இலங்கை தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு தன்னிறைவுப் பொருளாதாரத்திற்கு மாற வேண்டுமா? இல்லையேல் திறந்த பொருளாதாரக் கொள்கையையே கடைப்பிடிக்க வேண்டுமா என்ற தலைப்பில் லிற்றில் எய்ட் மாணவர்கள் பட்டிமன்றம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளனர். மே 25 பிற்பகல் 2:30 மணிக்கு கிளிநnhச்சி திருநகர் கனகராசா வீதியில் உள்ள லிற்றில் எய்ட் மண்டபத்தில் இப்பட்டி மன்றத்தோடு கலைநிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட லிற்றில் எய்ட் சஞ்சிகை பற்றிய விமர்சனமும் நடனம், குழுப்பாடல், தனிப்பாடல் என்பனவும் இந்நிகழ்வில் இடம்பெறவுள்ளது.
அரசியல்வாதிகளும், பல்கலைக்கழகங்களும் கூட நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிக்கான தீர்வு பற்றி சிந்திக்காத சூழலில் உயர்தரம் கற்கின்ற மாணவர்களின் இந்தக் கன்னி முயற்சி நிச்சயம் மற்றையவர்களையும் இவ்வாறான கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளவும் சிந்திக்கவும் தூண்டும் என லிற்றில் எய்ட் அமைப்பின் ஸ்தாபகர் த ஜெயபாலன் தெரிவிக்கின்றார்.
சமூக விழிப்புணர்வு விடயங்களில் ஆர்வம்காட்டி வரும் லிற்றில் எய்ட் மாணவர்கள் கற்றலுடன் நின்றுவிடாமல் தமிழ் பிரதேசங்களில் தலைதூக்கிவரும் சமூகப் பிரச்சினைகளிலும் தங்கள் கவனத்தை செலுத்தி வருகின்றனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் இளவயது திருமணங்கள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நாடகம் ஒன்றும் மேடையேறவுள்ளது. வீதிகளில் வேகத்தை கடைப் பிடிக்கக் கோரும் விழிப்புணர்வுப் நடவடிக்கைகளிலும் லிற்றில் எய்ட் மாணவர்கள் அண்மையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுக்கு கணணி தொழில்நுட்பவினைஞரான செல்வி தி குகாயினி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கின்றார். பெண்கள் தொழில்நுட்பத்துறையில் கால்பதிப்பது அரிதானதொரு சூழலில் இவர் அத்துறையில் ஊன்றிப் பயணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எதிர்வரும் காலங்களில் மாணவர்கள் கல்விக்கு அப்பால் பல்திறமைகைளயும் வளர்த்துக்கொண்டு தங்கள் ஆளுமைகளை விருத்தி செய்வதனூடாக மட்டுமே தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெறமுடியும் எனத் தெரிவிக்கும் லிற்றில் எய்ட் இயக்குநர் ஹம்சகௌரி சிவஜோதி, லிற்றில் எய்ட மாணவர்கள் தாங்கள் வாழும் சமூகத்தின் மீது அக்கறையோடு செயற்படுவது தனக்கும் லிற்றில் எய்ட்க்கும் பெருமை சேர்ப்பதாக தேசம்நெற்க்குத் தெரிவித்தார்.
லிற்றில் எய்ட் நிர்வாகமும் மாணவர்களும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோமோ அதனை அவர்கள் திறம்படச் செய்வது தங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவதாக லிற்றில் எய்ட் அமைப்பின் தலைவர் கதிர் நந்தகுமரன் தெரிவிக்கின்றார். அவர் தேசம்நெற்க்கு மேலும் தெரிவிக்கையில் சமூகம் சார்ந்த செயற்பாடுகள் அருகி வருகின்ற சூழலில் இவ்வாறான விவாதங்கள், சமூக விழ்ப்புணர்வு நாடகங்கள், மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் ஆடல், பாடல்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவை பரவலாக பலரையும் இவ்வாறு செய்யத் தூண்ட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அண்மையில் லிற்றில் எய்ட் நிறுவனத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவர்கள் பயன்பெறும் வகையில் லிற்றில் நூலகம் அமரர் இராசமணி பாக்கியநாதனின் ஞாபகார்த்தமாக அவருடைய மகன் சிறிகுமார் பாக்கியநாதன் திறந்து வைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வுகளில் கலந்து சிறப்பித்து வளரும் தலைமுறையினருக்கான ஊக்கத்தை வழங்குமாறு லிற்றில் எய்ட் மாணவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.