06

06

பதவி விலக அரசாங்கத்துக்கு கால அவகாசம் கொடுத்துள்ள பல்கலைகழக மாணவர்கள் !

பாராளுமன்ற நுழைவு வீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தனது ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானித்துள்ளனர்.

பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்திற்கு முடிவெடுப்பதற்கு கால அவகாசம் வழங்கி இவ்வாறு ஆர்ப்பாட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் அதற்குள் அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என பல்கலைக்கழக மாணவர் சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்தார்.

“உலக மக்களின் நலனுக்காக போரை முடித்துக் கொள்ளுங்கள்.”- ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தல் !

ஐக்கிய நாடுகள் சபையும், பல்வேறு நாடுகளும் உக்ரைனில் ரஷ்யாவின் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

சீனா, அமெரிக்கா, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்சிகோ உள்ளிட்ட பெரும்பாலான பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் பல மாதங்களாக நீடித்து வரும் போருக்கு முடிவு கட்ட வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இதுகுறித்து  ஐ.நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கூறியதாவது:-

உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு அதன் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்தை மீறுவதாகும். உக்ரைன், ரஷியா மக்களுக்கு மட்டுமல்லாமல் உலக மக்களின் நலனுக்காக போர் முடிவுக்கு வர வேண்டும்.” இவ்வாறு அவர் கூறினார்.

ஒத்திவைக்கப்பட்டது ஆசிய விளையாட்டு போட்டிகள் – காரணம் என்ன..?

சீனாவின் ஜெஜியாங் மாகாணம் ஹாங்ஷு நகரில் வரும் செப்டம்பர் 10-ம் திகதி முதல் 25-ம் திகதி வரை 19-வது ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

சீனாவில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. பல்வேறு நாடுகளில் மீண்டும் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் பிஜீங் உள்ளிட்ட பல இடங்களில் மக்களுக்கு கொரோனா பரிசோதனை தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது.

சீனாவில் கொரோனா பரவல் காரணமாக அங்கு செப்டம்பர் மாதம் நடைபெற இருந்த 19வது ஆசிய விளையாட்டு போட்டி ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் இன்று அறிவித்துள்ளது.

மேலும், புதிய தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.

“சாணக்கியனே மஹிந்த சரணம் கச்சாமி, பசில் சரணம் கச்சாமி என ராஜபக்சக்களுடன் திரிந்தவர்.”- நாடாளுமன்றில் ரணில் காட்டம் !

“முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் அரசாங்கத்திற்கு தொடர்ந்தும் ஆதரவளிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்றைய தினம் கடுமையாக சாடியிருந்தார்.

இந்த நிலையில், மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் இருப்பதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்த கருத்தை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வன்மையாக கண்டித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த ரணில்,

நான் ராஜபக்ஷவர்களுடன் இருப்பதாக சாணக்கியன் எம்.பி குறிப்பிட்டார். ஆனால், நான் அவர்களுடன் இருக்கவில்லை, ராஜபக்ஷ பிரபாகரனுடன் சேர்ந்து என்னை தோற்கடிக்க நினைத்தார்.

இராசமாணிக்கம் சாணக்கியன் தொடர்பில் ஒரு விடயத்தை இங்கு தெரிவிக்க வேண்டும்.

2013ஆம் ஆண்டு பெப்ரவரி 21ஆம் திகதி அருந்திக்க பெர்ணான்டோ மற்றும் சாணக்கியன் ஆகியோரை சுதந்திரக் கட்சியின் ஏற்பாட்டாளர்களாக அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்திருந்தார். எனவே,  மஹிந்த பின்னால் சென்றது நான் இல்லை, சாணக்கியன் எம்.பியே அவர்கள் பின்னால் சென்றார்.

அவர்தான் அப்போது “மஹிந்த சரணம் கச்சாமி, பெசில் சரணம் கச்சாமி, நாமல் சரணம் கச்சாமி” என்று அவர்கள் பின்னால் சென்றிருந்தார். எனவே, ஏன் சாணக்கியன் எம்.பி என்னைப் பற்றி இவ்வாறு தெரிவித்தார் என்பது புரியவில்லை என்றார்.

இரா.சாணக்கியனால் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் !

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாதுகாப்பு வழங்க தலையிடுமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

தனது வீட்டை சுற்றி வளைக்கும் திட்டம் இருப்பதாகவும், அப்படியானால், உரிய அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தமக்கான பாதுகாப்பை வழங்க தலையிடுமாறும் ரணில் விக்ரமசிங்க கோரியதாக அவர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

எனவே, சபையில் கூறப்படும் அறிக்கைகள் தொடர்பாக எந்தவொரு அரசியல் கட்சியும் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரையும் மிரட்டுவது ஜனநாயக நடைமுறையல்ல என்றும் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தின் பக்கம் நின்றதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து தொடர்பில் தமக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

இன்று கொழும்பு 5வது லேனில் உள்ள அவரது வீட்டை சுற்றி வளைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ‘எதிர்ப்புகளுக்கு நான் பயப்படவில்லை, ஆனால் நாம் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது நாடு இன்று எதிர்கொள்ளும் நெருக்கடி’ என்று அவர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“உண்மையிலேயே மக்கள் பிழையான ஒரு தலைவரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள்.”- தவராசா கலையரசன்

“தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு கிடைத்து இந்த நாட்டிலே சமத்துவமான நிலைமை பேணப்படுகின்ற போது இந்த நாட்டில் இருந்து வெளியேறிய வெளியேற்றப்பட்டு புலம்பெயர் தேசத்திலே வாழும் இலட்சக் கணக்கான மக்கள் நிச்சயமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே முதலீடுகளைச் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வருவார்கள்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.

பாராளுமன்ற விவாதத்தின் போதான உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு நாட்டின் தலைவர் அல்லது இந்த நாட்டை நிருவகிக்கின்ற ஏனைய அமைச்சர்கள், நிருவாகத்தில் இருக்கின்ற நிபுனத்துவம் வாய்ந்த நிபுனர்கள் ஒழுங்கான திட்டமிடலை மேற்கொள்ளவில்லை என்பதனையே நிதி அமைச்சரின் உரையானது எடுத்துக் கூறுகின்றது.

இன்றைய நாட்டின் மோசமான நிலைமைக்கு முதற்படியாக இருப்பது இந்த நாட்டை ஆட்சி செய்த முறையற்ற ஆட்சியாளர்களின் கொள்கைகளே. குறிப்பாக 2019ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ரராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வருகின்ற போதிருந்த அந்நிய செலாவணி கையிறுப்பாக இருந்த 7.6 பில்லியனை தற்போது 5 பில்லியனுக்கும் குறைவாக்கியிருக்கின்றது. இதனை நிதி அமைச்சர் சுட்டிக் காட்டியிருந்தார். இது ஒரு முறையற்ற நடமுறையினையே காட்டுகின்றது. இலங்கையராக இருக்கின்ற நாங்கள் வெட்கித் தலைகுனியக் கூடிய விதத்தில் இந்த நாட்டில் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பது மிக மனவேதனையான விடயம்.

அண்மையிலே இருக்கின்ற இந்தியாவில் தமிழ்நாடு முதலமைச்சர், நீரினால் சூழப்பட்ட இந்த இலங்கைத் தீவு இன்று பொருளாதார நெருக்கடியினால் கண்ணீரிலே மூழ்கிக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்து எமது நாட்டிற்கு உதவி செய்ய முன்வந்திருக்கின்றார். அவர் எமது மக்களுக்காக பெருமனதோடும், மனித நேயத்தோடும் உதவி செய்ய முன்வந்தமைக்கு நாங்கள் எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இந்த நாட்டின் நிலைமை எந்தளவிற்கு மோசமாகச் சென்றிருக்கின்றது என்பதை ஒவ்வொரு இலங்கையரும் சிந்திக்க வேண்டும்.

இந்த நாடு மிக மோசமான நிலைக்குச் சென்றதற்குக் காரணமாகப் பல விடயங்களைச் சுட்டிக் காட்டலாம். சிறந்த முகாமைத்துவமின்மை, ஊழல் நிறைந்த அரசியலாட்சி, செல்வந்தர்கள் நன்மை பெறக் கூடிய வகையிலே வரி வீதத்தினை 8 வீதமாகக் குறைத்தமை போன்றனவும் இந்த நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாகப் பின்நோக்கிச் செல்வதற்குக் காணரமாக இருந்திருக்கின்றன. இதனையெல்லாம் தற்போதைய ஆட்சியாளர்கள், அமைச்சர்கள் சிந்தித்துப் பார்க்கின்றார்களா என்ற கேள்வியும் எழுந்திருக்கின்றது. இவ்வாறெல்லாம் தவறுகளைச் செய்து விட்டு தற்போது நாங்கள் பல தவறுகளைச் செய்திருக்கின்றோம் என்று நாட்டின் தலைவரும் அமைச்சரும் சொன்னார்களானால் அனைத்தும் சரியாகிவிடுமா?

குறிப்பாக இங்கு விவசாயம் தொடர்பான விடயம் பேசப்படுகின் போது நாங்கள் பல விடயங்களைச் சுட்டிக் காட்டியிருந்தோம். விவசாயத்தில் கை வைக்காதீர்கள் நீங்கள் தேல்வியையே தழுவுவீர்கள் என நாங்கள் அடிக்கடி கூறியிருந்தோம். ஆனால் இன்று மிக மோசமாக இந்த விவசாயம் பாதிக்கப்பட்டு உள்நாட்டு உற்பத்தியே இல்லாத நிலையில் இருக்கின்றது.

இந்த விடயம் தொடர்பில் நானும் ஒரு விவசாயி என்ற ரீதியில் அந்த விவசாயிகள் சார்பாக சில கருத்துக்களை முன்வைக்கலாம் என்று நினைக்கின்றேன். சிறந்த ஒரு பொருளாதாரக் கொள்கை இல்லாததாலேயே இந்த நாடு இத்தனை பின்நோக்கி இருக்கின்றது என்பதை இந்த நாட்டின் தலைவர் முதலில் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதோடு தொடர்புபட்டு மார்தட்டும் அமைச்சர்களும், கட்சியினரும் இதனை ஏற்றுக் கொள்ள வேண்டும். முதற்படியாக விவசாயிகளிலே கை வைத்தீர்கள், வருமான வரி வீPதத்தைக் குறைத்தீர்கள்.

தற்போது நாட்டின் தலைவர் சொல்லுகின்றார் தாங்கள் செய்தவை பிழையான காரியம் என்று. உண்மையிலேயே மக்கள் பிழையான ஒரு தலைவரைத் தெரிவு செய்திருக்கின்றார்கள் என்பதை அவர் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளார்.

இன்று நாலாபக்கமும் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எதற்காக இந்தப் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த உயரிய சபையில் இருக்கின்ற ஒவ்வொரு பாராளுன்ற உறுப்பினரும் சிந்திக்க வேண்டும். இதற்கான தீர்வினைத் தற்போது பாராம் எடுத்திருக்கின்ற எந்த அமைச்சரும் முன்வைக்கவில்லை. உங்களுக்கான அமைச்சுப் பதவிகளையும், அரசியலையும் முன்நிறுத்தி செயற்படாமல் நாட்டு மக்களின் நன்மை கருதி உங்கள் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.

இன்று வானைத் தொடுமளவிற்கு விலைவாசி அதிகரித்திருக்கின்றது. நாட்டு மக்கள் வாழ முடியாத சூழ்நிலையிலேயே இன்று வீதிக்கு இறங்கியிருக்கின்றார்கள். இதனைப் பற்றி யாரும் சிந்திப்பதாக இல்லை. இன்று விவசாய உள்ளுர் உற்பத்திகள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கின்றன. உரமானியத்தை நிறுத்தினீர்கள். இதன்மூலம் உர இறக்குமதிகளை மேற்கொண்டு பதுக்கலில் வைத்திருந்த முதலாளிமார்களையே நீஙகள் உயர்த்தியிருக்கின்றீர்கள். யூரியாவை அதிக விலைக்கு விற்கச் செய்தீர்கள். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் யார்? இந்த விலை உயர்வால் வாளம் பெறுபவர்கள் யார்? என்பதையும் நீங்கள் சிந்திக்க வேண்டும். எனவே சம்மந்தப்பட்ட அமைச்சர் இதில் உடனடியாகத் தலையீடு செய்து விவசாயிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையில் உரத்தை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அது மாத்திரமல்லாமல் களை நாசினிகள் கூட விலை உயர்த்தி விற்கப்படுகின்றது.

குறிப்பாக இந்த நாட்டை ஆண்டுகொண்டிருக்கின்ற அரச தலைவர்கள் நாட்டின் மீது அக்கறை கொண்டு மக்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையிலே செயற்பட வேண்டும். இன்று எங்கள் உள்ளுர் உற்பத்திகள் பாதிக்கப்பட்டு அரிசி தொடக்கம் ஏனைய உணவுப் பொருட்களை வெளிநடுகளில் இருந்து இறக்குமதி செய்பவர்களாக இருக்கின்றோம்.

இந்த நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்ற அரச தலைவர் நாட்டு மக்களின் எதிர்காலம், நாட்டின் வளர்ச்சி என்பவற்றைக் கைவிட்டு ஏதோவொரு திசையில் சென்று கொண்டிருக்கின்றார். அவ்வாறில்லாமல் அவர் மக்கள் சொல்லுகின்ற விடயங்களுக்குச் செவிசாய்து நல்லதொரு தீர்மானத்தை எடுக்க வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் எதிர்காலத்தில் நாடு மேலும் மோசமான நிலைமைகளைச் சந்திக்கும்.

இந்த நாடு சுதந்திரமடையும் போது ஆசியாவிலே மூன்றாவது நிலையில் இருந்தது. ஆனால் தற்போது ஆசியாவிலே பொருளாதாரத்திலே கடைநிலையில் இருக்கின்றது. இத்தனை இயற்கை வளம் கொண்ட இந்த நாடு பொரளாதாரத்திலே ஏன் இத்தனை பின்டைவுகளைச் சந்திக்க வேண்டும்.

இந்தா நாட்டை ஆண்ட தலைவர்கள் இனவாதம், மதவாம் என்கின்ற அடிப்படையில் செயற்பட்டதன் காரணமாக நீண்ட காலங்களாக இந்த நாட்டிலே இன ரீதியான பிரச்சினையை மையப்படுத்தி பொருளாதார ரீதியாக மிகவும் பின்னடைவை அடைந்திருக்கின்றது. அந்த அடிப்படையில் இந்த நாட்டிலே உண்மையான சமாதானமொன்றை ஏற்படுத்த முதலீட்டாளர்களை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உண்மையிலேயே தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு கிடைத்து இந்த நாட்டிலே சமத்துவமான நிலைமை பேணப்படுகின்ற போது இந்த நாட்டில் இருந்து வெளியேறிய வெளியேற்றப்பட்டு புலம்பெயர் தேசத்திலே வாழும் இலட்சக் கணக்கான மக்கள் நிச்சயமாக வடக்கு கிழக்கு பிரதேசங்களிலே முதலீடுகளைச் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த முன்வருவார்கள் என்று தெரிவித்தார்.

உள்ளாடைகளை நடைபாதையில் தொங்க விட்டு இலங்கை பிரஜைகள் நூதன போராட்டம் !

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ எனக் கூறி ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக உள்ளாடைப்போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள ‘கோட்டா கோ கம’ அருகே ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

‘இதுமட்டுமே மிஞ்சியுள்ளது’ என்ற கோஷங்களோடும் பதாதைகளோடும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

குறித்த பகுதியில் ஆண்கள், பெண்களது உள்ளாடைகள் தொங்கவிடப்பட்டு மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

 

 

யாழில் வயோதிபப் பெண் மீது வாள்வெட்டு !

யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் தனிமையில் வசித்துவந்த  ஒருவர் மீது அடையாளம் தெரியாதோரால் வாள்வெட்டு வன்முறை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிமையில் வசித்துவந்த 64 வயதுடைய வயோதிப் பெண்ணே படுகாயம் அடைந்த நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.