March

March

நான்கு நாட்களாக பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க முடியவில்லை – சோகத்தில் தூக்கிட்டு தந்தை தற்கொலை !

வெலிபென்ன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் பொருளாதார பாதிப்பால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. வெலிபென்ன – ஹோலின்போன் கொலனியைச் சேர்ந்த 37 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கணவரைக் காணவில்லை என அவரது மனைவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து, அவரது வீட்டுக்கு அருகிலுள்ள இறப்பர் தோட்டத்தில் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

விசாரணையில், மூன்று நாட்களாக குழந்தைகள் வீட்டில் சாப்பிட எதுவும் இருக்கவில்லை என மனைவி தெரிவித்துள்ளார்.

கணவன் கூலி வேலை செய்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறியதாகவும் மனைவி விசாரணையில் மேலும் தெரிவித்திருந்தார்.

எனினும், பின்னர் வீட்டிலுள்ள சில பொருட்களை விற்று பிள்ளைகளுக்கு உணவு கொண்டு வந்ததாகவும், பணப்பிரச்சினைக்கு முகம் கொடுக்க முடியாமல் கணவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் மனைவி தெரிவித்துள்ளார்.

உக்ரைன்- ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் – இந்திய மாணவன் பலி !

உக்ரைன்  ரஷ்யா இடையே ஆறாவது நாளாக போர் நடந்து வருகிறது. கார்கீவ், கீயூவ் போன்ற நகரங்களில் ரஷ்யா நடத்தி வரும் கடும் தாக்குதலில் இந்திய மாணவர்கள் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையாக அந்நாட்டு மத்திய அரசு ஒபரேஷன் கங்கா திட்டத்தை  செயல்படுத்தி வருகிறது.

 

இந்நிலையில், இந்த போர் களத்தில் சிக்கி உக்ரைன் கார்கீவ் நகரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றில் படித்து வந்த கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த நவீன் சேகரப்பா என்கிற மாணவர் உயிரிழந்துள்ளார். இதனை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.

“300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள் – எம்.ஏ.சுமந்திரன் குற்றச்சாட்டு !

ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு, இன்னமும் 200 இற்கு மேற்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கும் இந்த வலி தெரியும். அதனால் அவர்களும் திரண்டு வந்து பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு ஆதரவு வழங்குகிறார்கள் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கும் கையெழுத்துப் போராட்டம் வவுனியாவில்  இடம்பெற்று வரும் நிலையில் அங்கு வருகை தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்துப் போராட்டம் வவுனியா மாவட்டத்திலும் ஆரம்பமாகிறது. மக்கள் மிகுந்த ஆர்வமாக இந்த கையெழுத்துப் போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள். தங்களுக்கும் இதில் பங்கு இருக்கின்றது என்ற பொறுப்புணர்வுடன், பல இடங்களில் ஏன் தமது இடங்களுக்கு வரவில்லை என அழைத்து கேட்கிறார்கள். இது ஒரு மக்கள் போராட்டமாக இருக்கிறது.

தமிழ் பகுதிகளில் இந்தப் போராட்த்திற்கு அதிக வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் தமிழ் இளைஞர்கள் இதில் அதிகமாக பாதிக்கப்பட்டவர்கள். 1988, 1989 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இது சிங்கள இளைஞர்களையும் மோசமாக பாதித்து இருக்கிறது. ஜேவிபி தலைவர் இதில் கையொப்பம் இட்டார். கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டம் செய்த போது ஜேவிபியினர் அணியினராக வந்து இதில் கையொப்பம் இட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு இதன் கொடுமை தெரியும்.

இன்றைக்கு 2 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற ஈஸ்டர் குண்டு தாக்குதல் குற்றச்சாட்டு தொடர்பில் 300 இற்கு மேற்பட்ட முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டு இன்னமும் 200 இற்கு மேற்பட்டவர்கள் எந்தவித குற்றச்சாட்டுமின்றி சிறையில் இருக்கிறார்கள். தற்போது அவர்களுக்கும் இந்த வலி தெரியும். அதனால் அவர்களும் திரண்டு வந்து ஆதரவு வழங்குகிறார்கள்.

குறிப்பாக முஸ்லிம் பெண்களின் ஆதரவு அதிகமாகவுள்ளது. சிங்கள பகுதிகளிலும் இதற்கு ஆதரவு கிடைக்கிறது. நீர்கொழும்பில் இதற்கான ஆதரவு கிடைத்தது. தெற்கில் இருக்கும் பல மாவட்டங்களில் அங்குள்ள அரசியல் தலைவர்கள் இதில் இணைந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்கள். சிறிலங்கா சமசமாஜக் கட்சி தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டும் என தானாகவே அறிக்கை விடுத்துள்ளார்.

ஆகவே, நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டமாக அனைத்து தரப்பினரும், அனைத்து கட்சிகளும் சேர்ந்து கோருகின்ற ஒரு போராட்டமாக இது மாறியிருக்கின்றது. பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்படும் வரை எமது போராட்டம் தொடரும். கையெழுத்துப் போராட்டம் அதில் ஒரு அங்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்

“ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை சேகரித்து வைத்திருக்கிறேன்.” – ஆளுங்கட்சி உறுப்பினர் கீதா குமாரசிங்க வெளியிட்டுள்ள தகவல் !

சுமார் ஒரு வருடத்துக்குத் தேவையான எரிபொருளை தாம் சேகரித்து வைத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார்.

பெந்தர எல்பிட்டியவில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெண்கள் சம்மேளனத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறைக்குப் பயந்து தான் அவ்வாறு செய்ததாகவும், பல அமைச்சர்கள் இதேபோல் எரிபொருளை பதுக்கி வைத்திருப்பதாகவும் அவர் கூறினார்.

 

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிப்பு !

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என வடமத்திய மாகாணத்தில் சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்தார்.

அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு ஆண்கள் பலியாகி வருவதே இதற்கு முக்கிய காரணம் என்கிறார்.

மகளிர் பணியகம் நடத்திய கணக்கெடுப்பின்படி, திம்புலாகலை பிரதேச செயலர் பிரிவில் மாத்திரம் சுமார் 500 பெண் தலைமைத்துவ குடும்பங்கள் உள்ளன.

தேசிய சமாதானப் பேரவையில் செயற்படும் பொலன்னறுவை மாவட்ட சர்வமதக் குழுவிலுள்ள சிவில் சமூக ஆர்வலர்கள் குழுவில் உரையாற்றும் போதே திருமதி கங்கானி திஸாநாயக்க மேற்கண்டவாறு கூறினார்.

இந்நிலைமையைக் குறைக்கும் வகையில் பொலிஸில் நிறுவப்பட்டுள்ள சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தின் உத்தியோகத்தர்கள் அறிவைப் பெருக்கிக் கொள்வதுடன் தற்போதுள்ள போதைப்பொருள் விதிகளைக் கடுமையாக்கி குற்றங்களுக்கான தண்டனையை அதிகரிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய 400கூலிப்படை வீரர்களை அனுப்பியுள்ள புடின் – வெளியாகியுள்ள பரபரப்புத்தகவல் !

நேட்டோ படையில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா கடந்த 24-ந் திகதி முதல் அந்த நாடு மீது தாக்குதல் நடத்தி வருகிறது. குண்டுகளை பொழிந்தும், ஏவுகணைகளை வீசியும் அதிரடியான தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. 6-வது நாளாக ரஷ்ய இராணுவப் படைகள் தலைநகர் கீயுவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தநிலையில் உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்கியை கொல்ல 400 கூலிப்படையினரை ரஷியா அனுப்பி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
ரஷ்யாவில் உள்ள வாக்னர் குழுவை சேர்ந்த தனியார் கூலிப்படை அமைப்பு 400 பேரை ரஷ்யாவுக்கு அனுப்பி உள்ளது. இவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து உக்ரைன் தலைநகர் கீவ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். வாக்னர் குழுமத்தில் 2 ஆயிரம் முதல் 4 ஆயிரம் பேர் வரை கூலிப்படையினராக உள்ளனர். இந்த அமைப்பு ரஷிய அதிபர் விளாடிமிர் புடினின் கூட்டாளியான யெவ்ஜெனி பிரிகோஜினால் நடத்தப்படுகிறது.
இந்த கூலிப்படையை சேர்ந்த 400 பேர் ஆப்பிரிக்காவில் இருந்து பெலாரஸ் வழியாக கீயூவ் நகருக்குள் 5 வாரங்களுக்கு முன்பு நுழைந்து விட்டதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இந்த கூலிப்படையினருக்கு உக்ரைன் அதிபர் விலாடிமிர் செலன்ஸ்க்கியை தேடி கண்டுபிடித்து கொல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபரோடு அவரது மந்திரி சபையில் உள்ள மந்திரிகள், அதிகாரிகள் உள்பட மொத்தம் 23 பேரை கொல்வதற்கு ரஷ்யா உத்தரவிட்டு இருக்கிறது. இதற்காக அவர்களுக்கு மிகப்பெரிய தொகையும் முதல்கட்டமாக அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் பரிசுத்தொகை விவரம் எதுவும் தெளிவாக தெரிய வில்லை.
ரஷிய அதிபர் விளாடிமிர் புடின்தான் தனது கூட்டாளியான கூலிப்படை அமைப்புக்கு இந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் அந்த தகவல் தெரிவிக்கிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யாவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பிறகு இந்த கூலிப்படையினர் செலன்ஸ்க்கியை கொல்ல திட்டமிட்டுள்ளனர். ஒருபுறம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டுவிட்டு, உக்ரைன் அதிபரை கொல்ல கூலிப்படையை அனுப்பி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உக்ரைன் அதிபர் ஏற்கனவே தன்னை கொல்ல ரஷ்யா திட்டமிட்டுள்ளது என்று குற்றம் சாட்டி இருந்தார். தன்னை கொல்வதுதான் ரஷ்யாவின் முதன்மை நோக்கம் என்றும், தன்னையும் தனது குடும்பத்தையும் அழித்துவிட்டால் நாட்டை அழித்து விடலாம் என்று ரஷ்யா கருதுவதாகவும் அவர் கூறி இருந்தமை நோக்கத்தக்கது.

நாடு முழுதும் தொடர் போராட்டம் – ஜே.வி.பி அறிவிப்பு !

மக்கள் விடுதலை முன்னணி எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வு காணக் கோரி நாடு முழுவதும் பல முக்கிய நகரங்களில் தொடர் போராட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது.

‘மக்கள் அவதியுறும் எண்ணெய் மற்றும் மின்சார நெருக்கடிக்கு உடனடித் தீர்வு’ என்ற தொனிப்பொருளில் தொடர் போராட்டம் நடத்தப்படுகிறது.

கொழும்பில் இன்று முதல் ஆரம்பமான இந்தத் தொடர் போராட்டம். களுத்துறை, பாணந்துறை, கம்பஹா, புத்தளம், கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, மொனரா கலை, மாத்தளை, அனுராதபுரம், அம்பாறை, குருநாகல் ஆகிய இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.