10

10

உடைத்து வீழ்த்தப்பட்டது ஜனாதிபதியின் தந்தையின் சிலை !

தங்காலையில் அமைக்கப்பட்டிருந்த வின் சிலை உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே இன்று(செவ்வாய்கிழமை) சேதமாக்கப்பட்டுள்ளது.

டி.ஏ. ராஜபக்ஷ, முன்னாள் பிரதமரான மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ ஆகியோரின் தந்தை என்பதுக் குறிப்பிடத்தக்கது.

“ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை ஏற்க பல தசாப்தங்கள் ஆகும்.“ – பிரான்ஸ்

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைன் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு பல தசாப்தங்கள் ஆகும் என பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.

ஸ்ட்ராஸ்பேர்க்கில் உள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர்,

உக்ரைன் ஒரு இணை ஐரோப்பிய சமூகத்தில் இணையலாம் என்று பரிந்துரைத்தார். இது ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத உறுப்பினர்கள் மற்ற வழிகளில் ஐரோப்பாவின் பாதுகாப்பு கட்டமைப்பில் சேர அனுமதிக்கும் என்று ஜனாதிபதி மக்ரோன் கூறினார்.

ரஷ்யா ஆதாயங்களை அடைய முயற்சிக்கும் கிழக்கு டான்பாஸ் பகுதியில் கடுமையான சண்டை தொடரும் நிலையில், அவரது இந்த கருத்துக்கள் வந்துள்ளன.

“மஹிந்த ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ ஆகியோரை கைது செய்யுங்கள்.”- மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தல் !

அமைதியான மற்றும் நியாயமான மக்களின் போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஆதரவாளர்களுக்கு அழைப்பு விடுத்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ச, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மொரட்டுவை மேயர் சமன்லால் பெர்னாண்டோ ஆகியோரை உடனடியாகக் கைதுசெய்ய வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியுள்ளார்.

“தாக்குதல் நடத்தியவர்கள் பஸ்களில் இருந்து தடிகளை எடுத்துச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். தேர்தல் காலத்தில்கூட வன்முறையில் ஈடுபட்ட அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவாளர்கள் அலரிமாளிகையில் இருந்து காலிமுகத்திடலுக்குச் சென்றுள்ளனர்.

மனித உரிமை மீறல் விடயத்தில் அரசு இருக்க வேண்டிய இடத்தில் சிக்கியுள்ளது. இவ்வாறானதொரு நிலை ஏற்படும் என ஆறு மாதங்களுக்கு முன்னரே கூறியிருந்தேன். ஆனால், அரசு அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை.

முன்மொழிவுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தால் இரண்டு வாரங்களுக்கு முன்னரே புதிய அரசு அமைக்கப்பட்டிருக்கும். அவ்வாறு இருந்திருந்தால் இந்தக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தவிர்க்கப்பட்டிருக்கும்.

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டிப் பெரும்பான்மைப் பலமுள்ள ஒருவரைப் பிரதமராக நியமித்து, அரசை அமைத்து, நாட்டில் அமைதியை ஏற்படுத்துவதற்கு சபாநாயகர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

“எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார்.”- நாமல் ராஜபக்ஷ

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று அவரது மகன் நாமல் ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

நாங்கள் வெளியேறப் போகிறோம் என்று நிறைய வதந்திகள் உள்ளன என தெரிவித்த அவர், எனினும் நாங்கள் நாட்டை விட்டு வெளியேற மாட்டோம் என தெரிவித்துள்ளார்.

மஹிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என்றும், தனக்குப் பின்வருபவரைத் தெரிவு செய்வதில் தீவிரப் பங்கு வகிக்க விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் “எனது தந்தை பாதுகாப்பாக இருக்கிறார், அவர் பாதுகாப்பான இடத்தில் இருக்கிறார். அவர் குடும்பத்துடன் தொடர்புகொள்கிறார்” என்றும் நாமல் கூறினார்.

முன்னாள் பிரதமரை வெளியில் வருமாறு கோரி திருகோணமலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூடியுள்ள வேளையிலேயே நாமலின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பிரதமர் திருகோணமலை ஊடாக நாட்டை விட்டுத் தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியானதையடுத்து, எதிர்ப்பாளர்கள் கடற்படைத் தளத்தில் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மீது தாக்குதல் – இருவர் கைது !

மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொள்ளுபிட்டிய பொலிஸாரினால் இன்று(செவ்வாய்கிழமை) குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு – கங்காராம விஹாரைக்கு அருகில் இன்று மாலை சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்போது, கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் இடம்பெற்ற வேளையில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து, சிவில் உடையில் இருந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துங்கள் – ஜனாதிபதி கோரிக்கை !

மக்களுக்கு எதிரான வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை நிறுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடியை தீர்க்கவும் அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையிலும் பலவேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்தும் பதிவாகி வருகின்றன.

இந்நிலையில் வன்முறைகளில் ஈடுபடாமல் பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கேட்டுக்கொண்டுள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முப்படையினருக்கும் உத்தரவு !

பொதுமக்களின் சொத்துக்களை திருடுவோர், சேதங்களை விளைவிப்போர் மீது முப்படையினர், துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கான உத்தரவு பாதுகாப்பு அமைச்சினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்றைய தினம்(திங்கட்கிழமை) மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களால் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் முன்னாள் பிரதமர் மற்றும் அவரது ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) ஆதரவாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில் பொதுமக்கள் அவர்களது வாகனங்கள், வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை அழித்து பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்தநிலையிலேயே நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

யாழிலும் டக்ளஸ், அங்கஜன் அலுவலகங்கள் தாக்கப்படும் அபாயம் – குவிக்கப்படும் இராணுவம் !

யாழ்ப்பாணத்தில் அரசு ஆதரவு எம்பிக்களின் அலுவலகங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது..

 

நாடு பூராகவும் அரசு ஆதரவு எம்பிக்களின் வீடுகள் அலுவலகங்கள் தாக்கப்பட்டு,தீக்கிரையாக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அரசு ஆதரவுஎம் பிகளான டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதனின் அலுவலகங்களும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில் எம்பிக்களின் அலுவலகங்களுக்கு அருகில் பொலிசார், இராணுவத்தினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீதும் தாக்குதல் !

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொளுத்தப்பட்டது பசிர்ராஜபக்ஷவின் வீடு – வேடிக்கை பார்க்கும் விசேட அதிரடிப்படையினர் !

கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீட்டின் மீது இன்று முற்பகல் பிரதேச மக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை தொடர்ந்து நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.

இந்தவகையில் பசிலின் வீடும் தற்பொழுது முற்றுகையிடப்பட்டுள்ளது. பசிலின் வீட்டுக்கு சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது, விசேட அதிரடிப்படையினர் அங்கு இருந்த போதிலும் மக்களை தடுக்க அவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

அரச பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மல்வனை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி ஒன்றை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் குளத்தை நிர்மாணித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.