04

04

நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டம் – நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு !

பத்தரமுல்லை-பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றம் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா நாடாளுமன்ற நுழைவு வீதிக்கு அருகில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் காவல்துறையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டனர்.

நாடாளுமன்ற நுழைவு வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரையே காவல்துறையினர் கைது செய்தனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்டவர்கள் மஹரகம காவல்துறை நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் கைது செய்யப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் கட்டணம் அறவிடாமல் பெருமளவிலான சட்டத்தரணிகள் கடுவலை நீதிமன்ற வளாகத்தில் பிரசன்னமாகியிருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான அரச தலைவர் சட்டத்தரணி சரத் ஜயமான்ன, நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பான கடிதத்தை சபாநாயகரிடம் கையளிக்க சென்றவர்களை காவல்துறையினர் கைது செய்தமை அடிப்படை உரிமை மீறலாகும் என தெரிவித்தார்.

 

இந்நிலையில், குறித்த 13 பேரும் தற்பொழுது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – ஆளுந்தரப்பின் நிலைப்பாடு என்ன.?

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகங்கொடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக ஆளுங்கட்சியின் பிரதம அமைப்பாளர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, அரசியலமைப்பு மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளுக்கு அமைவாக 3 மொழிகளிலும் நம்பிக்கையில்லாப் பிரேரணை தாக்கல் செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதை சபாநாயகர் ஏற்றுக்கொண்டால், ஐந்து வேலை நாட்கள் முடியும் வரை விவாதம் நடத்தக் கூடாது எனவும், அதற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதைப் படிக்க வாய்ப்பு அளிக்க வேண்டுமெனவும் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.

“நான் ஒன்றும் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது.”- எலான் மஸ்க் கவலை !

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். இதையடுத்து டுவிட்டரை அவர் சீரழைத்துவிடுவார் என்று பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. தற்போதைய டுவிட்டர் சி.இ.ஓவாக இருக்கும் பராக் அகர்வால் இனி ட்விட்டரின் எதிர்காலம் இருண்டதாக இருக்கும் என்று கூறி எலான் மஸ்கை நேரடியாக தாக்கியிருந்தார்.
பொதுவாக உற்சாகமான மனிதராக காணப்படும் எலான் மஸ்க் பிறர் விமர்சனங்களை கண்டுக்கொள்வது கிடையாது. தனக்கு பிடித்ததை மட்டும் தான் செய்வார் என்று கூறப்பட்டு வந்தது. தன் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் தனக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
சில சமயம் என் மீது வைக்கப்படும் விமர்சனங்கள் என்னை பாதிக்கும். நான் ஒன்றும் எதை பற்றியும் கவலைப்படாமல் இருப்பதற்கு நான் அண்ட்ராய்டு இயந்திரம் கிடையாது. எனக்கும் உணர்ச்சி இருக்கிறது. ஆனால் நான் அவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் கடக்க பார்க்கிறேன்.
பொதுவாக நரகத்திற்கான பாதையே நல்ல நோக்கத்துடன் அமைக்கப்படுகிறது என்ற வாக்கியம் உண்டு. என்ன பொறுத்தவரை கெட்ட நோக்கங்களுடன் தான் நரகத்திற்கான சாலை அமைக்கப்படுகிறது. ஆனால் அதிலும் நல்ல எண்ணங்கள் இருப்பதற்கான சாத்தியம் உண்டு. என்னுடைய நல்ல எண்ணம் நரகத்திற்கு உங்களை அழைத்து செல்லாது.
டுவிட்டரில் உள்ள ட்ரோல்களும், போட்களும் பயனர்களின் அனுபவத்தை குறைக்கின்றன. அவற்றை எடுத்து நான் போராடுவேன். பலதரப்பட்ட கருத்துக்களையும் உள்ளடக்கிய அமைப்பை தான் டுவிட்டரில் நான் நிறுவ உள்ளேன். அனைவருக்கும் சிறந்த சேவையை வழங்கும் நிறுவனமாக டுவிட்டர் இருக்கும்.
சாதாரண பயனர்கள் டுவிட்டரை இலவசமாக பயன்படுத்தலாம். ஆனால் வணிக நோக்கத்துடன் உள்ள பயனர்களுக்கும், அரசாங்க பயனர்களுக்கும் டுவிட்டரில் கட்டணம் வசூலிக்கப்படும்.” இவ்வாறு எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

“அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”- பிரதமர் அலுவலகம்

ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் அலுவலகம் இன்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக அனுரகுமார திஸாநாயக்க நேற்று முன்வைத்த குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமான சொத்துக்கள் பற்றிய தகவல்களையும் ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நேற்று அம்பலப்படுத்தியிருந்தார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ஷவுக்கு சொந்தமாக ஹம்பாந்தோட்டை உள்ள சிறிபோபுர காட்டுப்பகுதியில் தலா 1.6 மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 காணிகள் தொடர்பான உறுதிப் பத்திரத்தை அவர் அம்பலப்படுத்தியிருந்தார்.

மேலும் 80 மில்லியன் ரூபாய் பெறுமதியான நேரடி ஒளிபரப்பு வாகனம், பத்தரமுல்லையில் சி.எஸ்.என் வலையமைப்பின் 200 மில்லியன் ரூபாய் கட்டிடமும் அவரது பெயரில் இருப்பதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

அத்தோடு பத்தரமுல்லையில் உள்ள 235 மில்லியன் மதிப்புடைய கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் வலையமைப்பு, 138 மில்லியன் பெறுமதியான நுகேகொடையில் அமைந்துள்ள காணி மற்றும் கட்டடம் குறித்தும் அவர் வெளிப்படுத்தியிருந்தார்.

“மஹிந்த ராஜபக்ஷ எனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை.” – ஹர்ஷ டி சில்வா விசனம் !

2020ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தின்போது எதிர்க்கட்சிகளின் பதில் உரையின்போது அமைச்சர் அலி சப்ரி இன்று கூறியதையே தானும் கூறியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நிதியமைச்சர் அலி சப்ரி இன்றைய நாடாளுமன்ற அமர்வின் தொடக்கத்தில் விசேட உரையாற்றினார்.

இதன்போது, சர்வதேச நாணய நிதியத்திற்கு முன்னதாகவே சென்றிருக்க வேண்டும் என்றும் இது ஒரு வரலாற்றுத் தவறு என்றும் கூறினார். அத்தோடு, வரி குறைப்பும் பாரிய தவறு எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிலையில், நிதி அமைச்சர் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்து உரையாற்றியபோதே அலி சப்ரி கூறியதையே 2020ஆம் ஆண்டு தானும் கூறியதாக ஹர்ஷ டி சில்வா  தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அப்போதைய நிதி அமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தனது பேச்சை எந்த வகையிலும் செவிமடுக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இழைக்கப்பட்ட தவறுகளை பணிவுடன் ஏற்றுக்கொண்ட அமைச்சர் அலி சப்ரிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.

பதவி விலகும் மகிந்த..?- வெளியாகியுள்ள தகவல் !

மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக பரப்பப்படும் செய்திகள் பொய்யானவை என அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஆளும் கட்சி கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் பதவியில் இருந்து விலகவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர், அப்படியான எந்த முடிவும் இல்லை என்றும் நாட்டின் பொருளாதாரம், மக்கள், நாடாளுமன்றம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து பிரதமர் அறிக்கை வெளியிடவுள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் குறித்த அறிக்கை நாளை அல்லது நாளை மறுதினம் வெளியாகலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிற்கு படகில் செல்ல முயன்ற 14 பேர் கைது !

மன்னாரில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவிற்கு படகில் சென்ற மூன்று குடும்பங்களைச் சேர்ந்த 12 பேர் உள்ளடங்களாக 14 நபர்களை தாழ்வுபாடு கடற்பரப்பில் வைத்து இன்று (4) அதிகாலை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

7 சிறுவர்கள், 3 பெண்கள், 2 ஆண்கள் உள்ளடங்களாக 3 குடும்பத்தை சேர்ந்த 12 நபர்கள் மற்றும் மன்னாரை சேர்ந்த படகோட்டிகள் இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 14 பேரூம் இன்று (4) காலை 5 மணியளவில் மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மன்னார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின் இரண்டு படகோட்டிகள் உள்ளடங்களாக 14 பேரூம் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு !

கோட்டை நீதவான் நீதிமன்றத்தினால் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

போராட்டம் காரணமாக அலரி மாளிகைக்கு முன்பாக உள்ள வீதி மற்றும் நடைபாதையை தடை செய்யப்படுவதாக பொலிஸார் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. குறித்த உத்தரவு தொடர்பில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பொலிஸார் அறிக்கையொன்றை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடைபாதையைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் வீதியை பயன்படுத்துப வர்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாத வகையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என கோட்டை நீதவான் மஞ்சுளா ரத்நாயக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.