்று ரஷ்யா வலியுறுத்தி வருகிறது. அத்தகைய கூட்டுறவை ஏற்படுத்திக்கொள்ளப் போவதில்லை என்ற உத்தரவாதத்தை ரஷ்யா எதிர்பார்க்கிறது.

ஆனால், அவ்வாறு உத்தரவாதம் அளிக்க நேட்டோ அமைப்பும் அமெரிக்காவும் பிடிவாதமாக மறுத்து வருகின்றன. அந்த வகையில், ரஷ்யாவுக்கும் நேட்டோவுக்கும் இடையிலான அணுகுமுறை எதிரும் புதிருமாக உள்ளது. எனவே, இரு தரப்பினருக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படுவது சந்தேகத்துக்குரியதாகவே உள்ளது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் நேட்டோவுடனான பதற்றம் தொடர்ந்து அதிகரித்தால், அதனை எதிரகொள்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ரஷ்யா மேற்கொள்ளும்.

அந்த நடவடிக்கைகளில் ஒன்றாக, அமெரிக்காவுக்கு அருகே அமைந்துள்ள கியூபாவிலும் வெனிசுவேலாவிலும் ரஷ்யப் படைகளைக் குவிக்கப்படுவதற்கான வாய்ப்புகளையும் மறுக்க முடியாது’ என கூறினார்.

“எமது மக்கள் பொருளபாதார ரீதியாக பழமிழந்து போயுள்ளார்கள்.” – சி.வி.விக்னேஸ்வரன்

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளதென தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் கூட்டணியின் செயற் குழுக் கூட்டம் கட்சியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எமது கட்சியின் பதிவின் பின்னர் இன்று முதலாவது செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மக்கள் பொருளாதார ரீதியாகப் பலம் இழந்து காணப்படுகின்றார்கள். இந்த நிலையில் நாங்கள் எந்த அளவுக்கு கட்சி என்ற ரீதியில் மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது சம்பந்தமாக பேசியுள்ளோம்.அந்த வகையில் வீட்டுத்தோட்டம் காளான் வளர்ப்பு பற்றி ஆராய்ந்தோம். எங்களால் முடிந்த புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து மக்களுக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய முடியும் என்று பேசியுள்ளோம்.

தவழ்ந்துவிட்டு தற்பொழுது எழுந்து நிற்கும் கட்சியாக நாங்கள் இருக்கின்றோம்.அடிமட்டத்தில் மக்களின் ஆதரவை நாங்கள் உறுதி செய்ய வேண்டும். அடிமட்டத்தில் மக்களிடம் வேலை செய்ய வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. இளைஞர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.அதேவேளை தலைவர்கள் மூத்தவர்களின் அனுபவங்களும் அறிவும் அரசியல் ஞானமும் இளைஞர்களின் வீரியமும் சேர்ந்து எமது கட்சியைக் கொண்டு நடத்தும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. கொரோனா, நாடாளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக கடந்த ஒரு வருடத்தில் எமது கட்சியின் செயற்பாடுகள் குறைந்தளவிலேயே நடந்திருந்தது. வேகமாக கட்சியின் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்

இதுவரை காலமும் நாங்கள் கூட்டணி என்ற வகையிலே ஏனைய கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம்.என்னுடைய கருத்து என்னவென்றால் ஒவ்வொரு பங்காளிக் கட்சியும் தம்மை பலப்படுத்த வேண்டும். பின்னர் தேர்தல் காலத்தில் எல்லோரும் சேர்ந்து பொதுச் சின்னத்தில் முன்னிறுத்தி முகம் கொடுக்கவேண்டும்.

எமது பங்காளிக் கட்சிகளை நாங்கள் பாராட்ட வேண்டும்.எமது கட்சிக்கு முன்னுரிமை அளிப்பதை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள்.அதனால் அவர்களுடன் இணைந்து செயற்படுவது இலகுவாக உள்ளது என்றார்.

தமிழ் கட்சிகள் பொதுவாக கூட்டிணைந்து போட்டியிடுவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது, வஞ்சகம் இல்லாத நிலையில் ஒவ்வொரு கட்சியும் முன்வந்தால் இணைந்து செயற்படலாம். உள்ளே ஒரு காரணத்தை வைத்து கொண்டு சேர்ந்து செல்வோம் என்று கூறிக்கொண்டு இறுதி நேரத்தில் வெளியில் தள்ளுவதை ஏற்கமுடியாது. எல்லோரும் சேர்ந்து செயற்பட முடியும் என்றால் அதனை நான் வரவேற்கின்றேன். ஆனால் அதற்கு பல சிக்கல்கள் இருக்கின்றன என்றார்.

“பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற முன்வாருங்கள்.” – சர்வதேசத்துக்கு ஐ.நா அழைப்பு !

தலிபான்கள் ஆட்சிச் செய்து வரும் ஆப்கானிஸ்தானின் தற்போதைய நிலவரம் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கவலை வெளியிட்டுள்ளார்.
செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பில் அவர்,
20 ஆண்டுகள் கழித்து, அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் விலகலுக்கு பிறகு, தலிபான் அதிகாரத்தைக் கைப்பற்றியபோது ஆப்கானிஸ்தானின் உதவி சார்ந்த பொருளாதாரம் ஏற்கனவே தடுமாறிக் கொண்டிருந்தது. சர்வதேச சமூகம் ஆப்கானிஸ்தானின் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை முடக்கியது. பொருளாதார ஆதரவை நிறுத்தியது, தலிபான்களுடன் இணைந்து பணியாற்ற விரும்பவில்லை.
பொருளாதாரத்தை காப்பாற்ற பணம் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் விதிகள் மற்றும் நிபந்தனைகள் இந்த அவசர சூழ்நிலையில் நிறுத்தப்பட வேண்டும். உலகின் பெரும்பாலான நிதி அமைப்பு டொலரில் செயல்படுவதால் அமெரிக்காவிற்கு மிக முக்கிய பங்கு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவில் உள்ள ஆப்கானிய வெளிநாட்டு இருப்புகளில் 7 பில்லியன் டொலர்களை அமெரிக்கா முடக்கியுள்ளது. ஆப்கானிய பொருளாதாரத்தில் பணப்புழக்கத்தை விரைவாக மீட்பது மிகவும் முக்கியமானது.
பசியால் உயிரிழக்கும் ஆப்கானிஸ்தானியர்களை காப்பாற்ற  ஐந்து பில்லியன் அமெரிக்க டொலர் நிதி உதவி அந்த நாட்டிற்கு வழங்கப்பட வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் ஆப்கானியர்கள் மரணத்தின் விளிம்பில் உள்ளனர்.  8.7 மில்லியன் ஆப்கானியர்கள் பட்டினியினால் வாடி வருகின்றனர். மருத்துவர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள், மின் பொறியாளர்கள் மற்றும் பிற அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்க சர்வதேச நிதி அனுமதிக்கப்பட வேண்டும்.
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு வேண்டுகோள் விடுக்கிறேன். அதேவேளையில், அடிப்படை மனித உரிமைகளை அங்கீகரித்து பாதுகாக்கவும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகளை பாதுகாக்கவும், தலிபான் தலைவர்களுக்கு அவசர வேண்டுகோளை விடுக்கிறேன். இவ்வாறு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

“அரசிலிருந்து வெளியேற நாம் தயங்க மாட்டோம்.” – நாமலுக்கு மைத்திரிபால சிறிசேன பதில் !

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டு அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. இந்த அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.” என  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எம்.பி. தெரிவித்தார்.

‘அரசின் கொள்கைகள் பிடிக்கவில்லையெனில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கௌரவமான முறையில் வெளியேறவேண்டும்’ என்று அமைச்சர் நாமல் ராஜபக்ச ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இருந்துகொண்டு எமக்குச் சவால் விடும் சிறியவர்களும், பெரியவர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்துதான் அரசியலை ஆரம்பித்தார்கள். சுதந்திரக் கட்சிதான் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முகவரி கொடுத்தது. இதை மறந்து அவர்கள் செயற்படுகின்றார்கள்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கூட்டணி வெற்றியடைய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே பிரதான காரணம். இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அரசில் பிரதான வகிபாகத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி வகிக்கின்றது. அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறினால் அரசு கவிழ்வது உறுதி.

இதை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை புரிந்துகொள்ளும். அரசைக் கவிழ்ப்பது எமது நோக்கமல்ல. எனினும், அரசு தவறான பாதையில் தொடர்ந்து பயணித்தால் பிரதான பங்காளிக் கட்சியான நாம் அதிலிருந்து வெளியேறவும் தயங்கமாட்டோம்” – என்றார்.

தேசத்தின் இணைய வாசகர்களுக்கு தைத்திருநாள் வாழ்த்துக்கள் !

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் வளமும் – நலமும் பெற்றிட தேசத்தின் வாசகர்கள் அனைவருக்கும் இனிய பை்பொங்கல் வாழ்த்துக்கள்.
தைப்பொங்கல் கட்டுரை#thaippongkal - சிறுவர்களுக்கான அறிவுத்திறன் வளர்ச்சிக்குரிய வழிகாட்டல்கள்